- முனைவர்(திருமதி).ஜெ.காவேரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி,விருதுநகர். -தமிழர் தம் இலக்கிய மாளிகையை அலங்கரிக்கும் இலக்கிய வகைகள் எண்ணற்றவை. அவற்றுள் சிற்றிலக்கிய வகைகள் குறிப்பிடத்தக்கவை. தமிழ்நாட்டின் ஒப்பற்ற போர் வேந்தர்களாம் சேர, சோழ, பாண்டியர்களின் தன்னிகரில்லாப் புகழினைப் பறை சாற்றும் விதமாய் அமைந்திருப்பது முத்தொள்ளாயிரம்;. இதில் வேந்தர்களின் பெருமைகளை ஆசிரியர் அக, புறப் பாடல்களால் வெளிப்படுத்தியுள்ளார்

முத்தொள்ளாயிர இலக்கியம் கருத்தாற்றலாலும், கற்பனையாற்றலாலும், சொல்லாற்றலாலும் சிறப்புற்று விளங்குவது. மொழியின் அழகினை விளக்கும் அணியிலக்கணங்கள் இதில் பல பயின்று வந்துள்ளன. அவற்றுள் புலவரின் குரலாக ஒலிக்கும் தற்குறிப்பேற்ற அணி சிறப்பானதாகும். 

தற்குறிப்பேற்றம்
உலகில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது, கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணியாகும். இதன் இலக்கணம் குறித்து தண்டியலங்காரம் பின்வருமாறு கூறுகின்றது.

“பெயர் பொருள் அல்பொருள் எனஇரு பொருளினும்
இயல்பின் விளை திறனன்றி அயலொன்று
தான் குறித்தேற்றுதல் தற்குறிப் பேற்றம்”(தண்டி-56 )

இத்தகைய தற்குறிப்பேற்ற அணியானது இலக்கியங்களில் புலவர் கூற்றாக இலக்கியத்தில் வரும் மாந்தர், பொருள் போன்றவற்றின் சிறப்பினை எடுத்துரைக்கும் முகமாய் காணப்படும்.

முத்தொள்ளாயிரத்தில் தற்குறிப்பேற்றம்
முத்தொள்ளாயிர இலக்கியம் கற்பனையாற்றல் வளத்தால் சிறப்புற்று, ஒப்பற்று விளங்கும் ஓர் இலக்கியமாகும்.  அன்றாட வாழ்வில் நாம் காண்பவை ஆயிரம் ஆயிரம் நிகழ்ச்சிகள். ஆனால் அவற்றிற்கு கற்பனை என்னும் உயிர் கொடுத்துக் கவிதையாக்கும் போது அது இறவாப் புகழுடைய இலக்கியமாகின்றது. நாம் இவ்வவுலகில் இயல்பாகக் காணும் இயற்கைக் காட்சிகள் முத்தொள்ளாயிரப் புலவரின் கற்பனையில் இருந்து முற்றிலும் மாறானவை, புதுமையானவை. ௨லகில் நடக்கும் இயல்பான காட்சிகள் புலவருக்கு மன்னனின் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றன. அவ்வகையில் முத்தொள்ளாயிரப் பாடல்களில் பயின்று வரும் தற்குறிப்பேற்ற அணி குறித்து ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

வானவில்லின் திருக்கோலம்
அண்ணாந்து பார்க்கின்றான் புலவன். வானில் வர்ணங்களின் ஜாலமாம் வானவில் தோன்றி காணப்படுகின்றது. அதனைக் கண்ட புலவன், சேரனுக்கு அஞ்சித் தான் விண்ணோரும் சேரனின் கொடியாம் விற்கொடியினைக் கவினுற வரைந்து வைத்துள்ளனர் என்று எண்ணுவதாய்,

“வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன் 
வில் எழுதி வாழ்வார் விசும்பு”(முத்தொள்ளாயிரம் - பா.எண்-5)

