முனைவர் ஆ. சந்திரன் , உதவிப்பேராசிரியர், தமிழ் முதுகலை & ஆய்வுத்துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), வேலூர் -நெறிபடுத்துதல் அல்லது வழிபடுத்துதல் என்பதை நோக்கமாகக் கொண்டது ஆற்றுப்படை. வறுமையிலிருந்து மீண்டு வளம்பெற்ற ஒர் இரவலன் வறுமையுடன் இருக்கும் மற்றோர் இரவலனை தான் வளம்பெற்று வாழக்காரணமான வள்ளல் அல்லது மன்னனிடம் சென்று பெருஞ்செல்வம் பெற்று வளமுடன் வாழுமாறு நெறிபடுத்துவதாய் இது அமையும்.

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇச்
சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்”
(தொ.பொ.91:3-6)

எனத் தொல்காப்பியர் கூத்தர், பாணர், பொருநர், விறலி ஆகிய நால்வா் மட்டுமே ஆற்றுப்படுத்த உரியவா்கள் என்று கூறுகிறது. அப்படி இருக்க அடியவரை இறையருள் வேண்டி ஆண்டவனிடத்தே (முருகன்) ஆற்றுப்படுத்தும் திருமுருகாற்றுப்படை  ஆற்றுப்படை என்ற பெயருடன் பத்துப்பாட்டு தொகுப்பில் எப்படி இடம்பெற்றது. இப்பாடல்  கடவுள் வாழ்த்துப் பாடலாக அத்தொகுப்பில் இடம்பெற்ற பாடலா? அல்லது பாடலில் இடம்பெற்ற சில கூறுகள் சிறுபாணாற்றுப்படையை ஒத்திருப்பதால் அப்பாடலின் சாயலில் பாடப்பட்ட பாடலா என்பன போன்ற வினாக்களுக்கான விளக்கங்களைத் தேட முயல்கின்றது இக்கட்டுரை.

திருமுருகாற்றுப்படையும் ஆற்றுப்படை இலக்கணமும்
திருமுருகாற்றுப்படையைத் தொல்காப்பியர் கூறியுள்ள ஆற்றுப்படை இலக்கணத்திற்கு ஏற்புடைய பாடலாகக் கொள்ள முடியுமா? என்ற வினா? நெடுங்கலாமாகவே இருந்து வருகின்றது. பத்துப்பாட்டிற்கு உரையெழுதிய நச்சினா்க்கினியா், கூத்தரும் பாணரும்… என்ற தொல்காப்பிய நூற்பாவில் இடம்பெற்றுள்ள “பக்கமென்றதனானே அச்செய்யுட்களைக் கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை, முருகாற்றுப்படையென வழங்குதலும் ஆற்றினருமையும் அவனூர்ப் பண்பு முதலியனவுங் கொள்க”1 எனப் பொருள் விரித்து முருகாற்றுப்படையும் அவ்விலக்கணத்திற்குப் பொருந்தும் என்று விளக்கம் அளித்துள்ளார். அத்துடன், “முருகாற்றுப்படை என்பதற்கு வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை, வீடு பெற்றான் ஒருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்ததென்று பொருள் கூறுக”2 எனவும் விளக்கம் அளித்துள்ளார். இவரைப் போன்றே “கவிப்பெருமாள் (பரிபெருமாள்), பெயர் புலப்படாத உரையாசிரியர், பரிமேலழகர், பரிதியார்”3 ஆகியோரும் பொருள் கொண்டுள்ளனர். உரையாசிரியர்களின் இந்த விளக்கங்கள் தொல்காப்பியத்தில் ஆற்றுப்படைக்குக் கூறப்படும் விளக்கங்கள் திருமுருகாற்றுப்படைக்குப் பொருந்தும் என்பதாகவே உள்ளன.ஆனால், தற்காலத்தில் மாறுபட்ட விளக்கங்களை அறிஞர் கூறுகின்றனர். “திருமுருகாற்றுப்படை தொல்காப்பியம் கூறாத ஒன்றாகும்”4 என்கிறார் டாக்டா்.மா.இராசமாணிக்கனார். “அன்பரை ஆண்டவனிடத்தே ஆற்றுப்படுத்துதல் தொல்காப்பிய இலக்கணத்திற்கு வேறானது”5 என்கிறார் டாக்டா்.மு.கோவிந்தசாமி.

