திருவள்ளுவரின் பிறப்பிடம் - ஓர் ஆய்வு

Thursday, 22 February 2018 08:10 - பேரா.கு.வசந்தம், உதவிப் பேராசிரியர், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருநின்றவூர். - ஆய்வு
Print

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை:
தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களை நூலில் எந்த ஓரிடத்திலும் குறிப்பிடாமல் உலக மனித குலம் கொண்டும் கொடுத்தும் ஒற்றுமையாய் மனித நேயத்தோடு இணைந்து ஒரே குலமாக ஒருலகமாக வாழ ‘திருக்குறள்’ என்னும் உலகப் பொதுமறை அருளிய திருவள்ளுவர் தோன்றிய நாடு நமது செந்தமிழ் நாடு இதனையே

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு”

என்று வியந்து பாராட்டுகிறார் பாரதியார்.

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு
திருவள்ளுவரின் பிறப்பு பற்றியும், பெயர் பற்றியும், பிறந்து வாழ்ந்து மறைந்த இடம் பற்றியும் பல கட்டுக்கதைகள் உண்டு. திருவள்ளுவரின் தாய் தந்தையர் ‘ஆதிபகவன்’ என்பவர். சிலர் அதாவது ‘ஆதி’ என்ற பறையர் குலப்பெண்மணிக்கும் ‘பகவன்’ என்பவர்க்கும் பிறந்தார் என்பதாம் மற்றும் எதற்கெடுத்தாலும் எதிலும் சமஸ்கிருத பார்வையால் தேடிக் கொண்டிருப்போர்களின் ஆசைப்படி, சமஸ்கிருத வார்த்தையின் ‘வல்லப’ என்ற வடமொழி பெயரே தமிழில் வள்ளுவராக மாறியது என்று கனவு கண்டு சொல்வாரும் உளர்.

வள்ளுவர் நெசவாளர் தொழில் புரிந்தவர் என்ற வழக்கம் உள்ளது. அந்த மாதிரி திருக்குறள் ஆசிரியர் பெயரிலும,; சமயத்திலும், பிறப்பிலும் கூட பலதரப்பட்ட கற்பனையால் பின்னப்பட்ட செய்திகள் உலவினாலும் இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. வள்ளுவரின் மனைவி வாசுகி எனும் கற்புக்கரசியர் ஆவார். ‘இறும்பூது’ செயல் கற்பினாலும் நிகழலாம். இறைவன் அருளிய ஈவினாலும் நிகலாம். திருவள்ளுவருக்கு வாசுகி அருமையான வாழ்க்கைத் துணைவியாக இருந்திருக்க வேண்டும். வாசுகி அம்மையார் மறைவில்,

“அடிசிற்கு இனியாளே அன்புடையாளே
படிசொற் கடவாத பாவாய் அடிவருடிப்
பின் தூங்கி முன்எழும் பேதையே போதியோ
என் தூங்கும் என் கண் இரா”        (வ.வா.கு)

எனும் வள்ளுவரின் இரங்கற்பா உள்ளத்தை உருக்குவதாகும். மக்கள் எவரும் இருந்தாகத் தெரியவில்லை. திருவள்ளுவர் என்று குறிப்பிடப்படுபவர் யானை மீது அமர்ந்து நகரம் முழுவதும் விரைவி வந்து அரசக்கட்டளைகளை பறையறைந்து தெரிவிக்கும் பணியினை மேற்கொண்டார் என ‘மணிமேகலை’ சொல்கிறது.

இலக்கியம் சார்ந்தவை:
வடமதுரையை மையமாகக் கொண்டு சுழன்றவர் கடவுள் கிருஷ்ணர். அதுபோலத் தெய்வப்புலவர் ‘புனற்கூடலை’ மையமாகக் கொண்டு சுழன்றவர் என திருவள்ளுவமாலை 21-ம் பாடல் கூறுகிறது

(புனற்கூடல்: முக்கடலும் சங்கமாகிப் பரிணமிக்கும் கன்னியாகுமரியாகும்)

தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் கருவாய் அமைந்திருப்பது நாஞ்சில் நாடு அதனை நாஞ்சில் பொருநன் திறம்பட ஆண்டு வந்தான். புறநானூற்றுப் பாடல்கள் பற்றிய விளக்க உரையாசிரியர்கள் ‘பொருநனை’ நாஞ்சில் வள்ளுவன் என சுட்டியுள்ளனர். (புறம் 137 பாடல் முதல் 140 மற்றும் 380) நாஞ்சில் வள்ளுவனும் திருவள்ளுவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் எனவும் குறிப்பிடும் வகையில் நாஞ்சில் நாட்டருகில் உள்ள வள்ளுவநாட்டை வள்ளுவர் ஆட்சி செய்தார் எனத்துணியலாம்.

கல்வெட்டுக் குறிப்புகள்:
9ஆம் நூற்றாண்டு யுனு திருவாங்கூர் தொல்பொருள் வரிசை 1101 5ன் படி குறிப்பு: “வரகுண பாண்டியர்க்கு குடியாக சுட்டிக்கொடுத்த பூமி வள்ளுவ நாட்டு மேற்கோடு” (மேற்கோடு என்னும் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ளது) மற்றும் 18ம் நூற்றாண்டில் சோழமன்னன் ராஜராஜசோழன் காலத்து திருநந்திக்கரை மலைக்குகை குறிப்பின்படி வள்ளுவநாட்டின் ‘முட்டம்’ கிராமம் பரிசாக வழங்கப்பட்டதற்கான செய்தி (வ.வா.கு)

“வள்ளுவநாட்டு முட்டம்
என்னும் பேர்தவிர்த்து மும்முடி போக்கிச்
சோழ நல்லூர் என்று……….போக்கி”  (தி.வா)

திருவாங்கூர் தொல்பொருள் ஆய்வு வரிசை (1101ல்) காணப்படுவதாகும். மேலும் ஒரு கல்வெட்டுக் குறிப்பு.

“12ம் நூற்றாண்டின் யுனு கருப்புக் கோட்டம் காசிநாதர் ஆலயத்தில் “வள்ளுவநாட்டு ஆள்வான்” என்ற சொற்றொடர் குறிப்பு உள்ளது. வள்ளுவ நாட்டின் முட்டம் கிராமத்தில் அருகே சிற்றூராகிய திருநாயனார் குறிச்சி உள்ளது. இதன் அருகில் உள்ள ‘வள்ளுவமாலை’ ‘வெள்ளி மலையாகவும்’, ‘வள்ளுவன்கோடு’ ‘விளவன் கோடு’ எனவும் திரிந்தது ஆக கன்னியாகுமாரி மாவட்டத்தில் வள்ளுவர் வள்ளுவநாடு, வள்ளுவநாட்டு ஆள்வான் என்ற அழுத்தமான பெயர்க்குறிப்புகள் கன்னியாகுமரி தழுவியதாகவே உள்ளது. (வ.வா.கு)

சமுதாயப் பழக்க வழக்கம்
“பொருட் பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையுள்

ஏதில் பிணந்தழீஇ யற்று”     (குறள்-913)

இதன் பொருள் கொடுப்பவரை விரும்பாமல் கொடுக்கும் பொருளையே விரும்பும் விலை மகளிரின் பொய்யான தழுவல் கூலிக்கு அமர்த்தப்பட்டவன் இருட்டறையில் யாதொரு தொடர்பும் இல்லாத கன்னிப் பெண்ணின் பிணத்தை பொருளாசைத் தழுவினாற் போன்றதாகும். இந்தப் பழக்கம் நாஞ்சில் நாட்டுக்கு அருகிலுள்ள மலைநாடு அல்லது சேரநாடு நம்பூதிரிகளிடையே நிலவி வந்திருக்கின்றது. இந்த விகாரமான வழக்கம் வள்ளுவருக்கு நன்கு தெரிந்திருந்த வகையில்தான் ‘ஏதில் பிணந்தழீஇ யற்று’ என குறிப்பிட்டுள்ளார். வள்ளுவர் கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சார்ந்தவர் என்பதற்கான ஒரு அழுத்தமான சாட்சியாகும்.

“தமிழ்ஞாயிறு தேவநேயப் பாவாணர் (சார்புவழி) மொழியிலிருந்து அறிவது ‘வள்ளுவன் என்பான் அரசருக்கு உள்படு கருமத்தலைவன்’ ‘பொருநர் என்பர் பெரும் போர்த்தலைவர்’ என்னும் பிங்கல நிகண்டு கூறுகிறது. பாண்டிய நாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைப்பட்ட நாட்டை ஆண்டதினால் ஒருகாற் பாண்டியனுக்கும் மற்றொருகாற் சேரனுக்கும் படைத்தலைவனாக இருந்தாகத் தெரிகிறது.’’  (வ.உ)

இயற்பெயர் ‘வள்ளுவன்’ ‘வள்ளுவர்’ என்பது உயர்வு பான்மை கருதியது.  சிறப்பு அடையாளமாக திரு சேர்க்கப்பட்டது. ‘வள்’ என்னும் அடிசொற்குள்ள பல பொருள்களுள் வள்ளுவர் எனும் சொற்கு கூர்மதியன், வல்லவன், வள்ளியோன் எனப் முப்பொருளாக சொல்லப்படுகிறது. “திருவள்ளுவர் வாழ்ந்த இடம் முன்பு மதுரையிலும் (குமரியிலும்) பின்பு மலையிலும் வாழ்ந்ததாகத் தெரிகிறது. அக்காலம் வாழ்ந்திராவிடில் ‘ஊருணி’இ ‘பைய’இ ‘வாழ்க்கைத்துணை’ என்னும் சொற்களை ஆண்டிருக்கவும் அண்மையுள்ள சேரநாடு சென்று அக்கால நம்பூதிரிப்பிராமணக் கன்னியரின் சவச்சடங்கையறிந்து சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அதில் ‘பிணந்தழிஇ யற்று’ என்ற உவமையும் அமைந்திருக்க முடியும் மறுவில் ‘செந்நாப் போதார்’ ‘புனற்கூடல் அச்சு’ என்பதும் ஒருவகையில் திருவள்ளுவரின் குமரி வாழ்க்கையை உணர்த்தும்.”  (தி.தி)

மேற்கண்டவாறு அருங்கக்கூறின் திருவள்ளுவர் அறத்தோராண வாயிலான கன்னியாகுமாரி மாவட்டத்தில் முன்னதான வள்ளுவநாட்டில் ‘முட்டம்’ அருகே திருநாயனார் குறிச்சியில் திருவள்ளுவ நாயனாராகத் தோன்றி வாழ்ந்து அரசு வழி தோன்றலாகிய பின்னர் நான்முகத்தோன் தான் மறைந்து வள்ளுவனாய் வந்துரைந்த தெய்வப்புலவராவார்.

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் நூல் திருநெல்வேலி மாவட்டத்தில் ‘பெருங்குளம்’ எனும் இடத்தில் பாண்டிய மன்னன் உக்கிரப்பெருவழுதி அவையிலே பெரும்புலமை வாய்ந்த நாற்பத்தொன்பது பேரறிஞர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது. என உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் குறிப்பிலிருந்து அறியலாம். அதன் பிறகு சில காலம் மதுரையில் தங்கி அதன் பின்னர் சென்னையிலுள்ள மயிலையில் வசித்து மறைந்ததாகத் தெரியவருகிறது. இப்படியாகத் திருவள்ளுவர் வரலாறு தமிழ்நாட்டின் முறையே தென்கோடியையும், வடகோடியையும் அவரது பிறப்பிடமாகவும், இறப்பிடமாகவும் தொடர்புறுத்தி இணைக்கிறது.

முடிவு:
திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு பற்றி முழுமையான தகவல் கிடைக்காத சூழலில், திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு சம்பந்தமாக சரியான நிலைக்கண்டறிய 1929 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 11ந் தேதி 530க்கு மேற்பட்ட தமிழறிஞர்கள், தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தலைமையில் பச்சையப்பன் கல்லூரியில் கூடினார்கள் அவர்கள் ஆய்ந்த ஆய்வின் முடிவில்,     “திருவள்ளுவர் ஒரு சிறந்த தமிழ் மகன் நல்ல வேளாண்குடி மரபினர். அவர் பிறந்தது, வாழ்ந்தது அனைத்தும் மதுரை, ‘அவர் பாண்டிய மன்னனுக்கு: அரசனது உள்படு கருமத்தலைவனாக இருந்தவர். இந்த தொழில் காரணமாகவே வள்ளுவர் என்ற பட்டத்தை பாண்டிய மன்னரால் பெற்றவர். நல்ல வேளாண்குடி மகளை மனைவியாகப் பெற்றவள் உலகத்தை நோக்கி ஒரு திருக்குறள் நூலை நன்றாகச் செய்து கொடுத்தவர் என்று முடிவு செய்தனர்” (வ.உ) என்ற குறிப்பு தஞ்சாவூர் திருக்குறள் பேரவைச் செயலர் குறளடிகளார் பழநிமாணிக்கம் அவர்களால் வெளியிடப்பட்டது. இது வரவேற்கத்தக்க செய்தியாகும்.

சுருக்க விளக்கம்
வ.வா.கு        -    வள்ளுவரும் வாழும் குறளும்
தி.வா            -    திருக்குறள் வாழ்வியல்
வ.உ            -    வள்ளுவர் உள்ளம்
தி.தி            -     திருவள்ளுவர் திருவுருவப்பட வரலாறு
பக்            -    பக்கம்

குறிப்புதவி நூல்கள்
1.    வள்ளுவரும் வாழும் குறளும்  -  தமிழருவி மு.பெ. இராமலிங்கம்
2.    திருக்குறள் வாழ்வியல்      -    திருக்குறள் க. கலியபெருமாள்
3.    வள்ளுவர் உள்ளம்          -  சாமி பழனியப்பன்
4.    திருவள்ளுவர் திருவுருவப்
பட வரலாறு              -    மா. இராமத்தமிழ்ச் செல்வன்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

* கட்டுரையாளர் : - பேரா.கு.வசந்தம், உதவிப் பேராசிரியர், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருநின்றவூர். -

Last Updated on Thursday, 22 February 2018 08:16