ஆய்வு: தொண்டைநாட்டுக் கச்சி மாநகர்

Tuesday, 30 July 2019 22:23 - முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. - ஆய்வு
Print

தொண்டைமான் இளந்திரையனின் குடிமரபினர் காஞ்சிமாநகரை முதன்மை இடமாகக் கொண்டு ஆண்டு வந்தனர் என்பதை இலக்கியங்கள் காட்டுகின்றன. பண்டைய இலக்கியங்களில் காஞ்சிமாநகரைக் கச்சி, கச்சப்பேடு, கச்சிப்பேடு, கச்சிமூதூர், கச்சிமுற்றம், என்று அழைத்துள்ளனர். இம்மாநகரை ஆண்ட மன்னர்களையும் வேந்தர்களையும் அரசர்களையும் தலைவர்களையும் வள்ளல்களையும் இலக்கியங்களில் கச்சியோன், கச்சியர், கச்சிவேந்தன், கச்சிக்காவலன், கச்சியர்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். கச்சி என்ற சொல்லானது காஞ்சிமாநகரைக் குறிக்கும் சொல்லாகும். இது இன்றையக் காஞ்சிபுரப் பகுதியாகும் என்பதைத் தமிழ்மொழி அகராதி, மதுரைத் தமிழ்ப்பேரகராதி, அபிதான சிந்தாமணி, கழகத்தமிழ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி, வரலாற்றுமுறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி, தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி போன்ற அகராதிகள் குறிப்பிடுகின்றன. பெரும்பாணாற்றுப்படையில் கச்சிமூதூரின் சிறப்புகள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கச்சிமூதூருக்கு உள்ள நிலப்பரப்பு, மக்களின் பண்பாட்டுக்கூறுகள், வழக்காற்றுக்கூறுகள், பாணனின் வறுமை, பரிசில் பெற்றோரின் செல்வநிலை, தொண்டைமான் இளந்திரையனின் மாண்பு, ஆட்சியின் பெருமை, உப்புவணிகர் செல்லும்வழி, கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டுவழி, எழினர் குடிசை, புல்லரிசி எடுத்தல், எயிற்றியர் அளிக்கும் உணவு, பாலை நிலக் கானவர்களின் வேட்டை, எயினர் அரண்களில் பெறும் பொருள்கள், குறிஞ்சி நிலமக்களின் வாழ்க்கை, கோவலர் குடியிருப்பு, கோவலரின் குழலிசை, முல்லை நிலத்தில் கிடைக்கும் பொருள், மருதநிலம் சார்ந்த முல்லைநிலம், மருதநிலக் காட்சிகள், நெல்வயல்கள், நெல்லரிந்து கடாவிடுதல்,  மருதநிலத்து ஊர்களில் பெறும்உணவுகள், கருப்பம்சாறு, வலைஞர் குடியிருப்பு, வலைஞர் குடியில் பெறும்உணவு, தாமரைமலரை நீக்கி ஏனைய மலர்களைச்சூடுதல் அந்தணர்  குடியிருப்பும் அங்குப் பெறும்உணவும் , நீர்ப்பெயற்று என்னும் ஊர், அத்துறைமுகப் பட்டினத்தின் சிறப்பு, பட்டினத்து மக்களின் விருந்தோம்பல் பண்பு, ஒதுக்குப்புற நாடுகளின்வளம், திருவெஃகாவின் சிறப்பும் திருமால்வழிபாடும், கச்சிமூதூரின் சிறப்பு, இளந்திரையனின் போர்வெற்றி, அரசனது முற்றச்சிறப்பு, திரையன் மந்திரச்சுற்றமொடு அரசுவீற்றிருக்கும் காட்சி பாணன் அரசனைப் போற்றியவகை, பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல், பரிசுவழங்குதல், இளந்திரையனது மலையின் பெருமை முதலான செய்திகள் அதில்    கூறப்பட்டுள்ளது. சிறுபாணாற்றுப்படை, மலைபடுகாடாம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் கச்சிமாநகரின் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

