இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2008 இதழ் 108 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

கடவுளின் உதவியாளர்கள்

- அ.முத்துலிங்கம் -


அ.முத்துலிங்கம் இரவு ஒரு மணிக்கு தொலைபேசி அடிப்பது நின்றுவிட்டது. இரவு இரண்டு மணிக்கு தொலைபேசி அடிப்பது நின்றுவிட்டது. ஆனால் அன்று இரவு மூன்று மணிக்கு தொலைபேசி மணி சத்தமாக ஒலித்தது அதிசயமாக இருந்தது. நித்திரை முறியாமல் பாதியில் யார் என்றேன். அது என் மகன்தான். அந்த நேரத்தில் அவன் அழைப்பதே இல்லை. சூரியன் தன் தினப் பயணத்தில் ரொறொன்ரோவில் உதித்து முகத்தைக் காட்டி மூன்று மணி நேரத்துக்கு பிறகுதான் மகன் இருக்கும் இடத்தில் தோன்றுவான். அவ்வளவு தூரம். ஏதாவது பிரச்சினையா என்றேன். 'இல்லை அப்பா, விமான நிலையத்துக்கு போய்க்கொண்டிருக்கிறேன். அவசரமான அழைப்பு. புளோரிடாவில் உள்ள எவர்கிளேட்ஸ் வனப்பகுதிக்கு உடனேயே புறப்பட்டாக வேண்டும்.' எதற்கு என்று கேட்டபோது 'மலைப்பாம்புகளைப் பிடிக்க' என்று கூறிவிட்டு டெலிபோன் இணைப்பை துண்டித்தான்.

என்னுடைய மகன் இளவயதை ஆப்பிரிக்காவில் கழித்து, மேற்படிப்புக்காக அமெரிக்கா போகும்வரைக்கும் அங்கேயே படித்தவன். அது ஒரு பின்தங்கிய கிராமத்துப் பள்ளிக்கூடம். மழை பெய்து வெள்ளம் அடித்தால் பள்ளிக்கூடம் மூடிவிடும். ஆட்டு மந்தைகள் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து ஆக்கிரமித்தால் பள்ளிக்கூடம் மூடிவிடும். காடுகள் தீப்பற்றி எரிந்தால் பள்ளிக்கூடம் மூடிவிடும்.

காலையில் பிள்ளைகளைக் கூட்டிவரும் ஆப்பிரிக்கப் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். 'பள்ளிக்கூடம் விட்டதும் நேராக வீட்டுக்கு ஓடிவந்துவிடு. வழியில் உன் கால் சப்பாத்தை யாராவது பறிக்க வந்தால் இன்னும் வேகமாக ஓடு.' என் மகனுக்கு நான் அப்படி புத்திமதி ஒன்றும் வழங்கவில்லை. ஆனால் திரும்ப அழைத்துப்போக வரும்போது கேட்கும் முதல் கேள்வி ஒன்று உண்டு. 'இன்று உன் கன்னத்தில் யாராவது அடித்தார்களா?' எந்நேரமும் பிரம்புகளைக் காவிக்கொண்டு அலையும் வாத்தியார்களிடம் அவன் வாங்கிய அடியிலும் பார்க்க சக மாணவர்களிடம் வாங்கிய அடிகள்தான் அதிகம். அவனுடன் படித்தவர்கள் அவனை விட வயதில் மூத்தவர்கள். மாணவர்கள் நிரையாக நிற்கும்போது உடைந்துபோன பல்லுப்போல சரி பாதி உயரத்தில் மகன் தோற்றமளிப்பான். அவன் கொண்டுபோன மதிய உணவை சுற்றி இலையான்கள் கூட்டமாக மொய்க்க, ஒரு பதுங்கும் பிராணி போல இரண்டு பக்கமும் பார்த்து பார்த்து சாப்பிடுவான். கொஞ்சம் அசந்தால் அதையும் யாராவது பறித்து உண்டுவிடுவார்கள். புத்தகத்தை திருடி விற்றுவிடுவார்கள். கையெட்டும் தூரத்தில் நின்றால் எட்டி அவன் கன்னத்தில் அடிக்காமல் நகரமாட்டார்கள். ஏன் என்று கேட்டால் அதற்கு முன் ஒரு வெள்ளைக் கன்னத்தில் அடித்துப் பார்த்ததே இல்லை என்று பதில் வரும். கன்னம் வீங்கியிருந்தால் வீட்டுக்கு போகும் வழியில் நான் ஏதாவது பரிசுப்பொருள் வாங்கி கொடுப்பேன். அவன் முகம் மலர்ந்து கன்ன வீக்கம் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் மறைந்துவிடும்.

ஒருநாள் அவனுடைய வகுப்பு ஆசிரியை மிஸஸ் கமரா என்னை வந்து பார்க்கச் சொன்னார். இரவு நடன விருந்துக்கு அழைக்கவா என்னைக் கூப்பிட்டார். ஏதோ முறைப்பாடுதான். சற்று முன்னுக்கு வந்து குவிந்திருக்கும் சொண்டுகள் அவருக்கு. அவர் முகத்தைப் பார்ப்பவர்கள் முதலில் காண்பது அவருடைய சொண்டுகளைத்தான். கைவீசி நடந்து வந்தபோது அவருடைய இரண்டு புஜங்களும் அவர் மார்புகளை பக்கவாட்டில் உரசின. மகன் என்னுடைய இரண்டு கால்களுக்கும் இடையில் நின்றான். மிஸஸ் கமரா வாருங்கள் என்று சொல்லிவிட்டு முன்னே நடக்க நாங்கள் பின்னே நடந்து தலைமையாசிரியரின் அறைக்கு சென்றோம். விவகாரம் பெரிதாக இருக்குமோ என்று நெஞ்சு திடுக்கிட்டது. இந்தச் சின்ன வயதில் மகன் சின்னக் கொலை ஏதும் செய்திருப்பானோ என்று மனம் பதைத்தது.

மேசையிலே ஒரு நீள்சதுரப் பலகையில் 'Headmaster' என்று கையினால் எழுதி வைத்திருந்தது. அதற்கு பின்னால் ஒருவர் உட்கார்ந்து நிதானமாக அவித்த நிலக்கடலையை தின்றுகொண்டிருந்தார். விசாரணை ஆரம்பித்தது. மிஸஸ் கமரா பேசினார். 'உங்கள் மகன் பாம்புகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறான். அவன் தான் பாம்புகளுடன் வீட்டுக்கு கீழேயிருந்து விளையாடுவதாக கட்டுரையில் சொல்கிறான். நான் விசாரித்தபோது அது உண்மை என்று வாதிடுகிறான். ஆப்பிரிக்கப் பாம்புகள் ஆபத்தானவை. கொத்தினால் சாவு நிச்சயம். அதிலும் துப்பும் நாகப்பாம்பு பயங்கரமானது. கண்களிலே நஞ்சைத் துப்பினால் கண்பார்வை ஒரேயடியாகப் போய்விடும்.'

காட்டுப் பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்க வீடுகளை உயரமான மரத்தூண்களின்மேல் கட்டியிருப்பார்கள். காட்டு மிருகங்கள் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லைக்கு செல்லும்போது வீட்டுக்கு அடியாலே போகும். ஓநாய்கள், ஆடுகள், மான்கள், பாம்புகள் எல்லாமே கடக்கும். என் மகன் வீட்டுக்கு கீழே போய் உட்கார்ந்து விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தான்.

'நீ பாம்புகளுடன் விளையாடுகிறாயா?' என்று கேட்டேன். 'இல்லையே, அவைதான் என்னுடன் விளையாட வருகின்றன' என்றான். பாம்புகள் மேல் அவனுக்கு அளவற்ற பற்று. சில வாரங்களுக்கு முன்புதான் அவனுடைய தொந்திரவு தாங்காமல் ஒரு ரப்பர் பாம்பை வாங்கிக் கொடுத்திருந்தேன். அவன் அதனுடனேயே விளையாடியபடி நாட்களைக் கழித்தான். கால்சட்டைப் பைக்குள் ரப்பர் பாம்பை எப்பவும் காவிக்கொண்டு திரிவான். படுக்கும்போது பார்த்தால் படுக்கையின் பக்கத்தில் அதுவும் படுத்திருக்கும். காலையில் எழும்பியதும் அன்றுதான் புதிதாக பார்ப்பதுபோல பாம்பை எடுத்து வைத்து பிரியமாகக் கொஞ்சத் தொடங்குவான்.

பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றபோது அவனுக்கு ஒரு கட்டளை இருந்தது. மாதா மாதம் அவனுடைய வரவு செலவுக் கணக்குகளை என் பார்வைக்கு அனுப்பவேண்டும். ஒரு மாதம் வந்த கணக்கில் 'உயிரியல் பரிசோதனை 200 டொலர்' என்று குறிப்பிட்டிருந்தது. சரி, ஏதோ தீவிரமான படிப்பு என்று விட்டுவிட்டேன். விடுமுறைக்கு நானும் மனைவியும் பல்கலைக்கழக விடுதிக்கு போயிருந்தபோது தன்னுடைய ஒடுங்கிய அறையையும், மேசையையும், புத்தகங்களையும் காண்பித்தான். ஒரு நீண்ட கண்ணாடிப் பெட்டிக்குள் மலைப்பாம்பு ஒன்று வசித்தது. அதுதான் அவனுடைய உயிரியல் பரிசோதனை. மலைப்பாம்புக்கு செத்த ஒன்றை உண்ணத் தெரியாது. வாரத்துக்கு இரண்டு தடவை உயிருள்ள எலியையோ தவளையையோ வாங்கி உண்ணக் கொடுப்பான். மாதா மாதம் வரும் கணக்குகளில் எலி, தவளைகள் வாங்கிய செலவும் அடங்கும். அவன் படிப்பை முடித்தபோது அதே மலைப்பாம்பு பல அடிகள் வளர்ந்துவிட்டது. தன் நண்பன் ஒருவனுக்கு அதை 500 டொலருக்கு விற்றான் என்று பின்னர் கேள்விப்பட்டேன். மாதம் தவறாமல் அனுப்பிய வரவு செலவுக் கணக்கில் பாம்பு விற்று கிடைத்த காசுத் தொகையை அவன் வரவுப் பக்கத்தில் காட்ட மறந்துவிட்டான்.

என் மகன் விமான ஓட்டியாக வரத் தீர்மானித்தான். பின்னர் மருத்துவம் படிக்க திட்டமிட்டான். பாதியில் ஆங்கில இலக்கியத்தில் நாட்டம் சென்றது. இறுதியில் சூழலியல் விஞ்ஞானியாக ஆகியதற்கு காரணம் ஆப்பிரிக்க காடுகளில் பாம்புகளுடன் ஏற்பட்ட நட்பாகத்தான் இருக்கவேண்டும்.

ஏன் அவசரமாக எவர்கிளேட்ஸ் வனப்பகுதிக்கு மகன் போனான் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. அமெரிக்கா முன்பு ஒருமுறையும் சந்தித்திராத ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வழக்கமாக சூழலியல்காரர்களுடைய பிரச்சினை அழிந்துகொண்டு வரும் இனத்தை எப்படி மீட்பது என்பதாக இருக்கும். உதாரணமாக அமெரிக்காவில் அழிவின் விளிம்பை தொட்டுக் கொண்டிருக்கும் துருவக் கரடி, சாம்பல் ஓநாய், கருப்புக் கரடி, கரிபோ மான் ஆகியவற்றை எப்படி காப்பாற்றுவது என்று ஆராய்வார்கள்.

மலைப்பாம்புகள் ஆசியாவிலும் ஆப்பிரிக்கவில் மட்டுமே காணப்படுபவை. ஆனால் அமெரிக்காவின் எவர்கிளேட்ஸ் வனங்களில் மலைப்பாம்புகள் பெருகி அட்டூழியம் செய்தது ஆச்சரியமாகவிருந்தது. அவை அமெரிக்காவுக்கு முற்றிலும் புதியவை. என்ன நடந்ததென்றால் தனியார் சிலர் வளர்த்த பர்மிய மலைப்பாம்புகள் தப்பி காடுகளில் போய் ஒளிந்துகொண்டு பெருக ஆரம்பித்திருந்தன. இது பாரதூரமான விசயம் என்பதை தொடக்கத்தில் ஒருவருமே கண்டுகொள்ளவில்லை. சமீபத்திய கணக்கெடுப்பில் 10,000 மலைபாம்புகள் இந்த பகுதியில் வாழ்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது. எவர்கிளேட்ஸ் வனப்பகுதி ஆசியா போல பாம்புகள் வாழ்வதற்கு நல்ல சூழலாக அமைந்தது. நிலம் என்று நினைத்துக்கொண்டு போனால் தண்ணீர் வந்துவிடும்; தண்ணீர் என்று நினைத்தால் நிலம் தோன்றிவிடும். இரண்டுமே கலந்த அபூர்வ பிரதேசம். உண்பதற்கு ஏராளமான பறவைகளும் விலங்குகளும் மலைப்பாம்புகளுக்கு அகப்பட்டன. எதிரிகளே இல்லை, ஆகவே அளக்கமுடியாத வேகத்தில் அவை பெருகிவிட்டன. சில இருபது அடி நீள மலைப்பாம்புகளும் அங்கே உலாவின.

