பத்தி 2 இணைய வெளியில் படித்தது

Sunday, 27 December 2015 00:51 சத்யானந்தன் சத்யானந்தன் பக்கம்!
Print

ஊடகங்களுக்கு மனசாட்சி உண்டா? இருக்க வேண்டுமா? - கீற்று இணையக் கட்டுரையை முன் வைத்து  - சத்யானந்தன்

இந்தக் கேள்வி முதலில் எழுப்பப் படலாமா என்ற சர்ச்சைக்கே இடமுண்டு. ஊடக சுதந்திரம் என்ன விலை கொடுத்தாலும் நிலை நாட்டப்பட்டுப் பேணப் பட வேண்டியதே. ஊடகங்களே ஒரு சமுதாயத்தின் ஒற்றைச் சாளரம் என்றே சொல்லி விடலாம். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஊடகத்தில் வெளிவருபவையின் உள்நோக்கம், அரசியல், வணிக நோக்கம் எவ்வளவோ இருக்கலாம். ஆனால் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டால் சமூகத்தின் முன் எந்த விஷயமுமே வெளிச்சமுமாகாமல் விவாதிக்கவும் படாமல் பெரிய அநீதிகள், சுரண்டல்கள், மீறல்கள் எதுவுமே வெளிவராமற் போகும். தம் உரிமைகள் என்ன என்று மக்களுக்கு நினைவூட்டும் அதைப் பறிக்கும் செயல்களை வெளிச்சமிடும் அரும்பணிக்கு இடமே இன்றிப் போகும். சமுதாய மாற்றத்துக்கு நம்பிக்கை தரும் ஒரே பாதை அடைபட்டுப் போகும்.

அதே சமயம் இந்திய அரசின் ஊடகச் சட்டங்களை வாசித்தவர்கள் அறிவார்கள் சாராம்சமாக சட்டங்கள் சொல்வது சுயகட்டுப்பாடு ஒன்றையே. ஒழுங்குமுறையாளர் கேட்பது ஒரு விளக்கமே. கடும் சட்டங்கள் 1977க்கு முன் இருந்தன. இது ஒரு பெரிய சரடு. பின்னர் காண்போம்.

எனவே ஊடகங்கள் சட்ட அடிப்படையிலோ அல்லது தார்மீக அடிப்படையிலோ சுயகட்டுப்பாடு ஒன்றைக் கண்டிப்பாகக் கொள்ளத் தான் வேண்டும். ஊடகங்களில் வரும் பரபரப்பான பலவற்றை நான் வாசிப்பதே இல்லை. குற்றங்களுக்கும் வம்புகளுக்கும் வதந்திகளுக்கும் தரப்படும் முக்கியத்துவம் பல சமயங்களில் தரக்குறைவானவை. எனவே இளையராஜாவுடன் ஊடக நிருபர் ஒருவருக்கு என்ன மோதல் என்றெல்லாம் நான் ஆழ்ந்து போகவே இல்லை. தற்செயலாக இன்று (23.12.2015) தமிழ் ஹிந்து நாளிதழில் 'வெள்ளச் சேதம் பற்றிய விவாதம் திசை மாற பீப் பாடல் குறித்த சர்ச்சையே காரணமா என்று ஒரு கணிப்புக்கான கேள்வியைப் பார்த்தேன். அது என்னை உலுக்கிப் போட்டது.

சமுதாயம் தன்னையும் அரசியல்வாதிகளையும் நடுநிலையாய் விமர்சித்துக் கொள்ளும் ஒரு ஆரோக்கியமான விவாதச் சூழலை எல்லாப் பத்திரிக்கை தொலைக்காட்சி இணையம் எங்கும் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். அது திசை மாறிப் போய் விட்டது. மிகவும் மட்டமான ஒரு விஷயத்துக்குத் தரப்பட்ட முக்கியத்துவத்தால். பெண்கள் கண்ணியமாக காட்டப்படுவது மற்றும் ஆபாசமாகச் சித்தரிக்கப் படாது இருப்பது மிகப் பெரிய விவாதத்துக்கு அருமையான மையப் பொருள். விளம்பரங்களைப் பெண் அமைப்புகள் அவதானிக்க வேண்டும். பல ஆண்டுகளாக தரம் தாழ்ந்து வருவது தென்படும்.

இந்தப் பின்னணியிலேயே கீற்று இதழில் 'யாருக்காக வேலை செய்கிறீர்கள் பத்திரிக்கையாளர்களே?' கட்டுரையை நாம் வாசிக்கிறோம். அதற்கான இணைப்பு ----- இது. வெ.தனஞ்செயன் தமது அறச் சீற்றத்தை இவ்வாறு பதிவு செய்கிறார்:

'அரிதான காட்சியாக வட இந்திய ஊடகங்கள் தமிழக வெள்ளத்தைப்பற்றி பேசுகின்றன, வட இந்திய ஊடகங்கள் ஏரியை ஏன் தாமதமாக திறந்தீர்கள் எனக்கேள்வியை எழுப்பும் வரை , தமிழக ஊடகங்கள் ஏன் அந்தக்கேள்வியை எழுப்பவில்லை, வெள்ளப்பேரிடரை உருவாக்கிய செயல்படாத அரசு, ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டுமே கவனமாக இருப்பதாக கடுமையாக இணையத்தில் விமர்சிக்கப்பட்ட பின்புதானே பத்திரிக்கைகள் வாயைத்திறக்கின்றன, ஆட்சியாளர்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட‌ மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடினார்கள், இப்படி எத்தனைப்பத்திரிக்கையாளர்கள் ஆள்பவர்களை எதிர்கொண்டீர்கள்? இன்று இளையராசாவை சங்கமாக சேர்ந்து எதிர்கொள்வதில் மட்டும் ஏன் இத்தனை ஆர்வம்?

செயல்படாமல் வெள்ளப்பேரிடரை உருவாக்கிய அரசு, நிவாரணப்பணிகளையும் செய்யாமல் தலைநகர் மூழ்கிக்கிடந்த போது, ஆட்சியாளர்களுக்கு எதிராக வராத கோபம் இன்று வருகிறது. தன் வாழ் நாள் சேமிப்பை எல்லாம் வெள்ளத்திடம் வாரிக்கொடுத்துவிட்டு நிற்கும் மக்களிடம், ஆபாசப்பாடலை பற்றி திரும்ப திரும்ப பேசி ஆட்சியாளர்களைக்காப்பாற்றுகின்றீர்கள். சிம்பு கூட தனது ஆபாசப்பாடல் மக்கள் இந்த துயரத்தில் இருக்கும்போது, வேறொருவர் திருடி வெளியிட்டதற்காக வருந்துவதாக கூறுகிறார், ஆனால் அந்தப்பாடலைப்பற்றி திரும்ப திரும்ப பேச வேண்டும் கேட்க வேண்டும் என நினைக்கும் உங்கள் வக்கிரம்தான் இன்னும் வருத்தம் தெரியவிக்கவில்லை.

இப்படி மக்களின் பேரிடர்த் துயரை பின்தள்ளி ஒரு ஆபாச (சர்ச்சைப்) பாடலை முன்னிருத்தி திரும்ப திரும்ப பேசும், இளையராஜாவுக்கு எதிராக அறிக்கைவிடும் பத்திரிக்கையாளர்களை பார்த்து கேட்க வேண்டியிருக்கிறது, மக்களைத்திசைத்திருப்பி யாருக்காக வேலை செய்கிறீர்கள் பத்திரிக்கையாளர்களே?'

இன்று வெகு ஜனம் வாசித்து அறிபவை மிகக் குறைவு. காணொளியாகவே விவாதங்கள் அல்லது செய்திகள் வழி அறிகிறார்கள். அரிதாகவே அதைத் தாண்டி மேற்செல்கிறார்கள். காட்சி ஊடகங்கள் இதைக் கண்டிப்பாகக் கருத்தில் கொண்டு மக்கள் தரும் கவனம் சமூக முக்கியத்துவமுள்ள விஷயங்களில் குவிய வழி வகை செய்ய வேண்டும்.

ஊடக உரிமை எப்போதும் இருக்கட்டும். சுய கட்டுப்பாடும் திசை வகுத்துக் கொள்ளுதலும் அவர்களிடம் நாம் எதிர்ப்பார்ப்பவை. அந்த எதிர்பார்ப்பு 'நீங்கள் துரோகம் செய்ய மாட்டீர்கள்' என்னும் நன்னம்பிக்கை தொனிப்பது.

(பின் குறிப்பு: கணிப்பின் முடிவுகள் 24.12.2015 தமிழ் ஹிந்துவில் வெளியாகி உள்ளன. தமிழக வெள்ள பாதிப்புகள் மீதான அவசிய விவாதங்களை, கசியவிடப்பட்ட சிம்புவின் பீட் பாடல் தொடர்பான சர்ச்சை மூழ்கடித்து விட்டது என்ற பார்வைக்கு முக்கியக் காரணம் - செய்தி ஊடகங்கள்- 63%, சமூக வலைதளங்கள் - 23%, பீப் பாடல் எதிர்ப்பாளர்கள் - 14%)

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 04 January 2016 18:47