பாரதிதாசன் பார்வையில் தொழிலாளர்கள் நிலை

Friday, 06 November 2020 23:59 - முனைவர் த. அமுதா, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி(தன்னாட்சி), வேலூர் - 2 - ஆய்வு
Print

முன்னுரை

பாரதிதாசன் பார்வையில் தொழிலாளர்கள் நிலைஇருபதாம் நூற்றாண்டினை ஒரு தொழிற்புரட்சிக் காலம் என்று சொல்லலாம். சமுதாயத்தில் பெரும்பாலோராக இருப்பவர்கள் உழைக்கும் மக்களே. இவ்வுலகம் இயங்குவதற்கும் மனித வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் மாற்றங்களுக்கும் உழைப்பின் பயனே அடிப்படையாக அமைகின்றன.. எனவே தொழிலாளர்களைச் சமுதாயச் சிற்பிகள் என்றும் சமுதாய மாற்றத்திற்குக் கிரியா ஊக்கிகள் என்றும் கூறுவர். இதனை உணர்ந்த தமிழ்க் கவிஞர்கள் உழைப்பின் பெருமையையும் உழைப்போரின் இழிநிலைமையையும் அவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் முதலாளிகளின் ஈவிரக்கமற்ற அலட்சியப் போக்கினையும், உழைப்பாளர்கள் வாழ்க்கையில் அடைய வேண்டிய நல்வாழ்வையும் தம் பாடல்களில் பதிவு செய்ய முற்பட்டனர். சிற்றிலக்கியக் கவிஞர்கள் நிலவுடைமையாளர்களைத் துதிபாடி மகிழ்ந்த நிலையை மாற்றி இக்காலக் கவிஞர்கள் தொழிலாளர்களின் அவல வாழ்வைத் தம் கவிதைகளில் அம்பலப்படுத்தியுள்ளனர். அத்தகைய கவிதைப் படைப்பாளர்களின் முன்னோடியாக பாரதிதாசன் விளங்குகிறார் என்பதை அடிப்படையாகக்கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

தொழிலாளர் மேன்மை
பாவேந்தர் பாரதிதாசன் காணும் பொருள்களையெல்லாம் தொழிலாளர்களின் கைவண்ணமாகவே காண்கிறார்.

“கீர்த்திகொள் போகப் பொருட்புலிவே! உன்
கீழிருக்கும் தொழிலாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள் தோல்” (பா.தா க தொகுதி1 ப. 57)

மேலும், இவ்வுலக வாழ்வக்கும் வளத்திற்கும் காரணமானவர்கள் தொழிலாளர்கள் என்பதைப் புரட்சிக் கவி பின்வருமாறு பாடுகிறார்.

“போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்
புதுக்கியவர் யார்? அழகு நகருண்டாக்கி
சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு
தேக்கியநல் வாய்க்காலும் வகைப்படுத்தி
நெற்சேர உழுதுமுது பயன்விளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள்கள்?
கற்பிளந்து மலையிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
போயெடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு? (பா.தா.க.தொகுதி1 ப. 60)

‘உலகத்து ஆக்கமெல்லாம் மனிதனின் படைப்பே, அதனை அளப்பவனும் அவனே’ என்று சொன்ன மார்க்சிம் கார்க்கியை நினைவுபடுத்தும் பாரதிதாசன், தொழிலாளர்களின் உழைப்பை ‘அழியா முதல்’ என்கிறார். மகாகவி பாரதியும் தொழிலாளர்ககளை 'கண் கண்ட கடவுளர் அவரே’ எனப் புகழ்வார்.

தொழிலாளர் நிலைமை

உலகத்தின் உன்னத உயர்வுக்கு தங்களின் இரத்தைதையே வியர்வையாகச் சிந்துகின்ற உழைக்கும் மக்களின் நிலை கேட்பாரற்றுக் கிடக்கிறது. வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக் கூட அனுபவிக்க முடியாத சிலையில் தொழிலாளர்கள் இருப்பதனைக்

"கந்தையணிந்தோம் - இரு
கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்
மொந்தையிர் கூழைப் - பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்
சந்தையில் மாடாய் - யாம்
சந்ததம் தங்கிட வீடுமில்லாமல்
சிந்தை மெலிந்தோம் - எங்கள்
சேவைக்கெலாம் இது செயநன்றி தானோ? "(பா.தா.க.தொகுதி1 ப. 115)

என்று தொழிலாளர்களின் விண்ணப்பத்தை அவர் சமூகத்தின்முன் வைக்கிறார்.

தொழிலாளர் - முதலாளி வேறுபாடு

பிறப்பாலேயே சிலர் உழைக்கவும் சிலர் உழைக்காமல் உண்ணவும் இருக்கின்ற நிலை மிகக் கொடியது என்கிறார். உலக இயக்கத்திற்குத் தம் உழைப்பைத் தரமால், பிறர் உழைப்பைச் சூறையாடுகின்ற வன்முறையாளர்களாக முதலாளிகள் இருக்கின்றனர். மேலும், தொழிலாளர்களின் நலனில் அக்கறை இல்லாத ஈவிரக்க மற்ற நெஞ்சினராகவும் இருப்பதனை,

"கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்
கொள்ளையடிப்பதும் நீதியோ – புலி
வாழ்வதுதான் எந்தத் தேதியோ?" (பா.தா.க.தொகுதி1 ப. 55)

என்று தொழிலாளர்கள் வறுமையின்றி வளமையாக வாழ்வது எந்த நாளோ? ஏனக் கவலை கொள்கிறார். மேலும், தொழிலாளர்கள் அடைகின்ற இன்னல்களையும் துன்பங்களையும் தெளிவாகக் காட்டியுள்ளார்.

“பொத்தல் இலைக்கலமானார் ஏழைமக்கள்
புனல்நிறைந்த தொட்டியைப் போல் ஆனார் செல்வர்” (பா.தா.க.தொகுதி1 ப. 55)

உழைப்பாளர் பெறும் கூலி அவர் தேவைகளுக்கே போதவில்லை என்பதையும், செல்வர் தேவைக்கு மெல் பன்மடங்கு செல்வத்தைக் குவித்துப் பெருக்கும் நிலையில் உள்ளனர் என்பமையும் அருமையான உவமைகளால் விளக்கியுள்ளார். செல்வம் சிலரிடம் குவிந்திருப்பதும் தொழிலாளர்கள் அல்லல் உறுவதும் சகிக்க முடியாத துன்பம் என்கிறார்.

“அதிகரித்ததொகை தொகையாயச் செல்வ மெல்லாம்
அடுக்கடுக்காய்ச் சிலரிடம் போய் ஏறிக் கொண்டு
சதிராடு தேவடியாள் போல்ஆ டிற்றுத்
தரித்திரரோ புழுப்போலே துடிக்கின்றார்கள்” (பா.தா.க.தொகுதி1 ப. 55)

தொழிலாளர்கள் கடல்போல் பரந்துபட்டவர்கள் என்றும் இவர்களைச் சுரண்டி உயிர் வளர்க்கும் முதலாளிகள் கடலில் தோன்றி மறையும் நீர்க்குமிழிகள் என்றும் வரையறை செய்கின்றார்.

“இந்நிலத்துப் பெருமக்கள் ஒர்கடல்
இடர்செய் மன்னலர் அக்கடற் குமிழிகள்” (பா.தா.க.தொகுதி1 ப. 17)


“நீர்நிறைந்த கடலை யொக்கும்
நேர் உழைப்பவர் தொகை!
நீர்மிகுந்த ஓடமொக்கும்
நிறைமுதல் கொள்வோர் தொகை!
நேரிற் சூறை போதுமாயின்
தோணிஓட்டம் மேயுமோ” (பா.தா.க.தொகுதி1 ப. 111)

ஓடும் ஓடம் நிம்மதியாகக் கரைசேர வேண்டுமானால் சூறைக்காற்று மோதாமல் இருக்கவேண்டும். அதுபோல  முதலாளிகள் தொழிலாளர்களின் வாழ்க்கையை வஞ்சிக்காமல் வளமான வாழ்வுக்குக் காரணமாக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கிறார்.