இதிலே ஆபத்து என்னவென்றால் அழிவின் நுனியில் இருக்கும் சில விலங்குகளை மலைப்பாம்புகள் விழுங்கி பசியை தீர்த்துக்கொண்டதுதான். மர எலி என்ற இனம் அருகி வந்தது. அவற்றுக்கு கொலர்கள் அணிவித்து அவற்றின் நடமாட்டத்தை விஞ்ஞானிகள் கண்காணித்தனர். ஒருமுறை ஓர் எலி ஆற்றிலே நீந்துவது கணினி திரையில் தெரிந்தது. ஹெலிகொப்டரில் துரத்திப்போய் பார்த்தால் ஒரு பர்மிய மலைப்பாம்பு நீந்திக்கொண்டிருந்தது. அதன் வயிற்றை பிளந்து பார்த்தபோது மர எலி ஒன்று இறந்துபோய்க் கிடந்தது.

இன்னொரு தடவை ஒரு மலைப்பாம்பு வயிறு வீங்கி இறந்து கிடந்தது. அதனுடைய வயிற்றை வெட்டி பரிசோதனை செய்து பார்த்தபோது ஐந்து அடி நீளமான முதலையை விழுங்கி செரிக்கமுடியாமல் முதலையும் செத்து பாம்பும் செத்துப்போனது தெரிய வந்தது. இரவு நேரங்களில் ரோட்டோரங்களில் மெல்லிய சூடு எழும்பும் தார்ச்சாலைகளில் மலைப்பாம்புகள் ஓய்வெடுப்பதை பல கார்ச்சாரதிகள் கண்டு அரண்டுபோய் பொலீசுக்கு தகவல் கொடுத்தார்கள்.

அப்போதுதான் சூழலியல்காரர்கள் விழித்துக்கொண்டார்கள். மலைப்பாம்புகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்பட தீர்மானித்தார்கள். என் மகன் இது விசயமாகத்தான் இரண்டு விமானம் பிடித்து 10 மணி நேரம் பயணம் செய்து அமெரிக்காவின் ஒரு விளிம்பிலிருந்து மறு விளிம்புக்கு போயிருக்கிறான். பல விஞ்ஞானிகள் ஒன்று கூடி பொது சனங்களுடனும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களோடும் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதித்திருக்கிறார்கள். பொதுசனங்களின் முழு ஒத்துழைப்பில்லாமல் ஒன்றுமே செய்யமுடியாது. மலைப்பாம்பு பார்ப்பதற்கு சுருண்டுபோய் சோம்பிக் கிடந்தாலும், சமயத்தில் கம்புயூட்டர் அம்புக்குறிபோல அதிவேகமாக நகரக்கூடியது. அதை பிடிப்பது கஷ்டம். யார் எங்கே, எந்த நேரத்தில் மலைப்பாம்பை கண்டாலும் அழைக்கவேண்டிய ஓர் அவசர எண்ணை உண்டாக்கினார்கள். 24 மணி நேரமும் அவற்றைப் பிடிப்பதற்கு ஒரு குழு வேலை செய்தது.

சில மாதங்களுக்கு முன்னர் நான் மகனைப் பார்க்க அமெரிக்கா சென்றிருந்தேன். விஞ்ஞானிகள் இயற்கையோடு ஒட்டி வேலை செய்யவேண்டும் என்பது அவன் கொள்கை. அன்று காட்டுக்குள் இரண்டு மைல் தூரம் நடந்தோம். ஒரு மரத்தைக் சுட்டிக்காட்டி அது பொண்டரோஸா மரம் என்றான். சாதாரணமாக அதன் விதையிலிருந்து இன்னொரு மரம் முளைப்பதில்லை. ஆனால் வனம் எரியும்போது தடிப்பான பட்டைகள் கொண்ட அந்த மரம் இலகுவில் எரியாது. அதன் விதைகள் சூட்டுக்கு வெடித்து அதிலிருந்து புதுமரம் முளைக்கும். ஒரு மரம் முளைப்பதற்காக பல மரங்கள் தீயில் எரிந்து இடம் தரும். 'இதுதான் இயற்கையின் விந்தை. கடவுள் இயற்கையை பார்த்துக் கொள்கிறார். எங்கள் வேலை கடவுளுக்கு உதவுவதுதான்' என்றான்.

எவர்கிளேட்ஸிலிருந்து மகன் தொலைபேசியில் அழைத்தபோது மர எலிகளின் எண்ணிக்கை நம்பிக்கை தருகிறதா என்று கேட்டேன். 'மிக மோசமாக இருக்கிறது. அவற்றின் எண்ணிக்கை தற்சமயம் 143 ஆக குறைந்துவிட்டது. மலைப்பாம்புகள் பெருகும் அதே சமயத்தில் மர எலிகள் அருகிவருகின்றன. பனிப்பிரதேசத்தில் மாட்டிய ஜாக் லண்டனின் கடைசித் தீக்குச்சிபோல ஆபத்தை கடப்பதற்கு எங்களுக்கு ஒரேயொரு வழிதான் கையில் உண்டு. மலைப்பாம்புகளை சீக்கிரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அல்லாவிட்டால் மர எலிகள் என்ற இனம் பூமியில் இருந்து ஒரேயடியாக மறைந்து போய்விடும்' என்றான்.

வர்கிளேட்ஸ் குழு இரவும் பகலுமாக பல மாதங்கள் பாம்புகளைப் பிடித்தது. மகன் வேலை முடிந்து தன் இடத்துக்கு திரும்பியதும் ஒரு மின்னஞ்சல் அனுப்பினான். அத்துடன் படம் ஒன்றையும் இணைத்திருந்தான். அது ஒரு மலைப்பாம்பு படம்

எவர்கிளேட்ஸ் குழு இரவும் பகலுமாக பல மாதங்கள் பாம்புகளைப் பிடித்தது. மகன் வேலை முடிந்து தன் இடத்துக்கு திரும்பியதும் ஒரு மின்னஞ்சல் அனுப்பினான். அத்துடன் படம் ஒன்றையும் இணைத்திருந்தான். அது ஒரு மலைப்பாம்பு படம். ஆரம்பத்தில் எனக்கு பாம்புகளிடம் அருவருப்பு இருந்தது உண்மை. ஆனால் போகப்போக அதன் அழகை ரசிக்க ஆரம்பித்திருந்தேன். படத்தில் இருந்த பாம்பு பதினைந்து அடி நீளமாக, கொழுத்து நேராநேரத்துக்கு சாப்பிட்டதால் வாய்த்த வழுவழுப்பான சருமத்தோடு காணப்பட்டது. அது ஒருவருக்கும் ஒரு தீங்கிழைத்ததில்லை. தன் பாட்டுக்கு, தனக்கு விதித்தபடி வாழ்ந்த பாம்பு. தங்கம், வெள்ளை, கறுப்பு நிறம். ஒரு நாட்டின் தேசியக்கொடிக்கு மிகப் பொருத்தமான வண்ணங்கள். என்னுடைய மகனின் கண்களில் ரப்பர் பாம்புடன் விளையாடியபோது மின்னிய அதே பரிவும், வாஞ்சையும் இன்றைக்கும் படத்தில் தெரிந்தது. மின்னஞ்சலில் இப்படி எழுதியிருந்தான், 'இதுதான் நான் பிடித்த மலைப்பாம்பு.'

இரண்டு நாள் கழித்து திடீரென்று ஒரு யோசனை தோன்ற மகனுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். 'இதுவரை பிடித்த மலைப்பாம்புகளை என்ன செய்தீர்கள்?' பதில் வந்தது.

'கொன்றுவிட்டோம்.'

amuttu@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner