ஆய்வு: மூதுரையில் வாழ்வியல் சிந்தனைகள்

Monday, 12 March 2018 15:03 - முனைவர் நா.மலர்விழி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை (சுய உதவிப்பிரிவு), ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல். - ஆய்வு
Print

- முனைவர்  நா.மலர்விழி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை (சுய உதவிப்பிரிவு), ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல். - நீதிக்கருத்துக்களை போதிக்கக் கூடிய இலக்கியங்கள் அற இலக்கியங்கள் எனப்படுகின்றன. கி.பி.12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய அறநூல்களைப் படைத்துள்ளார்.

ஓளவையார்:
ஓளவையார் என்ற சொல்லுக்கு தமிழ் அகராதிகள் அவ்வை, தாய், மூதாட்டி, பெண்துறவி, தவப்பெண், அம்மை, அன்னை என்று விளக்கம் தருகின்றன.  பொருளுக்கு ஏற்ப ஒளவையின் உருவமும் கற்பனை செய்யப்பட்டது. மதிப்புமிக்க முதிர்ச்சி பெற்ற தவமகள் ஒருத்தியின் திருத்தோற்றமே நம் கண்முன் நிற்கிறது. வேறுபட்ட காலங்களில் வாழ்ந்த பெண் புலவர்கள் ஒளவை என்ற பெயரில் தங்களை அழைத்துக் கொண்டதாக ஆய்வாளர் சுட்டுவர்.  ஓளவை என்ற பெண் கவிமரபு பல்வேறு காலங்களில் தொடர்ந்திருக்கிறது.  சங்க காலத்திலும் அதற்குப்பிறகும் வாழ்ந்த ஒளவையார் பலரென்பர்.  அவர்களுள் நீதிநூல்களைப் பாடிய சோழர்கால ஒளவை கி.பி.12ஆம் நூற்றாண்டினர் என அறிஞர் மு.அருணாச்சலம் கருதுகிறார். ஆடவரைச் சார்ந்து பெண் ஒழுகவேண்டும் என்ற அடிமைத்தனத்தை சங்ககால ஒளவை முன்மொழியவில்லை. ஆனால் ஆடவரின் ஆதிக்கங்களை அறநெறிகளாக ஏற்றுக்கொண்ட பிற்கால ஒளவைகள் முன்னிருத்தப்பட்டனர்.

மூதுரை:
மூப்பு 10 உரை ஸ்ரீ மூதுரை, மூத்தோர் 10 உரை ஸ்ரீ மூதுரை எனவும் பதம் பிரிப்பர்.  மூதுரை கடவுள் வாழ்த்துடன் 31 வெண்பாக்களை உடையது.  நம் முன்னோர்கள் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் முதலில் இறைவனை வேண்டிக் கொண்ட பின்பே ஆரம்பிப்பார்கள்.  முழுமுதற் கடவுளுமான தும்பிக்கையானாகிய விநாயகனைப் போற்றிப் பணிந்த பிறகே எதையும் தொடங்குவார்கள்.  ஓளவையார் மூதுரையைப் பாடும் முன் வேழமுகத்தானை வணங்கித் துதிக்கிறார்.     வாக்குண்டாம் என கடவுள் வாழ்த்துப்பாடல் தொடங்குவதால் மூதுரை “வாக்குண்டாம்” எனவும் வழங்கப்படுகிறது.

வாழ்வியல் சிந்தனைகள்:-
நீதிநூல்கள் வாழ்வியல் சிந்தனைகளை எடுத்தியம்புகின்றன. நம் பெரியார்கள் மக்கள் நேர்மையாக வாழ்ந்து பண்பாளர்களாகத் திகழவேண்டும் என்று சின்னச்சின்ன வார்த்தைகளில் நீதிகளைக் கூறினார்கள்.  மனிதன் கருவில் உருவான நாள் முதல் இறுதிநாள் வரையிலான வாழ்க்கைப் பயணத்தில் வாழ்வியல் நோக்கில் மனித சமூகம் நாளும் வளர்நிலை பெற்றுவருகின்றது. வாழ்வியல் நோக்கம் மனித சமுதாயத்தில் நிலைபெற்று உள்ளது. வாழ்வின் மேம்பாடு இன்றைய காலகட்டங்களில் பல்வேறு துறைகளில் மேன்மை பெற்று உள்ளது.    

‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஓர் ஒளவையார். அரிதாகக் கிடைக்கப் பெற்ற மானிடப் பிறவியை பண்பட்டதாக வாழ வாழ்வியல் சிந்தனைகள் வளமானவையாக இருக்க வேண்டும்.  இன்று ஊhடைன ளுpநஉயைடளைவ என்று கூறுவதைப் போல குழந்தைகளுக்காக உள்ள பாடல் வரிசைகளில் ஒளவையாரின் பாடல்கள் மிகப் பிரபலமானவை ஆகும். ஒளவையார் மூதுரையில் கல்வி, நட்பு, உதவி போன்ற வாழ்வியல் சிந்தனைகளை குழந்தைகளுக்காகப் பாடினாலும் பெரியவர்களுக்கும் பயன்படக்கூடியவையாக உள்ளன எனலாம்.

கல்வி:
கல்வி என்ற சொல்லின் ஆதாரச் சொல் ‘கல்லுதல்’ என்பதாகும். கல்லுதல் என்றால் தோண்டுதல். மனதில் மறைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொணர்ந்து மடைமாற்றம் செய்து திசை திருப்பவல்லது கல்வி.

 

‘கல்விக் கரையில் கற்பவர் நாள் சில’ என்பர்.  ‘கேடுஇல் விழுச்செல்வம் கல்வி’ என திருக்குறள் கல்வியைச் செல்வமாகவும், ‘கல்வி அழகே அழகு’ என நாலடியார் கல்வியை அழகாகவும், ‘எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு’ என ஏலாதியும் கல்வியின் சிறப்பினைக் கூறுகின்றன.

‘கல்வியில்லாப் பெண்கள் களர்நிலம் அங்கே
புல் விளைந்திடலாம். நல்ல புதல்வர்கள் விளைவதில்லை’ என பாரதிதாசன் பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.  மூதுரையில் ஒளவையாரின் கல்வி பற்றிய சிந்தனைகளை அறிய முடிகிறது.

கல்வி கற்றவரின் சிறப்பு:
அழியாத செல்வமாகிய கல்வியைக் கற்றவர்கள் போற்றுதலுக்கு உரியவர் ஆவார்கள்.

“மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னலில் கற்றோன் சிறப்பு உடையன் - மன்னற்கு
தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை: கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு”

ஒரு நாட்டை ஆளக்கூடிய மன்னனை விட, குற்றமில்லாமல் கல்வி கற்றவன் சிறப்புடையவன். ஏனெனில், மன்னனுக்கு தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டாகும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கல்வி கற்றவர்களால் மட்டுமே வாழமுடியும் எனில் மிகையல்ல.

கல்வி கற்றவரின் நட்பு:
“பாம்பின் கால் பாம்பறியும்” என்பதைப் போல, அறிவுடையவர்களை அறிவுடையவர்கள் இனம் கண்டு கொள்வார்கள்.

“நல்தாமரைக் கயத்தில் நல்அன்னம்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பு இல்லா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்@ முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்”

தாமரைக்குளத்தில் அன்னப்பறவைகள் இருக்கும். சுடுகாட்டில் பிணத்தைத் தின்னும் காக்கைகள் இருக்கும். அதுபோல, கல்வி கற்றவர்கள் கல்வி கற்றவர்களுடனே நட்பு கொள்வார்கள். மூர்க்க குணம் உடைய முட்டாள்களுடன் முட்டாள்களே சேர்ந்திருப்பர்.

‘இனம் இனத்தோடு சேரும்’ என்ற மொழிக்கேற்ப கற்றவரின் நட்பு கற்றவர்களுடன் உண்டாகுகின்றது. கல்வி கற்றவரின் சிறப்பையும் கல்வி கற்றவரின் நட்பையும் மட்டுமில்லாமல் கல்வி கற்காதவர்களின் நிலையையும் வெளிப்படுத்துகிறார்.

கல்வி கற்காதவர்களின் நிலை:
முறையாக கல்வி கற்காமல் கற்றவர்களைப் போன்று நினைத்தக் கொள்ளும் மனிதர்களும் இந்த உலகத்தில் இருக்கின்றார்கள். கல்வி கற்காதவர்களின் நிலையைப் பற்றி,

“கானம் மயில் ஆடக்கண்டு இருந்தவான் கோழி   
தானும் அதுஆகப் பாவித்து –தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்றகவி”

மயில் ஆடுவதைப் பார்த்து வான்கோழி ஆடுவதைப் போன்றது கல்வி கற்காதவர்களின் நிலை. கல்வி கற்றவர்கள் ஆழமாக பொருள் விரித்துக் கூறுவர். கல்வி கற்காதவர்கள் பொருள் விரித்துக் கூறும் போது சொற்குற்றமும், பொருள் குற்றமும் இருக்கும் என்கிறார்.  கல்லாதவர்கள் இகழப் படுவார்கள், புகழப்படமாட்டார்கள்.

“கலைஆகிக் கொம்புஆகிக் காட்டகத்தே நிற்கும்
அவைஅல்ல நல்ல மரங்கள்! – சபைநடுவே
நீட்டுஓலை வாசியா நின்றான் குறிப்புஅறிய
மாட்டாதவன் நல்மரம்”

கல்விஅறிவும் குறிப்பறியும் குணமும் இல்லாதவர்கள் சிறந்த மரங்களாவர். மரங்களுக்கு கிளை, குறுங்கிளை இருப்பதைப் போல இவர்களுக்கும் கை, கால்கள் இருக்கின்றன. ஆறரிவுடைய மனித இனத்தில் பிறந்தும் கல்வி அறிவும், குறிப்புணரும் குணமும் இல்லாதவர்கள் காட்டிலுள்ள மரங்களுக்கே ஒப்பாவார்கள் என கல்வி கற்காதவர்களின் தோற்றத்தை எடுத்துரைக்கின்றார்.     கல்வியறிவு இல்லாதவர்கள் கற்றவர்களின் சொற்களை மதித்துக் கேட்க மாட்டார்கள்.   

நட்பு:-
ஒரு புத்தகம் நூறு நண்பர்களுக்குச் சமம் என்றாலும் கற்றவர்களின் நட்பு அவசியமானதாகும்.  ‘உன் நண்பன் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்’ என்பர்.  நட்பு ஒத்த உணர்வுடையவர்களிடையே தான் உண்டாகும். ஒருவனின் பராகிரமத்தை அவனது நண்பர்களின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடலாம்.

“புணர்ச்சி பழகுதல் வேண்டா@ உணர்ச்சி தான்
நட்புஆம் கிழமை தரும்” என்பார் வள்ளுவர்.
ஓளவையார் நட்பை பற்றிய கருத்துக்களையும் எடுத்துரைக்கின்றார்.

நண்பர்களின் உதவி:
துன்பத்தில் உதவி செய்யக்கூடியவர்கள் நண்பர்களாக இருப்பார்கள்.

“உடன்பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா
பாமலையில் உள்ள மருந்தே பிண் தீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு”

உடன்பிறந்தவர்களே சுற்றத்தார் என இருக்க வேண்டாம். உடம்போடு பிறந்த நோயைப் போல உடன்பிறந்தவர்களும் தீமை செய்வர்.  எங்கோ பெரியமலையில் இருக்கும் மூலிகை நோயைத் தீர்ப்பதைப் போல எங்கோ இருந்து வரும்
நண்பர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.
உடன்பிறந்தவனாயிற்றே அவன் தீங்கு செய்யமாட்டான் என நினைக்க வேண்டாம். எங்கிருந்தோ வந்த மூலிகை நமக்கு என்ன நன்மை செய்யப்போகிறது என்று கருதவேண்டாம் என்கிறார்.

நட்பின் அவசியம்:
“ஒரு கை தட்டினால் ஓசை எழாது” என்பர். மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு கண்ணனின் நட்பும் கௌரவர்களுக்கு கர்ணனின் நட்பும் துணை வலிமையாக மட்டுமில்லாமல் அவசியத் தேவையாகவும் ஆக்கப்பட்டிருந்தது.

“பண்டு முறைப்பது அரிசியே ஆனாலும்
விண்டுஉமி போனால் முறையாது ஆம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவுஇன்றி
ஏற்ற கருமம் செயல்”

அரிசிதான் முளைக்கும் என்றாலும் அரிசி முளைக்க உமி தேவை. திறமை மிகுந்தவனுக்கும் செயல் வெற்றிக்கு வலிமையுடைய தோழமை வேண்டும். துணை வலிமை இல்லாமல் வெற்றி பெற இயலாது. எனவே வல்லவர்களும் தகுந்த துணை வலிமை கொண்டே வாழமுடியும் என ஒளவை மிக அழகாகக் கூறுகிறார்.

நட்பில் பிளவு:-
உண்மையான நல்லவர்களின் நட்பில் பிளவு ஏற்படாது. கடையார் நட்பு, இடையார் நட்பு, தலையாயார் நட்பு என நட்பை நாலடியார் வகைப்படுத்துவதைப் போல ஒளவையாரும்,
“கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே – வில்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்”

கல்லில் பிளவு உண்டானால் மீண்டும் ஒட்டாது. பொன்னில் பிளவு உண்டானால் பிறர் முயற்சியால் மனம் இளகிச் சேர்வர். ஒட்டும.; ஓடும் நீரில் அம்பை வைத்து போடும் கோடு உடனடியாக மறைந்துவிடும். கல்பிளவு ஸ்ரீ கடைநிலை நட்பு, பொன்பிளவு ஸ்ரீ இடைநிலை நட்பு, ஓடும் நீரில் அம்பை வைத்து போடும் கோடு ஸ்ரீ முதல்நிலை நட்பு.

கடைப்பட்டவர் கோபத்தினால் மனம் வேறுபட்டால் பிறகு ஒன்று சேரமாட்டார்கள்.  இடைநிலைப்பட்டவர் முயற்சியினால் ஒன்று சேர்ந்துவிடுவர்.  தலையான சான்றோரின் கோபமோ தோன்றிய போதே மறையும் என்கிறார்.

உண்மையான நட்பு:
துன்பம் வரும்போது தான் உண்மையான நண்பர்களை நம்மால் அடையாளம் காண இயலும்.
“கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்” என்பார் வள்ளுவர்.
“கோட்டுப்பூப் போல மலர்ந்த பிற் கூம்பாது” என்று கூறும் நாலடியார்.


ஓளவையார்,
“அற்றகுளத்தின் அறுநீர்ப் பறவை போல
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு”

நீர் நிரம்பிய குளத்தை பறவைகள் வட்டமிடும். நீர்வற்றி விட்டால் பறவைகள் குளத்தை விட்டு அகன்றுவிடும். ஆனால் நீர்வற்றினாலும் நீர்த்தாவரங்கள் வாடி அங்கேயே இருக்கும். செல்வர்களை பலரும் சூழ்ந்திருப்பர், நட்பு பாராட்டுவர்.  செல்வம் இல்லாவிட்டால், பறவைகளைப் போல் பறந்து விடுவர். செல்வம் இல்லாத போதும் நட்பு பாராட்டும் நீர்த்தாவரங்களைப் போன்றவர்களே உண்மையான நண்பர்கள் ஆவார்கள். சுகப்படும் போது உடன் இருந்து, கஷ்டம் வந்தபோது விலகிப் போகிறவர்கள் நல்ல உறவினர்கள் அல்லர் என்கிறார்.

உதவி:
காலத்தினால் செய்த நன்றி சிறிதாக இருந்தாலும் அது உலகத்தை விட மிகப் பெரியதாகும் என்பர்.     நாட்டார் வழக்கில் ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பர். பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யப்படுவதே உதவி ஆகும்.

உதவியின் பலன்:

“நன்றி ஒருவர்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தான் உண்டநீரைத்
தலையாலே! தான் தருதலால்”

ஒருவர்க்கு நாம் செய்த உதவியை நன்றியுடன் நினைத்துப் பார்ப்பார்களா என்று எண்ணவேண்டாம். தென்னைமரம் தான் உண்ட நீரை தேங்காயில் திருப்பித் தருவதைப் போல, நாம் செய்த உதவியும் நம்மை திரும்பி வந்து நிச்சயம் அடையும். ஆதலால் பயன்கருதாமல் உதவி செய்யுங்கள் - செய்யவேண்டும் என்கிறார்.

உதவியின் நிலைத்தன்மை:

நல்லவருக்குச் செய்த உதவி கல்லில் எழுதிய எழுத்துப்போல் அவர்களின் உள்ளத்தில் நிலையாக இருக்கும். ஆனால் தீயவர்களுக்குச் செய்த உதவியோ, நீரில் எழுதிய எழுத்தைப் போன்றதாகும். தீயவர்கள் செய்த நன்றியை நினைத்துப் பார்க்க மாட்டார்கள் நீர் மேல் எழுதும் எழுத்துக்களைப் போல அப்போதே அழிந்து போகும்.

“நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே – அல்லாத
ஈரம்இலா நெஞ்சார்த்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்திற்கு நேர்”
ஒருவருக்கு நாம் உதவி செய்யும் போது, அவர் நல்லவரா, தீயவரா என ஆராய்ந்து அறிந்து செய்தல் வேண்டும். அப்போது தான் உதவி உண்மையான மதிப்பினைப் பெறும்.

உதவி செய்பவர்கள்:-
‘உருக்கண்டு எள்ளாமை வேண்டும்’ ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பர். உதவியை பெரியவர்கள் தான் செய்யவேண்டும் என்பதில்லை, சிறியவர்களும் செய்யலாம் என்பதை,
“மடல்பெரிது தாழை@ மகிழ் இனிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்கவேண்டா@ கடல்பெரிது
மண்ணீரும் ஆகாது@ அதன் அருகே சிற்றூறல்
உண்நீரும் ஆகிவிடும்”
தாழை மடல் பெரியது. ஆனால் வாசனை குறைவு. மகிழம்பூவின் இதழ் சிறியது. ஆனால் வாசனை மிகவும் அதிகம். கடல்நீர் அளவில் மிகவும் அதிகமாக இருக்கும். உடல் அழுக்கை கூட நீக்காது. ஆனால் ஊற்றுநீர் அளவில் மிகவும் குறைவாக இருக்கும். அது குடிநீராக பயன்படும்.

அற்பர்களுக்குச் செய்யும் உதவி:
அற்பர்களுக்குச் செய்யும் உதவியால் உதவியைச் செய்பவருக்குத் தீமையே ஏற்படும். அற்பர்கள் உதவியை ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார்கள்.
“வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால் போல் - பாங்கு அறியாப்
புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்டகலம்”

வேங்கை வரிப்புலியானது விஷநோயினால் அவதிப்பட்டது விஷங்களுக்கு முறிவு மருந்து கொடுத்து குணப்படுத்தும் ஒரு வைத்தியன் புலியின் துன்பங்கண்டு மனமிரங்கினான்.  மருந்து கொடுத்து, நோயை குணப்படுத்தினான்.  நோய் நீங்கிய புலி வைத்தியனையே அடித்துக் கொன்று உணவாக்கிக் கொண்டது. இதே போல் சில அற்பர்கள் உதவி செய்தவரிடம் நன்றி காட்டமாட்டார்கள். உதவியவர்களுக்கு கேடு விளைவிப்பர். ஒரு கல்லின் மீது மண்கலயத்தைப் போட்டால் அது எப்படி உடனே உடைந்து பாழாகுமோ அதுபோல, அவர்கள் செய்த உதவி அழிந்து போகும். தீயவர்களுக்குச் செய்த உதவியால் தீமையே ஏற்படும். ‘பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்பதைப் போல உதவி செய்யும் பொழுது தகுதியானவர்களுக்கே உதவி செய்தல் வேண்டும்.

ஒளவையாரின் பாடல்கள் நீதிக்கருத்துக்கள் நிரம்பியனவாகவும் மானுடவியலை மதிப்பீடு செய்வதாகவும் அமைந்துள்ளன. ஓளவையாரின் மூதுரையில் உள்ள கருத்துக்கள் அவரது பிறநூல்களிலும் காணக்கிடைக்கின்றன. ஓளவை ஒரே கருத்தை வௌ;வேறு நூல்களில் பதிவு செய்யக்காரணம் ‘எறும்பூரக் கல்லும் தேயும்’ என்பதைப் போல, ஒரே விஷயத்தை பலமுறை கூறினால் அது புரியாத மனதிலும் மிக ஆழமாகப் பதியும் என்ற நோக்கத்தில் ஆகும்.
“மக்கள் தாங்கள் அறியாதனவற்றை அறிந்து கொள்ளும்படி கற்பிப்பது கல்வியின் பொருளாகாது@ அவர்கள் தங்களது தவறான போக்குகளை மாற்றிச் செம்மையாக நடந்து கொள்ளுமாறு கற்பிப்பதே உண்மையான கற்பிக்கும் முறையாகும்” என்பார் இரசுகின்.

ஓளவை தனது மூதுரையின் வழியாக சமூகத்திற்கான கற்பித்தல் பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளார்.  வாழ்வியல் சிந்தனைகளை மிக எளிமையான உதாரணங்களைக் கொண்டு விளக்கிச் சொல்கிறார். மூதுரையில் கல்வி, நட்பு, உதவி போன்ற வாழ்வியல் கருத்துக்கள் முக்கியத்துவம் தந்து விளக்கப்பட்டுள்ளன.

“பெண்டிருக்கு அழகு பேசாதிருத்தல்” என்று நறுந்தொகையில் அதிவீரராம பாண்டியன் பாடிய சமூகத்தில் பெண்ணை வெறும் ஒரு போகப் பொருளாக, உடைமைப் பொருளாக நினைத்திருந்த நிலையில் ஆணாதிக்கம் மேலோங்கியிருந்த ஒரு காலகட்டத்தில் சமூகத்திற்குத் தேவையான வாழ்வியல் சிந்தனைகளை ஒரு பெண் நிலைப்பாட்டுத் தன்மையுடன் வெளிப்படுத்தி இருப்பது பெண்ணிய நோக்கில் பெருமைக்குரியதாகும்.

துணைமை நூல்கள்:
1.செல்வக்கேசவராய முதலியார்(ப.ஆ)-மூதுரை,டயோசிகன் பிரஸ்,சென்னை.1923
2.பரிமேழகர்(உ.ஆ)-திருக்குறள்,கழக வெளியீடு,சென்னை2000.
3.ஞா.மாணிக்கவாசன்(உ.ஆ)- நாலடியார்,தென்றல் நிலையம்,சென்னை2000.
4.பாரதிதாசன்- .பாhரதிதாசன் பாடல்கள்,பூம்புகார் பிரசுரம்;,சென்னை.1977.
5.அன்னிதாமசு-தமிழர் சமூகவியல்,உலகத்தமிழாராய்சி நிறுவனம்,சென்னை2000.
6.முனைவர்.துரை.பட்டாபிராமன்(ப.ஆ)-வாழ்வியல் உண்மைகள்,கலைஞன் பதிப்பகம்,சென்னை

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

* கட்டுரையாளர் - - முனைவர்  நா.மலர்விழி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை (சுய உதவிப்பிரிவு), ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல். -

Last Updated on Monday, 12 March 2018 15:12