ஆய்வு: ”கவிஞர் நா. முத்துக்குமார் கவிதைகளில் –ஹைக்கூ ஓராய்வு”முன்னுரை:
மின்னல் வேக விரைவு உலகம் தனது அவசர நிலைக்கு ஏற்ப இலக்கியங்களையும் வடிவமைத்துக் கொள்கிறது. உலகின் புதியசூழலுக்கு ஏற்ப கவிதைகள் தனது வடிவத்தின் அளவைச் சுருக்கிக் கொண்டுக் கருத்தைச் செரிவாக்கிக் கொள்கின்றன. இந்த விதத்தில் ஹைக்கூ - சென்ரியூ -குக்கூ என்னும் கவிதை வடிவங்கள் தற்காலச் சூழலில் தோன்றிய வடிவங்களாகும். அந்த வகையில் நா. முத்துக்குமாரின் ஹைக்கூ கவிதைகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது. ஆய்வு எல்லை கருதி அவரது
குழந்தைகள் நிறைந்த வீடு என்னும் கவிதைநூல் மட்டும் இங்கு உட்படுத்தப்படுகிறது.

கவிஞர்.நா. முத்துக்குமார் வாழ்க்கைக்குறிப்பு:
கவிஞர் நா.முத்துக்குமார் 1975-ல் பிறந்தார். இவரது சொந்த ஊர் காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் ஆகும். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் திரைப்பாடல் குறித்து முனைவர் பட்டமும் பெற்றார்.

தூசிகள், பட்டாம்பூச்சி விற்பவன், பாலகாண்டம்; கண் பேசும் வார்த்தைகள், குழந்தைகள் நிறைந்த வீடு, கிராமம், நகரம் மாநகரம் போன்ற பலநூல்களை இவர் எழுதியுள்ளார். இவரது கவிதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு மலையாளம், ஜெர்மன் ஆகிய  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் இவரது நூல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசைப்பாடல்களை எழுதி மூன்று முறை ஃபிலிம்பேர் விருது, தேசிய விருது பெற்றார்.

ஹைக்கூ கவிதைகள் :
”தமிழில் ஐக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை, அணில்வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது.” 1 ஐக்கூ கவிதைகளை எழுதுபவர்கள் தமிழ்க் கவிதை வரலாற்றில் வானம்பாடி இயக்கம் போல அதி தீவிரமாக இக்கவிதை வடிவம் வளர இயங்குகின்றனர். ஐக்கூக்கள் சிற்றிதழ்கள் மூலமாகவும் இணைய இதழ்கள் மூலமாகவும் ஐக்கூத் தொகுப்புகள் மூலமாகவும் மிகப்பெரும் வளர்ச்சியைத் தமிழில் அடைந்திருக்கின்றன.

”ஜப்பானிய மொழியில் தோன்றிய ஐக்கூ, 5-7-5 என்னும் அசையமைப்புடையதாக, ஜென் (Zen) தத்துவத்தை விளக்குவதற்கும் இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது. தமிழிலக்கியத்தில் இவ்வடிவத்தில் அமைந்த கவிதைகள் சமூக விமர்சனத்திற்கும் சமூகக் கேடுகளைச் சாடுவதற்கும் பயன்படலானது. துளிப்பாவானது படிமம், குறியீடு, தொன்மம், முரண், அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் எனப் பல்வேறு உத்திமுறைகளில் அமைகின்றது” 2 என .ஐக்கூவின் தன்மைகள் விளக்கப்படுகின்றன. இவ்வாறான இக்கவிதை வடிவில் தமிழில் பலரால் எடுத்துக் காட்டப் பெற்ற கவிதைகளை எழுதியவர் கவிஞர் நா.முத்துக்குமார் ஆவார்.

கவிஞர் நா. முத்துக்குமாரின் ஹைக்கூ கவிதைகள்:
பயணங்களின் ஜன்னல்களே கவிஞர் ஹைக்கூ வானத்தை வர்ணம் மிக்கதாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. ஒருமுறை அவர் டெல்லியில் நடக்கும் உலகத் திரைப்பட விழாவிற்காக தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் பயணித்து கொண்டிருந்த போது ஜனவரி மாத வடஇந்தியாவின் பருவநிலை எலும்பை உருக்கும் குளிராக கண்முன் விரிகிறது. பனி, பனி எங்கு பார்த்தாலும் பனி, பனியின் வெண் சிறகுகள் ரயிலை மூடுகின்றன. கண்ணுக்கெட்டும் தூரம் வரைப் பனி அமாந்திருக்கிறது.

தூரத்தில் பனியில் மூழ்கும் ஒரு மரமும், மரத்தின் கிளையில் ஒரு காக்கையும் வெள்ளைப் பனியின் பின்னணியில் கறுப்பு நிறக்காக்கை, கவிஞரின் ஹைக்கூ விரிகிறது. ரயில் அந்த மரத்தை நெருங்க நெருங்க காக்கையும் பனியும் தொலைந்து மரம் மட்டும் நிராதரவான வெறுமையைச் சுமந்து கொண்டு நிற்கிறது. இதை கவிஞர்

”கருப்பு வெள்ளைப் புகைப்படம்
சட்டெனக் காணவில்லை
பனியும் காக்கையும்” 3

என்று எழுதியுள்ளார். ஒவ்வொரு ஹைக்கூ பின்னாலும் ஒவ்வொரு சம்பவம் அவருக்குள் கண் சிமிட்டி கொண்டிருக்கிறது. அவருடைய கவிவாழ்க்கை முதலில் ஹைக்கூவில் தான் தொடங்கியது. திரைப்பட பாடல்களிலும், ஹைக்கூவின் காட்சித் தன்மையையும் அனுபவ அடர்த்தியையும் சரிவிகிதக் கலவையாய் இணைத்து அவருடைய பாணியாக பயன்படுத்தி உள்ளார்.

