ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனியான நாகரிகமும் பண்பாடும் சிறந்து விளங்குகின்றன. இவை அந்நாட்டு மக்களின் பழக்கவழக்கங்களை எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடியாகத் திகழ்கின்றன. சங்க காலத்தில் நில மக்கள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு  நிலத்திற்கும் தனித்தனியான பண்பாடும் பழக்கவழக்கங்களும் இருந்தன. ஒரு நிலத்தில் உள்ள ஆணோ, பெண்ணோ அடுத்த நிலத்தில் உள்ள ஆண், பெண்ணைத் திருமணம் செய்யும்போது பண்பாட்டுப் பரிமாற்றம் ஏற்பட்டது என்று சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. நெய்தல் நில மக்கள் ஆடை, அணிகலன்கள் அணியும் முறை பற்றிய செய்திகளை எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்காகும்.

பரதவர்கள் ஆடையணிதல்
சங்ககாலத்துத் தமிழர்கள் அவரவரின் தகுதிகளுக்கேற்ப ஆடையினை அணிந்து கொண்டனர். வசதி படைத்தவர்கள் உயர் ரக ஆடையினையும், சற்று குறைந்தவர்கள் அவருக்கேற்ற ஆடையினையும் அணிந்திருந்தனர். எவ்வகையானும் ஆடையின் இடையில் ஒர் ஆடையினையும் மேலே ஒரு துண்டும் அணிந்தனர். இதனை,


'உண்பது நாழி உடுப்பது இரண்டே'                (புறம் - 189)

என்று புறநானூறு சுட்டுகின்றது. அதோடு, மேலாடையும், கச்சாடையும் அணிவது பற்றி மதுரைக் காஞ்சியும் குறிப்பிடுவதை,

'திண்டேர்ப் பிரம்பில் புரளும் தானைக்
கச்சத் தின்க கழல்தயங்கு திருந்தடி'       (மதுரை - 435 - 436)

என்ற வரிகள் காட்டுகின்றன. மேலும்,

புதுமணத் தம்பதிகள் தம் முகத்தையும் உடலையும் புத்தாடைகளால் மூடிக்கொண்டதாகக் குறிப்புண்டு. 'வெண்ணிறப் புடவைகளை அணிந்து பெண்கள் பந்தாடினர். செக்கர் வானைப் போன்ற செவ்வண்ணமூட்டிய பத்தொழில் செய்யப்பட்ட நுண்ணியப் புடவைகள் மதுரையில் விற்கப்பட்டன'1 என்று அ. தட்சிணாமூர்த்தி குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

பாம்பின் சட்டைப் போன்றும் மூங்கிலின் உட்புறத்து வெண்டோல் போலவும் அமைந்த பூங்கலிங்கம் பற்றி புறநானூற்றிலும்  செய்திகள் இடம்பெறுவதை,

'பாம்புரியன்ன வடிவின் காம்பின்
கழைபடு சொலியின் இழையணிவாரா
ஒண்பூங் கலிங்கம்'                        (புறம் - 383)

என்ற அடிகளாலும் அறியலாம். தமிழகத்தில் பருத்தி மிகுதியாக விளைந்தன. பருத்தியிலிருந்து நூல் நூற்றலை கொட்டை நூற்றல் என்பர். கணவனை இழந்த பெண்கள் நூற்புத் தொழிலில் ஈடுபட்டனர். 'அவர்கள் பருத்திப் பெண்டிர்'2 எனப்பட்டனர். இப்பருத்திப் பெண்டிரைப் பற்றி நற்றிணையில் செய்திகள் காணப்படுகின்றன. பண்டைத் தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலங்களில் இருந்த பூவையும் தழையையும் சேர்த்து ஆடையாக அணிந்ததை சங்க இலக்கியங்களில் காணமுடிகின்றது. சங்கச் சமுதாயத்தில் பல நிலைகள் இருந்தது போல் பல்வேறு நிலையிலிருந்த மக்கள் அணிந்திருந்த உடைகளிலும் பல தரங்களும் வகைகள் இருந்ததை உணரலாம்.

சங்ககால மக்களின் ஆடைகள் குறித்து ந. சுப்பிரமணியன் குறிப்பிடும்போது, 'தழை, உடையைப் பற்றிய குறிப்புகள் யாவும் அதனை மகளிர் உடைகளாகவே கூறுவர். ஆடவர் எப்போதும் பருத்தி உடையையே அணிந்தனர் போலும். அதன் அழகு, தரம், நீளம் என்பவை உடுப்போரைப் பொறுத்து மாறுபட்டிருக்கும். தழை, உடை, இலை, பூக்களால் வேயப்பட்ட இடையைச் சுற்றி உடுத்தப்படுவது மலர்களேயன்றிப் பிற ஆடையறியா மகளிர் பண்டைத் தமிழர் இலக்கியத்தில் பலகாலும் பேசப்படுகின்றன.'3 இவ்வாறு நீளமாக நெய்யப்பட்ட ஆடையைத் தேவையான அளவிற்கு நெய்து கொண்டனர்.

இவ்வாறு நெய்யப்பட்ட ஆடையைத் தேவையான அவரவர் வசதிக்கேற்ற அளவிற்கு ஆடைகளாக அணிந்து கொண்டனர். அவற்றை துணி, துண்டு அறுவை என்றனர். இவற்றில் துகில் என்பது வெளுப்பான அல்லது சிவப்பான துணியாகும். இத்துணிகளை செல்வந்தர்கள் மட்டும் உடுத்துவர். கடவுள் வழிபாட்டுச் சமயங்களில் மட்டும் அணியப்பட்டது. கலங்கம், ஆடை என்பன பொதுப் பெயர்கள். 'மடி' என்பது சிறப்பாக வெளுத்து மடித்து வைக்கப்பட்ட துணியாகும். இதனை,

'குடிசெய்வள் என்றும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான் முந்துறும்'                (குறள் - 1023)

என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். இதில் 'மடி' என்னும் சொல் இடம்பெறுவதால் மடிக்கப்பட்ட ஆடையானது வழக்கத்தில் இருந்ததையும் அறியமுடிகின்றது.

நெய்தல் நிலத்தில் கிடைக்கக்கூடிய புன்னை, தாழை, அடும்பமலர், நெய்தல் மலர் போன்ற மலர்களையும் அதன் இலைகளையும் ஆடையாக உடுத்தினர். நற்றிணை 299 பாடலில் நல்ல ஆடையை அணிந்து கொண்டாற்;போன்ற நெருங்கியப் பிணிப்பு அவிழ்ந்த தாழை என்று வடம வண்ணக்கண் பேரிசாத்தனார் கூறுகின்றார்.

வளைந்த கழியருகில் உள்ள அடும்ப மலரினைப் பறித்தும், தாழம்பூவைப் பறிக்குமாறும் இவளைத் தூக்கிப் பிடித்தும் தாழையுடைய தரிக்க வேண்டிய நெய்தல், அத்தளிரையும் சூடவேண்டிய அதன் மலரையும் பறித்துக் கொடுத்தனர். இக்கருத்தை,

'கொடுங்கழி மருங்கிள் அடும்புமலர் கொய்தும்
கைதை தூக்கியும் நெய்தல் குற்றும்'            (நற் - 349)

என்ற பாடலடிகளால் அறியலாம். நெய்தல் நில தலைவியானவள் தாழையாடை உடுத்தியிருந்தாள். அவள் உடுத்தியிருந்த ஆடை சிதைந்து, சூடியிருந்த மாலை வாடியது என்பதாக,

'பைந்தழை சிதையகோதை வாட
நன்னர் மாலை நெருனை நின்னொடு'                (நற் - 363)

என்னும் வரிகள் எடுத்துரைக்கின்றன. நற்றிணையில் நெய்தல் திணையாக அமைந்த பாடல்களில் மூன்று பாடல்களில் ஆடை பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. பழந்தமிழ் மக்கள் பலவகையான ஆடைகளை நெய்துள்ளனர். அந்த ஆடைகள் மிகவும் மெல்லியதாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கால மக்களைப் போன்றே அரையில் ஆடையும் மேலாடையும் அணிந்திருந்தனர். கடவுள் திருவுருவங்களுக்கு மிகவுயர் ரக ஆடைகள் அணிவிக்கப்பட்டன.

பரதவர் அணியும் அணிகலன்கள்
சங்ககாலத்தில் ஆடவர், பெண்கள் இருவரும் அணிகலன்கள் அணிந்தனர். பெண்கள் தங்களை அழகுபடுத்த அணிகலன்களை அணிந்தனர். பண்டைத் தமிழகப் பெண்கள் பல்வேறு அணிகலன்களால் தங்களை ஒப்பனை செய்து கொண்டனர். யவனர் ஏற்றி வந்து இறக்கிய பொன்னும், நாட்டில் மண்ணைத் தோண்டி அரித்து எடுத்தப் பொன்னும் தமிழகத்தில் எங்கும் மலிந்து கிடந்தன.

முத்தும் பவளமும் இரத்தின வகைகளும் இழைத்துப் பலவகையான அணிகலன்கள் செய்யப்பட்டன. மகளிர் அணிந்த அணிகலன்கள் பற்றி கே. கே. பிள்ளை அவர்கள் குறிப்பிடும்போது, 'கால் விரல் மோதிரம், பரியகம், நூபுரம், அரியகம், பாடகம், சதங்கை, குறங்கு  செறி, அரையில் அணியும் முத்து வடம், முப்பத்திரண்டு வகையாலான முத்து மேகலை, மாணிக்கம் முத்தும் தோள் வளையல்கள், மாணிக்கமும் வயிரமும் அழுத்திய குடகம், செம்பொன்வளை, நவமணி வளை, சங்க வளை, பவழவளை, வாளை மீனைப் போன்று இயற்றப்பட்ட மாணிக்க மோதிரம் ஆகியவை அவை'4 என்று குறிப்பிடுகின்றார்.

இவையன்றி 'மோசை என்றும் மரகதக் கடைசெறி'5 என்றும் நற்றிணை கூறுகின்றது. பெண்கள் தங்கள் காதுகளைத் தொங்கத் தொங்க அணிந்து கொள்ளும் காதணிக் குதம்பை என்னும் வளர்ந்த காதில் அணியும் காதணிக்குக் கடிப்பினை என்றும் கூறுவர். 'குழந்தை அணிகலன் வகைக்குக் கணக்கு இல்லை எனலாம். குழந்தைகளின் நெற்றியில் சூட்டியும், மறையும் மூவடம் கோர்த்த பெண் சங்கிலியும் பூட்டுவார்கள்.'6 அதோடு மட்டுமல்லாது, 'கழுத்தில் ஐம்படைத் தாலியும் புலிப்படைத் தாலியும்'7 அணிந்திருந்தனர்.  'பெண்கள் அணிந்த சிலம்புகளுல் முத்தையும் மாணிக்கத்தையும் பரல்களாக இடுவது வழக்கம்.'8

மகளிர் அணிவகை பலதரப்பட்டவையாக இருந்தன. காலில் சிலம்பு அணிந்தனர். அதில் ஒவ்வொரு வகை மணிகளை இட்டு அணிந்தனர். அவை நடக்கும்போது குழந்தைகளினது கிங்கிணி போல ஒலித்தன. கண்ணகி அணிந்திருந்த சிலம்பில் மாணிக்கமும் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி அணிந்திருந்த சிலம்பில் முத்தும் இருந்தென என்பதை சிலப்பதிகாரத்தின் மூலம் நாம் அறிவோம். பொன்னும் மணியும் கொடுத்து பரதவ மகளிரைத் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியமுடிகின்றது.

சங்ககால மக்கள் பலவிதமான அணிகலன்களை அணிந்து தங்களை ஒப்பனை செய்து  கொண்டனர். ஒவ்வொரு நிலத்திற்கேற்றார் போலவும் வாழ்க்கை வளத்திற்கேற்றார் போலவும் அணிகலன்களை அணிந்தனர். நெய்தல் நிலமக்கள் பெரும்பாலும் கடலோரப் பகுதியில் வாழ்ந்தார்கள். அதனால் கடலில் கிடைக்கும் முத்து, சங்கு போன்றவற்றின் மூலம் செய்த அணிகலன்களை அணிந்தனர். மேலும், கடல் மூலமாக வாணிகத் தொடர்பு ஏற்பட்டதால் வேற்றுநாட்டு உயர்தரமானப் பொருட்களும் வந்தன. பொன், மணி, மாணிக்கம் போன்றவற்றைக் கொண்டும் அணிகலன்களை அணிந்தனர்.

நற்றிணையில் சிறந்த அணிகலன்களை தரித்த தலைவி தனது தோழியருடன் விளையாடியதைக் காணமுடிகின்றது. தலைவியுடன் தோழியும் தங்களை ஒப்பனை செய்துகொண்டனர். தலைவன் அணிகலன் அணிந்ததை, 'வண்டுகள் ஒலிக்கின்ற மாலை அணிந்த மார்பின் கண்ணே, மின்னுதல் போன்ற வளைந்த அணிகலன்களை உடைய தலைவன்'9 என்பதை காணலாம்.

மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும்; அணிகலன்கள்  அணிவிக்கப்பட்டன. சோழமன்னன் பொன்னாலாகிய ஆபரணம் அணிந்ததை விளக்கும் பொருட்டு,

'படுமணி யானைப் பசும்பூண் சோழர்
கொடிநுடங்கு மருங்கின்........'                (நற் - 227)

என்ற அடிகள் அமைகின்றன.

நெய்தல் நில மக்கள் மணி என்ற ஆபரணத்தை அணிந்தனர். அது நீலநிறம் என்பது குறிப்பிடத்தக்கது. நீலமணி போன்ற நிறத்தையுடைய ஆகாயம் என்று ஒப்புமைப்படுத்தி இளநாகனார் பாடுகின்றார். நெய்தல் நிலத்தில் மக்களோடு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் அணிகலன் அணிவிக்கப்பட்டது.  இதனை, 'ஒலிக்கின்ற மணிகளாகிய மாலையை அணிந்த செருக்கிய குதிரைகளை செலுத்திக்கொண்டு தலைவன் வருவான்'10 என கூறப்படுகின்றது.

அணிகலன்களோடு மற்ற இயற்கைப் பொருட்களை ஒப்புமைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளனர். 'அழகிய நீலமணியின் குவியலை விரி;த்து பரப்பியது போன்று நெய்தல் மலர்கள் காணப்பட்டன'11 என குன்றியனார் தெரிவிக்கின்றார். மேலும், தலைவி தன் கைகளில் வேலைப்பாடு அமைந்த ஒளிமிக்க வளையல்களை அணிந்திருந்தாள் என்பதை,

'அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே, முன்கை
வார்கோல் எல்வலை உடையவாங்கி'                (நற் - 245)

என்னும் வரிகள் எடுத்துரைக்கின்றன. நற்றிணைப் பாடலில் கூந்தலை ஐந்து வகையாகப் பகுத்து, அதில் நீலமணியைச் சூடினர் என்பதையும் காணமுடிகின்றது.

நெய்தல் நிலமக்கள் விலங்குகளுக்கு மட்டும் அணிகலன்களை அணிவித்ததோடு அல்லாது தலைவன் செல்லும் தேர்களுக்கும் அணிகலன்களால் ஒப்பனை செய்தனர்.  

