| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| இலக்கியம் |  
| ‘‘நாவல் ராணி வை.மு.கோதைநாயகி அம்மாள்’’ 
 - முனைவர் சி. சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, 
            புதுக்கோட்டை -
 
 
  நாவலாசிரியை, 
            பத்திரிகையாசிரியை, இசைக்கலைஞர், காந்தியவாதி, விடுதலைப் போராட்ட 
            வீராங்கனை, சமூக சீர்திருத்தவாதி என்று பன்முகத்திறமைகள் வாய்ந்தவர் 
            வை.மு.கோதைநாயகி அம்மாள். இவரை சமகால எழுத்தாளர்கள், ‘‘நாவல்ராணி, கதா 
            மோகினி, ஏக அரசி’’ என்று போற்றினர். தாம் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 
            ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற எழுத்தாளர், 
            வை.மு.கோதைநாயகி அம்மாள் ஆவார். 
 சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் 1.12.1901-ஆம் நாள் நீர்வளுர் 
            என்.எஸ்வெங்கடாச்சாரியார், பட்டமாள் ஆகியோருக்கு இரண்டாவது மகவாக 
            வை.மு.கோதைநாயகி அம்மையார் பிறந்தார். பிறந்த ஒரு வயதிலேயே தமது தாயை 
            இழந்தார். அதனால் அவரது பாட்டியார் வேதவல்லிஅம்மாங்காராலும், அவரது 
            சிறிறய தந்தையாரின் மனைவியான கனகம்மாளாலும் வளர்க்கப்பெற்றார்.
 
 வை.மு.கோதைநாயகி அம்மையாருக்கு ஐந்தரை வயதில் ஆகியபோது 
            திருவல்லிக்கேணியில் வசித்து வந்த வை.மு. சீனிவாச அய்யங்காரின் 
            மூன்றாவது மகனான ஒன்பது வயது நிரம்பிய வை.மு. பார்த்தசாரதிக்குத் 
            திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். அம்மையாரின் புகுந்த வீட்டினர் 
            தீவிர வைணவ மரபின் வழிவந்தவர்களாவர். ‘வைத்தமாநிதி முடும்பை குடும்பம்’ 
            என்ற பெயர் பெற்ற அக்குடும்பத்தினருக்கு அக்காலத்தில் 
            திருவல்லிக்கேணியிலும், ஸ்ரீவைஷ்ணவ சமூகத்திலும் தனிமதிப்பு இருந்தது. 
            அக்குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பெயருக்கு முன்னால் வை.மு. 
            என்ற எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டனர். வைத்த மாநிதி என்பது 
            அக்குடுபம்பத்தினரின் குலதெய்வமாகும். முடும்பை என்பது அவர்களின் 
            பூர்வீக ஊராகும். கோதைநாயகிஅம்மையாருக்கும் திருமணத்திற்குப் பின்னர் 
            ‘வை.மு.’ என்ற குடும்பப்பெயர் இணைக்கப்பெற்று வை.முகோதைநாயகி’ என 
            அழைக்கப்பட்டார்.
 
 கல்வியறிவு பெற்ற குடும்பத்தில் வை.முகோ. அம்மையார் 
            வாழ்க்கைப்பட்டாலும் அவருக்கு முறையாகக் கல்வி பயிலும் வாய்ப்புக் 
            கிட்டவில்லை. கோதைநாயகி அம்மையார் தமது மாமியார் வாயிலாகத் தெலுங்கு 
            மொழியை எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்.
 
 அம்மையாருக்குச் சிறுவயதுமுதலே பிறருக்குக் கதை கூறுவதில் ஆர்வமுண்டு. 
            அவர் தமது கற்பனை ஆற்றலால் வீட்டில் உள்ள சிறுவர், சிறுமியர்க்கும், 
            தமது தோழியர்களுக்கும் புதிய புதிய கதைகளைக் கூறினார். இதனைக்கண்ட 
            அவரது கணவர் அவரிடம் காணப்பட்ட படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு 
            அவரைப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். நாடகங்களைப் பார்த்து 
            ரசித்த அம்மையாருக்குத் தானே நாடகங்களை எழுதவேண்டும் என்ற ஆவல் 
            ஏற்பட்டது. அவருக்கு ஓரளவுமட்டுமே எழுதத்தெரிந்ததால் அவரது தோழி 
            பட்டம்மாள் என்பவர் எழுத இவர் நாடகத்தைக் கூறி, ‘இந்திர மோகனா’ என்ற 
            நாடகத்தை உருவாக்கினார். இந்நாடகத்தை 1924-ஆம் ஆண்டு நோபில் 
            அச்சகத்தார் மூலம் நூலாக வெளியிட்டார். இந்நாடகத்தை இந்து, 
            சுதேசமித்திரன், நியூ இந்தியா உள்ளிட்ட அக்காலப் பத்திரிக்கைகள் 
            பாராட்டி எழுதின. இந்நாடகத்தை பலர் கேட்டு வாங்கி நடித்தனர். இவ்வாறு 
            தனது முதல் நூலுக்குக் கிடைத்த வெற்றி அம்மையாரை மென்மேலும் எழுதத் 
            தூண்டியது எனலாம்.
 
 முதல் நூல் தந்த ஊக்கத்தால் அம்மையார் ‘வைதேகி’ என்ற நாவலை எழுதினார். 
            இந்நாவலை வடுவூர் துரைசாமி அய்யங்கார் திருத்தம் செய்து கொடுத்ததுடன் 
            அது வெளிவருவதற்கு ஏற்பாடும் செய்தார். அவரது அறிவுரையின் பேரில் 
            வை.மு.கோ.அம்மையார் 1925-ஆம் ஆண்டு, ‘ஜகன்மோகினி’ மாத இதழை 
            விலைகொடுத்து வாங்கி அதில் வைதேகி நாவலைத் தொடர்கதையாக ஒரு ஆண்டாக 
            வெளியிட்டார். பின்பு அவ்விதழ் 35ஆண்டுகள் அம்மையார் இறப்பதற்குச் 
            சிலஆண்டுகள் வரை வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
 
 வை.மு.கோ அம்மையாருக்குத் தொடர்ந்து எழுதவேண்டும் என்ற ஆர்வம் 
            இருந்தது. அதனால் தம் தோழி பட்டம்மாளின் உதவியுடனும், கணவர் மூலமாகவும் 
            தமிழை மிகத் தீவிரமாகக் கற்கத்தொடங்கினார். பின்பு தமிழ் அறிஞரும், 
            தமது சிறிய தந்தையாரான திருத்தேரி ராகவாச்சாரியிடம் கம்பராமாயணம், 
            திருவாசகம், வில்லிபாரதம், பெரியபுராணம் உள்ளிட்ட பல 
            தமிழிலக்கியங்களைக் கற்றுக் கொண்டார். இது அவருடைய எழுத்தாற்றலை மேலும் 
            மெருகூட்டுவதற்கும் வளமூட்டுவதற்கும் அடிப்படையாக அமைந்தது.
 
 வை.மு.கோ அம்மையார் எதிர்பாராத நிலையில் காந்தியடிகளை 1925-ஆம் ஆண்டு 
            சந்திக்க நேர்ந்தது. காந்தியின் எளிமையான தோற்றமும், ஆராவாரமற்ற அவரது 
            உறுதியான நாவன்மையும், கண்ணில் ஒளிவிட்ட காந்தியின் தீட்சண்யமும் 
            அம்மையாரை மிகவும் கவர்ந்தது.
 
 காந்திஜிஅவர்கள் அப்பொழுது பட்டுப்புடவையுடனும், கழுத்துநிறைய 
            நகைகளுடனும் அலங்காரப் பதுமைகளாகக் காட்சியளித்த வை.மு.கோ.அம்மையார், 
            அவரது தோழியர்களான அம்புஜம்மாள், ஜானம்மாள் ஆகியோரைப் பார்த்து, நம் 
            பாரதத்தாய் அடிமை விலங்கு பூண்டிருக்கும்போது, நீங்களும் ஆபரண 
            விலங்கைப் பூண்டிருக்கின்றீர்களே என்று அதிசயத்துடன் கேட்டார். பின்னர் 
            அவர்கள் அனைவருக்கும் கதரின் மகத்துவத்தை எடுத்துரைத்தார். இது 
            வை.மு.கோ.அம்மையார; வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 
            அம்மையார் அன்றிலிருந்து பட்டாடையை வெறுத்துக் கதர் ஆடையை அணியத் 
            தொடங்கினார். தமது பட்டாடைகள் பலவற்றை உறவினர்களுக்குக் கொடுத்தும், 
            சிலவற்றைத் தம் வீட்டின் முன் போட்டுக் கொளுத்தியும் விட்டார். 
            காந்தியைச் சந்தித்தது முதல் தம் வாழ்நாள் முழுவதும் கதர் ஆடையையே 
            அணிந்து வாழ்ந்தார்.
 
 காந்தியின் சந்திப்பு வை.கோ. அம்மையாரை விடுதலைப் போராட்ட வீராங்கனையாக 
            மாற்றியது. 1931-ஆம் ஆண்டு காந்திஜி அவர்கள் கள்ளுக்கடை மறியலில் 
            பெண்கள் ஈடுபடவேண்டுமென்று அழைப்பு விடுத்தபோது அம்மையார் அதை ஏற்று 
            திருவல்லிக்கேணியில் தற்போதைய பெசண்ட் ரோட்டில் திருமலாச்சாரி பள்ளி 
            இருக்குமிடத்தின் அருகே இருசப்ப கிராமணித் தெருவில் இருந்த 
            கள்ளுக்கடைகள் முன்பு பல எதிர்ப்புகளையும் மீறி மறியல் செய்தார். 
            1932-ஆம் ஆண்டில் லோதியன் கமிஷனை எதிர்த்து ஊர்வலம் சென்றதற்காகவும், 
            அன்னியத் துணி பகிஷ்கார இயக்கத்தில் கலந்து கொண்டும், அம்மையார் 
            சிறைசென்றார்.
 
 வை.மு.கோ. அம்மையார் இசையில் மிகுந்த ஈடுபாடுடையவராக விளங்கினார். 
            காங்கிரஸ் மேடைகள் தோறும் நாட்டுப்பற்று உள்ள பாடல்களைஅம்மையார் 
            பாடினார். அத்துடன் வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்களின் இசைஆற்றலை 
            வெளிக் கொணரப் பாடுபட்டுள்ளார். அம்மையார் வானொலியிலும் 
            இசைநிகழ்ச்சிகளை வழங்கி அதனை இசைத்தட்டுக்களாகவும் கொடுத்துள்ளார் 
            என்பது குறிப்பிடத்தக்கது.
 
 காங்கிரஸ் இயக்கத்தில் செயல்திறன் மிக்க உறுப்பினராக அம்மையார் 
            விளங்கினார். தீரர் சத்தியமூர்த்தி, காமராசர், மூதறிஞர் இராஜாஜி 
            போன்றோர் அம்மையாருடன் நட்புடையவர்களாக இருந்தனர். தீரர் 
            சத்தியமூர்த்தியின் கூட்டங்களில் அம்மையார் கலந்து கொண்டு கடவுள் 
            வாழ்த்துப் பாடலையும், தேசிய எழுச்சி மிக்க பாடல்களையும் பாடியுள்ளார்.
 
 அம்மையார் நாடகம் எழுதுவதிலும், இயக்குவதிலும் வல்லவர். அவருடைய சமூக 
            நாடகங்கள் பலமுறை மேடை ஏற்றப்பட்டுள்ளன. அவற்றில் அருணோதயம், 
            வத்சகுமார், தயாநிதி என்ற நாடகங்கள் பலரது பாராட்டைப் பெற்றவையாகும். 
            இவ்வாறு வை.மு.கோ. அம்மையார் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் 
            வல்ல முத்தமிழ் வித்தகராகத் திகழ்ந்தார்.
 
 அம்மையார் முப்பதுகளில் டாக்கி என்று அக்காலத்தில் சொல்லப்பட்ட 
            திரைப்படத்துறையிலும் முத்திரை பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்து. 
            அவரது அனாதைப் பெண் என்ற நாவலை ஜுபிடர் பிக்ஸர்ஸ் நிறுவனம் 
            திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டது. அம்மையாரின் தயாநிதி என்ற நாவல் 
            சித்தி என்ற பெயரில் வெளிவந்து மிகுந்த புகழ் பெற்றது. 
            வை.மு.கோ.அம்மையார் திரைப்படத் தணிக்கைக் குழுவின் உறுப்பினராகப் 
            பத்தாண்டுகள் பணியாற்றினார். அவர் தணிக்கைக் குழு உறுப்பினராக 
            இருந்தபோது, தாம் தணிக்கை செய்த காட்சிகள் மீண்டும் திரைப்படங்களில் 
            இடம்பெற்றுள்ளனவா என்பதை அறிந்து கொள்ள அத்திரைப்பட அரங்கிற்குத் தன்னை 
            யாரும் அறியாமல் இருக்கத் தலையில் முக்காடிட்டுக் கொண்டு செனறு 
            பார்ப்பது வழக்கம். அதிஷ்டம் என்ற திரைப்படத்தில் தான் தணிக்கை செய்த 
            காட்சிகள் மீண்டும் திரையிடப்பட்டிருப்பதை அறிந்து அப்படத்தை மீண்டும் 
            தணிக்கை செய்ய அனுப்பினார். இவ்வாறு தாம் செய்யும் பணிகளை மிகுந்த 
            ஈடுபாட்டுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் செய்தார்.
 
