ஆய்வு: ‘யுகதர்மம்’ உணர்த்தும் வறுமையும் குடும்பச் சூழலும்

Thursday, 20 September 2018 14:06 - முனைவர் சொ.சுரேஷ் அ.சந்திரசேகர், உதவிப்பேராசிரியர், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. காரைக்குடி. - ஆய்வு
Print

வண்ணநிலவன் சிறுகதை (முழுத் தொகுப்பு), நற்றிணை வெளியீடு, சென்னை-5, பக்கம்: 656 விலை ரூ. 550, 044 28442855இலக்கியங்கள் யாவும் மனித சமூகம் நன்கு வாழ்வதற்குரிய சூழலைத் தோற்றுவித்தல் வேண்டும். அந்நிலையை பண்டையக் காலந்தொட்டு இன்று வரையும் தமிழ் இலக்கியங்கள் செய்து வருகின்றன எனலாம். சங்க இலக்கியம், சங்க மருவிய கால இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் என பல்வகையில் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் புதிய எழுச்சியோடு, மரபினை உடைத்த இலக்கியங்களாய்த் தோன்றின. அவற்றுள் சிறகதை, புதினம், புதுக்கவிதை தனிச்சிறப்புடைய இலக்கிய வகைமைகளாகும்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் எல்லோரும் படிக்கும் வண்ணமும், தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட சூழலுக்கு ஏற்றவாறும் அமைந்த சிறுகதைகள், புதினம், புதுக்கவிதைகள் போன்றவை நடைமுறை நிகழ்ச்சிகள், அதனால் விளையும் செயல்கள் ஆகியவற்றை உரைநடையில் எளிமையாகவும், நுட்பமாகவும், சமூகப் பின்புலங்களோடு எடுத்துரைத்ததை நாம் மறுக்க இயலாது. அத்தகைய இலக்கியங்களுள் சிறுகதையின் வரவு மிகச் சிறந்த இலக்கிய கலைப்படைப்பாக மாறி வாசகர்களைக் கூடுதலாக்கியது என்றே கருதலாம்.

20-ஆம் நூற்றாண்டில் புதுமைப்பித்தன், மௌலி, நா.பிச்சைமூர்த்தி, லா.சா.இராமாமிர்தன், கல்கி, அகிலன், அரவிந்தன், சுந்தரராமசாமி, ரெகுநாதன் போன்ற பலரும் சிறுகதைப் படைப்பதில் தனித்தன்மைப் பெற்று விளங்கினர். அத்தகையோhpன் ஆற்றலைப்போல ‘வண்ணநிலவன்’ அவர்களின் சிறுகதைகளும் மிகச்சிறந்த படைப்பாக வலம் வந்தது என்றே கூறலாம்.

“கதைக்கரு எந்த இடத்திலிருந்தும் வரக்கூடும் எந்த நேரத்திலும் வரக்கூடும். ஊசி குத்துவது போல் சுருக்கென்று தைக்கக்கூடியது அது” (டாக்டர்.கோ.கேசவன், தமிழ்ச் சிறுகதைகளில் உருவம், ப.50)

என்பதற்கு ஏற்ப, எல்லா சூழலிலும், வாழும் புற உலகு மனிதனின் அக வாழ்க்கையை மிக நுட்பமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டவராய் வண்ணநிலவன் காணப்படுகின்றார். மேலும்,

“சிறுகதையில் பாத்திரங்கள் வளர்க்கப்படுவதில்லை, வார்க்கப்படுகின்றன. அதாவது வார்த்த பாத்திரங்களின் இயக்க நிலையில் தோன்றும் ஓர் உண்மை தான் சிறுகதையின் கருவாக அமையும்” (கா.சிவதம்பி, தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், ப. )

என்பதற்கு ஏற்பவும், மிக அழகாக, நுட்பமாக, தெளிவாக சிறுகதைக்கு ஏற்றார் போல பாத்திரங்களைப் படைத்து கதைக்கருவை மிகச் சிறப்பாக அமைத்துள்ளார் எனலாம்.

‘யுகதர்மம்’ கதையும், சமூக நிலையும்

வண்ணநிலவன் சிறுகதைத் தொகுப்பிலுள்ள முதல் சிறுகதையே அவர் கதைக்கரு அமைத்த விதத்தையும், கதைப்பின்னலையும் மிக நுட்பமாக அடையாளப்படுத்திவிடுகின்றன எனலாம். நடுத்தர, வறுமைக் கோட்டுக்குக் கீழான மக்களே இவர் கதையின் பெரும்பகுதி பாத்திரங்கள், நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை நிலையையும், சமூகத்தில் ஏற்படுகின்ற அகநிலை, புறநிலைச் சார்ந்த கருத்தியலும், மக்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், தீர்வுகள் எனப் பலவற்றையும் இவர் கதைகள் எடுத்துரைக்கின்றன என்பதை ‘யுகதர்மம்’ என்ற ஒரு கதையே சான்றாக அமைந்துவிடும்.

‘யுகதர்மம்’ கதைக்கரு

ஒரு நடுத்தர வர்க்க மனிதன் பொருளாதார நெருக்கடியால் தன் பருவ வயதுடைய மகள் ஏதோ ஒரு ஆடவனைக் காதல் செய்து திருமணம் செய்து (உடன்போக்கு - தந்தை, தாய்க்கு தொpயாமல் திருமணம் செய்யும் முறை) கொண்டு சென்றால் என்ன என்று எண்ணுவதும், அவாpன் மகள் அதேபோல திருமணம் செய்து கொள்கின்ற நிலையுமே கதையின் கரு ஆகும்.

இக்கதைக்கு வண்ணநிலவன் வைத்திருக்கும் தலைப்பே சிறப்பு எனலாம். அதாவது இன்றைய சூழலில் வறுமைக்கு உள்ளான ஒருவனுக்கு இந்நிகழ்வே உலகதர்மம் என கருதும் அளவிற்கு மனிதனின் சிந்தனை அமைந்திருக்கின்றது என்ற அடிப்படையிலேயே கதைக்கு ‘யுகதர்மம்’ என்று பெயாpட்டுள்ளார் என்பது நோக்கத்தக்கதாகும்.

வக்கீல் குமாஸ்தா வேலை பார்க்கின்ற ஈஸ்வரமூர்த்தியா பிள்ளை, அவர் செய்யும் தொழிலில் கிடைக்கும் அற்பசொற்ப தொகையின் வழி குடும்பம் நடத்துகின்றார். அவர் மனைவி இறந்துவிட, மூன்று மகள்கள், ஒரு மகன் ஆகியோருடன் வாழ்ந்து வருகின்றார். அவாpன் மூத்த மகன் பொpயவளாகி (பருவம் வந்து) பல நாட்கள் கழிகிறது. அதனால் பல சிந்தனைகள் அவருக்கு உதிக்கிறது.

“சில சமயங்களில் பிள்ளையவர்களுக்குத் தம் ஏலாத தனத்தினால் ஒரு விபரிதமான ஆசை கூட ஏற்படும். ஊரிலே எத்தனையோ பிள்ளைகள், அவனைக் காதலிச்சேன், இவனைக் காதலிச்சேன்னு காயிதம் எழுதி வச்சிட்டு, பயல்கள் கூட ஓடிப்போய் எவ்வளவு ஜோராக் குடும்பம் நடத்துதுகள். இந்த பெரிய மூதிக்கு அப்படி ஒரு ஆசை ஏற்படாதா? எவனாவது கூட்டிகிட்டுப் போயிடமாட்டானா என்று தம் அந்தரங்கத்தில் ஒரு ரகமான, உலக லோகாதாபங்களுக்கு அப்பாற்பட்ட எண்ணம் ஒன்று உண்டு” 

இந்த ஜென்மத்திலே நான் சம்பாருச்சு அதைக் கட்டிக் குடுக்கவா போறேன் என்று தன் வறுமையை நொந்து, ரெண்டாம் பேருக்குத் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே அழுது தீர்த்துக் கொள்வார். (வண்ணநிலவன் சிறுகதைகள், ப.16.)

என்று குமாஸ்தா அவர்கள் தம் வறுமையை எண்ணியும், தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடியாத நிலையில் ஏதோ ஒரு ஆடவனுடன் காதல் செய்து திருமணம் செய்து கொள்ள மாட்டாளா? என்று நினைக்கும் சூழலை ஆசிரியர் பதிவு செய்கின்றார்.

இன்றைய சமூகச் சூழலை பொறுத்தமட்டில் தந்தை தன் மகளை வேறொரு ஆடவனுடன் தெரியாமல் திருமணம் செய்து கொள்வது உலக தர்மத்தின்படி தவறு தான் எனினும் வறுமைக்குள் அகப்பட்ட மனிதனின் சிந்தைக்குள் இத்தகைய எண்ண ஓட்டங்கள் தோன்றத் தான் செய்யும் என்பதே வண்ணநிலவனின் கருத்து எனக் கருதலாம்.

குமாஸ்தாவின் மூத்த மகள் வேறொரு ஆடவனுடன் ஓடிக்போகிறாள். இந்நிகழ்வு ஊராருக்குத் தெரியவருகிறது. குடும்பத்தினர் துக்க நிகழ்வாகக் கருதி குமாஸ்தாவின் காலை பிடித்து அழுகின்றனர்.

“வே… ஒம்பி மக பண்ணியிருக்க வேலையைப் பார்த்தீராவே? அந்த மச்சு வீட்டுப் பையனோட போயிட்டாளே!

இடி விழுந்து விட்டது; பிள்ளைவாள் வீட்டிலே தான்.

போயிட்டாளா? என்று ஏற்கனவே எதிர்பார்த்திருந்த செய்தியைக் கேட்பது போல் தான் கேட்டார். அவர் கையில் இருந்த ரிப்பன் வியர்வையில் கசகசத்தது… இப்போது … பாக்கி மூன்றும் காலைக் கட்டிக் கொண்டு நின்று கதறுகின்றன. எவ்வளவு அநியாயமாக பிள்ளைவாளின் குடும்பத்தில் ஆட்குறைப்பு செய்து வருகிறான் ஆண்டவன்.” (வண்ணநிலவன் சிறுகதைகள், ப.19)

என்று ஆண்டவன் ஆட்குறைப்பு செய்ததாகவே ஆசிரியர் பதிவு செய்கின்றார். சூழலை உணர்ந்த பிள்ளையோ வருத்தம் ஏதுமில்லாமல் தம் பிள்ளைகளிடம் அக்கா எப்பப் போனா எனக் கேட்கிறார். சிறுவன் (மகன்) அழுது கொண்டே மாலை 3.00 மணிக்கு என்கிறான். துணிகளையெல்லாம் எடுத்துக் கொண்டு மவராசன் மாமாவோடு போனதாகக் கடைக்கார மாமா சொன்னார் என்று சொல்கிறான் அவர் மகன். உடனே அவர் மகனை அழைத்து,

“ஏட்டி! நடுவுள்ளவளே! அழாமே தம்பியைக் கூட்டிக்கிட்டு இந்த ரிப்பனை அக்காகிட்ட கொண்டு போயிக் குடுத்துட்டு வா. அங்கனதான் பஸ் ஸ்டாண்டில் நிப்பா. ‘அப்பா ஒணக்குன்னு வாங்கியாந்தாராம். நீ இல்லாததுனால எங்ககிட்ட குடுத்து அனுப்பிச்சான்னு போறுமி…’ பிள்ளைவாளுக்கு கண்ணீர் திரண்டுவிட்டது. நடுவுள்ளதும் சின்னப்பயலும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே நடந்தனர்” (வண்ணநிலவன் சிறுகதைகள், ப.20).

என்று கதையை ஆசிhpயர் நகர்த்திச் செல்கின்றார். வறுமை நிலையால் தனது கௌரவத்தையும் விட்டுவிட்டு தம் பிள்ளை வாழ்வை எண்ணும் நிலையையும், தம் மகள் ஆடவனோடு ஓடிப்போன பின்னரும் ரிப்பனைக் கொடுக்கச் சொல்வதும் இன்றைய சமூகச் சூழலில் சில குடும்பத்தில் நிகழும் நிகழ்வாகக் கருதியே ஆசிரியர் இக்கதையைப் படைத்துள்ளார்.

ஓர் கௌரவமிக்க வாழ்க்கையை, இச்சமூகச் சூழலில் பெண் பிள்ளைகளை பெற்ற சிலர், வறுமை உடையோர் இத்தகு செயல்களையும் செய்கிறார்கள் என்பதையும், அதற்கான அடிப்படைக் காரணம் வறுமை தான் என்பதையும் வண்ணநிலவன் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

ஊரில் ஒரு பருவ பெண் ஒரு ஆடவனோடு யாருக்கும் தொpயாமல் ஓடிப்போனாள் என்றால், அதனைப் பற்றி ஊரார் பேசி அசிங்கப்படுத்தும் நிலையை இன்னும் காணமுடிகிறது. அதனால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்களையும் இன்றளவும் காணமுடிகிறது.

அதே போல குமாஸ்தா அவர்கள் தெருவில் நடந்து செல்லப் பலரும் பலவிதமாகப் பேசிக் கொள்கின்றனர். அதனால் கோபமடைந்து குமாஸ்தா,

“சிவத்தே விடுங்களே! அந்த ரிப்பனை அம்மா பெட்டிக்குள்ளே வையி… ஏட்டி சின்னவளே, ராத்திரிக்கு சோறு இருக்கா? இல்லைன்னா ஒலைய வையி… நான் கடைக்குப் போயிட்டு வாரேன்’ என்று பையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டார். 

தெருவில் போகும்போது தமக்குள்ளாகவே, ‘தர்மத்தப் பேசுதானுகளாமே … தர்மம் … ஹீம் … ஏது தெரியல சேதி? கொளுத்திப் போடுவேன் கொளுத்தி…’ என்று குமுறிக் கொண்டே நடந்தார்” (வண்ணநிலவன் சிறுகதைகள், ப.22)

என்று ‘யுகதர்மத்தின்’ கதையில் இறுதியாக முடிக்கின்றார் எழுத்தாளர்.

அதாவது கௌரவத்தை விட்டுவிட்டுத் தான் நினைத்த செயலை ஊராருக்கு மறைப்பதும், ஊரார் இழிவாகப் பேச, அவர்களைக் குமாஸ்தா இழிவாகப் பேசுவதுமாகக் கதையை ஆசிரியர் முடிக்கின்றார்.

இவை அடிப்படையில் இன்றைய வறுமைக்கு உட்பட்ட பல பெண் பிள்ளைகளை பெற்ற குடும்பத்தினாரின் வாழ்க்கையாக சில இடங்களில் மாறி உள்ளது. உற்றார் உறவினர் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் ஆசை இருந்தும் பொருளாதாரம் இல்லாததால் தன் மகள் ஒரு ஆடவனுடன் ஓடிப்போய் மணம் செய்து கொள்ளும் நிலையைக் குடும்பத் தலைவனான தந்தையே அங்கீகாரிக்கும் சூழலும் நிலவுகிறது என்பதே ஆசிரியர் உணர்த்தும் கருத்தாகும்.

 


உசாத்துணை நூல்: வண்ணநிலவன் சிறுகதை (முழுத் தொகுப்பு), நற்றிணை வெளியீடு, சென்னை-5, பக்கம்: 656 விலை ரூ. 550, 044 28442855

* கட்டுரையாளர்: - முனைவர் சொ.சுரேஷ்    அ.சந்திரசேகர், உதவிப்பேராசிரியர், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. காரைக்குடி. -

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 20 September 2018 14:14