ஆய்வு: பிரபஞ்சன் நாவல்களில் பெண்ணியம்

Thursday, 28 March 2019 20:16 - மா.மதுமதி, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010. - ஆய்வு
Print

எழுத்தாளர் பிரபஞ்சன்குடும்பத்தினரை உயர்த்தும் குலவிளக்காய் சமுதாயத்தினை வழிநடத்தும் விடிவெள்ளியாய் குவலயத்தில் திகழ்பவர்கள் பெண்களே. இத்தகு பெண்கள் கடந்து வரும் பாதைக் கரடுமுரடானது, ஏனெனில் வேறு எந்த உயிரினங்களிலும் இல்லாத ஆண், பெண் என்ற பேதம் மனித இனத்தில் மிகுதியாக வளர்ந்து வந்துள்ளது. இப்பேதத்தை உருவாக்கியுள்ள இன்றைய சமுதாயத்தில் ஆண், பெண் வேற்றுமைகளை நீக்கி காலங்காலமாக அடிமைக் கூண்டில் அகப்பட்டு அல்லலுறும் பெண்ணை விடுவித்து, அவர்களுக்கு முதலிடம் கொடுத்து, அவளுக்காகவே குரல் கொடுப்பது முன்னேற்றச் சிந்தனையாகக் கருதப்படுகிறது. இச்சிந்தனை இன்று வேரூன்றி நின்று, பரவலாகப் பேசப்பட்டு, முக்கியத்துவம் பெற்று வருகின்றது. இச்சிந்தனைக் காலத்தின் தேவையை உணர்ந்து எழுந்தது எனில் மிகையில்லை. பெண்ணியத்தின் மையக் கருத்தாக அமைவது பெண்களைச் சமுதாய அளவில் முன்னேற்றுவதுதான் சமூகத்தில் பெண்களின் இடத்தை இனம் காட்டுதல், அவற்றால் பெண்கள் அடையும் பாதிப்புகள் அவற்றின் ஆழம் மற்றும் அதற்குக் காரணமான நிறுவன மரபு போன்றவற்றையே இக்கட்டுரை முன்வைக்கிறது. 

பெண்ணியம்
“Feminism” என்ற ஆங்கிலச் சொல் “Femina” என்ற இலத்தின் சொல்லிலிருந்து மருவி வந்ததாகும். Femina என்ற சொல் முதலில் பெண்களின் குணாதிசயங்களைக் குறிப்பிடவே இந்த சொல் வழங்கப்பட்டது. பின்பு பெண்களின் உரிமைகளைப் பேசுவதற்கு வழங்கப்பட்டது.

“பெண்ணியம் என்ற இச்சொல் 1890இல் இருந்து பாலின சமத்துவக் கோட்பாடுகளையும், பெண்ணுரிமைகளைப் பெறச் செயற்படும் இயக்கங்களையும் குறிக்கப் பயன்பட்டு வருகின்றது”.1

பெண்ணியம், பெண்விடுதலை, பெண்ணுரிமைப் போராட்டம், பெண்நிலை பேதம் போன்ற சொற்றொடர்கள் பெண் விடுதலையைக் குறிக்கும். பெண் விடுதலை என்ற கருத்து மேல்நாட்டுச் சிந்தனையின் தாக்கமாகும். பெண்ணியம் என்பது ஆண்களை எதிர்க்கும் அபாயமானக் கூறு என்று பலர் கருதுகின்றனர். காலங்காலமாக அடிமைப்பட்டு வதைக்கப்பட்டு வாழும் பெண்களை அடிமைக் களத்திலிருந்து விடுவித்து சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பினைப் பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் செயற்பாடாகும்.

பெண்ணியத்தின் நோக்கம்
பெண்ணியம் ஆணாதிக்கத்தை எதிர்க்கிறதேயன்றி அது ஒரு போதும் ஆண்களை எதிர்ப்பதில்லை. ஆணுக்கு நிகராக விளங்கும் பெண்ணும் எல்லாத் துறைகளிலும் ஆணுக்குச் சமமாக முன்னேறவேண்டும் என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டது. வாழ்வின் முக்கிய அங்கம் வகிக்கும் பெண், தன்னை அடிமைப்படுத்தி, உடைமைப் பொருளாக எண்ணி, இழிவுபடுத்தித் துன்புறுத்துவதை விரும்பாமல் ஆணை எதிர்த்து போராடுகிறாள். எனவே, பெண்ணியத்தின் நோக்கம் பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தையும் பெற்றுத் தருவதாகும்.

“இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், முதுமையில் மக்கள் என்று பெண் பிறரைச் சார்ந்து வாழும் நிலையை மனுதர்மம் பேசுகிறது”.2

தந்தை, கணவன், தமையன், மகன் என்கிற ஆடவரையே பெண்கள் சார்ந்து இருக்க வேண்டும் எனச் சமுதாயம் எடுத்துக் காட்டுகிறது. இதற்கு காரணம் கூறும் ஹென்றி ஹிப்சனின் கருத்து இங்கு நோக்கத்தக்கது.

“ஆண்களால் இயற்றப்பட்ட சட்டங்களைக் கொண்டதும், ஆண்களின் கண்ணோட்டத்தைக் கொண்டே பெண் நடத்தையை மதிப்பிடும் நீதிமுறையைக் கொண்டதுமான, முற்றிலும் அதன் முதன்மையான இன்றைய சமுதாயத்தில் ஒரு பெண் ஆத்ம தனித்துவமுள்ளவளாக வாழமுடியாது”.3

பெண்களுக்கு காலங்காலமாக மறுக்கப்பட்டு வந்த உரிமைகளை மீட்க வேண்டுமென்பதே பிரபஞ்சனின் முதன்மை நோக்கமாக உள்ளது என்பதை அவரது நாவல்கள் வழி அறியமுடிகின்றது.

பெண்மை நிராகரிப்பு
பெண்ணின் புறத்தோற்றம், புற உலக நடவடிக்கைகள் ஆகியவற்றில் இன்று சில மாற்றங்கள் நேர்ந்திருப்பது உண்மைதான். பெண்ணின் வாழ்க்கைத்தரம், கல்வி, வேலை வாய்ப்பு ஆகிய பல துறைகளில் சென்ற நூற்றாண்டுகளை விடவும் இன்று பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது. பெண் குறித்த சமூக கண்ணோட்டங்களிலும் சில வரவேற்கத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும் அவனுக்கு நிகரானக் கல்வி, பொருளாதாரத் தற்சார்பு ஆகியவற்றையும் பெற்ற பின்னும் கூடப் பெண்ணை இரண்டாம் நிலையில் மட்டுமே வைத்துப் பார்க்கும் போக்கு, மரபுகள் ஆழமாக வேரூன்றிப் போன சமூக அமைப்பில் இன்றும்கூட கடுமையாக நிலவி வருகிறது. பெண் என்ற காரணத்தால் பல இடங்களில் அவள் நிராகரிக்கப்படுகிறாள். 

‘சந்தியா’ நாவலில் சந்தியாவின் தோழி கனகாவின் கணவன் கணேசன் கனகாவை சம்பாதித்துக் கொடுக்கும் இயந்திரமாகக் கருதினான். அவள் இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்தான். ஆணாதிக்கத் தன்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் சந்தியவின் ஆலோசனையின் பேரின் அவனை விவாகரத்துச் செய்த போது அவள் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தாள்.

“விவாகரத்துக்குப் பின்னாலே தாண்டி நான் நிம்மதியா இருக்கேன். நான் மனுஷின்னு இப்பதாண்டி உணர்கிறேன் ”.4   

பிரபஞ்சன் தனது கதைகளின் கதாபாத்திரங்கள் மூலம் பெண் எவ்வாறெல்லாம் எதற்காக நிராகரிக்கப்படுகிறாள் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார்.

பெண்ணின் விருப்பம் போற்றப்படாமை
ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் என்பது ஓர் இயற்கை நிகழ்வு. இதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அந்த ஆணும் பெண்ணுமே ஆவர். எதன் பொருட்டும் மற்றவர்கள் தலையீடு இந்த நிகழ்வுக்கு இருப்பது சரியானதல்ல. திருமணம் பேசப்படும் போது ஆணின் விருப்பமும் எதிர்பார்ப்புகளும் ஆணைச் சார்ந்த மாப்பிள்ளை வீட்டார் கட்டுப்பாடுகளும் மதிக்கப்பட்டுப் போற்றப்படுகின்றன. மாறாக பெண்ணினுடைய விருப்பம் கேட்கப்படுவதில்லை. எவ்வளவுதான் படித்து வேலைப் பார்த்துப் பொருளாதாரம் சுதந்திரம் பெற்றுவிட்ட நிலையிலும் கூட பெண்ணின் ஆளுமை மதிக்கப்படுவதில்லை. ‘சந்தியா’ நாவலில் சந்தியாவின் தோழி கனகா அரசு அலுவலகத்தில் வேலை செய்த போதும் கணவன் கணேசனால் அடிமைப்படுத்தப்பட்டதை

“நல்லவேளை நீ படித்து வேலையில் இருக்கிறாய். இல்லையென்றால் இந்நேரம் உன் கணவனின் இரண்டாம் மனைவிக்கு குளிக்க வெந்நீர் போட்டு விளாவி வைத்துக் கொண்டிருந்திருப்பாய்! தப்பித்தாய் பார் கனகா நமக்கெல்லாம் ஆண்கள் பாதுகாப்பில்லை நம் சம்பாத்தியம்தான் நமக்குத் துணை” 5   

திருமணத்திற்கு முன்னர் தன் மணவாழ்வில் வரப்போகும் கணவர் பற்றி சிந்தித்து வைக்கவோ அதனடிப்படையில் தன் கருத்தைக் கூறவோ பெண் அனுமதிக்கப்படுவதில்லை.

