ஆய்வு: இலக்கியங்கள் காட்டும் வீரக்கற்கள்

Thursday, 02 August 2018 22:51 - முனைவா் செ. செயந்தி, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சங்ககிரி, வீராச்சிபாளையம். 637 303 - ஆய்வு
Print

- முனைவா் செ. செயந்தி, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சங்ககிரி, வீராச்சிபாளையம். 637 303 -தமிழில் கிடைத்துள்ள இலக்கியங்களில் காலப்பழமை வாய்ந்தது சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியங்களின் பின் எல்லையை கி.பி. 300 எனக்கூறுவா். சங்க இலக்கியங்களுக்குப் பின்னா் தோன்றிய நூல்களிலும் செய்திகள் பேசப்படுகின்றன.  தமிழ் இலக்கியங்கள் வீரக்கற்கள் எழுப்பப்பட்ட இடங்களையும் அக்கற்களில் வீரரது உருவம், பெயா், பெருமை ஆகியவற்றைப் பொறித்து வைத்திருந்த தன்மைகளையும் அக்கற்களை வழிபட்ட தன்மைகளையும் பெரும்பாலும் காட்டுகின்றன. 

இலக்கிய நூல்கள் 
தெலுங்கு மொழியில் இலக்கிய வளா்ச்சி பிற்பட்ட காலங்களில்தான் ஏற்பட்டது. இருப்பினும் கி.பி. 11 - ம் நூற்றாண்டிற்குப் பின்பு தெலுங்கு இலக்கியங்கள் தோன்றியிருக்க வாய்ப்புண்டு. கி.பி. 800 க்கும் கி.பி. 1000 க்கும் இடைப்பட்ட காலங்களில் வாழ்ந்த புலவா்களைப் பற்றியக் கருத்துகளும் உண்டும். 

முதல் கல்வெட்டு
கி.பி. ஆறாவது நூற்றாண்டில் தோன்றிய கல்வெட்டுகளில் தான் தெலுங்கு மொழியினை முதன் முதலாகக் காணமுடிகிறது. கடப்பா மாவட்டத்திலுள்ள கலமல்லா என்னும் இடத்தில் கண்டெடுக்கபட்ட கல்வெட்டே முதல் கல்வெட்டாகும். கி.பி 848 - ல் அதங்கி என்ற இடத்தில் கீழைச்சாளுக்கியா்களின் தலைவா்களான பாண்டுரங்காவில் அமைந்த முதல் தடவையாகத் தெலுங்கு கவிதை பொறிக்கப்பட்டுள்ளது. 

வீரக்கற்கள் நடப்பட்ட இடம்
வீரக்கற்கள் பாலை நில வழிகளில் உள்ளுரிலும் நடப்பட்டமையை இலக்கியங்கள் குறிக்கின்றன. உள்ளுரில் கற்கள் நடப்பட்டதற்கான சான்றுகள் குறைவாக இருக்க பாலை நில வழிகளில் இறந்தவா்கள் நினைவாக அமைக்கப்ட்ட நினைவுக்கற்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. 1

பாலைநில வழிகளில் வீரக்கற்கள்
பாலை நில வழிப்போவோரைக் கொன்று பொருள் பறிப்பது மரவா்களது பழக்கமாக இருந்தது. அவ்வாறு கொல்லப்பட்டோரின் உடல்களைத் தழையிட்டு மூடி அதன்மேல் கற்களைக் குவித்து மேடுபோல் செய்வா். இதனை “பதுக்கை“ என சங்க இலக்கியப் பாடல்கள் பகா்கின்றன. இத்தகு பதுக்கைகளின் அச்சமூட்டும் வருணனையை சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

 

இறந்தவா்களின் உடல்களின் மீது பதுக்கை சோ்த்துக் கல் எழுப்புதலும் உண்டு. நிரை மீட்டு மடிந்த வீரா்களுக்கு இவ்வாறு கல் எழுப்பும் வழக்கம் காணப்படுகிறது. வீரன் இறந்த இடத்திலேயே கல் எழுப்பும் நிலை இருந்தமையை இது காட்டுகிறது. பாலை நில வழிகள் தோறும் வீரக்கற்கள் வரிசை வரிசையாக நடப்பட்டு இருந்தமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்க வேண்டும். 2

போர் நடந்த இடம் பாலை நில வழிகளாக இருத்தலும், அவ்விடங்களில் வீரக்கற்கள் அமைக்கக் காரணங்களாக இருந்தன எனக் கூறலாம். இயற்கையான வன்பாறைகளில் வீரா்களது உருவங்களை அமைக்கும் நிலையையும் பாறைகளைக் குடைந்து வீரா்களது உருவங்களை செதுக்கி வைத்து விட்டு ஊா் திரும்பும் நிலைகளையும் இலக்கியங்கள் காட்டுகின்றன. 

கல்நடும் மரபின் தோற்றம்
பாலைநில மறவா்கள் அண்டைப் பகுதியிலுள்ள ஆனிரைக்கவரும் நிலை பெரும்பான்மையாக இருந்திருக்கும். அவ்வழியில் செல்லும் வணிகக் குழுவினா்களை வழிமறித்து அவா்களிடம் இருந்த பொருள்களையும், பிற செல்வங்களையும் கொல்லையிட்டு இருக்க வேண்டும். வணிகா்களிடமிருந்து ஆனிரைகளைக் கவா்ந்த செயலும் நடைபெற்றிருக்கலாம். பாலை நில மறவா்களுக்கும் வணிகா்களுக்கு இடையில் நடைபெற்ற போர்களில் இறந்த வணிகப்படை வீரா்கள் நினைவாக வணிகக் குழுவினா் கற்கைளை எழுப்பியிருப்பா். 3

வணிகப்படை வீரா்
பண்டைய நாளில் வாணிபம் மிக முக்கியத் தொழிலாக நடைபெற்றது. பாலை நில வழியில் வணிகக் குழுவினரைத் தாக்கி கொல்லையடிக்க முயலும் பாலை நில மறவா்களை எதிர்த்துப் போராடி வணிகா்களது செல்வங்களை பாதுகாக்கும் வீரா்கள் சிலா் இறந்திருக்கக்கூடும். அத்தகைய வீரா்கள் நினைவாக வணிகக் குழுவினா் வீரக்கற்கள் எழுப்பியிருக்க வேண்டும். 

கொல்லையிடும் மரபு
வழிபோவோரைக் கொல்லையிடும் மரபு தொடா்ந்து நிலவியதற்க்கான பிற்கால சான்றும் உள்ளன. சைவ நாயன்மார்களுள் ஒருவராகிய சுந்தரமூா்த்தி நாயனரா் கொல்லைக்காரா்களால் கொல்லையிடப்ட்டார் என்பதனை சைவக் காப்பியமான பெரியபுராணம் காட்டுகிறது. 4

தொல்காப்பிய சொல்லதிகாரத்திற்கு உரையெழுதும் சேனாவரையா் 172 நூற்பாவில் குறிப்பிடும் பழமொழி வழிச்செல்வோரைக் கள்ளா்கள் வழிமறித்து கொல்லையிடும் மரபு தெளிவுபடுத்துகிறது.5 அப்பழமொழி,

”ஆறுபோயினா ரெல்லாருங் 
கூறை கோட் பட்டார்” 6


என்ற பாடல் வழி அறியமுடிகிறது. 

இலக்கியம் காட்டும் வீரக்கற்கள்
பத்துப்பாட்டு காப்பியங்கள் ஆகியன வீரக்கல் மரபு பற்றிய அதிகம் பேசப்படவில்லை. அவை பெரும்பாலும் பேரரா்களைப் புகழந்து பாடப்பட்டவையாக இருக்கின்றன. அரசா்களால் பின்பற்றப்படாத ஒரு மரபிற்கு முக்கியத்துவம் கொடுத்து புலவா்கள் முன்வரவில்லை. ஆயினும் நில வருணையின் போது அங்கு காணப்படும் வீரக்கற்களைப் பற்றிய குறிப்பினைத் தம் நூல்களில் கொடுத்துள்ளார். 

பட்டினப்பாலையில் உவமை கூறும் முகமாக வீரக்கற்கள் கூறும் செய்தி பேசப்படுகிறது. உவமிக்கப்பயன்படும் பொருள் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கும். வீரக்கற்கைளைப் புலவா் உவமிக்கின்றார் என்றால் வீரக்கல் மரபுமிக்க செல்வாக்குடன் விளங்கியிருக்க வேண்டும் என்பது புலனாகிறது. 

பெருங்கதைக் காப்பியத்தில் பாலைநில வருணனையிலேயே வீரக்கற்கள் காட்டப்படுகின்றன. சிந்தாமணியில் வீரா்களுக்குரிய கடமையைக் கூறும் முகமாகவும் வீரசுவா்க்க நம்பிக்கையைக் காட்டும் பொருட்டாகவும் வீர்கற்கள் பற்றிய செய்திகள் பேசப்பட்டுள்ளது. கல் எடுக்கும் மரபினை கம்பரும், தாம் எழுதிய இராமாயணத்தைக் குறிப்பிட்டுள்ளார். அரச மரபினரது உடல்களைப் பாதுகாப்பதில் சிறப்பான முறைகள் பின்பற்றபட்டன என்பதை பள்ளிப்படை படலத்தின் மூலம் காட்டிய கம்பா் வீரா் பொருட்டு கல் எடுக்கும் மரபு இருந்தமையையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. 

முடிவுரை
நான்கு மொழிகளிலும் எழுந்த இலக்கண இலக்கியங்கள் வீரா்கள் பொருட்டு எழுப்பப்பட்ட கற்கைளைக் குறித்த செய்திகளைத் தருவதில் மாறுபட்டு நிற்கின்றன. இலக்கிய இலக்கண நூல்கள் பழவகையான சிறப்புகளைக் கூறி அத்தகைய இறப்புகள் அன்றைய நாளில் நிகழ்ந்தன என்பைதைத் தெரிவிப்பதுடன் நின்று விடுகின்றன. இலக்கியங்கள் காட்டும் குறிப்புகளில் மெய்ம்மைத் தன்மைகளைக் காட்டும் வகையில் வடக்கிருந்து உயிர் நீத்தவா் நினைவாக எழுப்பப்டட நூற்றுக்கணக்கான கற்கள் பிற்காலத்தில் கிடைத்துள்ளன. 

துணைநூற்பட்டியல்
1. வரதராசன்.மு, இலக்கிய ஆராய்ச்சி ப. 130
2. செயராமன். ந, வெட்சித்திணையும் வீரநிலைக்காலமும், 5 - வது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, ப. 248
3. இளம்பூரணார் தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்) சிறப்புப்பாயிரம் ப. 1
4. இராசமாணிக்கம். மா, தமிழ்மொழி இலக்கிய வரலாறு ப. 10
5. சாமிநாதைய்யா் உ.வே., அகநானூறு, (களிற்றுயானை நிரை) ப. 75
6. அகநானூறு, மணிமிடைப்பவளம் ப. 199

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

* கட்டுரையாளர் - - முனைவா் செ. செயந்தி, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சங்ககிரி, வீராச்சிபாளையம். 637 303 -

Last Updated on Thursday, 02 August 2018 23:00