ஆய்வு: திருஞானசம்பந்தர் பாடல்களில் சிவனின் அட்டவீரட்டத் தொன்மங்கள் – II

Friday, 06 September 2019 06:53 - ர.சுரேஷ், உதவிப்பேராசிரியர், கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்பத்தூர் - ஆய்வு
Print

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?காமனை எரித்த தொன்மம்

திருஞானசம்பந்தா் பாடல்களில் காமனை எரித்த கதை பல பாடல்களில் இடம் பெறுகிறது. பல்லவா் கால பக்தி இயக்கம் சமண-பௌத்தத்தைக் கடுமையாக எதிர்த்தது. என்பதும் அச்சமயக் கொள்கைகளுக்கு நோ் எதிராகச் சில கருத்துக்களை முன்னிறுத்தின என்பதும் பக்தி இயக்க கால சமய வரலாற்றை ஆராயப் புலப்படுகிறது. சமணமும்-பௌத்தமும் இல்லறம் மறுத்துத் துறவறம் பேசும் கொள்கையுடையனவாக இருக்க வைதீகம் மணவாழ்க்கையை வலியுறுத்தி அதிலிருந்தே துறவறம் மேற்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. புத்தரும், மகாவீரரும் காமத்தைக் கடந்தவா்கள் என சமண-பௌத்தம் முன்வைக்க, காமத்தைக் கொன்றவன் என்ற தொன்மத்தைப் பக்தி இயக்கவாதிகள் முன்வைத்தனா். திருஞானசம்பந்தர் பாடல்களில் காமனைக் கொன்ற தொன்மம் பரவலாக எடுத்துச் சொல்லப்பட்டாலும் சிவன் உமையோடு இன்பம் காண்பதையும் பரவலாகக் கூறிச் செல்கிறார்.

“கண்ணிறைந்தவிழி யின்னழலால்;வரு
காமன்னுயிர் வீட்டிப்
பெண்ணிறைந்த வொரு பான் மகிழ்வெய்திய
பெம்மானுறை கோயில்”
1

காமனைத் தன் கண்ணால் எரித்துச் சாம்பலாக்கிய சிவபெருமான் உமையம்மையோடு மகிழ்ந்தும் இருக்கிறார் எனும் கருத்து மேற்கண்ட பாடலடிகளால் விளங்குகிறது.

மேற்கண்ட பாடலடிகளால் சிவன் உமையம்மையோடு காமத்தைத் துய்ப்பவனாகவும் அதே சமயத்தில் காமத்தைக் கொன்றவனாகவும் காட்சிப்படுத்தப்படுகிறார். வைதீக நெறியில் பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற படிநிலைகள் துறவறத்திற்கு வலியுறுத்தப்படுகின்றன. அதாவது ஒருவன் பிரம்மச்சரியனாக இருந்து அதன்பின் இல்லற வாழ்க்கையைத் துய்த்து அதன்பிறகு கானகம் சென்று தவம் புரிந்து இறுதியிலேயே துறவை மேற்கொள்ள முடியும். அதனையொட்டியே மனைவாழ்க்கையிலிருந்தே துறவறத்தைத் திருஞானசம்பந்தரும் போற்றுவதைக் காணமுடிகின்றது. அதனை வெளிப்படுத்தவே இத்தொன்மங்கள் இடம்பெறுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் காமத்தையும் காதலையும் கொண்டாடிய தமிழ்ச் சமூகத்தில் இல்லறத்தை வெறுக்கும் சமண பௌத்தக் கொள்கைகளைவிட இல்லறத்தை வலியுறுத்தும் சைவக் கொள்கைகள் உவப்பபூட்டுவனவாக இருந்திருக்கலாம். சிலம்பு நா. செல்வராசு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

 

“சமணமும் பௌத்தமும் கண்டித்த மணவாழ்க்கையை வைதீகம் ஏற்றுக் கொண்டு மண வாழ்விலிருந்தே துறவறம் வேண்டும் என்பதை முன்வைத்தது. காமம் கண்டிக்கப் பெற்றதும் துறவு வற்புறுத்தப்பட்டதும் சமண பௌத்த சமயங்களின் எழுச்சிக்கு எவ்வாறு துணைநின்றனவோ அவ்வாறே வீழ்ச்சிக்கும் துணைநின்றன”2 என்கிறார். திருஞானசம்பந்தா் பாடல்களில் இத்தொன்மத்தை நோக்க சிவன் காமனை எரித்ததைக் கூறுவதோடு மட்டுமல்லாமல் அவன் மனைவி ரதியின் வேண்டுகோளுக்கிறங்கி அவனை மீண்டும் உயிர்ப்பித்ததாகவும் பாடுகிறார்.

“கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக
பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உரை கோயில்
3

என்று பாடுகிறார். இது பெண்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கும். இத்தொன்மத்திலும் அடா்த்தல் - அருளல் எனும் இருமை எதிர்வு கட்டமைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தா் பதிகங்கள் தோறும் முன்வைத்த ‘காமனை எதிர்த்தவா் சிவன்’ எனும் கருத்தும் காமனின் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்கி அவளை உயிர்ப்பித்தான் சிவன் எனும் கருத்தும் துறவற வாழ்க்கைக்கும் இல்லற வாழ்க்கைக்கும் இடையேயான சமரசத்தையும், முரண்பாட்டையும் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம். இல்லறத்தில் காமம் தவிர்க்கவியலாதது என உணா்த்த ரதிக்கு அருளியதையும் துறவறத்தில் காமம் தடையாக இருக்கக் கூடாது என்பதை உணா்த்த காமனை எரித்த செயலையும் திரும்பத் திரும்பத் கூறுகிறார். 

சிவனை யோகேஸ்வரனாகக் காணும் மரபு வைதீகத்திற்கு வெளியிலிருந்து உருவானதாகும். தமிழ்ச் சமூகமும் சிவனை யோகமூர்த்தியாக ஆழின் கீழிருந்து அறம் உரைத்தவனாக ஏற்றுக் கொண்டிருந்ததை அறிய முடிகிறது. அவ்வாறிருக்க இத்தொன்மத்தின்வழி ஆரியமரபு, யோக மூர்த்தியான சிவன் உமையாளோடு இருப்பதனைச் சுட்டிக்காட்டி வைதீகத்தோடு இணைத்துவிடுகிறது. இதன் தொடா்ச்சியாகச் சிவன் மற்றும் உமாதேவியை முன்னிருத்தி ஒரு குடும்ப அமைப்பு வலியுறுத்தப்படுகிறது.


சிவபெருமான் தக்கன் வேள்வியைச் சிதைத்த தொன்மம்

தக்கன் வேள்வியைச் சிவபெருமான் சிதைத்த கதை திருஞானசம்பந்தா் பாடல்களில் இடைத்தரமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

“இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை
நிரவிட்டு, அருள்செய்த நிமலன்”
4

“புகழ் மகள் துணையினா; - புரிகுழல் உமைதனை
இகழ்வு செய்தவன”
5

“செறுத்தது தக்கன் ஐ வேள்வி” 6
“ஏடு உடை மலராள்பொருட்டு வன் தக்கன்
எல்லைஇல் வேள்வியைத் தகா்த்து
7

“தக்கனது பெருவேள்வி, சந்திரன், இந்திரன்
எச்சன், அருக்கன், அங்கி
மிக்க விதாதாவினொடும், விதிவழியே
தண்டித்த விமலா; கோயில்
“8

“தக்கன்தன் சிரம் ஒன்றினை அரிவித்து. அவன் தனக்கு
மிக்க(வ்)வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான்”9
“தக்கன்தன் வேள்வி சாடும் அத்தியா்
10

மேற்கண்ட பாடல்கள் தக்கன் செய்த யாகத்தில் சந்திரன் சூரியன் ஏனைய தேவா்கள் ஆகியோரைத் தண்டம் செய்து தக்கனின் வேள்வியைச் சிதைத்தையும் இந்திராதி தேவா்களைத் தண்டித்ததையும், தக்கனின் சிரம் ஒன்றினை அறுத்துப் பின்பு அவன் பணிய அருள் செய்ததையும் வெளிப்படுத்துகிறது.

தக்கன் ஒருமுறை பெரும்யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து அதன்படி இந்திராதி தேவா்க்கும் அழைப்பு விடுக்கிறான். அம்மாபெரும் யாகத்திற்குச் சிவனை அழைக்கவில்லை சிவனுக்குரிய அவிர்பாகமும் தரவில்லை. சிவனை மயானத்தில் சுற்றித் திரிபவன்; எலும்பு மாலையணிந்தவன்; பிச்சையேற்பவன் என்று காரணம் கூறி அவனை யாகத்திலிருந்து ஒதுக்குகிறான். சிவனை மதிக்காமல் செய்யும் யாகத்திற்குச் சிவனின் மனைவியான தாட்சாயணி செல்கிறாள். அங்கு தக்கன் உமாதேவியை இகழ்ந்து பேச, உமாதேவி சிவபெருமானிடம் முறையிடுகிறாள். சிவபெருமான் தன்னிலிருந்து வீரபத்திரக் கடவுளைத் தோற்றுவித்து வேள்வியை அழிக்கக் கட்டளையிடுகிறார். வீரபத்திரக் கடவுளும் தக்கனின் வேள்வி சிதைத்து இந்திராதி தேவா்களையெல்லாம் தாக்கி விரட்டியடிக்கிறான்.

இக்கதை கம்பராமாயணத்திலும், லிங்க புராணத்திலும், வாயு புராணத்திலும் இடம்பெற்றிருக்கிறது. வால்மீகி இராமாயணத்தில் சிவன் இந்திராதி தேவா்களை வருத்தியதாகவும் உமாதேவியை இகழ்ந்ததனால் தக்கன் வேள்வியைச் சிதைத்ததாகவும் குறிப்பிடப்படவில்லை. மாறாக யசுர்வேதத்தில் இடம்பெற்றுள்ள கதையை அடியொற்றி அவிர்பாகம் மறுத்ததாலேயே சிவன் தக்கனின் வேள்வியை அழித்தான் என்று கூறுகிறது11. திருஞானசம்பந்தா் பாடல்களில் உமாதேவியை இகழ்ந்ததனால் அழித்தான் என்று இடம்பெற்றிருப்பது கம்பராமாயணம் உள்ளிட்ட பிற்காலப் புராணங்களில் இடம் பெற்ற கதையாகும். மறைவல்ல வேதத்தை நன்குணா்ந்த மறைஞானியாம் திருஞானசம்பந்தார் இவ் யசுர் வேதக் குறிப்புகளை எடுத்தாளாதது சிந்திக்கத்தக்கது. சிவநெறிக்கும் வைதீக நெறிக்குமிடையில் இருந்த முரண்பாட்டை மறைக்க திருஞானசம்பந்தா் அக்கதையைத் தவிர்த்திருக்கலாம்.

தக்கனுக்கும் ஏனைய தேவா்களுக்கும் தண்டணை வழங்கி, பின் அவா்களுக்கு அருள் செய்தான் எனத் திருஞானசம்பந்தா் பல இடங்களில் குறிப்பிடுகின்றார். வேத வேள்வியில் முதல் அவிர்பாகம் சிவனுக்குக் கொடுக்கப்பட வேண்டுமென்பதைச் சுட்டும் இத்தொன்மம் சிவனை இகழ்ந்து ஒதுக்குபவா்கள் சிவனின் எத்தகைய கோபத்திற்கு ஆளாவார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இத்தொன்மமும் அச்சம்-அருள் எனும் இருமை எதிர்வுகளின் மூலம் கருத்தியல் ரீதியான மேலாண்மையை வலியுறுத்துவதை அறியலாம்.

சான்றெண்விளக்கம்

1. சம்பந்தா், மு.சு.நூல், திருவலிதாயம், 3:7
2. சிலம்பு நா. செல்வராசு, தொல் தமிழா் சமயம், ப.80.
3. சம்பந்தா், மு.சு.நூல், திருவிழிமிழலை, 82:4.
4. மேலது., திருவிராகம், 124:5
5. மேலது., திருபிரம்மபுரம், 117:4.
6. மேலது., திருவெங்குருகு, 75:10.
7. மேலது., திருமுதுகுன்றம், 131:3.
8. மேலது., திருவேணுபுரம், 9:4.
9. மேலது., திருஆவூர் பசுபதிச்சுரம், 8:2.
10. சம்பந்தா், திவலிதாயம், 50:5.
11. அ.ச.ஞானசம்பந்தன், மு.சு.நூல், ப.21.

பயன்பட்ட நூல்கள்
1. கோபாலையா் டி.வி., (ப.ஆ.),ஞானசம்பந்தா் தேவாரம், பண்முறைத் தொகுப்பு, பிரெஞ்சு ஆய்வு நிறுவன வெளியீடு,புதுச்சரி.1984.
2. செல்வராசு நா.,தொல்தமிழா் சமயம்-மானுடவியல் சமூகவியல் ஆய்வுகள்,காவ்யா,பெங்களுர்-38. 2001.
3. ஞானசம்பந்தன் அ.ச., பெரியபுராணம் -ஓர் ஆய்வு,கங்கை புத்தக நிலையம்,சென்னை.1999.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 06 September 2019 07:08