இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2009 இதழ் 110  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!

மண்ணின் சாரம் செறிந்த கவிஞர்!
(தா. இராமலிங்கம்: 16-08-1933 - 05-10-2008)

- மு.புஷ்பராஜன் -

தா. இராமலிங்கம்:கவிஞர் தா.இராமலிங்கத்தைப் பற்றிய பேச்சு, இலக்கிய உரையாடல்களில் வருகையில், தவிர்க்கமுடியாதவாறு நாவலாசிரியர் ப.சிங்காரமும் கூடவே என் நினைவில் வருகின்றார். இருவருமே தம் காலத்தின் முக்கியமான இரு படைப்புக்களைத் தந்துவிட்டு, மௌனமாகவே விலகி நின்றிருக்கிறார்கள். இருவர் படைப்புக்களும் அவை வெளிவந்த காலத்தில் உரிய கவனத்தைப் பெறவும் இல்லை. ப.சிங்காரத்தின் நாவல்களின் முக்கியத்துவம் பற்றி அவரைச் சந்தித்தவர்கள், அவரிடம் கூறியபோதெல்லாம் அப்படியா? இப்போது அதற்கென்ன? ஏன்றவிதமாய் அது ஏதோ தனக்குச் சம்பந்தமில்லாத விடயம்போன்ற பாவனையுடன் இருப்பதை அவர்கள் பதிவுசெய்துள்ளனர். ‘அலை’ இதழை நாங்கள் நடத்திய காலங்களில் நானும்,அ.யேசுராசா, இன்னும் ஒருவரும், தா.இராமலிங்கத்தை அவரது வீட்டில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தோம.; இடையில் அ.யேசுராசா “இவர் உங்கள் கவிதைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்” என என்னைச் சுட்டியபோது. அவர் ஒருவிதமாகச் சிரித்தபடி என்னைப் பார்த்தார். இந்தப் பார்வைபற்றி அப்போது நான் பெரிதும் அக்கறைப் பட்டிருக்கவில்லை. ப.சிங்காரத்தின் பார்வையின் அர்த்தத்தில்தான் தா.இராமலிங்கமும் அன்று என்னைப் பார்த்திருப்பாரோ? ஏன்று இன்று நினைக்கத் தோன்றுகின்றது. ஏனனில் அவருடைய மறைவிற்குப் பின்னர், அவரைத் தெரிந்தவர்கள் அவருடன் பழகியவர்கள், முன்வைக்கும் பிம்பம் அவ்வாறே நினைக்கத் தோன்றுகின்றது. அவருடனான உரையாடலுக்குப் பின்னர், அவர் தொடர்ந்தும் கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார் எனவும் அறிய முடிந்தது. ப.சிங்காரம் தனது இரு நாவல்களிற்குப் பின்னர், வேறு நாவல்கள் எழுதியதாகத் தெரியவில்லை. தா.இராமலிங்கம் தனது இரு கவிதைத் தொகுப்பிற்குப் பின்னர் எழுதிய கவிதைகள அவர் வெளியிட முன்வரவில்லை, அவரில் இயல்பாகக் குடியிருந்த துறவுமனமும் அதன் எதிரொலிகளும் இந்த வெளியிடாமையில் பின்னணிக் காரணிகளாக இருந்திருக்கலாம்.

தா.இராமலிங்கம் கவிதைத்துறையில் ஈடுபட்டது ஒரு சந்தர்ப்ப விபத்தா? அல்லது அவரும் அவரது நாண்பர்களும் நம்பியதுபோல், எல்லாவற்றிற்கும் மேலாக நின்று இயக்கும் பேரருளின் செயலா? கவிஞர் என்.கே.மகாவிங்கம் இரத்தினபுரியில் கல்வி கல்வி கற்றுக்கொண்டிருக்கையில், அங்கு புனித லுக்காக் கல்லூரியில் கற்பித்துக் கொண்டிருந்த தா.இராமலிங்கத்திடம், அவரை அழைத்துச் சென்ற சுப்பிரமணியம் என்ற மாணவனை இங்கு நன்றியுடன் நினைவு கூரலாம். அக்காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதிப்பில் பெரியார், அண்ணாத்துரை, திருவள்ளுவர் ஆகியோரின் படங்களுடன், நாத்திக ஈடுபாட்டீலும் அதன் வழியே தன் திருமணத்தையும் நடாத்திக்கொண்டு, திருக்குறள் இன்னும் நம் பழைய இலக்கியங்களுடன் சிவனே என இருந்தவரிடம், கவிதையின் கதிர்களை எழுப்பிய மு.பொ.வின் ‘மின்னல்’ கவிதையை அறிமுகப்படுத்திய என்.கே.மகாலிங்கத்திற்கும் நன்றியைக் கூறிக் கொள்ளலாம்.

