புதுவை ராமன்இழப்புக்கள் ஏற்படுவது இயற்கைதான், ஆனால் இவ்வளவு விரைவாக ஏன் என்பதுதான் புரியவில்லை. ‘இந்த மண்ணில் மாரடைப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பயமூட்டுவதாகவும், அதிர்ச்சி தருவதாகவும் இருக்கின்றது’ என்று சென்றவாரம்தான் நண்பர் பொன்னம்பலம் குகதாசனின் (பூநகரான்) மறைவு பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இலக்கிய நண்பர் புதுவை இராமனின் திடீர் மறைவு மீண்டும் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றது. சமீபத்தில் டாக்டர் சூரியபாலன், அதிபர் கனகசபாபதி, பேராசிரியர் செல்வா கனகநாயகம், பூநகரான் குகதாசன், புதுவைராமன் இப்படியே ஒவ்வொருவராக நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள். நேற்றிருந்தார் இன்றில்லை என்பது இதைத்தான் நினைவூட்டுகின்றது.

நண்பர் புதுவை இராமன் அவர்களைக் கடைசியாக எஸ் ரி. சிங்கம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவின்போது கனடா கந்தசுவாமி கோயில் கலையரங்கத்தில் சந்தித்திருந்தேன். ஸ்ரீசிவா, உதயன் ஆகியோரோடு உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் எங்களைப் புகைப்படம் எடுக்க விரும்பினார். ‘கொஞ்சம் சிரிச்சா என்ன?’ என்று புகைப்படம் எடுக்கும்போது கேட்டார். உண்மைதான் நாங்கள் இயல்பான புன்னகையை மெல்ல மெல்லத் தொலைத்து விட்டோம் என்பதை அவர் நினைவூட்டினார். மனதிலே எதையும் வைக்காது, பாரபட்சம் பாராது எல்லோரோடும் இனிமையாகப் பழகக் கூடியவர். நான் திரைக்கதை வசனம் எழுதி வெளிவந்த ஸ்ரீமுருகனின் சிவரஞ்சனி படத்தில் புதுவை இராமனும் நடித்திருந்தார். இன்று அவர் இல்லை, அவரது நினைவுகள் மட்டும் எம்மோடு இருக்கின்றது.

இச்சந்தர்ப்பத்தில் இலக்கிய நண்பர் புதுவை இராமனின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்து, அவரது மனைவி, குடுத்பத்தினருக்கும், உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் பதிவுகள் இணைய இதழ் மூலம் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.