“....சென்று பயனெதிர ஆற்றுப்படுத்தற்குரியா் கூத்தா் முதலிய நாற்பாலரேயன்றி வேறு யாருமிலா் என்று தொல்காப்பியா் வரையறுத்து ஓதாமையானும், பெற்ற பெருவளம் பெற்றார்க்கு அறிவுறுத்தலே அந்நூற்பா பகுதியிற் சிறப்புடைத்தாகலானும், பேரின்ப வீட்டினும் சிறந்த பெருவளம் பிறிதின்மையானும், புதிது புனையப்பட்ட இத்திருமுருகாற்றுப்படை முன்னை நூல் வழக்கொடு மேற்கூறியாங்கு சற்றே வேறுபாடுடையதாயினும் மற்று மாறுபாடுடைய தன்று”6 என்கிறார் புலவா் இலக்குவனார். இவரது கருத்திற்கு ஏற்பவே க.வௌ்ளைவாரணரும், “திருமுருகாற்றுப்படை, தொல்காப்பியனார் கூறிய ஆற்றுப்படை இலக்கணத்தின்படி அமைந்ததே என்கிறார்”7.

மேற்கண்ட விளக்கங்களை நோக்க திருமுருகாற்றுப்படைக்கு ஏற்ற வரையறையைத் தொல்காப்பியா் கூறவில்லை என்பதும், ஆனால் அதேநேரம் அது இத்திருமுருகாற்றுப்படை தொல்காப்பியா் கூறும் ஆற்றுப்படை இலக்கணத்தின்படி அமைந்துள்ளது என்பதும் புலனாகிறது.

 

திருமுருகாற்றுப்படையும் சங்கப்பாடல்ளும்
எட்டுத்தொகையில் உள்ள பதிற்றுப்பத்து மற்றும் புறநானூற்றில் பாணாற்றுப்படை, விறலியாற்றுப்படை மற்றும் புலவராற்றுப்படையில் அமைந்த பாடல்களும், பத்துப்பாட்டில் கூத்தராற்றுப்படை பாணாற்றுப்டை என்ற பெயர்களில் தனித்தனிப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிங்களில் அடியவரை இறைவன் பால் அவன் அருள் வேண்டி ஆற்றுப்படுத்தும் திருமுருகாற்றுப்படை போன்ற பாடல் எதுவும் இல்லை.

அத்துடன், இருக்கும் ஆற்றுப்படைப் பாடல்கள் பரிசில் பெறுபவன் பொன், பொருள் உள்ளிட்ட பொருட்களை வள்ளலிடம் பாடிப் பரிசிலாகப் பெறுவதைப் பற்றியதாகவே உள்ளன. அவற்றின் அடிப்படை நோக்கங்கள் உலக இன்பங்களைப் பற்றியவை.

“இவ்வாறான லௌகிக நோக்கங்களின் பொருட்டே ஆற்றுப்படைகள் தோன்றியிருத்தல் வேண்டும். வேறு நோக்கங்கள் தொடக்கத்தில் இல்லை.”8 ஆனால் காலப்போக்கில் புதிய ஆக்கம் பற்றிய சிந்தனை உருவாகியிருக்கும். அதன் தொடக்கமாகப் பத்துப்பாட்டிலுள்ள (திருமுருகாற்றுப்படை நீங்கலான) பாடல்களில் ஏற்பட்ட மாற்றங்களைக் கூறலாம்.

பத்துப்பாட்டின் பொது வடிவம்
புறநானூறு அல்லது அகநானூற்றுப் பாடல்கள் போல் இல்லாமல், அகப்பாடல்கள், ஆற்றுப்படைப் பாடல்கள் புறப்பாடல் என்ற பாகுபாடுடைய பாடல்களைக் கொண்ட பத்துப்பாட்டில் உள்ள பாடல்களில் சில பொதுவான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவை எட்டுத் தொகைப் பாடல்களில் இல்லாதவை. இந்த மாற்றங்கள் எப்படி நிகழ்ந்துள்ளன என்பதை பட்டினப்பாலை மற்றும் பெரும்பாணாற்றுப்படைக்கு இடையிலான உறவை வைத்துப் புரிந்துகொள்ளலாம். அகமாக்கப்பட்ட புறம், ஆற்றுப்படை என்ற இரு வேறு பண்புகளைக் கொண்டுள்ள இவை பின்வரும் மூன்று ஒத்த செய்திகளையே உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன.  அவை,  “1. அரசனின் சிறப்புகள்,  2.நாட்டு வளம் மற்றும் மக்களின் செயல்பாடுகள், 3. உத்திமுறை”9 ஆகியனவாகும். இவற்றில் முதல் செய்தி எட்டுத்தொகைப் பாடல்களில் உள்ளதைப் போன்றே இருப்பதுடன் அளவில் சற்று நீண்டதாகவும் உள்ளது.  இரண்டாவது, மூன்றாவதாக அமைந்துள்ளவை திணை, துறை ஆகியவற்றினைத் தளர்த்தி (உடைத்து) ஒரு நீண்ட இலக்கியத்திற்கான வாயிலை ஏற்படுத்தியுள்ளன. பட்டினப்பாலையின் இப்பண்பு ”முற்றிலும் புறத்திணைக்குரிய ஒரு பாடாண் பாடல் கற்பனை சேர்ந்த ஓர் உத்தி முறைமையால் வேண்டுமென்றே அகத்திணை ஆக்கப்படுகின்றது”10 என்பதும்,  “அகப்பாடலின் முதல் கரு உரி மரபு அதாவது அகப்பாடலின் தன்னியல்பான உணர்வெழுச்சி (spontaneity) செயற்கையாக்கப் படுகின்றது”11 என்பதும் கவனிக்கத் தக்கன. அத்துடன், “சங்க இலக்கியங்களினுள்ளே கதைப்பாடல்கள் இல்லாத இன்றைய நிலையில் முல்லைப்பாட்டு, நெடுநல்வாடையில் குறிப்பாக நெடுநல்வாடையில் ஏற்படும் இந்நெகிழ்வு சங்கத் தமிழ் கவிதையியலிற் காணப்படும் வளர்ச்சியாகவே கொள்ளப்படவேண்டும். இந்த வளர்ச்சி நிலையிலிருந்து சிலப்பதிகாரத்திற்கான வளர்ச்சி அதிக தொலைவில் இல்லை. இந்த வளர்ச்சி வெறுமனே பாடல் அடிகளின் பெருக்கத்தினால் ஏற்படுவதன்று. இது கவிதையியலில் ஏற்படும் வளர்ச்சியாகும்”12

இந்த வளர்ச்சி முற்றிலும் மாறுபட்டதாகவும் இருக்க வாய்ப்பில்லை. ஒன்றின் தாக்கம் இன்னொன்றில் பிரதிபலிக்கும் அல்லவா? இலக்கியத்தின் தாக்கமும் அப்படித்தான். அடுத்தடுத்து தோன்றும் இலக்கியங்களில் தொடரும். ஏனெனில் படைப்பு படைப்பாளனின் உள்ளத்தில் இருந்து உருவாகிறது. சிறந்த படைப்பைப் படைப்பாளனின் படைப்புச் சூழலில் இருந்து உருவாகின்றது. இங்குச் சூழல் என்பது உள்ளதை உள்ளவாறு பிரதிபலிப்பது அல்லது உள்ளதைக் கொண்டு புதியலை உருவாக்குவது என்ற இரு நிலைகளில் அமையலாம். “தனக்கும் தான் படித்து ரசித்த கலைக்கும் உள்ள தொடர்பு, உறவு, இது ஒரு தளம். அது போல ‘தன்’ னுக்கும் சமூகம் என்கிற பொருள் வகை Non –I என்ற ஒன்றுக்கும் உள்ள உறவு ஒரு தளம். மொத்தமாய் வரும் முடிவு, இத்தளங்களின் ஒருமித்த இணைப்பே படைப்பு”13  அதாவது பழமையின் தொடர்ச்சியையும் புதுமையின் வரவேற்பையும் உள்ளடக்கங்களாய்க் கொண்டமையும்.

திருமுருகாற்றுப்படை மற்ற ஆற்றுப்படைப் பாடல்கள் போல ஆற்றுப்படுத்துதல் என்ற அமைப்பைப் பெற்றிருந்த போதிலும் இரவலனை வள்ளலிடம் ஆற்றுப்படுத்துவது என்ற “இச்சிறு பயன் பெறுதற்பொருட்டுத் தம்மையும் தமிழையும் இழிவு படுத்திக்கொள்ளுதல் பெருமக்கள் வெறுக்கத்தக்க தாகவே இருக்கும். இதனை நக்கீரர் உணர்ந்து ஆற்றுப்படையின் நோக்கத்தையே முழுதும் வேறு கொண்டு அவ்வகை நூல்களுக்குப் புதியதொரு கௌரவத்தைக் கொடுத்தனரென்றுதான் நாம் கொள்ளவேண்டும். இங்ஙனம் இயற்றிய புதுநூல் முருகாற்றுப்படையாகும்” 14

சிறுபாணாற்றுப்படையின் சாயலா திருமுருகாற்றுப்படை ?
என்னதான் மற்ற ஆற்றுப்படைப் பாடல்களில் இருந்து திருமுருகாற்றுப்படை விலகி இருப்பினும் அப்பாடல் மற்ற ஆற்றுப்படைப் பாடல்களின் குறிப்பாகச் சிறுபாணாற்றுப்படையின் சாயல் அதிகம் காணப்படுவதை அறியமுடிகிறது.  அதாவது, சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவனான நல்லியக்கோடனைப் புகழும் புலவா், அவன் அளிக்கும் பரிசிலானது வஞ்சி, மதுரை உறந்தை ஆகிய மூன்று தலைநகரங்களில் அரசாளும் மூவேந்தா்கள் அளிக்கும் பரிசிலைவிடச் சிறந்தது என்றும் அத்துடன், அவன் பேகன், பாரி, காரி, ஆய், அதியன், நள்ளி, ஓரி ஆகிய கடையெழு வள்ளல்களை விட கொடையில் சிறந்தவன் என்றும் கூறியுள்ளார் (சிறுபாண்.41-115). இவ்வாறு பிற மன்னா்களை ஒப்பிட்டு பிற ஆற்றுப்படைப் பாடல்களில் கூறப்படவில்லை. ஆனால் திருமுருகாற்றுப்படையில் திருமால், சிவன், இந்திரன் முதலிய முப்பத்து மூன்று தேவா்களும் தம்முடைய குறையினை நீக்குமாறு முருகனிடம் வேண்டி அவன் அருளைப் பெற்று முன்பு போல் வாழ்ந்தனா் (முருகு.148-176)” என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சிறுபாணாற்றுப்படையில் நல்லியக்கோடனைப் புகழ சேரநாட்டின் வளத்தையும் வஞ்சி மாநகரின் சிறப்புகளைப் பற்றி விரிவாகக் (சிறுபாண்.41-50) கூறி இறுதியில்,

“வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே -  அதாஅன்று” (சிறுபாண். 50)

என்றும், பாண்டிய நாட்டின் பல்வேறு வளங்களையும் மதுரை மாநகரின் சிறப்புகளையும் பற்றி விரிவாகக் (சிறுபாண்.50-67) கூறி,

“மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே - அதாஅன்று” (சிறுபாண்.67)

என்றும், செம்பியனின் காவிரி நீரால் வளங்கொழிக்கும் சோழ நாட்டின் வளத்தையும் உறந்தை மாநகரின் சிறப்புகளைப் பற்றி விரிவாகக் (சிறுபாண்.67-83) கூறி,

“ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே -  அதாஅன்று” (சிறுபாண்.83)

என்று பிற வள்ளல்கள் அளிக்கும் ஈகையை விட  அதிகமான ஈகையளிப்பவன் என்பதை உணர்த்த “அதாஅன்று” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு சொல்லாட்சி பிற ஆற்றுப்படைப் பாடல்களில் இல்லை. ஆனால் திருமுருகாற்றுப்படையில் முருகனின் இருப்பிடங்களை கூறுமுகமாக,