 அம்மையார் இலவசமாக குழந்தைப்பேறு மருத்துவம் பார்ப்பதும் உண்டு. தமது 
            உறவினர்களுக்கு மட்டுமின்றி தன்னை நாடிவந்து குழந்தைப்பேறு பார்க்க 
            வேண்டும் என்று யார் அழைத்தாலும் சாதி சமய வேறுபாடின்றி அவர்கள் 
            இருப்பிடத் சென்று மருத்துவம் பார்ப்பார். இந்தியா சுதந்திரம் பெற்ற 
            அன்று அம்மையார் அதனைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தார்.
 
 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் காந்தி மறைந்த பின்பு 13-ஆம் நாள் 
            அவரது அஸ்தி நாடெங்கும் கடலில் கரைக்கப்பட்டது. சென்னையில் நடந்த அஸ்தி 
            கரைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமமையார் காந்தியின் நினைவாக 
            மார்ச்சு மாதம் இரண்டாம் நாளன்றுமகாத்மாஜி சேவா சங்கம் என்ற சங்கத்தைத் 
            தொடங்கினார். அச்சங்கத்தின் வாயிலாக ஏழைகளுக்கும் ஆதரவற்ற குழந்தைகள், 
            பெண்கள் ஆகிய அனைவருக்கும் பல்வேறு உதவிகளைச் செய்தார்.
 
 வை.மு.கோ.அம்மையாரின் தேசிய சேவையைப் பாராட்டி காங்கிரஸ் அரசாங்கம் 
            அவருக்குச் செங்கல்பட்டுக்கு அருகே 3 ஏக்கர் நிலமும் மற்றொரு இடத்தில் 
            7 ஏக்கர் நிலமும் வழங்கிச் சிறப்பித்தது. ஆனால் அவ்வாறு தனக்குக் 
            கிடைத்த நிலத்தைப் பூமிதான இயக்கத்திற்காக வினோபாவேயிடம் அம்மையார் 
            வழங்கிவிட்டார்.
 
 1956-ஆம் ஆண்டில் அம்மையாரின் ஒரே மகனான ஸ்ரீநிவாசன் தீடீரென்று 
            இறந்தார். அவரது மறைவு அம்மையாரை நிலைகுலைய வைத்துவிட்டது. தன் மகன் 
            இறந்து தான் மட்டும் இருக்கிறோமே என்று வருந்தி சரியாக உணவு உண்ணாமல் 
            உறக்கமின்றி உடம்பை வருத்திக் கொண்டார். அதனால் அம்மையார் கொடிய 
            காசநோய்க்கு ஆளானார். தாம்பரம் காசநோய் மருத்துவ மனையில் உரிய சிகிச்சை 
            பெற்றும் பலனின்றி 1960-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் நாள் 
            மருத்துவமனையிலேயே அவர் இறந்தார்.
 
 59 ஆண்டுகள் வாழ்ந்த வை.மு.கோ அம்மையார் 115 நாவல்களை எழுதி நாவல் 
            ராணியாகத் திகழ்ந்தார். மேலும் இரு சிறுகதைத் தொகுதிகள், 3 நாடகங்கள், 
            இரண்டு உரைநடை நூல்கள் ஆகியவை அவரின் இதரப் படைப்புகளாகும். பெண்களின் 
            வழிகாட்டியாக, சிறந்த விடுதலைப்போராட்ட வீராங்கனையாக, நாடக ஆசிரியராக, 
            நாடக இயக்குநராக, இசை வல்லவராக, பத்திரிக்கை ஆசிரியராகப் பன்முக 
            ஆற்றலுடன் விளங்கிய நாவல் ராணியாகிய வை.மு.கோதைநாயகி அம்மாள் அவர்களின் 
            வாழ்க்கை குன்றிலிட்ட விளக்குப் போன்று என்றும் ஒளிர்ந்து பெண்களின் 
            முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் எனலாம்.
 
 Singaram Sethuraman <malar.sethu@gmail.com>
 |  
| 
 |  
|  |  
|   |  
|  ©©©©©©© 
      காப்புரிமை 2000-2011  Pathivukal.COM. Maintained By: 
      
      
      Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
      Press and Media Council Of
Canada . 
      முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  |