ஆய்வு: “காயி” (காற்று) - நீலகிரி படகர் இன மக்களின் வழக்காற்றியல் பார்வை

Saturday, 07 December 2019 09:54 - முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுருபன்முகக்கலை அறிவியல்கல்லூரி,கோவை - ஆய்வு
Print

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -இயற்கைகோடு இயைந்து வாழ்கின்ற நீலகிரி படகர் இன மக்களின் வாழ்வியல் வழக்காறுகள் அவர்தம் இயற்கைப்புரிதல், வாழ்வியல் விழுமியங்கள், பண்பாடு மற்றும் கலாச்சாரப் பரிமாண நிலை போன்றவற்றிற்கான சிறந்த ஆவணங்களாகும். பஞ்சபூதங்களையும், மரம், கல், ஞாயிறு, நிலவு, பிறை போன்ற பல்வேறு இயற்கைக்கூறுகளையும் வழிபடுகின்ற படகர்கள் காற்றினையும் வணங்குகின்றனர். காற்றினைக் “காயி” என்று அழைக்கும் இவர்கள் காற்று சார்ந்த பல வாழ்வியல் வழக்காறுகளைக் கட்டமைத்து அதனை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.

குழந்தைவளர்ப்பு மீது அதீத அக்கறையுடையவர்களாக விளங்குகின்ற இம்மக்களின் மருத்துவத்தில் குழந்தை மருத்துவம் சிறப்பிடம் பெறுகின்றது. அதே நிலையில் கருப்பிணி பெண்களையும், குழந்தைகளையும் பேணுவதில் இவர்கள் கட்டமைத்துள்ள வழக்காறுகளுள் காற்றினையும் அதனால் உறும் பாதிப்புகளைக் கையாளும் விதமும் குறிப்பிடத்தகுந்ததாகும். காற்றினால் மனித உடலுறும் பாதிப்பையும், அதற்குரிய தற்காப்பு மற்றும் மருத்துவத்தையும் அடியொற்றியதாக இவ் ஆய்வுக் கட்டுரை விளங்குகின்றது.

பஞ்சபூதங்களில் வலிமையின் கூறாக காற்று கருதப்படுவதைப் புறநானூறு சுட்டுகிறது (புறம், பா. 2). உலகம் மற்றும் உயிர்களின் இயக்கத்திற்குக் காற்று மிகவும் இன்றியமையானது. காற்று மனிதனின் உடலில், சூழலில் ஏற்படுத்தும் விளைவின் அடிப்படையில் படகர்கள் காற்றினைக் “காயி” (காற்று), “தொட்ட காயி” (பெரிய காற்று) என்று இருவகைப்படுத்துகின்றனர்.

காயி (கற்று) -
அதிகாலையில் முகம் கழுவாமல் வீட்டைவிட்டு வெளியில் சென்றாலோ, உடலில் எண்ணெய் அல்லது வெண்ணெய் போன்றவற்றைத் தேய்த்துவிட்டோ, மாமிசம் உண்டுவிட்டோ, மாமிசம் உள்ளிட்ட வாசனைப் பொருட்களை வெளியில் எடுத்துக்கொண்டுச் செல்லும்போதோ “காய் ஊவது” (காற்று அடித்தல்) என்ற விளைவினை மெய்யுறும் என்பது படர்களின் நம்பிக்கை. தலைச்சுற்றல், வாந்தி, சோர்வு, காய்ச்சல் மற்றும் சில நேரங்களில் மயக்கம் உள்ளிட்டவை இப்பாதிப்பிற்கான அறிகுறிகள் மற்றும் விளைவுகளுமாகும். இதற்கு எளிமையான கைமருத்துவத்தினைப் படகர்கள் மேற்கொள்கின்றனர்.

மாட்டுச் சாணம் சிறிதளவை ஆற்றிலிருந்துக் கொண்டுவந்த நீரில் கலந்து பாதிக்கப்பட்டவருக்கு அளித்தோ, “கறி அடக்கெ” எனும் வெட்டுப்பாக்கினை அளித்து மெல்லச்செய்தோ இப்பாதிப்பிற்குரிய மருத்துவத்தினை மேற்கொள்கின்றனர். சிலர் மாட்டின் சாணக்கரைசலுடன் “குடி கறிக்கெ” எனும் அருகம்புல்லினையும் சேர்த்து அளிக்கின்றனர். படகர்களின் மருத்துவம் மற்றும் சடங்கில் அருகம்புல் முக்கியமானதொரு இடத்தினைப் பெற்றுள்ளது. அருகம்புல்லினை இவர்கள் ‘மொல கறிக்கெ’ என்றும் அழைக்கின்றனர். படகர்கள் முயலினை ‘மொலா’ என்கின்றனர். முயல் விரும்பியுண்ணும் புல்லாக இது விளங்குவதால் இதற்குப் இப்பெயரினைக் காரணப்பெயராக இட்டு இவர்கள் வழங்குகின்றனர்.

தீடீரென்ற வெப்பநிலை மாற்றத்தால் தோன்றும் இந்தப் பாதிப்பினை முன்னரே தவிர்ப்பதற்கான சில முறைகளையும் படகர்கள் கையாளுகின்றனர். அதனடிப்படையில் எண்ணெய் உறைத்தபிறகு வீட்டினை விட்டு வெளியில் செல்வதை தவிர்க்கின்றனர். வெளியே செல்ல நேர்ந்தால் அடுப்பு உலையிலிருந்து எடுத்த “மசி” என்றழைக்கும் கரித்திலகமிட்டு வெளியில் செல்கின்றனர். உடலிற்கு எண்ணெய் உறைக்கும்போது அங்கங்களை நன்றாக நீரினால் கழுவி சுத்தம் செய்து, நன்றாகத் துடைத்தப்பிறகே எண்ணெய் உறைக்கவேண்டும் என்பதையும், அங்கங்களை நன்றாகக் கழுவாமலோ, கழுவிய ஈரம் உலராமலோ எண்ணெய் உறைத்தலாகாது என்பதையும் ஆசாரக்கோவை நூல் இயம்புவது இங்கு நோக்கத்தக்கது (ஆசாரக்கோவை, பா.13). ஆசாரக்கோவையின் கருத்தும் எண்ணெய் உறைத்தப்பிறகு உண்டாகும் வெப்பநிலையை அடைப்படையாகக் கொண்டது.

அங்கங்களை நீரினால் கழுவும்போது அது அங்குள்ள காலச்சூழலுக்கேற்ப மாறுவதையும், அதற்குப்பிறகு எண்ணெய் உறைக்கும்போது அச்சூழல் தொடர்ந்து நீள்வதையும் அடிப்படையாகக் கொண்டது இவ்வழக்கம். உடலில் உள்ள வெப்பநிலையை நீண்டநேரம் தக்கவைக்கும் இயல்பு எண்ணெய்க்கு உண்டு. இன்று பெரும்பாலும் தேங்காய் எண்ணெயினைப் பயன்படுத்தும் படகர்கள் முன்பு ஆமணக்கு எண்ணெயினைப் பயன்படுத்தி வந்தனர். “அரளு எண்ணெ” என்று இவர்கள் அழைக்கின்ற இவ்வாமணக்கு எண்ணெயினை இவர்களே இல்லத்தில் காய்ச்சுகின்றனர். இரவில் குழந்தை உறங்குவதற்கு முன்பு குழந்தையின் உடலில், எண்ணெயை லோசாக நெருப்பில் சூடேற்றி தேய்க்கின்ற வழக்கினை இவர்கள் கொண்டுள்ளனர். குளிர்ப்பிரதேசமான இவர்களின் வாழ்க்களத்தில் உடலின் வெப்பத்தினைத் தக்கவைக்க இம்முறைப் பயன்படுகின்றது.

மாமிசம் மற்றும் வாசனைமிகுந்த உணவுப் பொருட்களைப் புறத்தே கொண்டுச்செல்லும்போது சிறு கரித்துண்டினையோ, இரும்புத் துண்டினையோ அதனுள் இட்டோ அல்லது கையில் எடுத்துக்கொண்டோ செல்கின்றனர். எண்ணெய்ப் பலகாரத்தை வெளியில் கொண்டுச்செல்லும்போது “நேரிமரத்தின்” தழைகளையும் அதனுள் இட்டுச்செல்கின்றனர். இவற்றை இந்தக் காற்றினால் ஏற்படும் பாதிப்பிற்குரிய முன்காப்பாக இவர்கள் மேற்கொள்கின்றனர். நாவல் மரத்தினை இவர்கள் “நேரி மொரா” என்று அழைக்கின்றனர். இது இவர்களின் புனிதச்சடங்கு உள்ளிட்ட இன்றியமையான அனைத்து வாழ்வியல் சடங்குகளிலும் மிக முக்கியமான இடத்தினை பெறுகின்றது. தம் குலத்தெய்வத்திற்கான குறியீடாகவும் இது திகழ்வது குறிப்பிடத்தக்கது. இம்மரத்தின் புனிதம்கருதி காப்பாக இதனை இடுகின்றனர்.

ஊலு (அடி) -
குழந்தைகளுக்குக் காற்றால் ஏற்படும் சிறியளவிலான பாதிப்பினைப் படகர்கள் “ஊலு” என்கின்றனர். குழவியினை இதனின்று தற்காப்பதற்காகக் குழந்தையின் கைகளில் வசம்பினைக் கட்டுகின்றனர். வலது கரத்தில் ஐந்து, இடது கரத்தில் நான்கு என்ற எண்ணிக்கையில் வசம்பின் மணிகளைக் கோர்த்து இவர்கள் கட்டுகின்றனர். தீய காற்று மற்றும் சக்திகாளால் எவ்விதமான பாதிப்பும் குழந்தைக்கு ஏற்படாமலிருக்க இவர்கள் வசம்பினைக் காப்பாகக் கட்டுகின்றனர். மேலும் குழந்தைக்கு ஆழ்ந்தத் தூக்கம், சீரணம், வாயிற்றுத் தொல்லைகளை ஏற்படுத்துகின்ற பூச்சிகளை அழிப்பது உள்ளிட்ட மருத்துவ குணங்களையும் கொண்டதாகவும் விளங்குகின்ற வசம்பு இவர்களின் குழந்தை மருத்துவத்தில் முக்கியமான இடத்தினைப் பெறுகின்றது.

வசம்பையும் மீறி குழந்தைகள் இப்பாதிப்பினை உறும்போது; “அறவத்து கிடு” அல்லது “பாத்தி கிடு” என்று இவர்கள் அழைக்கின்ற அறுபதாம் தழையினைக் கசக்கி, துணியில் முடிந்து கழுத்தில் கட்டியோ, குழந்தையின் படுக்கையின் கீழ் வைத்தோ மருத்துவம் பார்த்து இவ்விளைவினைத் தவிர்க்கவோ, தீர்க்கவோ செய்கின்றனர். இவர்களின் வீடுகளின் முற்றத்தில் இடம்பெறும் மூலிகைத் தாவரங்களுள் இந்த அறுபதாம் தழைக்கு முக்கியமான இடமுண்டு.

குழந்தையைத் தாக்கும் இந்த ஊலினை அதன் தன்மையின் அடிப்படையில் “புரு ஊலு”, “காய்உலு”, “சுத்தி ஊலு”, “பஜ்ஜெ ஊலு”, “பிணி ஊலு” என்று இவர்கள் ஐந்து வகைப்படுத்துகின்றனர். குழந்தைப் பால்அருந்தாமை, தொடர் அழுகை, “மொக்கு சிடி” என்ற ஒரு விதமான தூர்நாற்றம் குழந்தையிடமிருந்து தோன்றுவது உள்ளிட்ட விளைவுகள் இந்த ஊலிற்குரிய அறிகுறிகளாகும்.

சுத்தி ஊலு -
சிறியளவிலான சூறாவளிக்காற்றினால் குழந்தைக்குத் தோன்றும் பாதிப்பு இதுவாகும். இவ்விளைவிற்கு மேற்கொள்ளும் மருத்துவத்தில் காற்றில் பறந்துவந்த, எரியூட்டப்பட்ட பிணத்தின் துணியையும், பெண்களின் தலைமயிரினையும் முக்கியமான சேர்மானமாகப் பயன்படுத்துகின்றனர். இத்துடன் “தெனக்கெ பஞ்சி” எனும் தேங்காய் நார் மற்றும் “தூப்பா” எனும் சாம்பிராணியையும் சேர்த்து நெருப்பில் இட்டு, வெளிவரும் புகையினைக் குழந்தைக்குக் காட்டுகின்றனர்.

பிணி ஊலு -
குழந்தையின் கண் சிவத்தல், மூக்கிலிருந்து சளி ஒழுகாமை, பால் அருந்தியவுடன் வாந்தியெடுப்பது, குழந்தையின் கழுத்து அசையாமை போன்ற விளைவுகள் “பிணி ஊலு” என்ற பாதிப்பிற்குரியன. இந்நிலையில் அறுபதாம் தழையினை நெருப்பில் வாட்டி, வெள்ளைத் துணியில் முடிந்து குழந்தைக்குக் கட்டுகின்றனர்.

பஜ்ஜெ ஊலு -
குழந்தையைச் சாக்கடைக்கு அருகில் கொண்டுச்செல்வது, சாக்கடையைக் கடந்து வந்தவர்கள் குழந்தையை நெருங்குவது போன்றவற்றால் இப்பாதிப்பு ஏற்படுகின்றது. கடுமையான சோர்வு, தொடர்வாந்தி, வயிற்றுப்போக்கு, கையில் ஏற்படும் மொக்கு நாற்றம் போன்றவை இப்பாதிப்பிற்குரிய அறிகுறிகளாகும். இப்பாதிப்பின்போது அறுபதாம் தழையினைப் பிசைந்து சாறெடுத்து, தய்ப்பாலுடன் கலந்து ஒரு கரண்டியளவு குழந்தைக்கு அளிக்கின்றனர். பின்னர் கசக்கிய அந்த அறுபதாம் தழையினை வெள்ளைத்துணியில் முடிந்து குழந்தையின் கழுத்தில் கட்டுகின்றனர்.

தொட்ட காயி (பெரிய காற்று (அ) பக்கவாதம்) -
படகர்கள் பக்கவாதத்தினைத் “தொட்ட காய்” என்கின்றனர். வலதுமூளை பாதிக்கப்பட்டால் இடதுபக்கமும், இடது மூளை பாதிக்கப்பட்டால் வலதுபக்கமும் செயலிழப்பை ஏற்படுத்தும் இப்பாதிப்பு வாய்கோணலுடன் பேச்சிழப்பையும் உண்டாக்கும். இவ்விளைவிற்குப் படகர்கள் சிறந்த மூலிகை மருத்துவத்தினை மேற்கொள்கின்றனர்.

பக்கவாதத்திற்கு மேற்கொள்ளும் மருத்துவத்தை வாய்க்கோணலிற்கான மருத்துவம், செயலிழந்துப்போன உடலுக்கான மருத்துவம் என்ற இருநிலைகளில் இவர்கள் செய்கின்றனர். வாய்கோணல்நிலைக்கும் நேரடியாக மூலிகையைப் பயன்படுத்துவது, சுடுநீரில் இட்டு ஆவியாக்கிப் பயன்படுத்துவது என்ற இரண்டு முறைகளில் மருத்துவம் மேற்கொள்கின்றனர். இந்த வாய்க்கோணலுக்கு “உலுச்சு கிடு” என்ற தொட்டால்சுருங்கி வகையினைச் சார்ந்த செடியினைக் கோணிய வாய்க்குள் வைக்கின்றனர். சிலர் இந்த உலுச்சு கிடுவினை வாயில் இட்டு மென்று விழுங்கச்செய்கின்றனர்.

பக்கவாதத்திற்கான மருத்துவத்தில் “எரிக்கெ மொர” எனும் மரத்தின் பங்களிப்பு அளப்பரிது. ஒருபெரிய பாத்திரத்தில் அரைபங்கு நீரினைஊற்றி அடுப்பிலேற்றி கொதிக்கவைக்கின்றனர். கொதிநிலைவந்ததும் அக்கொதிநிலையைக் கூட்டவும், தக்கவைக்கவும் அதற்குள் “சுட்டக்கல்” எனும் செங்கலினை இட்டு மேலும் கொதிக்கவைக்கின்றனர்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஐந்து கைப்பிடியளவு “ஏரிக்கெ மொர” இலையினை இட்டு மேலும் நன்றாகக் கொதிக்கவைத்து, அதிலிருந்து வெளிவரும் ஆவியினைப் பாதிக்கப்பட்டவரின் முகத்தில் படச்செய்கின்றனர்.

பக்கவாதத்தால் ஆன உடல்பாதிப்பிற்கும் பெரும்பாலும் இவர்கள் ஒத்தட மருத்துவத்தினையே மேற்கொள்கின்றனர். மேற்செய்தது போலவே பாத்திரத்தில் நீரினைக் கொதிக்கவைத்து அதில் “ஏரிக்கெ” என்னும் ஏரிகாயினை அரிந்து போடுகின்றனர். அத்துடன் ஒரு கைப்பிடியளவு “உலச்சு கிடுவினையும்”, ஒரு கைப்பிடியளவு “உல்லா மஜிகெ” எனும் சிறுசெடியினையும் இட்டு நன்றாக கொதிக்கவைத்து, சூடான அந்நீரினைத் துணியால் தொட்டு பாதிக்கபட்டவரின் உடலில் ஒத்தடம் கொடுக்கின்றனர்.

இந்த மூலிகைநீருடன் சுட்டக்கல்லையும் சிலர் போடுகின்றனர். சிலர் “கூ” எனும் உழுமுனையினையும் நெருப்பில் பழுக்கக்கய்ச்சி அந்நீரினுள் இடுகின்றனர். இது கொதிநிலையினை நன்கு உயர்த்துவதற்கான வழிமுறையாகும். ‘கூ’ எனும் உழுமுனை தம் நிலத்தை உழுவதற்காக இவர்கள் பயன்படுத்திய தொன்மையானக் கருவியாகும். இவர்களின் வழிபாட்டு அறையில் இக்கருவிக்கும் இடமளித்து வணங்குகின்றனர். தம் மரபார்ந்த சில சடங்குகளுக்கும், மருத்துவத்திற்கும் இந்தக் கருவியினை இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

பக்கவாத உடல் மருத்துவத்திற்குச் சிலர் “ஏரிக்கெ” மரத்தின் பட்டையை இட்டு கொதிக்கவைத்த நிரினைக் கொண்டு ஒத்தடம் அளிக்கின்றனர். சிலர் “ஏரிக்கெ” மரத்தின் பட்டையுடன் “கொன்னெ மொரப்பட்டெ” எனும் மரத்தின் பட்டெயினை இட்டு நன்றாகக் காய்ச்சிய மூலிகை நீரினாலும் ஒத்தடம் அளிக்கின்றனர். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இம்மருத்துவ செயல்பாடுகள் விரைவில் இவ்விளைவினைச் சீர்செய்யும் தன்மையுடையது.

படகர் இன மக்களின் வாழ்வியலில் இடம்பெறுகின்ற காற்று பற்றிய மேற்கண்ட வழக்காறுகள் இயற்கையின் மீதும் இவர்கள் கொண்டு புரிதலை வெளிப்படுத்துகின்றது. காற்றினால் ஏற்படுகின்ற சிறிய பாதிப்பு மற்றும் பெரிய பாதிப்பினைக் கணிப்பது, அதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்வது போன்றவை இவர்களின் சிறந்த சூழலறிவிற்குச் சான்றாகும். இன்றளவும் இம்மேற்கண்டப் பாதிப்புகளுக்குத் தமது மரபார்ந்த மூலிகை மருத்துவத்தினையே மேற்கொள்வது இவர்களின் மருத்துவ அறிவிற்குத் தக்கச் சான்றாகும்.

பெரும்பாலும் இப்பாதிப்பு ஏற்படாத வண்ணம் தற்காப்பதையே இவர்கள் விரும்புகின்றனர். பெரும்பாலும் குழந்தைகளின் நிலையில் இதனை பெரும் விழிப்புடன் கையாளுகின்றனர். குழந்தைக்கு 1 வருடம் நிறையும்வரை வெளியிலிருந்து இல்லத்திற்கு வருகின்ற அனைவரையும் 10 நிமிடங்கள் கழித்தே இல்லத்திற்குள் செல்ல அனுமதிக்கின்றனர். இதன்மூலம் அவர்களோடு வருகின்ற கிருமிகள் குழந்தைகளை அண்டாவிடாமல் காக்கின்றனர். குழந்தைக்குத் தாய்பால் ஊட்டும்வரை இவ்வினத்தின் தாய்மார்கள் தலையில் வாசனை மிகுந்த பூவினைச் சூடுவது கிடையாது. வாசம்மிகுந்த பூக்கள் குழந்தைக்கு ஒவ்வாமையினை ஏற்படுத்த வாய்ப்புண்டு எனக் கருதும் இவர்கள் இதைத் தவிர்க்கின்றனர். இயற்கையோடு இயைந்து வாழ்கின்ற வாழ்கை இயற்கைச் சார்ந்த புரிதலுக்கும், வளமான வாழ்விற்கும் வழிகோலும் என்பதற்கு நீலகிரி படகர் இன மக்களின் இந்த வழக்காறுகள் சிறந்த சான்றாகும். நாம் சூழலியல் சார்ந்து உற்று நோக்கத் தகுந்ததாகும்.

துணை நின்றவை –

திருவள்ளுவர், திருக்குறள்
பெருவாயின் முள்ளியார், ஆசாரக்கோவை
கோ.சுனில்ஜோகி, நீலகிரி பெறங்காடு சீமை படகர் இன மக்களின் மூலிகை மருத்துவம், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 2012
கோ.சுனில்ஜோகி, நீலகிரி படகரின மக்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்கு பொருட்கள், முனைவர் பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 2015
ஆ.இரமகிருஷ்ணன், பொறங்காடு சீமை வழிபாட்டு மரபுகள், முனைவர் பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 1992
குப்பியம்மாள், ஒரசோலை, வயது 80, நேர்க்காணல்
இலட்சுமியம்மாள், தாந்தநாடு, வயது 75, நேர்க்காணல்
ஆலாகவுடர், மர்லகம்பை, வயது 60, நேர்க்காணல்
பெள்ளாகவுடர், குண்டாட, வயது 58, நேர்க்காணல்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

* கட்டுரையாளர் : - முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுருபன்முகக்கலை அறிவியல்கல்லூரி,கோவை -

Last Updated on Saturday, 07 December 2019 10:01