பின்வரும் பாடல் வரிகளில் குறிப்பிட்டுள்ளார். மழைபெய்து முடித்தவுடன் வானில் வானவில் தோன்றுவது இயற்கை. ஆனால் சேரனின் வீரச்சிறப்பைப் பறை சாற்றும் முகத்தான் புலவர் வலியிற் சிறந்த வானோர் கூட சேரனுக்கு அஞ்சி, அவனுக்குப் பணிந்து திறை செலுத்தி அவன் சின்னமாம் விற்கொடியினை வரைந்து அவனை மகிழ்விக்கின்றனர் என்று உலகில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிப் பாடியுள்ளார்

சினம் தணியாக் களிறு
போரில் புண்பட்ட யானைகள் இரவில் வேதனை தாங்காமல் துதிக்கையை உயர்த்தி ஆட்டிப் பிளிறுவது ௨லக இயற்கை. இத்தகைய நிகழ்வினைக் கண்ணுற்ற புலவர் உள்ளத்தில் பகலெல்லாம் போர்க்களத்தில் போரிட்டுப் பகைவர்களின் வெண்கொற்றக் கொடியினைப் பிடுங்கி, காலில் போட்டு மிதித்த சேரனின் யானை, இரவில் சினம் தணியாது வெண்ணிலவினைக் கண்டு அதனையும் யாரோ ஓர் மன்னனின் வெண்கொற்றக்குடை என மயங்கி, அதனைப் பிடிக்க நீட்டிய துதிக்கையுடன் பிளிறியது களிறு என்கின்றார்.

“வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாய எறிந்த பரிசயத்தால் தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டும்தன் கை” (முத்தொள்ளாயிரம் - பா.எண்-6)

போரில் புண்பட்ட யானை இயல்பாக இரவில் வேதனை தாங்காமல் தன் கைகளை ஆட்டிப் பிளிறும். ஆனால் அது கூட கவிஞரின் கற்பனாவுள்ளத்தில் சேரன் மட்டுமல்ல அவனது போர் யானை கூட போர்த்தாகம் தணியா நிலையில் இருப்பதனை வெளிப்படுத்துகின்றது போலும்.

அடைத்திடத் திறந்திடத் தேய்ந்தது கதவு
பார் வேந்தன் சேரனின் நாட்டில் உள்ளோரின் பெரும்பான்மையான வீடுகளின் தெருக்கதவுகளின் குமிழ்கள் தேய்ந்து கிடந்தன. பவனி வரும் தேர் வேந்தனின் அழகினை மகள் கண்டால் காதல் நோய் கொண்டு விடுவாளோ என்றெண்ணிய அன்னை கதவை அடைக்கின்றாள். அன்னை சென்றவுடன் மகள் திறக்கின்றாள். அன்னை அடைக்க, மகள் திறக்க, அன்னை அடைக்க, மகள் திறக்க, காதல் பயிர் வளரக் குமிழ் தேய்ந்தது என்கின்றார் புலவர். 

“தாயர் அடைப்ப மகளிர்  திறந்திட 
தேயத் திறந்த குடுமியவே” (முத்தொள்ளாயிரம் - பா.எண்-10)

பழங்கதவுகள் தேய்ந்து போவது இயற்கை தான். ஆனால் அன்னையர் அடைக்க, மகளிர் திறக்க அதனால் அவற்றின் குமிழ்கள் தேய்ந்தன என்பது கவிஞரின் அபாரமான தன் கற்பனை.

தேவரும் அஞ்சும் தேர்வேந்தன்
“ஏம ணிப்பூண் இமையார் திருந்துஅடி
பூமி மிதியாப் பொருள்” (முத்தொள்ளாயிரம் - பா.எண்-60)

என்னும் பாடலில் பாண்டிய மன்னனின் கட்டளைக்கிணங்க கண்ணிமைக்காத இயல்பு கொண்ட தேவர்களும் பூமியை மிதிப்பதில்லை என்கின்றார் புலவர்.

