- முனைவர் சா.சதீஸ் குமார், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், 641 105, -இந்தியச் சமயங்கள் யாவும் மானுடம் தலைக்கவே தோற்றுவிக்கப்பட்டன. இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழ நெறிகளை வழிகாட்டுகின்றன. இதற்கு எந்தச் சமயமும் விதிவிலக்கல்ல… ”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற உயரிய சிந்தனையை வாழ்வில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறத்தை தான் மணிமேகலை காப்பியம் முழுவதும் வலியுறுத்துகிறது. இக்காப்பியம் தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம், பத்தினியின் சிறப்பைக்கூறும் காப்பியம், சீர்திருத்தக் கொள்கை உடையக் காப்பியம், பசிப்பிணியின் கொடுமையை எடுத்தியம்பும் காப்பியம், கற்பனை வளம் மிகுந்த காப்பியம் எனும் பெருமைகளெல்லாம் மணிமேகலைக்கு உண்டு. இக்காப்பியத்தில் உயிரினங்களுக்கு ஏற்படும் பசிக்கொடுமையை எங்ஙனம் நீக்குகிறது என்பதையும் நாமும் அதனை நம்முடைய வாழ்வில் எவ்வாறெல்லாம் கடைப்பிடிக்க இயலும் என்பதைப்பற்றி ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மணிமேகலையின் சிறப்பு :
மணிமேகலை பௌத்த சமயத்தைப் பரப்ப எழுந்த காப்பியம் தான் ஆயினும் சமயக்கோட்பாடுகள் மனித சமுதாயத்திற்குப் பொதுவானவை என்பதை மறுக்க இயலாது. உண்மையில் அனைத்து சமயக்கோட்பாடுகளும் இவற்றையே வலியுறுத்துகிறது. பசியின் கொடுமையை விளக்கும் பசிப்பிணித் தீர்ப்பதே விழுத்துணையான அறம் என்று அழுத்தமாக பேசுவது இக்காப்பியத்தின் அறக்கோட்பாடாகும். இதைப்போல் வேறெந்த இலக்கியமும் இப்படிப்பேசவில்லை. எல்லாச்சமயங்களும் அன்னதானத்தைப் போற்றுகின்றன. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை வலியுறுத்துகின்றன. ஏனென்றால் மக்களின் பசியைப் போக்கவில்லையென்றால் மக்கள் மக்களாக இருக்கமாட்டார்கள் இருக்கவும் முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தனர். அதனால் தான் அவர்கள் அன்னதானத்தை முதன்மைப்படுத்தினர். பாரதியார் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று குறிப்பிடுவதை

“ வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
இங்கு வாழும் மனிதர்களுக்கெல்லாம்….
(பாரதியார் கவிதைகள் -முரசு- 23)

என்று பசியைப் போக்குவதற்கு முதலிடம் தருகின்றார். பசித்திருப்பவனுக்கு உணவுதான் கடவுள். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோராவார்’ உயிர் வளர்க்க ஊன் வளர வேண்டும், இல்லையேல் பசிக்கொடுமைகள் இவ்வுலகில் தலைவிரித்தாடும் மனித இனத்திற்கு மட்டுமின்றி மற்ற அனைத்து உயிரினங்களும் உணவே முதல் தேவையாக அமைகிறது. பசிப்பிணி உலகில் இல்லாமல் இருந்தால் தான் மனிதன் சிந்தித்து அதன்படி செயலாற்ற முடியும் இல்லையேல் மனிதன் மிருகமாக மாறிவிடும் சூழல் ஏற்படக்கூடும்.

நான்கு அறங்கள் :
மணிமேகலை நான்கு வகையான அறங்களை வலியுறுத்துகின்றன. அவற்றுள் முதன்மையானதாக அன்னதானத்தையேக் குறிப்பிடுகிறது. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் கூற்று இங்கே சிந்திக்கத்தக்கது. அவர் அவ்வாறு கூறியதோடு நின்று விடாமல் அறச்சாலைகள் அமைத்து ஏழை எளிய மக்களுக்கு உணவிட்டமையை நாம் நினைவு கூறுதல் வேண்டும். எனவே தான் சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையின் கரங்களில் அமுதசுரபி’ எனும் பசிப்பிணியைப் போக்கும் அட்சயப்பாத்திரத்தைத் தந்து காப்பியம் அருளியுள்ளார்.  மணிமேகலையின் கரங்களில் அமுதசுரபியை அளித்துவிட்டு எல்லோர் மனங்களிலும் பசியால் வாடுகின்ற உயிர்களிடத்திலும் இரக்கம் கொள்ள வேண்டும் என்ற உயரிய சிந்தனையைத் துளிர்க்க செய்துள்ளார். நம் மனதில் நல்ல அன்பு சுரக்கப்பட்டால் நாமும் அனைவருக்கும் அதில் கிடைக்கப்பெறும் அமிர்தத்தைத் தரக்கூடும் அல்லவா? என்ற சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளார்.

