ஆய்வு: வில்லிபாரதத்தில் போர்ப்படைகள்

Wednesday, 02 May 2018 10:46 - திருமதி ஜெ.குணசீலி, பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கல்லூரி,ஊட்டி. - ஆய்வு
Print

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
வடமொழியில் வியாச மகா முனிவர் அருளிய நமது இதிகாசங்களில் ஒன்றான ‘வில்லிபாரதம்’ என்னும் இலக்கியமாக செந்தமிழில் இனிய செய்யுள்களால் பாடியவர் வில்லிபுத்தூர். சூதின் தீமை, பொறாமை, சகோதரர்களிடையே ஏற்படும் போர் அதன் காரண காரியங்கள் பாரதக் கதையில் மிகவும் அழகாக ஆழமாக விளக்கப்பட்டுள்ளது. போர் என்பது விரும்பப்படாத ஒன்று என்ற போதிலும் இந்த உலகம் எப்பொழுதும் போரைச் சந்தித்துக் கொண்டேதான் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் மனித மனம் ஒற்றுமை உணர்வை மறுத்து போரே தீர்வு என்ற நிலைமை நோக்கியே பயணிக்கிறது.

அப்படிப்பட்ட நிலையில், மனிதனுக்கு இன்றும் எடுத்துக்காட்டாக விளங்கும். தீந்தமிழில் எழுதிய வில்லி பாரதம் ஆகும். போர் என்பது அழிவை ஏற்படுத்தி மனித சமுதாயத்தை சீர்குலையும் என்பதை இன்றைய சமூகத்திற்கு வலியுறுத்தும் காவியமாக விளங்கும். வில்லி பாரதத்தில் போர் நடந்த காலத்தையும் களத்தையும் அறியலாம்.

மனித மனம், மேலோட்ட நிலையில் போரை வெறுக்கக் கூடியதாக இருந்தாலும், அதன் அடிப்படையில் இருக்கும் யுத்ததாகனம், நாசவெறி மிருகநிலை இவற்றால் அது எதை விலக்க முற்படுகிறதோ அதையே மீண்டும் மீண்டும் நாடிச் செல்கின்றது. இதற்கு தம் வரலாறே சான்றாகி அமைகின்றன.

வில்லிபாரத போர் காலமும் களமும் :
ஒரு போரின் வெற்றி தோல்வியை வீரம், அறிவு மற்றும் படைபலம் போன்றவை நிர்ணயிக்கும் கூறுகளாக அமைகின்றன. இவை மற்றுமின்றி ஒரு போருக்கான களமும் அமையாவிட்டால் மேற்கூறிய கூறுகள் சரியாக அமையப் பெறினும் என்பது சாத்தியமின்றி ஒன்றாக அமைகிறது.

பாரதப் போரில் அத்தகைய காலமும் களமும் யாருக்குச் சாதகமாக அமைந்தன என்பதையும் அறியலாம். தருமத்தின் வாழ்வு தன்னை எத்தனை சூது கவ்வினாலும் தருமம் மறுபடியும் வெல்லும் என்று தருமத்தைப் பாரதம் வலியுயுத்துகிறது.

மகாபாரதம் காலம் கி.மு முதல் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். பாண்டுவின் ஐந்து புதல்வர்களாகிய பாண்டவர்களுக்கும் திருதிராஷ்ரனின் நூறு மக்களாகிய கவுரவர்களுக்கும் நாட்டுக்காக நடந்த போரே குருச்சேத்திரப் போர் 18 நாள் நடந்த போரில் கிருஷ்ணர் பாண்டவர் பக்கமும் அவரது சேனைகள் துரியோதனன் பக்கமும் நின்று போர் புரிந்ததில் பாண்டவர் வெற்றி பெற்றுத் தம் நாட்டை மீட்கின்றனர். துரியோதனனுக்கு ஆதரவராக கர்ணன் போர் புரிந்து மாண்டான். புகழ் வாய்ந்த மகாபாரத நூல் தமிழில் வேறுவேறு வடிவங்களில் வெளிவந்துள்ளது.

போருக்கான காரணங்கள் :
பழங்காலத்தில் போர் தவிர்க்க இயலாததாகவும் காலத்தின் தேவையாகவும் அமைந்திருந்தது. எனவே பாண்டவர்களும் கௌரவர்களும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டது வரலாற்றில் தவிர்க்க முடியாதது. வில்லிபாரதத்தில் போருக்கான காரணங்களை காணும் போது அரசுரிமைக்குத் தடையேற்படும் பொழுதும் ஆட்சியுரிமையை நிலைநாட்டுவதற்கு அல்லது பெறுவதற்கு மாற்றார் தம் ஆற்றலை இகழ்வது கண்டு, பொறுக்க முடியாமலும், பொறாமை காரணமாகவும் இனமானம், காப்பதற்காகவும், தர்மத்தைக் காக்கும் பொருட்டும் போர்கள் நடைபெற்றுள்ளன.

போர் படைகள் :
‘நாடுகாவலுக்கும், போர் மேற்கொள்வதற்கும் படை பயன்பட்டது. படையை வேந்தனின் திருமேனி எனச் செப்புகிறது சிலப்பதிகாரம். (சிலப்பதிகாரம் பா – 25)

வேந்தன் பெற்ற செல்வங்களுள் எல்லாம் முதன்மையானது படை எண் உரைப்பார்.(திருவள்ளுவர் பா – 261)

ஒரு நாட்டின் பலம் அவன் வைத்துள்ள படைகள் மூலம் வெளிப்படும் விராட நகரின் மீது போர் தொடுக்கக் கருதி துரியோதனன் அவன் நாட்டிலுள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வர ஓர் அக்குரோணி படைகளை அனுப்பினான். ஒரு அக்குரோணி என்பது 21870 தேர் - 2170 யானை - 65610 குதிரை - 109350 காலாட்படை என வில்லிபாரதம் வெளிப்படுத்துகிறது.

துரியோதனன் மொத்தமாகப் பதினொன்று அக்குரோணி சேனைகள் கொண்டிருந்தான். அதே போல் பாண்டவர்கள் ஏழு அக்குரோணி சேனைகள் கொண்டு போர் புரிந்தனர்.

பாண்டவ, கௌரவ அக்ரோணி சேனைகளின் மொத்த எண்ணிக்கையில் ஓர் அக்குரோணி என்பது

தேர் - 21870
யானை    - 21870
குதிரை    - 65610
காலாள்    - 1109350
(வில்லிபாரதம் அணிவகுப்புச் சருக்கம் - பா - 409.

போர் மேற்கொள்வதற்கு படைகளின் அவசியத்தையும், ஓரு அக்குரோணி படைகளைப் பற்றிய கணக்கீடு வில்லிபாரத்தின் வழி அறியமுடிகிறது.

போரில் வீரர்களின் நிலை

வேந்தன் போரில் பகைவரால் துன்புற்றபோது உடன் கொடி உயர்த்தி படைத்தலைமையேற்று நிலையடங்காது வரும் பகைவரின் பெரும்படையை தடுத்து நிறுத்தும் மறவரின் வீரத்தையும் அவர்தம் போர்ச் செயல்களையும் இலக்கியங்களில் காணமுடிகிறது.

வில்லிபாரத போர்க்களத்தில் யானைப்படை கொண்டு வந்த கலிங்க மன்னன் தான் புறமுதுகிட்டுத் தோற்கும், நிலை வந்ததே என்று எண்ணித் தேரில் ஏறித் தன் கையில் வில்லேந்தியப் போர் செய்ய முற்படுகிறார். அந்தக் காட்சியை

‘வென்னிடு கடகரி வீரன் வீமன் முன்
முன்னடி கலங்குற முறிந்த வாறுகண்டு
என்னிது எமமொழிந்து ஏறு தோராடும்
தன்னொடு சிலையோடும் தானும் தோன்றினான்”

என்ற பாடலில் வழி அறியமுடிகிறது.

அதே போல பகைவரின் சேனையைக் கண்ட உத்தரன் அஞ்சித் தளாச்சியடைந்தான். அவனுக்கு அர்ச்சுனன் வீரத்ததை ஊட்டும் பொருட்டு வீரனே பேரில் வில்லை வளைத்து நிற்கும் நிலையிலும் கையிடத்து வில்லை ஏந்தும் வகையிலும் உறுதியாக நின்று சிறிதும் தளராது பகைவரை எதிர்த்துப் போர் செய்க.

அவ்வாறு செய்தால் கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தில் உன்னை எதிர்த்து நிற்கக் கூடிய அரசர்கள் அச்சமடைவர் என்றும் போரில் வீரர்கள் தங்களின் வீரத்தை முன் வைத்து நம்பிக்கையுடன் போரிடுகின்றனர். இருப்பினும் வெற்றியோ, தோல்வியோ அவர்களின் மனநிலையை பொருத்து பெற்று தந்து விடுகிறது. ஆயினும் அரசனின் உக்கம் மிகுந்த வார்த்தைகளே அவர்களின் வீரத்தை மிகுதிப்படுத்தும் என்ற செய்தியை வில்லிபாரதக் கதையின் வழி பெற முடிகிறது.

அடிக் குறிப்பு:
1. சிலப்பதிகாரம் - மூலமும் உரையும். எழுத்தாளர், வ.த.இராமசுப்பிரமணியம். பதிப்பாளர் பூம்புகார் பதிப்பகம். முதல் , பதிப்பு 2009.
2. திருக்குறள் பரிமேலழகர் உரை,  புத்தக நிலையம் (வானதி பதிப்பகம்), சென்னை-17
3. கந்தசாமிக் கவிராயர் மு.ரா. - வில்லிபாரதம் பார்வதி , பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு 1976.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

* கட்டுரையாளர் : திருமதி ஜெ.குணசீலி, பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கல்லூரி,ஊட்டி

Last Updated on Tuesday, 08 May 2018 20:48