ஆய்வு: வெண்ணீர்வாய்க்கால் கா.கூ.வேலாயுதப்புலவர்

Wednesday, 04 October 2017 16:56 - சே.முனியசாமி, தமிழ் உதவிப் பேராசிரியர், ஜெ.பீ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆய்க்குடி,தென்காசி - ஆய்வு
Print

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சேதுநாடு என அழைக்கப்பெறும் இராமநாதபுரம் மாவட்டம் பெரும் புகழுடைத்தது. புவியரசராக மட்டுமின்றி, கவியரசாரகவும் சேதுநாட்டு மன்னர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதற்கு சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள் எனப் பல வழிகளில் சான்றுகள் கிடைக்கின்றன. புலவரொடு கூட பிறந்தது வறுமை. வறுமையில் வாடும் புலவர்கள் தங்கள் கவித்திறமையை அரசர்களிடம்காட்டி பொருளுதவி பெற்று, வாழ்க்கையை நடத்திச்செல்வது அக்காலத்தில் இயல்பான ஒன்றாக இருந்தது. அவ்வாறு தேடிவந்த புலவர்களுக்குப் புரவலர்களாக அமைந்து, மண்ணும் பொன்னும், பொருளும் அளித்து, தமிழ்மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக, சேதுநாட்டு மன்னர்கள் திகழ்ந்துள்ளனர். அதுமட்டுமில்லாது பிற மாவட்டத்தைச் சேர்ந்த பெருமைமிக்கப் புலவர்களையும் ஆதரித்து சிறப்புச் செய்ததும் இம்மன்னர்களே. இத்தகைய பெருமைமிகு புலவர்கள் வாழ்ந்த மண்ணில் கா.கூ.வேலாயுதப்புலவரும் ஒருவர். இவர் இயற்றிய பாடல் அடிகளைத் தொகுத்து ‘திருப்பாடல் திரட்டு’ எனும் நூல் இரா.பாண்டியன் என்பவரால் வெளிவந்துள்ளது. இந்நூல் வழியாக கா.கூ.வேலாயுதப்புலவரின் வாழ்க்கை வரலாறு, தமிழ்ப்பணி அவர்தம் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் (தாலூகா) எனும் ஊரிலிருந்து 5கிலோ மீட்டர் தொலைவில் வெண்ணீர்வாய்க்கால் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரைச்சுற்றி, புலவர் பெருமான்கள் (பிசிராந்தையார், சவ்வாது புலவர், வண்ணக்களஞ்சியப் புலவர், சரவணப்பெருமாள்கவிராயர் போன்றோர்) பலர் பிறந்துள்ளனர். இவ்வூரிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், பொசுக்குடி (பிசிர்குடி) என்னும் ஊர் தலைசிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டான பிசிராந்தையார் பிறந்த ஊர் ஆகும். இதனை “பிசிர் என்ற ஊரைச் சேர்ந்த ஆந்தையார் பிசிராந்தையார் என்று பெயர் பெற்றார். அவ்வூர் பாண்டி நாட்டிலுள்ள தென்பது

“ தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்
பிசிரோன் என்ப’’

என்று கோப்பெருஞ்சோழன் கூறுதலால் அறியப்படும். இப்பொழுது அவ்வூர் இராமநாதபுரம் நாட்டில் பிசிர்க்குடியென்று வழங்கப்படுகின்றதென்பர்’’ (தமிழகம் ஊரும் பேரும், ப.101) என்ற சான்று மூலம் அறிய முடிகிறது. வெண்ணீர்வாய்க்கால் எனும் கிராமத்தில் பிறந்தவரே கா.கூ.வேலாயுதனார். பல்கலை வித்துவானாகத் திகழ்ந்த இவர் தமிழ்மொழி மீது அளவற்ற அன்புகொண்டவர்.

வெண்ணீர்வாய்க்கால் பெயர்க்காரணம்
சங்க இலக்கியம் புறநானூற்றில் அறுபத்தியாறாவது பாடலைப் பாடியவர் வெண்ணிக்குயத்தியார் (பெண்பாற்புலவர்). குயத்தி என்பது தொழில் வழியாக வந்த பெயராகத் தோன்கிறது. வெண்ணி என்பது சோழ நாட்டுத் தஞ்சை வட்டத்திலுள்ள ஊர். எனவே இப்புலவர் தம் ஊர்ப்பெயரைச் சேர்த்து வெண்ணிக்குயத்தியார் என அழைக்கப்பட்டார்.

மேற்சுட்டிய பெண்பாற்புலவரான வெண்ணிக்குயத்தியார் இவ்வூரிற்கு வந்ததால் வெண்ணீர்வாய்க்கால் என பெயர் வந்ததென இவ்வூர் மக்கள் கள ஆய்வின் போது கூறினர்.

மழைநீர் பொழிந்து வாய்க்காலில் செல்லக்கூடிய நீரானது வெண்மையாக இருக்கும் என்பதால், வெண்ணீர் வாய்க்கால் என பெயர்பெற்றது எனக் கூறுவர்.

மேலும் வாய்க்காலில் நீரின்றி வெறுமையாக இருந்ததால் வெறுமைநீர் வாய்க்கால் எனும் பெயர் வெண்ணீர்வாய்க்கால் எனக் மருவியதென செவிவழிச்செய்தி மூலம் அறியப்பட்டது.