“அலைவாய்ச் சேரலும் நிலைஇய பண்பே - அதாஅன்று” (திருமுருகு.125) என்றும்,

“ஆவினன்குடி அசைதலும் உரியன் - அதாஅன்று” (திருமுருகு. 176) என்றும்,

“ஏரகத்து உறைதலும் உ்ரியன் - அதாஅன்று” (திருமுருகு.189) என்றும்,

“குன்றுதொரு ஆடலும் நின்றதன் பண்பே - அதாஅன்று” (திருமுருகு.217)

என்றும் முருகனின் இருப்பிடங்களைப் பற்றி கூறும் போது “அதாஅன்று” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சிறுபாணாற்றுப்படையின் மேற்கண்ட கூறுகளின் சாயல் திருமுருகாற்றுப்படையில் காணப்படுவதால் இப்பாடல் சிறுபாணாற்றுப்படை அடியொற்றி பாடப்பட்ட ஒன்றோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டின் கடவுள் வாழ்த்தா?
திருமுருகாற்றுப்படை சங்க இலக்கியப் பாடல்களுள் ஒன்றாகவே கருதப்பட்டுவருகிறது. எனினும் இப்பாடல் சங்க காலத்திற்குப் பிற்பட்ட ஒன்று என்பது தற்கால ஆய்வுகளின் முடிவாகும். அப்படியிருக்க இப்பாடல் சங்கப் பாடல்களுள் ஒன்றாக (பத்துப்பாட்டுள்) எவ்வாறு சோ்ந்தது என்று அறியமுடியவில்லை. அதற்குக் காரணம் பத்துப்பாட்டுப் பாடல்களின் தொகுப்பு எப்போது நிகழ்ந்தது? அப்பாடல்களைத் தொகுத்தவா் யார்? என்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமையே ஆகும்.
அத்துடன், பத்துப்பாட்டிலுள்ள திருமுருகாற்றுப்படையைத் தவிர பிற ஒன்பது பாடல்களும் எட்டுத் தொகைப் பாடல்களுடன் ஒப்பிட அவை அளவில் மட்டுமல்ல பொருள் நிலையிலும் மாற்றமடைந்துள்ளதை அறியமுடிகிறது. அதாவது அவை அகம்-புறம் என்ற இரண்டினையும் பிரிக்க இயலாத ஒரு நிலைக்குச் செல்கிறதே ஒழிய திருமுருகாற்றுப்படையைப் போல் பக்தி நிலைக்கு அவை செல்லவில்லை. அப்படியிருக்க இத்திருமுருகாற்றுப்படையை எப்படி இப்பாட்டுகளுள் ஒன்றாக நம் முன்னோர் சோ்த்தனா் என்பது புரியவில்லை. பத்துப்பாட்டினை ஆராய்ந்துள்ள பேராசிரியா் எஸ்.வையாபுரிபிள்ளை,15 க.கைலாசபதி,16 டாக்டா்.மு.கோவிந்தசாமி,17 ஆகியோர் திருமுருகாற்றுப்படையை எட்டுத்தொகையிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களைப் போல் தொகுத்தவா்களால் சோ்க்கப்பட்டிருக்கலாம் என்று கருத்துக் கூறியுள்ளனா். ஆனால், இக்கருத்து பொருந்தாது என்று மறுக்கும் மு.ராமசாமி, அதற்குப் பின்வரும் காரணத்தைக் கூறியுள்ளார். அவா் கூறியுள்ள காரணம், “நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை ஆகிய தொகை நூல்களில் கடவுள் வாழ்த்துப் பாடல்களை நீக்கியே பாடல்களின் எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படுகிறது. அவ்வாறு நோக்க ஒன்பது பாடல்களே உள்ள நூலிற்குப் பத்துப்பாட்டு என்னும் பெயா் எங்ஙனம் பொருந்தும்”18 என்பதேயாகும்.

அவா் கூறியுள்ள மேற்கண்ட காரணம் சாரியான ஒன்றா என்பது கேள்விக்குறி? காரணம், பாட்டு - பத்துப்பாட்டு என்ற சொற்களிடையே உள்ள கால இடைவெளியே ஆகும்.  அதாவது, பத்துப்பாட்டு பாடல்களைத் தொகுத்தோர் தொகுப்பித்தோர், தொகுக்கப்பட்ட காலம் பற்றிய செய்திகள் நமக்குக் கிடைக்காமல் போனாலும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரியா்களில் ஒருவரான பேராசிரியாரின் உரையில்தான் முதன் முதலில் பத்துப்பாட்டு பாடல்கள் பற்றி கூறப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. அத்துடன் அதில் ‘பத்துப்பாட்டு’ என்று கூறப்படாமல்  “பாட்டு”19 என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதைவிட இன்னொரு முக்கியமான செய்தி சங்கம் பற்றியும் அதில் இடம் பெற்றிருந்த நூல்கள் பற்றியும் கூறும் ‘களவியல்’ உரையில் பத்துப்பாட்டிலுள்ள பாடல்கள் பற்றி ஏதும் கூறப்படவில்லை. 

ஆனால், இளம்பூரணர் உரையிலும்,20 நன்னூல் மயிலைநாதா் விளக்க உரையிலும்21 ‘பத்துப்பாட்டு’ என்று இன்று அழைக்கப்படும் பெயர் முழுமையாக நமக்குக் கிடைக்கிறது. இவற்றையெல்லாம் நோக்க பத்துப்பாட்டிலுள்ள பாடல்களை முதலில் ‘பாட்டு’ என்றே பல ஆண்டுகள் அழைத்துள்ளமையும் அதன் பிறகே ‘பத்துப்பாட்டு’ என்று அழைக்கப்பட்டுள்ளமையும் நன்கு புலனாகிறது. ஆக திருமுருகாற்றுப்படை பிற நீண்ட பாட்டு என்றழைத்த பாடல்களின் கடவுள் வாழ்த்துப் பாடலாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகின்றது. ஏனெனில் எட்டுத்தொகைப் பாடல்களுக்கு ஒவ்வாரு கடவுள் வாழ்த்துப் பாடல் உள்ளது போல் இதையும் தொடக்கத்தில் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகின்றது.

எட்டுத்தொகையிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்கள்
எட்டுத்தொகையிலுள்ள பரிபாடல், பதிற்றுப்பத்து நீங்கலான பிற ஆறு பாடல்களிலும்  ஒவ்வொரு கடவுள் வாழ்த்துப் பாடல் உள்ளது. அதன் விவரம் வருமாறு.

எட்டுத்தொகையிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்கள்

மேற்கண்ட இப்பாடல்கள் அத்தொகுப்பிலுள்ள பாடல்களின் (அளவிலும் பா வகையிலும்) அமைப்பினைப் போன்றே அமைந்துள்ளன. இவ்வாறே திருமுருகாற்றுப்படையும் பத்துப்பாட்டிலுள்ள பாடல்களின் அமைப்பினை  (அளவிலும் பா வகையிலும்) ஒத்தே அமைந்துள்ளது.

இவற்றுடன் திருமுருகாற்றுப்படை பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இத்தொகுப்பில் நக்கீரர் பெயர் “நக்கீர தேவநாயனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கபில தேவனார், பரணதேவணார் என்ற பெயர்களைக் கொண்ட அடியவர்கள் இருவரின் பெயர்களும் இத்தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன”22. இவை சங்கப் புலவர்களான பரணர், மற்றும் கபிலரின் பெயர்களையொத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

முடிவுரை
ஆக, கிடைக்கின்ற தரவுகளைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்க்க பின்வரும் முடிவு நமக்கு கிடைக்கின்றது.

*திருமுருகாற்றப்படை பிற ஆற்றுப்படைப்பாடல்களின் சாயலில் குறிப்பாக சிறுபாணாற்றுப்படையின் சாயலில் பாடப்பட்டுள்ள பாடல் என்பதைத் தெளிவாக அறியமுடிகின்றது.

*பொருநராற்றுப்படை முதலிய ஒன்பது பாடல்களுக்குக் கடவுள் வாழ்த்துப்பாடலாக பாடப்பட்ட பாடலாக இருக்கலாம்.

*தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தாகக் கருதப்பட்ட இது பின்னர் அப்பாடல்களுள் ஒன்றாகப் பின்வந்தோரால் (தொகுத்தோரால் இருக்கலாம்) சோ்க்கப்பட்டிருக்கலாம்.

*இத்தகைய மாற்றம் பேராசிரியர் (தொல்காப்பிய உரையாசிரியர்) மயிலைநாதா் (நன்னூல் உரையாசிரியர்)  காலத்திற்கும் இடையே நடைபெற்றிருக்கலாம்.

சான்றெண் விளக்கங்கள்
1. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, 1955 (2 பதிப்பு), திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்  கழகம், லிமிடெட்,  திருநெல்வேலி, சென்னை, ப.259.

2. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், 1974 (பதிப்பு 7),  உ.வே.சா. நூல் நிலையம், திருவான்மியூர், சென்னை, ப.79.

3. துரையரங்கனார். டாக்டர் மொ. அ., 1960, அன்பு நெறியே தமிழர் நெறி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, ப. 63.

4. இராசமாணிக்கனார். மா., பத்துப்பாட்டு ஆராய்ச்சி, 1970, சென்னைப் பல்கலைக் கழகம், பக்.38-47.

5. கோவிந்தசாமி. டாக்டா்.மு., தமிழ் இலக்கிய வரலாறு – இலக்கியத் தோற்றம், 1969 (2 பதிப்பு), வாசுகி பதிப்பகம், அண்ணாமலை நகர்,  ப.61.

6. இலக்குவனார். புலவா்., ஆற்றுப்படையும் ஆறுபடைவீடும், 1979 (ஆகஸ்ட்), செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 53, பரல் 12, ப.579.

7. வௌ்ளைவாரணன். க., பன்னிரு திருமுறை வரலாறு, 1969, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ப.671.

8. வையாபுரிபிள்ளை. எஸ்., இலக்கிய தீபம், 1952 (முதற்பதிப்பு), பாரிநிலையம், 59. பிராட்வே, சென்னை, ப.16.

9. சந்திரன். முனைவர் ஆ., இலக்கிய வளர்ச்சியில் உருத்திரங்கண்ணனாரின் பங்களிப்பு, தமிழ் இலக்கியங்களில் பன்முக ஆளுமை (ஆய்வுக் கட்டுரைகள்), 2013, செம்மூதாய்ப் பதிப்பகம்,  17, தாகூர் தெரு, சிட்லாப் பாக்கம், சென்னை, ப.142-45.

10. கார்த்திகேசு சிவத்தம்பி, தொல்காப்பியமும் கவிதையியலும், 2007, குமரன் புத்தக இல்லம், வடபழனி, சென்னை, ப.18.

11. மேலது

12. மேலது, ப.20

13. தமிழவன், படைப்பும் படைப்பாளியும் (திறனாய்வுக் கட்டுரைகள்), 1989 (முதற்பதிப்பு), காவ்யா, 16,17இ கிராஸ், இந்திரா நகர், பெங்களுர், ப.17

14. வையாபுரிப்பிள்ளை, எஸ்., இலக்கிய தீபம், 1952 (முதற்பதிப்பு), பாரிநிலையம், 59. பிராட்வே, சென்னை, ப.16.

15. வையாபுரிபிள்ளை, பேராசிரியா் எஸ்., வையாபுரி நூற்களஞ்சியம் (முதல் தொகுதி), 1989, இலக்கியச் சிந்தனைகள், நூற்றாண்டு நினைவு வெளியீடு, பக்.142-183.

16. கைலாசபதி. க, தமிழ் வீரநிலைக் கவிதைகள், 2006, குமரன் புத்தக இல்லம், வடபழனி, சென்னை, ப.54.

17. கோவிந்தசாமி. டாக்டா்.மு., தமிழ் இலக்கிய வரலாறு – இலக்கியத் தோற்றம், 1969 (2 பதிப்பு), வாசுகி பதிப்பகம், அண்ணாமலை நகர், பக்.61,62.

18.  இராமசாமி. மு.பொரி.மு., நக்கீரா் ஓர் ஆய்வு, 1983, பாரி நிலையம், ப.87.

19. வெள்ளைவாரணன், தொல்காப்பியம் செய்யுளியல் ( உரைவளம்), மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1989, ப. 233.

20. மேலது ப.816

21.  நன்னூல் மூலமும் மயிலைநாதா் உரையும், 1995 (மூன்றாம் பதிப்பு),  உ.வே.சா.நூல் நிலையம், சென்னை, ப.212.

22. பன்னிரு திருமுறைகள் (தொகுதி 17), 2009, வர்த்தமான் பதிப்பகம், சென்னை, பக்.6,7.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.