மு.பொ.வின் மின்னல் கவிதை சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’வில் வெளிவந்த காலப்பகுதி 60க்குப் பின்னர் என அறியமுடிகிறது. எழுத்து 59ன் தை மாதத்தில் தொடங்கப்பட்டது. அக்காலங்களில் அதில் பசுவையா(சு.ரா.), சி.மணி, பிரமிள் (தர்மு சிவராமு), வைத்தீஸ்வரன், தி.சோ.வேனுகோபாலன் இன்னும் அநேகர் புதுக்கவிதையை பெரும் ஆர்வத்துடன் முன்னெடுத்துச் சென்றார்கள். இக் காலகட்டத்தில் ஈழத்தின் கவிதைப் பரப்பில் மகாகவி, நிலாவாணன், முருகையன் போன்றவர்களுடன் இன்னும் சிலர் ‘யாப்பின் வரம்பிற்குள் நின்று யாழ் மீட்டி’க்கொண்டிருந்தார்கள். அவர்களின் மீட்டல்கள் ஈழத்துக் கவிதை வயலின் செழுமைக்கான உரமாக உருவாகிக்கொண்டிருந்தது. ஆயினும், தமிழகத்தில் எழுந்திருந்த புதுக்கவிதை அலையையின் வீச்சை, ஈழத்துக் கவிதை உலகு அந்நேரம் உள்வாங்கிக் கொண்டிருக்கவில்லை. காரணம் அக்காலத்தைய மார்க்சியச் சார்புநிலை கொண்டீருந்த ‘சரஸ்வதி’, ‘சாந்தி’ ஆகிய இதழ்களும், பேராசிரியர் நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன் போன்றவர்களும் இப் புதுக்கவிதைப் போக்கினைக் கடுமையாக எதிர்த்தார்கள். அதேவேளை ஈழத்திலும் போராசிரியர் க.கைலாசபதி, கவிஞர். இ.முருகையன் போன்றோரும் இதனைக் கடுமையக எதிர்த்தும் வந்தார்கள். இதனால்தான் தா. இராமலிங்கத்தின் முதல் கவிதைத் தொகுதியான ‘புதுமெய்க கவிதைகள்’ நூலிற்கு முன்னுரை எழுதிய முருகையன் “அவரது ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு யன்னலாக இருக்கிறது” என்றார். அவர் அக் கவிதைகளைப் புதுக்கவிதை என்றே குறிப்பிட விரும்பவில்லை. ஆயினும் சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ.நுஃமான் போன்ற மார்க்சிய சார்புநிலைக் கவிஞர்கள், மரபுவழிநின்றும் புதுக்கவிதை அலைகளையும் வெளிப்படுத்திக் கொண்டார்கள்.

ஈழத்தில் 1943ல் ‘ஈழகேசரி’யில் வெளிவந்த வரதரின் ‘ஓர் இரவினிலே’ என்ற கவிதையை, ஈழத்தின் முதல் புதுக்கவிதையாக வல்லிக்கண்ணன் கருதுகிறார். இக் கவிதை ந.பிச்சமூர்த்தி ‘கலாமோகினி’யில் எழுதிய ‘மழைக்கூத்து’ கவிதையின் பாதிப்பாக இருக்கலாம் என்றும் செல்லப்படுகிறது. ஆனால் அம்முயற்சி தொடர்ச்சியற்றுப் போய்விட்டது.

