தாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)

Wednesday, 27 May 2020 01:55 - ஆங்கில மூலம்: கவியோகி இரவீந்தரநாத் தாகூர்| தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா. - உலக இலக்கியம்
Print

காவியக் கவியோகி தாகூர் (1861-1941)- சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா -எழுத்தாளரும் , அறிவியல் அறிஞருமான ஜெயபாரதன் அவர்கள் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிக் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். மிகுந்த வரவேற்பைப்பெற்ற அக்கவிதைகள் திண்ணை இணைய இதழில் வெளியானவை. பின்னர் நூலுருப்பெற்றவையும் கூட.  அவற்றை  மீள்பிரசுரமாகப் பதிவுகளில் வெளியிடுகின்றோம்.  சில மீள்பிரசுரங்கள் உலக இலக்கியத்தின் வளத்தை அறிவதற்கு உரியவை. இம்மொழிபெயர்ப்பும் அத்தகையது.  இக்கவிதைகளுக்காகவே அவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரைப்பற்றி குறிப்பாக இக்கவிதைகளைப்பற்றி 'இரவீந்திரநாத் தாகூர்' என்னும் விக்கிபீடியாக் கட்டுரை பின்வருமாறு குறிப்பிடுகின்றது:  " கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். [3] இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.[4] தாகூரின் படைப்புகள்ஆன்மீகததை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது.[5]சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார்.[6] இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. . இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரது நூல்களில் சிலவற்றை த. நா. குமாரசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்."  - பதிவுகள் -


கீதாஞ்சலி (6): மாலையில் சேராத மலர்

சிறிய இப்பூவைப்
பறித்து
மாலை தொடுக்க
எடுத்துக்கொள் தாமதப்
படுத்தாமல்!
இல்லாவிடில் இம்மலர் வளைந்துபோய்
கீழே வீழ்ந்து
புழுதி மண்ணில் துவளும்,
என்று அஞ்சும்
என் மனம்!
இப்போது நீ பறிக்கா விட்டால்
கோர்க்கும் உன்
ஆரத்தில் அம்மலர்
ஓரிடம் பெறாமல் போய்விடலாம்!
சிறிது சிரமப்பட்டு
பொறுமையுடன் உந்தன் கையால்
பறித்திடு அம்மலரை
அதற்குரிய
மரியாதை அளித்து!

உனக்கு பூமாலை
சமர்ப்பித்து
வணங்கும் நேரம் தவறிப் போய்,
இன்றைய பொழுதும்
எனக்குத் தெரியாமல்
முடிந்து போய்விடும் என்று
நடுங்கும் என் நெஞ்சம்!
அழுத்தமான வண்ணம்
பளிச்செனத் தோன்றாமல்,
நறுமணமும் சிறிதளவே
நாசி நுகர்ந்து வந்தாலும்,
அம்மலரை
கரத்தால் பறித்து, உந்தன்
திருப்பணிக்கு அர்ப்பணித்திடு,
பொழுதின்று
கழிந்து போவதற்குள்!

 


கீதாஞ்சலி (7): உன் ஆடம்பர ஒப்பனைகள்

எனது கவித்துவ
மனது
ஒருங்கே புறக்கணிக்கும்,
உனது
ஒய்யாரக் கவர்ச்சி
ஆபரணங்களை!
ஒப்பனை புரிவதும்
ஆடம்பர ஆடை அணிவதும்
பெருமை தரவில்லை
உனக்கு!
நமது
நட்பின் இணைப்பை
நாசம் செய்வது
நகை அலங்காரம்!

உனக்கும்
எனக்கும் உள்ள
உறவின்
குறுக்கே நுழைவது!
நெருங்கி உள்ள போது
உனது
அணிகள் உண்டாக்கும்
சலசலப்பு ஓசை
முணுமுணுக்கும்
உன் இனிய மொழிகள்
என் செவியில் விழாமலே
அமுக்கி விடும்!

மகாகவிப் பெருமானே!
உந்தன்
திருப்பாதங்களின்
அருகே
அமர்ந்துள்ளேன்! என்னுள்ளத்தை
அவமானப்படுத்தும்
கவிஞன் என்னும்
கர்வம்
மகத்தான நின் காட்சி முன்னே
மாய்ந்து போனது!
நேரான பாதையில்
சீராகச் சென்று
எளிய வாழ்வைப் பின்பற்ற
வழியை மட்டும்
நாடுவேன்,
புல்லிலைப் புல்லாங் குழல்
உன்மீது
மெல்லிசை பொழிந்து
மீட்டுவது போல!


கீதாஞ்சலி [8]: குழந்தைக்குப் போடும் கால்கட்டு!

சிறுவனை
இளவரசன் போல் ஆடையில்
சிங்காரித்து
தங்கச் சங்கிலி
கழுத்தில் அணிவித்து
வெளியில்
விளையாட விட்டால்
களிப்பு விளையாமல் போகும்!
ஒவ்வொரு படியில் ஏறும் போதும்
தடையாய் நிறுத்தும்,
சிறுவன்
உடையின் பகட்டு!
பயந்து
பட்டாடை கிழிந்திடும் என்று
தயங்கி நிற்பான்,
பையன்!
புழுதிக் கறை படிந்து
அழுக்காகும் என்று
உலகப் பழக்கத்தை ஒதுங்கி
விலகிச் செல்வான்,
குழந்தை!
வீட்டை விட்டு
வெளியே நகரவும் அஞ்சி
கூட்டில்
அடைபட்டுக் கிடப்பான்!

இது நெறியன்று!
உடல்நலம் அளிக்கும்
பூதள வெளியில் ஓடியாடும்
சிறுவன்
விளையாட்டைத் தடுப்பது,
முறையன்று!
தினமும் நடமிடும்
மாபெரும்
மனிதச் சந்தையில் இணைந்து
கூடிக் குலவி
ஆடிப் பழகும் உரிமையை
அபகரிப்பது,
செல்வனுக்கு
எப்பலனும் அளிக்காது!
அன்னையே! நீ
உன் குழந்தைக்குப் பூட்டியுள்ள
அடிமைத் தளை,
நிரந்தர
வளர்ச்சியைத் தடுக்கும்
கால்கட்டு விலங்கு!


கீதாஞ்சலி (9): அன்போடு அளிப்பதை ஏற்றுக்கொள்

அறிவு கெட்டவனே!
உன் தோளிலிலே சுமந்திடு,
உன் பாரத்தை!
பிறரிடம்
பிச்சை எடுப்பவனே!
முதலில் உன் வீட்டு வாசல்
முன்னின்று யாசித்திடு!
அனைத்தையும்
தாங்கிக் கொள்ளும்
இறைவன் மேல் சுமையை
இறக்கி விட்டு
நிம்மதியாய் இருக்கிறாய்
வருத்தப் படாது,
திரும்பிப் பாராது!

பேராசை பிடித்து நீ
வெளிவிடும்
பெருமூச்சு சட்டென
விளக்கின் ஒளியை அணைத்து
இருளாக்கி விடுகிறது!
களங்கம் பிடித்த
கரங்கள்
காணிக்கை அளிக்கும்
வெகுமதியைக்
கையேந்திப் பெற்றுக் கொள்ளாதே!
அழுக்கேறியது,
அந்த நன்கொடை!
புனித அன்புடன்
கனிந்த உள்ளம்
அளிப்பதை மட்டும்
கைநீட்டி ஏற்றுக்கொள்!


கீதாஞ்சலி (10): ஏழைகளின் தோழன் நீ

இங்கே இருப்பது நீ
பாதங்களை ஓய்வாக வைக்கும்
உந்தன்
பஞ்சணைப் பீடம்!
ஏழை, எளியவர்,
எல்லாம் இழந்தவர்,
கீழின மாந்தர் அனைவரும்
வாழும் குடித்தளம் அது!
குனிந்து
வணங்கி உன்னை நான்
கும்பிட வரும் போது,
எனது
பணிவுக் கரங்கள் பற்றித்
தொட முடியாத
பாதாளத்தில்,
ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர்,
கீழே தள்ளப்பட்டவர்
அனைவரும்
வாழும் அந்தப்
பாழும் பள்ளத்தில் நின்றன்
பாத மலர்கள்
இளைப்பாறு கின்றன!

செருக்குடன் எவனும் ஒருபோதும்
அருகில்
நெருங்க முடியாது,
ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர்,
தாழ்த்தப்பட்ட,
இனத்திடையே நீ,
எளிய ஆடை அணிந்து
உலவி வரும் தளங்களை!
என்னிதயம் என்றைக்கும்
பாதை காண முடியாத
ஒதுக்குப் புறங்களில்
ஒடுங்கிவரும்
துணையற்ற எளியோரிடம்,
கீழே அமுக்கப்பட்ட மக்களிடம்,
ஏழை மாந்தரிடம் என்றென்றும்
தோழமை
கொண்டுள்ளாய் நீ!

[ தொடரும் ]

 

Last Updated on Wednesday, 27 May 2020 02:03