ஆய்வு: பண்டைய இலக்கியங்களில் நன்னன் சேய் நன்னனின் மூதூர்ச் சிறப்பு

Tuesday, 11 December 2018 20:53 - முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002 - ஆய்வு
Print

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -நன்னன் சேய் நன்னனுடைய பழமையான ஊர் செல்வம் நிறைந்து உயர்ந்து ஓங்கிய மதில்களை உடையது. அவ்வூரினின்றும் பெயர்தலை அறியாத பழங்குடிகள் வாழும் ஊர் அகன்ற இடமாயினும் போதுமான இடமில்லாத நிலைபோன்று சிறந்த பெரிய அங்காடித் தெருக்கள் நடைபெறுவது போன்று எப்போதும் இருக்கும். பகைவர் செல்ல அஞ்சும் பல குறுந்தெருக்களும் உள்ளன. ஊர்மக்கள் ஆரவாரம் கடல் போன்றும் மாடங்கள் உயர்ந்து ஓங்கி நிற்கும். அவ்வூரில் வாழ்வோர் வெறுப்பில்லாமல் விருப்பத்துடன் வாழ்வர். குளிர்ந்த பெரிய சோலைகளில் வண்டுகள் ஒலித்துக் கொண்டிருக்கும். அவனுடைய பழமையான வெற்றியையுடையது மூதூர் ஆகும் என்பதைப் பின்வரும் பாடல் வரிகள் காட்டுகின்றன:   

நிதியம் துஞ்சும் நிவந்துஓங்கு வரைப்பின்
பதிஎழல் அறியாப் பழங்குடி கெழீஇ
வியல்இடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து
யாறுஎனக் கிடந்த தெருவின் சாறுஎன 
இகழுநர் வெரூஉம் கவலை மறுகின்
கடலெனக் காரென ஒலிக்கும் சும்மையொடு
மலையென மழையென மாடம் ஓங்கித்
துனிதீர் காதலின் இனிதமர்ந்து உறையும்
பனிவார் காவின் பல்வண்டு இமிரும்
நனிசேய்த் தன்று அவன் பழவிறல் மூதூர்
(பெரும்பாண்.478 – 487).

அவன் தன்னுடன் மனம் பொருந்தாத பகைவரின் கரிய தலை வெட்டுண்டு வீழ, அதைப் பருந்துகள் உண்ண அலையும் போர்க்களத்தில் வெற்றி பெறும் மறவர், தம் கரிய காம்பினையுடைய வேல்கள் சாத்தப் பெற்ற கதவினையுடைய வாயிலைப் பிறர் ஐயுறாது, அஞ்சாமல் புகுவர். இங்கு நன்னனின் பெரிய அரண்வாயில் காணப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன:

பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப்
பருந்துபடக் கடக்கும் ஒள்வாள் மறவர்
கருங்கடை எஃகம் சாத்திய புதவின்
அருங்கடி வாயில் அயிராது புகுமின், 
(மலை.க.488 – 491).

நன்னனின் சிறப்பு
பரந்த இருள் நீங்க பகலில் ஒளியைத் தர எழும் கதிரவன் போன்ற அவன் பிறர் பழி கூறாத சிறப்பினையும் பகைவர் தூரத்தில் இருந்தாலும் அங்குச் சென்று தூசிப்படையை வென்று கொன்று குவித்து, உயர்ச்சியை உடைய யானைப் படையில் அணி வகுத்து, வேலின் வெற்றியைக் காட்டிய அறிவுடையோர்க்குக் கொடுத்தலைக் கடமையாகக் கொண்டவன். வளைந்த காலையுடைய முதலைகள் அவனது அகழியில் இருக்கின்றன. அலைகள் எழும் நிலையில் கல்லைத் தோண்டிக் குவித்தது அவன் அகழி. மலை போன்று உயர்ந்து வானைத் தொட்டது அவன் மதில். புகழ் பரவும்படியாகச் செறிவுடையது அவன் பழமையான ஊர். வேளிர் குலத்தில் தோன்றியவன். இது அவ்வூரின் இயல்பு. விதையாக இட்டதெல்லாம் உழவர் விரும்பிய நிலையில் விளைந்தது. மழை பெய்தல் தங்கிய அகன்ற பெரிய கொல்லை நிலம் கொண்ட நாடு என்பதைப் பின்வரும் அடிகள் விவரிக்கின்றன:

பாயிருள் நீங்கப் பகல்செய்யா எழுதரு
ஞாயிறு அன்னஅவன் வசையில் சிறப்பும்,
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்
நுகம்படக் கடந்து நூழி லாட்டிப்
புரைத்தோல் வரைப்பின் வேல்நிழல் புலவோர்க்குக்
கொடைக்கடன் இறுத்தஅவன் தொல்லோர் வரவும்,
இரைதேர்ந்து இவரும் கொடுந்தாள் முதலையொடு
திரைபடக் குழிந்த கல்லகழ் கிடங்கின்
வரைபுரை நிவப்பின் வான்தோய் இஞ்சி
உரைசெல வெறுத்தஅவன் மூதூர் மாலையும்
வேளை நீ முன்னிய திசையே
மிகுவளம் பழுநிய யாணர் வைப்பின்
புதுவது வந்தன்று இது அதன் பண்பே
வானம்மின்னு வசிவு பொழிய ஆனாது
இட்ட எல்லாம் பெட்டாங்கு விளையப்
பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து,
(மலை.க.85 – 99).

நன்னன் சேய் நன்னனின் பெருமை
நன்னன் மலரால் கட்டிய மாலையையுடைய மார்பினன்; மூங்கில் போன்ற திரண்ட தோளினையும் தாமரை மலர் போன்ற அருட்கண்களையுமுடைய மங்கையரின் கணவன்; பகைவரைப் போர்முனையில் வெல்லும் வலிமையுடையவன்; நன்னெறியில் நடப்பவன்; வில் தொழிலில் வல்லவன்; பேரணிகலன்களை அணிந்தவன் என்பதை,

கனிபொழி கானம் கிளையொடு உணீஇய
துனைபறை நிவக்கும் புள்ளினம் மானப்
புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்
வனைபுனை எழில்முலை வாங்குஅமைத் திரள்தோள்
மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன்
முனைபாழ் படுக்கும் துன்னருந் துப்பின்
இசைநுவல் வித்தின் நசைஏர் உழவர்க்குப்
புதுநிறை வந்த புனல்அம் சாயல்
மதிமாறு ஓரா நன்றுணர் சூழ்ச்சி
வில்நவில் தடக்கை மேவரும் பெரும்பூண்
நன்னன்சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு
உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுதுஎதிர்ந்த
புள்ளினர் மன்ற, என்தாக் குறுதலின், (மலை.க.55 – 66)

என்ற பாடலடிகள் புலப்படுத்துகின்றன. அவன் நாடு சிறந்து விளங்குவதையும் பல வளங்களை உடையதையும் தூய துளிகளைப் பொழியும் பொய்யாத வானம் போன்று இடையறாது கொடுத்துக் கொண்டே இருக்கும். அவன் நாள்தோறும் கொடுக்கும் நாளோலக்கமாகிய இருக்கையும் உடையவன். பண்பால் நல்லவர் குழுமியிருப்பர் அவன் அவையில், நாவன்மையுடையர் வன்மையில்லாதார் அவன் அவையில் சென்று ஏதாவது கூறினாலும் அவர் புறநிலையை மறைத்துச் சென்றோர் கருத்தை வழி மொழிவோர் எடுத்துக்காட்டிச் சோர்வு இன்றி விளக்குவர். நல்ல வழிகளிலேயே செலுத்தும் தன்மையுடையோர் அவர் சுற்றம் என்பதைப் பின்வரும் பாடல் வரிகள் காட்டுகின்றன:

ஆற்றின் அளவும் அசையும்நல் புலமும்
வீற்றுவளம் சுரக்கும்அவன் நாடுபடு வல்சியும்
மலையும் சோலையும் மாபுகல் கானமும்
தொலையா நல்லிசை உலகமொடு நிற்பப்
பலர்புறம் கண்டுஅவர் அருங்கலம் தரீஇப்
புலவோர்க்குச் சுரக்கும் அவன்ஈகை மாரியும்
இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு
அரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
தூத்துளி பொழிந்த பொய்யா வானின்
வீயாது சுரக்கும்அவன் நாள்மகிழ் இருக்கையும், 
நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து
வல்லா ராயினும் புறம்மறைத்துச் சென்றோரைச்
சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி
நல்லிதின் இயக்குமவன் சுற்றத்து ஒழுக்கமும்
(மலை.க.67 – 80).

துணைநூல் பட்டியல்
சுப்பிரமணியன், ச.வே., 2003, பத்துப்பாட்டு, கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.
சுப்பிரமணியன், ச.வே., 2006, சங்க இலக்கியம் (முழுவதும்), சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
குருநாதன் (மற்றும் பலர்.)., 1988, சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் தொகுதிமூன்று, தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

* கட்டுரையாளர் - - முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002 -

Last Updated on Monday, 31 December 2018 21:39