1960களிற்குப் பின் தா.இராமலிங்கம் கவிதைகளை எழுதினாலும், அவருடைய இரு கவிதைத் தொகுதிகளான ‘புதுமெய்க கவிதைகள்’,64லும் ‘காணிக்கை’ 1965 திலும் வெளிவந்து விட்டது. மு.பொ. சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ.நூஃமான் போன்றவர்கள் இவருக்கு முன்போ அல்லது சமகாலத்திலோ கவிதைகளை எழுதிய போதிலும், ஈழத்துப் புதுக்கவிதை துறைக்கு முதல் இரு புதுக்கவிதைத் தொகுதிகளை அளித்தவர் தா.இராமலிக்கம் என்றே கொள்ளவேண்டும். முதல் என்ற சொற்பிரயோகம் கவிதைத்; தொகுதிக்கு எந்தத் தகுதியையும் அளித்துவிடப் போவதில்லைத்தான், ஆனால் தா.இராமலிங்கத்தின் இரு கவிதைத் தொகுதிகளும் கவிதை சார்ந்தும், காலம் சார்ந்தும் மிகவும் முக்கியத்துவமானதே. தா.இராமலிங்கத்தின் கவிதை வெளிவந்த காலம், ஈழத்தில் தேசிய இலக்கியத்துகான அடித்தளம் மிகத் தீவிரமாக இடப்பட்டுக்கொண்டிருந்த காலம். 60களின் பின்னர் தமிழக இலக்கியத்தின் பாதிப்பிலிருந்து, ஈழத்து இலக்கியம் தனக்கான கூறுகளுடன் செழுமையாக முன்னெடுக்கப்படல் வேண்டுமென்ற ஆதங்கத்துடன் க.கைலாசபதி, அ.ந.கந்தசாமி,இளங்கிரன், ஏ.Nஐ.கனகரட்னா போன்றவர்கள் தேசிய இலக்கியத்திற்கான அடித்தளத்தினைத் தங்கள் கட்டுரைகள்மூலம் அமைத்துக் கொண்டிருந்தனர். இம் முயற்சிகளை இவர் அறிந்திருக்கலாம் அல்லது அறியாமலும் இருந்திருக்கலாம் ஆனால் மேற்கூறியவர்கள் முன்னெடுத்த இலக்கியப் போக்கிற்கு வளம் சேர்ப்பதுபோன்று, ஈழத்தின் வாழ்வியல் கூறுகளை, மண்ணின் வாசனையை, ஆழ்ந்த அர்த்தங்களாக, உள்ளோடும் குறியீடுகளாக, இவர் கவிதைகள் தாங்கிக் கொண்டிருக்கின்றது. இவரது கவித்துவ முக்கியத்துவம் உடன் கண்டுகொள்ளப்படாமை துர்ரதிஷ்ரவசமானதே. இதற்கு, அக்காலத்தில் உயிர்ப்புடன் இயங்கிய மார்க்சியப் போக்கிலிருந்து இவர் விலகியிருந்ததும் காரணமாயிருக்கலாம். மகாகவியையே ஒதுக்க முயன்ற வைதீகப் போக்கு அது.

இவர் கவிதை எழுதிய காலத்தில் எழுத்து இதழ்களையும் ரீ.எஸ்.எலியட்டையும் அறிந்திருந்தார் என அறியமுடிகிறது. “எலியட்டில் அவருக்க அக்கறை வளர்ந்துகொண்டு இருக்கிறது உண்மையானாலும் அதிக அக்கறை காட்டிப் படிப்பதும் பார்ப்பதும் பழைய தமிழ் இலக்கியங்களையும் இன்றைய நம் யாழ்ப்பாணத்தையும்தான்”. (மு.த. ‘காணிக்கை’ஆய்வுரை ) எலியட்டின் பாதிப்புப்பெற்ற, சி.மணியின் புதுக்கவிதை வெளிப்பாட்டு முறையில், பழைய செய்யுள்களின் வரிகள் புதுக்கவிதைகளில் இடையில் இடம்பெறுவதுபோல், தா.இராமலிங்த்தின் கவிதைகளின் இடையிலும் அவை இழையோடிக்கொண்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். ஆனால் சி.மணியின் சில கவிதைகளில் துருத்திக்கொண்டீருப்பதுபோல் அல்லாமல் அப் பழைய இலக்கியத்தின் வரிகள், பொருள்சார்ந்து, ஒரு மின்னலைப்போன்ற அதிர்வுடன் ஆழமும் விரிவும் கொண்டு வேறெரு தளத்திற்கு நம் வாசக மனதை நகர்த்துகிறது.