புலவர் வேலாயுதப்பிள்ளை வெண்ணிநகர் என திருப்பாடல் திரட்டு எனும் நூலில் கூறுகின்றார்.

பிறப்பும் கல்வியும்
19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் புலவர் பரம்பரை வழிவந்தவராவார். இவர் மந்திர யந்திர சோதிடம் போன்றவற்றில் கைதேர்ந்தவர். இவரது தந்தை பண்டிதர் கூத்தபெருமாள், தாத்தா பண்டிதர் காயாம்பு என்பார். இவர் பரமக்குடி செல்லும் சாலையில் 3கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த இளங்களத்தூர் (தற்போது விளங்களத்தூர்) எனும் கிராமத்தில் இராமநாதபுரம் சமஸ்தான ஞானி தத்துவக் கொண்டல் அருள்மிகு சாமிநாதபிள்ளை (வித்துவான்) அவர்களிடம் முறைபடக் கற்றறிந்தார். தமிழ்மீது, தனிப்பட்ட ஆர்வங்கொண்டு திகழ்ந்தார். முருகன்மீது, நீங்காத பற்றுடையவராய்த் திகழ்ந்து தன் வாழ்நாள் முழுவதும் செந்தில்நாதனை அனுதினமும் வணங்குபவராய்த் திகழ்ந்தார். இளம்வயதில் “செந்தில் வாழ் வள்ளி மணாளன் பிரசன்னத்தைப் பலமுறைக் கண்குளிரக் கண்டவர் என்று, அவரோடு ஏக காலத்தில் வாழ்ந்தவர்கள் சொல்லக் கேள்விப் பட்டதுண்டு” (திருப்பாடல் திரட்டு, ப.32) என்று அறியமுடிகிறது. இவரது பிறப்பு குறித்து சான்றுகள் எதும் கிடைக்கவில்லை. இருப்பினும், மன்னர் பாஸ்கர சேதுபதி (1868) அவையில் பரிசு பெற்ற செய்தி இடம் பெறுவதால் 19ஆம் ஆண்டு இறுதி என அறியமுடிகிறது.

இல்வாழ்வு
இராமநாதபுரம் அருகில் அமைந்துள்ள கீழக்கரையில் வாழ்ந்த, தன் அத்தை மகள் சிகப்பி என்ற அழகும் அருளும் குன்றாத பெருங்குணப் பெண்ணை மனைவியாக இல்வாழ்வில் இணைத்துக் கொண்டார். கணவன் குணமறிந்து அன்போடு இல்வாழ்வில் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தார். சிகப்பியின் குணங்களை ‘‘ கீழக்கரை தனது அத்தை மகள் அருங்குணவதி வள்ளுவர்க்கு வாசுகி போல் வாய்த்த வரப்பிரசாதம். சிகப்பி என்ற சித்திரப் பெண்மானை மணந்து கொண்டார் (சிகப்பி என்ற பாட்டியார் எனக்கு ஐந்தாறு வயதில் அவர்களுடைய 60 வயதின் போது கூட, வெள்ளைப்புடவை, ஒருமுடி கறுப்பில்லாத வெள்ளைத் தலை, கழுத்தில் சிறிய ருத்திராட்ச மணிமாலை, நெற்றி நிறைத்த திருநீறு, பொன்னிறமேனி, அருள்பொதிந்த முகம் இவற்றுடன் வெளியில் வரும்போது ஒரு தூய வெள்ளை அன்னமாகவே காட்சியளிப்பார். இதனோடு, அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பெரியவர்கள் சொல்லியதும் நினைவிற்கு வருகிறது, நினைக்கும் போது, வியப்பும் வருகிறது! தன் கணவர் எங்காவது வெளியில் சென்றால், எந்தப் பக்கம் செல்கிறீர்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு மீண்டும் அவர் வீடுவந்து சேரும்வரை, அவர் போன திசையில் கூட கால் நீட்டி அமராத அருங்குணம் அவரிடம் இருந்தது என்பதாகும். இந்தப் புனிதவதியுடனே அவர் ஆண்டு தோறும், திருச்செந்தில் செல்வதைத் தனது தவமாகக் கொண்டிருந்தார். அப்படி அவர்கள் சென்ற காலத்தில் பாடியதே

‘‘திருவளரும் திருச்செந்தூர் தெரிசனம்
சேயிழையே பார்ப்போம் வாடி’’

என்ற வழி நடைச் சிந்து அது இன்றும் படிக்கப்படிக்க மனங்கவரும் ஒன்று” (அருள்மிகு வரதவிநாயகர் பிள்ளைத்தமிழ், ப,12) என வேலாயுதனார் பேரன் பாண்டியன் குறிப்பிடுகின்றார்.

வேலாயுதப்புலவர், சிகப்பி அம்மாள் ஆகிய இருவருக்கும் இறைவன் எல்லாச் செல்வத்தையும், கொடுத்திருந்தும் குழந்தைச்செல்வத்தை மட்டும் தராமல் போய்விட்டார். இருப்பினும் தன்னுடன் பிறந்த தம்பிகளான காயாம்புப் பண்டிதர்-காளிமுத்துத் தம்பதிகளின் பிள்ளைகளான நாகலிங்கம், பசுபதி, இராமசாமி, ஆறுமுகம் ஆகிய இவர்களையும், இளைய தம்பி கணபதிப்பண்டிதர்-காளி தம்பதிகளின் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாகவே பாவித்து வந்தார்

வேலாயுதப்புலவரும் பாஸ்கர சேதுபதியும்
தனது 11ஆம் அகவையில் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி (1868-1903) அவர்களின் சமஸ்தானத்தில் பாடிப் பாராட்டுப்பெற சென்ற புலவர் பெருந்தகையை, இளம்பிள்ளையான அவர், என்ன பாடப்போகிறார் என்ற நிலையில் சோதித்துப் பார்க்க விரும்பியதன் விளைவால் மன்னர் அவர்கள் முதலில் ‘திருக்கு மரிக்கும்’ என்ற திரிபுக் கவி பாடப்பணிக்க, உடனே இளம்பிள்ளையாக இருந்த வேலாயுதப்புலவர்,

’’திருக்கு மரிக்கும் தினம்பணி செய்திடுஞ் செங்கையில்வேல்
இருக்கும் படிக்குத் தரித்து மேல் வாசங்க ளெங்குமிகப்
’பெருக்குங் கடல்போல் பவனி தாவரும் பேரரசு
தருக்குண பாணிமன பாஸ்கர சாமி சதுர்மறையே’’

என்று பாடக்கேட்ட மன்னரவர்கள் மேலும், முல்லைக் கொடிக்கும் சிவனுக்கும் சிலேடை பாடப்பணிக்க என்றதும்

’’நீர்வாச முண்டு நிலைப்பிரியார் யாவர்களும்
பார்மீது போற்றிப் பணிவார்கள் – ஏர்மிகுத்த
பாற்கர சாமியேயிப் பாரினிலே முல்லைக்கொடி
ஏற்கும் சிவனுக் கிணை’’ - (சிலேடை வெண்பா)

என்று புலவர் பாட, அடுத்து ‘ம’ வென எடுத்து ‘து’ வென குடிக்கும் வெண்பா ஒன்றைப் பாடப்பணிக்க

மன்னவர்கள் போற்று மதிபதியே பார்வேந்தே
பன்னுதமிழ்ப் பாவலர்க்குப் பாக்கியமே- என்னாளும்
ராசரா சேஸ்வரியின் நற்கருணை யார்கலப
வாசமொடு வாழ்வீர் மகிந்து – (தலை கடை வெண்பா)

எனப் பாடினார். இவ்வாறு பல சோதனைகளை நிகழ்த்திய மன்னரவர்கள் இளம்புலவர் திறன் கண்டு பாராட்டி, பல பரிசுகளைப் பெற்றுக்கொண்டார்.

சேவல்சண்டையும் சீட்டுக்கவியும்
தூவல் எனும் ஊரில் சேவற்சண்டை வழக்கமாக நடைபெறும். தனது 13ஆம் அகவையில், சேவற்சண்டைக்குத் தந்தையார் வளர்த்த சேவலை எடுத்துக் கொண்டுபோனார். சண்டைக்கு விடப்பட்ட தன் சேவல், இறந்து போனது. தந்தையிடம் கூற அச்சம் ஏற்பட்டதால், என்ன செய்யலாமென யோசித்துக் கொண்டிருந்தார். பின்பு தூவல் ஊர் அருகில் பாம்பூர் பறம்பக்குடிச் சாலை (பறம்பக்குடி எனும் ஊர் தற்போது பரமக்குடி என வழங்கி வருகின்றது. இதனைப் பற்றி ‘‘ பறம்பு நாட்டின் தென்னெல்லையாகப் பரமக்குடியைக் கொள்ளலாம். பறம்பு நாட்டு முந்நூறு ஊர்களை உடையது (புறம் 110) பறம்பு மலை திருப்பத்தூர் வட்டத்திலே உள்ளது. அதற்குத்தெற்கே சிவகங்கை வட்டமும், அதற்கும் தெற்கே பரமக்குடி வட்டமும் உள்ளன. எனவே சங்ககாலப் பறம்பு நாடு என்பது, ஏறத்தாழ மதுரை மாவட்டத்து மேலூர் வட்டத்தின் கிழக்குப் பகுதியும் இராமநாதபுர மாவட்டத்துத் திருப்பத்தூர், சிவகங்கை, பரமக்குடி வட்டங்களும் அடங்கிய நிலப்பரப்பாயிருந்திருக்கலாம் என்று கூறுதல் பொருத்தமாகும்’’ (பத்துப்பாட்டு ஆராய்ச்சி ப.361) அறியமுடிகிறது. மேலும் ’’பரம்பையூர் என்ற ஊர் புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்தில் பரம்பூர் என்று வழங்கப்படுகிறது. இவ்வூரை, இராசேந்திர சோழ தேவர் ஆட்சியாண்டு 17ல் ஆட்சிப் புரிந்தார்’’ (கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள், பிற தகவல்கள் கிடைக்கவில்லை.) எனக் குறிப்பிடுகின்றது. பரமக்குடி எனும் ஊரினை இம்மன்னனே கி.பி.1486 (கொல்லம் ஆண்டு 662) ஆண்டுள்ளார், என்ற செய்தியும் பரமக்குடி கல்வெட்டு எனக் குறிக்கும் முகமாக கண்.கல்.தொகுதி எ.1968-206 தொகுதி எனச் சான்றுடன் கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ’பாவாணர் வரலாறு’ எனும் நூல் எழுதிய இரா.இளங்குமரானார் பரமக்குடியை பறமக்குடி என்றே அழைத்துள்ளார் பக்,109,295) எனும் ஊரில் சமீன்தார் ஸ்ரீ சுப்பையாதுரையின் மீது

சீர்வளரும் மங்களம் மிகுந்ததிரு உவனை நிகர்
செகமெச்சு மரவ நகரில்
சென்னெலொடு கன்னல்மது தென்னல் விளைந்துகனி
தேனாழுகு மருத நிலவேள்
திருவினெழி லுருவளரு வரைமருவு புயசயில
சேதுபதி மன்னர் புகழான்
சித்திர வனிச்சமலர் மொய்த்திரு மெய்த்துரை
யளித்த தொரு புத்ர நிதியே
சிங்கார மானதுரை துங்கதுன் மெச்சுதுரை
ஸ்ரீ சுப்பையா துரைபதி

எனும் வண்ண விருத்தப்பா (64 அடிகள்) பாடி, சேவல் பெற்றுள்ளார்.

நாதசுரமும் கவித்திறமும்
வேலாயுதப்புலவர் நாதசுரம் இசைப்பதில் கைதேர்ந்தவர். பல ஊர்களுக்குச் சென்று தன் நாதசுரத்தின் மூலம் எவர் பாடினாலும் சித்துக்காட்டி விடுவதுண்டு. தான் வாசித்துக் காட்டியப்பின், பாடியவர் தோற்றுப்போனால் நாதசுவர இசைவாணர் கேட்கும் பரிசை வழங்குவதோடு, இனி பாடுவதில்லை என்று எழுதிக் கொடுக்கவேண்டும். மாறாக, இசைவாணர் தோற்றால் பெற்ற விருதுகள் அனைத்தையும் பாடியவர் காலடியில் ஒப்புவித்து, பின் வாசிப்பதே இல்லை என்ற ஒப்பந்தத்தில் பலரைப் பலவூர்களில் வெற்றி கண்டுள்ளார்.

இறுதியாக புலவரின் ஊரான வெண்ணீர் வாய்க்கால் வந்து போட்டிக்கு அழைக்க அதன்படிப் பாடச் சென்றவர்கள் பலர் தோற்றனர். அதோடு மட்டுமில்லாது புலவரையும் போட்டிக்கு அழைத்தனர். அந்நேரத்தில் மீன்குத்திக் காய்ச்சலில் இருந்தார். இருப்பினும் தமது ஊரிற்கு அவப்பெயர் வந்துவிடக்கூடதென நினைத்து போட்டிக்கு அழைக்கப்பட்ட இசைவாணர் ஒப்பந்தபடி இசைவு தெரிவித்து விநாயகப்பெருமான் முன்னிலையில் குமரப்பெருமானை வேண்டி

சந்தனா மலைச்சாமி நாதனே- இது
ததி வந்தருள் செய்

அனுபல்லவி

செந்திலம் மால்பதியே குந்திடும்வேல் நிதியே
திருவருள் புரிவாயறுமுக – திருமருகவை
வேல்முருகைய சிறுவனுயிர் மெயே பொருளினை
திருவடி கடனுள் ததிதுணை

சரணங்கள்

கா கனமயில் கா வலனேமுரு
கா கருணைகுழ கா கதிர்வேலனழ
கா கதிதரு சு கா கமலபதங்
கா கனிவொடருள் கா சினியர்தொழுகு
கா தசமுடியுடைக் கடைய னுடல்படை
கா தலரொடுபடக் கணைவிடு மரிமரு
கா தருணமெனது கவலை தவிரவரு
காய் தனியினி யொருகதி யிலையருடரு
காய் இருகாய் அருகா முருகா

எனப் பாடிக்கொண்டே போன, புலவரின் அருட்பா ஓட்டத்திற்கு வாசிக்க முடியாத இசைவாணர் நாதசுவரத்தை புலவரின் கால்மீது வைத்து வணங்கித் தன் ஒப்பந்தபடி விருதுகளை கழட்டிவைத்தார். உடனே, புலவர் அவர்கள் இசைவாணரை அள்ளி அணைத்து, அவரிடம் நாதசுவரத்தையும் விருதுகளையும் மீண்டும் வழங்கி இனிமேல் யாரிடமும் போட்டிக்கே போக வேண்டாம் என்று வாழ்த்தியும் அனுப்பினார். இனிமேல் யாரையும் புண்படுத்தக் கூடாதென நினைத்த, அவரின் நெஞ்சத்தைப் போற்றத்தக்கதாகும்.

இறைப்பணி
புலவர் இறைப்பணியில் தம்மை மூழ்கடித்துக்கொண்டார். சான்றாக, தனது சொந்த ஊரான வெண்ணீர்வாய்க்காலில், அருள்மிகு வரதவிநாயகர் ஆலயத்தைக் கட்டினார். இதனை, அவரது பேரன் பாண்டிப்புலவர் “வாதாபியிலிருந்து பல்லவர்கள் கணபதியைத் தொண்டை மண்டிலத்திற்கு கொண்டு வந்தது போல் காயல் பட்டணத்திலிருந்த இந்த அருள்மிகு வரத விநாயகர் வேலாயுதம் வாழும் வெண்ணீர் வாய்க்காலில் எழுந்தருள வேண்டுமென்று விழைந்த விழைவையேற்று தான் வாழும் நல்லூரான வெண்ணீர் வாய்க்காலில் 76 ஆண்டுகட்கு முன் கோவிற்கட்டி பிரமதீச வருடம் வைகாசி மாதம் சுப வேளையில் ஸ்ரீ வரத விநாயகப் பெருமானை எழுந்தருளச் செய்தவர் அருட்புலவர் வேலாயுதம் அவர்கள்’’ (அருள்மிகு வரத விநாயகர் பிள்ளைத்தமிழ், ப.13) குறிப்பிடுகின்றார்.

மேலும், விளங்களத்தூரில் இருந்து வில்வக்கன்று கொண்டு வந்து வைத்து விநாயகரை வில்வத்தளிரால் அர்ச்சித்தவர் வேலாயுதப்புலவர்.

பண்டிதப் பரம்பரையின் கவித்திறம்
வேலாயுதப்புலவரின் குடும்பமே புலமையுடையதாக விளங்கியது. புலவரின் பாட்டனாரான பண்டித காயாம்புப் புலவர், அவர்களை எப்படியும் அவமானப் படுத்த வேண்டுமென்ற நோக்கில் பஞ்சாயத்துக் கூட்டிவைத்துப் பரிகசித்தபோது பொங்கியெழுந்த புலவர் காயாம்பு அவர்கள்

கதிர்வடி வேலன் கிருபையினால் காயாம் பென்சொல்
அதிர்வெடி வேட்டுக்கு மேலதிகம் அது ஏது வென்றால்
சதிர்வடி வாகிய வாலை சரஸ்வதி தன்னுரு லாலெனக்
கெதிர்வடி பேசுபவர் யாரோ அவருக் கிடர்வருமே

எனும் அடியைப்பாடி கூடியுள்ளவர்களை தம் கவித்திறத்தால் கலங்கடிக்கச் செய்தார். அதன்பின், கூட்டத்தினர் வருத்தம் தெரிவித்தனர். அத்தகைய புலவர் பெருமானைக் காணவிரும்பி, ஞானி சாமிநாதப் பிள்ளை அவர்கள் தன் நோயைத் தீர்த்து வைக்குமாறு வேண்டி

எந்நோயுந் தீர்ப்பாய் நீ எவ்வுயிரும் காப்பாய் என்
தந்தநோய் தீர்க்கவினுந் தாமதமா – சந்ததமும்
மோயாத் தமிழ்முழக்க மோங்கு வெண்ணீர் வாய்க்கால்வாழ்
காயாம்பைக் காணாத கண்

என்று பாடியுள்ளார்.

பண்டித காயாம்பு அவர்களின் மகனும் புலவர் வேலாயுதம் அவர்களின் தந்தையுமாகிய கூத்தணன் என்றழைக்கப்படும் புலவர், கூத்தப்பெருமாள் அவர்களும் வெண்ணீர் வாய்க்காலில் அமைந்துள்ள கருப்பணசுவாமி மீது

கற்றுவந்தோ ரேற்று கருப்பண சாமி கழலிணைமேற்
பற்றுவைத்தோ ரேற்றிப் பணிந்திடத்தம்முன் பழவினைகள்
அற்றவித் தோடுமாகுலம் நீறு மடைவுமிகப்
பெற்றுவந் தோராய் இருபுவி யாள்வர் பெருங்குழையே

எனும் பாடலைப் பாடியுள்ளார்.

வேலாயுதப்புலவரோடு பிறந்த சகோதரர்கள், காயாம்புப்பண்டிதர் விசித்திரக்கணபதிப்பண்டிதர் ஆகிய இருவரும் கல்வியறிவும், கவித்திறமும் உடையவராகத் திகழ்ந்தனர். சான்றாக, புலவரின் தம்பி காயாம்பு அவர்கள் மானாமதுரை அருகில் அமைந்துள்ள கீழப்பசலை என்ற ஊரில் வாழ்ந்த கோச்சடையான் என்பவருக்கு எழுதிய மடலின் முகவரியில்

கோணாத வைகை கொடுவினையெ லாமகற்றும்
மானாமதுரை மகிழ்போஸ்டு – தானகா
வாச்சுதே கீழ்ப்பசலை வாழ்சீனி பண்டிதன் சேய்
கோச்சடையான் கையில் கொடு

என்ற நேரிசை வெண்பாவாகப் பாடியுள்ளார்.

தனது தம்பி காயாம்பிற்கு ஏற்பட்ட அம்மை நோய்க்காக அம்மனிடம் தம் உயிரை எடுத்துக் கொண்டு தன் தம்பி உயிரைத் தரும்படி இறை அஞ்சிமைக்கு இறங்கி நெற்றியில் ஏற்பட்ட ஒரே முத்தில் சீவன முத்தியடைந்தார்.

வேலாயுதப்புலவர் பாடிய, பல பாக்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது இங்கு வருந்தத்தக்கது. ஏற்ற இறக்க தாழ்வுணர்வினரால் எரிக்குப் பலியாகிவிட்டது என்ற செய்தியை இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலவர் நம்மிடம் இல்லாவிடினும், அவரது வாரிசுகள் இன்று வரையிலும் புலமையுடையவராகத் திகழ்கின்றனர் என்பதே மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

இந்நூலில் இடம்பெற்ற பிற புலவர்கள்
சமுகத்தின் பிரதிபலிப்பே இலக்கியம். ஒரு இலக்கியம் படைக்கும்போது, அவ்விலக்கியத்தின் தொடர்பான சமகால நிகழ்வுகளையோ அல்லது படைப்பாளர்களையோ ஆகியவற்றை அறிமுகம் செய்வது, சிறப்பாக அமையும். கன்னட அற இலக்கியத் தந்தை சர்வக்ஞர் ஆவார். இவர் பிறப்பு வாழ்வு குறித்த முழுமையான செய்தி கிடைக்கப்பெறவில்லை. அவர் இயற்றிய சர்வக்ஞர் வசனங்கள் எனும் பாடல்களை வைத்தே, அவருடைய பிறப்பு தொடர்பான செய்திகள் யூகத்தின் அடிப்படையில் அறியமுடிகிறது. ஆனால் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் (கிபி16-17) எண்ணற்ற புலவர்கள் வாழ்ந்தும்,பல படைப்புகளைப் படைத்துள்ளனர். ஏற்றத்தாழ்வின் மூலம் அதில் யாருமே சர்வக்ஞர் பற்றிய செய்தி தனது படைப்புகளில் குறிப்பிடவில்லை என்பதே, வருந்தக்கூடிய செய்தியாகும். வேலாயுதப்புலவரின் திருப்பாடல்திரட்டு எனும் நூல், தொகுக்கப்பட்டிருந்தாலும் தொகுப்பித்த பாண்டிப்புலவர், தம் சமகால புலவர்களிடம் நல்லுறவு கொண்டுள்ளார் என்பதை அறியமுடிகின்றது. இந்நூலில் அ) சாமிநாத பிள்ளை, ஆ) தெய்வநாயகம் பிள்ளை, இ) துரைச்சிங்கம் பிள்ளை, ஈ) காயாம்பு ஐயங்கார், உ) அண்ணாச்சாமி ஐயங்கார், ஊ) கோதவன், எ) பாண்டிப்புலவர் போன்ற புலவர்கள் இடம்பெறுகின்றனர்.

அ) சாமிநாத பிள்ளை என்பவர் இராமநாதபுரம் சமஸ்தான ஞானி சைவ சமய வேதாந்தி தத்துவக் கலாநிதி ஆவார். இவர் இளங்குளத்தூர் (தற்போது விளங்குளத்தூர்) எனும் ஊரில் பிறந்தவர். இவர் வேலாயுதப்புலவரின் ஆசிரியர் ஆவார். சாமிநாத பிள்ளை அவர்களின் நோய் தீர்க்கவேண்டி காயாம்புப் புலவரை பாடல் பாட அழைப்பு விடுத்துள்ளார்.

ஆ) தெய்வநாயகம்பிள்ளை என்பவர் தமிழ்ச் சங்க வித்துவானாகத் திகழ்ந்த இவர் தென்குழந்தாபுரி என அழைக்கப்பெறும் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் ஆவார். திருப்பாடல் திரட்டு எனும் நூலிற்கு சாற்றுக்கவியாக

வெண்ணிநகர் வாழாயுள் வேதமுணர் கூத்தனவேள்
பண்ணுந் தவத்துதித்த பாக்கியவான் – கண்ணுதன்மேல்
உள்ளன்பால் வேலா யுதமுரைத்தான் அதன்கொடுமூர்
தெள்ளுதமிழ்ப் பாபலபாத் தேன்

எனும் வெண்பா வழங்கியுள்ளார்.

இ) பெருந்தகை துரைச்சிங்கம்பிள்ளை என்பவர், கடலாடி சமஸ்த்தான வித்துவானாக விளங்கியவர். இந்நூலுக்கு சாற்றுக்கவியாக எண்சீரடி விருத்தத்தில்

சீராரும் வெண்ணிநக ரைங்க ரர்க்குத்
திருக்கோவிலின் பணியைத் திகழச் செய்தான்
பாராருஞ் சிவபக்த நாயுள் வேத
பண்டிதன் கூத் தனன்பயின்ற பாலன் யோகன்
தாராரும் நாமாது வசித்த நெஞ்சன்
சாதுதாசன் வேலாயுதங் கனேசன்
பேராளும் வெண்பாவுங் கந்தர் பாவும்
பேசினான மிழ்தினுக்கும் பெரிதாய்த் தானே!

எனும் அடிகளில் பாடியுள்ளார்.

ஈ) காயாம்பு ஐயங்கார் வித்வசிரோன்மணி எனும் பட்டபெற்ற இவர் பெருமைமிகு பெருங்கருணை எனும் ஊரினைச் சேர்ந்தவர். இவ்வூர் முதுகுளத்தூர் தாலுகா மேலக்கொடுமளூர் எனும் ஊரிலிருந்து, 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் பேரறிஞராகவும், புகழ்பெற்ற பதிப்பாளராகவும், கல்வெட்டியல், வரலாற்றியல் ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய மூதறிஞர் மு.இராகவையங்கார் பிறந்தார் என்ற குறிப்பும் உண்டு. பின்பு வாழ்ந்தது மானாமதுரை எனவும், குறிப்பிடுகின்றனர். இந்நூலுக்கு காயாம்பு ஐயங்கார் சாற்றுக்கவியாக

வேத விநாயகர் வேலவர் பாவலர்க்குப்
போதரசத் தேனாய் பொழிந்தனனகாண்! – வேதமுணர்
கூத்தனை ருந்தவச்சேய் கோல வேலாயுதமால்
தோத்திரப்பா தந்தான் சுபம்

எனும் அடிகளில் பாடியுள்ளார்.

உ) மஹாராஜா ஸ்ரீ அண்ணாச்சாமி ஐயங்கார் என்பாரும், மேற்சுட்டிய ஊரான பெருங்கருணையைச் சேர்ந்தவர். இவரை, இராமாயணப் பிரசங்கி எனவும் அழைப்பர். இந்நூலுக்கு சாற்றுக் கவியாக

கந்தன் கணேசர்பால் காதலித்து வேல்வலவன்
செந்தமிழி நாற்செய்த செய்யுளெலாஞ்- சுந்தரஞ்சேர்
கம்பநாட் டாழ்வார் கவியென்று தான் களித்தார்
அம்புவியில் மாந்தரனைத் தும்

எனும் அடிகளில் பாடியுள்ளார்.

ஊ) கோதவன் என்பவர், பரமக்குடியைச் சேர்ந்தவர். மலேசியாவில் வசித்து வந்தவர். இவர் இந்நூலுக்கு

நூலாவென நுகர்ந்தே நோகும்
நூறாயிரம் சான்றோர் தம்மை
வேலாயுதப் புலவர் பாட்டு
வெந்தாருள நோவைத் தீர்க்கும்!
ஏழாயிரம் எண்ணில் மேலும்
எழுத்தர்களோ இருந்தும் இஃதை
நூல்தொகுத்தனன் பாண்டி யன்றோ

எனும் வாழ்த்துப்பா ஒன்றை எழுதியுள்ளார்.

எ) இரா.பாண்டிப்புலவர் திருப்பாடல்திரட்டு எனும், இந்நூலினைத் தொகுத்தவர். வேலாயுதப்புலவரின் பேரனாவார். தனது தந்தை, பசுபதி எனும் பெயரில் தன் பெயரில் இட்டுக்கொள்ளாமல் தனக்கு இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொடுத்த தமிழவேல் தவத்திரு டாக்டர் சுவாமி இராமதாசன் பெயரை தனது பெயருக்கு முன் இணைத்து, தன் குருநாதரின் மீது அளவற்ற பற்றுள்ளவராகத் திகழ்ந்துள்ளார். பொற்பரிசுக் கவிஞர், கவிஞர்கோ, கவித்தென்றல் பைந்தமிழ்ப்புலவர், மணி, செந்தமிழ்க்கவிமணி என்ற சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு. பாவலராக மட்டுமின்றி, நல்ல நாவலராகவும் விளங்கும் இவர் தண்ணீர் மலைஅப்பன், திருப்புகழ்ச்சி மாலை, கருப்பையன் புகழ்மாலை, வரதவிநாயகர் பிள்ளைத்தமிழ் என்ற பக்திப் பனுவல்களையும், ’நன்றி மலர்கள்’ தோரணங்கள் என்ற சமூக எழுச்சி நூல்களையும் பூங்கொடி என்ற காவியத்தையும் தமிழன்னையின் திருவடிவுகளை அலங்கரிக்கும் அழகு மலர்களாக அளித்துள்ளார்.

திருப்பாடல் திரட்டு எனும் நூலில் மனத்தோட்டம் எனும் தலைப்பில் தன்னுடைய அனுபவத்தைப் பகிந்துள்ளார். அதில் ’’பாலபருவம் தொடங்கிப்பாடிய அவர் பாடல்கள் பல. அவற்றில் நமக்குக் கிடைத்தவை சில அவைகளே இவை” என்பதனைச் சுட்டுகின்றார். இதன் மூலம் வேலாயுதப்புலவர் பலவகையான இலக்கியங்களைப் படைத்துள்ளார் என்பதை அறியமுடிகிறது. அதுமட்டுமின்றி இப்பாடல்கள் என்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை எனவும், இதை வெளியிட யாரும் வரவில்லை. அவரின் சொத்துகளைப் பங்கு போட்டவர்கள்கூட, இதைப் புறக்கணித்தது மிகுந்த வேதனை அளிக்கின்றது என்ற வருத்தத்தைத் தெரிவிக்கின்றார். இறுதியாக ’கண்கள் வந்தபோது எனும் நாவல் எழுதியுள்ளார். இந்நாவல் அச்சுக்கு வரும்முன் அவர் உயிர் பிரிந்துவிட்டது. இருப்பினும் இவரின் மகனான பா.வெற்றியின் மூலம் அச்சேறுவதற்கான பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

திருப்பாடல் திரட்டு ஒரு பார்வை
திருப்பாடல் என்னும் இந்நுலானது 1994ஆம் ஆண்டு, திசம்பர் பத்தில் பினாங்கு செந்தமிழ்க் கலாநிலையத்தாரால் வெளியிடப்பட்டது. இந்நூலினைத் தொகுத்தவர் கா.கூ.வேலாயுதப்புலவர். 104 பக்கங்கள் கொண்ட இந்நூலானது முருகக் கடவுளின் பெருமைகளையும், ஒவ்வொரு ஊரிலும் இடம்பெற்ற முருகக் கடவுளைப் பற்றி பாடப்பெற்ற பாடல்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, வரத விநாயகர் (வெண்ணீர்வாய்க்கால்), தென் கொடுமளூர் குமரக்கடவுள், படைவீட்டுக் காவடிச்சிந்து, சீரலைவாய்ச்சிந்து, பழனி, கழுகுமலை, கதிர்காமம், திருக்கொடுமளூர், திருக்குன்றக்குடி, சிவசுப்ரமணியர் நவரசக்கீர்த்தனை, திருச்செந்தூர் திவ்விய வழிநடைச்சிந்து போன்ற தலங்களில் அமைந்துள்ள கடவுளைப் பாடப்பட்ட பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கணபதி சிவலிங்க பந்தம், முருகன் ரத பந்தன் ஆகிய பெயர்களில் சீட்டுக்கவியை வரைபடத்தின் மூலம் சுட்டப்பட்டுள்ளது.

இந்நூலின் இறுதியாக, திருச்செந்தூர் திவ்விய வழிநடைச் சிந்து எனும் தலைப்பில் நாற்பத்திஐந்து காப்புப்பாடல்கள், இடம்பெறுகின்றன. இப்பாடாலானது வேலாயுதப்புலவர் திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்கவேண்டி பாதயாத்திரைச் செல்லும்போது காணப்படுகின்ற ஊர்ப்பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். அவ்வூர்ப்பெயர்களாவன:

வெண்ணிநகர் (வெண்ணீர் வாய்க்கால்), அழகன் ஊரணி, காக்கூர், ரெகுநாத காவேரி, கலெக்டர் தருமாளிகை, தென் குழந்தாபுரி (முதுகுளத்தூர்), காதரசா தோப்பு, வாக்குளம் (வாகைக்குளம்), விக்டோரியா ஆபீஸ், மகமதியர் பள்ளி இங்கிலீஷ் ஸ்கூல், மல்லல், கடம்பங்குளம், கடலாடி, சாக்குளம், பூக்குளம், நெடுங்குளம், குருவிக்காத்தி, மறவர் வாழ் தேரா குறிச்சி (தேவர் குறிச்சி), புனல்வாசல் (புனவாசல்), வேப்பங்குளம், மலட்டார், கருசல்குளம் (கரிசல்குளம்), கீழ்குளம், தரக்குடி, சேவற்பட்டி, கோவில்பா ரெட்டி (கோவில்பட்டி) சூரங்குடி, சண்முகபுரம், ரெட்டி மாதரசிபட்டி, சாயல்குடி, மேமாந்தை (மேல்மாந்தை), தளவாமுதலியார் சத்திரம், எதுவானைப் பட்டி, நீர்வாவி (நீராவி), வைப்பார், கல்லூருணி, உப்பாறு, கல்லாறு பட்டணம், மருதூர், உத்தரவைக்குளம், மணிமுத்தாறு, ஆப்பனூர், தூத்துக்குடி, ரயில் ஸ்டேசன், மார்த்தாண்டன், முத்தையாபுரம், சிங்காரக்காயல் (காயல்பட்டிணம்), காயல் ரோமன் கோவில், குருவித்திடல், தாம்பிரபரணி (தாமிரபரணி), வீரபாண்டியன் பட்டிணம், எட்டயாபுரம் சீமை (எட்டையாபுரம்), சீரலைவாய், பாஞ்சாலங்குறிச்சி, குலசேகரன் பட்டிணம் என்பன.

முடிவுரை
தமிழும் சைவமும் ஓங்கி விளங்கிய தென்பாண்டி மண்டலத்தில் சேதுபதி சீமையில் சங்கஇலக்கியம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரை பிறந்து வாழ்ந்த புலவர்கள் கணக்கிலடங்கார். தமிழ்மொழி தழைத்து செழித்து ஆலம்போல் நிற்பதற்குச் தென்பாண்டிச் சீமையின் புலவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அவ்வகையில் தொன்று தொட்டு வந்தவர்களில் வேலாயுதப்புலவரும் ஒருவர் அவரால் இயற்றப்பட்ட இலக்கியங்கள் நமக்கு கிடைக்கப்பெறா. மேலும் இவரைப் பற்றிய பதிவு யாரும் செய்யவில்லை என்பதே ஆழ்ந்த வருத்ததை அளிக்கின்றது. இருப்பினும் ஒருபானைச் சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்னும் பழமொழிக்கேற்ப புலவரின் பாடல்கள் தொகுத்துக் காணலாகும் திருப்பாடல் திரட்டு எனும் நூலே அவரின் ஆழ்ந்த தமிழ்ப்பற்றையும் செய்யுளியற்றும் திறமையையும் இங்கே பறைசாற்றுகின்றன.

துணைநூற் பட்டியல்

1. இராசமாணிக்கனார்.மா, பத்துப்பாட்டு ஆராய்ச்சி, 2012, சாகித்திய அகாதெமி, புது தில்லி.

2. கிருட்டிணமூர்த்தி.சா, சிவகாமி.ச, மு.இராகவையங்கார், 2003, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

3. சேதுப்பிள்ளை.ரா.பி, தமிழகம் ஊரும் பேரும்,2011, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை.

4. பாண்டியன்.இரா, திருப்பாடல் திரட்டு,1994, செந்தமிழ்க் கலாநிலையம், பினாங்கு.

5. பாண்டியன்.இரா, அருள் மிகு வரதவிநாயகர் பிள்ளைத்தமிழ், 1998, செந்தமிழ்க் கலாநிலையம், பினாங்கு.

6.. கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள், பிற தகவல்கள் கிடக்கவில்லை.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

* கட்டுரையாளர் - - சே.முனியசாமி, தமிழ் உதவிப் பேராசிரியர், ஜெ.பீ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆய்க்குடி,தென்காசி -

Last Updated on Wednesday, 04 October 2017 17:01