ஏழைகளின் பசியைப்போக்குவோரிடத்தில் தான் மேலான அறவாழ்க்கை அமைந்துள்ளது. இந்த உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உணவு கொடுக்க வேண்டும் என்பதை

“ ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
( மணிமேகலை, பாத்திரம் பெற்றகாதை, பாடல் வரி 92-96இ ப.140 )

என்ற வரிகளில் மக்கள்,தேவர் இருசாரார்க்கும் ஒத்த முடிவினை உடைய அறம் என்பது யாது? என விளக்கும் போது பசிப்பிணித்தீர்த்தலே சிறந்த அறமாகும் என்பதை

“மக்கள் தேவர் என இருசார்க்கும்
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன
பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்
தவப்பெரு நல்அறம் சாற்றினர்”
( மணிமேகலை, அறவணர்த் தொழுதகாதை, பாடல்வரி 116 –119இப.157 )

இன்றும் மக்களிடையே அன்னதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க இவ்வரிகளே காரணமாக அமைகின்றன.

அமுதசுரபி பெறல் :
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிப்பல்லவத்தீவில் விட்டுவிட்டுச் சென்றுதும் மணிமேகலை மெல்ல அவ்வனத்திலே உலவுகிறாள். அப்போது அவளுக்கு பழக்கப்பட்ட எந்தவொரு பொருளும் அங்கே தென்படாததை நினைத்து மனம் கலங்குகிறாள். அப்போது அங்கே தீவதிலகை தோன்றுகிறாள். தீவதிலகை இந்திரனின் ஏவலால் புத்தரின் பாதபீடிகையை பாதுகாப்பவள்.  தீவுக்குத் திலகம் போன்றவள் மணிப்பல்லவத்தீவில் வாசம் செய்பவள்.

மணிமேகலை புத்த பீடிகையை வணங்கித் தன் முற்பிறவியை அறிந்ததைக் கேட்டு, கோமுகிப் பொய்கையில் வைகாசிப் பௌர்ணமியன்று வெளியில் வரும் அமுதசுரபியைப் பெறும் தகுதியுடையவள் இவளோ எனக்கருதி அமுதசுரபியின் தன்மையை விளக்குகிறாள். மணிமேகலை புத்தப்பீடிகையைத் தொழுது கோமுகிப் பொய்கையை வலம் வந்து நின்ற போது அமுதசுரபி மணிமேகலையை அடைகிறது. அப்போது தீவதிலகை உயிர்களுக்கு உண்டாகும் பசிப்பிணியின் கொடுமையையும்,அதனைத் தீர்ப்பவர்களின் பெருமையையும் உரைத்து,‘இனி நீ உணவளித்து உயிர் கொடுத்தலாகிய அறத்தைச் செய்வாய்’ என்று கூறிச்சென்றதை

“ குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண்அணி களையும் மாண் எழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி அதுதீர்த்தோர்
இசைச்சொல் அளவைக்கு எண்நா நிமிராது”
( மணிமேகலை, பாத்திரம் பெற்ற காதை, பாடல் வரி 76-81இப.140)

என்னும் வரிகளில் சுட்டப்பட்டுள்ளது.

அமுதசுரபியின் சிறப்பு :
அமுதசுரபியில் இடும் அன்னம் எடுக்க எடுக்க குறையாது பெருகும் என்பதைத் தீவதிலகை எடுத்துரைக்கிறாள்.

“ ஆங்கு அதின்பெய்த ஆருயிர் மருந்து
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது
தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்
( மணிமேகலை, பாத்திரம் பெற்ற காதை,பாடல்வரி 48-50இப-139)

என்ற வரிகளிலும்

“ அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும்
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது”
( மேலது, பாடல்வரி 120-121 )

அமுதசுரபியின் சிறப்பும் அது சுரப்பது அருள் உடையார்க்கே என்பதும் இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பசிதீர்க்கச்செல்லல் :
அட்சயப் பாத்திரமான அமுதசுரபி கிடைத்தவுடன் பசித்தவர்களை தேடிச்சென்று உணவளிக்கிறாள் மணிமேகலை. சிறைச்சாலைகளுக்குச் சென்று அங்குள்ள கைதிகளுக்கு உணவிட்டு  அக்கைதிகளுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி சிறைச்சாலைகளையெல்லாம் அறச்சாலைகளாக மாற்றுவதை அரசன் மாவண் கிள்ளியிடம் உரைப்பது

“ சிறையோர் கோட்டஞ் சீத்தருள் நெஞ்சத்து
அறவோர்க் காக்கும் அதுவா ழியரென
அருஞ்சிறை விட்டாங் காயிழை உரைத்த
பெருந்தவர் தம்மாற் பெரும்பொரு ளெய்தக்
கறையோ ரில்லாச் சிறையோர் கோட்டாம்
அறவோர்க் காக்கினான் அரசாள் வேந்தென்”
(மணிமேகலை, சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை, பாடல் வரி 157-162, ப- 141)

என்றவரிகளின் மூலம் அறிய முடிகிறது.

ஆபுத்திரன் திறம் அறிதல் :
ஆபுத்திறம் அறிவித்த காதையில் அபஞ்சகனின் மனைவி சாலி தீய ஒழுக்கத்தால் ஆண்மகவு ஒன்றை ஈன்று அதனை வனத்தில விட்டுவிட்டுச் சென்று விடுகிறாள். அக்குழந்தையின் அழுகுரல் கேட்டு வனத்தில் மேய்ந்த பசு ஒன்று அக்குழந்தைக்கு ஏழு நாட்கள் பால் கொடுத்து பசியைப்போக்கு கிறது. ஆறறிவு கொண்ட மனிதனுக்கு மட்டுமல்ல ஐந்தறிவு கொண்ட உயிர்களுக்கும் இரக்ககுணம் உண்டெண்பதனை

“ தாயில் தூவாக் குழவி துயர்கேட்டோர்
ஆவந் தணைந்தாங் கதன்றுயர்தீர
நாவில் நக்கி நன்பாலூட்டிப்”
( ஆபுத்திறம் அறிவித்த காதை, பாடல்வரி 12-14,ப-166 )

என்றவரிகளில் மனிதனைத் தவிர்த்து மற்ற உயினங்களுக்கும் பசியின் கொடுமை தெரிந்திரிக்கிறது. அதோடு அதனைத்தீர்க்கும் திறத்தையும் அறிந்துள்ளனர் என்பதையும் நம்மால் உணரமுடிகிறது. அவ்வனத்தின் வழியே சென்ற அந்தணன் எடுத்துச் சென்று அக்குழந்தைக்கு ‘ ஆபுத்திரன் எனும் நாமம் இட்டு வளர்க்கிறான். ஆபுத்திரனின் தந்தை அந்தணன் ஆகையால் வேள்விச்சாலையில் பலியிடுவதற்காக கட்டிவைத்திருந்த பசுக்கூட்டங்களை அவிழ்த்துவிடுகிறான். ஆதனை கண்ட அந்தணன் அவன்மீது சினம் கொண்டு அவனை தன் மகன் அல்லன் எனக்கூறி விரட்டிவிடுகிறான். பின்னர் ஆபுத்திரன் மதுரையில் தஞ்சம் புகுகிறான். தனது பசியைப்போக்கிக் கொள்ள பிச்சை எடுத்து வாழ்கிறான். ஆயினும் பிச்சையெடுத்த உணவை தான் மட்டும் உண்ணாமல் அங்குள்ள நலிந்தவர்களுக்கும் அளித்துவிட்டு மீதியைத் தான் உண்கிறான் என்பதை

“ காணார் கேளார் கால்முடப் பட்டோர்
பேணுந ரில்லோர் பிணிநடுக்குற்றோர்
யாவரும் வருகவென் றிசைத்துட னூட்டி
உண்டொழி மிச்சலுண் டோடுதலை மடுத்துக்
கண்படை கொள்ளுங் காவலன் றாணென் “
( மேலது, பாடல்வரி 110-114,ப-169 )

பிச்சையெடுத்து உண்ணநேரிடினும் மற்றவர்களின் பசியை ஆற்றுவதே தனது முதற்கடமையாகக் கொள்கிறான் என்பதையும் அறியமுடிகிறது.