தா.இராமலிங்கத்தின் முதல் கவிதை ‘நான்’ என்பதாகும். அவர் நாத்திகத்தில் நாட்டம் கொண்டவர் என அறியப்பட்டிருந்தாலும், ஆன்மீகத்தின் சாரம் அவருள், நிலத்தின் அடியினுள் நீர் ஓடிக்கொண்டிருப்பதைப் போன்று இருந்திருக்கின்றது என்பதற்கு, அக் கவிதை ஒரு சாட்சியாகும். ‘ என்னைத் தவிர வேறொருவர் இன்றென்ற குருட்டுக் காட்டில்’ இருந்து விழித்தெழுந்து தொடங்கும் ஆன்ம விசாரம் பற்றியது அக் கவிதை. ஆச்சரியப்படத்தக்க வகையில் எழுத்துவில் அக்காலத்தில் எழுதிய முக்கிய கவிஞர்களின் முதல் கவிதை ஆன்ம விசாரம் பற்றியதாகவே இருந்திருக்கின்றது. மனித வாழ்வு தொடர்பற்றிருக்கிறது என்பதை மறுத்து, முக்காலமும் மூன்றல்ல ஒன்றே, அது மனித இனத்தைச் சுற்றிய ‘முக்கோணம்’ என்கிறார் சி.மணி. இந்த உலகமே அழுக்கு மயமானது அழுக்கு சேருமிடங்களையெல்லாம் மனித வாழ்விற்கு இடையூறாக வருமாயின் அவற்றை வெட்டிவிடவேண்டும் இல்லையெனில் வாழ்வின் ஜீவிதங்களை இழக்கவேன்டியிருக்கும் என்கிறது பசுவையாவின் ‘உன்கை நகம்;’. ஆரீன்றாள் என்னை? பாரீன்று பாரிடத்தே என ஆரம்பித்து பிறப்பு, இறப்பு பற்றிய விசாரமாக முடிகிறது பிரமிளின் ‘நான்’. எஸ்.வைத்தீஸ்வரனின் முதல் கவிதை கிணற்றில் விழுந்த நிலவு பற்றியதாக இருந்தாலும் அவரது இரண்டாவது கவிதையான ‘மனக் கூச்சல்’ ஆன்ம விசாரம் பற்றியதே. பொதுவாகவே ஆன்மீகத் தேடலான ‘உள்மன யாத்திரை’க்கு முதலாவது நுழைவாயிலாக இருப்பதே, இந்த நான் பற்றிய விசாரம்தான் போலிருக்கிறது.

தா.இராமலிங்கத்தின் ஆன்மீக ஈடுபாட்டிற்கான காரணம், மு.தளையசிங்கத்தின் நட்பும், அத்துடன் சேர்ந்து ஸ்ரீ நந்தகோபாலகிரியை தனது ஆன்ம குருவாகக்கொண்டு, சக்திதாசன் என்ற ஆச்சிரமப் பெயரையும் கொண்ட புதுவாழ்வுதான் காரணமாக இருக்கலாமென முன்னர் நான் கருதியதுண்டு. ஆனால் அவர் தனது ஆன்ம குருவைச் சந்திப்பதற்கு முன்னமே தனது இரு கவிதைத் தொகுதிகளையும் வெளியிட்டுவிட்டார் என்பதைப் பின்னர்தான் அறிய முடிந்தது. ஒரு ஆன்மீக விசாரம் கொண்டவர்கள், சமூகத்தில் தன்னைப் பிறத்தியானாக தகவமைத்துக் கொள்ளக் முடியாது என்பதைத்தான் அவரது இரு தொகுதிகளும் வெளிப்படுத்துகின்றன. அவரது ‘ஐந்து நதி பெருகிவிழ அலை நுரைக்கும் சிந்தைப் பெருங்கடலின் முத்தெடுக்க மூச்சை வளப்படுத்தும்’ அவரது ஆன்மீகத் தேடல்: சமூகத்தின் அநீதிக்குரிய தீர்வுபோல ‘என்தன் பிணிநீங்க இறைவன் வழிபட்டுக் கற்பைப் கொழுத்திவிடக் கற்பூரமாய் எரிந்து காணிக்கை ஆனதென்றேன்.’ ஏன அவரால் கூற முடிந்திருக்கிறது. புதுமைப்பித்தனின் ‘பொன்னகரத்தில்’ வரும் கற்புப் பற்றிய பார்வையிலும், வரதரின் ‘கயமை மயக்கம்’ தொகுதியிலுள்ள ‘கற்பு’ சிறுகதையில் வரும் கற்புப் பற்றிய பார்வையிலும் மிகவும் வித்தியாசமான ஒரு பார்வை தா.இராமலிங்கத்தினுடையது. இரு சிறுகதைகளிலும் கற்பு பற்றிய பார்வை பாத்திரங்களினால் அல்லாமல் ஆசிரியர்களின் கருத்தாகவே வருகிறது. பாதிக்கப்பட்ட பாத்திரங்கள் மௌனமாய் நொந்து சிதைந்தவர்களாகவே உள்ளனர். தா.இராமலிங்கத்தின் ‘தூக்கட்டும் தூக்கட்டும்’கவிதையில்; முற்றும் வித்தியாசமான வகையில் பாதிக்கப்பட்ட பெண்னே தனக்குரிய, தான் தேர்ந்துகொண்ட நீதியாக கற்பைக் கொழுத்தி விடுகிறாள்.

கவிதைசார்ந்து பலர் அடிக்கடி எழுப்பும் கேள்வியை நாம் இங்கு சலிப்புடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கவிதை அகஉணர்வின் தூண்டுதலா? புறஉணர்வின் தூண்டுதலா? இதைக் காலத்திற்றுக் காலம் தொடர்ந்தும் ஏதோ ஓரு வகையில் புதுப்பித்துக் கொள்கிறார்கள். படைப்புமனம் எந்தப் பொது வரைவிலக்கணத்திற்குள்ளும் தன்னை அடக்கிக்கொள்ள மறுத்து மீறலையே நிகழ்த்திக்கொண்டு இருப்பவை. பொதுவாகவே அது அகம்,புறம் என்ற இரு கரைகளையும் தழுவி. அவற்றின் சாரத்தை தன்னோடு கூடஎடுத்துச் செல்லும் நதியின் ஓட்டம் போண்றது. நாகமும், கொம்பறிமூக்கனும் ஒன்றையொன்று தழுவியும் வழுவியும் ஊர்ந்தும், உயர்ந்தும் முயங்கி முன்செல்லவது போன்றதே. ஆன்மீக நாட்டமும் வானத்திலிருந்து உள்ளிறங்குவதில்லை. அது சமூகத்தோடு முரன்பாடுகொண்ட மனத்தின் இன்னொரு இயங்குதளம்தான். அவ் வதையில் ஆன்மீக நாட்டத்தில் தனக்குள் உள்ளோடிக்கொண்டிருந்த தா.இராமலிங்கம், தன் காலத்தின் சமூகக் கொதிநிலையின் குமிழ்களையும் உள்வாங்கிக் கொண்டுள்ளார் என்பதற்கு பல முக்கியமான கவிதைகள் சாட்சியாக இருக்கின்றது. சாதிப்பிரச்சனையாகிலும், அல்லது பாலுறவுப்பிரச்சனையாகிலும்சரி இவற்றிற்கான வெறுப்பை அக்காலத்தய சாதிய அடக்குமுறையின் அவலங்கள், அதற்கெதிரான போராட்டங்கள் என்பனவற்றுடன், அக்காலத்தில் பிரபலமாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்ட கோகிலாம்பாள் கொலை வழக்குகின்மீது யாழ்ப்பாணச் சமூகம் காட்டிய ஆசார மனநிலை என்பனவற்றின் எதிரொலியாக இருக்கலாம்.

தா.இராமலிங்கத்தின் புதுக்கவிதைகள் எவ்வாறு நம் வாசகமனதை வாரிச் சுருட்டுகிறது.:
“பிளாவில் கள் நிறைத்து ஃகைநீட்டஃ அவள் குனிந்து ஃகாமத் திரியினிலேஃ தீக்குச்சி தட்டிவைத்தாள்”.

“கவிதையில் வார்த்தையின் இணைப்பு அவ் வார்த்தைக்குரிய அர்த்தத்தைத் தாண்டிய ஒரு தளர்த்திற்கு நம்மை நகர்த்துகிறது” என சு.ரா சொல்லும் அர்த்தம் இதுதான். ‘நிரைமீட்பேன் நிரைமீட்பேன்’, ‘கற்புக்கரசியாய் வாழ் என்று வாழ்த்தி சிலப்பதிகாரமும் சீதணம் தந்தார்’ போன்ற ஆழமான குறியீடுகள் பற்றி மு.தளையசிங்கம் தனது காணிக்கை ஆய்வுரையில் நிறையவே கூறியிருந்தாலும் வேறு தளத்திற்கு நகர்த்தும் எனக்குப்பிடித்த சில வரிகள்;:
“இறுதிப் படுக்கையிலும் ஃஇழுக்கின்ற மூச்சு ஃகாமக் கஞ்சிஊற்று என்றுஃ காத்துக்கிடந்திடுமே”.
“கொதித்துப் ஃபொங்கி எழும் பாலை ஃஉலைமூடி என்ன செய்யும்ஃ அகப்பையால் துளாவி ஃஅடக்கிநான் ஆற்றிவந்தேன்”.

வாழ்ந்த மண்ணின் சாயலை, அன்றாடம் நம் வாழ்வோடு கூடவரும் அல்லது எதிர்கொள்ளும் அற்ப சிறு நிகழ்வுகள், அவை நம் கவனத்தைக் கோராமல் நழுவிச் செல்பவையாகக்கூட இருக்கலாம் அவை தா.இராமலிங்கம் ஏன்ற கவியின் கண்களால் கவனம்கொள்ளப்பட்டு, அவர் கவிதைகளிற்கு புதிய வேகத்தினையும் அர்த்தத்தினையும் கொடுக்கிறுது. வாசக மனமும் ஒரு கணம் தரித்துநின்ற பின்னரே அப்பால் செல்ல வேண்டீயிருக்கிறது. நல்ல கவிதைவரிகள் ஏற்படுத்தும் உணர்வு என்பது இதுதானே.
“முற்றிப் பழுத்திடுவேன் புகையூத நான்விரும்போன்,”
“நேற்றுக் கன்றீன்ற மாடு மடியினைத் காகம் கொத்தி துவாலை இறைக்கிறது”.
“பனங்காயை நாம்பன் பித்துத் தின்னுகிறது”.
“குறிசுட்ட மாட்டை கொண்டோடப் பாக்கின்றாயா”.
“ஓடிவந்தயல் வுpளக்கைப் பிடித்து வேலியால் பார்த்தது”.
“நிறைமாதக் குடலை”

இதுதவிர தேனினைத் தேக்கி இதழ்களினால் காவல்கொண்டு மலர்ந்திருக்கும் மலர்கள் பற்றியும், ‘முகந்தெரியும் முதுகோட்டுச் சிறகூதி தேன் உறுஞ்சவரும் கருவண்டின’; காட்சிப் படிமம் அநேக கவிதைகளில் மன லயிப்புடன் பதிந்துள்ளார். வாழ்வின்மீதான காதலின் குறியீடுகொண்ட இயற்கையில் வெளிப்பாட்டில், ஒரு கவி மனம் கரைவதில் ஆச்சரியம் என்ன இருக்கமுடியும்? இதேவேளை ஓசைமீது ஏற்பட்ட ஆசைகளும் இருக்கின்றது. “சிவன்ஒளி கதிர்சொரி கவிபொளி ஞாயிறு” போன்ற அருநகிரிநாதர் பாணி வரியையும் குறிப்பிடலாம். ‘காமம்’ ஒரு பாரதிதாசன் பாணிக் கவிதைதான். கிழியட்டும் முக்காடும் ஒரு பலவீனமான கவிதை.