கச்சி என்ற சொல் மணிமேகலையில், பூங்கொடி கச்சிமாநகர் புக்கதும் (மணி.பதி.90), பூங்கொடி கச்சிமாநகர் ஆதலின் (மணி.28:152), கச்சிமுற் றத்து நின்உயிர் கடைகொள (மணி.21:174), பொன்எயில் காஞ்சி நகர்கவின் அழிய (மணி.21:148), பொன்எயில் காஞ்சி நாடுகவின் அழிந்து (மணி.28:156), செறிதொடி காஞ்சி மாநகர் சேர்குவை (மணி.21:154), என்றும் பெருபாணாற்றுப்படையில் கச்சியோனே கைவண் தோன்றல் (பெரும்பாண்.420) எனவும் காஞ்சி அல்லது கச்சிமாநகர் பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கின்றன. சங்ககாலத்திற்கு முன்பிருந்தே கச்சி என்ற காஞ்சிமாநகர் களப்பிரர்காலத்திலும் பல்லவர் காலத்திலும் பிற்காலச் சோழர்காலத்திலும் விசயநகரப் பேரரசுக்காலத்திலும் ஆங்கிலேயர்காலத்திலும் சிறந்து விளங்கியுள்ளது என்பது வரலற்று உண்மையாகும். கச்சிப்பேடு என்றிருந்த காஞ்சிபுரம் திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பிலும் திருநாவுக்கரசரின் தேவாரத்திலும் கச்சி என்றும் காஞ்சி என்றும் பாடப்பட்டுள்ளது. கி.பி.7-ஆம் நூற்றாண்டுத் தமிழ்நூல்களிலும் இது பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கிறது.

வடமொழிப் புராணங்களின் கூற்றுப்படி காஞ்சி மாநகரம் இந்தியாவில் உள்ள புண்ணியப் பதிகள் ஏழுனுள் ஒன்றாகும். இயூன் சங் கூற்றுப்படி புத்தர் கி.மு.5-ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வந்து சமய உண்மைகளை உரைத்தார். அசோகன் பல தூபிகளை நாட்டிப் பெளத்த சமயக்கொள்கைகளைப் பரவச் செய்தான். நாலந்தாப் பல்கலைக் கழகத்தில் சிறந்த பேராசிரியராக இருந்த தர்மபாலர் காஞ்சிபுரத்தினர். அசோகன் கட்டிய தூபிகளில் ஒன்று இயூன் சங் காலத்தில் 100 - அடி உயரத்தில் காஞ்சியில் இருந்ததாகத் தெரிகிறது. கிமு.150-இல் வாழ்ந்த பதஞ்சலி தமது மாபாடியத்தில் காஞ்சிபுரத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனவே, கி.மு.2-ஆம் நூற்றாண்டிலேயே காஞ்சிமாநகர் சிறந்த கலைப்பீடமாக இருந்தது எனலாம். கி.மு. முதல் நூற்றாண்டில் சோழநாட்டை ஆண்ட கரிகாலன் காலத்தில் சோழ நாட்டிற்கு வடக்கே தொண்டைமண்டலம் காவல் இடமாக இருந்தது. காஞ்சியைக் கரிகாலன் அழகு செய்தான்; மதில்களை எழுப்பினான்; வடவேங்கடம் வரை நாட்டை விரிவாக்கினான். அவன் காலத்துத் தொண்டைமான் இளந்திரையன் சோழர் சார்பாக நின்று தொண்டைநாட்டை ஆண்டு வந்தான். அவன் காலத்தில் தொண்டைநாடு வளமுற்று இருந்தது (இராசமாணிக்கனார்,200:12-13).

கச்சி மூதூரின் சிறப்பு
காஞ்சி மாநகரின் யானைப்பாகர்கள் யானைக்கு நெய்ஊற்றி மிதித்து பெரியபெரிய உருண்டையாகிய கவளத்தைத் கொடுப்பதற்கு வைத்திருந்தனர். பரிக்கோல்காரர் அல்லது குத்துக்கோல்காரர் என அழைக்கப்படும் யானைப்பாகர்கள் சோர்வாக இருந்த நேரத்தைப் பார்த்து முதல்சூலை முழுநிலையில் அடைந்த மந்தியானைக் கவளத்தைக் கவர்ந்து சென்று உண்கிறது. அத்தகைய சோலையை உடையது காஞ்சி. யானைகளை அடக்குவதற்கு மென்மையான மரங்கள் இல்லாது வலிமையான வைரம்பாய்ந்த கந்தினை நட்டிருந்தனர். காஞ்சிமாநகரத் தெருக்களில் அடிக்கடி திண்மையான தேர்கள் செல்வதால் குழிந்தபாதைகளை உடையனவாக இருந்தன. பிறருக்குப் புறம்கொடாத வலிமையான ஆற்றல் உடைய மறவர்கள் பெரும்புகழுடன் வாழ்ந்தார்கள். அடுத்து வணிகத்தெரு இருந்தது. அங்கு பொருள்களைக்கொடுப்போர் கொள்வோர், மிகுதியாக இருந்ததால் நடந்து செல்வதற்குத் தடையாக இருந்தது. பிறருக்கு அடையாத வாயிலையும் காவற்காடு சூழ்ந்த பக்கத்தினையும் உடையதாக இருந்தது காஞ்சிமாநகரத்தின் நுழைவாயில் தொடக்கம் என்பதைப் பின்வரும் பாடல் அடிகளால் அறியலாம்:

காழோர் இகழ்பதம் நோக்கி, கீழ,
நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளம்
கடுஞ்சூல் மந்தி கவரும் காவில்
களிறுகதன் அடக்கிய வெளிறுஇல் கந்தின்
திண்தேர் குழித்த குண்டு நெடுந்தெருவில்
படைதொலைபு அறியா மைந்துமலி பெரும்புகழ்,
கடைகால் யாத்த பல்குடி கெழீஇக்
கொடையும் கோளும், வழங்குநர்த் தடுத்த
அடையா வாயில், மிளைசூழ் படப்பை,
நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல்இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி,
சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்
இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத்தொழுதிக்
கொழுமென் சினைய கோளி யுள்ளும்
பழம்மீக் கூறும் பலாஅப் போல,
புலவுக்கடல் உடுத்த வானம் சூடிய
மலர்தலை உலகத்துள்ளும் பலர் தொழ,
விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர்
(பெரும்பாண்.393 - 411).


தொண்டைமண்டலத் துறைமுகப்பட்டினம் (மாமல்லபுரம்)
தொண்டைமண்டலத் துறைமுகப்பட்டினமாக இன்றைய மாமல்லபுரம் விளங்கியது. சங்ககாலத்தில் அத்துறைமுகப் பட்டினத்திற்கு நீர்ப்பெயற்று ஊர் என்று ஊர்ப்பெயராக இருந்திருக்கிறது. நீர்ப்பெயற்று என்னும் துறைமுகப் பட்டினத்தில் பால் போன்ற வெண்ணிறம் உடைய வெண்மையான தலையாட்டத்தினை உடைய குதிரைகள் பிறநாட்டில் இருந்து கொணரப்பட்டவைகள் இருந்தன. வடநாட்டில் இருந்து வருகின்ற பொன் மணிபோன்ற வளமுடைய பொருள்களைக் கொணர்கின்ற மரக்கலங்கள் அங்கே இருந்தன. அக்கடற்கரை அருகே ஓங்கி உயர்ந்த மாடங்கள் பல இருந்தன. மணல் மிகுதியாக உள்ள தெருக்கள் பல இருந்தன. வணிகர்கள் பலர் அத்தெருக்களில் வாழ்ந்தனர். ஓங்கி உயர்ந்த பண்டகச்சாலைகளில் பல பொருள்கள் இருந்ததால் அதைப் பாதுகாக்கும் தொழிலாளர் பலர் அங்கிருந்தனர். கடற்கரையில் வயலை உழும் காளைகளோ முல்லை நிலத்துப் பசுக்களோ இல்லை. ஆட்டுக்கிடாய்களும் நாய்களும் அத்தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தன. நல்ல உணவுகளை உடைய அழகான வீட்டில் வளைந்த ஆபரணங்களை அணிந்த மகளிர் இருந்தனர். அவர்கள் கொன்றை மரத்தில் படர்ந்த மொட்டுக்கள் போன்று காட்சி அளிக்கின்ற மேகலையை அணிந்திருந்தனர். அவ்வாடை கொன்றைமரத்தில் பனிபடர்ந்தது போன்று இருந்தது. மலைச்சாரலில் மகிழ்ந்து நடக்கும் மயில் போன்று இப்பெண்டிர் தங்கள் மாடங்களில் நடந்தனர். கால்களில் அணிந்திருந்த பொற்சிலம்புகள் ஒலிக்க நூலால் கட்டப்பட்ட பந்தினை வைத்து ஆடிக் கொண்டிருந்தனர். பந்தாட்டத்தில் களைக்கும்போது பொன்னால் ஆகிய கழற்சிக்காயைக் கொண்டு கழற்சி ஆடினர். அத்தகைய துறைமுகப்பட்டினம் இன்றைய மாமல்லபுரம் எனும் கடற்கரைப் பட்டினமாகும். அத்துறைமுகப் பட்டினத்தின் சிறப்புக்களை,

நீர்ப்பெயற்று எல்லைப் போகி பால்கேழ்
வால்உளைப் புரவியொடு வடவளம் தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை,
மாடம் ஓங்கிய மணல்மலி மறுகின்,
பரதர் மலிந்த பல்வேறு தெருவின்,
சிலதர் காக்கும் சேண்உயர் வரைப்பின்,
நெல்உழு பகட்டொடு கறவை துன்னா,
மேழகத் தகரோடு எகினம் கொட்கும்
கூழ்உடை நல்இல் கொடும்பூண் மகளிர்
கொன்றை மென்சினைப் பனிதவழ்பவை போல்,
பைங்காழ் அல்குல் நுண்துகில் நுடங்க
மால்வரைச் சிலம்பில் மகிழ்சிறந்து ஆலும்
பீலி மஞ்ஞையின் இயலி, கால
தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப, உயர்நிலை
வான்தோய் மாடத்து, வரிப்பந்து அசைஇ,
கைபுனை குறுந்தொடி தத்த, பைபய
முத்த வார்மணல் பொற்கழங்கு ஆடும்
பட்டின மருங் கின் அசையின் (பெரும்பாண்.319 – 336)


என்ற பாடலடிகள் காட்டுகின்றன. பேராசிரியர் இராசமாணிக்கனார் இயற்றிய பல்லவர் வரலாறு எனும் நூலில் மாமல்லபுரத்தின் குறிப்புக்கள் சங்ககாலம் முதல் தற்காலம் வரையில் தொடர்புடையதாக உள்ளது எனக் குறித்துள்ளார். இவர் பெரும்பாண்ணாற்றுப்படை எனும் நூலில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளின் குறிப்புக்களைக் கொண்டு மாமல்லபுரப்பட்டினத்தின் வரலாற்றையும் (பெரும்பாண்.319-336), பிற்கால நூல்களைக் கொண்டு பல்லவர் வரலாற்றையும் மிகத் தெளிவாக எழுதியுள்ளார்.

துணைநூல் பட்டியல்
இராசமாணிக்கனார், மா., 2008, தமிழக வரலாற்று வரிசை – 5 பல்லவ வரலாறு, சென்னை: அமிழ்தம் பதிப்பகம்.
இராமசுப்பிரமணியம், வ.த., 2010, மணிமேகலை மூலமும் உரையும், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
சுப்பிரமணியன், ச.வே., 2003, பத்துப்பாட்டு, கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

* கட்டுரையாளர்:  - முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -

Last Updated on Tuesday, 30 July 2019 22:25