ஆய்வு: கருத்தொற்றுமையில் பொய்யாமொழியும் பழமொழியும்

Saturday, 13 July 2019 07:44 - ஷா. முஹம்மது அஸ்ரின், முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி-620020 ஆய்வு
Print

- ஷா. முஹம்மது அஸ்ரின்,  முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி-620020முன்னுரை:
குற்றங்கள் அதிகமாகும் காலத்திலேயே அறம் சார்ந்த கருத்துகளை போதிக்க நூல்கள் தோன்றுகின்றன. அவ்வாறு, களப்பிரர் தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தில் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் ஐந்தடிகளுக்கு மிகாத வெண்பாக்களால் அமைந்த பதினெட்டு நூல்கள் எடுத்தியம்பின. அவற்றை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் சங்கம் மருவிய நூல்கள் என்றும் பெயரிட்டு வழங்கினர். அவற்றுள் பொய்யாத மொழியாகிய திருக்குறளோடு கருத்தாலும் பொருளாலும் ஒன்றுபடும் உலக வசனம் என்ற சிறப்பிற்குரிய பழமொழி நூலின் பாடல்கள் ஆய்வு பொருளகின்றன.

கற்றவன் அடையும் சிறப்பு:
கல்வியின் சிறப்பை மனத்தில் கொண்ட மூன்றுரையரையரும் திருவள்ளுவரும் முறையே தாங்கள் இயற்றிய நூலான பழமொழியில் முதல் பத்து (1-10) பாடல்களாலும் திருக்குறளில் 40ஆம் அதிகாரத்தில் பத்து (391-400) குறட்பாக்களாலும் குறிப்பிட்டுள்ளனர்.

கல்வியை முறையாகக் கற்றுத்தேர்ந்தவன், தனது நாட்டை விட்டகன்று வேறு நாட்டுக்குச் சென்றாலும், அவனது அறிவுத்திறனைக் கண்டு யாவரும் சிறப்பு செய்து உண்வளிப்பதால் சொந்த நாட்டிலிருப்பதாகவே எண்ணுவான் என்பதை,

“ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை – அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.” (பழமொழி நானூறு. 04)


என்ற பாவரிகளால் கற்றவன் அடையும் சிறப்பைக் கூறுகிறார்.

சுருங்கக் கூறி விளங்க வைத்தலுக்கு சொந்தக்காரரான வள்ளுவர், கற்றவன் அடையும் சிறப்புகளை தனது தமிழ்மறையில்,

“யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு” (திருக்குறள். 397)


என்னும் குறட்பா வாயிலாக கல்வி கற்றவனுக்கு எல்லா நாடுகளுமே சொந்த நாடாகும் என்ற உயர்ந்த கருத்தை எடுத்தியம்புகிறார்.

அறிவே சிறந்த செல்வம்:
நூல்களைக் கற்றவன் தனது அறிவைக் கொண்டு தனக்கு தேவையான செல்வத்தை ஈட்டலாம். ஆனால், நூல்களைக் கல்லாது செல்வத்தைக் கொண்டு ஒருபோதும் அறிவைப் பெறவியலாது. அறிவின் சிறப்பை மனத்தில் கொண்ட திருவள்ளுவரும் மூன்றுரையரையரும் தாங்கள் இயற்றிய நூலான திருக்குறளில் 43ஆம் அதிகாரத்தில் பத்து (421-430) குறட்பாக்களிலும் பழமொழியில் எட்டு (26-33) பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளனர்.

“அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்” (திருக்குறள். 430)

என்ற குறட்பாவில் ஒன்றுமே இல்லாமல் அறிவை மட்டுமே உடையவர் அனைத்தும் உடையவரே என்றும் எல்லாம் பெற்று அறிவைப் பெறாதவர் ஒன்றுமில்லாதவரே என்றும் கூறுகிறார்.         இக்கருத்தையே மூன்றுரையரையரும் தனது பாடல்களின் இறுதி அடியில், திருவான (செல்வத்தை) காட்டிலும் திட்பமே (அறிவே) உயர்ந்தது என்பதை,

“திருவினும் திட்பம் பெறும்.” (பழமொழி நானூறு. 33)

“திருவினும் திட்பமே நன்று. ” (பழமொழி நானூறு. 136)


என அறிவின் சிறப்பை தனது பாடல்களில் பழமொழியாக நவின்றுள்ளார்.

ஒழுக்கத்தைக் கடைபிடித்தல்:
இம்மை, மறுமைக்குத் துணையாகும் ஒழுக்கத்தை ஒருவன் தன்னுடைய உயிரினும் மேலாக எண்ணி வழுவாது காக்க வேண்டும். ஒழுக்கத்தின் சிறப்பையும் மேன்மையையும் உணர்ந்த திருவள்ளுவரும் மூன்றுரையரையரும் தாங்கள் இயற்றிய நூலான திருக்குறளில் 14ஆம் அதிகாரத்தில் பத்து (131-140) குறட்பாக்களிலும் பழமொழியில் ஒன்பது (34-42) பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளனர்.

தனக்கு துன்பம் நேர்ந்தபோதும், பிறருக்கு துன்பத்தை உண்டாக்கும் தீய செயல்களைச் செய்து நல்லொழுக்கத்தை விட்டும் வழுக வேண்டாம் என்பதை,

“கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் ....................” (பழமொழி நானூறு. 39)


என்ற பாடல்வழி நீங்காத வடுவை உண்டாக்கும் பாவச் செயலை தவிர்க்க வேண்டும் என்கிறார்.

“ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.” (திருக்குறள்.139)


என்ற குறட்பா வாயிலாக பிறருக்குத் துன்பத்தை உண்டாக்கும் தீய சொற்களைக் கூட ஒழுக்கமுடையார் கூறமாட்டார்களென வள்ளுவர் உரைக்கிறார்.

தீமையைத் தவிர்த்தல்:
உலகில் வாழுகின்ற கோடானு கோடி மக்கள் துன்பத்தை அடைவதற்கு சக மக்களே காரணமாக விளங்குகின்றனர். பிறருக்கு தீங்கு இழைத்த காரணத்தால் அம்மக்களும் துன்பத்தை அடைகின்றனர். இதனை தவிர்க்கும் வழியை வள்ளுவர் தனது நூலில் (311-320) குறட்பாக்களாலும் பழமொழி ஆசிரியர் (43-50) வெண்பாக்களாலும் விளக்குகின்றனர். இதனை,

“முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் கண்டு விடும்.” (பழமொழி நானூறு. 46)


என்ற பாடலில் பிறருக்கு பகலின் முற்பகுதியில் தீமையை செய்தவன், அத்தீமையின் விளைவை பகலின் பிற்பகுதியில் தவறாது அடைந்தே தீருவான் என்கிறார்.

“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.” (திருக்குறள்.139)


என்ற வள்ளுவரின் வாய்மொழியும் முற்பகலில் செய்த தீமையானது பிற்பகலில் செய்தவனையே அடைந்து துன்புறுத்தும் குறிப்பிடுகிறது.

முடிவுரை:
திருக்குறளும் பழமொழியும் பல்வேறு அறக்கருத்துகளைக் கூறும் நீதி நூல்களாக இருப்பினும் ஒன்றுபட்ட கருத்துகளைக் கூறும் பாக்கள் மட்டுமே ஆராயப்பட்டுள்ளன. இதனை அடிப்படையாகக் கருத்தில் கொண்டு இரு ஆசிரியர்கள் கூறிய அறங்கள் அவர்களது காலத்தில் பேச்சு வழக்காக இருந்திருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது. 

பயன்பட்ட நூல்கள்:
1. புலியூர்க் கேசிகன், (2010), திருக்குறள் புதிய உரை, பூம்புகார் பதிப்பகம், சென்னை – 600 108.
2. புலியூர்க் கேசிகன், (2010), பழமொழி நாணூறு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை – 600 014.
3. சுப்பிரமணியன் ச. வே., (2008), தமிழச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 600018.

கட்டுரையாளர் : ஷா. முஹம்மது அஸ்ரின், முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி – 20.

E-mail:  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it .

* கட்டுரையாளர்: - ஷா. முஹம்மது அஸ்ரின்,  முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி-620020
Last Updated on Saturday, 13 July 2019 07:50