சமுதாயப் பிரச்சனைகள்

மணல் திருட்டு:
நா.முத்துக்குமார்	- ”நா.முத்துக்குமார் கவிதைகள்”இன்றைய சமுதாயத்தில் உள்ள பிரச்சனையை ஹைக்கூ வடிவில் மிக எளிமையாகவும், அனைவருக்கும் புரியும் வகையில் கூறியுள்ளார். தற்போது நதிகள் வறண்டு விட்டதை,

”பறவைகள் முகம்பார்க்க
கண்ணாடியின்றி திரும்பின
வறண்டு போன நதி” 4

படம் பிடித்து காட்டியுள்ளார். ஆறுகள் வறண்டு விட்டதால் மணல் திருட்டு நடப்பதையும்,

”ஆழமான ஆறு
இறங்கியது லாரி
மணல் எடுக்க” 5

இவ்வரிகள் விளக்குகின்றன. நதியைக் கண்ணாடியாக உவமைப்படுத்திய விதம் பாராட்டுதற்குரியதாகும்.

பெண்சிசு கொலை:

பிறந்த குழந்தை பெண்ணாக இருந்தால் கள்ளிப்பாலிட்டு கொல்லும் பழக்கம் அன்று முதல் இன்று வரை தொடர்கிறது என்பதை,

”வயற்காட்டு எலியே
உனக்கும் பெண் சிசுவா?
பின் ஏன் நெல்” 6

இவ்வரிகள் குறிப்பிடுகின்றன. இந்தக்கேள்வி எலிக்கு அல்ல சமுதாயத் திற்கான கேள்வி தான் இது.

பிளாஸ்டிக் பை:
பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதால் மண்ணின் தன்மை மாறுகிறது. பிளாஸ்டிக் மட்காத பொருள் எனவே நிலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த,

”கடற்கரையில் ஊற்று தோண்டியதும்
கையில் கிடைத்தது
பிளாஸ்டிக் பை” 7

விழைகிறார் கவிஞர்.

வறுமைநிலை:
பணக்காரர்கள் வளர்ந்து கொண்டே போவதும், ஏழை ஏழையாகவே இருப்பதும் நம் நாட்டில் உள்ள சாபக்கேடு என்பதை

“எத்தனையோ வீட்டுக்கு படியளந்தவர்
இன்றைக்கும் வறுமையில்
கட்டிட மேஸ்திரி” 8

தொழிலாளரின் மனக்குமுறலை வருத்தத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களை நினைத்து,

”எந்த விருந்தாளிக்கும்
கத்தாதே காக்கையே
எங்களுக்கே உணவில்லை” 9

உணவின்றி நானே தவிக்கிறேன் என்கிறார்.

நிலவைக்காட்டி பிள்ளைக்குச் சோறூட்டும் பழக்கம் நம்மிடையே உள்ளது. ஆனால்,

”இன்று வேண்டாம்
நாளை வா நிலா
ஊட்டுவதற்குச் சோறில்லை” 10

நிலவைக் கூட இன்று வராதே சோறில்லை என்று கூறும் அவலநிலையில் தான் இன்றும் நம் சமுதாயம் உள்ளது என்பதை வருத்தத்துடன் கூறியுள்ளார்.

சுதந்திரம்:
நாம் சுதந்திரம் பெற்று பல வருடங்கள் ஆகியும் நாம் அடிமைகளாக உள்ளோம் இதை கூறுகையில் கவிஞர்,

”புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்
எங்களிடமிருந்து பறிக்கிறான்
பூனை வளர்க்கும் சுதந்திரம்” 11

பூனை வளர்க்க கூட சுதந்திரம் இல்லை அதையும் ஒருவன் பறிக்கிறான் என்ற வரிகள் ஆழந்த சிந்தனைக்குரியது.

முடிவுரை:
நா.முத்துக்குமார் அவர்கள் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் எனப் பல்வேறு பரிமாணங்களில் திகழ்ந்தவர். சமூகச் சிந்தனையில் அக்கறை கொண்டவர். பணம் இவர் வாழ்க்கையில் முன்னிலை வகிக்கவில்லை. சிறந்த மனிதர்கள், நண்பர்கள் மட்டுமே

சொத்தாகக் கொண்ட நல்ல மனிதர். இவருடைய ஒவ்வொரு படைப்பும் பாராட்டும் வகையில் சமூகச் சிந்தனையுடன் சிறப்பாக அமைந்துள்ளன.

அடிக்குறிப்புகள் :
1. www.ta.wikipedia.org/wiki/aikkuu பார்வை நாள் : 03-05-2017.
2. www.tamil.vu.com,பார்வை நாள் : 06-04-2017
3. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-15
4. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-137
5. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-151
6. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-126
7. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-128
8. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-124
9. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-152
10. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-123
11. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-139

உசாத்துணை நூல்கள்/இணையங்கள்:
www.ta.wikipedia.org/wiki/aikkuu
www.tamil.vu.com
நா.முத்துக்குமார்    - ”நா.முத்துக்குமார் கவிதைகள்”
பட்டாம்பூச்சி பதிப்பகம்,
அய்யப்பா பிளாட்ஸ்,
45/21, இருசப்பா தெரு,
விவேகானந்தர் இல்லம்,
சென்னை-5
முதல் பதிப்பு- ஜீன் 2016

முனைவர் பாக்யமேரி - ” தமிழ் இலக்கிய வரலாறு”.
என்சிபிஎச் பப்ளிக்கேஷன்ஸ்,
சென்னை- அம்பத்தூர்
முதல் பதிப்பு

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.