பத்தி 11: இணைய வெளியில் படித்தவை

Thursday, 31 March 2016 21:13 - சத்யானந்தன் - சத்யானந்தன் பக்கம்!
Print

ஜெயந்தி சங்கரின் சிறுகதை கடத்தல்காரன் - நவீனத்துவத்தின் நுட்பம்

எழுத்தாளர் சத்யானந்தன்ஜெயந்தி சங்கர்யதார்த்தவாதம் என்னும் புனைவு மற்றும் வாசிப்பு இன்றும் இருப்பதே. நவீனத்துவம் அதன் மாற்றாக அதை அனுப்பி விட்டு வந்ததல்ல. நவீனத்துவம் வாசகரின் வாசிப்பும் புரிதலும் செறிவு பெற்றதன் அடையாளம்.. இன்று படைப்பாளிகளுக்கு யதார்த்த நவீனப் புனைவு இரண்டுமே உள்ளடக்கம் அல்லது மையக்கருவை ஒட்டி பாங்காகப் பயன்படுகின்றன.

ஒரு பிரதிக்குள் என்ன வர வேண்டும் என்பது ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட சுதந்திரமான தேர்வு. அவர் சிந்தனையைத் தூண்டும், மனமாற்றத்தை வேண்டும் ஒரு கருத்தை முன் வைக்கலாம். அது அவர் மனதில் தீவிரமாகப் படும் ஒன்றை அவர் வாசகருடன் பகிர்வது இயல்பானதே. அது பிரசாரமாக இல்லாமல் கலையாக நுட்பமாக வெளிப்படும் போது இலக்கியத்துக்கு அணி சேர்க்கும் பங்களிப்பாகிறது.

முதலில் ‘கடத்தல்காரன்’ சிறுகதையை வாசிப்போம். அதற்கான இணைப்பு --  இது.

முதல் வாசிப்பில் நாம் இதை என்னவாகக் காண்கிறோம்? கதை சிங்கப்பூரில் நடப்பதை நாம் ரயில் பயணத்தின் ஊடேயும் மற்றும் உரையாடல்கள் வழியும் அறிகிறோம். இல்லையா? சீன முதியவர் பலரிடமும் மிகவும் அடக்கமான குரலில் மெலிதாகக் கேட்டது என்ன என்பதும் நமக்குத் தெரியும். அதை ஏன் மெலிதான குரலில் கேட்டார் என்பதும். சிங்கப்பூரில் பிச்சை எடுப்பது சட்டரீதியாகக் கடுமையாகத் தடை செய்யப்பட்டது. பிச்சை போட்டவரும் விதிவிலக்கல்ல. தண்டனை உண்டு. பலரிடமும் கேட்டவர், மலாய், சீன, தமிழ் பயணிகளிடம் அவர் பாரபட்சமின்றிக் கேட்கிறார். இறுதியில் ஒரு தமிழ்ப் பயணி பயந்து பயந்து ஆனால் தவறாமல் தந்து செல்கிறார். இதற்குப் பிறகு நாம் கதையின் தலைப்பைப் படிக்கிறோம். கடத்தல்காரன். யார் கடத்தினார்? எதைக் கடத்தினார்? கடத்தல் என்பது என்ன? ஒரு ஊரில் கிடைக்க அரிதான ஒன்றை, வேறு ஊரிலிருந்து கள்ளத்தனமாகக் கொண்டு வருவது இல்லையா? சிங்கப்பூரில் சட்டம் மற்றும் பண்பாட்டு அடிப்படையில் பிச்சைக்காரர்களை ஊக்குவிக்காத பாரம்பரியம் இருக்கும் போது தமிழ் ஆள் அங்கே தமது ஊர்க் கலாச்சாரமான பிச்சை போடுவதைக் கடத்தி விட்டார்.

கதையின் மிகப்பெரிய பலம் தலைப்பு கதையின் மீது வைக்கப்பட்ட ஒரு திலகம் போலில்லாமல் கதையின் முக்கியமான அங்கமாக கதாசிரியர் தம் பதிவைப் புரிந்து கொள்ள வைத்திருக்கிற முக்கியமான பதப் பிரயோகமாக வந்திருப்பது கவிதைகளில் மட்டுமே காணப்படுவது. சிறுகதைகளில் அபூர்வமாகவே கிடைப்பது. மிகவும் பாராட்டத்தக்கது.

இந்த இடத்தில் ஒரு விமர்சனக் கேள்வி கண்டிப்பாக எழும். சிங்கப்பூர் பற்றித் தெரியாதவர்களுக்காக ஏன் எந்தக் குறிப்பும் கொடுக்கப் படவில்லை? நவீனத்துவமான இந்தப் படைப்பில் குறிப்புக்கு இடமில்லை என்பதைத் தாண்டி நாம் மேம்பட்ட புரிதல் ஒன்றை நோக்கி நகர வேண்டும்.

நான் சாதாரணமான உடலமைப்பு உள்ளவன். மாற்றுத் திறனாளி பற்றிய கதை. எத்தனை குறிப்பு கொடுத்து எனக்குப் புரிய வைப்பது? அப்படிச் செய்ய கட்டுரை போதுமே? புனைகதை எதற்கு? பெண், மூன்றாம் பாலார், அகதிகள், மாற்றுத் திறனாளிகள், மனப்பிறழ்வு உள்ளவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான சொரணை உண்டு. அதைக் கதையின் நுட்பத்தில் இருந்து நாம் காணும் போது அந்த உலகின் தரிசனமும் நவீனத்துவத்தின் வீச்சும் ஒன்றாகப் பிடிபடுகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தக் கதை இன்றும் நவீனத்துவத்துக்கு சிறந்த மாதிரியான ஒரு கதை. இது தமிழில் வந்து பிறகு ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டது.

ஆளுமை வழியாக நாம் வாசிப்பது நம்மைக் குறுகிய எல்லையில் நிறுத்தி விடும். மறுபக்கம் ஒரு ஆளுமையின் தனித்தன்மையை நாம் அவரது படைப்புக்களில் வெளிப்படும் ஆதார சுருதியை வைத்து அறிந்து கொள்கிறோம். ஜெயந்தி பல நாட்டு, இன மொழிப் பின்னணியுள்ளவர்களின் பண்பாடு மற்றும் வாழ்க்கை முறை பற்றி புனைவு அபுனைவு வழி நமக்குப் பல சாளரங்களைத் திறக்கிறார். தமிழில் அவருக்குத் தனியிடம் தருவது இதுதான்.

 

http://sathyanandhan.com
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 10 April 2016 05:18