சமத்துவ நிலை
மலைக்கும் மடுவுக்கும்போல சமூக ஏற்றத்தாழ்வு வளர்ந்து கொண்டே போகுமானால் மனித வாழ்க்கையே போர்க்களமாகி விடும். கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கும். மக்கள் வாழ்வில் நிம்மதி மறந்து போன கனவாகிவிடும். இந்நிலை மாற முதலாளிகள் தங்களின் சுரண்டிப் பிழைக்கும் ஆதிக்க உணர்வினை அழித்துக் கொள்ளவேண்டும். உடைமைகள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்பட் வேண்டும். அரசும் மக்களின் அரசாகி, தொழிலாளர்கள் நலன் கருதும் அரசாக மலர வேண்டும் என்கிறார்.

தொழிலாளர் உள்ளத்தின் குமுறல் சூறைக்காற்றாக மாறாமல் இருக்கவேண்டும். இதனை முதலாளிகள் உணர மறுப்பின் தொழிலாளிகள் தம் எழுச்சிமிக்க புரட்சியாய் எழுவது உறுதி. உலக முதலாளிவர்க்கத்திற்குத் தன் எச்சரிக்கைக் குரலாகப் பின்வருமாறு ‘உலகப்பண் பாட்டின்’ உணர்த்துகிறார்.

ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஒர்தொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மதறி
ஓப்பப்பர் ஆய்விடுவார் உரைப்பா நீ “(பா.தா.க.தொகுதி1 ப. 53)

அநீதிக்குள்ளானவர்களின் பக்கமாக நின்று பரிந்து பதறியும் பாடுவதோடமையாது.

“கொலை வாளினை எட்டாமிகு
கொடியோர் செயல் அறவே”

என்று பாடலைப் படைக்கலமாக்கிப் போராடவும் செய்கிறார் பாரதிதாசன்.

உழைத்து ஓடாகிப் பட்ட கடனையும் தீர்க்க முடியாமல் துன்பத்தில் தோய்கிற தொழிலாளியின் இழிநிலைமையினை மாற்றிப்  புத்துலகம் காணவேண்டும் என்ற தன் சிந்தனையை

“புதியதோர் உலகு செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
பொதுவுடைமை கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்” (பா.தா.க.தொகுதி1 ப. 130)

எனத் தீர்க்கமான குரலில் வெளிப்படுத்துகிறார். அதே நேரத்தில் தொழிலாளர்கள் தம்முன் ஒத்த உள்ளம் உடையவர்களாய் ஒற்றுமையைப் போற்றிக் கூடியத் தொழில் செய்தல் இன்றியமையாதது என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்.

முடிவுரை
“சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்
தாங்கி நடைபெற்றுவரும் சண்டை யுலகினை
ஊதையினில் துரும்புபோல அலைக்கழிப்போம். பின்னர்”(பா.தா.க.தொகுதி1 ப.52)

சாதி சமயம் தவிர்த்து மக்களெல்லாம் சரிநிகர் சமானமாய் ஒற்றுமையில் உயரும் நாளே உழைக்கும் மக்கள் வாழ்வில் உயரும் நாள் என்ற நம்பிக்கையை நாட்டி, தொழிலாளர்களின் பெருமையும், வளமும், ஒற்றுமையும் உயர்ந்தோங்கக் காரணமாய் விளங்கியவர் பாவேந்தர் என்பதற்கு அவர்தம் பாக்களே சான்று, தமிழின் பெருமையைப் பேசும்போதும், காதல் சுவையைப் பாடும் போதும், இயற்கை இன்பத்தை வருணிக்கும்போதும் கூட தொழிலாளர்களின் உயர்வினைச் சிந்தித்தவர் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனலாம்.

பயன்பட்ட நூல்
டாக்டர் தொ.பரமசிவன்    நியூ செஞ்சுரி புக் பிரைவேட் விமிடெட்41 – பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் ஆம்பத்தூர், சென்னை – 600 098 ஏழாம் பதிப்பு ஆகஸ்ட் 2006

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

* - முனைவர் த. அமுதா, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி(தன்னாட்சி), வேலூர் - 2 -

Last Updated on Saturday, 07 November 2020 09:46