விண்ணவர் என்றாலே அவர்கள்தம் பாதம் மண்ணில் தோய்வதில்லை என்பது புராண மரபு. நாலடியாரின் கடவுள் வாழ்த்துப் பாடலான,

“கால்நிலம் தோயாக் கடவுளை யாம்நிலம்
சென்னியுற வணங்கித் தோதும்” (நாலடியார்)

என்பதில் கூட இக்கருத்துப் பெறப்படுகின்றது. ஆனால் பூமியில் அவர்கள் காலடி பட்டால் அவர்களும் பாண்டியனுக்குத் திறை செலுத்த வேண்டி வரும் என்ற அச்சத்தாலே அவர்கள் கால்படாது நடந்து வருகின்றனர் என்று இயல்பான, மரபான ஓர் நிகழ்வில் கூட புலவர் தன் குறிப்பினை ஏற்றி மிகச் சிறந்த கற்பனை நயத்தைக் காட்டியுள்ளார்.

களிறின் கழுத்து
யானைகள் போர்க்களத்தில் பகைவர்கள் மார்புகளைக் குத்துதல் என்பது இயற்கை. ஆனால் அவை அவர்களது மார்பினை ஓலையாக்கித் தங்கள் மருப்புகளை எழுத்தாணிகளாகக் கொண்டு, இந்நிலம் எம்மன்னனனுக்கே சொந்தம் என்று எழுதுவதாகக் கவிஞர் தன் குறிப்பினை ஏற்றி,

“மருப்பூசியாக மறங் கலைவேல் மன்னர்
உருத்தகு மார்பு ஓலையாகத் திருத்தக 
வையகம் எல்லாம் எமதென்று எழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு” (முத்தொள்ளாயிரம் - பா.எண்-60)

என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில
போர்க்களத்தில் பிணங்களைத் தின்னும் நரிகள் ஊளையிட்டுப் பிற நரிகளை அழைப்பது இயற்கை. ஆனால் கவிஞர் தன் அழகிய கற்பனாவாற்றலால் பகைவர்களின் முகத்தினைக் கண்ட நரிகள், அதனுள் இன்னும் மாறாத சினத்தினைக் கண்டு அஞ்சி பயத்தால் ஊளையிட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.(பா.எண்-68) என்று தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

குவளை மலர்கள் குளத்தில் வளர்ந்து மாலையாகி மன்னனுக்கோ அல்லது கடவுளுக்கோ வருவது என்பது உலக இயற்கை. இக்காட்சியைக் கண்ணுற்ற புலவரின் கற்பனாவுள்ளம், உலகில் பல மலர்கள் இருக்க, குவளை மலருக்கு மட்டும் குவலயத்தை ஆளும் மன்னனின் மார்பினை அலங்கரிக்கும் மாண்பு எப்படி வந்தது என்றால், அது ஒற்றைக் காலில், குளிர்ந்த நீரில் தவம் கிடப்பதால் மட்டுமே கிட்டியுள்ளது என்று தன் குறிப்பினைக் காட்டியுள்ளார்.

தற்குறிப்பேற்ற அணி என்பது பெரும்பாலும் இலக்கியங்களில் பயின்று வரும் ஓர் அணியாகும். கற்போர் இலக்கியத்தினைச் சுவைபடக் கற்பதற்கு இவை துணைபுரிகின்றன. மேலும் கவிஞரின் கவியாற்றலைப் பறை சாற்றும் விதமாகவும் இவை அமைகின்றன. இவையனைத்திலும் முத்தொள்ளாயிரப் பாடல்களைப் பொறுத்தவரை இது பெரும்பாலும் மன்னர்களின் வீரம், அழகு, சிறப்பு போன்றவற்றினை வெளிப்படுத்தும் ஓர் களமாகவே காணப்படுகின்றது.

பார்வை நூல்கள் :

1. தண்டியலங்காரம் - புலியூர்கேசிகன் உரை, சாரதா பதிப்பகம், சென்னை
2. நாலடியார் - புலியூர்கேசிகன் உரை, சாரதா பதிப்பகம், சென்னை
3. முத்தொள்ளாயிரம் - கதிர் முருகு உரை, சாரதா பதிப்பகம், சென்னை

 

* கட்டுரையாளர் - - முனைவர்(திருமதி).ஜெ.காவேரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி,விருதுநகர். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.