வரதட்சணைச் சிக்கல்
ஆணாதிக்கச் சமுதாய அமைப்பில் மணம் பேசப்படும் போது வரதட்சணை என்ற பெயரில் பெண் வீட்டாரிடமிருந்து பொருளாகவும், பணமாகவும் வாங்கப்படுகிறது. இதனால் மனைவியை உற்ற துணையாக, சரிநிகர் சமானமாக மதித்து நடத்த முற்படாமல் அவளும் தன்னுடைமை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. இந்நிலை உருவாகக் காரணமாக அமைவது வரதட்சணை. அதனை உணர்ந்த பிரபஞ்சன் தன்னுடையப் படைப்பில் வரதட்சணையை விரும்பாத கதாபாத்திரங்களைப் படைத்துள்ளார்.

வரதட்சணை வாங்கிப் பெண்ணின் குடும்பத்திற்கு பெரும் இடர்களை உருவாக்குபவர்கள் இருக்கும் இக்கால கட்டத்தில் மாமனாரிடம் வாங்கும் பணத்தைக் கூடக் கடனாக எண்ணும் சீனு வியப்பிற்குரியவர்.

“இல்லை உதவியா இருக்கட்டும் அன்பளிப்பு வேண்டாம். இன்னும் ஒரு ஆண்டில் அதைத் திருப்பிக் கொடுத்துடறேன்”.6

இக்கருத்தின் மூலம் புதிய சிந்தனையை விதைக்க முற்பட்டுள்ளார் என்பது புலனாகிறது. 

பணிக்குச் செல்லும் மகளிர் நிலை
பெண்கள் பணிக்கு செல்வது பல காரணங்களால் அமைகின்றன. அவ்வாறு செல்லும் பெண்கள் பல இடையூறுகளைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அப்போது பெண்கள் அவற்றை எவ்வாறு எதிர் கொள்கின்றனர் என்பதை பிரபஞ்சன் நாவல்களின் மூலம் வெளிக் காட்டுகிறார்.

“கனவு மெய்ப்படவேண்டும்” நாவலில் சுமதி கல்வி அதிகாரியாக இருக்கிறார். கணவனை விட்டுப் பிரிந்து இருக்கிறாள் என்றவுடன் உடன் பணியாற்றும் ஆண்களின் நடவடிக்கை முற்றிலும் மாறுகிறது. சுமதியின் மேலதிகாரி சபேசன் சுமதியிடம் கணவனை விட்டு பிரிந்ததை கேட்டு விட்டு பின் அவளிடம் நீங்க எப்போ டூர் போகப் போகிறீர்கள் கூட நானும் வரட்டுமா? என்று தன் சபலத் தன்மையைக் காட்டுகிறான். அதற்கு சுமதி,

“நீங்கள் ரொம்பப் பெரியவர் மிகப் பெரிய உத்தியோகம் வகிப்பவர் உங்கள் மகளைப் போல என்னை எண்ணிக் கொண்டு துணைக்கு நீங்கள் வருவதை யாராவது பொறுக்கிகள் தப்பா அர்த்தம் செய்து கொள்ளக் கூடும் உலகம் பூராவும் பொறுக்கிகள் மயம்தானே, என்ன சொல்கிறீர்கள்”.7

என்று கூறியபோது அந்த அதிகாரியின் முகம் மாறுகிறது.

சந்தியா அலுவலகத்தில் பணிபுரிகிறாள். உடன் பணியாற்றும் புஷ்பராஜ் நண்பராக முதலில் பழகினான். பின் அவள் தனித்து இருக்கும் போது அவளுக்கு காதல் கடிதத்தை நீட்டினான். அதைப் பார்க்கும் போது அவளுக்கு

“தன் மனதில் சுற்றுச் சுவர்களும் உள்ளிடமும் பற்றி எரிவதாக உணர்ந்தாள்”.8

பெண் என்றாலே ஆணின் போகப் பொருள் அவன் நீட்டும் கடிதத்துக்கு மயங்கி விடுவாள் என்கிற நினைப்புதான். நட்பையும் மீறி காதலுக்குள் செல்ல வைக்கின்றதை உணர்ந்த சந்தியா புஷ்பராஜ்க்கு தக்க பதிலடி கொடுத்தாள். பெண்கள் என்பவர்கள் ஆண்கள் விரிக்கும் காதல் வலையில் விழுபவர்கள் அல்ல என்பதை சந்தியா நாவலில் பிரபஞ்சன் வெளிப்படுத்தியுள்ளார்.

மணவிலக்கு
மணவாழ்வில் கணவன் மனைவியர் ஒத்துப் போகாத நிலையில் இயன்ற வரையில் போராடிப் பார்த்துவிட்டு இறுதியில் மணவிலக்குப் பெற்றுப் பிரிந்து வாழ்கின்றனர். மணவிலக்குப் பெற்ற பெண்களை இவ்வுலகம் தவறாக நினைக்கிறது. “பூக்கள் நாளையும் மலரும்” நாவலில் வள்ளி சபேசனின் குழந்தையைக் காணச் சென்றபோது அவனுடைய மனைவி அனு

“அவள் புருஷனை விட்டு விட்டு ஓடி வந்தவள். ஆம்பிளை கிடைக்க மாட்டானான்னு அலையறவள் அவளோட நீங்க பழகறது எனக்கு அவவ்ளவு சரியாகப் படலை”.9

எனப் பெண்களே பெண்ணை இழிவாகக் கூறுவது வருத்தத்திற்குரியதாகப் படைத்துக் காட்டுகிறார். சமுதாயப் பிரச்சனைகளை ஆழமாக சமூகக் கண்ணோட்டத்துடன் விமர்சன நடப்பியல் பாங்கில் எழுதும் பிரபஞ்சன் அவர்கள் குடும்பம், சமூக அமைப்புகளில் காணப்படும் பெண்ணடிமைத் தனத்தையும், ஆணாதிக்கத்தையும் எதிர்க்கும் விதமாக பெண்ணுரிமைச் சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

முடிப்பு
பெண்ணியம் என்பது பெண்களை அடிமைக் களத்திலிருந்து விடுவித்து சமுகத்தில் ஆணுக்கு நிகரான மதிப்பினைப் பெற்றுத் தருவதாகும். மணவாழ்வில் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைவது ஆணாதிக்க சிந்தனையே, வரதட்சணை வாங்காத கம்பீரமான ஆண் மகனைப் படைத்து அதன் மூலம் சமூக மாற்றத்தைக் கொண்டு வர முயன்றுள்ளார். பெண்கள் தங்களுக்குள் பல பரிமாணங்களைக் கொண்டு வாழ்கின்றனர். ஒவ்வொரு பரிமாணங்களிலும் தங்களது செயல்களைச் செம்மையாக நிலை நிறுத்துகின்றார்கள். மனம் ஒன்றாமல் சமுதாயத்திற்காக வாழும் வாழ்க்கையை விட்டு மணவிலக்கினைப் பெற்று என்றும் தனக்காக வாழும் வாழ்க்கை மகிழ்ச்சியானது என்று எடுத்துக் கூறப்பட்டுள்ளது. வேலை என்பது பெண்களின் சுயமரியாதையைக் காக்கும் இடம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆணாதிக்கப் போக்கு மரபு என்ற நிலையில் பெண்களை எவ்வாறு அடிமையாக்குகிறது அதிலிருந்து பெண்கள் எவ்வாறு மீளவேண்டும் என்று கூறிய ஆசிரியர் பெண்களின் எண்ணங்களிலும் மாற்றம் வேண்டும் என்ற சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அடிக்குறிப்புகள்
1.முத்துச் சிதம்பரம்.சு., பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ப.9
2.திருலோக சீதாராம் (மொ.ஆ)., மனுதர்ம சாஸ்திரம், ப.157
3.சிவதம்பி.கா., இலக்கியமும் கருத்துநிலையும், ப.85.
4.பிரபஞ்சன், சந்தியா, ப.156.
5.பிரபஞ்சன், சந்தியா, ப.97.
6.பிரபஞ்சன், தீவுகள், ப.147.
7.பிரபஞ்சன், கனவு பெய்ப்பட வேண்டும், ப.185.
8.பிரபஞ்சன், சந்தியா, ப.44.
9.பிரபஞ்சன், பூக்கள் நாளையும் மலரும், ப.223.


* கட்டுரையாளர்: - மா.மதுமதி, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010.  -

மின்னஞ்சல் :madhu This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 28 March 2019 20:36