ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
காலப் பழமை கொண்ட தொல்காப்பியம் தம் கால இலக்கியங்களைக் கொண்டு இலக்கணம் படைத்துள்ளது.இதன் பின்னர் தோன்றிய சங்க இலக்கியங்கள் பழந்தமிழரின் பண்பாடு நாகரிகத்தை வடித்துத்தந்தன. அதனால் அவற்றை இலக்கியங்களாகப் பார்ப்பதோடு வரலாற்று ஆவணங்களாகவும் நோக்க வேண்டியுள்ளது. அவ்விலக்கியங்களில் பொருள் மாறாத்தன்மை, அமைப்பு மாறாத்தன்மை ஆகியவை அதன் நிலைத்த தன்மைக்குக் காரணங்களாக அமைகின்றன. அவ்வகையில் நோக்கும் போது தொல்காப்பிய இலக்கண அமைப்பிற்கு ஏற்பச் சங்க இலக்கியங்கள் இமைந்துள்ளனவா, அதன் துறை பகுப்பு முறை பொருத்தம் உடையதுதானா என்பதை ஆராய்ந்து அறிவது இன்றைய ஆய்வுலகில் தேவையான ஒன்றாகிறது. அத்தகைய வழியில் தொல்காப்பியரின் துறை பற்றிய செய்திகளை விளக்கிக் கூறுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

துறை
சங்க அகப்புற இலக்கிய மரபாகத் துறை என்ற ஓர் அறிய வகை சுட்டப்படுகின்றது. இத்துறை நாடக மரபிற்கு ஒரு முருகியல் அமைப்பாகும். என்னையெனின் நாடக மாந்தரை அறிமுகப்படுத்தும் வகையில் ஓர் அங்கம், அரங்க நாடகத்தில் உண்டு. அவ்வாறே அகப்பொருள் நாடகத்தைக் காட்சிகளாக எளிய முறையில் தருவது துறை என்னும் செய்யுளுறுப்பாகும். தொல்காப்பியர் புறப்பொருள் துறைகளை விளக்கிக் கூறுமளவு அகப்பொருள் துறைகளை விளக்க முற்படவில்லை. ஆனால் கூற்றுக்களை வரை முறைப்படுத்தி விளக்குகின்றார். தொல்காப்பியர் துறையினை,

“அவ்வவ மாக்களும் விலங்கும் அன்றிப்
பிற அவன் வரினும் திறவதின் நாடித்
தத்தம் இயலான் மரபொடு முடியின்
அத்திறந்தானே துறை எனப்படுமே”
(தொல்.செய்.நூ.207)

என்கிறார். அதன் பயன் என்ன என்பதை,

“அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்” (தொல்.செய்.நூ.208)

மேற்காணும் இவற்றைக் காணும்போது ஒரு பாட்டுள் துறை என்பது அகமாந்தர், புறமாந்தர் போன்றவர்களின் செயல்களும், விலங்கினங்களின் செயல்களும் அவை அல்லாமல் பிற வந்தால் அவற்றையும் தெளிவாகக் கண்டு அவற்றின் செயல்களின் அடிப்படையிலும் பொருள் காண வேண்டும். அவ்வாறு கண்டதை அதனதற்கு ஏற்றாற் போல மரபொடு முடிக்கும் வெளிப்பாட்டுத் திறனே துறை என்பதைப் புலப்படுத்துகிறது. இது அந்தப்பாட்டுள் கிடக்கும் பரந்த பொருளையும் உணர்த்தும் தன்மையினையுடையது. பின் அந்தப்பாட்டைப் படிக்க முற்படும் முன் அதன் பொருளெல்லாம் அறிய ஒரு நுழைவாயிலாக அமைந்தது. இது பாடலின் பொருளைப் பிறருக்கு உணர்த்துதல் பொருட்டே அமைக்கப்படும் என்றும் அறியலாம். “துறை வகை என்பது முதலுங் கருவும் பிறழ வந்தாலும் இஃது இதன்பாற்படும் என்று ஒரு துறைப்படுத்தற்குரிய கருவி செய்யுட்கு உளதாகச் செய்தல்” என்ற மு.இராகவையங்கார்(தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, ப.169)விளக்கம் ஒப்புநோக்கற்குரியது. தொல்காப்பியர் கருத்துப்படி நோக்கின் துறை மரபு வழுவாமல் அவற்றிற்குரிய பண்பைச் சுருக்கமாகக் கூறுவது எனலாம்.

“பாடலின் உள்நோக்கையும்,பாடற்கருத்தின் பின்னணியையும் உரைக்க அகப்பொருள் பாடல்களில் துறை என்ற வகை பின்பற்றப்பட்டது” என்பர் நா.செயராமன் (முல்லைப் பாடல்கள் ப.40) பாடலின் சூழல், பாத்திரம் ஆகிறவற்றை அறியவியலாத போது துறை என்ற செய்யுளுறுப்பின் வழியே நாடக மரபு அதாவது, காட்சி அமைப்பும், கள அமைப்பும் சித்தரிக்கப்படுகின்றது. பொதுவாக நோக்கின் துறை விளக்கத்தை நாடக உறுப்புப் போல் பாத்திரக் கூற்றாக அமைதலின் துறை அமைதியை உள்ளீடாகக் கொண்டு இன்ன பாத்திரம், இன்ன நிலையிலேயே அகப்பொருள் பாடல்களில் துறை விளக்கம் பெறுகிறது என்பதைக் காண முடிகின்றது.

துறை விளக்கம்
துறு என்ற வேர்ச் சொல்லிலிருந்து துறை என்ற சொல் பிறந்துள்ளது என்பர். இடம், வழி என்னும் சில பொருள்களின் அடிப்படையில் தான் தமிழ்ப்பேரகராதியும், சுருக்கத்தமிழ் அகராதியும், திராவிட மொழிகளின் சொற்பிறப்பு அகராதியும் துறையை விளக்குகின்றன. துறையை உணர்தற்குரிய வழி முறையே துறை என்பது பெறப்படுகின்றது. இஃது அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானது தொல்காப்பியத் துறை விளக்க நூற்பாவை விளக்க வந்த பேராசிரியர் அந்த அகப்பாடலை மட்டும் சார்த்திச் சென்று காட்டி விளக்குவதால் இது அகத்திற்குரிய உறுப்பாகவே பலரால் எண்ணப்படுகின்றது. அகப்பாடல்களில் திணையோடு துறையே சிறப்பிடம் பெறுவதைக் காண்கிறோம். ஓவ்வொரு புறத்திணையும், ஓவ்வொரு அகத்திணைக்குப் புறனாகத் தொல்காப்பியரால் கூறப்பட்டிருப்பதால் துறை என்பது இருதிணைப் பாடல்களுக்கும் உரியதாகின்றது.

துறை பற்றித் தொல்காப்பியர் கருத்து
தொல்காப்பியர் செய்யுளியலில் முதல் நூற்பாவில் செய்யுளின் உறுப்புகளாக முப்பத்து நான்கினைக் குறிப்பிடுகிறார். அவைகளில் ஒன்றாகத் துறை என்பதையும் சுட்டுகிறார்.

“அவ்வவ மாக்களும் விலங்கும் அன்றிப்” (தொல்.செய்.நூ.207)

என்ற நூற்பாவிற்குப் பேராசிரியர் தரும் கருத்தாவது, “இது துறை எனும் செய்யுள் உறுப்பை உணர்த்துகிறது. ஐவகை நிலத்திற்கும் உரியன எனப்படும் பல்வேறு வகைப்பட்ட மாக்களும், மாவும், புள்ளும், ஓதிவந்தவாறு அன்றிப் படைத்துச் செய்யினும் அவ்வவத் திணைக்கேற்ற இலக்கணமும் வரலாற்று முறைமையும் பிறழாமை செய்யின் அது மார்க்கம் எனினும் துறை எனினும் ஒக்கும்” என்கிறார்.(தொல்.பேராசிரியர் உரை, ப.209).

இளம்பூரணர் இந்நூற்பாவிற்கு, “அகப்பொருளாகிய ஏழு பெருந்திணைக்கும், புறப்பொருளாகிய ஏழு பெருந்திணைக்கும் உரிய மாந்தரும், பரந்துபட்ட மாவும், புள்ளும், உம்மையால் மரம் முதலாயினவும் செய்யுட்கள் வருமிடத்துத் திறப்பாடு உடையதாக ஆராய்ந்து தத்தமக்கேற்ற பண்போடும் பொருந்திய மரபோடும் முடியின் அவ்வாறு திறப்பாடுடைத்தாய் வருவது துறை என்று கூறப்படும்”(தொல்.பொருள்.இளம்பூரணர்உரை,ப.538).என்பர்.

நச்சினார்க்கினியர் துறை பற்றிய நூற்பாவின் முதல் இரு அடிகளுக்கு மட்டும் உரை தருகிறார். அவரது கருத்தின்படி “ஐவகை நிலத்திற்கும் உரிய பல்வேறு வகைப்பட்ட மக்களும், மாவும், புள்ளும் ஓதிவந்தவாறு அன்றிப் பிறவற்றை ஆராய்ந்த செய்யுட்கண்ணே புலவன் படைத்துச் செய்யினும் ஒக்கும்”(தொல்.பொருள்.நச்சர் உரை, ப.252) என்பர்.

தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் தமிழ் இலக்கியத்தின் அடிக்கருத்துக்கள் பற்றியும், மரபு பற்றியும் விளக்கியுள்ளார். பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என்னும் ஐந்தும் தமிழ் இலக்கியப் பொருள் பற்றியன. இவற்றுள் புறத்திணையியல், புறப்பொருள் பற்றியும் ஏனையவை அகப்பொருள் பற்றியும் பேசுகின்றன. புறத்திணையியலில் தொல்காப்பியர் புறப்பொருள்களான வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் திணைகளின் இலக்கணத்தை எடுத்துக் கூறுகிறார். அப்பொருள்களின் பகுதிகளான அடிக்கருத்துக்களாகிய துறைகளையும் பாகுபடுத்திக் கூறுகிறார். மாறாகத் தொல்காப்பியர் அகப்பொருளின் அடிக்கருத்துக்களாகிய துறைகளைக் கூற்று வழிக் கூறியுள்ளார். எனவே தொல்காப்பியர் அகப்பொருளில் குறிப்பிடும் கூற்றுகள் துறைகளாகக் கொள்ளத்தக்கவைகளாகும்.

துறையாசிரியர்கள் பற்றிய செய்திகள்
நூலாசிரியர், உரையாசிரியர், நூலுரையாசிரியர், பாடலாசிரியர், தொகுப்பாசிரியர் என்ற கூட்டத்தோடு இதுவரைத் தமிழுலகம் மறந்திருந்த துறையாசிரியர் என்ற ஒரு வகையையும் காணலாம். சங்கப்பாடல்கள் தேடித் தொகை பெற்ற போது மூலங்களோடு துறைகளும் உடனிருந்தனவா? அன்றித் தொகுத்த காலைத் துறைக் குறிப்புப் புதியதாக எழுதிச் சேர்க்கப்பட்டனவா? எப்பொழுது எட்டுத்தொகைகட்குத் துறைகள் எழுதப் பெற்றன? அத்துறையாசிரியர்களின் புலமையும், உரைநடை வளர்ச்சிக்கு அத்துறையாசிரியர்கள் ஆற்றிய தொண்டு எத்தகையது என்பதைப் பற்றி ஆராய்வதாக உள்ளது.

சங்கப்பாடல்கள் தொகுக்கப்பட்ட காலமாக கி.பி3அல்லது4 ஆம் நூற்றாண்டு என்று கருதலாம். அகநானூற்றுக்கும், ஐங்குறுநூற்றுக்கும் தொகுத்தார், தொகுப்பித்தார் பெயர்களும், குநற்தொகைக்குத் தொகை முடித்தான் பெயரும் தெரிய வருகின்றன. கலித்தொகையை நெய்தற்கலி பாடிய நல்லந்துவனார் கோத்தார் என்பர். புறநானூற்றுக்கும், பதிற்றுப்பத்துக்கும், பரிபாடலுக்கும் இப்பெயர்கள் காணப்படவில்லை. கலித்தொகைக்கு உரையோடு துறையும் எழுதியவர் கி.பி 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நச்சினார்க்கினியர் பேருரையாசிரியர். ஆதலின் அவர்தம் உரைநடையியல் தனியாய்வுக்குரியதாகிறது.

குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, புறநானூறு என்ற ஐந்துக்கும் 2100 துறைகள் உள்ளன. கி.பி.4 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநடை நூல் என அதனைப் போற்ற வேண்டும். அங்ஙனம் போற்றவே தமிழ் உரைநடை வரலாற்றில் இந்நூல் பழமை பெற்று முதலிடம் பெறும் என்பதும் குறுந்தொகைத் துறையாசிரியர், நற்றிணைத் துறையாசிரியர், அகநானூற்றுத் துறையாசிரியர், ஐங்குறுநூற்று துறையாசிரியர், புறநானூற்றுத் துறையாசிரியர், என ஐந்து உரைநடையாசிரியர்கள் இடம் பெறுவர். ஐந்தொகைகளில் முதல் நான்கும் அகத்தொகைகள். துறைகள் கூற்று வகையால் அமைந்தவை. இவ்வகையில் புறநானூறு வேறுபட்டது. புறநானூற்றுத் துறை என்னும் போது துறையோடு பாடல் எழுந்த நிலைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இலக்கண நூற்கருத்துக்களை வகைப்படுத்தும் முறை
தொல்காப்பியம், இறையனாரகப்பொருள் ஆகியவற்றினின்றும் நம்பியகப்பொருள் இலக்கணக் கருத்துக்களைக் கூறும் முறையில் வேறுபடுகிறது. களவியலைப் பதினேழு துறைகளாகவும், வரைவியலை எட்டுத்துறையாகவும், கற்பியலை ஏழு துறையாகாவும் கொண்டு ஒவ்வொரு துறையையும் வகை, விரி என்ற நிலையில் நம்பியகப்பொருள் விளக்குகிறது.

