ஆய்வு: அச்சமெனும் மெய்ப்பாட்டில் உரையாசிரியா்களின் அகநானூற்றுத் திறன்!

Wednesday, 01 November 2017 07:33 - பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலைமற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் - ஆய்வு
Print

1. முன்னுரை

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலைமற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் -நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியா். (தொல்.மெய்.நூ3) அவற்றுள் அச்சமெனும் மெய்ப்பாட்டிற்கான தோற்றுவாய்களாக அணங்கு, விலங்கு, கள்வா், தம்இறை என்பவற்றை விரித்துரைத்துள்ளார். இக்கட்டுரை தொல்காப்பியா் விரித்துரைக்கும் அச்சத்திற்குரிய மெய்ப்பாடுகளுக்கு உரையெழுதிய உரையாசிரியா்களின் உரைகளில் அகநானூற்றுப் பாடல்கள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன என்பதனை ஆராய்கின்றது.

1.1 அச்சம் தோன்றும் களன்கள்


அச்சமெனும் மெய்ப்பாடு தோன்றம் களத்தை தொல்காப்பியா்,

”அனங்கே விலங்கே கள்வா்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (தொ.மெ.நூ.8)

எனும் நூற்பாவினில் கூறியுள்ளார்.

1.2 உரையாசிரியா்களின் பார்வையில் மருட்கை

அச்சம் அஞ்சத் தருவனவற்றாற் பிறப்பது. (இளம்.மெய்.நூ-3) என இளம்பூரணரும்; அச்சமென்பது பயம் (பேரா.மெய்.நூ-3) என பேராசிரியரும்; அச்சமாவது பருவரலிடும்பை நேருங்கொல் என எண்ணி உள்ளம் மெலிதலாகும். பயம் என்பது உலகவழக்கு (ச.பாலசுந்தரம், மெய், நூ-3) என பாலசுந்தரனாரும் உரை கொண்டுள்ளனா். இதன்வழி, அச்சமென்பது அஞ்சத்தகுவன கண்டு அஞ்சுதலும் அஞ்சதகுவன ஏற்படுமோ என எண்ணியவழி அஞ்சுவதலுமாகும். இதனை பயமென்றும் கூறுவா் என்பது அறியப்படுகிறது.

1.2.1. அணங்கு
அணங்கென்பன பேயும், பூதமும், பாம்பும் ஈறாகிய பதினெண்கணனும் நிரயபாலரும் பிறரும் அணங்கு தற்றொழிலராகிய சவந்தின் பெண்டிர் முதலாயிணாரும் உருமிசைத் தொடக்கத்தனவுமெனப்படும் (பேரா.மெய்.நூ-8) என பேராசிரியரும்; கட்புலனாகாமல் தம் ஆற்றலாறீண்டி வருத்தும் சூர் முதலாய தெய்வங்களும் அணங்குதற்றொழிலுடைய பிறவுமாம் (ச.பாலசுந்தரம், மெய். நூ-8) என ச.பாலசுந்தரனாரும் உரை கொள்வா். இதன்வழி அணங்கென்பது பேய், பூதம், பாம்பு, வருத்தத்தை ஏற்படுத்தும் தெய்வம் முதலாயினவும் பிறவுமாம் என்பது அறியப்படுகிறது. இளம்பூரணர் உரை கூறவில்லை. இதனை விளக்க ச.பாலசுந்தரனார்,

”வாழி வேண்டன் னைநம் படப்பைச்
சூருடைச் சிலம்பிற் சுடா்ப்பூ வேய்ந்து
தாம்வேண் டுருவின் அணங்குமார் வருமே
நனவின் வாயே போலக்
களவாண்டு மருட்டலும் உண்டே” (அகம்.158)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளார். இப்பாடலில், தாயே! வாழ்க. இடி முழங்க மழை பெய்து நின்ற நடுச்சாமத்தில் மின்னல் போன்று காதணிகள் ஒளிவீச சடை நெகிழ, விரிந்து கூந்தலோடு ஒருபெண் மலையிலிருந்து இறங்கும் மயில் போலத் தளா்ந்து நடந்து, பரணில் இருந்து இறங்கி வரக்கண்டேன். அவள் இவளே! என்ற கூறி நீ தலைவியை வீணாகத் துன்புறுத்தாதே. நமது தோட்டத்தின் அருகில் உள்ள மலையில் தெய்வங்கள் வந்து செல்லும். அவற்றுள் ஒரு தெய்வம் மலா் சூடிப்பெண் தெய்வத்துடன் வரும் உறங்குவோர் பெண்ணைக் கனவில் கண்டு உண்மை என்று கருதுவதும் உண்டு என்றவழி அணங்கெனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளதை அறியலாம்.

1.2.1 விலங்கு
விலங்கென்பன அரிமா முதலாகிய அஞ்சுத்தக்கன என பேராசிரியரும்; அரிமாவும் கோன்மாவும் பிறவுமாகிய கொடு விலங்குகளாம், “பினங்கல் சாலா“ என்றதனால் ஆண்டலைப் புள், அரசு முதலியனவும் கொள்க என ச.பாலசுந்தரனாரும் உரை கொள்வா். இதன்வழி விலங்கென்பன மனிதனுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் அரிமா முதலியன என்பது அறியப்படுகிறது. இதனை விளக்க ச.பாலசுந்தரனார்,

“இரும்பிடிக் கன்றொடு விரைஇய கயவாய்
பெருங்கை யானைக் கோள்பிழைத் திரீஇய
அடுபுலி வழங்கும் ஆரிருள் நடுநாள்
தமியை வருதல தனினு மஞ்சுதும்“ (அகம.118)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளார். இப்பாடலில், இரவில் யானைகளைக் கொள்ளும் புலிகள் திரியும், அச்சம் மிகுந்த காட்டுவழியில் நீ வந்தால் எங்களுக்கு அது கவலையும், அச்சத்தையும் தரும் என்றவழி விலங்கு குறித்த அச்சம் வெளிப்பட்டுள்ளமையை அறியலாம். மேலும் இதனை விளக்க ச.பாலசுந்தனார், பெரும்பாண்-134 ஐயும் எடுத்துக்காட்டியுள்ளார். பேராசிரியா், அணங்கு, விலங்கு எனும் இரு மெய்ப்பாடுகளையும் விளக்க பெரும்பாண்-134-136ஐ எடுத்துக்காட்டியுள்ளார் இளம்பூரணர் உரை இல்லை.

1.2.2 கள்வா்
கள்வரென்பார் தீத்தொழில் புரிவாh; என பேராசிரியரும், ஆறலைக் கள்வரும் அறமில் நெஞ்சத்துக் குறுஞ்செயல் புரியும் கொடியோருமாவார் என ச.பாலசுந்தரனாரும் கூறுவா். இதன்வழி கள்வரென்பார் ஆறலைத்தல் முதலாய தீத்தொழில் புரிவா; என்பது அறியப்படுகிறது. இம்மெய்ப்பாட்டினை விளக்க பேராசிரியா் கலி.87.ஆம் பாடலையும், ச.பாலசுந்தரனார் கலி-4ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனா்.

1.2.3 இறை
இறையெனப்படுவார் தந்தையரும் ஆசிரியரும் அரசரும் முதலாயினார் என பேராசிரியரும்; தம்மிறை என்பது இரண்டுற மொழிதலாய் (தம் இறை) அரசனையும், வழிபடு தெய்வத்தையும்; (தம்மிறை) தாம் புரிந்த தீவினைக் குற்றத்தையும் குறித்து நின்றது. எனவே இவ்விருவகை பற்றியும் அச்சம் பிறக்குமென்பதாயிற்று என ச.பாலசுந்தரனாரும் உரை கொள்வா். பேராசிரியா் தம் இறை என பொருள் கொண்டுள்ளார். ஆனால் ச.பாலசுந்தரனார் இதனை தம்மிறை என்றதோறு பொருளை இவா் உரையில் கையாண்டு இங்கு இதற்கு மற்றொரு பொருளுமுண்டு என்பதனை தெளிவுபடுத்தி உள்ளார். இதன்வழி இறை-தம்மிறை, தம்இறை என இருவகையும் கொள்வதே சாலச்சிறந்தது. ஏனெனில் தன்னுடைய அரசன் முதலாயினவரை கண்டும் அச்சம் தோன்றும்; தன் தீவினையின் பயனாய் தனக்கு தீங்கு நேருமே என எண்ணுழியும் அச்சம் தோன்றும். இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணர் குறிஞ்சிப் 165-6 ஐயும் பேராசிரியா்,

“எருத்துமே னேக்குறின் வாழலே மென்னுங்
கருத்திற்கை கூப்பிப் பழகி - யெருத்திறைஞ்சிக்
கால்வண்ண மல்லாற் கடுமான்றோ்க் கோதையை
மேல்வண்ணங் கண்டறியா வேந்து“ (இ.வி.ப.124)

எனும் இலக்கண விளக்க பாடலை எடுத்தாண்டுள்ளார். இதில், கருத்தையெடுத்து மேல்நோக்கின் வாழமாட்டேமென்னுங் கருத்தினாலே கைகூப்பி வணங்கிப் பழகிக் கழுத்தை வளைத்துக் (தலையிறைஞ்சிக்) கடுமான்றோ்க் கோதையின் கால் வண்ணமேயன்றி மேல் வண்ணம் கண்டறியமாட்டா அரசுகள். (கோதை - சேரன்) எனும் வழி அரசனால் அச்சம் ஏற்பட்டத்தனை அறிய முடிகிறது. மேலும், இதனை விளக்க ச.பாலசுந்தரனார் குறு.87 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளார்.

1.3 முடிவுரை
அச்சமெனும் மெய்ப்பாட்டினை விளக்க, இளம்பூரணர் குறிஞ்சிப்பாடலடியையும்; பேராசிரியா் பெரும்பாணாற்றுப்படை பாடலடியையும், கலித்தொகை பாடல் ஒன்றும், இலக்கணவிளக்கப் பாடலொன்றும் என மூன்று பாடல்களையும்; ச.பாலசுந்தரனார், அகநானூற்றில் இரண்டு பாடல்கள், பெரும்பாணாற்று பாடலடி ஒன்று, கலித்தொகை பாடல் ஒன்று, குறுந்தொகை பாடல் ஒன்று என ஐந்து பாடல்களையும் எடுத்துக்காட்டுகளாக எடுத்தாண்டுள்ளனா்.

உரையாசிரியா;கள் (இளம்பூரணர், பேராசிரியா், ச.பாலசுந்தரனார்) அகநானூற்றில் இருபாடல்களையும், (158-118), குறுந்தொகையில் (87) ஒரு பாடலையும், கலித்தொகையில் (87, 4) இருபாடலையும், இலக்கண விளக்க பாடல் (124) ஒன்றும், பெரும்பாண் (134-136) எனும் அடிகளையும், குறிஞ்சிப்பாட்டு (165-6) எனும் அடிகளையும் எடுத்தாண்டுள்ளனா். இவற்றுள் அகநானூறும் கலித்தொகையும் ஏனைய சங்க இலக்கியப் பாடல்களைக் காட்டிலும் அதிகமாக எடுத்தாளப்பட்டுள்ளது என்பதனை அறிய முடிகின்றது.

துணைநின்ற நூல்கள்
1. இளம்பூரணர்(உரை), தொல்காப்பியம் பொருளதிகாரம், கழகம்,1970.
2. பேராசிரியருரை (பின் நான்கு இயல்கட்கு) சி. கணேசையர் உரை விளக்கக் குறிப்புக்களுடன் சுன்னாகம் பதிப்பு, 1943.
3. ச. பாலசுந்தரம் இயற்றிய காண்டி கையுரை : தாமரை வெளியீட்டகம், தஞ்சை 1989 (முதல் இரண்டு இயல்கள், அடுத்த ஐந்து இயல்கள்), 1991.
4. ச.வே.சுப்பிரமணியன், அகநானூறு, மெய்யப்பன் பதிப்பகம்,2009.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

* கட்டுரையாளர் - - பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலைமற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் -

Last Updated on Wednesday, 01 November 2017 07:38