அவ்வாறு ஒப்பனை செய்யப்பட்ட தேரில் தலைவன் வந்த செய்தியினை,
'புண்மலி நெடுந்தேர் புரவிதாங்கித்'            (நற் - 245)

என்னம் வரியால் காணமுடிகின்றது. நீலமணி போன்று புன்னையின் இலைகள் இருந்தன. புன்னையின் பூக்களில் காணப்படும் மகரந்தப் பொடிகள் 'பொன்போல்' நறுமணம் வீசும் என்று குறிக்கப்படுகின்றது. நற்றிணையில் பொன் மணம் வீசும் என்று உலோச்சனார் பாடுகின்றார். நெய்தல் நில மகளிர் பொன்னால் ஆகிய வளையலை அணிந்தனர். இக்கருத்தை,

'பொற்றொடி மகளிர் புறங்கடை வகுத்த'            (நற் - 258)

என்ற அடி உணர்த்துகின்றது. மேலும், 'தாழையின் மலரில் மகரந்தப் பொடிகள் சிதறி இருப்பது அணிகலன்களை அணிந்த மகளிரின் வளையல் உடைத்து சிதறி விழுந்தது போல் உள்ளது'12 என வடமவண்ணக்கன் பேரிசாத்தனார் கூறுகின்றார். 'வளையல்கள் அணிந்த முன்னங்கைகளையுடைய தலைவி என்றும், அந்த வளையல்கள் மிகவும் ஒலியுடன் காணப்பட்டன'13 என்றும் நற்றிணையில் 342 ஆம் பாடலில் கூறப்படுகின்றது. 

நற்றிணையில் பசுமையான அணிகலன்களை அரசர்கள் அணிந்தனர். வளையல்கள் நெகிழ்ந்தன. செய்யும் தொழிலில் சிறந்து விளங்கிய பொற்கொல்லன் அணிகலன் பொறியற்றுப் போகாமல் நேர்த்தியாகச் செய்தான் என்பதை,

'உறுவிளைக்கு அசாவா உவைலஇல் சும்மியன்
பொறிஅறு பிணைக்கூட்டும் துறைமணல் கொண்டு'          (நற் - 363)   

என்ற வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. இதனை நோக்குமாயின் நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்களிடம் பல்வேறு வகைகளில் அணிகலன்கள் வழக்கத்தில் இருந்துள்ளதை காணமுடிகின்றது.

மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான ஆடையை அக்காலத்தில் பல்வேறு விதமாக உடுத்தியுள்ளனர். குறிப்பாக பருத்தியுடை என்பது அனைவரும் விரும்பி அணியும்படி இருந்துள்ளது. அதோடு, பொன்னாலும், மாணிக்கம் போன்றவற்றால் அணிகலன் செய்தும் காது, மூக்கு, கழுத்துகளில், கை, கால்களில் அணிந்துள்ளனர். அதிலும் பல வண்ண மயமான அணிகலன்களும் தென்படுகின்றன. வெளிநாடுகளில் கிடைக்கக்கூடிய பொன்னிலும் தங்களுக்குத் தேவையான ஆபரணங்களைச் செய்து அணிந்துள்ளனர் என்பதை இக்கட்டுரையின் வழி அறியமுடிகின்றது.

சான்றெண் விளக்கம்
1. எச். வேங்கட்ராமன், நற்றிணை மூலமும் உரையும், ப - 258
2.         '         மேலது நூல், ப - 239
3.         '         மேலது நூல், ப - 131
4. தி. முத்துக்கண்ணப்பன், சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம், ப - 219
5.  அ. தட்சிணா மூர்த்தி, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ப - 13
6. எச். வேங்கட்ராமன், நற்றிணை மூலமும் உரையும், ப - 353
7.  ந. சுப்பிரமணியன், சங்ககால  வாழ்வியல், ப - 374
8. கே. கே. பிள்ளை, தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும், ப - 146
9. எச். வேங்கட்ராமன், நற்றிணை மூலமும் உரையும், ப - 188
10. சாமிநாத ஐயர் உரை, புறநானூறு, ப - 77
11.  பொ. வே. சோமசுந்தரனார் உரை, குறுந்தொகை, ப - 161
12. ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை, சிலப்பதிகாரம், 20: 67-69
13. எச். வேங்கட்ராமன், நற்றிணை மூலமும் உரையும், ப - 187

* கட்டுரையாளர்: - முனைவர் அ. மாணிக்கம், துறைத்தலைவர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருட்டினகிரி. -