இங்ஙனம் அகவாழ்க்கை மரபுகளை வரன்முறைப் படுத்தித் துறைகளாக விளக்கியிரு க்கும் அக இலக்கண நூலாகக் கிடைத்திருப்பது நம்பியகப்பொருள் ஆகும். ஏனெனில் தொல்காப்பியம் கூற்றுக்களாக மட்டுமே நிகழ்ச்சிகளைக் கூறுகிறது. இறையனாராகப்பொருள் சிறிது வளர்ச்சியடைந்து கூற்றுக்களை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் வகைப்படுத்தியுரைக்கிறது. நம்பியகப்பொருளே இங்ஙனம் களவு, வரைவு, கற்பு என இயலாக வகைப்படுத்தி 32 துறைகளில் பல்வேறு கூற்றுக்களை விரித்துரைக்கிறது. இது இறையனாரகப் பொருளினின்றும் அடைந்த வளர்ச்சி நிலையாகும். திருக்கோவையார் இலக்கிய நூலாக இருப்பினும் ஒருவரன் முறைக்குட்பட்ட நிலையில் இருபத்தைந்து துறைகளாகவும் நானூறுகிளவித் துறைகளாகவும் அகத்துறை நிகழ்வுகளை விளக்குகிறது. இலக்கணநூல்களாகத் தொல்காப்பியம், இறையனாரகப்பொருள் ஆகிய இரண்டையும் அடுத்து அகத்துறைகளை வகைப்படுத்தியுரைக்கும் முறையில் அமையும் நூல் திருக்கோவையாரேயாகும்.

இங்ஙனம் 25 கிளவிக்கொத்துக்கள், 400 கிளவித்துறைகள் என்ற வரன் முறையில் திருக்கோவையார் அமைய ஏற்புடைய ஓர் இலக்கண நூல் தோன்றி காலப்போக்கில் மறைந்திருக்க வேண்டும். இலக்கண நூல் தோன்றி மறைந்த காரணத்தால் தொல்காப்பியம், இறையனாரகப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அகஇலக்கணம் வகுத்த நம்பி திருக்கோவையாரின் யாப்பமைப்pல் இலக்கண நூற் கருத்துக்களை வகை, விரி என்ற நிலையில் விரித்துரைக்கிறது. இதனைத் திருக்கோவையார், நம்பியகப்பொருள் இரண்டும் ஒரு துறையினை விளக்குவதைச் சான்றாகக் கொண்டு அறியலாம்.

முடிவுரை
இவ்வாறு தொல்காப்பியர் அகத்திணைகளை திணைவாரியாகவும், புறத்துறைகளை துறை வாரியாகவும் விளக்கியுள்ளார். உரையாசிரியர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் துறையாசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. துறையாசிரியர்கள் துறையை வகுத்திருந்தால் ஒரு பாடல்களுக்கு இரண்டு, மூன்று துறைகளை வைத்திருக்கமாட்டார்கள். இதிலிருந்து பாடல் எழுதினவர்கள் வேறு, துறை வகுத்தவர்கள் வேறு, உரை எழுதினவர்கள் வேறு என்பதையும், துறையாசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதையும் அறிய முடிகின்றது.

பார்வை நூல்கள்.
1.    ஆண்டியப்பன்.தே.,      - தொல்காப்பியம் - பொருளதிகாரம், மணிவாசகர் பதிப்பகம், மதுரை, 2001.
2.    இராகவையங்கார்.மு.,    - தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி , தமிழ்ச் சங்கத்துப் பதிப்பகம், மதுரை, 1922.
3.    இளம்பூரணர் (உ.ஆ)    - தொல்காப்பியப் பொருளதிகாரம், கழகவெளியீடு, சென்னை, 1977.
4.    நச்சினார்க்கினியர்      - தொல்காப்பியம் - பொருள் சைவ சித்தாந்தப் பதிப்பகம், சென்னை, 1980.
5.    செயராமன்.நா.,        - முல்லைப் பாடல்கள், மதுரை பப்ளிசிங் ஹவுஸ், மதுரை. 1976.


* கட்டுரையாளர் : - முனைவர்.அ.ரேவதி,  உதவிப் போராசிரியர், கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  முத்துப்பேட்டை. -