பாத்திரமரபு அறிதல் :
ஆபுத்திரன் தினமும் இப்பணியை செய்து வரும் நாளில் பசியோடு சிலர் அவனைக் காணவருகின்றனர். அச்சமயத்தில் அவனிடம் உணவு கொடுக்க ஏதுமில்லாத காரணத்தினால் மனம் வருந்துகிறான். அவர்களின் பசியைப் போக்க சிந்தாதேவியிடம் முறையிடுகிறான் அவனின் நற்குணம் அறிந்த சிந்தாதேவி அவனது கையில் “அட்சயப் பாத்திரத்தை” கொடுத்துச் செல்கிறது. அதனை பெற்றுக் கொண்ட ஆபுத்திரன் பசித்திருப்பவர்களைத் தேடி தேடிச் சென்று உணவளிக்கிறான். ஒரு சமயம் ஆளில்லாத மணிப்பல்லவத்தீவில் அகப்பட்டு கொள்கிறான். அமுதசுரபியிலிருந்து உணவைப்பெறுவோர் யாரும் இல்லாத காரணத்தினால் அதனை கோமுகிப்பொய்கையில் வீசிவிட்டுத்தானும் உயிரை மாய்த்துக்கொள்கிறான்.

பல நிலைகளில் பசிதீர்த்தல் :
‘உலக அறவி புக்காகாதையில்’ யானைத் தீ என்னும் பசிப்பிணியால் பீடிக்கப்பட்ட காயசண்டிகையின் வரலாறும் சுட்டப்பட்டுள்ளது. பன்னிரெண்டு ஆண்டுகள் விருச்சிக முனிவர் தவம்கலைந்து, தான் உண்பதற்கு வைத்திருந்த நாவற்பழத்தை நதிக்கரையிலே வைத்துவிட்டு நீராடச்சென்று திரும்புகையில் அதனைக் காயசண்டிகை காலால் மிதித்துவிட கடும் கோபம் கொண்ட விருச்சிக முனிவர் ‘யானைத் தீ’ எனும் நோய் பற்றிக்கொள்ளுமாறு சாபமிடுகிறார். மேலும் இச்சாபமானது இன்னும் பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின் தான் உணவு உண்ணும் நாளில் நீங்கும் என்று சாபவிமோசனம் அளிக்கிறார்.அவளது யானைப்பசியினை மணிமேகலை அட்சயப்பாத்திரம் மூலம் உணவளித்து சாபம் நீக்குகிறாள்

மேலும் பல்வேறு இடங்களில் பசிப்பிணியின் துயரம் பதிவுசெய்யபட்டுள்ளது. சிறைவிடுகாதையில் இராசமாதேவி மணிமேகலையைக் கொல்லும் பொருட்டு அவளைக் காற்றுக்கூட புகாத அறையில் சிறைவைக்கும் பொழுது தான் கற்றறிந்த மந்திரம் மூலம் பசியின்றியிருந்ததை

“ உய்யா நோயி னூணொழிந் தன்ளெனப்
பொய்நோய் காட்டிப் புழுக்கறை யடைப்ப
ஊணொழி மந்திர முடைமையின் அந்த
வாணுதல் மேனி வருந்தா திருப்ப”
( மணிமேகலை, சிறை விடு காதை, பாடல்வரி 59 -62,ப-315 )

என்ற வரிகளும் விளக்குகின்றன.

கடவுளை அடைவதற்கான வழியாது என்பதை திருமூலர் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். கடவுளுக்கு இடும் படையலை அவர் உண்பதில்லை ஆனாலும் நாம் படைக்கின்றோம். ஆதனை விடுத்து இவ்வுலகில் வாழும் ;

“ படமாடக் கோயில் பகவற்கு ஒன்றுஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஆமே “
(ஞா.மாணிக்கவாசகன்  ,திருமந்திரம் 1825 பாடல்,ப-823 )

நடமாடும் கோயிலாக இருக்கும்  மனிதனுக்கு செய்யப்படும் நற்காரியமானது படமாக இருக்கும் இறைவனை சென்றடையும் வழி என்றுரைக்கின்றார்'

முடிவுரை :
மணிமேகலை காப்பியம் முழுவதும் இதுபோன்ற நல்லறங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பசிப்பிணி அகற்றுவதே சிறந்த அறமாகும் என்பதையும், வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை: மற்றெல்லாம் குறியெதிர்ப்புடைத்து என்ற வள்ளுவப் பெருமானின் வாக்கினையும் உணரத்தலைப்படுவோம்.

துணைநூற்கள் :

1. மெய்யப்பன்.முனைவர் – பாரதியார் கவிதைகள், மெய்யப்பன் பதிப்பகம் சென்னை.
2. வேங்கடசாமி நாட்டார் ந.மு – மணிமேகலை, என்சிபிஎச், சென்னை.
3. மாணிக்கவாசகன் ஞா. - திருமூலர்திருமந்திரம் மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

மின் அஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர்:  முனைவர் சா.சதீஸ் குமார், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், 641 105, -