தனது இரு கவிதைத் தொகுதிக்குப்பின்னர் அவர் கவிதைகள் எழுதியிருந்த போதிலும் அவை 80களிலேயே வெளிவருகின்றன. அவை தமிழ் ஈழப் போராட்டம் சாந்து எழுந்த அவரது மனநிலையை அடையாளம் காட்டுகின்றன. அவர் கவிதைகள் எழுதிய காலத்தின் பின்னணியாக ஒரு இனக் கலவரம், சத்தியாக்கிரகப் போராட்டம் போன்ற முக்கிய அரசியந் நிகழ்ச்சிகள் நடைபெற்றிருந்தன. ஆவை ஒரு முக்கிய நிகழ்வாக அல்லாமல், வேண்டாத அசௌகரியமாக அக் காலத்தில் பலர் கருதியதுபோல் அவரும் கருதியிருக்கலாம் ஆனால் அவரது பிந்திய கவிதைகளே தமிழ் ஈழப் போராட்டத்துடன் சம்பத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்சியாக வளைகுடா யுத்தம், பலஸ்தினிய போராட்டம், தென்னாபிரிக்க கறுப்பினப் போராட்டம் என விரிந்து செல்கிறது. அவைகளை அவர் வெளிப்படுத்திய விதமே இங்கு கவிதை சார்ந்த அக்கறைக்குரியவை. கிட்டத்தட்ட 20பது வருடங்களிற்குப் பின்னரும், அவரது மண் சார்ந்த, வாழ்வோடு தொடர்புபடும் உயிரினங்கள், பொருட்களைக் குறியீடாகக் கொள்ளும் அவரது கவிதை முறையினுள் “அய்யோ வாடி வீடே நீ வதைகூடம் ஆனாயோ” (சாவிளைச்சல்),” போர்ப்படகு எரிந்து மூழ்க யுத்தவிமானம் வீழ்ந்து நொறுங்க பீரங்கி பிளந்து கவிழ” (கொடியேற்றம் ) போன்ற கவித்துவம் உரிபட்ட சில வரிகள் வெறும் சொற்களாக வந்து விழுந்திருக்கிறது.

அரசியல் சார்ந்தவைகள் எழுதக்கூடாது என்பது இதன் அர்த்தமல்ல. தனது இரு கவிதைத் தொகுதியிலும் தனது தனித்துவமான ஆற்றலைக் வெளிப்படுத்திய கவிஞர், தனது இயல்பான மன்னின் சாரமூறிய குறியீடுகள்மூலம் இதனையும் வெளிப்படுத்தி இருக்கலாம் என்பதே எனது அவா. இதேபோன்று ‘கருத்து ஒன்றுபழுவோம்’ கவிதையின் சில வரிகளில் மரபுக் கவிதையின் சுமையினை அவதானிக்க முடிகிறது. ‘நான் யார்’ கவிதையில் ‘எறிந்து அலை கழுவும் கடல் முற்றத்தில்’ என்றும் பின்னர் ‘அடித்தலைகள் அரிததுவரும் அத்திவாரம்’ என வரும் இரு தொடர்களிலுமுள்ள ‘எறிந்து அலை’ என்பதும் ‘அடித்தலைகள்’ என்பதும் வலிந்த சொற்பிரயோகங்களாகவே உணருகிறேன். மேற்குறிப்பிட்டவைகளெல்லாம் எல்லாக் கவிஞர்களுக்கும் ஏற்படக் கூடியவைதான். இவை தா.இராமலிங்கம் என்ற கவிதை ஆழுமையில் எந்த உடைவையும் ஏற்படுத்தி விடக்கூடியனவல்ல. வெறும் சில தூவல்களே. அதேவேளை ‘கோழி கிளறிக் குடங்கரை குதம்பூது’, ‘கோழி குழறுகுதே மரநாய்தான் மரநாய்தான் குழறக் குழறக் கொண்டுபோகுது’ என்ற அவரது அழகிய குறியீடுகளின் தொடர்ச்சியையும் அவதானித்துக் கொள்ளலாம்.

தா.இராமலிங்கம் தொடர்ச்சியாகக் கவிதைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கவில்லை. அவர் தன்னை முன்னிலைப்படுத்தும் மனோபாவம் அற்றவர். அவர் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கிய கவிஞராக இருந்தும,; தன்னை ஒரு கவிஞர் என எங்கும் முதன்மைப்படுத்திக் கொண்டவரல்ல. அவரோடு பழகியவர்களுக்கு, கூடவே கற்பித்த ஆசிரியர்களுக்கு அவர் ஒரு கவிஞர் எனத் தெரிந்திருக்கவில்லை. தா. இராமலிங்கத்தின் ஊiரைச் சேர்ந்த @பிரபல்யமான கவியரங்கக் கவிஞர், தா. இராமலிங்கம் காலமான செய்தியுடன் அவர் கவிஞர் என அறிந்தபோது ‘ஒ! அவர் கவிதையெல்லாம் எழுதுவாரா’ என்று கேட்டாராம். ஆயினும் அவர் தொடர்ச்சியாக கவிதை எழுதிக் கொண்டுதான் இருந்தார். ஆனால் பிரசுரிப்பதில் அக்கறையற்று இருந்திருக்கிறார். 80களில் அலை அவரது கவிதைகள் சிலவற்றை வாங்கிப் பிரசுரித்தது. அவரது இரு கவிதைத் தொகுதிகளில் உள்ள கவிதைகளில் எவையாகிலும் அக் காலத்தில் வெளிவந்த இலக்கிய இதழ்களில் பத்திரிகைகளில் வெளிவந்ததாக எந்தத் தகவலும் இல்லை. போர்ச் சூழலின் அவலத்தால் அடிக்கடி இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம். இவைகளினால் அவர் எழுதிய கவிதைகள் அனைத்தையும் அவர் வீட்டின் வளவினுள் புதைக்கப்பட்டதாகவும், மேலும் சில கவிதைகள் கொழும்பில் அவரது உறவினர் சிலரின் பராமரிப்பில் இருப்பதாகவும் தெரியவுருகிறது. மிகுந்த நம்பிக்கையுடன் சென்ற தனது ஆன்மீகக் குருவிடம் ஏற்பட்ட ஏமாற்றத்தினால் அவர் பல சமயங்களில் பிறத்தியான் போக்கிலும் இருந்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த அனுபவங்கள் கவிதைகளில் இதுவரை வெளித்தெரிய வரவில்லை. அவரது வெளிவராத கவிதைகள் அனைத்தும் சேர்ந்து வெளிவரும்போது அந்த அனுபவத்தி;ன் கவிதைகளும் கிடைக்கக்கூடும் அப்போது கவிதை வெளிப்பாட்டீற்கு தமிழின் பாரம்பரியங்களை, வாழ்வின் கூறுகளை, மண்ணின் சாரத்தினை குறியீடுளாகக் கொண்டு தனது வளமான கவிதைகளால் ஈழத்தப் புதுக்கவிதைக்குப் நல்ல அடித்தளத்தினையும் புதிய பரிமாணங்ளைக் கொடுத்த தா.இராமலிங்கம் என்ற கவிஞனின் இன்னோரு பரிமாணத்தினை, அவர் கவிதைகளின் தொடர்ச்சியான ஏற்ற, இறக்கங்களை ஈழத்துக் கவிதைப் பரப்பு உள்வாங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

நன்றி: என்.கே.மகாலிங்கத்துடனான உரையாடல்கள்.
ராஜமார்த்தாண்டன்;: புதுக்கவிதை வரலாறு.
18-10-2008;


mpushparajan@yahoo.co.uk


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner