கட்டுரை வாசிப்போம்.தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியகாலம் என்று தனித்துச் சுட்டும் அளவிற்கு ஐம்பெருங்காப்பியங்களும் , ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றி மக்களுக்கு சுவையுடன் கூடிய நன்னெறிகளை வழங்கியது என்பது மறுப்பதற்கில்லை. சமணக்காப்பியங்களும், பௌத்தக்காப்பியங்களும் தோன்றி தமிழ் இலக்கியத்திற்குச் செய்துள்ள தொண்டுகள் மிகப்பலவாகும். மக்களை நன்கு புரிந்துகொண்டு அவர்கள் ஏற்று நடக்கும் வகையில் நல்லசிந்தனைகளை, நன்னெறிகளை ‘தேனுடன் கலந்த நோய் தீர்க்கும் மருந்தினைப்போலத்’ தந்த நல்லதொரு காப்பியம் சூளாமணியாகும்.

சமணர்கள் சீவக சிந்தாமணிக்குப் பிறகு போற்றும் காப்பியம் இச்சூளாமணியாகும். இது வடமொழியிலுள்ள மகா புராணத்தைத் தழுவி தமிழில் அமைந்த காப்பியமாகும். இருப்பினும் வடமொழிப்பெயர்கள் தமிழில் மாற்றப்பெற்று தமிழ்க்காப்பிய மரபிற்குத் தகுந்தவாறு தரப்பட்டுள்ளன.

தோலாமொழித்தேவரால் இயற்றப்பட்ட இக்காப்பியம் பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் கி.பி ஏழாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப்பின்னர் தோன்றிய காப்பியம் என்ற கருத்துண்டு.திவிட்டன்,விசயன் என்னும் இருவரின் கதையை எடுத்துச்சொல்லும் இக்காப்பியம் விருத்தப்பாவால் ஆன காப்பியச்சுவை நிரம்பப்பெற்ற காப்பியமாகும்.

தமிழ் மரபுக்கேற்ற வகையில் இயற்றப்பெற்ற இக்காப்பியம் பற்றிய,‘இவ்வளவு இனிமையாகச் சொல்லும் செய்யுள்கள் தமிழில் சிலவே எனலாம். சிந்தாமணியிலும் இந்த ஓட்டமும் இனிமையும் இல்லை’1 என்ற தெ.பொ.மீயின் கருத்தும்,

‘விருத்தப்பாவைக் கையாள்வதில் இவர் சீவகசிந்தாமணி ஆசிரியரைப் பின்பற்றிய போதிலும் சில இடங்களில் அவரையும் மிஞ்சிவிட்டார் என்று கூறலாம்’2 என்ற டாக்டர் மு.வரதராசனின் கருத்தும் சூளாமணியின் சிறப்பை எடுத்துணர்த்தும்.

சிறந்த கவியழகைக் கொண்ட இக்காப்பியம் நன்னெறிகளை எடுத்துச் சொல்வதிலும் பிறகாப்;பியங்களுடன் போட்டியிடுவதைக் காணமுடிகிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் பற்றிப்பேசும் இக்காப்பியம் சிறுகாப்பிய வரிசையில் முதலாவதாகக் கூறப்படுவது. சமணசமயத்தின் உண்மைகள், வாழ்க்கைக்குரிய நீதி நெறிகள், சொல்நயம், பொருள்நயம், கற்பனை, சிறந்தகருத்து, அழகிய யாப்பமைதி இனிமையானஓசை எனப் பல நன்னெறிகளும், இலக்கியப்பண்புகளும் நிறைந்த காப்பியமாகும்.

இத்தகைய சிறப்பு பொருந்திய காப்பியத்தில் வாழ்க்கைக்குத் தேவையான பலநெறிகள் கடலெனக் காணப்படுகின்றன. கடலில் கண்ட முத்தைப்போல் கூறவிருக்கும் நெறியே இக்காப்பியப்பெருமையை உலகிற்குப் பறைசாற்றும்.

‘எங்கு தலைமை சிறப்பானதோ அங்கு அனைத்தும் சிறந்து நிற்கும்’; என்பது சங்ககாலம் தொட்டு உணர்த்தப்படும் கருத்து. ‘மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என வாழ்ந்து வந்துள்ளனர். மக்கள் குறை தீர்க்கும் மன்னவன் அம்மக்களால் இறைவனெனப் போற்றப்படுவான் என்பதனைக் குறள் வலியுறுத்துவதைக் காணமுடிகிறது. அத்தகைய மன்னவன் எப்படி இருக்கவேண்டும் என்பதனை இக்காப்பியம் தெளிவாகச் சுட்டுகின்றது. நாடாளும் மன்னவனுக்குப் பொறுமை என்பது மிக அவசியம் என்பதனை

“கண்ணிய கடாத்த வேழங் கவுளினா னுரிஞப் பட்டுத்’
தண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப்
புண்ணியக் கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப வாயின்
மண்ணியல் வளாக மெல்லாம் வழிநின்று வணங்கு மன்றே”3

என்கிறது. ‘சந்தன மரங்களைப் பெருமையுடைய மதம்பொருந்திய யானை தனது கன்னத்தினால் உராய்ந்து தேய்த்தாலும் சிறந்த மணத்தை வெளிப்படுத்தும். தனது குணத்திலிருந்து சந்தனமரம் மாறுபடாது. அதுபோன்று நல்வினையுடைய அரசர்கள் அமைச்சர் முதலான தனது கீழானவர்கள் செய்த பிழைகளைப் பொறுப்பார்களாயின் மண்ணுலக உயிர்கள் எல்லாம் அவ்வரசன் வழிப்பட்டு நின்று அவனைப்பணியும்’ என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

மற்றொருபாடலில் ‘கடல் தன் இயல்பில் மாறுபட்டால் கடல்வாழ் உயிரினங்கள் துன்பம் அடைவதுபோல, அரசன் கொடியவனானால் அவன் கீழ்வாழும் உயிர்கள் துன்பத்தை அடையும் என்று சுட்டுகிறது.

“மறந்தலை மயங்கி வையத் தொருவரை யொருவர் வாட்ட
விறந்தலை யுறாமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கும்
அறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்கும்
சிறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய்”4

எனும் இப்பாடல் உயிரினங்கள் துன்புறாதபடி தன்னுயிர் போன்று பாதுகாக்கின்ற அறவழி நிற்கும் அரசர்களின் திருவடிநிழல் மக்களுக்குப் பாதுகாப்பைத் தருவதாகும் என்பதை எடுத்துரைக்கின்றது.

மேலும் ‘ஒரு பிறவியில் துன்பம் அடைகின்ற ஒருவனுக்கு அப்பிறவியிலேயே செல்வத்தை உண்டாக்கி அதனை அனுபவிக்கும் செல்வந்தனாக வாழச்செய்து இருமை இன்பங்களையும் இப்பிறவியிலேயே உண்டாக்கும் ஆற்றல் மிகுந்தவனே அரசன் என்கிறது. அத்தகையோன் மக்களுக்குத் தெய்வமாவான்’ என்று கூறுவதுடன்,

‘இவ்வுலகத்தின் மூன்று கண்களாகப் போற்ற வேண்டியன உயிர்களைப் பாதுகாக்கும் அரசன்,சிறந்தகல்வி,விண்ணில் சுழலும் கதிரவன் எனக் கூறும் சூளாமணி இவற்றுள் முதலாவதாகக் கூறப்படும் நல்லரசனாகிய கண் இல்லையென்றால் இவ்வுலகத்தின் துன்ப இருளைப் போக்கக்கூடிய வழி வேறொன்றும் இல்லை என்று அறுதியிட்டு உரைக்கின்றது.

இக்கருத்துகள் அரசனுக்கென எண்ணாது நல்ல தலைமைக்கு வேண்டிய நற்குணங்களெனக் கருதவேண்டும். சந்தன மரம் போன்று ‘இன்னா செய்தாருக்கும் இனியவையே செய்தும், தன் கீழ் வாழும் தன்னைச் சார்ந்தோரை வாழ்விக்கும் தன்மையுடனும், தன் கீழ் வாழ்வாருக்காகத் தான் வாழ்ந்து, தான் மட்டுமல்லாமல் அவர்களும் வாழ்வில் உயர்வடைந்து இருமைப்பயன்களையும் பெற வழிவகுப்போராகவும், நாட்டின் தலைவன் மட்டுமல்ல குடும்பத்தலைமை முதலாக தலைமைப்பொறுப்பை ஏற்கும் அனைவரும் இருந்துவிட்டால் உலகம் சிறக்குமன்றோ! ஓர் நல்ல அரசனுக்கு உணர்த்தப்பட்ட இந்நெறிகள் இன்று ஒவ்வொருவரும் கொள்ள வேண்டிய வாழ்வியல் நெறிகளாகும்.

“ஆனை துரப்ப வரவுறை யாழ்குழி
நானவிர் பற்றுபு நாலு மொருவனோர்
தேனி னழிதுளி நக்குந் திறத்தது
மானுய ரின்ப மதித்தனை கொண்ணீ”5

என்று வாழ்வில் வரும் இன்ப, துன்பங்களை எடுத்துரைக்கும் இக்காப்பியம், அவ்வாழ்வில் எப்படி வாழவேண்டும் என்ற நெறிகளையும் எடுத்துச்சொல்வது மிகச்சிறப்பு. குறிப்பாக,

“குடிமிசை வெய்ய கோலுங் கூற்றமும் பிணியு நீர்சூழ்
புடிமிசை யில்லை யாயின் வானுள்யார் பயிறு மென்பார்
முடிமிசைத் திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி
அடிமி சைநரலுஞ் செம்பொ னதிர்கழ லரச ரேறே”6

என்பது குறிக்கப்படவேண்டிய ஒன்றாகும். ‘நாட்டு மக்களிடம் மன்னர்கள் செலுத்துகின்ற கொடுங்கோலாட்சியும், உயிர்களைக் கவரும் கூற்றுவனும், நோயும் கடல் நீர் சூழ்;ந்த இவ்வுலகத்தில் இல்லாதுபோனால் தேவர் உலகத்திற்குச் செல்ல விரும்புகின்றவர் எவர்?” என இக்காப்பியம் முன்வைக்கும் வினா தலைமையின் பெருமையையும் ,வாழ்க்கையானது எப்போது இன்பம்தரும், சிறக்கும் என்பதனையும் தெளிவுபடுத்துகின்றது.

இவ்வாறு வாழ்வு சிறப்பதற்கான வழிமுறைகளையும், இன்றையநிலையில் ஒவ்வொருவரும் உறுதியாகப் பின்பற்றவேண்டிய நன்னெறிகளையும் எடுத்தியம்பும் இக்காப்பியத்தை வாழ்க்கைக்காப்பியம் என்றுரைக்கலாம்.

சான்றெண் விளக்கம்:

1. தெ.பொ.மீ,தமிழ் இலக்கியவரலாறு(1982) சர்வோதயா இலக்கியப்பண்ணை,மதுரை

2. மு.வ,தமிழ் இலக்கிய வரலாறு(1972) சாகித்ய அகாதெமி வெளியீடு, புதுதில்லி.

3. சூளாமணி மூலமும் உரையும்(2015) மந்திரமாலைச்சருக்கம்-262,சாரதா பதிப்பகம், சென்னை

4. மேலது.,மந்திரமாலைச்சருக்கம்-266

5. மேலது, துறவுச்சருக்கம்-1988

6. மேலது.,மந்திரமாலைச்சருக்கம்- 269

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

* கட்டுரையாளர்கள்: - முனைவர் மு.சுதா, இணைப்பேராசிரியர் & ம.உஷாராணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அழகப்பா கலைக்கழகம், காரைக்குடி-3 -