இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2008 இதழ் 103  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

இலக்கியம்!

சம்பராசுர போர் அல்லது கைகேயி
காலத்தால் செய்த உதவி!

- முனைவர் மு. பழனியப்பன் -

முனைவர் மு. பழனியப்பன்கம்பர்காப்பியத்தின் சுவை அதன் முதன்மைக் கதையில் உள்ளதைப் போலவே அதன் கலைத் தன்மை கிளைக் கதைகளில் அமைந்து சிறக்கின்றது. கிளைக் கதைகள் என்பன படைக்கப் பெறாவிட்டாலும், முதன்மைக் கதை சிறக்கும் என்றாலும் படிப்பவருக்கு அது நிறைவளிக்காது என்ற காரணம் கருதியே கிளைக்கதைகள் காப்பியத்துள் அமைக்கப் பெறுகின்றன. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் குரக்குக்கை வானவன் கதை, மணிமேகலையில் இடம் பெறும் ஆதிரை கதை, கம்பராமாணத்தில் இடம் பெறும் அகலிகை கதை, திருத்தொண்டர் புராணத்துள் இடம் பெறும் மனுநீதிச் சோழன் கதை போன்றன இவ்வகைப்பட்டனவே. கம்பராமாயணம் பல கிளைக் கதைகளுக்கு இடமளிப்பதாக உள்ளது. இந்தக் கிளைக்கதைகள் காப்பியத்தின் தலைமை நோக்கத்திற்குச் சற்றும் மாறுபட்டு விடா வண்ணம் கம்பரால் படைக்கப் பெற்றுள்ளமை சிறப்பிற்குரியது.

அறம்,மறம், கற்பு போன்ற பண்புகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டி காப்பியத்தின் கதைக்களத்திற்கு ஏற்ற நிலையில்
கிளைக் கதைகளைக் கம்பர் ஆங்காங்கே இணைத்துள்ளார்.

கம்பராமாணத்தில் இடம்பெறும் முதல் கிளைக் கதை என்ற பெருமையைப் பெறுவது சம்பராசுர போர் ஆகும். இப்போரில் வென்ற
தசரதன் அவ்வெற்றிக்குக் காரணமாக இருந்த கைகேயிக்கு இரு வரங்கள் தருகிறான். அவன் தந்த அந்த இரு வரங்களே இராமாயணக்
காப்பியத்தின் வளரச்சிக்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்து விடுகின்றன.

புதுக்கோட்டை நகரத்தோடு தற்போது இணைந்துவிட்ட திருகோகர்ணம் என்ற ஊரில் உள்ள கோகர்ணேஸ்வரர் ஆலயத்தில் பல அருமையான தூண் சிற்பங்கள் உண்டு. அத்தலத்தில் தற்போது நவராத்திரி விழா நடந்து வரும் மண்டப நுழைவு வாயில் தூண் ஒன்றில் இராமன் பட்டாபிடேக வடிவமும், அதன் எதிரில் அமைந்த மற்றதில் கைகேயி தசரதனைச் சுமந்திருக்கும் வடிவமும் செதுக்கப்
பெற்றுள்ளன.

இராமாயணக் காட்சிஇதே கோயிலின் நுழைவு மண்டபத்தின் மேல் விதானப் பகுதியில் இராமாயணச் சித்திரங்கள் வரையப்பெற்று அவற்றுக்குக் கீழே கன்னட
மொழி விளக்கங்களும் எழுதப் பெற்றுள்ளன. சிவனின் கோயிலில் உள்ள இந்த வைணவச் சின்னங்கள் மதச்சார்பின்மைக்குச்
சான்றாகவும்- இப்பகுதி மக்களின் மனதில் இராமாயணம் படிந்திருந்தது என்பதற்கு அடையாளமாகவும் விளங்குகின்றன,ஔ இச்சிற்பத்தைப் பார்த்தவர்களின் மனதில் கைகேயி செய்த உதவி மேம்பட்டு நின்று விடும். அவள் செய்த தீமை பின்தள்ளப் பெற்றுவிடும். அந்த அளவிற்கு உயிர்ப்புடன் அச்சிற்பம் அமைக்கப் பெற்றுள்ளது. கைகேயி செய்த உதவி என்ற நிலையில் கம்பரால் காட்டப் பெற்ற சம்பராசுரப் போர்க் கிளைக்கதை இவ்வகையில் முக்கியத்துவம் பெற்றதாக ஒரு சிற்பியால் வடிக்கப் பெற்றிருப்பது காணத் தக்கது.

விசுவாமித்திரர் தசரதன் அரண்மனைக்கு வருகின்றார். அவ்வாறு வந்தவர் தசரதனை வாழ்த்துகின்றார். அவ்வாறு அவர் வாழ்த்தும்
மொழிகளின் வாயிலாக இக்கிளை கதை முழுவதம் அறியப் பெறுகிறது.

இன் தளிர்க் கற்பக நறுந்தேன் இடை துளிக்கும்
நிழல் இருக்கை இழந்து போந்து
நின்று அளிக்கும் தனிக் குடையின் நிழல் ஒதுங்கி
குறை இரந்து நிற்ப நோக்கி
குன்று அளிக்கும் குல மணித்தோள் சம்பரனைக்
குலத்தொடும் தொலைத்து நீ கொண்டு
அன்று அளித்த அரசு அன்றோ புரந்தரன் இன்று
ஆள்கின்றது அரசு என்றான்

( பாலகாண்டம் 323)

இப்பாடலில் இந்திரனுக்கு ஒருகாலத்தில் ஏற்பட்ட தோல்வியைத் தசரதன் மாற்றினான் என்ற செய்தி குறிக்கப்பெறுகிறது.

அதாவது சம்பரன் என்னும் மலை போன்ற தோள்களை உடைய அரக்கன் ஒருவன் இந்திரனை தலைமையாகக் கொண்டு விளங்கும்
தேவலோகம் வரை படையெடுத்து வெற்றி பெற்றான். அவன் வெற்றியால் இந்திரன் தன் பதவி, தன் வசதி அனைத்தையும் இழந்துத் தசரத மன்னனிடம் ஓடிவந்து அவற்றை பெற்றுத் தர வேண்டி இரந்து நின்றhன். அவனுக்கு உதவி செய்யும் பொருட்டு இம்மன்னன் படையெடுத்துச் சென்று அரக்கனைக் குலத்தொடும் அழித்தான். இவ்வாறு தசரதன் உதவியால் இந்திரன் இழந்தவற்றை மீளவும் பெறுகின்றான்.

இப்போரின்போது சம்பராசுரன் பத்துத் தேர்களோடு வந்தான். இவ்வரக்கனை வெல்வதற்குத் தக்க நேரத்தில் தசரத மன்னனுக்கு
உதவியவள் கைகேயி என்னும் கேகய நாட்டு இளவரசி ஆவாள்.

அவள் உதவிய வன்மையைப் பின்வரும் பாடலில் தசரத மன்னனே தெரிவிக்கின்றார்.

பஞ்சி மென் தளிர் அடிப்பாவை கோல் கொள
வெஞ்சினத்து அவுணர் தேர் பத்தும் வென்றுளேற்கு
எஞ்சல் இல் மனம் எனும் இழுதை ஏறிய
அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ

(அயோத்தியா காண்டம்? கைகேயி சூழ்வினைப்படலம 18)

என்ற இப்பாடல் வழி மென்மையான பெண்ணான கைகேயி வன்மையான போரிடத்தில் உதவியமை தெரிகின்றது. இப்பாடலில் உள்ள கோல் கொள என்ற பகுதிக்கு இருவகையால் பொருள் கொள்ள இயலும். அதாவது தேர்ச்சக்கரத்தின் அச்சாணி கழன்று விழந்து விட்டபோது அந்தத் தேரைச் சாயாவண்ணம் தன் விரலைக் கோலாகக் கொண்டுக் காப்பாற்றினாள் என்ற பொருளையும் கொள்ளலாம். அல்லது தேர்ப்பாகன் இல்லாது தசரதன் தவித்த போது அத்தேரைக் குதிரை ஓட்டும் கோல் கொண்டு ஓட்டி இவனைக் காப்பாற்றினாள் என்றும் பொருள் கொள்ளலாம்.

இவள் காலத்தினால் செய்த இந்த உதவி காரணமாக தசரத மன்னன் வெற்றி பெற்றான். தச -ரதன் என்னும் பெயரையும் பெற்றான்.
ஏனெனில் பத்து தேர்களை உடைய அரக்கனைத் தொலைத்த காரணத்தில் இவனுக்கு அப்பத்துத் தேர்களும் சொந்தமாயின. இது முதல் இவன் தச ரதன் அதாவது பத்துத் தேர்களுக்கு உரிமை உடையவன் என்ற பெயரைப் பெறுகிறான். இதற்கு நன்றிக் கடனாக கைகேயியை மணந்து கொள்வதுடன் அவளுக்கு இரண்டு வரங்களையும் தருவதாக வாக்களிக்கிறான். இந்நிகழ்வுகள் அனைத்தும் அயோத்திக்குக் கைகேயியின் சீதனப் பொருள்களோடு உடன் வந்த தோழியான கூனிக்குத் தெரியும். கூனியின் மனதில் இவ்வரங்கள் தக்க நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தன. அத்திட்டத்தின் வெற்றி பின்வருமாறு.

நாடி ஒன்று உனக்கு உரைசெய்வேன் நளிர்மணி நகையாய்
தோடு இவர்ந்த தார்ச் சம்பரன் தொலைவுற்ற வேலை
ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும்
கோடி என்றனள் உள்ளமும் கோடிய கோடியாள்
அயோத்தியா காண்டம் மந்தரை சூழ்ச்சிப்படலம்? 174)

இராமனின் முடி சூட்டு விழா அறிந்தவுடனே அதனைத் தடுத்திட முயன்ற கூனி மெல்லக் கைகேயியைத் தன் சூழ்ச்சிக்குள் விழவைத்து, இரண்டு வரங்களை மேற்பாடல் வழி நினைவு படுத்துகிறாள். இவளின் தூண்டுதலால் தக்க நேரத்தில் தசரத மன்னனிடம் கைகேயி வரங்களைத் தரக் கேட்கிறாள்.

பண்டைய இன்று பரிந்து அளித்தி (அயோத்தியா காண்டம் 187) என்று இராமனின் முடிசூட்டு விழாவை மாற்றும் நோக்கதிற்காக
இவ்வரங்கள் பெறப்படுகின்றன. இவ்வரங்களின் விரிவு பின்வருமாறு.

ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசாள்வது சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது எனப் புகன்று நின்றாள்
தீயவை யாவினும் சிறந்த தீயாள்
(அயோத்தியாகாண்டம்,கைகேயி சூழ்வினைப்படலம். 191)


வாய்மையின் உருவமாக நிற்கும் தசரத மன்னனால் இவ்வரங்களைத் தராமல் இருக்கவும் முடியவில்லை. தந்து நிற்கவும் முடியவில்லை. செய்நன்றியை மறக்கவும் முடியவில்லை. தந்தை மகனுக்கு ஆற்ற வேண்டிய நன்றியைத் துறக்கவும் முடியவில்லை. இராமயணத்தின் திருப்பு முனை ஆரம்பமாகி விடுகின்றது. இவ்வகையில் மிக முக்கியமான கிளைக்கதையாக சம்பராசுர யுத்தம் என்ற கிளைக்கதை அமைந்துவிடுகின்றது.

muppalam2006@gmail.com
M.Palaniappan
manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner