ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?ஒரு பெண் தனக்குரிய உரிமைகளை அறிந்து உணர்ந்து அதன்வழி தன்னை நிலை நிறுத்திக் கொள்வதே பெண்ணியம் பேசுதல் ஆகும்.இப்பெண்ணியச் சிந்தனை தற்போதைய பெருவளர்ச்சி என்றாலும் ஒருபக்கம் பெண்கள் மீதான அடக்குமுறைகள் இருந்தகாலத்;திலும் பெண்மைக்குக் குரல் கொடுத்தவைகள் இலக்கியங்கள். இவ்விலக்கியங்கள் தான் தோன்றிய காலத்தைப் பதிவுசெய்வதற்காகவும், சமூகத்திற்கு ஏதேனும் ஒரு கருத்தைக் கூறுவதற்காகவும், இந்தச் சமூகம் எவ்வாறு விளங்கவேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் அமைந்தன. இதற்குப் பல இலக்கியச்சான்றுகளைச் சுட்டலாம். குறிப்பாகக் காப்பியங்கள் இங்கு ஆய்வுக்குரிய எல்லையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்என்ற முழக்கம் தோன்றும் முன்னர் கி.பி 100- லேயே இலக்கிய வரலாற்றில் சங்கம் மருவிய காலம் என்று குறிப்பிடப்படும் காலத்தே தோன்றிய முதல் தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரம் தொடங்கி அனைத்துக் காப்பியங்களிலும் பெண்களை மையப்படுத்துவதைக் காணமுடிகின்றது.

சங்கம் மருவிய காலத்தில் ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட குழப்பங்களுக்கிடையில் நீதி இலக்கியங்கள் தோன்றி அறவுரைகளை எடுத்தோதின. அக்கால இறுதிப்பகுதியில் தோன்றிய சிலப்பதிகாரம் தமிழ் இலக்கிய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம். குறைந்த அடிகளில் தோன்றிய சங்கப்பாடல்கள் மற்றும் நீதி இலக்கியப்பாடல்கள் தாண்டி ஒரு முழு வரலாற்றைக் கூறும் தொடர்நிலைச் செய்யுளாக அமைந்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்.

உலகமொழிகளில் தோன்றிய காவியங்கள் புகழ்பெற்ற அரசனை, ஆண்டவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்க குடிமக்கள் காப்பியமாகத் தோன்றியது சிலப்பதிகாரம். குறிப்பாக,

போதிலார் திருவினாள் புகழுடை வடிவு என்றும்

தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்

மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்

காதலான் பெயர் மன்னும் கண்ணகியென் பாள்மன்னோ

என்று மாதராரில் சிறந்தவளாகக் கண்ணகி காப்பிய ஆசிரியர் இளங்கோவடிகளால் அறிமுகப்படுத்தப்படுகிறாள். காப்பிய இறுதியில்

அத்திறம் நிற்கநம் அகனாடு அடைந்தவிப்

பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென

மாலை வெண்குடை மன்னவன் விரும்பி

எனச் செங்குட்டுவன் கண்ணகியைக் கடவுளாகத் துதிக்கவேண்டும் என்று கூறுவதாக அமைத்துள்ளார். மனிதருள் மாணிக்கமாய்த் தோன்றியவர், உயர்ந்தோர் ஏத்த உயர்சால் பத்தினியாய் உயர்த்திப் போற்றப்படுவதை இக்காப்பியத்தில் காணமுடிகிறது.

பெண் என்பவள் வெறும் பொழுது போக்குச் சித்திரமாய் மட்டுமல்லாமல் போராடி வெற்றிபெறும் புகழுக்குரியவள் என்பதனை இக்காப்பியம் பதிவு செய்கிறது. இக்காப்பியம் முழுவதிலும் கண்ணகி என்பாளை முன்னிறுத்தி பெண்மையின் பெருமையை நிலைநிறுத்துவதைக் காணலாம். காப்பியத்திற்கு மட்டுமல்லாமல் காப்பியம் தோன்றிய காலம் முதல் இக்காலம் வரை பெண்மையின் திறனை எடுத்துரைப்பதற்கு உதாரணமாய் விளங்குவது சிலப்பதிகாரம்.

கண்ணகி மட்டுமல்லாமல் ஆடல் மகளாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் கோவலனுக்காகவே வாழ்ந்து தன்மகளைத் துறவியாக்கிய மாதவியும் காப்பியத்தில் பெருமைப்படுத்தப்படுகிறாள்.

சிறப்பில் குன்றாச் செய்கையோடு பொருந்திய

பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை

தாதவிழ் புரிகுழல் மாதவி தன்னை

ஆடலும் பாடலும் அழகும் என்றிக்

கூறிய மூன்றின் ஒன்று குறைவு படாமல்

ஏழாண்டு இயற்றி

என்று மாதவியின் சிறப்பை இளங்கோவடிகள் எடுத்துரைக்கிறார். கடவுளாய்ச் சிறந்தாள் ஒருவள். கணிகையர் குலத்துள் கற்பில் சிறந்தாள் ஒருவள். இவ்வாறு இரு பெண்களை மையமிட்டு ஒருமுழு வரலாற்றைக் காப்பியமாக அளித்தவர் இளங்கோவடிகள். இந்தக் காப்பியம் முழுவதும் பெண்ணின் சிறப்பை வலியுறுத்த, வலிமையாகப்பதிவு செய்யவந்தது என்பதே உண்மையானதாகும்.

சிலப்பதிகாரத்தைப் போலவே புதுமையாகப், புரட்சியாகக் காப்பியம் படைக்க உளம் கொண்ட சாத்தனாரும் கண்ணகியின் புகழ்பாடிய சிலம்பைப் போல, மாதவி மகளை முதன்மைப்படுத்தி மணிமேகலைக் காப்பியத்தை உலகினிற்குத் தந்தார். ஒரு பெண்ணின் பல்வேறு திறனை முழுவதுமாக உலகிற்கு எடுத்துச் சொன்ன காப்பியம் மணிமேகலையாகும். சமூகத்திற்கு நல்சிந்தனைகளை எடுத்துரைக்க இம் மணிமேகலையே சாத்தனாருக்குப் பயன்பட்டிருக்கிறாள்.

எத்தன்மை கொண்டவராக இருந்தாலும் சரி, எத்தவறு புரிந்தவர்களாக இருந்தாலும் சரி அதனை மாற்றுதல், திருத்துதல் என்பது முடியும் என்ற கருத்தை நிலைநிறுத்த மணிமேகலை இங்கு முன்னிருத்தப்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது. ஒரு சமூகமாற்றத்திற்கு இப்பெண்ணே காரணமாகின்றாள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பதும் மட்டும் அல்லாமல் தேவைப்பட்டபோது பெருமையும் உரனும் கொண்ட பெண்மையை இக்காப்பியங்கள் வழி காணமுடிகின்றது.

காப்பிய உலகில் ஐம்பெருங்காப்பியங்கள் என்று புகழப்படும் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி எனும் ஐந்து காப்பியங்களுமே பெண்களை மையமிட்ட காப்பியங்களாகவே விளங்குகிறது. மணநூல் என்றழைக்கப்படும் சீவகசிந்தாமணியில் எட்டுப்பெண்களை மணந்ததாகக் கூறப்படும் கருத்திற்கு அப்பாற்பட்டு நோக்குகையில் அப்பெண்களை மணந்து அதன்வழி பெற்ற உதவிகளைக் காப்பியம் விரித்துரைப்பதைக் காணமுடிகிறது. இந்தக்காப்பியம் முழுவதும் பெண்களை மையமிட்டே அமைகின்றது.

சீவகனைச் சுடுகாட்டில் பெற்றெடுக்கும் விசயை முதல் சீவகன் மணப்பதாகக் கூறப்படும் பெண்கள் வரை காப்பியம் முழுவதும் பெண்களே நிறைந்திருப்பதை உணர்த்துகிறது.

மேலும் ஓடும் நதிகள் முதல் வணங்கும் தெய்வம் வரை பெண்கள் பெயரே முதன்மைப்படுத்துவதைப் போல சீவகன் கல்வி கற்றதைஞானம் என்னும் குமரியைப் புணர்கலுற்றார்என்று நாமகளைப் புணர்ந்ததாகக் கூறுகிறார். சீவகன் பகைவரை வென்று நாட்டை மீட்ட செயலைக் குறிப்பிடும்போதுசீவகன் மண்மகளை மணந்தான்என்றும், முடிசூடிய நிகழ்ச்சியைப் பூமகளை மணந்தான் என்றும் ஞானம் பெற்று முக்தி நிலையை அடைந்தததைகேவல மடந்தையை மணந்தான்என்று கல்வி, நாடு, முக்தி, என அனைத்தையும் பெண்மையின் அம்சமாகவே காப்பியங்கள் எடுத்துரைப்பதை அறியமுடிகிறது.

குறைவாகவே கிடைக்கப்பெற்றாலும் அவற்றிலிருந்து அறியப்படும் வளையாபதியும், குண்டலகேசியும் பெண்மையை முன்னிறுத்தியே காப்பியத்தை நகர்த்திச் செல்லுகின்றன. வைசிய புராணத்தில்வைரவாணிகன் வளையாபதி பெற்ற சருக்கம்என்னும் பகுதியில் கூறப்பட்ட கதை ஒன்றின் வழியாக அறியப்படும் செய்தியில் தன் தாயினைத் தந்தையிடம் சேர்க்கும் மகனின் கதை என்று அறியப்படுகிறது. இரண்டு மனைவிகள் அவர்களைச் சுற்றிநிகழும் கதை என இக்காப்பியத்திலும் பெண்களைச் சார்ந்த கதையே செல்கிறது.

குண்டலகேசி எனும் காப்பியமும் முழுவதுமாகக் கிடைக்கப்பெறாத காப்பியம். ஆனாலும் நீலகேசி எனும் காப்பியத்தின் வழியாக அறியப்படும் இக்கதையும் குண்டலகேசி எனும் வணிகப் பெண்ணைக் குறித்த கதையாகவே காணப்படுகிறது. இக்காப்பியம் முழுவதும் இப்பெண்ணைச் சுற்றியதாகவே அமைகின்றது. காளன் என்பவனைக் காதலித்து மணந்தவள் அவனது சூழ்ச்சி உணர்ந்து அவனைக் கொன்றுவிட்டு பின் தவறுணர்ந்து பௌத்தத் துறவியிடம் உபதேசம் பெற்று புத்த சமயப் பெருமைகளை நிலைநாட்டினாள் என்று இவளது வரலாறு கூறப்படுகிறது.

இவ்வாறு காப்பியங்களைப் பொறுத்தவரையில் தொடர்நிலைச் செய்யுளாக அமைந்து சமூகத்திற்கு நன்மை பயக்கும் ஒரு கருத்தைக் கூற வருகையில் அவ்விலக்கியம் பெண்மையை முன்னிறுத்தியதாகவே அமைவதைக் காணமுடிகின்றது. பெண்மையை மையமிட்டு உலகின் இயக்கம் அமைவதை இக்காப்பியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. மேலும் இக்காப்பியங்கள் அவை தோன்றிய காலத்துக் காணப்பட்ட பெண்களின் நிலையை எடுத்துரைப்பதாகவும் கருதலாம். இவற்றின் நோக்கமாக

1. பெண்மையின் சிறப்பை எடுத்துரைப்பது

2. பெண்மை சிறப்பிக்கப்படவேண்டிய ஒன்று என்று எடுத்துரைப்பது

என்ற இருநிலையில் அமைந்துள்ளதாகக் கருதஇடமுண்டு. எவ்வாறு நோக்கினும் காப்பியங்கள் ஆண்,பெண் இருபாலாரில் பெண்மைக்கே முக்கியத்துவம் கொடுத்துச் சிறப்பித்திருப்பதை அறியமுடிகிறது. இவ்வாறு பெண்களை மையப்படுத்தும் படைப்புகளே காலந்தோறும் வரவேற்புக்குரியதாக இருந்திருக்கிறது. இதை இன்றளவும் பல்வேறு படைப்புகளின் வழி அறியலாம். காப்பியங்களைப் பொறுத்தவரையில் பெண்மையின் பல்வேறு கோணங்;கள், பல்வேறு திறமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. இவற்றில் குறிப்பிடத்தக்கது பெண்மையைச் சிறக்கச் செய்த காப்பியங்கள் எதிர்பாலரால் படைக்கப்பட்டது என்பதுதான்.

இந்த முதன்மைப்படுத்துதலால் இக்காப்பியங்கள் இன்றளவும் பெருமையாகப் பேசப்படுகின்றன. பெண்மையின்கண்ணே அனைத்து நிகழ்வும் அடங்கி விடுவதனையும் உணர்ந்த காப்பிய ஆசிரியர்கள், தாய்வழிச் சமுதாயமாக மலர்ந்து நிற்கும் இச்சமுதாயத்தை எடுத்துக்காட்டுவதற்காகத் தங்கள் இலக்கியங்களிலும் அவர்களை முன்னிறுத்தி அதனால் தங்கள் படைப்பின்வழி வாழ்ந்து கொண்டிருப்பது தெளிவு.

துணை நின்றன

அடியார்க்கு நல்லார்(.),சிலப்பதிகாரம்(2008) .வே.சா. நூல் நிலையம்

அழகு கிருஷ்ணன்.பொ.(1988) சிலப்பதிகாரம் காட்டும் பண்பாடும் சமுதாய வரலாறும்,ஐந்திணைப்பதிப்பகம்.

சோமசுந்தரனார்(.) சூளாமணி(1962) திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்

மேலது.,(1964) நீலகேசி

சோமசுந்தரனார்(1992) சீவக சிந்தாமணி திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்

தண்டபாணி.துரை(2005) மணிமேகலை, உமா பதிப்பகம்

துரைசாமிப்பிள்ளை.சு.ஔவை,(1957) சிலப்பதிகார ஆராய்ச்சி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர்:  முனைவர் மு.சுதா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், . காரைக்குடி-3