இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட 2007 இதழ் 92  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
கட்டுரைகள்!

1. அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்!
-வ.ந.கிரிதரன்-

அல்பேர்ட் ஜன்ஸ்டைன்நவீன பெளதீகம் என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருபவர் அல்பேர்ட் ஜன்ஸ்டைன். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரால் வெளியிடப்பட்ட 'சார்பியற் தத்துவம்' (Theory of Ralativity) பற்றிய கட்டுரைகள் பெளதீகவியலின் வரலாற்றிலேயே மாபெரும் புரட்சியை ஏற்படுத்தின. புரட்சியென்றால் சாதாரண புரட்சியல்ல. பெளதிகத்தின் அடித்தளத்தையே அடியோடு மாற்றிவைத்த புரட்சி. இச் சார்பியற் தத்துவமும், சக்திச் சொட்டுப் பெளதிகமும் (Quantum Physics) இன்றைய நவீன பெளதிகத்தின் அடித்தளங்களாகக் கருதப்படுபவை. சார்பியற் தத்துவத்தைப் பொறுத்தவரையில் அது முழுக்க முழுக்க ஜன்ஸ்டைனின் கோட்பாடே. சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப கர்த்தாவாகவும் ஜன்ஸ்டைனையே கருதலாம். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு நோபல் பரிசு கிடைத்ததே போட்டான்கள் பற்றிய கண்டு பிடிப்பிற்காகத்தான். இக் கண்டுபிடிப்பே சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப வளர்ச்சியாகும். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு சார்பியற் தத்துவத்திற்காகவும் இன்னுமொருமுறை நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும்.

சரி. அப்படி இந்தச் சார்பியற் தத்துவம் அப்படி என்னதான் கூறிவிடுகின்றது?

விடை மிகவும் சுலபம். 'நேரம்', 'வெளி' பற்றிய கருதுகோள்களை , அதாவது இதுவரை காலம் 'வெளி', 'நேரம்' பற்றி நிலவி வந்த கோட்பாடுகளை, சார்பியற் தத்துவம் அடியோடு மாற்றியமைத்து விடுகின்றது. அதே சமயம் 'பொருள்' , 'சக்தி', 'புவியீர்ப்பு', பற்றியும் புதிய கருது கோள்களை முன்வைக்கின்றது. இச் சார்பியற் தத்துவக் கோட்பாடுகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. சிறப்புச் சார்பியற் தத்துவம்
(Special Theory of Relativity)
2. பொதுச் சார்பியற் தத்துவம்
(General Theory of Relativity)


இவற்றில் 'சிறப்புச் சார்பியற்' தத்துவம் இதுவரை நிலவி வந்த 'வெளி' 'நேரம்' பற்றிய கோட்பாடுகளை அடியோடு மாற்றியமைத்து விடுகின்றதென்றால், பொதுச் சார்பியற் தத்துவமோ புவியீர்ப்பு பற்றிய கோட்பாட்டை மாற்றியமைத்து விடுகின்றது.

'வெளி' 'நேரம்' பற்றிய கோட்பாடுகள்:

ஆயிரக்கணக்கான வருடங்களாக நிலவி வந்த அரிஸ்டாட்டிலின் கோட்பாடுகளைப் பரிசீலனைக்குட்படுத்தியவர்கள் கலிலியோவும் , சேர். ஜசக் நியூட்டனுமே. ஆனால் வெளி, நேரம் பற்றிய இவர்கள் யாவரினதும் கோட்பாடுகள் ஒன்றாகவேயிருந்தன. வெளியையும், நேரத்தையும் சுற்றிவர நிகழும் இயக்கங்களால் எவ்விதப் பாதிப்பும் அடையாத சுயாதீனமானவைகளாகவே (absolute) இவர்கள் கருதினார்கள். சாதாரண மனித வாழ்வின் அனுபவங்களிலிருந்தே இவர்களும் வெளி, நேரம் பற்றிய கோட்பாடுகளை வகுத்திருந்தார்கள்.

எங்கும் எல்லையற்று விரிந்து பரந்து கிடப்பதுதான் வெளி. 'எல்லாத் திசையிலுமோர் எல்லையில்லா வெளி வானிலே..' என்று பாரதி பாடியதைப் போல் எங்கும் வியாபித்துக் கிடக்கின்றது வெளி. இந்த வெளியில் தான் சூரியன், கிரகங்கள் மற்றும் பல்வேறுபட்ட பொருட்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய இயக்கங்கள் இந்த வெளியைப் பாதிப்பதில்லை. அது தன்பாட்டில் வியாபித்துக் கிடக்கின்றது. இவ்வாறுதான் நியூட்டன் வரையிலான் விஞ்ஞானிகள் கருதினார்கள். இது போன்றுதான் 'நேரமும்' சுற்றிவர நிகழும் இயக்கங்களால் எவ்விதப் பாதிப்புமற்று தன்பாட்டில் இயங்கிக் கொண்டிருப்பதாகப் பெள்தீக விஞ்ஞானிகள் கருதினார்கள்.

சிறப்புச் சார்பியற் தத்துவமும்,  வெளியும், நேரமும்...

இவ்விதம் சுயாதீனமாகக் கருத்தப்பட்டு வந்த 'வெளி'யோ 'நேர'மோ உண்மையில் சுயாதீனமானவையல்ல. அவையும் சுற்றி வர நிகழும் இயக்கங்களால் பாதிப்புறுபவையே, சார்பானவையே என்பதை ஜன்ஸ்டைன் 'சிறப்புச் சார்பியற் தத்துவம்' மூலம் வெளிக்காட்டினார். உதாரணமாக நேரத்தை எடுத்துக் கொண்டால்.. வேகமானது நேரத்துடன் மாறுதல் அடைகின்றது. ஒளி வேகத்தில் செல்லும் ராக்கட்டில் ஒரு மனிதனையும், பூமியில் நிற்கும் ஒருவனையும் கற்பனை செய்து கொள்ளுங்கள். இவர்கள் இருவருமே 'சீக்கோ' கடிகாரங்களைக் கைகளிலே கட்டியிருக்கின்றார்கள். இவர்கள் இருவரது கடிகாரங்களும் நேரம் சுயாதீனமானதாகவிருந்தால் ஒரே நேரத்தைக் காட்ட வேண்டும். ஆனால் நேரம் சார்பானதாகவிருப்பதால் , இருவரது கடிகாரங்களும் இரு வேறு நேரங்களையுமே காட்டும். உண்மையில் வேகம் கூடக்கூட நேரம் மாறுவதும் குறையவே தொடங்கும். ஒளிவேகத்தில் செல்லும் ராக்கட்டில் இருப்பவனிற்கு அவனிற்குச் சார்பாக ஒரு மணித்தியாலம் சென்றிருக்கும். அதே சமயம் பூமியிலிருப்பவனிற்கோ பல நூறு வருடங்கள் சென்றிருக்கும். இவ்விதம் நேரமானது வேகத்துடன் மாறுவது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட்ட உண்மை.

இதற்காக விஞ்ஞானிகள் இரும்பு அணுக்கருக்களுடன் காமாக் கதிர்களை இரு வேறு உயரங்களில் மோதவிட்டுப் பார்த்தார்கள். உயரத்தில் நேரம் வேகமாகச் செயற்படுகின்ற காரணத்தால் காமாக் கதிர்களை உறுஞ்சும் இரும்பு அணுக்கருக்களின் போக்கு வித்தியாசப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

வெளியும், பொருளும்..

இதுபோல் தான் சுயாதீனமாகக் கருதப்பட்டு வந்த வெளி (space) கூட நேரம் போல் பாதிப்படைகின்றது. ஒரு பொருளை எடுத்துக் கொண்டால் , அதன் பொருண்மை கூடக் கூட அப்பொருளானது தன்னைச் சுற்றியிருக்கும் வெளியை வளைக்கத் தொடங்கிவிடுகின்றது. 'வெளியை'யாவது வளைப்பதாவது.. வளைப்பதற்கு வெளியென்ன ஒரு பொருளா?.." என நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான். ஆனால் இவ்விதம் வெளியைப் பொருளின் பொருண்மை வளைப்பது நிரூபிக்கப் பட்ட உண்மை.

புதன் கிரகமானது சூரியனைச் சுற்றி வரும் ஒழுக்கில் ஒரு சிறு வித்தியாசம் இருந்து வந்தது. இந்த வித்தியாசத்தின் காரணத்தை நியூட்டனின்கோட்பாடுகளினால் விளக்க முடியவில்லை. ஜன்ஸ்டைனின் சார்பியற் கணித சூத்திரங்களோ இவ்வித ஒழுக்கில் காணப்படும் மாற்றத்திற்குக் காரணம் சூரியன் அதனைச் சுற்றியுள்ள வெளியினை வளைத்து விடுவதே என்பதை எடுத்துக் காட்டின. இது பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த வானியல் அறிஞரான சேர். ஆர்தர் எடிங்டனால் சூரிய கிரகணமொன்றை அவதானித்த பொழுது நிரூபிக்கப் பட்டது.

பொதுச் சார்பியற் தத்துவமும் புவியீர்ப்பும்...

புவியீர்ப்பைப் பொறுத்தவரையில் நியூட்டன் அதனை ஒரு விசையாகவே கருதினார். ஆனால் ஜன்ஸ்டனின் 'பொதுச் சார்பியற் தத்துவமோ' சூரியன் தன்னைச் சுற்றியுள்ள வெளியினை வளைத்து விடுகின்றதன் காரணமே பூமியினைச் சூரியனைச் சுற்ற வைத்து விடுகின்றதென்பதை எடுத்துக் காட்டியது.

இவ்விதமாக அரிஸ்ட்டாடிலின் கோட்பாடுகளையே ஆட்டங் காண வைத்த நியூட்டனின் கோட்பாடுகளையே ஆட்டங் காணவைத்து விட்டன ஜன்ஸ்டனின் சார்பியற் கோட்பாடுகள். சாதாரண மனித அனுபவங்களிற்கப்பாற்பட்டு சம்பவங்கள் நடைபெறும் போதே ஜன்ஸ்டனின் சார்பியற் கோட்பாடுகளைப் பூரணமாக உணர முடியும். மிகப் பிரமாண்டமான வேகத்தில் செல்லும் போதே நேரம் மாறுவதை இலகுவாக அவதானிக்க முடியும். அதனை , அம்மாற்றத்தினை. சாதாரண மனித சக்திக்குட்பட்ட வேகத்தில் அவதானிக்க முடியாது. ஏனென்றால்.. மாற்றம் அவ்வளவு சிறியதாக இருந்து விடுகின்றது.

மேலும் வெளியையும் நேரத்தையும் தனித் தனியாகப் பிரித்துப் பார்ப்பதையும் சார்பியற் கோட்பாடுகள் எதிர்க்கின்றன. 'வெளிநேரச்' (spacetime) சம்பவங்களின் தொகுப்பாகவே உண்மையில் , ஜன்ஸ்டனின் சார்பியற் கோட்பாடுகள் விளக்கு¢கின்றன.

இவ்விதமாக இப்பிரபஞ்சத்தை உண்மையில் தெளிவாகத் துல்லியமாகச் , சரியாக மேற்படி ஜன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகள் விளக்கி வைக்கின்றன.

உசாத்துணை நூல்கள்:
1. 'A Brief History Of Time' By Stephen Hawkings
2. 'Black Holes and Baby Universes' By Stephen Hawkings
3. 'Relatively Speaking' By Eric Chaisson
4. 'Relativity' By Albert Einstein
5. 'Stephen Hawking : quest for a theory of every thing' By Kitty Fergusson

-நன்றி: கணையாழி February 1997- வீரகேசரி,  பதிவுகள், திண்ணை

2.நூலறிமுகம்: 'மிஷியோ ஹகு'வின் 'ஹைபர் ஸ்பேஸ்'!
- வ.ந.கிரிதரன் -


'மிஷியோ ஹகு'வின் 'ஹைபர் ஸ்பேஸ்'! நாம் வாழும் இந்த உலகம், வான், மதி, சுடர், இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நமது பிரபஞ்சம் இவை யாவுமே எப்பொழுதும் எந்நெஞ்சில் பெரும் பிரமிப்பினையும், பல்வேறு வகைப்பட்ட வினாக்களையும் ஏற்படுத்தி விடுவது வழக்கம். முப்பரிமாண உலகினுள் கைதிகளாக வளைய வந்துகொண்டிருக்கும் நாம், இம்மண்ணில் நாமே உருவாக்கிய அமைப்புகள் ஏற்படுத்தும் தாக்கங்களுக்குள் சிக்கி, அவற்றுக்கு ஈடுகொடுத்துத் தப்பிப் பிழைப்பதிலேயே எம் வாழ்நாளைக் கழித்து முடிந்து விடுகின்றோம். இத்தகையதொரு நிலையில் இப்பிரபஞ்சத்தின் தோற்றம், அமைப்பு, முடிவு பற்றிய வினாக்கள், அவை பற்றிய நினைவுகள், எண்ணங்கள் எல்லாமே எப்பொழுதுமே என் நெஞ்சில் ஒருவித தண்மையான உணர்வினை ஏற்படுத்தி விடுவது வழக்கம். சகல விதமான மன அழுத்தங்களிலிருந்தும் என்னை விடுபட இவை பெரிதும் உதவுகின்றன. இதற்காகவே நகரவாழ்வின், நாகரிக வாழ்வின் இறுக்கத்தினிலிருந்தும் விடுபடுவதற்காக நேரம் கிடைக்கும் போதிலெல்லாம் இரவினில் தொலைவினில் சிரிக்கும் நட்சத்திரக் கன்னியரின் கண்சிமிட்டலில், வெண்மதிப் பெண்ணின் பேரழகில் என்னை மறந்து விடுவேன். அவர்களுடன் கழிக்கும் என் பொழுதுகள் என்னைப் பொறுத்தவரையில் அற்புதமானவை. அவர்களைப் பற்றிய நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் இவை யாவுமே எனக்கு மிகவும் உவப்பானவை. அண்மையில் நம் இருப்பு, பிரபஞ்ச அமைப்பு பற்றியெல்லாம் புதியதொரு கோட்பாட்டளவில் விளக்குமொரு நல்லதொரு , வான் - இயற்பியல் (Astro-Physics) சம்பந்தமான நூலொன்றினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முன்பொருமுறை ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் 'சிறப்புச், சார்பியற்' கோட்பாடுகளை, அறிவுத்தாகமெடுத்த சாதாரண வாசகரொருவர் விளங்கும் வகையில் 'எரிக் சைய்சன்' (Eric Chaission) எழுதிய 'Relatively Speaking' வாசித்ததன் பின்னர், 'ஸ்டீபன் ஹார்கின்ஸ்'சின் 'காலத்தின் சுருக்கமான வரலாறு' (A Brief History Of Time) வாசித்ததன் பின்னர், என்னை மிகவும் கவர்ந்த நூலிது. நியுயோர்க்கில் 'City College'இல் தத்துவ இயற்பியலில் பேராசிரியராகப் பணிபுரியும் 'மிஷியொ ஹகு' (Michio kaku) எழுதிய 'ஹைபர் ஸ்பேஸ்' (Hyperspace) என்னும் நூல் பற்றித்தான் குறிப்பிடுகின்றேன். இந்தக் கட்டுரை இந்நூல் பற்றிய விமர்சனக் கட்டுரையோ அல்லது மதிப்புரையோ அல்ல. அவ்விதமானதொரு கட்டுரையினைப் பின்னொரு சமயம் எழுதும் எண்ணமுண்டு. ஆனால் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள சில விடயங்களைப் பற்றிய சிறியதொரு விபரிப்பே, ஏற்பட்ட என் எண்ணங்களின் பாதிப்பே எனது இச்சிறு கட்டுரை.

'மிஷியோ ஹகு'முப்பரிமாணங்களுக்குள் சிக்கியிருப்பதால் தான் எம்மால் இயற்கையில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளைப் பற்றியெல்லாம் பூரணமாக விபரிக்க முடியாதிருக்கிறது. இதனால்தான் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனால் கூட இறுதிவரை இயற்கையின் நான்கு விதிகளையும் ஒன்றுபடுத்தி விபரிக்கும் வகையிலான கோட்பாடொன்றினைக் கண்டறியமுடியாது போய்விட்டது. இப்பிரபஞ்சத்தில் பல விடயங்கள் எம்மிருப்பில் சாத்தியமற்றவையாகத் தென்படுகின்றன. பல நிகழ்வுகளுக்கு எம்மால் சரியான காரணங்களைக் கண்டறிய முடியாதுள்ளது. அக்காரணங்களை விபரிக்க முடியாதுள்ளது. ஆனால் அத்தகைய விடயங்களைச் சாத்தியமாக்க, அத்தகைய நிகழ்வுகளை விபரிக்க, நாம் வேறு வகையில் சிந்திக்க வேண்டும். அணுக வேண்டும். அதனை ஏற்கனவே நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பலர் செய்யத்தொடங்கி விட்டார்கள். கணிதத்தில் புலமை வாய்ந்த அறிஞர்கள் அணுகத் தொடங்கி விட்டார்கள். இவை சம்பந்தமான கோட்பாடுகள் இன்னும் கோட்பாட்டளவிலேயே இருந்தாலும் எதிர்காலத்தில் அக்கோட்பாடுகள் நடைமுறைக்குச் சாத்தியமாவதற்குச் சாத்தியங்களிலாமலில்லை. உதாரணமாக ஒளி எப்பொழுதும் எம்மைப் பிரமிக்க வைத்துவிடுமொன்று. துகளாக, அலையாக விளங்குமிதன் இருப்பு புதிரானது. வெற்றிடத்தினூடாகப் பயணப்படக்கூடிய இதனியல்பு ஆச்சரியத்தைத் தருவது. ஒளியின் இவ்வியல்பினை நடைமுறையிலுள்ள கோட்பாடுகள் மூலம் விளக்க முடியாது. இது போல் விரிந்து கொண்டிருக்கும் நமது பிரபஞ்சத்தின் அளவு நம்மைப் பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்று விடுகிறது. ஒளி வேகத்தில் சென்றால் கூட, எத்தனையோ பில்லியன் ஆண்டுகள் தேவையுள்ள பயணங்களைக் கொண்ட தொலைவுள்ள இடங்களைக் கொண்டது நமது பிரபஞ்சம். இத்தகைய பிரமாண்டமான தொலைவுகளை நமது வாழ்நாளில் கடப்பதென்பது நினைத்துப் பார்க்க முடியாது. நமது சூரியமண்டலம் தனது அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்குமொன்று. ஒருநாளில் அழிந்து போய்விடும். விஞ்ஞானிகளின் ஆய்வுகளின்படி இன்னுமொரு ஐந்து பில்லியன் வருடங்களில் நமது சூரியன் 'வெண்குள்ளர்' (white dwarf) என்னும் நிலையினை அடைந்துவிடும். ஆனால் அதற்கு முன்னரே சூரிய மண்டலத்திலுள்ள கோள்களையெல்லாம் 'சிவப்பு அரக்கர்' (Red Giant) நிலையினை அடைந்த நமது சூரியன் விழுங்கி விடும். ஒருவேளை நமது கதிர் அழிவதற்கிடையில், எம்மால் வாழுதற்குரியதொரு கோளினையுள்ளடக்கிய இன்னுமொரு சூரியமண்டலத்தைக் கண்டுபிடிக்க முடிகின்றதென்று வைத்துக் கொள்வோம். ஆனால் அதே சமயம் விரிந்து கொண்டிருக்கும் நமது பிரபஞ்சம் ஒரு சமயம் விரியும் இயல்பினை மாற்றிச் சுருங்க ஆரம்பிக்கின்றதென்று வைத்துக் கொள்வோம். அவ்வாறானதொரு நிலையில் 'பெருவெடிப்பில்' (Big Bang) ஆரம்பித்த நமது பிரபஞ்சம் 'பெருஅழிவினில்' (Big Crunch) அழிந்து போகக் கூடியதொரு சாத்தியமும் ஏற்படலாம். அவ்வாறானதொரு நிலையில் நமது பிரபஞ்சத்திலுள்ள சகல உயிரினங்களும் அழிந்து போக வேண்டிய நிலையேற்படும். உண்மையில் அவ்வாறானதொரு நிலையில் உயிரினம் தப்புவதற்கேதாவது சாத்தியமுண்டா? ஒரு நிலையில் அதற்கான சாத்தியங்களும் இருக்கத்தான் செய்கின்றன. விரிந்து கொண்டிருக்கும் நமது பிரபஞ்சத்தைப் போல பல பிரபஞ்சங்கள் நாம் வாழும் இதே கணத்தில், நமது பிரபஞ்சத்துக்கு வெளியில் விரிந்து கொண்டிருந்தால், அப்பிரபஞ்சங்களுக்கும் நமது பிரபஞ்சத்துக்குமிடையில் ஒரு பாதையொன்றினை அமைப்பதற்குரிய சாத்தியமொன்றிருந்தால் அவ்விதமானதொரு தப்பிப்பிழைத்தலுக்கும் சாத்தியமொன்றுண்டு. இதுபோன்ற பலவிடயங்களை விபரிக்கவும், வினாக்களுக்கு விடையளிக்கவும் இயற்பியல் விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருக்கும் கோட்பாடுகளை விபரிக்கும் நூலிது.

முக்கியமாக பரிமாணங்களை மீறிச் சிந்திப்பதன் மூலம், முப்பரிமாண உலகை மீறிப் பல்பரிமாண உலகில் வைத்து இப்பிரபஞ்சத்தில் நடைபெறும் நிகழ்வுகளை ஆய்வதன் மூலம் மிகவும் இலகுவாக தற்போது முடியாதுள்ள விடயங்களைச் சாத்தியமாக்க முடிகிறது. அவ்விதமான பல்பரிமாண வெளியே 'ஹைபர் ஸ்பேஸ்' அல்லது' 'அதிவெளி'. பல்பரிமாணங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் இயற்கையின் நான்கு அடிப்படை விசைகளான ஈர்ப்பு, மின்காந்த, பலமான மற்றும் பலஹீனமான கதிரியக்க விசைகளையெல்லாம் ஒரு தத்துவத்தின் கீழ் விபரிக்க முடிகிறது. மேற்படி நான்கு விசைகளும் ஒன்றேயென்பதை காந்தவிசையினையும், மின்விசையினையும் ஒன்றுபடுத்த முடிந்ததைப் போல ஒன்றுபடுத்த முடிகிறது. அதே போல் நம்முப்பரிமாண உலகில் வெறுமையாகக் காட்சியளிக்கும் வெற்றிடமானது உண்மையில் வெற்றிடமேயில்லை. ஐந்தாவது பரிமாணத்தில் அதிரும் இயல்புகளைக் கொண்டது. நம் பரிமாணங்களை மீறிய நிலையில், ஐந்தாவது பரிமாணத்தில் அதிரும் இயல்பினைக் கொண்டது ஒளி. இவ்விதமான ஐந்தாவது பரிமாணத்தில் அதிரும் ஒளியால் இயல்பாகவே , அப்பரிமாணத்தில் அதிர்ந்து கொண்டிருக்கும் வெற்றிடத்தில் பயணிக்க முடிகிறது. (நாம் வாழும் முப்பரிமாண உலகுடன், நேரத்தையும், இன்னுமொரு 'பரப்பு சம்பந்தமான பரிமாணமொன்றி'னையும் - Spatial Dimension -கூட்டுவதால் ஏற்படுவதே ஐந்தாவது பரிமாணம்.] இவ்விதமானதொரு ஐம்பரிமாண உலகில், வெளியில் மின்காந்த அலையான ஒளியினையும், ஈர்ப்பு விசையினையும் மிகவும் இலகுவாகவே ஒன்று படுத்த முடிகிறது. ஐன்ஸ்டைன் சூழலை மீறிச் சிந்தித்து வெளிநேரப் பிரபஞ்சம் பற்றிய தனது கோட்பாடுகளை அறிவித்து நவீன இயற்பியலைப் புரட்சிகரமாக்கினார். ஐன்ஸ்டைனின் வழியில் பல்பரிமாணங்களை அடிப்படையாக வைத்துச் சிந்திப்பதன் மூலமே ஐன்ஸ்டனால் முடியாமல்போன அடிப்படை விசைகளை ஒன்றிணைத்தலென்னும் கோட்பாட்டினைச் சாத்தியமாக்க முடியுமென்கிறார் மிஷியோ ஹகு இந்நூலில்.

நமது பிரபஞ்சம் அழியும் பட்சத்தில் இன்னுமொரு பிரபஞ்சத்துக்குத் தப்பிச் செல்ல முடியுமா போன்ற கேள்விகளுக்கெல்லாம் 'புழுத்துளை' (Wormhole) போன்ற கோட்பாடுகள் மூலம் விடைகாண நவீன அறிவுலகம் முயல்வதை விபரிக்கும் இந்நூல் அறிவுத் தாகமெடுத்து அலையும் உள்ளங்களைக் களிகொள்ளச் செய்துவிடும் நூல்களில் முக்கியமானதொன்று. பல்பரிமாணங்களைக் கொண்டு நம்மிருப்பை விபரித்த முதலாவது கோட்பாடான 'கழுசா-கிளெயின்' (Kaluza-Klein) தத்துவம் தொடக்கம், பொருளானது பத்துப் பரிமாண வெளியில் அதிரும் நுண்ணிய சிறுஇழைகளால் ஆனதென விபரிக்கும் 'சுப்பர் ஸ்ரிங்' (Super String) தத்துவம்வரை பல்வேறு விடயங்களைப் பற்றி விபரிக்கும் இந்நூல் 'காலத்தினூடு பயணித்தல்' (Time Travel) பற்றியும், 'ஜோர்ஜ் பேர்ன்ஹார்ட் ரீமா'னின் (George Bernhard Riemann) உயர்பரிமாணக் கோட்பாடுகள் பற்றியும், அதுவரை கணித உலகில் ஆயிரக்கணக்கான வருடங்களாகக் கோலோச்சிக் கொண்டிருந்த யூகிளிட்டின் கேத்திரகணிதத்தை (Geometry) எவ்விதம் 'ரீமானி'ன் நவீன நாற்பரிமாண கேத்திரகணிதக் கோட்பாடுகள் ஆட்டங்காண வைத்தன என்பது பற்றியும், விசை பற்றிய சேர்.ஐசாக் நியூட்டனின் 'விசை' பற்றிய கோட்பாடுகளை எவ்விதம் 'ரீமா'னின் கோட்பாடுகள் கேத்திரகணிதக் கோட்பாடுகளால் விளக்கி வைத்தன என்பது பற்றியும், இத்தகைய சாதனைகளையெல்லாம் எவ்விதம் 'ரீமான்' உளவியல், பொருளியல் பிரச்சினைகளுக்கு மத்தியில் சாதித்தார் என்பது பற்றியும் ஆராய்கிறது. மிகவும் பிரமாண்டமான தொலைவுகளை உள்ளடக்கிய பிரபஞ்சத்தினை மிகவும் குறுகிய நேரத்தில் கடப்பதற்கு, அதனை நமது அன்றாடப் பயணங்களிலொன்றாக மாற்றுவதற்குரிய வழிவகைகள் உள்ளனவா, நமது பிரபஞ்சம் அழியும் பட்சத்தில் இன்னுமொரு பிரபஞ்சத்துக்குத் தப்பிச் செல்ல முடியுமா போன்ற கேள்விகளுக்கெல்லாம் 'புழுத்துளை' (Wormhole) போன்ற கோட்பாடுகள் மூலம் விடைகாண நவீன அறிவுலகம் முயல்வதை விபரிக்கும் இந்நூல் அறிவுத் தாகமெடுத்து அலையும் உள்ளங்களைக் களிகொள்ளச் செய்துவிடும் நூல்களில் முக்கியமானதொன்று.

ngiri2704@rogers.com
13/03/2005

நன்றி: பதிவுகள், திண்ணை, தட்ஸ்தமிழ்.காம்

3.பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!
- வ.ந.கிரிதரன் -

பாரதியார்.தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சரியானதொரு தீர்வில்லை. 'இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள், இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை' என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் 'கருத்து முதல்வாதிகள்'. இவர்கள் 'சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது' என்றும், 'இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு' என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல 'இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே' என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் 'பொருள் முதல்வாதம்' எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் 'பொருள்முதல்வாதிகள்' எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி 'ஆன்மா நிலையானது, அழிவற்றது' என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே'. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் 'அப்படி எதுவுமில்லை' என்கின்றார்கள். 'இவ்வியற்கையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களே உயிரினங்கள் உருவாகக் காரணம்' என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியை ஆராய்வோமாகில் அவனும் இந்தப் பிரச்சினையை அசட்டை செய்து விடவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம். பாரதியின் கீழுள்ள கவிதை வரிகள் அவனை ஒரு கருத்து முதல்வாதியாகக் காட்டுகின்றன. 'அல்லா' என்ற கவிதையில் பாரதி பின்வருமாறு பாடுகின்றான்.

"..பல்லாயிரம் பல்லாயிரம் கோடியண்டங்கள் எல்லாத்திசையிலுமோரெல்லையில்லா வெளிவானிலே நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்.."

'மகாசக்தி வாழ்த்து' என்னும் கவிதையில் அவன் கூறுவதோ?

"..விண்டுரைக்க அரிய அரியதாய் விரிந்த வானவெளியென நின்றனை. அண்ட கோடிகள் வானிலமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை. மண்டலத்தை அணு அணுவாக்கினால் வருவதெத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே! நினைக் காளியென்றேத்துவேன்.."

மேலுள்ள பாடல் வரிகள், மற்றும் பாரதியின் அனேக தெய்வப் பாடல்கள் கூறுவதென்ன? இந்த உலகம், இந்தப் பிரபஞ்சம் யாவற்றையும் ஆக்கியது ஒரு சக்தி , அதுவே கடவுள் என்பதையல்லவா? ஆனால் இவ்விதம் இயற்கைக்கு வேறாக ஒரு கடவுளைப் படைக்கும் கருத்து முதல்வாதியாக விளங்கும் பாரதியால் , கண்ணெதிரே தெரியும் காட்சிகளை, அவற்றின் உண்மையினைக் கருத்து முதல்வாதிகளைப் போல் மாயை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை. பொருள் உண்மையென்ற பொருள்முதல்வாதத்தினையும் மறுத்து விட முடியவில்லை. பாரதியின் 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்ற கவிதையினைப் பார்த்தால்....

"..நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம் தானோ? பலதோற்ற மயக்கங்களோ? கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே! இளவெயிலே! மரச்செறிவே! நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறுங் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப் போல் புதைந்தழிந்தே போனதினால் நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? காலமென்ற ஒரு நினைவும் காட்சியென்ற பல நினைவும் கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?.."

இவ்விதமாகக் 'காண்பவை , கருதுபவை ' யாவுமே பொய்யோ எனக் கருத்து முதல்வாதிகளைப் போல் வினவும் பாரதியார் மேழுள்ள கவிதையின் இறுதியில் பின்வருமாறு முடிக்கின்றார்.

"..சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால், சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பீரோ? காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ? காண்பதுவே உறுதி கண்டோம். காண்பதல்லால் உறுதியில்லை. காண்பது சக்தியாம். இந்தக் காட்சி நித்தியமாம்..."

ஆரம்பத்தில் கருத்து முதல்வாதிகளைப் போல் வினவிய பாரதி , இறுதியில் பொருள் முதல்வாதியாக முடிக்கின்றான். அதனால் தான் கருத்து முதல்வாதிகளைப் போல் 'காண்பதெல்லாம் மாயை'யென்று முடிக்காமல் 'காண்பது சக்தியாம். இந்தக் காட்சி நித்தியமாம்' என்று முடிக்கின்றான். இவ்விதமாக பாரதி தனிக் கருத்து முதல்வாதியாகவும் இல்லாமல், தனிப் பொருள்முதல்வாதியாகவுமில்லாமல் , கருத்து முதல்வாதத்திற்கும் பொருள் முதல்வாதத்திற்குமிடையில் ஒருவித இணக்கமான போக்கினை, சமரசப் போக்கினைக் கைக்கொள்பவனாகக் காணப்படுகின்றான். உண்மையில் பாரதி 'அல்லா', 'மகாசக்தி வாழ்த்து' மற்றும் பல பக்திப் பாடல்களின் அடிப்ப்டையில் கருத்துமுதல்வாதியாகத் தென்பட்டாலும், 'உலகத்தை வினவுதல்' என்ற கவிதையினூடாக நோக்கும் போது மேலே கூறப்பட்டதைப் போல் இருவிதமான தத்துவவியற் போக்குகளுக்குமிடையில் ஒரு சமரசம் செய்பவனாகவே தென்படுகின்றான். உண்மையில் பாரதியிடம் காணப்படும் இத்தகைய முரண்பாடுகளெல்லாம் அவனது ஆர்வமிக்க, உலகை அறியும் நோக்கு மிக்க மனப் போக்குகளின் வளர்ச்சியின் வெளிப்பாடுகளே. இத்தகைய போக்கினையே அவனது 'சுயசரிதை' என்ற கவிதையின் பின்வரும் வரிகளும் புலப்படுத்துகின்றன.

"..மாயை பொய்யென முற்றிலும் கண்டனன். மற்றுமிந்த பிரமத்தினியல்பினை ஆய நல்லருள் பெற்றிலன். தன்னுடை அறிவினுக்கு புலப்படலின்றியே தேய மீதெவரோ சொலுஞ் சொல்லினைச் செம்மையென்று மனத்திடை கொள்வதாம் தீய பக்தியியற்கை வாய்ந்திலேன். சிறுது காலம் பொறுத்தினுங் காண்பமே.."

மாயை பொய்யெனக் கூறும் பாரதி, 'பிரமத்தின் இயல்பினை அறிய இன்னும் அருள் பெறவில்லை' என்று கூறும் பாரதி, 'அறிவிற்கு புலப்படாத எவற்றையும் நம்பும் தன்மையில்லாத பாரதி, அத்தகைய அறிவு நிலையினை அடையும் வரை பொறுப்பேன் என்கின்றான். இவ்விதமாக பாரதியின் அறிவுத் தாகமெடுத்து அலையும் மனதில் ஏற்பட்ட தர்க்கப் போராட்டத்தின் விளைவுகளே அவனது மேற்கூறப்பட்ட முரண்பாடுகளே தவிர வேறல்ல. இத்தகைய முரண்பாடுகள் அவனது மாபெரும் மேதைமையின் வளர்ச்சிப் படிக்கட்டுக்களே.

நன்றி: பதிவுகள்காம், திண்னை.காம்

4. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
- வ.ந.கிரிதரன் -


பாரதியார்பாரதியார் ருஷ்யப் புரட்சியினைப் பாராட்டி வரவேற்று 'புதிய ருஷ்யா' என்னும் கவிதையில் பின்வருமாறு பாடுகின்றார். "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு/ மேன்மையுறக் குடிமை நீதி/கடியொன்றெழுந்தது பார் குடியரசென்று/உலகறியக் கூறிவிட்டார் அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது /அடிமையில்லை அறிக என்றார்/இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான்/ கிருதயுகம் எழுக மாதோ". இதன் மூலம் ருஷ்யப் புரட்சியினை இனங்கண்டுகொண்டு முதன்முதலாகப் பாடிய இந்தியக் கவிஞனென்ற பெருமையினையும் பாரதியாரே தட்டிக் கொள்கின்றார். பாரதியின் 'மாதர் விடுதலை' பற்றிய கவிதைகள், கட்டுரைகள், 'கியூசின்' என்னும் வீரமாதினைப் பற்றிய கட்டுரைகள், அம்மாதின் கவிதை மொழிபெயர்ப்புகள், புதிய ருஷ்யாவைப் பற்றிய கவிதை, 'செல்வம்', 'தொழிலாளர்' என்னும் தலைப்பிலான கட்டுரைகள், மற்றுமவர் தத்துவப் பாடல்கள் இவையாவுமே நமக்குக் கூறி நிற்பவை தானென்ன? பாரதி ஒவ்வொரு விடயத்தினைப் பற்றியும் பல்வேறுவகைப்பட்ட கருத்துகளையும் வெகு நுணுக்கமாகப் பரிசீலித்துள்ளாரென்பது மட்டுமல்ல, சமகாலத்து நடப்புகளையும் அறிந்துள்ளாரென்பதையும்தான்.

இன்றைய உலகில், முரணான பல்போக்குச் சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பார்வைகளில் பாரதியினைக் கண்டு புளகாங்கிதமடைந்து கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியின் உண்மையான நிலைப்பாட்டினை அறிந்து கொள்ள முயல்வது மிகவும் அவசியம். இது பற்றிய அவனது முரண்பட்ட போக்குகளை, தேடலை அவனது எழுத்துகளினூடே அறிந்து கொள்ள முயலவதே சாலச் சிறந்தது.

'பாரத சமுதாயம்' என்னும் கவிதையில் அவன் பின்வருமாறு பாடுகின்றான்: "முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை./ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை/ மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?/மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?/பலனில் வாழ்க்கை இனியுண்டோ?" இவ்விதம் பாரதியின் கவிதைகள் 'பொதுவுடமை'யினையும் 'சமத்துவத்தையும்' வரவேற்றுப் பாடுகின்றன. இவ்விதம் பொதுவுடமைக் கருத்தினை வரவேற்றும், ஆயுதம் தாங்கி நிகழ்த்தப்பட்ட ருஷ்யப் புரட்சியினையும் வரவேற்றுப் பாடிய பாரதியை மார்க்ஸியவாதிகள் புரட்சியினை , ஆயுதப் புரட்சியினை வரவேற்றிடும் ஒரு கவிஞனாக எண்ணி விடுகின்றார்கள். ஆனால் உண்மை இதுவா? பாரதியாரின் ஆவேசத்தினையூட்டிடும் சுதந்திரப்பாடல்களையும், பாப்பாப் பாட்டில் "பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம்/பயங்கொள்ளலாகாது பாப்பா!/மோதி மிதித்து விடு பாப்பா! /அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!" என்று பாடுவதையும் பார்த்துவிட்டு அவர் வன்முறையின் மூலம் தீர்வு காண்பதனையே விரும்புவதாக ஒரு சாரார் கருதிவிடுகின்றார்கள். ஆனால் இவை எல்லாவற்றையுமே தவிடு பொடியாக்கி விடுகின்றது பாரதியின் 'செல்வம்' என்ற கட்டுரை. அதில் அவர் பின்வருமாறு கூறுகின்றார்:

"ஏற்கனவே ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின் ஸ்ரீமான் மிந்த்ரோஸ்கி முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொதுவுடமையாகி விட்டது. இக்கொள்கை ஜெர்மனியிலும் ஆஸ்த்திரேலியாவிலும் துருக்கியிலும் அளவற்ற வன்மை கொண்டு வருகின்றது. ருஷ்யாவிலிருந்து இது ஆசியாவிலும் தாண்டிவிட்டது. வட ஆசியாவில் பிரமாண்டமான பகுதியாக நிற்கும் சைபீரியா தேசம் ருஷ்யாவின் ஆதிக்கத்தைச் சேர்ந்ததால் அங்கும் இந்த முறைமை அனுஷ்டானத்திற்கு வந்து விட்டது. அங்கிருந்து இந்தக் கொள்கை மத்திய ஆசியாவிலும் பரவி வருகின்றது. ஐரோப்பாவிலுள்ள பிராண்ஸ் இங்கிலாந்து முதலிய வல்லரசுகள் இந்த முறைமை தம் நாடுகளுக்குள்ளும் பிரவேசித்து வரக்கூடும் என்று பயந்து அதன் பரவுதலைத் தடுக்குமாறு பலவிதங்களில் பிரயத்தனங்கள் புரிந்து வருகின்றார்கள். ஆனால் இந்த முறைமை போர் கொலை பலாத்காரங்களின் மூலமாக உலகத்தில் பரவிவருவது எனக்குச் சம்மதம் இல்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக் கூடாதென்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க ஸமத்வம், ஸகோதரத்துவம் என்ற தெய்வீக தர்மங்களைக் கொண்டோர் அவற்றைக் குத்துவெட்டு பீரங்கி துப்பாக்கிகளினால் பரவச் செய்யும்படி முயற்சி செய்தல் மிகவும் பொருந்தாத செய்கையென்று நான் நினைக்கின்றேன்.."

இதே கட்டுரையில் இன்னுமோரிடத்தில் பாரதியார் பின்வருமாறு கூறுகின்றார்:

"..'கொலையாளிகளை அழிக்க கொலையைத் தானே கைக்கொள்ளும்படி நேருகின்றது. நியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேருகிறது' என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை கொலையை வளர்க்குமே ஒழிய அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணுமேயொழிய குறைக்காது. பாபத்தை புண்ணியத்தாலே தான் வெல்ல வேண்டும். பாபத்தை பாபத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை..." இவ்விதமாகக் கூறுமவர் இன்னுமோரிடத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:"மேலும் ருஷ்யாவிலுங்கூட இப்போது ஏற்பட்டிருக்கும் 'ஸோஷலிஸ்ட்' ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையதென்று கருத வழியில்லை. சமீபத்தில் நடந்த மஹாயுத்தத்தால் ஐரோப்பிய வல்லரசுகள் ஆள்பலமும் பணபலமும் ஆயுதபலமும் ஒரேயடியாகக் குறைந்து போய் மஹாபலஹீனமான நிலையில் நிற்பதை ஒட்டி மிஸ்டர் லெனின் முதலியோர் ஏற்படுத்தியிருக்கும் 'கூட்டு வாழ்க்கை' குடியரசை அழிக்க மனமிருந்தும் வலிமையற்றோராகி நிற்கின்றனர். நாளை இந்த வல்லரசுகள் கொஞ்சம் சக்தியேறிய மாத்திரத்தில் ருஷ்யாவின் மீது பாய்வார்கள். அங்கு உடமை இழந்த முதலாளிகளும் நிலஸ்வான்களும் இந்த வல்லரசுகளுக்குத் துணையாக நிற்பர். இதனின்றும் இன்னும் கோரமான யுத்தங்களும் கொலைகளும் கொள்ளைகளும் ரத்தப் பிரவாகங்களும் ஏற்பட இடமுண்டு...".

இவை எவற்றை எமக்கு உணர்த்தி நிற்கின்றன. ஒன்றினை மட்டும் அவை எமக்கு வெகுதெளிவாகவே உணர்த்தி நிற்கின்றன. அதாவது பாரதியார் பொதுவுடமைச் சமுதாயத்தினை ருஷ்ய அமைப்பு முறையினை வரவேற்றிடுகின்றார். ஆனால் ருஷ்யப் புரட்சி நிகழ்ந்த முறையினைத் தான் வரவேற்றிடவில்லை. அதே சமயம் ருஷ்ய நாட்டினைக் கொடுங்கோலன் ஜார் வருத்தி வந்திட்ட முறையினைக் கண்டு மனம் வெதிர்த்திட்ட பாரதியார் அக்கொடுங்கோலனின்றும் ருஷ்ய மக்களை விடுவித்த புரட்சி என்பதற்காக ருஷ்யப் புரட்சியினைப் பாராட்டிய போதும் வன்முறைப் புரட்சியினை அவர் மனம் ஒப்பவில்லை.

அதே சமயம் 'ருஷ்யாவின் விவாக விதிகள்' என்னும் கட்டுரையில் அவர் பின்வருமாறு எழுதுகின்றார்:

"..போல்ஷிவிக் ஆட்சி ஏற்பட்ட காலத்திலே அதற்குப் பலவகைகளிலும் தோஷங்கள் கற்பிப்பதையே தம் கடமையாகக் கருதியவ்ர்களிலே சிலர் அதன் மீது ராஹரீக நெறிகளிலே குற்றங்கள் சுமத்தியது போதாதென்று, போல்ஷிவிஸ்ட் கட்சியார் ஸ்திரீகளையும் பொதுவாகக் கொண்டு ஒருத்தியைப் பலர் அனுபவிக்கிறார்களென்ற அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. ஆனால் 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு'. ஒன்பதாம் நாள் உண்மை எப்படியேனும் வெளிப்பட்டுவிடும். ஒரு பெரிய ராஜ்ஜியத்தைக் குறித்து எத்தனை காலம் பொய் பரப்பிக் கொண்டிருக்க முடியும்? சில தினங்களின் முன்பு இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரஞ் செய்யப்படும் 'மாஞ்செஸ்டர் கார்டியன்' என்ற பத்திரிகை நவீன ருஷ்யாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விபரங்களைப் பிரசுரஞ் செய்துள்ளது. அவற்றைப் பார்க்கும்போது நவீன ஐரோப்பிய நாகரிகம் என்று புகழப்படும் வஸ்த்துவின் நியாயமான, உயர்ந்த பக்குவநிலைமை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கின்றதென்று தெளிவாக விளங்குகின்றது. ஆன்பெண் இருபாலாரும் பரிபூர்ண ஸமானம் என்ற கொள்கைக்கு பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டை சமைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரிகத்தின் உண்மையான நோக்கம். ..அந்த வகையில் பார்த்தால் ஐரோப்பாவின் இதரபகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷ்யா உயர்ந்த நாகரிகம் பெற்றுள்ளதென்பது ப்ரத்யஷமாகத் தெரிகிறது..."

இவையெல்லாம் நமக்குக் காட்டி நிற்பவைதான் யாதோ? பாரதியார் புதிய ருஷ்ய சமுதாய அமைப்பினை வரவேற்றிடுகின்றார் என்பதையல்லவா?..சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை ஆவேசத்துடன் கண்டித்த பாரதியை நவீன ருஷ்ய அமைப்பு முறை கவர்ந்திட்ட போதிலும் அது ஏற்பட்ட வழியினை அவனால் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிட முடியவில்லை. அதனால் தான் இவ்விடயம் பற்றிய அவனது கேள்விகள் தேடல் ஆகியன அவனது பல்வேறு கட்டுரைகளில் வெளிப்பட்டு நிற்கின்றன. அதே சமயம் மேற்படி கட்டுரைகள் அவன் தன் மனதுக்கேற்ற வழியில் இவற்றிற்கான தீர்வுகள் பற்றிச் சிந்தித்திருப்பதையும் புலப்படுத்தி நிற்கின்றன. உதாரணமாக அவனது 'செல்வம்; என்ற கட்டுரையில் பின்வருமாறு அவன் கூறுவான்:

"..முதலாவது இந்தியாவிலுள்ள நிலச்சுவான்களும் முதலாளிகளும் ஐரோப்பிய முதலாளிகள் நிலச்சுவான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள் அதிகம் விரும்பவும் மாட்டார்கள். எனவே கொள்ளைகளும், கொலைகளும், சண்டைகளும் பலாத்காரங்களுமில்லாமல் ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத் தான் நாம் தேடிக் கண்டு பிடித்து அனுஷ்டிக்க முயல வேண்டும். செல்வர்களுடைய உடமைகளைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல் இந்நாட்டிலே நான் மேற்கூறியபடி பொருந்தவும் செய்யாது. ஸாத்தியமும் இல்லை.."

மேலுள்ள பாரதியாரின் கூற்றினை வாசிப்பவர் பாரதியாரின் முரண்பட்ட போக்கினை வெகு இயல்பாகவே விளங்கிக் கொண்டிட முடியும். பொதுவுடமையினைப் போற்றிப் பாடிடும் பாரதியார், நவீன் ருஷ்யாவினை, அதன் அமைப்பு முறையினை, அங்குள்ள பெண்களின் நிலையினை வரவேற்ற பாரதியார் "இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. .." என்று கூறுவது 'தனியுடமை'யை ஆதரிப்பதாகுமன்றோ எனக் கேட்கலாம். ஆனால் இன்னுமோரிடத்தில் "செல்வர்களுடைய உடமைகளைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல் இந்நாட்டிலே நான் மேற்கூறியபடி பொருந்தவும் பொருந்தாது.." என்று கூறுவது மறைமுகமாகக் கூறி நிற்பது தானெது? செல்வர்களுடைய உடமைகளைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல் கூடாது. ஆனால் அமைதியானதொரு வழியில் இதற்கான தீர்வு காணப்படலாம் என்பதைத்தானே. ருஷ்யப் புரட்சியினை வரவேற்கும் பாரதி, அங்குள்ள பெண்கள் நிலையினை வரவேற்கும் பாரதி ஆயுதப் புரட்சி விடயத்தில் மிகவும் தடுமாற்றத்துடன் காணப்படுவதை மேற்படி கூற்றுகளால் அவதானிக்க முடிகிறது. இத்தகையதொரு தடுமாற்றத்தின் விளைவினை அவனது 'தொழிலாளர்' என்னும் கட்டுரையிலும் காணக்கூடியதாகவிருக்கிறது. அதிலோரிடத்தில் அவன் பின்வருமாறு கூறுவான்:

"..எனவே இந்தியாவில் முதன் முதலாக தொழிலாளர் கிளர்ச்சி தோன்றியிருக்கும் இந்தச் சமயத்தில் நம்முடைய ஜனத் தலைவர்கள் முதலாளிகள் தொழிலாளிகள் என்று இருதிறத்தாரையும் ஆதரவுடன் கலந்து புத்தி சொல்லி மனஸ்தாபங்களை ஏறவொட்டாதபடி முளையிலே கிள்ளிவிட முயற்சி செய்யவேண்டும். தொழிலாளரை முதலாளிகள் இகழ்ச்சியுடன் கருதி நடத்துவதை உடனே நிறுத்துவதற்குரிய உபாயங்கள் செய்ய வேண்டும்...ஆரம்பத்திலேயே நாம் இதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்யாவிடின் நாளடைவில் ருஷ்யாவிலுள்ள குழப்பங்களெல்லாம் இங்கு வந்து சேர ஹேது உண்டாய்விடும்... ருஷ்யாவில் சமீபத்திலே அடுக்கடுக்காக நிகழ்ந்து வரும் புரட்சிகளின் காரணத்தால் அவ்விடத்து சைனியங்களில் பெரும்பகுதியார் தொழிற்கட்சியையும் அபேதக் கொள்கைகளையும் சார்ந்தோராய் விட்டனர். இதனின்றும் அங்கு ராஜ்யாதிகாரம் தொழிற்கட்சிக்குக் கிடைத்து விட்டது. தேசத்து நிதியனைத்தையும் சகல ஜனங்களுக்கும் பொதுவாகச் செய்து எல்லோரும் தொழில் செய்து ஜீவிக்கும்படி விதித்திருக்கின்றார்கள். தேசத்துப் பிறந்த ஸர்வஜனங்களுக்கும் தேசத்து செல்வம் பொது என்பது உண்மையாய் விடில், ஏழைகள் செல்வர் என்ற வேற்றுமையினால் உண்டாகும் தீமைகள் இல்லாமல் போகும்படி ஸகலரும் தொழில் செய்துதான் ஜீவிக்க வேண்டும் என்ற விதி வழங்குமானால் தேசத்துத் தொழில் மிகவும் அபிவிருத்தியடைந்து ஜனங்களின் சேஷமமும் சுகங்களும் மேன்மேலும் மிகுதியுறும். எனவே ருஷ்யாவிலுள்ள அபேவாதிகளுடைய கொள்கைகள் அவ்வளவு தீங்குடையனவல்ல. ஆனால் அவற்றை வழக்கப்படுத்தும் பொருட்டு அவர்கள் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தீராச்சண்டையும் அல்லலுமே தீங்கு தருவனவாம். ருச்க்யக் கொள்கைகள் இப்பொழுது அனுஷ்டிக்கப்படும் ருஷ்யமுறைகளின்படி உலகத்தில் ஸ்தாபனம் பெற்று வெற்றி பெற வேண்டுமானால் அதற்குள்ளே முக்காற்பங்கு ஜனம் கொலையுண்டு மடிந்து போவார்கள். வெளிநாட்டுப் போர் அத்தனை பெரிய விபத்தன்று. நாட்டுக்குள்ளேயே செல்வர்களும், ஏழைகளும், ஒருவரையொருவர் வெடிகுண்டுகளாலும், துப்பாக்கிகளாலும், பீரங்கிகளாலும், தூக்குமரங்களாலும் கொல்லத் தொடங்குவார்களாயின் அது தீராத தொல்லையாய் விடுமன்றோ?"

இவையெல்லாம் வெளிப்படுத்தி நிற்பவைதான் யாதோ? இவற்றில் காணப்படும் பாரதியின் தடுமாற்றம் நமக்கு உணர்த்துவதுதானெதுவோ? சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ருஷ்யாவின் கோட்பாடுகளை ஓரளவுக்கு பாரதியார் ஏற்றுக் கொள்கின்றார். ஆனால் அதனை அடைவதற்கு ருஷ்யா கைக்கொள்ளும் ஆயுதப் புரட்சியினையும், பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தினையும் தான் அவரால் ஏற்றுக் கொண்டிட முடியவில்லை. இந்த எதிர்ப்பின் விளைவே அவரது கற்பனாவாத சோஸலிசமான 'ஏழை', 'பணக்காரன்', 'தொழிலாளி', 'முதலாளி' ஆகியோருக்கிடையிலான இணக்கம் பற்றிய கோட்பாடுகள். இதன் காரணமாகவே செ.கணேசலிங்கன் 'பாரதி கண்ட கனவுப் பெண்' என்னும் கட்டுரையில் கூறுவதைப் போல் ('மேகம்', நவம்பர்-டிஸம்பர் 1982) பாரதியின் போக்கு இந்திய தேசிய முதலாளிகளின் புரட்சியோடு ஒன்றி நிற்பது போல் படுகிறது. ஆனால் உண்மையில் பாரதி முதாளித்துவப் புரட்சியொன்றினை எதிர்பார்த்திடவில்லை என்பதைத் தான் அவரது 'சுதந்திரப்பள்ளு' , 'விடுதலை', 'பாரத சமுதாயம்' போன்ற கவிதைகள் புலப்படுத்தி நிற்கின்றன. [ அதே சமயம் மானுடத்தின் முழுவிடுதலை பற்றியும் பாரதி பெரிதும் சிந்தித்திருக்கின்றானென்பதையும் அவனது படைப்புகள் நமக்குப் புலப்படுத்தி நிற்கின்றன. மானுடத்தின் முழுவிடுதலை அகவிடுதலயினைப் பெறுவதன் மூலம், மனிதர் இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதன் மூலம் மட்டுமே பெற முடியும் என்று அவன் கருதுவதையே அவனது 'சர்வமத ஸ்மரஸம்' , 'தாய்மாண்பு', 'அன்பு செய்தல்' முதலான கவிதைகள் உணர்த்தி நிற்கின்றன. ஆனால் பாரதியின் இந்த நிலைப்பாடு விரிவாக ஆராயப்படவேண்டியதொன்று]. அதே சமயம் மேற்படி கட்டுரையில் செ.கணேசலிங்கன் பாரதியின் இந்தப் போக்குக்குக் காரணம் பற்றிக் குறிப்பிடும் பொழுது "..விஞ்ஞான பூர்வமான சோஸலிசத்தைப் பாரதி அறிந்திருக்கவில்லை. சோஸலிச அமைப்பில் சாதி, சமய, பெண்ணடிமைத்தனப் பேதங்கள் எப்படி முழுமையாக நீக்கப்படும் என்பதை அவன் தெரிந்திருக்கவில்லை.." என்றும் கூறுவார். இவ்விதமாக 'மார்க்ஸியக்' கோட்பாடுகளைப் பற்றிய பூரண அறிவினை பாரதியார் அடையமுடியாமலிருந்ததற்கு அன்றைய சூழ்நிலை காரணமாகவிருக்கலாம். மார்க்ஸியக் கோட்பாடுகள் சம்பந்தமான போதிய நூல்கள் அவரது கைகளுக்குக் கிடைக்காமல் போயிருந்திருக்கலாம். கிடைத்திருந்தால் அவர் மான்செஸ்டர் கார்டியன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளை விரிவாக ஆராய்ந்ததைப் போல் நிச்சயம் அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்திட முயன்றிருப்பார். 'வரலாற்றுப் பொருள்முதல்வாதம்' பற்றியெல்லாம் விரிவாக ஆராய முயன்றிருப்பார். அவ்விதமெல்லாம் அவர் செய்யாததற்கு செ.க. கூறுவது போல் பாரதியாருக்கு அவ்விடயங்களில் பூரண விளக்கமில்லாமல் இருந்திருப்பதே காரணமாக இருந்திருக்கக் கூடும். இந்நிலையில் அவர் தன் அறிவுக்கெட்டிய வகையில் முதலாளி தொழிலாளிகளுக்கிடையிலான இணக்கத்தைத் தீர்வாகக் கொண்ட கற்பனாவாத சோசலிச அமைப்பென்ற தீர்வுக்கு வந்திருக்கலாம். அதற்கு மாறாக அவர் மார்க்ஸியத் தத்துவஙக்ளையெல்லாம் விரிவாக அறிந்துள்ள நிலையில் மேற்படி முடிவுக்கு வந்திருந்தால் செ.க.கூறுவதைப் போல் அவரை இந்திய முதலாளிகளின் புரட்சியுடன் ஒன்றியிருந்த ஒருவராகக் கருத முடியும். மாறாக மார்க்ஸியத் தத்துவம் பற்றிய பூரணமான விளக்கமற்ற நிலையில், அவர் வாழ்ந்த இந்தியச் சூழ்நிலைகளின் விளைவாக அவர் வந்தடைந்த தீர்வே அவரது ஏழை/பணக்காரன், முதலாளி/தொழிலாளி ஆகியோருக்கிடையிலான இணக்கம் பற்றிய கற்பனாவாத சோஸலிசத் தீர்வு [ ஏனென்றால் பொதுவுடமையினை, ருஷ்ய அமைப்பு முறையினை அவர் வரவேற்கின்றார்]. இந்நிலையில் பாரதி ஒரு மார்க்ஸியவாதியா என்னும் கேள்வியே அர்த்தமற்றதொரு கேள்வி. ஆனால் பாரதியின் மேதமை அவரது காலகட்டச் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில்தான் எத்தனை மகத்தானதென்று புலப்படும். அதனை விட்டுவிட்டு இன்றைய சூழலிலிருந்து கொண்டு, தான் வாழ்ந்த சூழலை மீறிச் சிந்தித்த, வாழ்ந்த பாரதியை செ.க. முதலியோர் அலசுவது போல் அலசுவது பயனற்றது. உண்மையில் பாரதியார் அன்றையச் சூழலில் 'ருஷ்யா'வை பற்றித் தனது நோக்கினத் திருப்பியதும், பெண்களின் நிலை பற்றிய பிரச்சினையில் ரஷ்ய, ஐரோப்பிய முறைகள் பற்றிய ஆய்வினை நடத்தியதும், இந்திய தத்துவ நூல்களை விரிவாக ஆராய்ந்ததும், 'நிற்பதுவே நடப்பதுவே' என்னுங் கவிதையில் பொருள்முதல்வாத/கருத்து முதல்வாதத் தத்துவங்களையிட்டு ஆராய விளைந்ததும், தீண்டாமை/பெண் விடுதலை பற்றிச் சூழலை மீறிச் சிந்தித்ததும்..இவை யாவுமே மகத்தான விடயங்களாகும். அவர் வாழ்ந்த சூழலில் அந்த அளவுக்குச் சூழலை மீறிச் சிந்தித்ததே மாபெரும் அற்புதமெனலாம். இதுவே சரியான நிலைப்பாடாகப் படுகிறது.

[பாரதியார் நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகின்றது. முதன் முதலில் இக்கட்டுரை 4/2/1983 இல் எழுதப்பட்டது. இதனைத் தழுவிய இன்னுமொரு கட்டுரை 'தேடல்' இதழில் பிரசுரமானது.]

நன்றி: பதிவுகள்.காம், திண்ணை.காம்

5.கவிதையும், யாப்பிலக்கணமும் பற்றியதொரு புரிதல்!
வ.ந.கிரிதரன்


கவிதையும், யாப்பிலக்கணமும் பற்றியதொரு புரிதல்தற்காலத்தில் கவிதை எழுதுபவர்கள் பலருக்குத் தமிழ்க் கவிதையின் யாப்பிலக்கணம் பற்றி எதுவுமே தெரிவதில்லை. தமிழில் கவிதை எழுதுவதற்குக் கவிதையின் யாப்பிலக்கணம் தெரிந்திருக்க வேண்டுமா என்று யாரும் கேட்கலாம். கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லைதான். ஆனால் நூற்றுக் கணக்கில் கவிதைகளைப் பிரசவித்துத்தள்ளும் எம் இன்றைய நவீனக் கவிஞர்கள் பலருக்கு அவ்விதம் பிரசவித்துத் தள்ளுவதற்குரிய நேரத்தில் ஒரு பங்கினை ஒதுக்கித் தமிழ்க் கவிதையின் யாப்பிலக்கணம் பற்றி அறிந்து கொள்வதிலென்ன சிரமமிருக்க முடியும்? தெரிந்து கொள்வதாலொன்றும் அதிக நட்டமில்லையே. இலாபந்தானே இருக்க முடியும். எந்த ஒரு துறையினைப் பற்றிக் கற்கும்போதும் முதலில் அத்துறையின் வரலாறு பற்றிக் கற்பதுடன்தானே ஆரம்பிக்கின்றோம். அதன் மூலம் அத்துறைபற்றிய பாண்டித்தியம்தானே அதிகமாகின்றது. கவிதையின் யாப்பிலக்கணம்பற்றி அறிய வேண்டுமென்று கூறும்பொழுது அதனைக் கரைத்துக் குடிக்க வேண்டுமென்று நானிங்கு கூற வரவில்லை. அதுபற்றிய அடிப்படை விளக்கங்களையாவது அறிந்திருப்பது நல்லதென்றுதான் கூறுகின்றேன். இதன்மூலம் எமது மரபுக் கவிதைகளைப் படித்துச் சுவைத்திடமுடியும். அத்தகைய மரபுக் கவிதைகளில் எவ்விதம் கவிஞர்கள் சொல்நயம், பொருள்நயம் மிக்க கவிதைகளைப் படைத்திருக்கின்றார்கள், எவ்விதம் சொற்கள் வந்து விழுந்திருக்கின்றன என்பவற்றையெல்லாம் அறிந்து கொள்வது இன்றைய கவிஞர்களின் படைப்பாற்றலினை நிச்சயம் அதிகரிக்க வைத்துவிடுமென்று நான் கருதுகின்றேன்.

உண்மையிலேயே ஒரு சமயம் முக்கியமானதொரு கவிஞருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது நான் ஆசிரியப்பாவைப் அகவலென்று குறிப்பிட்டபோது ஆசிரியப்பாவும் அகவலும் ஒன்றல்லவென்று என்னுடன் வாதிக்க முனைந்து விட்டார். உண்மையிலேயே நான் அதிர்ச்சியடைந்துதான் போனேன். அவரை விடுங்கள். 'டாக்டர்' பொன்மணி வைரமுத்துவே தனது ஆய்வு நூலான 'சங்க இலக்கியத்தில் புதுக்கவிதைக் கூறுகள்' நூலில் 'சீர் இரண்டும் பலவுமாகச் சேர்ந்த உறுப்பு அடி எனப்படுகிறது. குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழிநெடிலடி என்னும் ஐவகைப் பாகுபாடும் நாற்சீரடிக்கே பொருத்தமுடையது என்று கூறுவர்' (பக்கம் 72) என்று கூறியிருக்கின்றாரே. இதனைப் புரிதற்கு நான் இன்னும் முயன்று கொண்டுதானிருக்கின்றேன். நேரடி அல்லது அளவடி என்பது நான்கு சீர்களைக் கொண்ட அடியினைக் குறிக்கும். மேலுள்ள கூற்றின்படி 'குறளடி, சிந்தடி, நேரடி அல்லது அளவடி, நெடிலடி, கழிநெடிலடி ஆகிய ஐவகைப்பாகுபாடும் நேரடிக்கே அல்லது அளவடிக்கே (ஏனெனில் நேரடி என்பது நாற்சீரடியே) பொருத்தமுடையது என்றல்லவா பொருள்தருகின்றது. மேலும் 'டாக்டர் பொன்மணி வைரமுத்து' தொடர்ந்து '...வெண்பா அளவடி ,சிந்தடியாகவும், ஐவகை அடியும் ஆசிரியப்பாவிற்கும்..வரும்' என்கின்றார். பொதுவாக நானறிந்தவரையில் ஆசிரியப்பா நேரிசை ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, அடிமறி மண்டல ஆசிரியப்பா என்னும் பிரிவுகளை உள்ளடக்கியது. இவற்றில் நேரிசை ஆசிரியப்பாவில் ஈற்றுக்கு அயல் அடி தவிர , அதாவது கடைசிக்கு முதல் அடி தவிர, ஏனைய அடிகள் யாவும் நான்கு சீர்களளைக் கொண்ட நேரடிகளாலனது. இணைக்குறள் ஆசிரியப்பாவைப் பொறுத்தவரையில் முதலும் இறுதியும் அடிகளொத்து, இடையில் இரு சீர் அல்லது ஒரு சீர் குறைந்து சிந்தடிகளாகவும் ( முச்சீரடி), குறளடிகளாகவும் (இரு சீரடி) இருக்கும். நிலைமண்டில எல்லா அடிகளும் நான்கு சீர்களைக்கொண்டு, அளவிலொத்து வரும். அடி மறி மண்டில ஆசிரியப்பாவைப் பொறுத்தவரையில் எல்லா அடிகளும் ஒத்து, எவ்விதம் அடிகளை மாறி வாசித்தாலும் ஓசையும், பொருளும் ஒத்து வரும். ஆகப் பொதுவாக ஆசிரியப்பா என்னும் பாவினத்தில் அதிகமாக அளவடிகளும், அடுத்தபடியாக சிந்தடி, குறளடிகளும் வரும். ஆனால் ஐந்து சீர்களைக் கொண்ட நெடிலடிகளும் எப்போதாவது அருகி ஆசிரியப்பாவினுள் வருவதுண்டு. இதனை யாப்பருங்கலக்காரிகையில் அமிதசாகரர் 'அருகிக் கலியோ டகவன் மருங்கினைஞ் சீரடியும் வருதற் குரித்தென்பர் வான்றமிழ் நாவலர்..' என்பார். இதன் கருத்து: கலிப்பாவினுள்ளும் ஆசிரியப்பாவினுள்ளும் ஐஞ்சீர் அடியும் அருகி வரப்பெறும் என்பதே. இதற்குதாரணமாகக் குணசாகரர் தனதுரையில் 'உமணர்ச் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்றலை / ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்கா..'வென்னும் குறுந்தொகையினைக் காட்டுவார் [மகாவித்துவான் மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை பதிப்பித்த 'யாப்பருங்கலக்காரிகை' நூலில்; பக்கம் 157] ஆசிரியப்பாவுக்கு ஐஞ்சீரடியான நெடிலடி மிகவும் அரிதாகவே வரும். இந்நிலையில் ஐஞ்சீர்களுக்கும் அதிகமான சீர்களையுள்ளடக்கிய கழிநெடிலடியினையும் சேர்த்து 'ஐவகை அடியும் ஆசிரியப்பாவுக்கும்' என்று கூறுகின்றார் 'டாக்டர்' பொன்மணி வைரமுத்து அவர்கள். யாப்பிலக்கணத்தில் கரைகண்டவர்கள் யாராவாதுதான் இந்த விடயத்தில் என் ஐயத்தினைப் போக்க வேண்டும்.

இந்நிலையில் புதுமைப்பித்தன் 'சமயத்தையும் கடந்த கலை' என்னும் கட்டுரையில் கவிதை பற்றிக் கூறியுள்ளதை நினைவு கூருவதும் பொருத்தமானது. மேற்படி கட்டுரையில் அவர் "கவிதை தமிழில் இருக்கலாம்; ஆனால் கவிதையைப் பற்றிய ஆராய்சி தமிழில் கிடையாது. தமிழில் செய்யுளியலைப் பற்றி ஆராய்சியிருந்திருக்கிறது. அதாவது கவிதையின் வடிவத்தைப் பற்றி நன்றாக ஆராய்ந்திருக்கிறார்கள். கவிதைக்குத் தமிழ் யாப்பிலக்கணத்தைப்போல் இயற்கையான அமைப்பு வேறு கிடையாதென்றே கூறி விடலாம். ஆனால் கவிதை என்றால் என்ன என்பதைப் பற்றித் தமிழர் ஆராயவே இல்லை. உடற்கூறு படியாவிட்டால் உயிர் வாழ முடியாதென்று சொல்ல முடியாது. அதைப்போல் இலக்கணம் இல்லாவிட்டால் கவிதை இருக்க முடியாதென்று கூற முடியாது. ஆனால் கவிதையை ரஸிப்பதற்குக் கவிதை என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். தற்காலத்திய பண்டிதர்கள் இலக்கியம் எது என்று கவனிக்க முடியாமல் எல்லாவற்றையும் புகழ்ந்து கொண்டு இடர்ப்படுவதற்க்குக் காரணம் அவர்கள் இலக்கியம் என்றால் என்னவென்று அறியாததுதான்" என்று கூறியிருக்கின்றார். உண்மையில் இவர்களில் பலருக்குக் கவிதை பற்றி மட்டுமல்ல அதன் யாப்பிலக்கணத்தில் கூடப் போதிய தெளிவு இல்லாதிருப்பதைத்தான் நாம் நடைமுறை அனுபவத்தில் காணக் கூடியதாகவிருக்கிறது. உள்ளத்தில் உண்மையொளி இல்லாதிருந்தால் வாக்கினிலெவ்விதம் ஒளி வரும்; தெளிவு வரும்?

நன்றி: பதிவுகள்.காம்

6.Jerzey kosinskiயின் Being There!
- வ.ந.கிரிதரன் -


Jerzy kosinskiஅண்மையில்
Jerzy kosinski எழுதிய Being There என்ற கைக்கடக்கமான சிறியதொரு நாவலைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. கடுகு சிறிது காரம் பெரிது என்பதற்கொப்ப அளவில் சிறியதானாலும் இந்நாவல் உள்ளடக்கத்தில் கனதியானது. மனிதனைப் பாதிக்கும் நிலைமைகளை ஒருவித கிண்டல் பாணியில் நோக்கி விமர்சிக்கும் வகையிலமைந்த நாவலை 'சட்டயர்' (Satire) என்போம். Being There அந்த வகையான நாவல்களில் குறிப்பிடத்தக்கதொன்று. உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில் இச்சிறுநாவல் இன்றைய மனிதனைப் பலமாகப் பாதிக்கும் உலக, உள்நாட்டு அரசியல் மற்றும் குறிப்பாகத் தொலைகாட்சி பற்றிப் பலமாகவே விமர்சனத்தை முன்வைக்கின்றது. உருவத்தைப் பொறுத்த வரையில் கிறிஸ்த்தவ தத்துவ சமயநூலான பைபிளினது பாதிப்பு மிக அதிகமாகவே தெரிகின்றது.

கதை இதுதான்: 'தற்செயல்' (Chance) என்ற தோட்டக்காரனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை விவரிப்பதுதான் நாவலின் பிரதானமான பணி. இவனுக்குச் 'சான்ஸ்; என்ற பெயர் வந்ததற்குக் காரணமே பூமியில் இவனது பிறப்பு தற்செயலானது என்பதுதான். இவன் ஒரு முட்டாள். இவனால் எழுதப் படிக்க முடியாது. பொதுவாகத் தன்னுணர்வு, சுய பிரக்ஞை என்பதேயற்றவன். இவன் ஒரு செல்வந்தனின் வீட்டுத் தோட்டகாரனாகப் பல வருடங்களாகப் பணி புரிந்து வருகின்றான். இவனது ஒரே வேலை அச்செல்வந்தனது தோட்டத்தைப் பராமரிப்பதுதான். மிகுதி நேரத்தில் தனக்கென்று ஒதுக்கிய பகுதியில் இருந்தபடி டெலிவிஷனைப் பார்ப்பதுதான். பல வருடங்களாக இவன் அச்செல்வந்தனது வீட்டில் வேலை பார்த்து வந்தபோதும் இவனிற்கென்று இவன் இருந்ததற்கான அத்தாட்சிப் பத்திரங்களோ , ஆளடையாளப் பத்திரங்களோ எதுவுமே இவனிடமில்லை. இவனது இருப்பிற்கான (Being) எதுவித தடயங்களுமே இவனைத் தவிர இவ்வுலகில்லை. திடீரென இவனது முதலாளியான அச்செல்வந்தன் இறந்து விடவே இவனுக்குப் பிரச்சனை உருவாகின்றது. இவன் அவ்வீட்டில் நீண்டகாலம் இருந்ததற்கான எதுவிதத் தடயங்களுமே இல்லாத நிலையில் செல்வந்தனது சட்டத்தரணிகளால் வீட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகின்றான். முதன் முதலாக இவன் அந்தத் தோட்டத்தைவிட்டு ஏனைய மனிதர்கள் வாழும் வெளியுலகுக்கு வருகின்றான். செல்வந்தனால் இவனுக்கு அளிக்கப்பட்ட உயர்ரக ஆடைகள் அணிந்தபடி பார்வைக்கு உயர்குடிக் கனவான் போன்ற தோற்றத்துடன் வெளியுலகில் காலடி எடுத்து வைக்கும் இவனை அமெரிக்க அரசியல் வர்த்தக மட்டத்தில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கும் சுகவீனமுற்றுப் படுக்கையிலிருக்கும் பிரமுகர் ஒருவரின் மனைவியான 'எலிஸபெத் ஈவ்' (Elizabeth Eve) என்பவள் மோதி விடுகின்றாள். அதற்குப் பிராயச்சித்தமாக இவனை அப்பெண்மணி தனது மாளிகைக்குக் கொண்டு சென்று தனது குடும்ப வைத்தியரின் உதவியுடன் பராமரிக்கின்றாள். இவனது உடையலங்காரத்தைப் பார்த்து இவனை ஓர் உயர்குடிக் கனவானாக எண்ணி விடும் அப்பெண்மணி இவனது பெயரைக் கேட்கும் பொழுது அதற்கு இவன் தனது பெயர் 'சான்ஸ் கார்டினர்' ( சான்ஸ் தோட்டக்காரன்)" எனப் பதிலிறுக்கின்றான். அதனை அப்பெண்மணி Chauncy Gardiner என் விளங்கிக் கொள்கின்றாள். இவ்விதமாகச் Chauncy Gardiner ஆக உருமாறிவிட்ட Chance Gardener அப்பெண்மனியின் உதவியால் அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகின்றான். ஒருமுறை தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்வொன்றில் அமெரிக்க ஜனாதிபதி நாட்டுப் பொருளாதார நிலைமைகளைப் பற்றிக் கேட்ட கேள்வியொன்றிற்குப் பதிலளிக்கையில் தோட்டம் தவிர வேறெந்த அறிவுமற்ற முட்டாளான சான்ஸ் தனது தோட்டத்தை எண்ணிக் கொண்டு பதிலிறுக்கின்றான். 'பருவங்கள் மாறிவரும்' என்கின்றான். இதனைப் பொருளாதார நிலைமை மாறும் எனக் கூறுவதாக எண்ணிக் கொண்ட ஜனாதிபதி மகிழ்சியடைகின்றார். இவ்விதமாக Chanuncey Gardinerஐ அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் முக்கிய புள்ளியாக தொலைக்காட்சி உருமாற்றி விடுகிறது. இவ்விதம் முக்கிய புள்ளியாக உருமாறி விட்ட 'சான்ஸி கார்டின'ரின் நட்பைப் பெற ருஷ்ய தூதரக அதிகாரி முயல்கின்றார். 'சான்ஸி கார்டின'ரின் இருப்பினை உறுதிப்படுத்தும் எந்தவிதப் பத்திரங்களையும் பெற முடியாத தனது உளவுப்படையினர் மேல் சீற்றமுறும் அமெரிக்க ஜனாதிபதி 'சான்ஸி கார்டினர்' சோவியத் உளவாளியாகயிருக்கக் கூடுமோவென ஐயுறுகின்றார். அதே சமயம் 'Chance'ஐப் பல்கலைக்கழகமொன்றின் துணை வேந்தராக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இச்சிறு நாவலிம் பிரதானமான நிகழ்வுகள் இவைதான்.

Being Thereமுதன் முதலில் இச்சிறு நாவலின் உருவமைப்பைச் சமயம் எவ்விதம் பாதித்துள்ளதென்பதைப் பார்ப்போம். விவிலிய நூல் கூறும் படைப்புத் தத்துவத்தின்படி 'படைப்பு' ஏழு நாட்களில் நடைபெறுகின்றது. இந்நாவலும் ஏழு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிறித்தவ சமயத் தத்துவப்படி 'ஈடன் பூங்கா'வில் படைக்கப்பட்ட ஆதாமும் , ஏவாள் இருவருக்கும் ஆரம்பத்தில் மரணமற்ற வாழ்க்கைதானிருந்தது. அவர்களைப் படைத்த கர்த்தரின் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல், பாம்பினால் தூண்டப்பட்ட ஏவாளின் வற்புறுத்தலின்பேரில் ஆதாமும் ஏவாளும் ஈடன் தோட்டத்திலிருக்கும் நன்மை தீமைகளை அறிவிக்கும் விருட்சத்தின் கனியைப் புசிக்கின்றார்கள். அவர்கள் வாழ்க்கையில் பாவ,புண்ணியம் புகுந்து கொள்கிறது. இச்சிறு நாவலில் வரும் பெண்மணிக்கும் பெயர் Eve, Elizabeth. ஈடன் பூங்காவைப் போல் இந்நாவலிலும் ஒரு பூங்கா வருகின்றது. இந்நாவலின் உருவத்தில் சமயத்தின் பங்களிப்பை இவை கூறி நிற்கின்றன.

முழு முட்டாளான Chanceஐ வெற்றிகரமான டி.வி. பேர்சனால்டியாக' தொலைக்காட்சி உருமாற்றி விடுகின்றது. தொலைக்கட்சியில் காட்டப்படும் இவனது உருவத்தைப் பற்றி ஒரு பெண்மணி பின்வருமாறு எண்ணுகின்றாள்:

Manly; Well-Groomed;
Beautiful voice;
Sort of a Gary Grant.
He is not one of these phony idealists.."( பக்கம் 58).

உண்மையில் இவன் ஒரு வடிகட்டின முட்டாள். இதுதான் தொலைக்காட்சியினால் சமுதாயத்தில் ஏற்படுகின்ற பெரிய பாதிப்பு. பொய்யான பிம்பங்களைத் தொலைக்காட்சி உண்மையைப் போல் காட்டி விடுகின்றது. உண்மையாகவே வெளிப்புற உருவை மட்டும் தான் தொலைக்காட்சி வெளிப்படுத்துகிறது. ஆழத்தே புதைந்து கிடக்கும் உண்மையை அது வெளிப்படுத்துவதேயில்லை. உண்மையில் யதார்த்தத்தைத் திரித்துக் காட்டுவதன் மூலம் போலியான வெளிப்பாட்டையே தொலைக்காட்சி உருவாக்குகின்றது. அது மட்டுமல்ல. தொலைக்காட்சி எந்த நிகழ்வையுமே ஒரு பொழுதுபோக்கு என்ற நிலைமைக்குச் சுருக்கி விடுகின்றது. அண்மையில் நடைபெற்ற வளைகுடா யுத்தத்தில் நேசநாடுகள் குண்டுகள் பொழிவதை ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதைப்போல பார்த்தோமே தவிர, அதன் பின்னாளிருக்கும் மனித அழிவுகளையோ, வேதனையையோ உணர முடியவில்லையே. உண்மையில் இந்நாவல் அமெரிக்க ஜனாதிபதியாக ரீகன் தெரிவாவதற்கு முன்னால்தான் எழுதப்பட்டது. இந்நாவலில் வரும் முட்டாள் தோட்டக்காரனை அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் முக்கிய புள்ளியாக எவ்விதம் தொலைக்காட்சி மாற்றி விடுகின்றதோ அந்த நிலைமைதான் ரொனால்ட் ரீகனுக்கும் ஏற்பட்டது என்று சில இலக்கிய விமர்சகர்கள் ஒப்பிடாமலுமில்லை.

அமெரிக்க ஜனாதிபதி, சோவியத் தூதுவர் ஆகிய பாத்திரங்களினூடு அணுவாயுதப் போட்டி பற்றியும், விரயமாகும் பணம் பற்றியும் விமர்சனத்தை முன் வைத்தாலும் இந்நாவலின் பிரதானமான நோக்கம் தொலைக்காட்சியினால் உருத்திரிக்கபப்ட்ட உண்மைகளை உண்மைகளாக ஏற்றுக் கொள்ளூம் சமுதாயமொன்றில் உருவாகக் கூடிய ஆபத்துக்களை எச்சரிக்கை செய்வதே. இத்தகைய முட்டாள்களின் கைகளில் அதிகாரம் அகப்பட்டு விடுவதால் ஏற்படக் கூடிய விளைவுகள் முழுமனித இனத்தையே பாதித்து விடும் என்பதைத்தான் மறைமுகமாக இச்சிறுநாவல் உணர்த்தி வைக்கின்றது. ஹெமிங்வேயின் 'கடலும் கிழவனும்', ஆல்பேர்ட் காம்யுவின் 'அந்நியன்' மற்றும் ஸ்டீன் பேக்கின் 'முத்து' போன்று அளவில் சிறியதானாலும் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் காத்திரமானதொரு நாவல்தான் Being There. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் நிச்சயம் படிக்க வேண்டியதொரு நாவல் என்று கூறினால் அது மிகையில்லை.

நன்றி: சுபமங்களா, மார்ச் 1995 ,பதிவுகள்.காம், திண்ணை.காம்.

7. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
வ.ந.கிரிதரன்


விஷ்ணுபுரம் சில குறிப்புகள் ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' பற்றிப் பலர் பலவாறு கூறியுள்ளார்கள். இவர்களது குறிப்புகளெல்லாவற்றையும் பார்க்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது. இவர்களில் பலர் யானை பார்த்த குருடர்கள். நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி. ஹேமந்தன் என்னும் பாணன் விஷ்ணுபுரம் பற்றிய கதையினைக் கூறி முடித்ததும் வசந்தன் என்னும் பாணன் கூறத்தொடங்குவதுடன் ஆரம்பமாகும் நாவல் மூன்று பாகங்களாக விரிவடைந்து வசந்தன் கதையை முடித்ததும் இன்னுமொரு பாணனான கிரிஷ்மன் மீண்டுமொருமுறை விஷ்ணுபுரம் கதையினைக் கூறத்தொடங்குவதுடன் தொடர்கிறது. நாவலைப் பற்றிப் பின் அட்டையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: ' இந்நாவலில் விஷ்ணு ஒருமுறை புரண்டு படுக்கிறார். தருக்கம், தியானம்,கற்பனை என்ற மூன்று அடிப்படையான அறிதல் முறைகளில் கற்பனையின் துணை கொண்டு , பிற இரண்டின் சாத்தியங்களை பயன்படுத்தியபடி, மானுடனின் ஞானத்தேடலின் பயணத்தைச் சித்தரிக்கிறது (சித்திரிக்கிறது). கலையும், தருக்கமும், ஆன்மீகமும், மானுட உணர்வுகளுடன் கலந்து பௌராணிகமான மாய உலகமொன்றைப் படைக்கின்றன.' ஜெயமோகனின் ஞானத் தேடலே நாவலாக உருப்பெற்றிருக்கின்றது. இந்து, பௌத்த தத்துவங்களினூடு மனித வாழ்வு, பிரபஞ்சத்தின் தோற்றம், காலம் பற்றி தர்க்கரீதியாகக் கற்பனையைப் படரவிட்டு இந்நாவலைப் படைத்திருக்கின்றார் ஜெயமோகன். தான் அறிந்ததை, உணர்ந்ததை அவ்விதமே கூறவேண்டுமென்ற ஆவல் ஜெயமோகனுக்கு அதிகமாக இருப்பதை நாவல் முழுவதிலும் காண முடிகிறது. விஷ்ணுபுரம் பற்றிய வர்ணணைகளில் நாவலாசிரியர் மிக அதிகளவில் கவனமெடுத்திருக்கின்றாரென்பதை விஷ்ணுபுரம் பற்றிய வர்ணனைகள் வெளிக்காட்டுகின்றன.ஜெயமோகனின் ஞானத்தேடலே நாவல் முழுக்கப் பல்வேறு பாத்திரங்களாக, பிங்கலன், சங்கர்ஷணன்.. என உலாவருகின்றது. நாவல் முழுக்க எண்ணமுடியாத அளவிற்குப் பாத்திரங்கள். அத்தியாயத்திற்கு அத்தியாயம் புதிய புதிய பாத்திரங்களின் வருகையுடன் நாவல் நடை போடுகிறது. வழக்கமாக அத்தியாயங்களிற்கிடையில் ஒருவித தொடர்ச்சியினை ( Linearity) எதிர்பார்த்துப் பழக்கப் பட்டு விட்ட பெரும்பாலான தமிழ் வாசகர்களுக்கு இந்தத் தொடர்ச்சியற்ற தன்மை நாவலைப் புரிதலில் சிரமத்தினை ஏற்படுத்தி விடுகின்றது. இது இந்நாவலை வாசிக்க விளைபவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுமையினையும் , பாத்திரங்களைச் சம்பவங்களைக் கிரகிக்க வேண்டிய திறமையினையும் மிக அதிகமாகவே வேண்டி நிற்கிறது. ஆனால் இந்த நாவலின் அடிப்படையே ஒரு மனித உயிரின் ஞானத் தேடல் என்ற அளவில், நாவல் பாத்திரங்களினூடு, நகர அமைப்பினூடு, காட்சிகளினூடு, கூறி விவாதிக்கும் இருத்தல் பற்றிய விசாரத்தைத் தொடர்ந்து கொண்டு போவதன் மூலம் இந்நாவல் பிரதியின் வாசிப்பை இலகுவாக்கலாம். பலருக்கு இந்நாவல் புரிபடுவதிலுள்ள குழப்பம் காரணமாகத் தான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கருத்துகளை வைக்கின்றார்கள். (அண்மையில் ஜெயமோகனின் நூல் விழாவில் பேசிய ஜெயகாந்தன் தன்னாலேயே நாவலின் உள்ளே புக முடியவில்லை என்று குறிப்பிட்டதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது). நாவல் பற்றி ஈழத்தின் முற்போக்கு முகாமைச் சேர்ந்த அறிஞர் அ.ந.கந்தசாமி தனது 'மனக்கண்' என்ற நாவலின் முடிவுரையில் 'என்னைப் பொறுத்தவரையில் பாரகாவியமும் நாவலும் ஒன்றென்றே நான் கருதுகிறேன். ஒன்று வசனம், மற்றது கவிதை என்ற வித்தியாசத்தைத்தவிர பாரகாவியம் எப்பொழுதுமே அவசரமாகக் கதையைச் சொல்லத் தொடங்குவதில்லை. நாட்டு வர்ணனை, நகர வர்ணனை, பருவ வர்ணனை என்று மெதுவாகவே அது கிளம்பும். காரின் வேகம் அதற்கில்லை. தேரின் வேகமே அதற்குரியது. வழியிலே ஒரு யுத்தக் காட்சி வந்ததென்று வைப்போம். உதாரணத்துக்கு வியாச பாரதத்தை எடுத்தால் பதினேழு நாள் யுத்தம் நடந்தது. பாண்டவர் வென்றனர், கௌரவர் தோற்றனர் என்று மிகச்சுருக்கமாகவே அதனைக் கூறியிருக்கலாமல்லவா? ஆனால் அவ்வாறு எழுதினால் கதா நிகழ்ச்சியை நாம் புரிந்து கொண்டாலும் யுத்தத்தின் அவலத்தையும் வெற்றி தோல்வியையும் நேரில் பார்த்தது போன்ற உணைச்சி நமக்கு ஏற்படாது. அந்த உணர்ச்சி நமக்கு ஏற்படும்வரை பொறுமையாக விவரங்களை ஒன்றின் பின்னொன்றாகச் சலிப்பின்றி எடுத்துக் கூறி நிற்கும் ஆற்றல் பெற்றவனே பாரகாவியஞ் செய்யும் தகுதியுடையவன். நல்ல நாவலாசிரியனுக்கும் இப்பண்பு இருக்கவேண்டும்.' என்று கூறியுள்ளதுதான் நினைவுக்கு வருகின்றது.ஜெயமோகனுக்கு இப்பண்பு நிறையவேயுண்டு. விஷ்ணுபுரம் பற்றிய அவரது வர்ணனைகள் வாசிப்பவரிடத்தில் அதன் பிரமாண்டம் பற்றியதொரு பிரமிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. இருத்தல் பற்றிய மானுடத்தின் ஞானத் தேடல் என்ற சிறியதொரு கருவுக்கு விஷ்ணுபுரம் என்றொரு பிரமாண்டமான நகரினைப் பல்வேறு பாத்திரங்களினூடு படைத்து, நமது காவியங்களில் கையாளப் பட்டதொரு உத்தியினைப் ( பாணன் கதை சொல்லல்) பாவித்துக் கதை சொல்லியிருக்கின்றார் ஜெயமோகன்.ஆனால் மெய்ஞானம் மட்டுமின்றி நவீன விஞ்ஞானத்தினூடும் இருப்பு பற்றிய தேடலில் மூழ்கிக் கிடப்பவர்களை இந்த நாவல் கவருமா என்பது சந்தேகத்திற்கிடமானதே.எல்லாக் கதாப் பாத்திரங்களும் கதைகளாக மாறிவிடுகின்றதொரு உண்மையில் முழு நாவலுமேயொரு கதைதான். புராணக் கதை.திரிசாகரம் திரிவிக்கிரமர் இயற்றிய மகாபத்மபுராணம். பாணர்கள் கதைசொல்வதிலுள்ள ஒழுங்கு மாறியிருப்பதாகவும் கருத இடமுண்டு. பொதுவாகக் கதைகூறும்பொழுது சில சமயங்களில் ஒழுங்குகள் மாறிக் கதை சொல்வதுமுண்டு. ஆனால் விஷ்ணுபுரத்தில் வரும் விளக்கங்களும் இந்நாவலினூடு விரவிக் கிடக்கும் இருப்பு பற்றிய தேடலும் விரைவாக இந்நாவல் கூறும் பொருள் பற்றி நம்மை வந்தடைவதைத் தடுத்து விடுகின்றன. வாசிப்பவர்களைச் சிந்திக்க, தர்க்க ரீதியாகச்சிந்திக்கப் பெரிதும் தூண்டும் படியாக நாவலின் சம்பவங்களை நடத்திச் செல்லும் தொடர்ச்சி (Plot) இருந்து விடுவது இதன் காரணம். அதே சமயம் எல்லோராலும் இந்நாவலைப் படிக்கவும் முடியாது. ஏற்கனவே ஓரளவு பிரபஞ்சத் தேடல் மிக்க அல்லது தீவிர வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே இந்நாவலின் வாசகர்களாகவும் வரமுடியும்.

இன்னுமொன்றினையும் இந்நாவலின் அமைப்பில் காணமுடியும். பொதுவாக மூன்று பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருப்பதால் இந்நாவலின் மிகவும் முக்கியமான பகுதி மூன்றாவது பாகமான 'மணிமுடி'யென்றேபலர் எண்ணி விடக் கூடும். ஆனால் நாவலின் மிகவும் முக்கியமான, மையமான பகுதி இரண்டாவது பகுதியான 'கௌஸ்துபம்' என்றே எனக்குப் படுகிறது. இருப்பு பற்றிய, பிரபஞ்சத்தின் இருப்பு பற்றிய சாங்கியம், சைவம், சமணம், பௌத்தமெனப் பல்வேறு மதப் பிரிவுகளின் கோட்பாடுகளை மிகவும் தர்க்க ரீதியாக ஆராயும் பகுதியிது. சில சமயங்களில் தர்க்கம் சிரிப்பினூடு சிந்திக்கவும் வைத்து விடுவதாக அமைந்து விடுகின்றன. உதாரணமாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

வாசற்காவலன் தடுத்தான்.
சித்தன் "ஞானசபைக்கு " என்றான்.
"யார் நீங்கள், சார்வாகனர்களா?"
"இல்லை"
"காளாமுகர் போலிருக்கிறது"
"அதுவுமில்லை"
"காபாலிக மதமா?"
"அதுவும் இல்லை"
"சாக்தேயரோ, தாந்திரிகரோ ஆக இருக்கக் கூடும்"
"எதுவுமே இல்லை"
"அப்படியானால்?"
"எதுவும் இல்லை. அதுதான் எங்கள் மார்க்கம்"
"புரியவில்லை"
"சூனியம். ஒரு சூனியம் வந்துள்ளது என்று உன் பண்டிதர்களிடம்
போய்க் கூறு"
"அதுயார் குட்டிச் சூனியமா" என்றான் காவலன்.
" யாரடா நீ பயலே? பார்த்தால் பிராமணக் களை தெரிகிறதே"
"சூனியத்திலிருந்து பிறந்த சூனியம்" என்றான் காசியப்பன். "அதன் பிறகும்
சூனியமே எஞ்சுகிறது" [ பக்கம் 445, பகுதி இரண்டு]

"சுடாத தீ உண்டா?"
"உண்டு. நீரின் ஆத்மாவிற்கு" [ பக்கம் 479 ]

ஸ்யாத்வாதம் பிரபஞ்சத்தின் எவராலும் உற்பத்தி செய்யப் பட்டதல்ல என்று கூறும். இவ்விதமே இருந்து வந்தது எனக் கூறும். நவீன வானியற்பௌதிகத்தின் ( Astro Physics) பிரபஞ்சம் பற்றிய கோட்பாடுகளிலொன்றான 'உறுதி நிலைக் கோட்பாடு' (Steady State Theory)தனை இது நினைவு படுத்தும். காலம், சார்புநிலை பற்றியெல்லாம் தர்க்கரீதியான உரையாடல்களில் மிகவும் விரிவாகவே குறிப்பிடப் பட்டிருக்கின்றன. பல்வேறு பட்ட சமயப் பிரிவுகள் கூறும் பிரபஞ்சம், காலம், இருப்பு பற்றிக் கூறும் கோட்பாடுகளெல்லாம் நவீன வானியற் பௌதிகம், சக்திச் சொட்டுப் பௌதிகம் (Quantam Physics) போன்றவையும் விஞ்ஞானபூர்வமாகக் கூற ஆரம்பித்திருக்கின்றன. ஐன்ஸ்டைனின் வெளி, காலம் பற்றிய சார்பியற் கோட்பாடுகள், பொருள், சக்தி, விசை பற்றிய கோட்பாடுகள், அடிப்படைத் துணிக்கைகள் பற்றிய பௌதிகம் (Particle Physics) கூறும்அடிப்படைத்துணிக்கைகளின் உருவற்ற/உருவமான நிலை, அதன் நிச்சயமற்ற நிலை பற்றிய விதிகள் ( Principle of uncertainity), வெற்றிடம், வெற்றிடத்திலிருந்து பொருள் உருவாவது பற்றிய கோட்பாடுகள், பொருள், எதிர்ப் பொருள் (Anti matter), பிரபஞ்சம்/எதிர்ப் பிரபஞ்சம்..போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவ்வகையில் விஷ்ணுபுரம் நாவலின் பிரபஞ்சம் பற்றிய ஞானத் தேடலில், நவீன பௌதிகத்தையும் எதிர்காலத்தில் ஜெயமோகன் சேர்த்துக் கொள்வாரென்றால் இந்நாவல் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்துவதற்குச் சாத்தியமுண்டு. இல்லாவிட்டாலும் கூட இந்நாவலில் கூறப்பட்டுள்ள கீழைத்தேயத் தத்துவங்களினூடான தேடல் அறியும் ஆர்வமுள்ள நெஞ்சினருக்குப் பெரு விருந்தாக அமையும் சாத்தியமுண்டு. ஆனால் இந்நாவலப் படித்து முடிப்பவருக்கு வரும் முக்கியமான உணர்வு அல்லது அதனால் அவர் அடையும் இன்பம் முக்கியமாக ஆத்மீகத் தேடலாகவே இருக்கும்.

இந்நாவலில் இன்னுமொரு விடயத்தையும் அவதானிக்க முடிந்தது. முதலாம் பகுதி விஷ்ணுபுரத்தின் சிறப்பைக் கூறும். இரண்டாம் பகுதியோ அங்கு நிகழ்ந்த தர்க்க சிறப்பினைக் கூறும். ஆனால் மூன்றாவதான இறுதிப் பகுதியோ கனவாகிப் போன விஷ்ணுபுரச் சிறப்பினை எண்ணி ஏங்கிப் பிரளயத்தில் அழிந்து போவதைக் குறிப்பிடும். அதே சமயம் இரண்டாவது பகுதியின் தோற்றுவாயிலேயே விஷ மேகங்கள் பொழிந்த நீல மழையில் அழிந்து போய் விடும் விஷ்ணுபுரத்தைப் பற்றிக் குறிப்பிடப் பட்டிருக்கின்றது இது ஏற்கனவே நிகழ்ந்ததொரு கதையைக் கூருவதை நினைவு படுத்துவதற்காகவா? விஷ மேகம், நீல மழை, நெருப்பு ஆறான சோனா, அதன் செம்மைக்குக் காரணமான, சிலப்பதிகாரத்தை நினைவு படுத்தும் இன்னொரு உபகதை இவ்விதமாக ஒரு விதக் காவியச் சுவையுடன் விரியும் விஷ்ணுபுரத்தைப் பற்றிப் பல்வேறு கோணங்களிலும் விவாதிப்பதே அதனை முழுமையாக இனங்காண வைக்குமென்பதால், புரிய வைக்குமென்பதால் தொடர்ந்து விவாதிப்போம். கடுமையாக விவாதிப்பதில், தர்க்கிப்பதில் வறில்லை. நாவல் கூறுவதைப் போல் தர்க்கம் 'எதையும் சாராத தர்க்கமாகவோ, வெறும் தர்க்கமாகவோ, தருக்கம் மட்டுமேயான தர்க்கமாகவோ, தன்னையே உடைத்து விடும் தர்க்கமாகவோ' [பக்கம் 436] இருந்து விடுவதிலும் தவறில்லையென்பது என கருத்து. -

இந்நாவலில் வரும் பிங்கலன், மாகவி சங்கர்ஷணன் ...இவர்களைப் போன்றவார்கள் எவ்விதம் படைக்கப் பட்டிருக்கின்றார்கள் என்பதை ஒரு கணம் பார்ப்போம்.. பிங்கலனை சித்தார்த்தரின் பாதிப்பில் படைக்கப் பட்டதொரு பாத்திரமாகவும், சங்கர்ஷணனை சிலப்பதிகாரம், கௌதமர் சரித்திரம் ஆகியவற்றின் பாதிப்புகளாகப் படைக்கப் பட்டிருக்கலாமென்பதற்கு நாவல் முழுக்க பல சான்றுகள் உள்ளன.

இந் நாவலில் வரும் கணிகையர்களெல்லாம் சாருகேசி, பத்மாட்சி போன்றவர்கள் ஆழ்ந்த அறிவுத் தேடலுள்ளவர்கள். ஞானத்தின் பாரத்தால் அழுந்தி உதிரப் போகுமொரு பதர் தான் இந்தப் பிங்கலன் என்பதை இவர்களிலொருத்தியான சாருகேசி இலகுவாகவே உணர்ந்து கொள்ளும் பக்குவம் வாய்ந்தவள். இந்த விஷ்ணுபுர நாவலைப் படைத்த சங்கர்ஷ்ணனே ( நாவலிற்குள் நாவல்) பத்மாட்சியிடம் உரையாடுவதாக உள்ள உரையாடலே விஷ்ணுபுரத்தின் உண்மையான விளக்கத்தை அளிப்பதற்குப் போதுமானது.[பக்கங்கள் 359,360]

"பத்மா உண்மையச் சொல். என் காவியம் எப்படி இருக்கிறது?" என்றான்.

"மண்ணில் கால் பாவாத வெற்றுக் கற்பன இது. இதோ சற்றுமுன் மனிதர்கள் மத்தியிலிருந்து வருகிறேன். அழுக்கு, பசி, இச்சை, போதை, வெறி, உழைப்பு, இதெல்லாம் தான் மனிதர்கள். உழைப்பும், அடிமைத் தனமும், அதிகாரமும் மட்டும்தான் நிதரிசனம். லட்சியக் கனவுகளை உண்டு பண்ணி மனிதன் தன் வாழ்வின் அவலங்களுக்குத் திரை போடுகின்றான். நான் கனவில் நடந்து ஏதோ தெரியாத இடத்தில் கண்விழித்துப் பதைக்கும் மூடன்."

"உண்மையச் சொல்.இந்தக் காவியத்தில் மனித வாழ்வா இருக்கிறது. ஒவ்வொரு சர்க்கமும் உச்சக் கட்ட உத்வேகம் நோக்கி எடுத்துச் செல்லப் பட்டுள்ளது. அழகும் நளினமும் இதில் இல்லை. கட்டற்ற மொழி. உடைபெடுக்கும் ஆவேசம். இந்நூலை ஞான தரிசனம் வழி நடத்தவில்லை. எழுதும் கணங்களில் நானே என்னைத் தூண்டி விட்டு அடைந்து கொண்ட போலியான மனஎழுச்சிகள் தான் தீர்மானித்துள்ளன. அவை ஒவ்வொன்றும் நிதர்சனத்திலிருந்து விலகி ஓடியவை. ஒரு மூடனின் கற்பனை உலகமன்றி வேறல்ல இது."

"பொய்யையா? பொய்யை சொல்லால் சாஸ்வதப்படுத்தவா இத்தனை தவம்.?"

"...இதில் ஞானத் தேடலுடையவனுக்கு என்ன உள்ளது? ஒன்றுமில்லை. ஞானத்திற்கான தத்தளிப்புகள், தருக்கங்கள், பிறகு ஒரு கனவு அவ்வளவுதான்"

"..எது மெய்மையோ அதுவல்ல இது. இது சொற்களின் ஆரவாரத்திற்குள் ஓர்
ஆத்மா பதுங்கியிருக்கும் விளையாட்டுத் தான்."

இவ்விதமாக சங்கர்ஷணனிற்கும் பத்மாட்சிக்குமிடையிலுள்ள உரையாடல் செல்கிறது. சங்கர்ஷனின் மேற்படி அவனது காவியத்¨ப் பற்றிய விளக்கத்தின் அடிப்படையில் விஷ்ணுபுரம் நாவலினைப் புரிந்து கொள்வதிலொரு சுவையுண்டு. நாவலை முழுவதும் படிக்காமல் அதில் தொக்கி நிற்கும் பல காரணங்களைக் கண்டு கொள்ள முனைவோர் சங்கர்ஷணனின் மேற்படி கூற்றினூடு புரிந்து கொள்ள முனைவதும் ஓரளவுக்குப் பொருத்தமானதே. இவ்வளவு தூரம் சிந்திக்கின்ற ஜெயமோகன் 'தொக்கி நிற்கும் காரணங்கள் நிறைய இருந்தால் அவற்றைச் சிறிய அளவிலாவது பத்மாட்சியின் வாயிலாக எடுத்துக் கூறி சங்கர்ஷணனின் துயரைச் சிறிதளவாவது குறைத்திருக்க மாட்டாரா? ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இருப்பு பற்றிய ஞானத்தேடல் தானென்று அவரே பல இடங்களி குறிப்பிட்டுள்ள போது அந்த ஞானத் தேடலுடன் ஒப்பிடும் பொழுது வெகு சாதாரணமான விடயங்களைப் பெரிது படுத்தி 'இல்லை இந்த அற்ப விசயங்களைத் தான் இந்நாவல் கூறுகிறது' எனச் சிலர் வலிந்து பொருள் கூற முனைவதை என்னவென்பது. அது மூன்றாண்டுகளாக அலைந்து திரிந்த ஜெயமோகனின் தேடலினைக்கொச்சைப் படுத்துவதாகும். மேலும் இந்நாவலின் 357 ஆவது பக்கத்தில் சங்கர்ஷ்ணன் வாயிலாக இக்காவியத்தின் அமைப்பு பற்றி விரிவாகவே விளக்கம் தரப் பட்டிருக்கிறது.

"...யுகங்கள் திவலைகளாகச் சென்று ஒடுங்கும் அவன் மேனியென்னும் கடலன்றி வேறு எதுவுமில்லை. அந்த உடலையே என் காவியமாக எடுத்துக் கொண்டேன். ஸ்ரீபாதம், மணீமுடி, கௌஸ்துபம் என்று என் காவியத்தை மூன்றாகப் பிரித்தேன்... பாதமே சரணாகதி. ஞானமே கௌஸ்துபம். மணிமுடியே விஷ்வரூபம்..."

அதன் பிறகு சங்கர்ஷணன் பௌத்த தத்துவ நூல்களையெல்லாம் கரைத்துக் குடிக்கின்றார்.

"...பெருமாளின் உடலை ஞானத்தால் அள்ள முயல்வது என்று முடிவு செய்தேன். ஷட்தர்சங்களையும், தர்ம சாத்திரங்களையும், கற்ற கர்வம் தூண்டியது. மகா அஜிதரின் விஜயம் சம்பந்தமாக அமைந்தது கௌஸ்துப காண்டம். பின்பு காதலை அறிந்து மனம் நெகிழ்ந்து, குழந்தைகளை வளர்த்து மனம் விரிந்து, நான் வேறு ஒரு மனிதனாக ஆன பிறகு அந்தக் கௌஸ்துப காண்டம் வரண்ட தத்துவ விசாரங்களினாலானதாகப் பட்டது. என் சொந்த ஊர் திரும்பி, என் மண்ணில் அமர்ந்து ஸ்ரீபாத காண்டத்தை எழுதினேன்..."

"மணிமுடி காண்டம் எழுதியது வெகு காலம் கழித்து என்கிறீர்களா?"

"ஆம் வெகு காலம் கழித்துக் காவியம் முழுமை பெறமுடியவில்லை என்ற உணர்வு என்னை அலைக்கழித்தபடியே இருந்தது. முடிவுறாத காவியத்துடன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வடதிசைப் பயணம் மேற்கொண்டேன்.... பெருமாளின் விஸ்வரூபம் பற்றிய காட்சியினை அப்போது எழுதினேன்..... உண்மையச் சொல். காவியம் எப்படி இருக்கிறது"...

ஜெயமோகன்இனியாவது விஷ்ணுபுரத்தை ஆராய விளைபவர்கள், அதில் 'தொக்கி நிற்கும் பொருள்' பற்றியெல்லாம் அறிவதில் காலத்தைத் தள்ளாமல் நேரத்தைப் பொன்னாகச் செல்வழிப்பார்களாக. நாவலை நாவலினூடு, அதில் வரும் பாத்திரங்களினூடு, அது கூறும் பொருளினூடு ஆராயும் ஆற்றலினை இனியாவது வளர்த்துக் கொள்ளுங்கள். இத்தகைய யானை பார்த்த குருடர் வாதங்கள் ஜெயமோகனிற்கு மட்டுமல்ல பத்மபுராணம் படைத்த மாகவி சங்கர்ஷணரிற்கும் இழுக்கினைத் தேடித் தந்து விடுமென்பது அடியேனின் தாழ்மையான அபிப்பிராயமாகும். மேலும் எனது இந்தக் கருத்துகளை விமர்சனமாகக் கொள்வீரோ அல்லது கருத்துகளாகக் கொள்வீரோ? அது உங்களதுபார்வையைப் பொறுத்தது. இங்கு இந்த விஷ்ணுபுரத்தில் எல்லாமே சார்பானவைதான். எனவே தவறில்லை. மொத்தத்தில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை சங்கர்ஷணன் வார்த்தைகளில் 'சொற்களின் ஆரவாரத்திற்குள் ஓர் ஆத்மா பதுங்கியிருக்கும் விளையாட்டுத் தான்' என்று நிச்சயமாகக் கூறலாம்.

நன்றி: பதிவுகள்.காம், திண்ணை.காம்

8. கோப்பாய்ப் பழைய கோட்டையின் கோலம்!
- வ.ந.கிரிதரன் -


[ 15-3-1981 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளி வந்த கட்டுரை இது. 35 ரூபா அனுப்பியிருந்தார்கள். தற்போது யாராவது இந்தக் கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய நிலை பற்றி அறிந்தால் அறியத் தரவும்- வ.ந.கி -]

சங்கிலியன் சிலைநல்லூர் நகர் பற்றி ஆராய விளைந்த போது, கட்டடக் கலை மாணவனான நான் உதவி நாடி கலாநிதி கா.இந்திரபாலாவை நாடிய போது தான், அவர் தனது சிரமத்தைப் பொருடபடுத்தாது தனது வேலைகளுக்கு மத்தியில் எனக்கு உதவினார். அபோதுதான் அவர் கோப்பாயில் அமைந்திருந்த தமிழ் மன்னர்களின் கோட்டையைப் பற்றியும் அது பற்றிய சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரை பற்றியும் கூறினார். தமிழரின் பழமை வாய்ந்த சின்னங்களின் பரிதாப நிலை கண்டு மனம் நொந்திருந்த எனக்கு அந்தக் கோட்டை அந்தக் கோட்டையின் இன்றைய நிலையைப் பார்க்க வேண்டும் போலிருக்கவே , கோப்பாய் விரைந்தேன். கோப்பாய் பொலிஸ் ஸ்டேசனுக்கு முன்பாயுள்ள சேர்ச்சைச் சேர்ந்த சற்குணசிங்கம் என்பவர் எனக்கு அப்பகுதியினைக் காட்டி உதவினார்.

மானிப்பாய் கைதடிச் சந்திக்குச் சற்று அப்பால் வீதியின் வலது புறமாக இருந்த ஒரு பழமையான வாயில் முகப்பை காட்டிய அவர் 'இதுதான் பழைய கோட்டை' (Old Castle) என்ற போது தனிமையான நிலையில் நீண்ட காலமாக அமைதியுடன் காத்து நிற்கும் ஒருமனிதனைப் போன்று அந்தப் பகுதி எனக்குத் தோன்றியது.

அந்த வாசலைக் கடந்து உள்ளே சென்றோம். சற்குணசிங்கம் சொன்னார்:

'அருகிலுள்ள எல்லாக் காணிகளுமே பழைய கோட்டை என்றுதான் அழைக்கப் படுகின்றன. ஆனால் ஒவ்வொரு துண்டும் ஒவ்வொருத்தரின் கைக்கு மாறிக் காலத்தின் கோலத்திற்கேற்ப வெகுவாக மாறி விட்டன. கடைசியாக உள்ள காணி மட்டும் இன்னும் விற்க படாமலுள்ளது..'

அந்தப் பின்புறக் காணித் துண்டை அடைந்ததுமே ஒருவித பழமை வாய்ந்த சூழலின் இனிமையில் மனது மூழ்கி விடுகின்றது. புதுமையானதொரு உலகிற்கு வந்து விட்டது போன்றதொரு உனர்வு ஏற்படுகின்றது. சற்குணசிங்கம் மேலும் கூறலானார்:

'இந்தக் காணியில் முன்பொருமுறை நான் வேம்பொன்றை வெட்டியபோது எலும்புத் துண்டுகள் அகப்பட்டன. நிலத்தில் செங்கற்கள் குவிந்து கிடக்கின்றன. அதோ அங்கே நிலத்தைப் பாருங்கள்.'

பார்த்தேன். அவர் காட்டிய இடத்தில்; பூமியினூடு எட்டிப் பார்த்தபடி செங்கற்கள் சிரித்தன. அவரே தொடர்ந்தார்:
'நிலத்தின் அமைப்பைப் பாருங்கள் தம்பி. ஒரு பக்கம் பதிந்தும், இன்னொரு பக்கம் உயர்ந்தும் கிடப்பதை. உயர்ந்து கிடக்கும் பகுதியைத் தோண்டிப் பார்ப்போமாயின் பழைய கோட்டையின் சரித்திரம் தெளிவாகலாம்'.

எனக்கு ஆச்சர்யமாகவிருந்தது. மனுஷன் எவ்வளவு ஆழமாகச் சிந்தித்திருக்கிறார். அத்துடன் அவர் ஒரு கதையையும் கூறினார்:
'நல்லூர்க் கோட்டையையும் , இந்தக் கோட்டையையும் இணைக்கும் ஒரு சுரங்கப் பாதை இருந்ததாக ஒரு கதை உள்ளது.'

அப்போதுதான் சுவாமி ஞானப்பிரகாசர் தனது கட்டுரையில் எழுதியிருந்த கோட்டை வாய்க்கால் பற்றி நினைவிற்கு வரவே கோட்டை வாய்க்காலைப் பற்றி வினவினேன். அந்தப் பழைய கோட்டை எனப்படும் காணித்துண்டுகளின் அருகாகச் செல்லும் சிறிய ஒழுங்கையையே கோட்டை வாய்க்கால் என்கின்றார்கள். அந்த ஒழுங்கையானது பழைய கோட்டை எனப்படும் நிலப் பகுதியிலும் தாழ்வானதாக அமைந்துள்ளது. சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் இந்தக் கோட்டை வாய்க்காலையே பழைய கோட்டையின் அகழியாகக் கருதுகின்றார்.

கோட்டை வாய்க்கால் என்னுமிப்பகுதி வயலுடன் முடிவடைகின்றது. பழைய கோட்டையின் பின்புறமாக உள்ள வயற்பகுதியும் வெகு தாழ்வானதாக உள்ளது. அவ்வயலில் பயிர் விளைவிக்கும் விவசாயியும் தான் மண்ணைக் கொத்துகையில் எலும்புகள் கிடைத்ததாகக் கூறினார்.

ஒரு காலத்தில் தனிச்சிறப்புப் பெற்று விளங்கிய அப்பகுதியின் இன்றைய பரிதாப நிலை கண்டு வயிறு பற்றியெரிந்தது. சற்குணசிங்கம் கூறினார்:'இப்பகுதியில் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு பாதுக்காக்கப்பட வேண்டும் ' அவரது குரலில் அப்பகுதியின் இன்றைய நிலைகண்டு படர்ந்த கவலை நியாயமானதுதான்.

வரலாற்றில் ஒரு தெளிவின்றிக் கிடக்கும் இலங்கைத் தமிழினத்திற்கு இன்றைய நிலையில் தேவையானது வெறும் வாய்ச் சவடால்களல்ல. ஆக்கபூர்வமான ஆய்வுகளே. இதற்கு தமிழ்ப்பகுதிகளில் காணப்படும் பழைமையான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள், அழிபாடுகள் என்பவை பேணிப்பாதுகாக்கப்படல் மிகவும் அவசியமானதொன்றாகும்.

இலங்கையின் கடைசித்தமிழ் மன்னர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தில் புகழ்பெற்ற இராஜதானியாக விளங்கிய நகர்தான் நல்லூர். இன்றோ அது காலத்தின் கோலத்திற்கேற்ப வெகுவாக மாறிக்கொண்டு வருகின்றது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேணிபாதுகாக்கப்படவேண்டிய அந்நகரின் பழமையின் சின்னங்களைக் காண்பதே அரிதாகிக் கொண்டு வருகின்றது. பொதுமக்களோ, அரசியல்வாதிகளோ இது பற்றிக் கவனிக்காமல் இருப்பது வருத்ததிற்குரியது. யமுனாரி (யமுனா ஏரி) செல்லும் மண்பாதையிலும் நிலத்தில் காணப்படும் செங்கற்களை ஆராய்ந்து பார்ப்பின் அவை எத்தனையோ கதைகளைக் கூறக்கூடும்.

தமிழ் இனத்தின் சரித்திரத்தை விளக்கக்கூடிய சின்னங்களே அரிதாகக் காணப்படும் இன்றைய காலகட்டத்தில் , காணப்படும் ஒருசில சின்னங்களையாவது பேணிப்பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். இதையாவது நாம் செய்யாதுவிடின் வருங்காலச் சந்ததியினர் நம்மை என்றுமே மன்னித்து விட மாட்டார்கள்.

நன்றி: வீரகேசரி, தாயகம், பதிவுகள்

9.ஈழத்துத் தமிழ் இலக்கிய மூலவர்களில் ஒருவர்: எஸ்.பொ.
- வ.ந.கிரிதரன் -

எஸ்.பொதமிழ் இலக்கிய வானில் எஸ்.பொ. என்றால் அறியாதோர் யாருமேயில்லையெனெலாம். அன்றிலிருந்து இன்றுவரை மிகவும் சுறுசுறுப்புடன் இலக்கியப் பணியாற்றிவரும் எஸ்.பொ. வைப் பார்த்துப் பலர் ஆச்சர்யப்படுவதுண்டு. எஸ்.பொ. என்றாலே முதலில் நமக்கெல்லாம் ஞாபகம் வருவது அவரது இலக்கிய நேர்மை தான். தனக்குச் சரியென்று பட்டதை யாருக்கும் அஞ்சாது துணிச்சலுடன் சொல்லுபவர் இவர். அந்தத் துணிச்சலை இவரது பல படைப்புகளிலும் காணலாம். தமிழ் இலக்கிய உலகில் மைல் கற்களாகக் கருதப்படும் இவரது நாவல்களான 'தீ', 'சடங்கு', 'நனவிடை தோய்தல்', மற்றும் பல சிறுகதைகள் இவற்றிலெல்லாம் இதனைக் காணலாம். இவரது படைப்புகள் பலவும் இலக்கிய உலகில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பின. கிளப்பிய வண்ணமேயிருக்கின்றன.

'புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியம்' பற்றி இவர் கூறிய கருத்துகள் தமிழகத்தில் உருவாக்கிய சர்ச்சைகள் இன்னும் தீர்ந்தபாடாயில்லை. அன்றும் இந்தியப் பத்திரிகைகளிற்கு ஈழத்து எழுத்தாளர் காவடியெடுப்பதைக் காரசாரமாகத் தாக்கி இவர் கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையினையே ஏற்படுத்தி விட்டன.

இவரைப் பற்றி இளங்கீரணை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'மரகதம்' இதழொன்றில் (அக்டோபர் 1961) பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"..சென்ற ஆண்டு கங்கை' ஆசிரியர் முன்னிலையில், இந்தியப் பத்திரிகைகளுக்கு ஈழத்து எழுத்தாளர் காவடி எடுப்பதைக் காரசாரமாகத் தாக்கி ஏழத்து எழுத்துலகில் ஒரு பிரச்னையைச் சிருஷ்டித்து விட்டு வேடிக்கை பார்த்த இவர், ஒரு காலத்தில் தமிழ் நாட்டுப் பத்திரிகைகளில் ஏராளமாக எழுதியவர். ஐந்தாண்டுகள் சென்னையில் வாழ்ந்த போது 'காதல்' பத்திரிகையில் 'முதல் இரவு' போன்ற சிறுகைதையில் துவங்கி 'கலைமகள்' வரை சென்றவர். இன்றும் இவரது உருவகக் கதைகள் 'கலைமகளி'ல் பிரசுரிக்கப்படுகின்றன (கல்கியிலும் இவரது உருவகக் கதைகள் தொடராக வெளிவந்ததும் ஞாபகம் வருகிறது... பதிவுகள்-). புதுமைக் கருத்துகள் கொண்ட இவர் அப்போது 'பழமைதாசன்' என்ற புனைபெயரில் ஒளிந்திருந்தது ஆச்சரியமே. 'தினத்தந்தி' சென்னை நிருபராகவும் இருந்திருக்கிறார்...  1948-ம் ஆண்டு 'சுதந்திரனில்' தன் பாட்டன் பெயர் ஆறுமுகம் என்பதனாலேயோ என்னவோ ஆறு புனைபெயர்களில் எழுதிக் குவித்தார்...

தர்க்க சாஸ்த்திரத்தில் 93 மார்க்குகள் வாங்கிய இவர், தர்க்கத்திலா, குதர்க்கத்திலா வல்லுநர் என்பதை நாங்கள் சொல்ல மாட்டோம். ஆனால், தன் நிழலுடன் தானே சண்டை பிடிப்பதில் வெகு பிரியர் - வல்லுநர் என்று மட்டும் கூறுவோம்....

நாடகத்துறையில் பொன்னுத்துரை குறிப்பிடத்தக்க மூவருள் ஒருவர். பல சரித்திர நாடகங்களை இயற்றியும் மேடையேற்றியும் வருகின்றார்....

'பொக்கன் கணபதி' என்ற பெயரில் விஞ்ஞான ரீதியில் ஆரூடம் சொல்லும் பாணியில் கிண்டல் ஆராய்ச்சிகள் புரிந்தபோது பொன்னுத்துரை பிரச்னையாளரானார். அத்தொடர் தமிழர்களின் வேண்டத்தகாத அம்சங்களை நையாண்டி செய்து விமர்சித்தது...."

1948 காலகட்டத்திலிருந்து சுமார் 52 வருடங்களாக எவ்விதம் எஸ்.பொ.வினால் அதே வீர்யத்துடன் இலக்கியவானிலே கோலோச்ச முடிகிறதோ? இளைய தலை முறை எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் இவர் முன்னிலை வகிப்பவர். இவரது 'மித்ர' பதிப்பகம் தொகுத்து வெளியிட்ட 'பனியும் பனையும்' இதற்கொரு நல்லதொரு உதாரணம்.

அண்மையில் இவர் கனடா வந்திருந்த பொழுது இவரைச் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் மனம் திறந்து இலக்கியம், கடந்தகால வாழ்க்கை, எதிர்காலத் திட்டம்.. இவை பற்றியெல்லாம் இவருடன் சுமார் இரு மணித்தியாலங்களாக உரையாடியது மறக்க முடியாததொரு அனுபவம். அநேகமாக இங்கு வரும் எழுத்தாளர்களெல்லாம் இங்குள்ள ஜனரஞ்சக வெகுஜன ஊடகங்களுடன் தொடர்பு கொண்டு, விருதுகள் , பாராட்டுரைகள் பெற்று ஜென்ம சாபல்யம் அடைந்து செல்வது வழக்கம். மாத்தளை சோமு, செங்கை ஆழியான்... என்று பட்டியல் நீளுகிறது. இங்குள்ள படைப்பிலக்கியவாதிகளைச் சந்திப்பதற்கே இவர்களிற்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. இந்நிலையில் ஊர் திரும்பியதும் 'மணியன்' பாணியில் பயணக் கட்டுரைகள் வேறு எழுதி விடுவார்கள்.

இந்நிலையில் எஸ்.பொ. ஒருவர்தான் இங்குள்ள அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த இலக்கியவாதிகளைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டியவர். இவர் ஒருவரிற்குத்தான் அனைவரும் ஒன்று திரண்டு வரவேற்பு கொடுத்தனர். இவையெல்லாம் எவ்வளவு தூரம் எஸ்.பொ. சமகால இலக்கிய நடப்புகளையெலாம் அறிந்து வைத்திருக்கின்றாரென்பதை புலப்படுத்தின.

ஈழத்து இலக்கிய வானிலே ஆரம்பத்திலே தோன்றிய மூன்று முக்கிய போக்குகளான முற்போக்கு, நற்போக்கு, பிரபஞ்ச யதார்த்தவாதம் ஆகியவற்றின் மூலவர்களாக முறையே அ.ந.கந்தசாமி, எஸ்.பொ., மு.தளையசிங்கம் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்கள் மூவரும் இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும், நாவல், சிறுகதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு,... எனத் திடமாகக் கால் பதித்தவர்கள். இவர்களில் அறிஞர் அ.ந.கந்தசாமியும், மு.தளையசிங்கமும் மறைந்து விட்டனர். எஸ்.பொ. தொடர்ந்தும் அதே உற்சாகத்துடனும் , முனைப்புடனும் தமிழ் இலக்கிய வானிலே கொடி கட்டிப் பறந்து வருகின்றார். ஈழத்து இலக்கியத்தை முறையாக அறிவதற்கு இம்முவரைப் பற்றியும் முறையான ,விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது அவசியமானதொன்று.

-நன்றி: ஆறாம்திணை, பதிவுகள்.

10. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
-வ.ந.கிரிதரன் -


ஜெயமோகனின் ' கன்னியாகுமரி' ஜெயமோகனின் 'கன்னியாகுமரி' நாவலின் கதைச்சுருக்கத்தினைப் பின்வருமாறு கூறலாம்: மிகவும் கேவலமான ஆசாபாசாங்களுடன் கூடிய கதாநாயகன் திரைப்பட இயக்குநர் ரவிகுமார்.எந் நேரமும் காமத்தில் உழன்று கொண்டேயிருக்கும் இவன் மிகவும் ஆழமாகவும் சிந்திப்பவன்.மிகவும் அற்பமாகவும் சிந்திப்பவன்.தன் கண் முன்னால் நான்கு முரடர்களால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப் பட்ட காதலி விமலாவைக் கோழையாகக் கைவிட்டவன். அவ்வுறவில் அவளும் ஆனந்தம் அடைந்திருக்க வேண்டுமெனக் கற்பனை செய்பவன். பல வருடங்களிற்குப் பின்னர் கன்னியாகுமரியில் படத் தயாரிப்பிற்கொன்றிற்காக தயாரிப்பாளர், கதாசிரியர், நடிகை பிரவீணாவுடன் தங்கியிருக்கும் இவன், நடிகையுடன் புணர்வதுடன், பெண்களைப் பாலியல் பண்டமாகவே கருதிய,கருதும் தனது மன உளைச்சல்களையெண்ணிப் போராட்டத்தில் சிக்கியிருக்கிறான். தனது பழைய காதலியான , தன்னால் கைவிடப்பட்ட படித்த விமலாவை கன்னியாகுமரியில் சந்திக்கிறான். அவளோ விடுமுறைகளில் படிக்காத ஆண்களாகத் தேர்ந்தெடுத்து ஊர் சுற்றுமொரு பெண்ணாக மாறியிருக்கிறாள்.அமெரிக்காவிலிருந்து தனது கிரேக்க ஆண் நண்பனுடன் கன்னியாகுமரிக்கு வருகை தந்திருக்கின்றாள். அவளுடனான சந்திப்பு மீண்டும் இயக்குநர் ரவிகுமாரின் மனப் போராட்டங்களை அதிகரித்து விடுகின்றது. பல பெண்களுடன் உறவு வைத்திருந்த இவன் திருப்தியடைந்தது சைலஜா என்னுமொரு பெண்ணுடன் தான். தனது மனைவியுடனான உறவிலோ அல்லது நடிகை பிரவீணாவுடனான் உறவிலோ இவனால் சைலஜாவுடன் அடைந்ததைப் போல் திருப்தியினை அடைய முடியவில்லை. தனது முன்னால் காதலியுடன் ஒருநாளாவது 'அவளைப் புணர்ந்து, ஒருமுறை உச்சத்தின் வெறுமையில் எகிறிச் சுழன்றிறங்கச் செய்தால் போதுமெ'ன நினப்பவன் இவன். விமலா தனது படித்த செருக்கினைத் தன்முன்னால் காட்டுவதாக வெதும்புமிவன் அவளை அதற்காக 'தேவடியா நாயே, நான் போடறேண்டி சூப்பர்ஜீன்ஸ். வேஷமா போடறே. வேஷம் போட்டா பயந்துடுவேன்னு நெனைச்சியா? என்னை என்ன கேணையன்னு நினைச்சியா? வேஷம் போடு ஜெயித்திடுவியா?நான் ஜெயிக்கிறேன் உன்னை. உன்னை ஜெயிச்சாத் தான் எனக்கு சினிமா,. என் சினிமா உன் மார்புக்குள்ள இருக்குடி நாயே. சயிண்டிஸ்ட்டு. ...த்தூ..அமெரிக்காக்காரிது..உன்னைப் பிளந்து என் சினிமாவ வெளியே எடுக்கிறேண்டி..பாம்ப பிதுக்கி நாகமணிய எடுக்கிறேண்டி..' எனப் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட நடிகை பிரவீணவிடம் புலம்புவன். அதே சமயம் நடிகை பிரவீணவையும் ' சீ விளக்கப் போடுடி தேவடியா நாயே. என் எச்சிலத் தின்னுட்டு எங்கிட்டே படுக்கிற நாயி. நீ என்ன கேக்காம விளக்க அணைக்கிறியா? விளக்க போடுறீ..நாயே..' எனத் திட்டுபவன். தனது முன்னால் காதலியின் மேல் இருந்த ஆத்திரத்தின் காரணமாக அவளைப் பாலுறவிற்குட்படுத்திய கேடிகளிலொருவனான ஸ்டீபனையே தனது போலிஸ்கார நண்பனொருவனின் உதவியுடன் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து விமலாவின் முன்னால் நிறுத்துகின்றான். அவளோ இரு பெண் புத்திரிகளுடன் அல்லாடும் அவனது நிலைக்கு இரக்கப் பட்டு உதவி செய்யவும் முன்வருகின்றாள். இறுதியில் நடிகையும் கதாசிரியருடன் அவனை விட்டு ஓடிப் போய் விடுகின்றாள். காதலியும் அமெரிக்கா சென்று விடுகின்றாள். இவன் தனித்துப் போய் விடுகின்றான். இதுதான் கதைச் சுருக்கம்.

இந் நாவலிற்கான கரு கி.ராஜநாராயணின் கன்னியாகுமரியை மையமாக வைத்துப் ,பின்னப் பட்ட சிறுகதைகளிலொன்றான 'கன்னிமை' என்னுமொரு சிறுகதையினை மையமாக வைத்து உருவானதாக நாவலின் நாயகன் ரவிகுமாரினூடாக நாவலாசிரியர் ஜெயமோகன் நினைவு கூருகின்றார். ஜெயமோகனின் முன்னுரையினையும், நாவலில் ஆங்காங்கே விவரிக்கப் படும் கன்னியாகுமரி பற்றிய விளக்கங்களையும் ஒதுக்கி விட்டுப் பார்த்தால் இந்த நாவலை நிச்சயமாக ஒரு 'ஆபாச இலக்கியம்' என்னும் பிரிவிற்குள் இலகுவாக அடக்கி விடலாம். அப்படி விடாமல் ஜெயமோகனின் மேற்படி முன்னுரையும், கன்னியாகுமரி பற்றிய தத்துவ விளக்கங்களும் நம்மைத் தடுத்து விடுவதால் நாவலைப் பற்றிச் சிறிது ஆராய வேண்டிய நிலைமைக்கு நம்மைத் தள்ளி விட்டு விடுகின்றன.

கன்னியாகுமரியைப் பற்றி நாவலில் பல இடங்களில் குறிப்பிடப் படுகின்றன. உதாரணத்திற்குப் பின் வருவனவற்றினைக் குறிப்பிடலாம்:

"
'கன்னியாகுமரியோட ஐதீகம் தெரியுமில்லையா?'
'தெரியும்.'

'தேவியைத் தாலிகட்ட ஸ்தாணுமாலயன் கிளம்பினார். பிரம்மாவும் விஸ்ணூவும் சிவனும் ஒன்றான மூர்த்தி. படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது கிரியாசக்தியே அவன் தான். ஆனா வந்து சேரலை. வரப் போவதுமில்லை. தேவி இந்தக் கடல் முனையில் கன்னியா காத்திருக்கா. யுகயுகமா. இன்னும் எத்தனையோ யுகங்களுக்கு எத்தனை பெரிய தனிமை, எத்தனை உக்கிரமான காத்திருப்பு இல்லையா?'

'ஆமா.'

'இதை நாம கடல்னு சொல்றோம். ஆனா இது கடல்கள். மூணு கடல்கள் ஒண்ணோடொண்ணு மோதிக் கலந்து கொந்தளிச்சிட்டிருக்கு. எனக்குத் தோணுது உள்ளே ஆழத்தில அந்தக் கடல்களோட உக்கிரம் இன்னும் அதிகமா இருக்கும்னு. அதி பயங்கரமான மெளனத்தில் ஒரு துளி அசைவு கூட இல்லாம மூணு பிரமாண்டங்களும் மோதி உச்சக் கட்டத்திலே அப்பிடியே நின்னுட்டிருக்கும்னு. யுகங்களா அந்த உச்சக் கட்டம் நீண்டு நீண்டு போயிட்டிருக்கு.'

[பக்கங்கள்: 26,27] "

" 'கன்னித்தன்மைதான் இங்க தேவியோட அழகு. ஆனா சாதாரண கன்னி இல்லை. காத்திருக்கிற கன்னி. ஒரு நாளைக்கும் முடியாத காத்திருப்பு. ரெண்டையும் சேத்து யோசித்தாத்தான் நாம தேவியைப் புரிஞ்சு கொள்ள முடியும்.' [பக்கம் 28 ] "
இவற்றிலிருந்தும் நாவலின் சம்பவங்களிலிருந்தும் சில உண்மைகள் வெளிப்படுகின்றன. ஒன்று நாவலில் வரும் பாத்திரங்களெல்லாம் நடைமுறையில் நிலவும் கற்பு பற்றிய ஐதீகத்தினை உடைத்தெறிந்து காமத்தில் மனம் போனபடியெல்லாம் சுகித்து வாழுகின்றார்கள். அதே சமயம் இச்சம்பவங்கள் நடைபெறும் சூழலோ கன்னித்தன்மையினைப் பேணி யுகயுகமாய்க் காத்திருக்கும் கன்னித்தெய்வம் குடியிருக்கும் கன்னியாகுமரியில். இதன் மூலம் ஜெயமோகன் கற்பு பற்றிய கோட்பாட்டினைக் கேள்விக்குறியாக்கின்றாரென்று கூறலாமா? அவ்விதம் கேள்விக்குறியாக்குவதற்கு நாவல் முழுக்க நாயகனின் நடிகையுடன், ஏனைய பெண்களுடனான காமச் சல்லாபங்களை விபரித்திருக்க வேண்டிய தேவை தேவைதானா? கற்பு என்னும் கோட்பாட்டினைக் கேள்விக்குறியாக்கிய படைப்புகளில் காலத்தால் முந்தியது இரு பெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம். திரெளபதி என்னும் பாத்திரம் மூலம் , சூரிய பகவானிற்குப் புத்திரனைப் பெறும் குந்தியென்னும் பாத்திரம் மூலம், இராமயணத்தில் கூட 'அசோகவனத்தில்' நெடு நாட்கள் தங்கியிருந்து திரும்பிய சீதாப் பிராட்டி மூலம் ஏற்கனவே கேள்விக்குறியாகியதொரு விடயத்தினைத் தான் 'கன்னியாகுமரியும்' செய்கிறதென்று ஜெயமோகன் கூறுகின்றாரா? [ஜெயமோகன் தனது அடுத்த நாவல் 'அசோகவனம்' எனக் கூறுகின்றார். இத்தகையதொரு நவீன சீதாப் பிராட்டியினைப் படைத்து சில கேள்விகளை எழுப்ப உத்தேசித்திருக்கிறாரோ தெரியவில்லை.]ஜெயகாந்தன் ஏற்கனவே 'அக்கினிப் பிரவேசம்' என்ற குறு நாவலிலும் அதன் தொடர்ச்சியான 'சில நேரங்களில் சில மனிதர்களென்'ற 'காலங்கள் மாறும்' நாவலிலும் , 'ரிஷி மூலம்' குறு நாவலிலும் மிகவும் தீவிரமாக அதே சமயம் மிகவும் நாசூக்காக இக்கோட்பாட்டினைக் கேள்விக்குறியாக்கியிருக்கின்றார். புதுமைப் பித்தனும் 'பொன்னகரமென்'ற இருபக்கச் சிறுகதையில் மிகவும் ஆக்ரோசமாகக் கேள்விக்குறியாக்கியிருக்கின்றார். 'பாலும் பாவையில்' விந்தன் அகல்யா என்னும் பாத்திரம் மூலம் கேள்விக்குறியாக்கியிருக்கின்றார். மு.வரதராசனாரின் 'நெஞ்சின் ஒரு முள்' நாவலும் இவ்விடயத்தினைக் கேள்விக்குரியாக்கிய படைப்புகளிலொன்றுதான். இவ்விதமாகப் பல படைப்புகளைக் கூற முடியும். ஜெயமோகனும் தன் பங்கிற்கு 'கற்பு' பற்றிய கோட்பாடு பற்றி கேள்வியெழுப்புவதாக இந்நாவலைக் கூற முடியுமா?
ஒரு நாவலைப் படித்து முடியும் போது அப்படைப்பானது படிப்பவரிடத்தில் எத்தகையதொரு தாக்கத்தினை ஏற்படுத்துகின்றதென்பதிலேயே அப்படைப்பின் வெற்றி தங்கியுள்ளது. புதுமைப் பித்தனின் 'பொன்னகரத்தி'னைப் படித்து முடிக்கும் போது வருவதென்ன? அம்மாளு செய்த காரியத்திற்காக யாரும் அவளைக் காறித்துப்புவதில்லை. மாறாக அவளது நிலையுடன் ஒப்பிடும் பொழுது கற்பு பற்றிய கோட்பாடே பின்னுக்குத் தள்ளப்பட்டுப் போய் விடுகிறது. அவளை இந்நிலைக்கு ஆளாக்கி விட்ட சமுதாயத்தின் மேல் சீற்றம் வருகின்றது. ஒரு பணக்கார இளைஞனின் காமத்திற்குத் தன்னை சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் இழந்து விட்ட பாடசாலை மாணவியான கங்காவிற்கு அவளது தாயார் தண்ணீர் வார்த்து அக்கினிப் பிரவேசம் செய்யும் போது ஜெயகாந்தன் என்ன இலாகவமாக இக்கோட்பாட்டினைக் கேள்விக்குறியாக்கி விடுகின்றார். ஆனால் மேற்படி 'கன்னியாகுமரி' நாவலில் வரும் நாயகன் இயக்குநர் ரவிகுமாரின் வக்கிரமான மன ஓட்டங்களை நாவல் முழுக்க வாசித்து முடிக்குமொருவரிற்கு வரும் உணர்வுகளென்ன? ஒரு மூன்றாந்தர பாலியல் நாவலொன்றினை வாசிக்கும் போது ஏற்படும் மன உணர்வுகளைத் தவிர வேறேதாவது உனர்வுகள் வருகின்றதா? நாவலின் முன்னுரையில் ஜெயமோகன் பின்வருமாறு கூறுகின்றார்:

" இன்று தனிமனிதன் முதன்மைப்பட்டு சமூகம் இரண்டாம்பட்சமாகி விட்டது என்று மிகப் பொதுப்படையாகக் கூறலாம். தனி மனித அறம், தனி மனித உண்மை, தனி மனித உன்னதம் ஆகியவை முக்கியமாகிவிட்டன. இந்த நூறு வருடங்களில் உலகம் முழுக்க எழுதப் பட்ட இலக்கியப் படைப்புகளில் பொது அம்சமாக காணப்படுவது இந்தப் போக்கே என்பது என் புரிதல். ஒவ்வொரு தனி மனிதனும் அவனுடைய வாழ்வில , அவனுக்குச் சாத்தியமான உச்சங்களை நோக்கி நகர்வதென்பதே இந்த யுகத்தின் இலட்சிய இயங்குமுறை. அந்நகர்வின் போக்கில் பிறருக்கு ஊறு விளைவிக்கத படி, பிறரைத் தடை செய்யாதபடி ( அல்லது அங்கீகரித்த தடைகளை மட்டும் அளித்தபடி ), அவன் செயல்பட வேண்டுமென்ப்தே இன்றுள்ள ஒழுக்க நெறிகளின் சாரம் என்று படுகிறது. இந்நாவலை இத்தகைய புது ஒழுக்கமொன்றை நோக்கிய தேடல் என்று கூறலாம்."

ஆனால் இந்நாவலில் வரும் நாயகன் நடை முறைகளெல்லாம் பிறரை அவமானப் படுத்துவையாகவல்லவா இருக்கின்றன. எடுத்ததற்கெல்லாம் 'வாயை மூடு தேவடியா நாயே' என்று வசை பாடுபவனாகவிருக்கின்றான். ஏற்கனவே இவன் இயக்கிய 'ஏகயாய ராஜகுமாரி' யிலேயே இவன் உச்சத்தினை அடைந்து விட்டதாகக் கூறி நடிகை பிரவீண இன்னுமொருவனுடன் சென்று விடுகின்றாள். இவனோ தனது முன்னால் காதலியுடன் புணர்ந்து உச்சத்தினை அடைய வேண்டுமென நினைப்பவன். ஜெயமோகன் கூறலாம். இந்நாவல் ஒரு குறியீட்டு நாவலென்று. கன்னியாகுமரி பற்றியும், ஒரு சில இந்து சமய தத்துவங்கள் பற்றியும் ஆங்காங்கே தூவி விடுவதால் மட்டும் இத்தகைய குறியீட்டு நாவல்களைப் படைக்க முடியுமென்றால் எமது 'அழகியின் ஆவி'யினைப் படைக்கும் மர்மக் கதை மன்னர்களெல்லாம் இத்தகைய குறியீட்டு நாவல்களைப் படைக்கத் தொடங்கி விடுவார்கள்.

'அல்பேர்ட் காம்யூ'வின் 'அன்னியன்' நாவலில் வரும் நாயகனின் நடைமுறைகளில் ஒரு வித அன்னியத் தன்மை தென்படும். தாயாரின் மரணச் செய்தியினை மேலதிகாரியிடம் கூறி வேலைக்கு விடுமுறை எடுப்பதற்கே தயங்குவானவன். அத்தகையதொருவிதமான அன்னியத் தன்மை இந்நாவலின் நாயகனிடத்திலும் காணப் படுகின்றது. அவ்விதம் காணப்பட்டாலும் இப்பாத்திரம் படைக்கப் பட்ட விதம் இந் நாவலின் நோக்கமான 'இந்நாவலை இத்தகைய புது ஒழுக்கமொன்றை நோக்கிய தேடல் என்று கூறலாம்' என்று கூறும் ஜெயமோகனின் நோக்கத்தினைச் சிதைத்து விடுகின்றது. ஏற்கனவே கூறியது போல் படைப்பானது படித்து முடித்ததும் வாசகரிடத்தில் எழுப்பும் உணர்வினைப் பொறுத்தே அதன் வெற்றி தங்கியுள்ளது. அந்த வகையில் ஜெயமோகனின் 'கன்னியாகுமரி' ஒரு வெற்றிகரமான படைப்பாயென்றால் அது ஒரு கேள்விக்குறிதான்.

நன்றி: திண்ணை, பதிவுகள்.

11. 'நந்தலாலா' ஜோதிகுமாருடன் ஒரு நேர்காணல்!
 'நந்தலாலா' ஜோதிகுமார்இலங்கையிலிருந்து வெளிவரும் 'நந்தலாலா' , முன்பு வெளிவந்த 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாருடன் நடைபெற்ற நேர்காணல். இந்த நேர்காணல் 1997இல் ஜோதிகுமார் தொராண்டோ வந்திருந்த சமயம் எடுக்கப்பட்டது. பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் கருதிப் பதிவுகளுக்காக இங்கு பதிவு செய்கின்றோம். பேட்டி கண்டவர் வ.ந.கிரிதரன்.-

வ.ந.கிரிதரன்:ஜோதிகுமார்! நீங்கள் ஆரம்பத்தில் 'தீர்த்தக்கரை' சஞ்சிகையினை வெளியிட்டீர்கள். தற்போது 'நந்தலாலா'வினை வெளியிடுகின்றீர்கள். ஏனிந்தப் பெயர் மாற்றம்?

ஜோதிகுமார்: தீர்த்தக்கரை நண்பர்களால் ஒன்று சேர்ந்து வெளியிடப்பட்டது. 1983 வன்செயலின் பின்னர் தீர்த்தக்கரை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பலர் பிரிந்து சிதறுண்ட நிலையில்...அவர்களனைவரையும் மீண்டும் ஒன்றிணைத்து அதே பெயரில் சஞ்சிகையினை வெளியிடுவது முடியாத காரியமாயிருந்தது. எனவே அதில் ஈடுபட்டிருந்த சில நண்பர்கள் தீர்த்தக்கரை வெளிவராத நிலையில் பிறிதொரு சஞ்சிகையினை ஆரம்பிக்கலாமென்று கூறினார்கள். அதன் விளைவாக உருவானதுதான் 'நந்தலாலா'. இரண்டினையும் ஒரே சஞ்சிகையென்று கூறமுடியாது. ஆனால் ஒரே இலக்கிய தர்மத்தினை, ஒரே போக்கினைக் கொண்டவையெனக் கூறலாம்.

வ.ந.கிரிதரன்: ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் 'நந்தலாலா'வின் பங்களிப்பு எத்தகையதாக இருக்க வேண்டுமெனக் கருதுகின்றீர்கள்? மலையக இலக்கியக் களத்தையே பின்னணியாகக் கொண்டு இயங்கவேண்டுமெனக் கருதுகின்றீர்களா?அல்லது.....

ஜோதிகுமார்: அது சகல சமூகங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. மலையகத்தை மாத்திரம் உள்ளடக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மலையகம் என்ற எல்லையைத் தாண்டிவரவேண்டிய நிர்பந்தமிருக்கிறது. அதனால், மலையகமென்ற அதாவது அதனுடைய யதார்த்தப் போக்கினை, அதனுடைய குணாம்சங்களை வெளிப்படுத்தும் அதே சமயம் பல சமூகங்களிற்கிடையே புரிந்துணர்வினை தோற்றுவிக்குமொரு சஞ்சிகையாகவும் இலக்கியப் பாலமாகவும் இருக்கவேண்டுமென எண்ணுகிறோம்.

வ.ந.கிரிதரன்: உங்களுடைய எழுத்துலக அனுபவத்தைச் சிறிது கூறமுடியுமா? இதுவரை கால எழுத்துலக, இலக்கிய அனுபவங்களின் விளைவாக நீங்கள் எத்தகைய உணர்வினைக் கொண்டிருக்கின்றீர்கள்?

ஜோதிகுமார்: பொதுவாகத் தீர்த்தக்கரை, நந்தலாலாவில் செயற்பட்டவர்கள், செயற்படுகின்றவர்கள் எல்லோருமே ஒரு புரிந்துணர்வுடன் செயற்பட்டவர்கள். செயற்படுகின்றவர்கள். உதாரணமாக எம்மிடம் பிரசுரத்திற்கென வரும் படைப்புகளை நாம் பொதுவாகத் திருத்துவதில்லை. பொதுவாக, அவற்றை எழுதியவர்களைக் கஷ்ட்டப்பட்டுக் கண்டுபிடித்து, அவற்றின் குறைநிறைகளை விவாதித்து, அப்படைப்புகளை அப்படைப்பாளிகளினூடாகவே எவ்வளவு முன்னேற்ற முடியுமோ அவ்வளவு தூரம் முன்னேற்றுவதற்கு முயல்வோம். அது ஒரு நல்ல அம்சம். இரண்டாவது , படைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் சரியான கவனமாகவிருப்போம். வாசகர்களுக்கு அவை பிடிக்குமாவென்பது தெரியாது. ஆகவே, பல்வேறுபட்ட வாசகர்களிடமும் அவற்றை வாசிக்கக் கொடுப்போம். அது சாதாரண இளைஞர்களிலிருந்து சாதாரண ஆசிரியர் வரை எல்லாவகையானவர்களிடமும் வாசிக்கக் கொடுப்போம். அவர்கள் அபிப்பிராயம் சொல்லும்போது விமர்சனரீதியாக அபிப்பிராயம் சொல்ல மாட்டார்கள். சும்மா சொல்லுவார்கள். பிடித்திருக்கிறதா இல்லையாவென்று. அடுத்த கேள்வியென்ன கேட்போமென்றால்..அப்படைப்பு எவ்விடத்தில் தொய்வது போல் படுகிறதென்பதுதான். இதற்கு அவர்கள் ஏதாவது சொல்லக்கூடும். இவற்றிலிருந்து தான் நாம் சில விடயங்களைக் கிரகித்து, சரி இந்தப்படைப்பைப் போடலாமா, போடக்கூடாதா , எவ்வாறு திருத்தப்பட வேண்டும் போன்றவற்றைத் தீர்மானிப்போம். இப்படியானதொரு போக்கு எம்மிடையே நிலவுகின்றது. இதனால் நந்தலாவில் நல்ல படைப்புகள் வெளிவருவதாக நீங்கள் கருதினால் அதற்குரிய பாராட்டினை இந்த மாதிரி வாசகர்களுக்குத் தான் நாம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கூடாகத்தான் நாமும் படிக்கிறோம். நாங்களெல்லாம் பெரிய கலைஞர்களென்ற எண்ணமே எம் நண்பர்களிடையே இருக்கவில்லை. இதுவுமொரு நல்ல விசயமே.

அடுத்ததென்னவென்றால் எல்லோருமே committed. உதாரணமாக தீர்த்தக்கரையோ நந்தலாலாவோ அவை வந்த காலகட்டங்களில் மலையகத்தைப் பொறுத்தவரையில் போர்ப்பிரகடனங்களாகத்தான் வெளிவந்தன. மலையகத்தைப் பொறுத்தவரையில் தொண்டமானிற்கெதிராக விமர்சனங்கள் வைக்க முடியாததொரு நிலையிருந்தது. இந்நிலையில் தொண்டமானிற்கெதிராகக் காத்திரமான விமர்சங்களை நந்தலாலா வைத்தது. மலையகம் பற்றிய வரலாறு சம்பந்தமான ஆங்கில நூலினை நடேசன் வெளியிட முயன்றபொழுது - அப்பொழுது ஆட்சியிலிருந்தது ஐ.தே.க.- பலரால் அவரிற்கு தொல்லைகள் ஏற்பட்டன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கெதிரான விடயங்கள் பல இருப்பதாகக் கூறி எச்சரிக்கப் பட்டார். இந்நிலையில் நடேசன் என்னுடன் தொடர்பு கொண்டு அந்நூலினை இருபாகங்களாக வெளியிடலாமேயெனக் கருத்து வெளியிட்டார். நந்தலாலா' நண்பர்களினால் அதனை ஏற்க முடியவில்லை. அப்படிப் பாதிப்பு வந்தால் வெளியிடும் நமக்குத்தானே முதற்பாதிப்பு எனக் கூறினார்கள். இவ்விதமாகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற பண்பு அந்நண்பர்களிடமிருந்தது. இதனால் உக்கிரமான இலக்கியத்தையோ எழுத்துகளையோ தரக்கூடியதொரு களத்தை எம்மால் அமைக்கக் கூடியதாகவிருந்தது. இது எனது இலக்கிய அனுபவத்தில் நல்லதொரு விசயம்.

வ.ந.கிரிதரன்: நல்லது ஜோதிகுமார். இவ்விதமாகப் பாடுபடவேண்டுமென்ற எண்ணம் தங்களுக்கு எவ்விதமுண்டானது?

ஜோதிகுமார்: தீர்த்தக்கரை வெளிவந்த காலகட்டம் 1980 தான். அதே காலகட்டத்தில் வெளிவந்த முக்கிய சஞ்சிகைகளாகக் 'குமரன்'...போன்றவற்றைக் கூறலாம். செ.கணேசலிங்கனின் 'குமரன்' சஞ்சிகையினைத் தான் குறிப்பிடுகின்றேன். இது இடதுசாரிப் போக்கினைக் கொண்டது. அதே சமயம் மறுபுறத்தே 'பூரணி' , 'அலை' போன்றன வெளிவந்தன. அக்காலகட்டத்தில் இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களிற்கெதிராக நிறைய விமரிசனங்கள் வெளிவந்தன. 'கலை கலைக்காக என்ற விமரிசனக் கோட்பாடு ஒரு புதிய வடிவத்தை எடுக்கத் தொடங்கியது. அது எத்தகைய வடிவமென்றால்...'மார்க்ஸியத்தை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் உங்கள் படைப்புகளில் அழகியல் போதாது' என்றார்கள். அதாவது 'கலை கலைக்காக' என்பதன் புது வடிவம் தானிது. 'மார்க்கிஸியத்தை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் உங்கள் படைப்புகளை நிராகரிக்கப் போகின்றோம்' என்பது போன்ற போக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் எமக்குக் 'குமரன்' எழுத்துகளுடன் அவ்வளவு உடன்பாடு இருக்கவில்லை. அதன் கலாபூர்வமான வெளிப்பாடு போதாது. பிரச்சாரத் தன்மையாகத் தெரிகிறதென எம்மில் பலபேர் நினைத்தார்கள். இந்நிலையில் புதியதொரு சஞ்சிகையினை வெளியிடவேண்டிய தேவையிருந்தது. அதற்காகத்தான் 'தீர்த்தக்கரை'யென்ற சஞ்சிகையினை முக்கியமாக வெளிக்கொணர்ந்தோம். பல கூறுகள் ஒன்றாக இணைந்திருக்கலாம். இது ஒரு கூறு. இன்னும் பல வேறு கூறுகள் இருந்திருக்கலாம். அதாவது 'தீர்த்தக்கரை'யின் தோற்றத்திற்கான கூறுகளைக் கூறுகின்றேன். உதாரணமாக மலையகச் சமூக உருவாக்கம், இனத்துவ அடையாளங்கள் போன்றவற்றைக் கூறலாம்.

நண்பர்கள் எல்லோருக்கும் பாரதியாருடன் கூட நெருக்கம். பாரதியைப் பெரிதும் மதிப்பவர்கள். இந்த இணைப்புகள் பற்றிய கேள்விகள், மலையக யதார்த்ததை எந்த அளவிற்கு வேலுப்பிள்ளைக்குப் பிறகு படைப்பாளிகள் முன்வைத்தார்கள் என்பன போன்ற கேள்விகளெல்லாம் எம்மிடையே எழுந்தன. இவையெல்லாம் , இக்காரணங்களெல்லாம் ஒன்றாகச் சேர்ந்ததனால் ஒரு சஞ்சிகை தேவையென்ற கருத்து உருவாயிற்று. 'கால நிர்ப்பந்தமா?' என நீங்கள் கேட்கலாம். ஆம். கால நிர்பந்தம்தான் காரணம். ஆனால், கால நிர்ப்பந்தமென்பது மலையகமென்றதொரு யதார்த்தத்திற்குள் மட்டும் எல்லைப்படுத்தப் படவில்லை. பல்வேறு கூறுகள் அதனைத் தீர்மானித்தன். நிர்ப்பந்தித்தன.

வ.ந.கி: அண்மைய ஈழத்து மலையக இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ஒரு விழிப்புணர்வினைக் காண முடிகின்றது. பல எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் மலையகத்தின் பங்களிப்பைப் பல பத்திரிகைகளில் வெளிப்படுத்தி வருகின்றார்கள். மு.நித்தியானந்தனைக் குறிப்பிடலாம். 'மலையகச் சிறுகதைகள்', 'தீர்த்தக்கரைச் சிறுகதைகள்' போன்ற காத்திரமான சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. பொதுவாக, அண்மையில் ஈழத்திலிருந்து வெளிவந்த தமிழ்ப் படைப்புக்களுடன் ஒப்பிடுகையில் மேற்படி மலையகப் படைப்புக்கள் சற்று காத்திரமானவையாகத் தென்படுகின்றன. மலையகத் தமிழ் இலக்கியம் ஒருவிதமான உற்சாக நடை ப்போடுவதாகத் தெரிகின்றது. இது பற்றி என்ன நினக்கின்றீர்கள் ஜோதி?

ஜோதிகுமார்: மலையக இலக்கியம் மாத்திரம் மற்றையவற்றுடன் ஒப்பிடும்பொழுது உற்சாகமாகவுள்ளதென்பதை ஏற்றுக் கொள்வது கஷ்ட்டம். மலையக இலக்கியத்திலும் இருவகையான போக்குகளையும் காணலாம். உற்சாகமான போக்கும் உண்டு. உற்சாகம் குன்றிய போக்கும் உண்டு. மலையகத்தில் சில போக்குகள் உள்ளன. அதாவது இன்றைய இலக்கியத் தளத்தில் நடக்கின்ற எல்லா முரண்பாடுகளையும் உள்வாங்க முடியாததொரு நிலைமை காணப்படுகிறது. இன்றைய தமிழ் இலக்கியம் எந்தெந்த நெருக்கடிகளினூடாக வந்து சேர்ந்துள்ளது? இன்று இருக்கின்ற இலக்கியத் தளத்தில் காணப்படுகின்ற முரண்களுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறதா? முரண்களின் தொடர்ச்சியா? இவற்றின் சாராம்சத்தை உள்வாங்க முடியாததன்மை மலையகத்தில் இருக்கிறது. அதாவது மலையகத்தின் சில இலக்கியப் போக்குகளிலுள்ளன. அதே சமயத்தில், எல்லாவற்றையும் மிகக் கவனமாக ஆராய்ந்து, அவதானித்து அதன் சாராம்சத்தைப் புரிந்து, அதன் நிலையைச் சரியாக வரையறை செய்து, அதற்கூடாக ஒரு காத்திரமான இலக்கியப் போக்கினை அடுத்தபடிக்கு முன்னெடுக்கும் தன்மையும் காணப்படுகின்றது. எனவே இரண்டு அம்சங்களுமுள்ளன. இது தவிர, மலையகம் என்று ஜீவிக்கும் நிலை, அதனுடைய இருப்பு- அதாவது அது ஒரு சமூகவியற் கேள்வி- அது எத்தகையதொரு ஜீவனை இவர்களுக்குள் செலுத்துகிறது? இவையெல்லாம் சேர்த்துத்தான் உற்சாகம், உற்சாகமின்மை இவற்றிற்கெல்லாம் தலைமை வகிக்கின்றன. உதாரணமாக, முக்கியமாக நான் கூறுவதென்னவென்றால்... ஒரு கட்டத்தில் வடக்கில் நல்ல கவிஞர்கள் தோன்றினார்கள். ஜெயபாலன் எனக்கு மிகவும் பிடித்த கவிஞன். அவருடையதொரு கவிதை வன்னியைப் பற்றியது. 'எங்கள் மண்ணும் எங்கள் முகமும்' என்ற கவிதை. அதிகமாக அதுபோன்ற கவிதைகள் தமிழில் தோன்றவில்லையென்று கூறலாம். 'பாஞ்சாலி சபதம்' மாதிரி சில நெடுங்கவிதைகளைப் பற்றிக் கதைக்கக் கூடும். ஆனால் அதுமாதிரியொரு நெடுங்கவிதை இங்கு இன்னொரு தளத்தில், இன்னொரு பரிமாணத்தில் வந்திருக்கிறது. இதனுடைய தோற்றத்தைக் கவனமாக ஆய்வு செய்தால்.. அங்கேயும் அந்த புத்தி ஜீவிகளை, நடுத்தர வர்க்கத்தவர்களை, ஒரு வரலாற்றுக் கட்டம் அப்படியே தூக்கி மக்கள் மத்தியில் வீசியுள்ளது. 'மக்கள் மத்தியில் போய்ப் படித்து வா' என்பது போல். எல்லா விழுப்பாடுகளையும் கடந்து போய், அவர்கள் எல்லாவற்றையும் தொட்டு, உணர்ந்து, கிரகித்து, உள்வாங்கி வந்து கவிதை படிக்கும் போது அது இயற்கையை நேசிக்கிறதாகவிருக்கு; வாழ்க்கையை நேசிக்கிறதாகவிருக்கு; மக்களை நேசிக்கிறதாகவிருக்கு; மக்கள் அவர்களை நேசிக்கிறதாகவிருக்கு. இப்படிப் பல பரிமாணங்கள் கொண்ட படைப்புக்களை அவர்கள் உருவாக்குகின்றார்கள். அது பாரதியாகவிருக்கட்டும், ஜெயபாலனாகவிருக்கட்டும். ஆகவே, இந்தப் போக்கு, அதாவது இத்தகைய புத்திஜீவிகளை, மத்தியதர வர்க்கத்தினரைத் தூக்கி வாழ்க்கையினுள் வீசி, அலைய வைத்து அப்படியே கொண்டு வந்து திரும்பவும் சேர்க்கின்ற போக்கு...

வ.ந.கி: ஒருவித அக்கினிப் பிரவேசம்...

ஜோதிகுமார்: ஆம. இந்தப் போக்கு வடகிழக்கில் இருக்கு. இன்றைக்கு இத்தகைய போக்கு தமிழகத்தில் இல்லை. ஒப்பீட்டளவில், விகிதாசாரத்தில் ஜெயபாலன் போன்றவர்களின் இத்தகைய பண்பு கூடும் பொழுது உற்சாகமான இலக்கியங்கள் வந்து சேரும். அவற்றின் தாக்கங்கள் மறைமுகமாகவிருக்கலாம். நேரடியாகவிருக்கலாம். ஓர் எழுத்தை, கலைஞனை இத்தகைய சமூகவியற்காரணிகளே உருவாக்குகின்றன. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது தற்போது மலையகத்தில் நிலவும் சூழலினை, காரணிகளினைக் கவனத்திலெடுக்க வேண்டியுள்ளது.

வ.ந.கி: மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றி மறுமலர்ச்சிக் காலகட்ட எழுத்தாளர்களான அ.செ.மு, அ.ந.கந்தசாமி போன்றோர் சிறுகதை படைத்திருக்கின்றார்கள். இவ்விதம் மலையகத்தைச் சேராதவர்களின் மலையகம் பற்றிய படைப்புக்களைப் பதிவு செய்வதுண்டா?

ஜோதிகுமார்: அவர்களுடைய படைப்புக்களை நிச்சயம் பதிவு செய்ய வேண்டும். என்ன காரணமென்றால்...? மலையக இலக்கியமென்னும்போது இவையெல்லாம் உள்ளடங்க்கிதானுள்ளது. அதுதான் மலையக இலக்கியத்தின் வளர்ச்சி. இதனை விளங்கிக் கொள்வது வரப்போகும் எழுத்தாளர்களுக்கு மிகவும் முக்கியமானது. இரண்டாவது, அவர்களது பங்களிப்பை அறிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது என்னவென்றால்... மலையகத்தைச் சாராத எழுத்தாளர்கள் கூட எவ்விதம் மனித நேயத்துடன் அணுகியிருக்கின்றார்கள்? அவ்விதம் அம்மனித நேயத்தை வெளிப்படுத்தும் போது எவ்வளவு தூரம் அதில் வெற்றி அடைந்திருக்கின்றார்கள்? என்ற கேள்விகளெல்லாம் எழும். அப்படியொரு கோணத்திலிருந்து பார்க்கும்போது கூடப் பதிவு செய்தலென்பது மிகவும் முக்கியமானதாகின்றது.

வ.ந.கி: இவ்விதம் பிற பிரதேசங்களைச் சேர்ந்த படைப்பாளிகளின் மலையகம் பற்றிய படைப்புக்கள் எவ்வளவு தூரம் வெற்றிகரமாக அமைகின்றன?

ஜோதிகுமார்: நீங்கள் என்ன கேட்கின்றீர்களென்றால்... எழுதலாமா? கூடாதா? என்பதைத்தானே? தலித்திலக்கியத்தைப் பொறுத்த வரையில் எழுதக் கூடாதென்கின்றார்கள். என்ன காரணமென்றால்.. பிரச்சினையைப் பிழையாக வெளிப்படுத்துகின்றார்கள் என்ற நோக்குத்தான். எங்களைப் பொறுத்தவரையில்... யாரும் எழுதலாம். ஏனென்றால், அது ஏகபோக சொத்தல்ல. பிழையாக எழுதினால் அதற்கான விமர்சனமும் வெளிவரும். ஆனால், விஷயம் என்னவென்றால்.. இவ்விதம் வெளியிலிருந்து வந்து எழுதும்போது, மலையக மக்கள் என்னும் சமூகத்தின் உள் விதிமுறைகளை, அதாவது அச்சமூகத்தின் வாழ்வைத் தோற்றுவிக்கும் அந்த நெளிவு சுளிவுகளை, சிலவேளை இவ்விதம் வெளியிலிருந்து வரும் எழுத்தாளர்கள் விட்டு விடுகின்றார்கள். மேலோட்டமாக அவதானிப்புக்களை எழுத முற்படுகின்றார்கள். உதாரணமாக, வெளியிலிருந்து பலர் அட்டைகளைப் பற்றி அதிகம் எழுதியிருக்கின்றார்கள். ஆனால் வேலுப்பிள்ளையைப் பொறுத்தவரையில் அட்டையைப் பற்றியும் ,குளிரைப்பற்றியும் எழுதினது மிகக் குறைவு. அதிலிருக்கின்ற சில, வாழ்க்கையைத் தோற்றுவித்திருக்கின்ற உன்னதங்களை, மனிதநேயங்களை- அதாவது அவர்களும் மனிதர்கள்தான் என்பதை- இறுக்கிக் காட்டுகின்ற பண்புகளைத்தான் வேலுப்பிள்ளையின் படைப்புக்களில் காணமுடியும். அதற்காக நாம் வெளிப்படைப்பாளிகள் மலையகத்தைப் பற்றி எழுதக் கூடாதென்று சொல்லக் கூடாது. ஏனென்றால் வேலுப்பிள்ளையும் மனிதர்தான். இரண்டுபேருக்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால்... வேலுப்பிள்ளை நெருங்கின அளவுக்கு மற்றவர்களால் நெருங்க முடியுவில்லை. அதற்குக் கொஞ்சக் காலம் தேவை. கூடக் Commitment தேவை. அவர்களோடு ஒட்டிப் பழகவேண்டிய , சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதொரு நிர்ப்பந்தம் தேவை. இவையெல்லாம் இருந்தால் நான் நினக்கின்றேன், அவர்களும் நல்ல இலக்கியம் செய்வார்கள். உதாரணமாக, மலையகத்திலிருந்து வந்த படித்தவர்கள் சிலர் அந்த மக்களிடமிருந்து அன்னியப்பட்டு விட்டார்கள். படித்தவர்களின் இத்தகைய அன்னியப்பட்டுப் போகின்ற தன்மையும் மலையகத்திலுண்டு. அதற்கு நிறைய சமூகவியற் காரணிகளுண்டு. ஒரு காரணம்.. நிலம் சொந்தமில்லை. இவ்விதம் அன்னியப்பட்டவர்களும் மலையகத்தைப் பற்றி எழுதும்போது குளிர், அட்டையென்று எழுதிய கதைகளுமுண்டு. ஆகவே இவ்விரண்டு வகையினருக்குமிடையில் பெரியதொரு வித்தியாசத்தைப் பார்க்கின்றேன். நாங்கள் சொல்லக் கூடுவதென்னவென்றால்.. அது எந்த மக்களாகவுமிருக்கலாம். மலையகம் மட்டுமல்ல அது வடகிழக்கு மக்களாகவுமிருக்கலாம். வடக்கு கிழக்கு மக்களைப் பற்றி எழுதும்போது கூட அப்பகுதி எழுத்தாளர்கள் எவ்வளவுதூரம் அம்மக்களுடன் உண்மையில் நெருங்குகின்றார்கள்... அம்மண்ணின் ஆழ வேரோடு எப்படி அவர்கள் ஆழமாகப்போய்ப் பின்னிப் பிணைகின்றார்கள்... இவையெல்லாம் கேள்விகள். அந்த அளவுக்கு நீங்கள் போகும் போதுதான் அனுபவங்கள் உங்கள் இதயம் பூராவும், உங்கள் சிந்தனைபூராவும், 'சித்தமும் நீயே , சிந்தனையும் நீயே' என்பது போல் ஒன்றாக ஒட்டி வருகின்றன. அப்படி ஒட்டி வருகையில்தான் எழுத்து வந்து வனப்பாக விழுகின்றது. வனப்பு என்று சொல்லும்போது.. வாழ்க்கையில் நம்பிக்கையும், மக்கள் மேல் நேயமும் இவையெல்லாம் ஒத்து வருகின்றன. அதுதான் தேவை. பிரித்துச் சொல்ல முடியாது. நீ எழுது அல்லது நீ எழுதாதே என்று சொல்லுவது தப்பு என்று நினைக்கின்றேன்.

வ.ந.கி: இலக்கியத்தில் அழகியலின் பங்களிப்பு பற்றி உங்கள் எண்ணம் என்ன?

ஜோதிகுமார்: அழகியல் பற்றி நிறைய விவாதிக்கப்பட்டிருக்கு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அளவுகோல் வைத்திருக்கின்றார்கள். இந்த அளவுகோலிறு ஒரு சமூகவியற் பின்னணி, நிலைப்பாடு இருக்கின்றதைக் கண்டு கொள்ளலாம். அழகியல் என்பது உள்ளடக்கத்துடனும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டது. உதாரணமாக, தாஸ்தவாஸ்கியை எடுத்தால் அவர் நல்ல தேர்ச்சி மிக்க ஓர் எழுத்துக் கலைஞர். அவரது எழுத்துத் திறனில் அழகியலை எடுத்தீர்களென்றால்... எந்தவொரு குறையும் காணமுடியாது. உள்ளடக்கத்தை எடுத்தீர்களென்றால்.. கோர்க்கி சொல்லுவார்: 'புண்களை உயர்த்திக் காட்டுவதற்கு ஒருவனுக்கு உரிமையில்லை' என்று. அது அந்தரங்கமானது. அது ஒரு நிராகரிக்க வேண்டிய தன்மை அப்படியென்று அவர் சொல்லுவார். ஆகவே அழகியல் என்பது பல்வேறு தளங்களிலை இருக்கு. ஒரு தளம் எழுத்துத் திறன், இன்னொரு தளம் அதனுடைய உள்ளடக்கம். இன்னுமொரு தளம் இருக்கு. அது எத்தகையதொரு பாதிப்பை மனிதரில் ஏற்படுத்துகின்றது என்பது. சோகமா? அவலமா? கோபமா? அதனுடைய இறுதி விளைவென்ன? அப்படியென்கிற ஒரு கேள்வியையும் கணக்கிலெடுத்து அழகியல் சம்பந்தமாக நோக்க வேண்டும்.

வ.ந.கி: இலக்கியத்தில் அழகியலின் பங்களிப்பு பற்றி உங்கள் எண்ணம் என்ன?

ஜோதிகுமார்: அழகியல் பற்றி நிறைய விவாதிக்கப்பட்டிருக்கு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அளவுகோல் வைத்திருக்கின்றார்கள். இந்த அளவுகோலிற்கு ஒரு சமூகவியற் பின்னணி, நிலைப்பாடு இருக்கின்றதைக் கண்டு கொள்ளலாம். அழகியல் என்பது உள்ளடக்கத்துடனும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டது. உதாரணமாக, தாஸ்தவாஸ்கியை எடுத்தால் அவர் நல்ல தேர்ச்சி மிக்க ஓர் எழுத்துக் கலைஞர். அவரது எழுத்துத் திறனில் அழகியலை எடுத்தீர்களென்றால்... எந்தவொரு குறையும் காணமுடியாது. உள்ளடக்கத்தை எடுத்தீர்களென்றால்.. கோர்க்கி சொல்லுவார்: 'புண்களை உயர்த்திக் காட்டுவதற்கு ஒருவனுக்கு உரிமையில்லை' என்று. அது அந்தரங்கமானது. அது ஒரு நிராகரிக்க வேண்டிய தன்மை அப்படியென்று அவர் சொல்லுவார். ஆகவே அழகியல் என்பது பல்வேறு தளங்களிலை இருக்கு. ஒரு தளம் எழுத்துத் திறன், இன்னொரு தளம் அதனுடைய உள்ளடக்கம். இன்னுமொரு தளம் இருக்கு. அது எத்தகையதொரு பாதிப்பை மனிதரில் ஏற்படுத்துகின்றது என்பது. சோகமா? அவலமா? கோபமா? அதனுடைய இறுதி விளைவென்ன? அப்படியென்கிற ஒரு கேள்வியையும் கணக்கிலெடுத்து அழகியல் சம்பந்தமாக நோக்க வேண்டும்.

வ.ந.கி: ஆக அழகியல் முக்கியமென்று கூறுகின்றீர்கள்?

ஜோதிகுமார்: மிகவும் முக்கியம். சுலோகத்தன்மையுடன் எழுதக் கூடாது. அழகியல் தன்மையுடன் கலாபூர்வமாகவிருக்க வேண்டும். அது சரி, அதனை ஏற்றுக் கொள்கின்றேன். அப்புறம் கலாபூர்வமான வெளிப்பாடென்று புறப்பட்டால்.. இன்னும் நிறையப் பிரச்சினைகள் இருக்கு...

வ.ந.கி: இலக்கியப் படைப்பு கலாபூர்வமாகவும் அதே சமயம் சமுதாயப் பயன்பாடு மிக்கதாகவுமிருக்கவேண்டும்?

ஜோதிகுமார்: அப்படிச் சொல்லலாம். ஆனால், அதே சமயத்தில்... அந்த எழுத்து இசைக்கும் நாதமென்ன? அதனுடைய இராகமென்ன? அவலமா? அதன் சமூகவியற் கண்ணோட்டமென்ன? என்பன நோக்கப்பட வேண்டும். மனிதரைப் பற்றிய அதனுடைய சாராம்சம், அது இசைக்கின்ற இராகத்தின் சாராம்சம், அவல கீதமாக இருந்தால் அதனை நிராகரிக்க வேண்டும்.

வ.ந.கி: ஒரு படைப்பாளியை அவருடைய படைப்புக்களினூடு ஆராய வேண்டுமென்று ஒரு சாராரரும், அவரது வாழ்க்கைப் பின்னணியில் அவருடைய படைப்புக்களை ஆராயவேண்டுமென்று இன்னொரு சாராரும் கூறுகின்றார்களே. இது பற்றிய உங்களது கருத்தென்ன?

ஜோதிகுமார்: ஒரு படைப்பு மாத்திரம்தான் சமூகப் பெறுமானத்தைப் பெறுகின்றது. அது மாத்திரம்தான் சமூகத்திற்காக கொடுக்கப்படுகின்றது. படைப்பாளி தன்னைக் கொண்டுவந்து நிறுத்தவில்லை என்னை விமர்சியென்று. அவரொரு அரசியல்வாதி மாதிரிப் பிரகடனம் செய்யவில்லை. தன் படைப்பை மட்டும்தான் சமூகத்தின் முன்னால் வைக்கின்றார். ஆகவே, அந்தப் படைப்பு எழுத்தில் வரும்போது எங்களுக்கொரு உரிமை இருக்கு அதனை விமரிசிக்க. ஆகவே அத்துடன் விடுவது நல்லதென நினக்கின்றேன். அது ஒரு பக்கம்... இரண்டாவது பக்கமென்னவென்றால்.. ஒரு படைப்பைப் படிக்கையில் அதிலிருக்கின்ற நேர்மையை நாம் உணர்ந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. அது உண்மையான படைப்பா? செய்யப்பட்டதொரு படைப்பா? ஓர் இயல்பானதொரு தோற்றமா? இயல்பானதொரு சிருஷ்ட்டியா? Genuine Creationஆ... இல்லையாயென்பதை உணர்ந்து கொள்ளலாம். உதாரணமாகப் பல கவிதைகள் வெளி வருகின்றன. ஆனால் பாரதியின் கவிதைகளில் அதிக ஓளியிருப்பது எல்லோருக்கும் தெரியும். அதிக உண்மையிருப்பது எல்லொருக்கும் தெரியும். அதிலிருந்து அவனுடைய வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை நாம் ஓரளவுக்கு ஊகிக்கலாம். அந்த அளவுக்கு மனித ஞானம் இன்று வளர்ந்திருக்கு. ஆகவே கட்டாயம் படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்கையைத் தேடி ஆராய வேண்டியதென்ற கட்டாயமில்லை.

அப்படியிருக்கும் போது கூடச் சிலர் ஆராய்ச்சி செய்திருக்கின்றார்கள். தனிப்பட்ட வாழ்க்கையை - ஒவ்வொருத்தரும் தமது தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய முடியாமலிருக்கும்போது- இன்னொரு மனிதருடைய வாழ்க்கையைப் பற்றி நாம் ஆராய முடியாது. அதிலுள்ள எல்லா முரண்பாடுகளையும் நாம் அறிய முடியாது. எங்கள் கண்களுக்குத் தெரிகின்ற சில முரண்களை நாங்கள் தூக்கிக்ப் பிடித்துக் கொள்கின்றோம். ஆகவே பிறிதொரு மனிதரின் வாழ்க்கையைப் பற்றி நாங்கள் எவ்விதம் அரைகுறையாக ஆய்வு செய்து சொல்வது? அது சரியா? அது தர்மமா? இல்லை. முதலாவது இத்தகைய விமர்சனப் போக்கே தர்மமற்றது. இரண்டாவது.. சரி அப்படியே ஏற்றுக் கொண்டாலும் எவ்விதம் படைப்பாளியைப் பற்றி முழுதும் கூற முடியும்?

நன்றி: பதிவுகள்.

12. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!
- வ.ந.கிரிதரன் -

மந்திரிமனையின் முகப்புசிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார். கலாநிதி புஷ்பரட்ணமோ கலாநிதி குணராசாவின் நூல்களை தனது சிங்கை நகர் வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகக் குறிப்பிடுவார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையிலும் கூட சிங்கை நகர் என்னும் பெயர் வந்ததற்கான காரணம், மற்றும் சிங்கை நகரின் தோற்றத்திற்கான காலகட்டம் ஆகியவற்றில் மாறுபட்ட குழப்பகரமான கருத்துகளே நிலவுகின்றன. இக்கட்டுரையில் இவர்களிருவரினதும் சிங்கைநகர் பற்றிய கருதுகோள்களில் காணப்படும் வலுவிழந்த தன்மைபற்றி சிறிது ஆராய்வோம். பின்னுமோர் சமயம் இது பற்றி மேலும் விரிவாக ஆய்வோம். கலாநிதி புஷ்பரட்ணத்தின் தர்க்கத்தில் காணப்படும் முரண்பாடுகள் சிங்கை நகர் பற்றிய சுவாமி ஞானப்பிரகாசர் மற்றும் முதலியார் செ.இராசநாயகம் ஆகியோரின் சிங்கைநகர் பற்றிய கருதுகோட்களுக்கே வலுசேர்ப்பதாக அமைகின்றன என்பது அடியேனின் நிலைப்பாடு.

சிங்கை நகர் பற்றிய கலாநிதி குணராசா பின்வருமாறு கூறுவார்: "... உக்கிரசிங்கன் புதிய தலைநகர் ஒன்றினைத் தன் இராச்சியத்தில் உருவாக்க விரும்பி வன்னிப் பிரதேசத்தில் திக் விஜயம் ஒன்றினை மேற்கொண்டான். அவன் வன்னி மார்க்கமாகச் செல்லுகையில் வன்னியர்கள் ஏழுபேரும் எதிர்கொண்டு வந்து வன்னி நாடுகளைத் திறை கொடுத்து ஆள உத்தரவு கேட்டார்கள். உக்கிரசிங்கன் அதற்குச் சம்மதித்தான். அப்பிரதேசத்தில் அவன் உருவாக்கிக் கொண்ட தலைநகர் சிங்கை நகராகும்..." (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை'- க.குணராசா; பக்கம் 59).

வன்னியர்கள் வாழ்ந்த பகுதி அடங்காப்பற்று என அழைக்கப்பட்டது. இதற்குரிய முக்கிய காரணங்களிலொன்று வன்னிச் சிற்றரசர்கள் பலதடவைகள் யாழ்மன்னர்களுட்பட ஏனைய மன்னர்களுக்கு அடங்காமல் வாழ்ந்தவர்கள் என்னும் கூற்று. சில சமயங்களில் யாழ்மன்னர்களுக்கெதிராகக் கலகங்களையும் தூண்டி விட்டுள்ளதை யாழ்ப்பாண வைபவமாலை (யாழ்ப்பாணவைபவமாலை, முதலியார் குலசபாநாதன் பதிப்பு; பக்கம் 37-40) விபரிக்கும். மேலும் பழைய வரலாற்று நூல்களில் பூநகரி, பல்லவராயன் கட்டு போன்ற வன்னிப் பகுதிகளை 'வெளிநாடு' (யாழ்ப்பாணவைபவமாலை: பக்கம் 29) என்றுதான் அழைத்துள்ளார்கள். இவ்விதமான வெளிநாடொன்றிற்கு, அதிலும் அதிக அளவில் எதிர்ப்புச் சூழல் நிலவியதொரு இடத்துக்கு எதற்காக இராஜதானி கதிரைமலையிலிருந்து மாற்றப்பட்டது?

"...சிங்கை நகர் என்ற பெயர் கலிங்கநாட்டு நகரங்களுள் ஒன்றாகிய ஸிங்கபுரத்தின் தொடர்புடைய பெயர் என்று கொள்ள இடமுண்டு.... சிங்கை நகர் என்ற பெயர், முதன் முதல் கதிரைமலையிலிருந்து தலைநகரை வேறிடத்திற்கு மாற்றிப் புதிய தலைநகர் ஒன்றினை உருவாக்கிய உக்கிரசிங்கனின் பெயரைத் தாங்கி சிங்க(ன்) நகர் என விளங்கியிருந்தது எனக் கொள்வதே சாலப் பொருத்தமானது." (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை'- க.குணராசா; பக்கம் 59) என்பார் க.குணராசா. இதுபற்றிய கலாநிதி புஷ்பரட்ணத்தின் கருதுகோள் வேறானது. அவர் சோழரே சிங்கைநகரென்னும் பெயர் ஏற்படக் காரணமென்பார்: " ...இப்பெயர் ஒற்றுமை கூடக் கலிங்கநாட்டுச் சிங்கபுரத்தொடர்பால் நேரடியாக வட இலங்கைக்கு வந்ததெனக் கூறுவதைவிடத் தமிழகத்துடனான தொடர்பால் வந்ததெனக் கூறுவதே பொருத்தமாகத் தோன்றுகிறது. ஏனெனில் தமிழகத்திலும் இப்பெயர் நீண்டகாலமாகப் புழக்கத்திலிருந்து வந்துள்ளது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் சந்திராதித்ய காலச் செப்பேடு சிங்கபுர என்ற இடத்தில் இவன் அமைத்த ஆலயம் பற்றிக் கூறுகிறது....... அதே போல வட இலங்கையை வெற்றி கொண்ட முதலாம் பராந்தக சோழன் கால இரு நகரங்கள் சிங்கபுரம், சிங்கபுரநாடு என்ற பெயரைப் பெற்றிருந்தன. அத்துடன் கொங்கு மண்டலத்திலுள்ள காங்கேயநாடு சோழர் ஆட்சியின்போது சிங்கை என்ற இன்னொரு பெயரையும் பெற்றிருத்தது. இச்சிங்கை நாட்டு வேளாளத் தலைவர்களுக்கு சோழர்கள் இட்ட மறுபெயர் சிங்கைப் பல்லவராயர் என்பதாகும். இவர்கள் சோழருடன் இணைந்து இலங்கை நாட்டுடனான அரசியலிலும், படையெடுப்புக்களிலும், வர்த்தகத்திலும் ஈடுபட்டதற்குப் பல சான்றுகள் உண்டு.." (நூல்: தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு - ப.புஷ்பரட்ணம்; பக்கம் 183)

முதலியார் இராசநாயகம் 'கோட்டகம' கல்வெட்டில் 'பொங்கொலி நீர்ச் சிங்கை நகராரியன்' எனக் குறிப்பிட்டிருப்பதைக் காரணம் காட்டி அதற்குரிய பிரதேசமாக வல்லிபுரமே அவ்விதமான துறைமுகப் பொலிவுள்ள நகரென்று கருதுவார். ஆனால் கலாநிதி க.குணராசாவோ இது பற்றிப் பின்வருமாறு கூறுவார்: "....யாழ்ப்பாணக் கடனீரேரி அன்று பொங்கு கடலாகவே விளங்கியது....." (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை'- க.குணராசா; பக்கம் 60) பதினான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த சம்பவத்தைக் கூறுவது கோட்டகம கல்வெட்டு. இக்காலகட்டத்தில் கலாநிதி க.குணராசா குறிப்பிடுவது போல் யாழ்ப்பாணக் கடனீரேரி பொங்கு கடலாக இருந்ததா என்பது சந்தேகத்திற்குரியது. இதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்னரே மாந்தை கூடத் தன் முக்கியத்துவத்தினை இழந்து விட்டது. பொங்கு கடலாகவிருந்த யாழ்ப்பாணக் கடனீரேரி மிக விரைவாக அதன் இன்றைய நிலைக்கு மாறி விட்டதா?

இவ்விடத்தில் முதலியார் இராசநாயகத்தின் இவ்விடயம் சம்பந்தமான கருதுகோள்களை ஆராய்வதும் பயனுள்ளதே. இவரது 'யாழ்ப்பாணச் சரித்திரம்' பண்டைய யாழ்ப்பாணம் பற்றி விபரித்தபடியே தொடங்குவது குறிப்பிடத்தக்கது. அதில் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது:"இப்போது குடாநாடாக விருக்கும் யாழ்ப்பாணம், முன்னொரு காலத்தில் அதாவது கிறிஸ்துவுக்கு அநேக ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே, இரண்டு தீவுகளாகவிருந்தது. மேற்கே நாகதீவம், மணிநாகதீவம், மணிபுரம், மணிபல்லவம் என்னும் நாமங்களால் வழங்கபப்பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமைத் முல்லைத்தீவு, எருமைதீவு என்று பெயர்பெற்ற சிறுதீவும் ஆக இரு பிரிவாக இருத்தது. காலந்தோறும் பூகம்பங்களினாலும், பிரளயங்களினாலும் அழிக்கப்பட்டு, மேற்கே ஒன்றாயிருந்த பெருந்தீவகம் பலதீவுகளாகப் பிரிக்கப்பட்டது. காரைதீவு, வேலணை, மண்டைதீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு முதலிய தீவுகளும், வலிகாமமும் அப்பெருந்தீவகத்தின்பகுதிகளேயாம். அவ்வாறே கிழக்கே ஒன்றாகவிருந்த சிறுதீவகம் களப்புக் கடலால் வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளியென்னும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. பண்ணைக்கடல், பூநகரிக்கடல், யானையிறவுக்கடல் என்னுங் களப்புக்கடல்கள் முன்னே வங்காளக்குடாக்கடலுடன் சேர்ந்து, ஆழமும் அகலமும் உள்ளனவாயிருந்தன; அன்றியும் மேலைத்தேசங்களிலும், சீனம் முதலிய கீழைத்தேசங்களிலுமிருந்து போக்குவரவு செய்யுங் கப்பல்களுக்குப் பெரும் வழியாகவும், சோளகம் வாடைக்காற்றுக்கள் தொடங்குங் காலங்களில் உண்டாகும் புயல்களுக்கு, அக்கப்பல்களின் ஒதுக்கிடமும் உறைவிடமுமாகவும் இருந்தன" ('யாழ்ப்பாணச்சரித்திரம்'; பக்கம்1-2). இவ்விதமாகவிருந்த நிலை காலப்போக்கில் மாறி யாழ்ப்பாணக்குடாநாடு உருவாகியதற்குக் காரணங்களாக வங்காளக்குடாக்கடலின் அலைகளால் ஒதுக்கப்படும் மணற்றிரளினையும், வடக்கில் முருகைக்கற்பூச்சினால் உண்டாக்கப்படும் கற்பாறைகளையும், தெற்கிலிருந்து சோளகக்காற்றினால் கொண்டுவரப்படும் மணலினையும் சுட்டிக் காட்டுவார் முதலியார் இராசநாயகம்.

மேலும் இவரது ஆய்வின்படி கி.மு முதலாம் நூற்றாண்டிலிருந்து , கி.பி..மூன்றாம் நூற்றண்டுவரையில் மாதோட்டம் புகழ்மிக்க துறைமுகமாகவிருந்தது. கிரேக்கர், ரோமர் மற்றும் அராபியர்கள் எனப்பலர் மாதோட்டத்துறைமுகத்து தமது கீழைத்தேய வியாபாரநிமித்தம் வந்து போயினர். மன்னாரிலும் ,மாதோட்டத்திலுங் காணப்படும் பெருக்குமரங்கள் அராபியர்களால் கொண்டுவரப்பட்டவையே என்பது இவரது கருத்து. மாதோட்டம் பற்றி யாழ்ப்பான இராச்சியம் பின்வருமாறு விபரிக்கும்: "அக்காலத்தில் இலங்கையின் பிரசித்த துறைமுகம் மாதோட்டம் என்னும் பெருந்துறையே. அதைப் பிரதான துறைமுகமாகக் கொண்டு வங்காளக்குடாக்கடலுக்கூடாய்க் கீழைத்தேசங்களுக்குப் போகும் மரக்கலங்களும், சீன தேசத்திலிருந்து வரும் மரக்கலங்களும் யானையிறவுக்கடலுக்கூடாகப் போக்குவரவு செய்வதுண்டு" (யாழ்ப்பாணச்சரித்திரம்'; பக்கம் 19). அக்காலகட்டத்தில் நாவாந்துறை, பூநகரி மற்றும் கல்முனை ஆகியனவும் துறைமுகங்களாக விளங்கியதாகவும், நாவாந்துறையிலிருந்து வழுக்கியாற்றின் வழியே தலைநகராயிருந்த கதிரைமலைக்கு சங்கடம் என்னுந் தோணிகளில் வியாபாரப்பண்டங்கள் ஏற்றி செல்லப்பட்டனவென்றும், இதனாலேயே நாவாந்துறைக்கு சங்கடநாவாந்துறையென்னும் பெயர் இப்பொழுதும் வழங்கிவருவதாகவும் இராசநாயகம் அவர்கள் மேலும் கருதுவார். இவ்விதமாகப் புகழ்பெற்று விளங்கிய மாதோட்டம் 'மண்ணேறிட்டிருந்தபடியால் துறை உபயோகம் அருகி, ஒன்பதாம் நூற்றாண்டளவில் கப்பல்கள் அத்துறைக்கு வருதல் முற்றாக ஒழிந்து, அதன் பின் முஸ்லீம்கள் வரத்தொடங்கிய காலத்தில் அவர்கள் நூல்களில் 'கலா'வென்றழைக்கப்பட்ட ஊராத்துறை முக்கியத்துவம் பெற்றதென்று கருதுவார் இராசநாயகம் அவர்கள்.

சி.பத்மநாதனின் மாந்தை பற்றிய கருத்தும் இத்தகையதே. 'சோழராட்சிக்குப் பிற்பட்ட காலத்தில் மாந்தை நகரம் வீழ்ச்சியுற்றது. பதினோராம் நூற்றாண்டின்பின் மாந்தைத் துறைமுகத்திற்குத் தூரதேசங்களிலிருந்து ஆழ்கடல் வழிச் செல்லும் பெருங்கப்பல்கள் வந்திருந்தமைக்குச் சான்றுகளில்லை. ஆழ்கடல் வழியான வாணிபத்தில் ஒரு பிரதானதொடர்பு நிலையம் என்ற நிலையினை இழந்தமையால் மாந்தையில் நகர வாழ்க்கை சீரழிந்தது. கி.பி.1050 ஆம் ஆண்டிற்குப் பிறபட்ட சாசனங்களிலும் இலக்கியங்களிலும் மாந்தையிலுள்ள வணிகரைப்பற்றியோ அங்கிருந்த கட்டட அமைப்புகளைப்பற்றியோ குறிப்புக்கள் காணப்படவில்லை' என்பார் அவர் (கட்டுரை: 'இலங்கை தமிழ வணிகக் கணங்களும் நகரஙக்ளும்'- சி.பத்மநாதன்; 'சிந்தனை' ஆடி 1984 இதழிலில்). கி.மு காலத்திலிருந்தே வங்காளக்கடலினூடு தூர நாடுகளுக்குச் செல்லும் கப்பல்கள் யானையிறவுக் கடலினூடு மாந்தை துறைமுகம் வழியாகப் பயணிக்க முடிந்ததால் அந்நகர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவிருந்தது. காலப்போக்கில் யானையிறவுக் கடல் மண்மேடிட்டுத் தூர்ந்ததால் அது தடைபடவே காலப்போக்கில் மாந்தை தன் முக்கியத்துவத்தினை இழந்தது.

இதேசமயம் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இபின் பதூத்தா என்னும் முஸ்லீம் பயணி ஆரிய மன்னனை இலங்கையின் சுல்தானெனவும், பல கப்பல்களுடன் விளங்கிய கடற்படையினை அவன் வைத்திருந்தது பற்றியும் தெரிவித்திருக்கின்றான். இத்தகைய மன்னனின் சிங்கை நகர் அமைந்திருக்கக் கூடிய இடம் வல்லிபுரம் போன்றதொரு பகுதியாக இருந்திருப்பதற்கே அதிகமான சாத்தியங்களுள்ளன.

இத்தகையதொரு நிலைமையில் க.குணராசா அவர்கள் 'யாழ்ப்பாணக் கடனீரேரி அன்று பொங்கு கடலாகவே விளங்கியது' என்று பொதுவாகக் கூறுவது பொருத்தமற்றதாகவே படுகிறது. கோட்டகம் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள 'பொங்கொலி நீர்சிங்கைநகர்' பூநகரியினை அண்டிய வன்னி மாவட்டத்தில் இருப்பதை வலியுறுத்துவதற்காக அவ்விதம் கூறினார் போலும். அவர் கூறுவது உண்மையானால் கடந்த எட்டு நூற்றாண்டுகளுக்குள் பொங்கு கடலாக விளங்கிய யாழ்ப்பாணக் கடனீரேரி தூர்ந்து இன்றைய நிலையினை அடைந்திருக்க வேண்டும்.

மேலும் யாழ்பாடி பற்றிய யாழ்ப்பாண வைபவமாலையின் கூற்றினைக் குறிப்பிடும் கலாநிதி க.குணராசா பின்வருமாறு குறிப்பிடுவார்: "...கண்தெரியாத ஒரு யாழ்ப்பாடிக்கு இசைக்குப் பரிசாகத் தனது இராச்சியத்திற்கு வடக்கே இருந்து ஒரு மணல் வெளியே தமிழ்மன்னன் ஒருவன் பரிசளித்ததாகக் கூறும் இச்சம்பவத்தின் உண்மை பொய் எவ்வளவு என்பதை ஆராய்வதைவிடுத்து மணல் வெளியாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணம் வடக்கேயிருந்தது என்றால், அதைப் பரிசாகத் தந்த மன்னன் இருந்தவிடம் தென்நிலப்பரப்பாக இருந்தது என்பது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதே.." ((நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை'- க.குணராசா; பக்கம் 62). இது பற்றிய கலாநிதி ப.புஷ்பரட்ணத்தின் கூற்றும் இத்தகையதே.

"... இதில் சிங்கை நகருக்கு வடக்கிலுள்ள நாடு மணற்றிடர் எனக் கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் என்னும் பெயர் 15ஆம் நூற்றாண்டில் ஏற்படும்வரை இதும்மணற்றி, மணவை, மணற்றிடர் என அழைக்கப்பட்டதற்கு ஆதாரங்களுண்டு....... இதில் வடக்காகவுள்ள இப்பிராந்தியத்தை சிங்கையில் இருந்து ஆட்சிபுரிந்த மன்னன் யாழ்ப்பாணனுக்கு வழங்கினான் எனக் கூறுவதிலிருந்து யாழ்ப்பாணத்திற்குத் தெற்காக சிங்கையிருந்தது தெரிகிறது. இங்கே யாழ்ப்பாணத்திற்குத் தெற்காக வன்னிப் பிராந்தியமே இருப்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளத்தக்கது..." (நூல்:'தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு'- ப.புஷ்பரட்ணம்; பக்கம்: 168). உண்மையில் இவர்களிருவரும் கூறும் யாழ்ப்பாண வைபவமாலையில் ".... அரசன் அதைக்கேட்டு மிகுந்த சந்தோசம் கொண்டு அவனுக்குப் பரிசிலாக இலங்கையின் வட திசையிலுள்ள மணற்றிடர் என்னும் நாட்டைக் கொடுத்தான்.."(நூல்: 'யாழ்ப்பாண வைபவமாலை' - மயில்வாகனப்புலவர், முதலியார் குலசபாநாதன் பதிப்பு; பக்கம்:24) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.. சிங்கை நகருக்கு வடக்கிலுள்ள நாடு மணற்றிடரென்று கூறப்படவில்லையே. 'இலங்கையின் வட திசையிலுள்ள மணற்றிடர்' என்றுதானே கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடதிசையில்தானே யாழ்ப்பாணமுள்ளது. இதிலென்ன ஆச்சரியம்? சிங்கை நகரிலிருந்து ஆண்ட மன்னன் இலங்கையின் வடக்கிலுள்ள மணற்றிடரென்பதை ஏன் கலாநிதி குணராசாவும், கலாநிதி புஷ்பரட்ணமும் சிங்கை நகருக்கு வடக்கிலென்று வலிந்து பொருள்கண்டார்கள்? இலங்கை என யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிடப்படுவதை கலாநிதி குணராசாவும், கலாநிதி புஷ்பரட்ணமும் சிங்கைநகரினைக் குறிப்பதாகக் கருதுகின்றார்களா? ஏன்?

இவற்றையெல்லாம் பார்க்கும்போது சிங்கைநகர் பூநகரிப்பகுதியில் இருந்திருக்கலாமென்று ப.புஷ்பரட்ணம் மற்றும் க.குணராசா ஆகியோர் கருதுவது காத்திரமான வாதமாகப் படவில்லை. மேலும் யாழ்பாடி கதையினை ஆதாரம் காட்டும் அவர்கள் அதில் யாழ்ப்பாணத்தை (மணற்றிடர்) சிங்கை நகருக்கு வடக்கிலுள்ளதொரு நகராக வலிந்து பொருள்கண்ட விதமும் எப்படியாவது தங்களது 'சிங்கை நகர் பூநகரிப் பகுதியிலிருந்துள்ளதென்ற' கருத்தினை எப்படியாவது நிறைவேற்றவே அவர்கள் முனைந்துள்ளார்களோவென்ற ஐயத்தினை ஏற்படுத்துகிறது. மேலும் ப.புஷ்பரட்ணம் அவர்கள் தனது சிங்கை நகர் பற்றிய கருத்தினை நிறுவுவதற்காக பூநகரிப்பகுதியில் கிடைக்கப்பெறும் கட்டடப்பகுதிகள், நாணயங்கள் மற்றும் இடப்பெயர்களையும் துணைக்கழைப்பார். ஆனால் இவையெல்லாம் அப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தினை வலுப்படுத்துகின்றனவேயல்லாமல் அங்கொரு இராஜதானி இருந்திருப்பதற்கான உறுதியான சான்றுகளாகக் கருதமுடியாது. வரலாற்றில் கி.மு.காலகட்டத்திலிருந்தே முக்கியத்துவம் பெற்றிருந்த பூநகரிப்பகுதியில் அரசர்கள், சிற்றரசர்கள், வணிகக்கணங்கள் மற்றும் படைத்தலைவர்களுக்கெல்லாம் மாளிகைகள், வியாபாரநிலையங்கள், மற்றும் அரசமுக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் இருந்திருப்பது இயல்பே. அத்தகைய பகுதியில் இதன் காரணமாகப் பெருமளவில் நாணயங்கள் கிடைக்கப்படுவதும், அரச முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்கள் நிலவுவதும் பெரிதான ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. இவற்றைக் கண்டுவிட்டு , விழுந்தடித்துக் கொண்டு, இதற்குக் காரணம் அங்கொரு அரசு இருந்ததுதான் என்று முடிவுக்கு வந்து விடுவது உறுதிமிக்க தர்க்கமாகப் படவில்லை. இதற்கு மாறாக கி.மு.காலத்திலிருந்தே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்கிய பூநகரிப் பகுதி பின்னர் சோழர் காலத்திலும், யாழ்ப்பாண அரசின் காலத்திலும் அதன் கேந்திர, வர்த்தக, இராணுவரீதியான முக்கியத்துவத்தினை இழக்காமலிருந்துள்ளதையே மேற்படி கட்டடச் சிதைவுகளும், இடப்பெயர்களும் மற்றும் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களும் உறுதிப்படுத்துகின்றன என்று வேண்டுமானால் வாதிடலாம். அது பொருத்தமாகவும், வலுவானதாகவுமிருக்கும்.

உசாத்துணை நூல்களில் சில:
1. 'யாழ்ப்பாண வைபவமாலை'- மாதகல் மயில்வாகனப் புலவர் (முதலியார் குல. சபாநாதன் பதிப்பு)
2. 'யாழ்ப்பாணச் சரித்திரம்' - முதலியார் செ.இராசநாயகம்
3. 'தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு'- ப.புஷ்பரட்ணம்
4. 'யாழ்ப்பாண அரச பரம்பரை' - கலாநிதி க.குணராசா
5. 'இலங்கைத் தமிழ் வணிகக் கணங்களும் நகரங்களும் (கி.பி.1000 - 1250) -சி.பத்மநாதன் (ஆய்வுக் கட்டுரை; 'சிந்தனை' ஆடி 1984 இதழ்).
6. 'இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை' - கலாநிதி கா.இந்திரபாலா

நன்றி: பதிவுகள், திண்ணை, தமிழர் மத்தியில்.

13. ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டமும், அ.ந.க.வும்: சில குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

அறிஞர் அ.ந.கந்தசாமி.அண்மையில் நூலகம்.நெற் (Noolaham.net) இணையத் தளத்தில் 'திசை புதிது ' இதழ்-1 (2003)இல் வெளிவந்திருந்த 'மூத்த எழுத்தாளர் வரதர் ' என்னும் கட்டுரையொன்றினைப் பிரசுரித்திருந்தார்கள். அந்தக் கட்டுரையில் ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய சில குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றை வாசித்தபொழுது பெரிதும் ஆச்சரியமாகவிருந்தது. அதில் ஓரிடத்திலாவது அறிஞர் அ.ந.கந்தசாமியைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லை. மறுமலர்ச்சிக் காலகட்டம் என்று நாம் குறிப்பிடும்போது 'மறுமலர்ச்சிச் சங்க'த்தின் காலகட்டத்தையும், அச்சங்கத்தால் வெளியிடப்பட்ட 'மறுமலர்ச்சி ' சஞ்சிகையின் (கையெழுத்துச் சஞ்சிகை / அச்சில் வெளிவந்த சஞ்சிகை) காலகட்டத்தையும் உள்ளடக்கிய காலகட்டத்தையே குறிப்பிடுகின்றோம். சஞ்சிகை அச்சில் வெளிவந்தபோது வெளியிட ஐவர் கொண்ட குழு பண உதவி செய்ததாக வரதர் தன் நேர்காணல்களில் குறிப்பிடுவார். ஆனால் மறுமலர்ச்சிச் சங்கத்தினை 1943இல் அமைத்து 1945வரை 'மறுமலர்ச்சி ' கையெழுத்துச் சஞ்சிகையினை வெளியிட்டவர்களையே அக்காலகட்டத்தின் மூலவேர்களாகக் குறிப்பிடவேண்டும். இச்சங்கத்தை உருவாக்கியவர்கள் அவ்வப்போது கூடி இலக்கியத்த்தின் பல்வேறு வகையான போக்குகள் பற்றி, அவற்றின் தன்மைகள் பற்றியெல்லாம் விவாதித்து வந்துள்ளதோடு அச்சங்கத்தின் குறிப்பிட்ட காலத்தின் வெற்றிக்கும் காரணமாக விளங்கியிருக்கின்றார்கள். இதனை நாம் மறந்து விடக் கூடாது.

சரி விடயத்திற்கு வருவோம்... அதாவது மேற்படி திசை புதிது இதழின் மேற்படி கட்டுரை அறிஞர் அ.ந.கந்தசாமியின் மறுமலர்ச்சிக் காலகட்டப் பங்களிப்பினை மறைத்து விட்டாலும் நல்லவேளையாக மறுமலர்ச்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான மூத்த எழுத்தாளர் வரதர் அவ்விதம் மறைத்து விடவில்லையென்பது ஆறுதலான விடயம். 'வரதர் 80 ' நூலில் பத்மா சோமகாந்தனின் வரதருடனான நேர்காணலொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிக் கூறும் போது பின்வருமாறு கூறுவார்:

'....இலங்கை வானொலியிலும் லண்டன் பி.பி.சி. தமிழோசையிலும் கடமையாற்றி உலகப் புகழ்பெற்ற சோ. சிவபாதசுந்தரம் ஈழகேசரி ஆசிரியராகவுமிருந்தவர். மறுமலர்ச்சி இயக்கத்தைத் தோற்றுவித்த இளைஞர்கள் பலரும் சோ. சிவபாதசுந்தரத்தின் வழிநடத்தலில் ஈழகேசரிப் பண்ணையில் தான் வளர்ந்தவர்கள். எமது 'மறுமலர்ச்சி ' ஆர்வத்துக்குக் கை கொடுத்தது ஈழகேசரியே. புதிய இலக்கியத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் ஒன்று கூடினோம். 'புதுமைப் பித்தர்கள் சங்கம் ' எனப்பெயர் சூட்ட நான் விளைந்தேன். எனது விருப்பம் எடுபடவில்லை. தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் எனப் பெயரிட்ட, அதில் என்னோடு அ.செ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி, கனக செந்திநாதன், பண்டிதர் ச.பஞ்சாட்சரசர்மா, க.இ.சரவணமுத்து (சாரதா), நாவற்குழியூர் நடராசன், து.ருத்திரமூர்த்தி (மகாகவி) முதலியோருடன் சுமார் 30 பேர் இருந்தனர். '(பக்கம்58).

மேற்படி மறுமலர்ச்சிச் சங்கத்தின் உருவாக்கம் பற்றி வரதர் மேலும் பின்வருமாறு அந்நேர்காணலில் கூறுவார்:

'.... ஈழகேசரி இளைஞர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த அ.செ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி, நாவற்குழியூர் நடராசன் போன்ற சிலருடன் கடிதத்தொடர்பு கொண்டேன். எங்களுக்குள் ஓர் இலக்கிய சங்கத்தை ஏற்படுத்தினால் என்ன என்ற எண்ணத்தை அவர்களிடம் விதைத்தேன். நல்ல வரவேற்பிருந்தது. நண்பர்களின் சந்திப்புக்காக காலமும் இடமும் குறிப்பிட்டு சில நண்பர்களுக்கு அறிவித்தேன். அவர்களும் தமக்குத் தெரிந்தவர்களுக்கு அறிவித்தார்கள். 13.06.1943 யாழ் நகரில் கன்னாதிட்டியிலிருந்த ரேவதி குப்புசாமி என்ற சிற்பக் கலைஞரின் வீட்டு விறாந்தையில் 15-20 பேர் கூடினோம். இப்படித்தான் தமிழ் மறுமலர்ச்சிச் சங்கம் தொடங்கப்பட்டது.... ' (பக்கம் 68)

மேலும் வரதர் மறுமலர்ச்சி சஞ்சிகை பற்றிக் குறிப்பிடும்போது பின்வருமாறு குறிப்பிடுவார்:

'.... தமிழ் மறுமலர்ச்சிச் சங்கத்திலேயே மறுமலர்ச்சி என்ற கையெழுத்துப் பத்திரிகை தயாரிப்பதென்று தீர்மானித்தோம். அதற்கும் நான் தான் ஆசிரியராக இருந்தேன். கையினால் சில இதழ்களைக் கையெழுத்துப் பத்திரிகையாகத் தயாரித்தோம். எங்களுக்கிடையில் மாறி மாறி வாசித்து மகிழ்ந்தோம். மறுமலர்ச்சியை அச்சுப் பத்திரிகையாக வெளியிடவேண்டுமென்று கனவு என் மனதில் படரத் தொடங்கியது... ' (பக்கம் 69). மேற்படி நூலிலுள்ள கட்டுரையான 'வாழ்நாளை நீட்டிடும் வல்லமை படைத்த வரதர் ' என்னும் கட்டுரையில் பிரபல எழுத்தாளர் சொக்கன் அவர்கள் வரதரை 'மறுமலர்ச்சி ' சஞ்சிகையின் இணையாசிரியராக்கக் குறிப்பிடுவார் (பக்: 9).

மறுமலர்ச்சி இயக்கம் 1943இல் வரதர், அ.ந.கந்தசாமி, அ.செ.மு, நாவற்குழியூர் நடராசன் போன்றோரால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மேற்படி மறுமலர்ச்சிச் சங்கம் மறுமலர்ச்சி என்னும் கையெழுத்துச் சஞ்சிகையினை வெளியிட்டுள்ளது. அக்கையெழுத்துச் சஞ்சிகை மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் முக்கியமானது. அச்சஞ்சிகையில் யார் யார் எழுதினார்கள், எத்தகைய ஆக்கங்கள் வெளிவந்தன என்பது பற்றிய விபரங்கள் அறியப்பட வேண்டியவை. ஏனெனில் அக்கையெழுத்துச் சஞ்சிகையின் பரிணாம விளைவே பின்னர் அச்சில் வெளிவந்த மறுமலர்ச்சி சஞ்சிகை. எனவே மறுமலர்ச்சிக் காலகட்டம் என்னும் போது அது மறுமலர்ச்சிச் சங்கத்தின் காலகட்டத்துடன், 'மறுமலர்ச்சி ' கையெழுத்துச் சஞ்சிகை மற்றும் பின்னர் அச்சில் வெளிவந்த 'மறுமலர்ச்சி ' சஞ்சிகை ஆகியவற்றின் காலகட்டமுமாகுமென்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

மேற்படி மறுமலர்ச்சி காலகட்டத்துடன் அ.ந.கந்தசாமியை இணைத்து அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் ' என்னும் கட்டுரைத் தொடரில் '....பண்டிதர்களையும் பட்டதாரிகளையும் மிஞ்சும் அளவுக்கு அ.ந.கந்தசாமி புலமை பெற்றிருந்தார். அதனால் தான் மறுமலர்ச்சிக் குழுவுக்கே தலைமை தாங்கும் அளவுக்குத் தகுதி பெற்றிருந்தார். கதைகளையும், கவிதைகளையும் ,கட்டுரைகளையும் விரும்பிப் படித்தார். பழைய இலக்கியங்களையும் ஆர்வத்துடன் ஆழ்ந்து கற்றார். இளமையிலிருந்து இலக்கியத்திலிருந்து வந்த ஆர்வந்தான் மறுமலர்ச்சிக் குழுவுக்கு முன்னோடி என்றழைக்கப்படும் அளவுக்குச் சிறந்து விளங்க அவருக்குப் பக்கத் துணையாகவிருந்தது.... ' என்று குறிப்பிடுவார்.

மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் தோற்றுவாய் பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டியதவசியம். தற்போது அக்காலகட்டத்துக்குரிய படைப்பாளிகளில் எஞ்சி நிற்பவர் வரதர் ஒருவரே. அச்சில் வெளிவந்த மறுமலர்ச்சி இதழ்கள் மட்டும் மறுமலர்ச்சிக் காலகட்டமாகிவிடாது. மறுமலர்ச்சிச் சங்கத்தினதும், மறுமலர்ச்சி கையெழுத்துச் சஞ்சிகையினதும், மறுமலர்ச்சிச் சங்கத்தின் ஸ்தாபகர்களின் கலந்துரையாடல்கள், விவாதங்கள் ஆகியவற்றினதும் தொடர்ச்சியான விளைவாகவே அச்சஞ்சிகையினைக் கருத வேண்டும். எனவே மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய விரிவான ஆய்வுகள் மட்டுமே மேற்படி 'திசை புதிது ' இதழின் கட்டுரை போன்ற ஒருபக்கச் சார்பான, ஆழமற்ற கட்டுரைகள் எதிர்காலத்தில் வெளிவருவதைத் தடுக்க உதவுமென்பது அடியேனின் கருத்தாகும்.

நன்றி: திண்ணை, பதிவுகள்.

14. பாரதியும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும்!
-வ.ந.கிரிதரன்-


பாரதியார்ஒரு சில ஆய்வாளர்கள் பாரதி ஐரோப்பியப் பெண்களை விடுதலை பெற்ற பெண்களாகக் கருதியதாகவும் அதன் மூலம் அவனால் பால் கவர்ச்சியையே விற்பனைப் பண்டமாகப் பயன்படுத்தும் முதலாளித்துவத்தை அறிய முடியவில்லையென்றும் கருதுகின்றார்கள். இது மிகவும் தவறான கூற்று. உண்மையில் பாரதி அப்படித்தான் கருதியிருந்தானாவென்றால் அதுதானில்லை. அவனது 'மாதர்' தொகுதியிலுள்ள 'நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்' என்ற கட்டுரை இதனைத்தான் விளக்கி நிற்கின்றது.

"ஆண்,பெண் இருபாலாரும் பரிபூர்ண சமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இரு பாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டைச் சமைக்க வேண்டுமென்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மையான நோக்கம்" என மேற்படி கட்டுரையில் ஓரிடத்தில் ஐரோப்பிய நாகரீகத்தின் சமவுரிமை பற்றிய நோக்கு பற்றிக் குறிப்பிடும் பாரதி மேற்படி கட்டுரையில் இன்னுமோரிடத்தில் பின்வருமாறு கூறுகின்றான்.

"...அவற்றைப் பார்க்கும் போது நவீன ஐரோப்பிய நாகரீகம் என்று புகழப்படும் வஸ்துவின் நியாயமான, உயர்ந்த பக்குவ நிலமை மேற்படி போல்ஷ்வி?ட் விவாக சம்பிரதாயங்களீல் எய்தப்பட்டிருகிறதென்று தெளிவாக விளங்குகின்றது...
பெண்களிற்கு விடுதலை தாங்கள் வேறுபல ?¡தியர்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப்பதே தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்களென்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றாமென்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள். அந்த வகையில் பார்த்தால், ஐரோப்பாவின் இதர பகுதிகளைக் காட்டிலும் நவீன ரஷ்யா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ளதென்பது ப்ரத்யட்மாகத் தெரிகின்றது..."
இவையெல்லாம் விளக்கி நிற்பவை தானென்ன? 'ஆணிற்குப் பெண்நிகர்' என்னும் கருத்தை வலியுறுத்தும் ஐரோப்பிய நாகரீகத்தின் நோக்கினை வரவேற்றாலும், உண்மையிலேயே ஐரோப்பாவின் ஒருபகுதியான நவீன ரஷ்யாவிலேயே பெண்களின் நிலமை சிறப்பாகவிருப்பதாக அவன் கருதுகின்றான். இதனையே மேற்படி கட்டுரையின் இறுதிப் பகுதியில் வரும் பின்வரும் பகுதி உறுதிப்படுத்துகின்றது.

"..இப்படிப்பட்ட நம்முடைய ஸ்திரிகளின் நிலைமையை நவீன ருஷ்யாவில் ஸ்திரிகளின் விடயமாக ஏற்பட்டிருக்கும் சட்டங்களூடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் நம்மை ஐரோப்பிய நாகரீகம் எந்தச் சக்தியினாலே கீழே வீழ்த்திறென்பதும், எந்த அம்சங்களில் நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் வழியைப் பின்பற்றத் தகும் என்பதும் தெளிவுறப் புலப்படுத்தும். நாம் ஐரோப்பியர் காட்டும் நெறிகளை முற்றிலுமே கைப்பற்றிக் கொள்ளுதல் அவசியமில்லை...
'ஆண்களிற்கும் பெண்களிற்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலாரும் சமானமாகவே கருதப்படுவார்கள்' என்று ரு?யச் சட்டம் கூறுமிடத்திலே நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் கருத்தை அனுசரித்தல் மிக, மிக,மிக அவசரம்."
இவற்றிலிருந்து இறுதியாக நாம் வந்தடையக் கூடிய முடிவுகள் இவைதான்:
ஆண்-பெண் சமவுரிமை பற்றிய ஐரோப்பிய நாகரீகத்தின் நோக்கினை வரவேற்ற போதிலும் பாரதி ஐரோப்பாவின் இன்னுமொரு பகுதியான நவீன ருஷ்யாவிலேயே மேற்படி நோக்கம் நிறைவேற்றப் பட்டுள்ளதாகக் கருதுகின்றானே தவிர ஒரு சில ஆய்வாளர்கள் கருதுவது போல் ஐரோப்பாவின் முதலாளித்துவ நாடுகளைச் சேர்ந்த பெண்களை நிச்சயமாக பாரதி விடுதலை பெற்ற பெண்களாகக் கருதவில்லையென்பதே. மேற்படி ஆய்வாளர்கள் விட்ட பிழைக்குக் காரணம் நவீன ரு?யாவை ஐரோப்பாவின் ஒருபகுதியாகக் கருதாமல் முதலாளித்துவ ஐரோப்பாவையே ஐரோப்பாவாகக் கருதியது தான். பாரதி ரு?யாவில் நிலவிய ஆண்-பெண் சமவுரிமை சம்பந்தமான சட்டங்களைப் புகழும்போது அதனை ஐரோப்பிய நாகரீகத்தின் உயர்ந்த வடிவமாகக் கொள்வதை மேற்படி ஆய்வாளர்கள் தவறாக விளங்கி விட்டனர் போலும். அதே சமயம் பாரதி ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெண்களிடையே நிலவிய 'கட்டுபாடற்ற காதல்' போன்ற கோட்பாடுகளைப் பலமாக எதிர்க்கவும் தவறவில்லை. 'விடுதலைக் காத'லென்ற அவனது 'சுயசரிதை'க் கவிதையில் வரும் பின்வரும் பகுதி கூறுவதென்ன?

"காதலிலே விடுதலையென்றாங்கோர் கொள்கை
கடுகி வளர்ந்திடுமென்பார் யூரோப்பாவில்.
மாதரெல்லாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னார்.
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே
பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்துவிட்டால்
வேதனையொன்றில்லாதே பிரிந்து¢ சென்று
வேறொருவன் தனைக் கூட வேண்டும் என்பார்.
'வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்.
விடுதலையாம் காதலெனில் பொய்மைக்காதல்'.
பாரதி உண்மையிலேயே ஒரு அபூர்வமான மனிதன். மனித சமுதாயத்தைப் பாதிக்கும் சகல விடயங்களைப் பற்றியும் அவன் தன் கவனத்தைத் திருப்பியிருக்கின்றான்.
இயற்கை,சமுதாயம்,அரசியல்,தத்துவம்,பெண்விடுத¨லை,வறுமை,மக்கள் விடுதலையென்று அவன் பாடாத துறையென்று எதுவுமேயில்லை. பெண்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த பாரதியால் 'கட்டுப் பாடற்ற காதல்' போன்ற கருத்துக்களை ஏற்க முடியவில்லை. சமுதாயத்தில் அடிமைகளாக வாழும் பெண்கள் ஆண்களைப் போல் சமவுரிமை பெற்றவர்களாக வாழ வேண்டுமென்பதில் பாரதி தீவிரமாகயிருக்கின்றான். அவனது கவிதைகள் பால்ய விவாகம் போன்ற கொடுமைகளை எதிர்க்கின்றன. பெண்களின் கல்விக்காக அவனது கவிதைகள் குரல் கொடுக்கின்றன. விதவைகளின் மறுமணத்தை அவை வரவேற்கின்றன.அதே சமயம் 'கற்பை'ப் பற்றி வலியுறுத்தும் போது அதனை ஆண்-பெண் இருவரிற்குமே பொதுவாக வைக்கும் பாரதி , ஒருவனிற்கு ஒருத்தியென்ற ஒருதார மணமுறையையே பலமாக ஆதரிக்கின்றான்.இதனால் தான் அவனால்

"காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி."
என்று 'பெண்கள் விடுதலைக் கும்மி'யில் கும்மியாட முடிகின்றது.

நன்றி: திண்ணை, பதிவுகள்.

15. ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடி: அறிஞர் அ.ந.கந்தசாமி! - வ.ந.கிரிதரன்

கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு -இத்துறைகளில் புலமையும் திறமையும் ஆற்றலும் மிக்கவர் அமரர் அறிஞர் அ.ந.கந்தசாமி. ஈழத்தின் தலைசிறந்த படைப்பிலக்கிய எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் இத் துறைகளைப் பற்றி எழுதவும் பேசவும் வல்லவர்.

அறிஞர் அ.ந.கந்தசாமி.'தேசாபிமானி', 'சுதந்திரன்', 'ட்ரிபியூன்' ஆகிய இதழ்களின் ஆசிரியப் பதவிகளை அலங்கரித்தவர். ஈழத்துப் புதுமை இலக்கியத்தின் மூத்த பிள்ளைகளில் ஒருவராகக் கருதப்படுபவர். எழுத்தில் மட்டுமல்ல மேடைப்பேச்சிலும் வல்லவர். இவரது 'மதமாற்றம்' நாடகம் பலமுறை மேடையேறி, பலத்த வாக்குவாதங்களைக் கிளப்பியது. இவரது 'மனக்கண்' நாவல் தினகரனில் தொடராக வெளிவந்து பெருத்த வரவேற்பினைப் பெற்றதோடல்லாமல் சில்லையூர் செல்வராசனால் வானொலியில் நாடகமாகவும் ஒலிபரப்பப்பட்டது.'கடவுள் என் சோர நாயகன்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'சிந்தனையும் மின்னொளியும்', 'எதிர் காலச் சித்தன் பாடல்', 'வில்லூண்டி மயானம்' போன்ற இவரது கவிதைகள் பண்டிதமணி கணபதிப்பிள்ளையுட்பட பலரின் பாராட்டுதல்களயும் பெற்றவை. எமிலி சோலாவின் 'நாநா' நாவலை மொழிபெயர்த்து சுதந்திரனில் வெளியிட்டவர். 'கவீந்திரன்' என்ற பெயரிலும் இவர் கவிதைகள் படைத்துள்ளார்.

இவரது சிறுகதைகள் 'சமூகத்தை வன்மையாகச் சாடுபவை' என்பார் பேராசிரியர் சிவத்தம்பி. மறுமலர்ச்சி எழுத்தாளர்களில் முக்கியமானவர். பேராசிரியர் கைலாசபதியின் பெருமதிப்பிற்குரியவர். தனது ' ஒப்பியல் இலக்கியம்' நூலைப் பேராசிரியர் கைலாசபதி அறிஞர் அ.ந.கந்தசாமிக்கே சமர்ப்பணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பண்டிதர் திருமலைராயர் என்ற பெயரில் இவர் எழுதிய கட்டுரைகளைப் பெரியார் தனது 'குடியரசு' பத்திரிகையில் மறுபிரசுரம் செய்தார். 'திருக்குறள்' பற்றிய இவரது ஆங்கிலக் கட்டுரைகள் பெரும் வரவேற்பினைப் பெற்றன. இதுவரையில் இவரது படைப்புகளில் 'மதமாற்றம்' இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடாகவும், தமிழக பாரி நிலைய வெளியீடாக 'வெற்றியின் இரகசியங்கள்' என்னும் நூல்களுமே வெளி வந்துள்ளன.

'வெற்றியின் இரகசியங்கள்' நூலைப் பொறுத்தவரையில் தமிழில் உதயமூர்த்தி போன்றவர்கள் வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும் நூல்களை எழுதுவதற்கு முன்னரே(1967இல்) அ.ந.க.வின் இந்நூல் வெளிவந்தது குறிப்பிடத் தக்கது. எமில் கூ, கார்ல் யூங், பிராய்ட் உட்பட பலரின் கோட்பாடுகளை மையமாக வைத்து, தெள்ளிய துள்ளு தமிழ் நடையில் இந் நூல் எழுதப்பட்டுள்ளது. இந் நூல் மற்றும் 'மதமாற்றம்' வெளிவருவதற்கு ஈழத்தின் மூத்த எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் பங்களிப்பு முக்கியமானது. 'தேசிய இலக்கியம்', 'தமிழ்க்கவிதை' ,'நாடகத் தமிழ்' பற்றிய இவரது விமர்சனக்கட்டுரைகள் பெரும் பாராட்டினைப் பெற்றவை. இவரது ஏனைய படைப்புகளும் நூல்களாக வெளிவர வேண்டும். இவரது கவிதைகளையும் 'மனக்கண்' நாவலையும் தமிழகத்தில் வெளியிடும் முயற்சிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. அனேகமாக இவ்வாண்டின் இறுதிக்குள் வெளிவருமென எதிர்பார்க்கலாம்.

இவர் மறைந்தபோது, ஈழத்திலிருந்து வெளிவந்த அனைத்துப் பத்திரிகைகள், இதழ்களும் ஒட்டு மொத்தமாக அஞ்சலி செலுத்தின. 'போர்ச் சுவாலை அமரச் சுடராகியது' என்று 'தேசாபிமானி' தனது ஆசிரியத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது. 'தமிழமுது' அட்டையில் (சரவணயூர் மணிசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது) இவரது படத்தைப் பிரசுரித்துக் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. 'தினகரன்', 'தினபதி', 'வீரகேசரி' உட்பட அனைத்துத் தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகளெல்லாம் முன்பக்கச் செய்தியாக வெளியிட்டு அஞ்சலி செலுத்தின. 'மல்லிகை' இவரைத் தனது அட்டைப்படத்தில் போட்டுக் கெளரவித்தது.

ஈழத்தின் மணிக்கொடியான 'மறுமலர்ச்சி' சஞ்சிகையின் மூலவர்களில் முக்கியமானவர் அ.ந.க. மற்றவர்கள் அ.செ.முருகானந்தம், வரதர், பஞ்சாட்சர சர்மா போன்றவர்கள். 'மறுமலர்ச்சி'யின் தோற்றுவாய்க்கும் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியவரிவர். அண்மையில் இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றி எழுதிய சிலரின் படைப்புகளில், கூறிய கருத்துகளில் 'அ.ந.க.வை ' இருட்டடிப்பு செய்திருப்பதைப் படித்த போது வியப்புத் தான் ஏற்பட்டது. அ.ந.க.வையும் மறுமலர்ச்சியினையும் பிரித்துக் கூடப் பார்க்கமுடியாத அளவிற்கு அவரது இலக்கிய முயற்சிகள் அக்காலகட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளன. புதுமைப் பித்தன் போன்றவர்களை ஒதுக்கி விட்டு எவ்விதம் மணிக்கொடி காலகட்டம் பற்றிக் கூற முடியாதோ அவ்விதமே அ.ந.க.வை ஒதுக்கி விட்டு மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றியும் குறிப்பிட முடியாது. உண்மையான படைப்பாளியொருவர் இன்னுமொரு உண்மையான படைப்பாளியை இருட்டடிப்பு செய்ய மாட்டார். ஒரு உண்மையான படைப்பாளிக்குத் தான் தெரியும் இன்னுமொரு படைப்பாளியின் தன்னலமற்ற பயன் கருதாத படைப்பு முயற்சிகள். அ.ந.கந்தசாமி தான் வாழ்ந்த கால கட்டத்தில் பல இளம் எழுத்தாளர்களின் ஆதர்சன எழுத்தாளராக விளங்கியவர். பல இலக்கிய முயற்சிகளை இவர் உருவாக ஊக்கம் தந்திருக்கின்றார். அண்மையில் வெளிவந்த சிரித்திரன் ஆசிரியரின் தொகுப்பு நூலில் சிரித்திரன் ஆசிரியர் 'சிரித்திரனின்' ஆரம்ப காலத்தில் அ.ந.க. ஊக்குவித்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்திருக்கின்றார். மல்லிகை ஆசிரியர் "நீங்கள் படித்த பல்கலைக் கழகம் எது?" என்ற் கேள்விக்கு "அ.ந.க" என்று குறிப்பிட்டிருக்கின்றார். அ.ந.க.வின் மறைவிற்குப் பின்னர் தனது 'குமரன்' சஞ்சிகையில் ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களிலொருவரான செ.கணேசலிங்கன் அ.ந.க.வின் இறுதிக் காலத்தை நினைவு கூர்ந்து கட்டுரைத் தொடரொன்று எழுதியிருக்கின்றார். இலங்கை முற்போக்கெழுத்தாளர் வட்டாரம் இவரை முன்னோடியாகக் கொள்ளுமளவிற்கு இவரது வளர்ச்சி அமைந்திருந்தது. இலங்கை முற்போக்கெழுத்தாளர் சங்கத்தின் கீதம் அ.ந.க. வால் எழுதப்பட்டதென்பது கூட இன்று பலரிற்குத் தெரியாதிருக்கலாம்.

அந்தோனி ஜீவா அடிக்கடி இவரைப் பற்றி நினைவு கூர்ந்து கட்டுரைகளைப் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். தினகரனில் அந்தோணி ஜீ£வா எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்ற தொடர் குறிப்பிடத்தக்கது. யாழ் பல்கலைக்கழக மாணவி செல்வி யுவராணி ஜூவானா 'அ.ந.கந்தசாமி படைப்புக்கள் ஒரு மதிப்பீடு' என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை படைத்துள்ளார். மறைந்த எழுத்தாளர் அகத்தியர் அ.ந.க. பற்றிய நினைவுகளைக் கட்டுரைகளாகத் தினகரனில் வரைந்துள்ளதுடன் 'எரியும் நெருப்பில் இடைபாதையில்லை' என்னும் நாவலைஅ.ந.க.விற்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். கவிஞர் மகாகவியும் தனது 'கண்மணியாள் காதை' யினை அ.ந.க.விற்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியான , அனைவராலும் அன்புடன் அறிஞர் அ.ந.க என அழைக்கப் பட்ட அறிஞர் அ.ந.கந்தசாமியின் மறைவு தினமான மாசி 14 (பிப்ரவரி - 26) இல் அவரை நினைவு கூர்வதுடன், அவரது படைப்புகளை நூலுருவில் கொணர்வதே நாம் அவர்க்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.

ஈழத்தெழுத்துலகை
விழிக்க வைத்த பேரறிஞன்.
கொடுமைகளை எதிர்ப்பதிலே
கடும் புயலாய்க்
குமுறி விடும்
கந்தசாமி எழுத்துலகிலோர்
கலங்கரை விளக்கமாவான்.
துடிப்பான
துள்ளு தமிழ் நடைதனையே
வடிப்பதென்றால்
இவனிற்குக் கை
வந்த கலை.
சிந்தனையைத் தூண்டிவிடும்
சீர் சிருத்தக் கருத்துகளைச்
சொற்களிலே வடித்து விடும்
சிற்பியிவன் சிந்தனைகள்
அழியாது நிலைத்து நிற்கும்
மொழியாகத் தொடர்ந்து வரும்.

நன்றி: ஆறாந்திணை, பதிவுகள்.

16. யானை பார்த்த குருடர்கள்! -வ.ந.கிரிதரன்-
யானை பார்த்த குருடர்கள்!தமிழ் இலக்கியம் செழுமைப் படுத்தப்பட வேண்டுமானால் தமிழ் எழுத்தாளர்களிற்கிடையிலுள்ள பிளவுகள், வேறுபாடுகள் நீக்கப் படவேண்டும். விமர்சனம், ஆய்வு போன்ற துறைகள் தமிழில் வளர்த்தெடுக்கப் படவேண்டும். விமர்சனத்தையும் ஆய்வையும் பலர் , பல விமர்சக வித்தகர்களுட்பட, போட்டுக் குழப்பியடிக்கின்றார்கள். ஆய்வென்பது ஒரு துறையினைப் பற்றி அல்லது ஒரு விடயத்தைப் பற்றி , பல்வேறு தரவுகளை, பல்வேறு ஆதாரங்களை அலசி ஆராய்ந்து படைப்பது. விமர்சனம் அப்படியல்ல. அது ஒரு விடயத்தைப் பற்றி அல்லது ஒரு துறையினைப் பற்றி அல்லது எதனைப் பற்றியென்றாலும் அதனைபற்றிக் கூறப்படும் ஒருவிதக் கருத்தாகக் கொள்ளலாம். அது ஒரு பூரண ஆய்வாகவிருக்க வேண்டுமென்பதில்லை.

ஒரு விடயத்தைப் பற்றி ஆய்வு செய்பவர் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் அவ்விடயம் பற்றி ஆய்வினைச் சமர்ப்பிக்க முடியும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட காலகட்ட இலக்கியத்தைப் பற்றி ஆய்வு செய்பவர் அது பற்றிய ஆதாரங்களின் அடிப்படையில் மட்டும் தன் ஆய்வினைச் செய்ய முடியும். படைப்புக்களைப் படித்திருக்க வேண்டுமென்பது கூடக் கட்டாயமில்லை. ஆனால் விமர்சகர் அப்படியிருக்க முடியாது. அவர் நிச்சயமாக ஒரு படைப்பைப் பற்றி விமர்சிக்க முன் அதனைக் கட்டாயம் படித்திருக்க வேண்டும். இதன் அடிப்படையில் பார்க்கப் போனால் நவீனத் தமிழ் இலக்கியம் பற்றி ஆழமானதொரு ஆய்வு இதுவரையில் வந்ததில்லையென்றே கூறவேண்டும். பெரும்பாலான ஆய்வுகள் குறைந்தளவு ஆதாரங்களின் அடிப்படையிலேயே செய்யப் பட்டிருக்கின்றன. உதாரணமாகத் தமிழ் சிறுகதை வளர்ச்சி பற்றிய அல்லது கவிதை பற்றிய கட்டுரைகளை எடுத்துக் கொண்டால், அறுபதுகளில் அவர்கள் எழுதியதற்கும் இப்பொழுது எழுதுவதற்குமிடையில் பெரியதொரு வித்தியாசமிருக்க முடியாது ஒரு சில புதிய பெயர்களைத் தவிர. நிறைய விமர்சனங்கள் (என்ற போர்வையில்) வந்திருக்கின்றன.  ஆனால் பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி ஓரளவாவது ஆய்வு மற்றும் விமர்சன நூல்கள் வந்திருக்கின்றனவென்றுதான் கூறவேண்டும்.

இத்தகைய நிலைக்கு முக்கிய காரணங்களிலிரண்டு நமது தமிழ் எழுத்தாளர்களின் கருத்து மோதல்களும், குழு மனப்பான்மை தான். யானை பார்த்த குருடர்கள் கதைதான் நம் தமிழ்ப் படைப்பாளிகள் மற்றும் விமர்சகர்களின் நிலையும். யானையின் துதிக்கையினைப் பார்த்தவரிற்கு யானையின் தோற்றம் நீண்டு மெலிந்துதான் தெரியும். பருத்த உரல் கால்களைப் பார்த்தவரிற்கு யானை உரல் போன்று தெரிவதிலென்ன ஆச்சர்யம்? இது போல் தான் இலக்கியத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்து விட்டு அதுதான் இலக்கியம் என்று சாதிக்கும் யானை பார்த்த குருடர்கள் தான் நம் படைப்பாளிகள் , விமர்சகர்களில் அதிகம். உண்மையில் இலக்கியத்தை வளர்க்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தான் உண்மையான வளர்ச்சியினைத் தடுக்கும் நந்திகள்.ஏனென்றால் இவர்கள் குருடர்கள். யானை பார்த்த குருடர்கள். மேற்கு நாடுகளைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு துறையிலும் பல வல்லுனர்களைக் (Specialists) காண முடியும். ஆனால் நம் நாட்டிலோ எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்த Generalists தான் அதிகம். உண்மை தான். அதனால் தான் அவர்கள் முன்னேறியிருக்கின்றார்கள். நாம் இப்பொழுதுதான் ஓரளவாவது விழிக்கத் தொடங்யிருக்கின்றோம். அதுவும் ஏனைய துறைகளைப் பொறுத்த வரையில். அது இலக்கியத் துறைக்கும் பரவ வேண்டும்.

ஒரு படைப்பானது எப்படியாவது எழுதப் பட்டிருக்கலாம். அது நவீனத்துவப் பாணியில் அல்லது பின் நவீனத்துவ பாணியில் அல்லது யதார்த்தமாகத் தான் படைக்கப் பட்டிருக்க வேண்டுமென்பதில்லை. எப்படியும் படைக்கப் பட்டிருக்கலாம். நடை மட்டும் அப்படைப்பின் வெற்றியினைத் தீர்மானித்து விடுவதில்லை பெரும்பாலான நம் படைப்பாளிகள் விமர்சகர்கள் நினப்பதைப் போல. ஒரு படைப்பினை விமர்சிக்க விளைபவர் அதனைப் பல்வேறு கோணங்களிலும் அணுக வேண்டும். ஆராய்ந்திட வேண்டும். கருத்துக்களைக் கூறிட வேண்டும். நம் படைப்பாளிகள் , விமர்சகர்கள் பலர் எனக்குப் பழைய
தமிழ்ப் பண்டிதர்களைத்தான் ஞாபகப் படுத்துகின்றார்கள். பாரதியார் தமிழை எளிமைப் படுத்தியபோது, இலங்கையில் மரபுகள் மீறப் பட்டபோது , வெறும் யாப்பினை நெட்டுருப் போட்டுச் சூத்திரங்களைக் கவிதைகளென்று படைத்துகொண்டிருந்த இவர்கள் கொதித்தெழுந்தார்கள். அதனைப் போன்றுதான் தற்போது நமது படைப்பாளிகள் , விமர்சகர்கள் பலர் தரமான படைப்பென்றால் இப்படித் தானிருக்க வேண்டும் , அப்படித் தானிருக்க வேண்டும் என்று தமக்குத் தாமே சில விதிகளை விதித்துக் கொண்டு விமர்சனம் ஆய்வுகள் என்ற போர்வையில் வளர்ச்சியினைத்தடுத்துகொண்டிருக்கின்றார்கள். பிரபலமான ஒரு கவிஞர் ஒருமுறை ஒரு கவிதை நூலினைப் பார்த்தார். அக்கவிதை நூலின் அட்டைப் படம் யதார்த்தமாக வரையப் பட்டிருந்தது. அவருடைய முதற் கேள்வியே ஏன் அந்நூலின் அட்டைப் படம் அவ்விதமாக அமைக்கப் பட்டிருக்கின்றது? ஏன் நவீனத்துவப் பாணியில் அமைக்கப் பட்டிருக்கவில்லை என்பது தான். இவர்களைப் போல் பலர். இந்நிலை மாற வேண்டும். ஒரு படைப்பு எப்படிப் படைக்கப் பட்டிருந்தாலும் அதனை எந்தவிதப் பாகுபாடின்றி, எந்தவித முன் நிபந்தனைகளுமின்றி அணுக வேண்டும். அந்தப் பக்குவம் நம் படைப்பாளிகள், விமர்சகர்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். தமிழில் நல்ல விமர்சனம் தோன்றுவதற்கு இது மிகவும் முக்கியம்.

நன்றி: பதிவுகள்.

17. ஆறுதலற்று விரையும் அண்டப் பொருட்கள்!
பிரபஞ்ச வடிவம் பற்றிய புரிதல்கள்!
- வ.ந.கிரிதரன் -


அலெக்ஸாண்டர் பிரிட்மென்இரவு நேரங்களில் அண்ணாந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப் பாருங்கள். கோடிக் கணக்கில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, கிரகங்களை உபகிரகங்களைக் கவனியுங்கள். அதே சமயம் இன்னும் ஒன்றையும் மனதிலே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு செக்கனும் பிரமாண்டமானதொரு வேகத்தில் விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சமொன்றின் சிறியதொரு கோணத்தில் விரைந்து கொண்டிருக்கும் சிறியதொரு கோளொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதே அது. நெஞ்சினைப் பிரமிக்க வைத்து விடுகின்றதல்லவா! அப்படியானால் நம்மால் ஏனிந்த வேகத்தை உணர முடியவில்லை? மூடியதொரு புகையிரதத்தினுள் இருக்குமொருவருக்கு எவ்விதம் புகையிரதம் வேகமாகச் செல்வது தெரியாதோ அது போன்றதொரு நிலையில் தான் எம்முடைய நிலையும். பூமியைச் சுற்றிப் படர்ந்திருக்கும் வாயு மண்டலம்தான் எம்மை மூடிய புகையிரத்தைனைப் போல் இக்கோளினை வைத்திருக்கின்றது. அதனால் தான் எம்மால் எமது வேகத்தைக் கூட உணர முடியாமலிருக்கின்றது. இன்னும் ஒரு காரணம் - எம்மைச் சுற்றியுள்ள சுடர்களுக்கும், கிரகங்களுக்குமிடையிலான தொலைவீ மிக மிக அதிகமானது. இத் திலைவும் எமது வேகத்தினை உணரமுடியாதிருப்பதற்கு இன்னுமொரு காரணம். புகைவண்டியினுள் விரையும் ஒருவருக்கு அருகில் தெரியும் காட்சிகள் வேகமாகச் செல்வது போலும், மிகத் தொலைவிலுள்ள காட்சிகள் ஆறுதலாக அசைவது போலவும் தெரிவதற்கு அடிப்படைக் காரணம் தொலைவு தான்.

இவ்விதம் எல்லையற்றுப் பரந்து கிடக்கும் இப்பிரபஞ்சம் பற்றி அறிவதன மூலம் மனிதர்கள் தம் பிறப்பின் காரணத்தின் சூத்திரத்தை அறிவதற்கு முயன்று கொண்டிருக்கின்றார்கள். அரிஸ்டாட்டில், கலிலியோ, நியூட்டன் , ஐன்ஸ்டைனென்று பிரபஞ்சம் பற்றிய கோட்பாடுகள் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன.

இந்த வகையில்தான் 'அலெக்ஸாண்டர் பிரிட்மென்'னுடைய (Alexander Friedman) (1920) பிரபஞ்சம் பற்றிய கருத்துகளையும் பார்க்க வேண்டும். ஐன்ஸ்டைனின் கணித சூத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்த பிரிட்மான் பிரபஞ்சத்தின் உருவ அமைப்பு பற்றிய கோட்பாடுகளை விபரித்தார். அலெக்ஸாண்டர் பிரிட்மான் பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அளவு பற்றி ஆராய்ந்தார். இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளானது வெளியை வளைக்கும் தன்மை படைத்தது. எனவே இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அளவு பற்றி ஆராய்ந்த பிரிட்மான் 'இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் மொத்த அளவானது இப்பிரபஞ்சத்திற்கு ஒரு வடிவினை, உருவ அமைப்பினை உருவாக்கும் அளவுக்குப் போதுமானது' என எடுத்துக் காட்டினார்.

இவரது கருத்துப்படி பிரபஞ்சத்தின் உருவ அமைப்பானது மூன்று விதமாகக் காணப்படுவதற்குச் சாத்தியமுள்ளது. இவற்றை அவர் முறையே 'மூடிய பிரபஞ்சம்', 'திறந்த பிரபஞ்சம்', 'தட்டையான பிரபஞ்சம்' என மூன்றாகப் பிரித்தார். 'மூடிய பிரபஞ்சம்' என்றாலென்ன? அது எப்படியிருக்கும்? மூடிய பிரபஞ்சத்திற்கு உதாரணமாக ஒரு கோளத்தின் அமைப்பையே குறிக்கலாம். கோளமொன்றின் வடிவம் எவ்விதம் வளைந்து காணப்படுகிறதோ அவ்விதமே இப்பிரபஞ்சமும் வளைந்து மூடிய நிலையில் இருப்பதற்குச் சாத்தியங்களுள்ளன. உண்மையில் ஒருவர் இவ்வகையான மூடிய பிரபஞ்சத்தில் நேர் கோட்டில் பயணம் செய்வாரென்றால் மீண்டும் தனது தொடக்க இடத்துக்கே வந்து விடுவார். இவ்வகையான நிலையினை நமது பூமியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை மிகவும் இலகுவாக விளங்கி விடும். உதாரணமாகப் பூமியின் மேற்பரப்பில் ஓரிடத்திலிருந்து பயணத்தைத் தொடங்குமொருவர் நேராக நடந்து செல்வாரேயானல் மீண்டும் தனது தொடக்குப் புள்ளிக்கே வந்து விடுவாரல்லவா? அது போல் தான் 'மூடிய பிரபஞ்சத்தி'னுள் பயணிப்பவரின் நிலையும்.

பிரபஞ்சத்தின் உருவ அமைப்பு பற்றிய அடுத்தவகை 'திறந்த வகைப் பிரபஞ்சம்' ஆகும். குதிரையொன்றின் முதுகில் அமர்ந்து செல்லப் பாவிக்கபப்டும் 'சேணம்' போல் அதனது அமைப்பிருக்கும். இவ்வகையான 'திறந்த பிரபஞ்ச'த்திற்கு முடிவென்பதேயில்லை. இவ்வகையான பிரபஞ்சத்தில் ஓரிடத்தில் பயணத்தைத் தொடங்குபவர் நேராகச் செல்லும் பட்சத்தில் கூட மீண்டும் தனது தொடக்க இடத்துக்குத் திரும்புவதேயில்லை. போனவர் போனவரே.

மூன்றாவது வகையான பிரபஞ்சத்தின் வடிவைத் 'தட்டை'யானதெனக் குறிப்பிட்டோமல்லவா? உண்மையில் இவ்வகையான பிரபஞ்ச வடிவ அமைப்பானது மூடிய வடிவ அமைப்புக்கும், திறந்த வடிவ அமைப்புக்கும் இடைப்பட்ட வகையிலான வடிவ அமைப்பினச் சேர்ந்தது. இவ்வகையான வடிவை முடிவற்று நீண்டிருக்கும் மேசை ஒன்றின் மேற்பரப்புக்கு ஒப்பிடலாம்.

பிரபஞ்சத்தின் வடிவ அமைப்பினை அறிவதற்குரிய இன்னுமொரு வழி இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அடர்த்தியினை அறிவதாகும். இவ் அடர்த்தியின் அளவுக்கேற்ப பிரபஞ்சம் மூடியதா, திறந்ததா அல்லது தட்டையானதா என அறிந்து கொள்ள முடியும். ஒரு கன சதுர மீற்றரில் மூன்று பொருள் அணுக்களிருப்பதைப் பிரபஞ்சத்தின் பொதுவான அடர்த்தியாகக் கணித்திருக்கின்றார்கள். இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அடர்த்தியானது மேற்குறிப்பிடப்பட்ட பொதுவான அடர்த்தியிலும் கூடியதாகவிருப்பின் நமது பிரபஞ்சமானது 'மூடிய பிரபஞ்சமாக'விருக்கும். குறைவாகவிருந்தால் 'திறந்த வகைப் பிரபஞ்சமாகவும்', ஒரே அளவாகவிருந்தால் 'தட்டையான பிரபஞ்ச'மாகவுமிருக்கும்.

ஆனால் இதுவரையிலான ஆய்வுகளின்படி கண்டுபிடிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பொருள் அடர்த்தி மிகமிகச் சிறியதாகத்தானிருக்கிறது. நம் கண் முன்னால் விரிந்து கிடக்கும் இப்பிரபஞ்சத்தின் பொருள் அடர்த்தி , பொருட் செறிவு இவ்வளவு சிறியதா? நம்பவே முடியவில்லையல்லவா? பெளதிக வானியல் அறிஞர்களாலும் இதனை நம்பத்தான் முடியவில்லை. அதனால் தான் அவர்கள் இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் பெரும்பான்மையான பகுதி நமது கண்களுக்குப் புலப்படாத வகையில் இன்னுமொரு வடிவிலிருக்க வேண்டுமென நம்புகின்றார்கள். இவ்வகையான பொருளினை 'இருண்ட பொருள்' (Dark Matter) என அவர்கள் பெயரிட்டு
ஆராய்ச்சிகள் நடத்துகின்றார்கள். அப்படியானால் இவ்வகையான கரும்பொருள் எங்கே ஒளிந்துள்ளது? இவ்வகையான பொருள் ஒளிந்திருக்கச் சாத்தியமான இடங்களில் ஒன்று 'கருந்தொளை'கள் (Black Holes)அல்லது 'கரும் ஈர்ப்பு மையங்க'ளாகும். இத்தகைய கருந்தொளைகளிலிருந்து ஒளியே வெளியேறுவதில்லை என்பதனால், இவற்றினுள் ஒளிந்திருக்கும் பொருளின் அளவை அறிவது கூடத் தற்போதைய நிலைமையில் சிரமமாகத் தானிருக்கின்றது.

இவ்விதமாக நமது பிரபஞ்சத்தின் வடிவம் பற்றியும், அதன் வடிவம் இங்கு காணப்படும் பொருளின் அடர்த்தி பற்றியும், அது சம்பந்தமாகத் தொடரும் ஆய்வு பற்றியும் பார்த்தோம். இதே சமயம் நமது பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய ஆய்வுகளும் தொடரத்தான் செய்கின்றன.

தற்போது நிலவும் கோட்பாடுகளின்படி மிகப் பிரபல்யமாக விளங்கும் கோட்பாடு 'பெரு வெடிப்புக்' (Big Bang) கோட்பாடு என அழைக்கப்படுகிறது. இதன்படி இப்பிரபஞ்சமானது ஆரம்பத்தில் ஓரிடத்தில் குவிந்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அதனுள் நிலவிய ஈர்ப்புச் சக்தியின் அளவுன் அதிகரித்து, வெப்பநிலை உயர்ந்து வெடித்திருக்க வேண்டும். அவ்வெடிப்பிலிருந்து உருவானதே தற்போது காணப்படும் இப்பிரபஞ்சம் என விளக்குகிறது இக்கோட்பாடு. நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் இக்கோட்பட்டிற்குச் சாதகமாகவேயிருக்கின்றன. இதற்கு ஆதாரமாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்.

உதாரணமாக 'இப்பிரபஞ்சமானது பெருவெடிப்பின் மூலம் உருவாகியிருக்கும் பட்சத்தில் ஆரம்பத்தில் அவ்வெடிப்புடன் சேர்ந்து வெளியான பெருமலவு கதிரியக்கம் இன்றும் கூட மிகக் குறைந்த அளவிலேனும் பரவியிருக்க வேண்டும்' என ரஷ்ய விஞ்ஞானியான ஜோர்ஜ் கமாவ் என்பவர் கருதினார். இதனை 'பின்னணிக் கதிரியக்கம்' (Background Radiation) என அழைத்தார்கள். இது 1965ஆம் ஆண்டில், அமெரிக்காவின் நியுஜேர்ஸி மாநிலத்தில் அமைந்துள்ள 'பெல்' ஆய்வுக்கூடத்தில் 'ஆர்னோ பென்ஷியாஸ்' (Arno Penzias) மற்றும் ரொபேர்ட் வில்சன்' (Robert Wilson) ஆகியோரால் ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கு ஆதாரமான இன்னுமொரு விடயம் என்னவென்றால்..அதுதான் நமது பிரபஞ்சத்தின் விரியும் தன்மை. நமது பிரபஞ்சம் ஒவ்வொரு கணமும் விரிந்து கொண்டிருக்கின்றது என்ற உண்மையினை அமெரிக்க வானியல் அறிஞரான 'எட்வின் ஹபிள்' என்பவர் கண்டு பிடித்தார். இதன்படி விரியும் பிரபஞ்சத்தின் வேகம் கண்டு பிடிக்கப்பட்டது. அவ்வேகத்திலிருந்து இப்பிரபஞ்சமானது சுமார் 15 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஓரிடத்தில் குவிந்து செறிந்திருக்க வேண்டுமென்பதும் அறியப்பட்டுள்ளது. இக்கண்டு பிடிப்பு பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கு ஆதரவாகவுள்ளது. அதே சமயம் நம் மனதில் பல கேள்விகள் எழாமலில்லை. அப்படியானால் இவ்விதமான பொருட்களெல்லாம் ஆரமப்த்தில் எவ்விதம் உருவாகின? பெருவெடிப்புக்கு முன்னர் இருந்ததென்ன? நமது பிரபஞ்சம் போன்று வேறும் பல்கோடிப் பிரபஞ்சங்கள் தமது பாதைகளில் விரிந்து கொண்டிருக்கின்றனவா? அப்படியானால் இன்னுமொரு விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சமொன்றுடன் நமது பிரபஞ்சம் மோதுவதற்குச் சாத்தியங்களுண்டா? இவ்விதம் பலப் பல வினாக்கள் எழுகின்றன அல்லவா?

'பெருவெடிப்புக்' கோட்பாடு போல் இப்பிரபஞ்சம் பற்றிய வேறு சில கோட்பாடுகளும் நிலவத்தான் செய்கின்றன. அவற்றிலொன்றுதான் 'உறுதி நிலைக்' கோட்பாடு. இகோட்பாட்டினை 1948இல் பிரிட்டிஷ் வானவியல் அறிஞரான 'பிரட் ஹொய்ல்' (Fred Hoyle) மற்றும் ஆஸ்திரியர்களான 'தோமஸ் கோல்ட்' (Thomas Gold) மற்றும் 'ஹெர்மன் பாண்டி' (Hermann Bondi) என்பவர்கள் முன் வைத்தனர். இப்பிரபஞ்சமானது தற்போது எவ்விதம் காணப்படுகிறதோ அவ்விதமே இது வரை காலமும் இருந்து வந்துள்ளது. இனியும் இருக்கும். இந்நிலையில் இதன் தோற்றம் பற்றியெல்லாம் கவலைப் படுவதில் அர்த்தமேயில்லை. ஏனெனில் இப்பிரபஞ்சமானது எப்பொழுதுமே இருந்து வந்துள்ளது. இதற்கு ஆரம்பமேயில்லை. இக்கோட்பாடு பிரபஞ்சம் விரியும் தன்மையினை ஒத்துக் கொள்கிறது. ஆனால் பிரபஞ்சம் விரிவதால் அடர்த்தி குறைகிறது என்பதை இக்கோட்பாடு ஏற்றுக் கொள்ளவில்லை. இக்கோட்பாட்டின்படி வெற்றிடத்திலிருந்து எந்நேரமும் பொருளானது உற்பத்தியாகிக் கொண்டேயிருப்பதால், விரிவடைந்த போதும், பிரபஞ்சத்தின் அடர்த்தி குறைவதேயில்லை. ஆனால் இக்கோட்பாட்டினால் 'பின்னணிக் கதிரியக்க'த்தினை விளங்கப்படுத்த முடியவில்லை.

இன்னுமொரு சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெளதிக/வானியல் அறிஞரான 'ஹான்ஸ் அல்வென்'(Hannes Alfven) என்பவரின் கருத்துப்படி நமது பிரபஞ்சமானது இன்னுமொரு மாபெரும் பிரபஞ்சமொன்றின் சிறு பகுதியொன்றில் ஏற்பட்ட வெடிப்பின் விளைவுதான். இவரது கணிப்பின்படி நமது பிரபஞ்சமானது சம அளவிலான பொருளையும் எதிர்ப்பொருளினையும் கொண்டுள்ளதாகவிருக்க வேண்டும். பொருளுக்கும் எதிர்ப்பொருளுக்கும் இடையிலான மோதலின் விளைவாக உருவான பெருவெடிப்பே நம் பிரபஞ்சத்தின் விரிவுக்குக் காரணம். இவ்விதமாக பொருளும் எதிர்ப்பொருளும் ஒன்றுடனொன்று மோதும் போது அவை முற்றாக அழிந்து (Annihilation) விடுகின்றன. அவ்விதம் அழியும் போது புரோட்டான்களும், இலத்திரன்களும் உருவாகின்றன. இதனால் அழிவு நடைபெறும் இடத்திற்கண்மையில் விரைவான அதிகரிப்பு (Rapid Expansion) ஏற்படுகின்றது. ஆனால் இவ்விதம் 'அழிவு' (Annihilation) ஏற்படும் போது கட்டாயம் காமாக் கதிர்கள் உருவாகியிருக்க வேண்டும். அவற்றை மிக இலகுவாகக் காமாத் தூரதரிசினிகளால் (Gamma Telescope) அவதானிக்கக் கூடியதாகவிருக்க வேண்டும். ஆனால் அவ்விதமான அவதானிப்பெதனையும் இதுவரையில் அறியமுடியவில்லையென்பது 'ஹான்ஸ் அல்வென்'வின் கோட்பாட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவுகளிலொன்று. இதற்கு 'ஹான்ஸ் அல்வென்' 'நாமிருக்கும் பொருட்குமிழியானது அவதானிக்கப் படக்கூடிய பிரபஞ்சத்திலும் அதிகமாயிருப்பதே இதற்குக் காரணம்' என்றொரு வாதத்தை முன்வைத்தார். அவ்விதமாயின் இவ்வாதம் இன்னுமொரு எதிர்வாதத்தினை முன் வைத்துவிடும் அபாயமிருக்கிறது. அது 'இக்கோட்பாடு எதிர்வு கூறும் பிரபஞ்ச அமைப்பினை அவதானிக்க முடியாதென்றால் அதனை பரிசோதிப்பதெவ்விதம்' என்பதுதான் அது.

பிரிட்டிஷ் பெளதிகவியல்/வானியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹார்கின்ஸ்ஸின் (Stephen Hawking) கருத்து என்னவென்றால்...நமது பிரபஞ்சத்தின் இருப்பானது மூடிய நேர வளையத்தை ஒத்தது. இவரது கருத்துப்படி பெருவெடிப்பில் உருவாகும் பிரபஞ்சமானது இறுதியில் ஒரு குறிப்பிட்ட நிலையில், அதாவது பிரபஞ்சத்தின் விரிவடையும் வேகமானது அதியுயர் நிலையினை அடைந்ததும் அதுவரையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த நேரமானது பின்னோக்கி செல்லத் தொடங்கும். எதுவரை இவ்விதமாக நேரமானது பின்னோக்கிச் செல்லுமென்றால் இன்னுமொரு பெருவெடிப்பு ஏற்படும் வரையில்தான். அதன் பின்னர் நேரமானது மீண்டும் முன்னோக்கி நகரத் தொடங்கும். இவ்விதமாக இப்பிரபஞ்சமானது மீண்டும் மீண்டும் வெடித்துக் கொண்டேயிருக்கும். உண்மையில் இத்தகைய பிரபஞ்சத்தில் வசிக்கும் ஒருவருக்கு நேரம் முன்னோக்கிச் செல்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்பது கூடத் தெரியாது. ஏனெனில் அவரால் நேரம் முன்னோக்கிச் செல்வதாக மட்டும் தான் உணர முடியும். உண்மையில் தற்போது நேரம் முன்னோக்கிச் செல்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்பது கூடச் சரியாகத் தெரியாது. இவ்விதமாக இருக்கிறது ஸ்டீபன் ஹார்கின்ஸ்ஸின் சிந்தனையின் போக்கு. இன்னும் சில கோட்பாடுகளோ ஆரம்பத்தில் ஒரு பெரு வெடிப்பல்ல பல பெருவெடிப்புகள் ஏற்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிவிக்கின்றன.

[இக்கட்டுரையின் மூலப் பிரதி 5/4/1992 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளி வந்தது.தற்போது ஒரு சில மாற்றங்களுடன் பதிவுகளில் வெளிவருகிறது.]

18. மனிதரின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்!
- வ. ந. கிரிதரன் -


சிக்மண்ட பிராய்ட்"மனிதன் சூழ்நிலையின் கைதி" என்றொரு கூற்று நிலவுகின்றது. கூர்ந்து கவனிப்போமாயின் மனிதரின் வாழ்வின் பெரும்பாலான படிகளை நிர்ணயிப்பது அவர் வாழும் சமுதாயத்தில் நிலவிடும் புறச்சூழல்தான். இச் சூழலின் தாக்கம் அல்லது பாதிப்பு ஒவ்வொரு மனிதரின் மீதும் ஒரே விதமான தாக்கத்தினை வெளிப்படுத்துவதில்லை. மாறாக அவரது உடனடிச் சூழலான குடும்பச் சூழல், அவரது அகச்சூழல், என்பவற்றிற்கேற்பவே இப்பாதிப்பும் அவரிடத்தில் ஏற்படுத்தும் விளைவுகளும் இருந்து விடுகின்றன. வர்க்கங்களால், ஏற்றத்தாழ்வுகளால் பிளவுண்டு கிடக்கும் புறச்சூழல் மனிதரில் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் வலியவை. பெரும்பாலான தெளிவுள்ள மனிதர்களே இச்சூழலின் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்க முடியாமல் நீரோட்டத்தில் அள்ளுப்பட்டுச் செல்லும் கட்டையைப் போல் அள்ளுண்டு போகும்போது சாதாரணமனிதர்களின் நிலை என்ன? இத்தகைய பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைத்த ஒருசிலரே சூழலை மீறிய சரித்திர புருஷர்களாக, மானிட வழிகாட்டிகளாக உருவாகுகின்றார்கள்.

இவ்வாறு மனிதரைப் பல வழிகளிலும் ஆட்டிப்படைக்கும் இம் மனதினை மனோவியல் அறிஞரான சிக்மண்ட் பிராய்ட் இரு பகுதிகளாகப் பிரிக்கின்றார்.

1. உணர்வு மனம் (அல்லது புற மனம்)

2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்)

மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உணர்ச்சிக்கப்பாற்பட்ட ஆழ் மனமே. சகல விதமான அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளைப் புதைத்து வைத்துள்ளது. இந்த ஆழ்மனம்தான் மனிதரது சகல விதமான பிரச்னைகளிற்கும் காரணம். பகுத்தறிவு பேசுவது மனிதரின் உணர்வு மனம். ஆனால் அவரது உணர்விற்கப்பாற்பட்ட மனமான ஆழ்மனதினிலே அவர் பேசும் பகுத்தறிவிற்கேற்ற கொள்கைகள், எண்ணங்கள் பதிந்திராவிட்டால்..அவர் எவ்வளவு பகுத்தறிவு வாதம் புரிந்தும் பயனில்லை.

இன்றைய பெரும்பான்மையான சமய , அரசியல் தலைவர்களுட்பட சாதாரண மக்களீனதும் நிலை இதுதான். உணர்ச்சிகரமாகப் பேசுவதொன்று, செய்வதொன்றாக இருப்பதைப் பார்த்துப் பார்த்து அலுத்துக் கிடக்கின்றோமே.இந்நிலைக்குக் காரணம் இந்தப் புற , அக (ஆழ்)மனங்களிற்கிடையிலான போராட்டம்தான். புறச்சூழல், அகச்சூழலின் விளைவுகள் மனிதரில் புறமனதினில் ஏற்படுத்தும் பாதிப்பு செயலுருப் பெற வேண்டுமானால் அவரது ஆழ்மனமும் புறமனமும் ஒன்றாக இயங்க வேண்டியது அவசியம்.

மனிதரின் மனம் பற்றிய ஆய்வுகளில் பல புரட்சிகரமான கோட்பாடுகளைக் கண்டு பிடித்தவர் சிக்மண்ட் பிராய்ட். வீயன்னாவில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்து மருத்துவராகக் கடமையாற்றிய பிராய்ட்டினைப் பாதித்த முக்கிய விடயங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம். இவையே இவரது மனம் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் தோன்றுவதற்குக் காரணங்களாகவிருந்தன என்று துணிந்து கூறலாம்.

1. டார்வினின் கூர்ப்புக் கொள்கை. ( இக்கொள்கையின் முன்னர் ஏனைய மிருகங்களிருந்து பிரித்துப் பார்க்கப் பட்ட மனிதர் இதன் அறிமுகத்தின் பின்னரோ மிருகங்களில் ஒன்றாகக் கருதப்பட்டனர். அதே சமயம் மனிதர் பற்றிய ஆய்வுகளை இயற்கை விஞ்ஞான முறைகளிற்கேற்ப மேற்கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகளை இக்கோட்பாடு உருவாக்கியது ).

2. கஷ்டாவ் பெச்னோவின் (Gustav Fechneo- பிரபல்யமான ஜேர்மானிய தத்துவஞானி) கண்டுபிடிப்பான உளவியல் விஞ்ஞானம் (Science of Psychology). இது மனமும் விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்யப்பட முடியுமென்பதை நிலை நாட்டியது.

3. நவீன பெளதிகத்தின் புதிய கண்டுபிடிப்புகளான சக்தி பற்றிய குவாண்டம் கொள்கைகளும் பிராய்டின் மனம் பற்றிய ஆய்வுகளிற்குப் பெரிதும் உதவின. இக்குவாண்டம் கொள்கையின் படி சக்தியும் பொருளைப் போல் அளக்கப்படக் கூடியதெனவும் அதே சமயம் சக்தி அழிக்கப் பட முடியாதெனவும் அறியப் பட்டது. மேலும் இப்புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாக மனிதரும் சக்தியின் வடிவம் (Energy System) என்பதும், எந்த விதிகள் பெளதீகத்தில் உள்ளனவோ அதே விதிகளிற்கமையவே மனிதரும் இயங்குகின்றாரெனவும் நிரூபணமாயிற்று.

இதுதவிர பிராய்டின் வளர்ச்சிக்கு அவரது மருத்துவத் தொழிலும், அவரது ஆழ்ந்த அறிவும் பெரிதும் காரணங்களாகவிருந்தன. பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு 'இயக்கவியல் மனோவியல்' அல்லது 'இயக்க உளவியல்' ( Dynamic Psychology) ஆகும். இயக்கவியல் விதிகளை மனிதரின் ஆளுமைக்கும் (Personality) அவரது உடலிற்கும் பாவிக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும். நவீன விஞ்ஞான வளர்ச்சியிலும் இது ஒரு மைல்கல்லே. இயக்கவியல் உளவியல் மனிதரில் ஆளுமையிலேற்படுத்தும் மாற்றங்களை விளக்குவதாகும். இங்கு மனிதரின் ஆளுமையென நான் கூறுவது ஒரு மனிதரின் குணவியல்புகளையே குறிக்கின்றது.

பிராய்டின் கருத்துப்படி ஒரு மனிதரின் மன இயல்புகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன அல்லது அவரது மனவியல்புகள் மூன்று வடிவங்களில் செயற்படுவதாகக் கூறலாம்.

1. உணர்வு உந்தும் இயல்பு (id)
2. நான் என்னும் முனைப்பு (Ego)
3. அதியுயர் மனக் கூறு (Super Ego)

உணர்வு உந்தும் இயல்பு (id)

இந்த உணர்வு உந்தும் இயல்பென்றாலென்ன? மனிதரில் ஏற்படும் சகல விதமான ஆசைகள், உணர்வுகள் (உதாரணமாகப் பசி, பாலுணர்வு போன்றவற்றினைக் கூறலாம்) என்பவற்றிற்குக் காரணம் இந்த உணர்வு உந்தும் இயல்புதான். இவ்வாறு உருவாகும் உணர்வுகளிற்கு வடிகாலொன்றினைத் தேடுவதுதான் இந்த உணர்வு உந்தும் இயல்பினது பிரதான செயற்பாடாகும்.

பிராய்டின் கருத்துப்படி இந்த உணர்வு உந்தும் இயல்பின் செயற்பாடானது மனிதரின் வாழ்வின் பிரதான நோக்கமான இன்பத்தினை அடைதலைப் (Pleasure Principle) பூர்த்தி செய்வதாகவேயுள்ளது. ஆனால் மேற்படி உணர்வு உந்தும் இயல்பின் பிரதான குறைபாடென்னவென்றால்..இது வெளி உலகைப்பற்றி , யதார்த்த நிலைமைகளைப் பற்றிக் கவலைபடுவதேயில்லை. உதாரணமாகப் பசியினால் பீடிக்கப்பட்டுள்ள குழந்தையொன்றினை நோக்குவோம். முதலாவதாக இத்தகைய பசி உள் உணர்வு (Hungry Instinct) எவ்விதம் குழந்தையிடம் உருவாகின்றதென்ற கேள்விக்குப் பிராய்டின் விடை, இவ்விதமான உள்ளுணர்வுகள் மனிதரின் பிறவியிலேயே உருவாகின்றன என்பதுதான். பசியால் பீடிக்கப்பட்டுள்ள குழந்தை அதனைப் பூர்த்தி செய்வதற்காக அழுகின்றது. இவ்விதம் அழும் குழந்தையிலேற்படும் பாதிப்புகள் அதன் உணர்வுகள் உந்தும் இயல்பு (id) வளர்ச்சிக்கு மேலுமுதவுகின்றன. இவ்விதம் அழும் குழந்தையிலேற்படும் உணர்வு உந்துமியல்பானது இருவிதமான செயல்முறைகளில் அல்லது படிகளில் உருவாகுகின்றன.

ஆரம்பப் படிமுறை (Primary Process). இக்கட்டமானது குழந்தையின் மனதில் அப்பசி உணர்வினைத் தீர்க்கக் கூடிய உணவு பற்றிய பிம்பத்தினை (image) இனங்காட்டி விடுகின்றது. இவ்விதம் உணர்சிகளிற்கு வடிகாலான தீர்வினை பிம்பத்தின் மூலம்மனதில் உருவாக்கும் செயற்பாட்டினை பிராய்ட் ஆசையைப் பூர்த்தி செய்யும் செயற்பாடென்கின்றார் (Wish Fullfillement). பிராய்டின் கருத்துகளின்படி நாம் காணும் கனவுகளெல்லாம் இத்தகைய ஆசையைப் பூர்த்தி செய்யும் செயற்பாடுகளே. ஆனால் இவ்வுணர்வு உந்தும் இயல்பானது உள்ளத்தில் ஆசையினைப் பூர்த்தி செய்யத் தூண்டும் அக பிம்பத்தினையும்(Subjective memory image), அப்பிம்பத்தின் உண்மையான புற வடிவத்தினையும் (மேற்படி குழந்தை உதாரணத்தில் 'உணவினையும்') வேறுபடுத்திப் பார்க்கும் தனமையற்றதாகவே இருந்து விடுகின்றது. அதிலும் இத்தகைய ஆசையினைப் பூர்த்தி செய்யும் பொருளின் பிம்பத்தினை மனதினில் இனக்காணுவதால் மட்டும் அக்குழந்தையின் பசி தீர்ந்து போய்விடுவதில்லை. உண்மையான உணவினை அதற்கு ஊட்டுவதால் மட்டுமே அதன் பசி தீர்ந்து விடுகின்றது. பசியால் அழும் குழந்தையின் பசியினைத் தீர்க்கும் உணவின் விம்பம் உள்ளத்தில் உருவாகுவது ஆரம்பப் படியென்றால் அப்பசி உணர்வினை உண்மையில் பூர்த்தி செய்வதற்கு இரண்டாவது படியொன்றின் (Secondary Process) அவசியமும் தேவையாகின்றது. மனதின் மற்றொரு இயல்பான 'நான் என்னும் முனைப்புடன்' (Ego) அது சம்பந்தப் பட்டுள்ளது.

2. நான் என்னும் முனைப்பு (Ego)

உணர்வு உந்தும் இயல்பானது பாலியல் உணர்வு அல்லது பசி உணர்வு அல்லது வேறெதாவது உணர்வுகள் தோன்றும் பொழுது அதனைத் தீர்ப்பதற்கு தவிக்கின்றது. அது வெளியுலகைப் பற்றியோ வேறெதனைப் பற்றியோ கவலைப் படுவதில்லை. அதே சமயம் அது மேற்படி உணர்வுகளிற்கு தீர்வினைத் தரக்கூடிய வடிகாலின் உண்மை வடிவினையும், உள்ளத்தே உருவாகும் அது பற்றிய விம்பத்தினையும் வேறு படுத்திப் பார்க்கும் தன்மையினயும் கொண்டிருக்கவில்லை. அதனால் தான் பசியால் அழும் குழந்தை கைக்குக் கிடைத்ததை வாயினுள் போட்டு விடுகின்றது. இச்சமயத்தில் தான் மனதின் ஆளுமையினை உருவாக்கும் மற்றொரு இயல்பான 'நான் என்னும் முனைப்பு' (Ego) முக்கியத்துவம் பெறுகின்றது. இது உணர்வு உந்தும் இயல்பினைப் (id) போலல்லாது உலகினைப் பற்றிய யதார்த்த நிலையினைக் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றது. ஆனால் 'உணர்வு உந்தும் இயல்போ' இதற்கு மாறாக 'இன்பத்தை அடைதல்' பற்றியே கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. இந்த 'நான் என்னும் முனைப்பே' 'உணர்வு உந்தும் இயல்பினால்' உருவான ஆசைகள், அபிலாஷைகள் போன்ற உணர்வுகளிற்குத் தீர்வினை வடிகாலினைக் கூறுகின்றது. உண்மையில் 'இந்த நான் என்னும் முனைப்பு' வழிமுறைகளைத் தான் கூறுகின்றதேயொழிய அம்முறை சரியா அல்லது தவறா அல்லது நன்மை பயக்குமா தீமையினை ஏற்படுத்துமா என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையற்றதாகவே இருக்கின்றது. இத்தகையதொரு நிலையில் தான் மனம் செயற்படும் முறைகளில் மூன்றாவதான 'அதியுயர் மனக் கூறு' (Super Ego) முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்குகின்றது.

3. 'அதியுயர் மனக் கூறு' (Super Ego)

உதாரணமாகப் பாலியல் உணர்வுகளால் தீவிரமாக பாதிக்கப் பட்ட ஒரு மனிதன்ஒருவன் நிலையினைப் பார்ப்போம். அவனில் கிளர்ந்தெழும் உணர்வுகள் உணர்வு உந்தும் இயல்பின் விளைவினால் ஏற்படுவதாகும். அதனை அடைவதற்குரிய வழிமுறைகளை அடையாளம் கண்டு அவனைச் சிறிது தடுத்து வைப்பது 'நான் என்னும் முனைப்'பின் தன்மையாகும். அம்மனிதன் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ள விழைகின்றான். அதனை அவன் பலாத்காரமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். அல்லது அவன் வாழும் சமூகத்தில் நிலவும் சட்ட திட்டங்களிற்கேற்பவும் அவனால் அவனது உணர்வுகளிற்கு வடிகாலினைத் தேட முடியும். இச்சமயத்தில் தான் 'அதியுயர் மனக்கூற்றின்' (Super Ego) பங்களிப்பு அவசியமாகின்றது.இவ்'வதியுயர் மனக்கூறான'து மேற்படி மனிதனின் குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றோர்கள், ஆசிரியர்கள், மத குருமார்கள் முதலான அவன் மேல் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களினூடாகவும், சமுதாயத்தில் நிலவும் சட்ட திட்டங்களின் விளைவாகவும் அவனடைந்த பாதிப்புகளிற்கேற்பவே நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்க்கின்றது.

மனித ஆளுமை....

ஆக மொத்தத்தில் மனிதரின் ஆளுமையினை நிர்ணயிப்பவை உணர்வு உந்தும் இயல்பிற்கும், நான் என்னும் முனைப்பிற்கும், அதி யுயர் மனக் கூறிற்கும் இடையிலேற்படும் மோதல்களின் விளைவேயென்று துணிந்து கூறலாம்.

இவ்விதம் மனதின் செயற்பாடுகளைச் செய்வதற்குரிய சக்தியினை மனம் எவ்வாறு பெற்றுக் கொள்கின்றது? பிராய்ட் இச்சக்தியினை 'மனச் சக்தி ' என்கின்றார். மின்சக்தி காந்த சக்தி வெப்பச் சக்தி என்பதைப் போல் இம் மனச் சக்தியும் சக்தியின் ஒரு வடிவமே.உடலினை இயக்கும் உடற் சக்திதான் தேவைப்படும் போதெல்லாம் மனச் சக்தியாகவும் மாறிக்கொள்கின்றதென்று கருதினார் சிக்மண்ட் பிராய்ட். மின்சக்தி பல்வேறு வேலைகளைச் செய்யப் பயன்படுத்த்தப் படுவதைப் போல், மனச் சக்தியும் உளவியல் வேலைகளான் சிந்தித்தல், உணர்தல், ஞாபகப் படுத்துதல் முதலானவற்றை செய்வதற்கு உதவுகின்றது என அவர் நம்பினார்.

அன்றாடம் பல்வேறு வகைப் பட்ட நெருக்கடிகளிற்கிடையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் நாம் அந்நெருக்கடிகளிருந்து தப்புவதற்கு மூடத்தனமான கோட்பாடுகளையெல்லாம் துணைக்கழைத்து ஆறுதல் அடைகின்றோம். இத்தகையதொரு சூழலில்தான் எம்மன இயல்புகளை, அது செயற்படும் போக்குகளையெல்லாம் அறியவேண்டுவதன் அவசியம் அதிகமாகின்றது. இவ்விதம் எம்மை நாமே அறிந்து கொள்வதன் மூலம், சுத்திகரித்துக் கொள்வதன் மூலம்புறச் சூழலின் பாதிப்புகளிற்குச் சரியாக முகம் கொடுத்துச் செயற்படக் கூடிய அகச் சூழலை உருவாக்குவதன் மூலம் எம்வாழ்வு பயன் பெறுவது மட்டுமல்ல எம் சமுதாயப் பங்களிப்பினையும் செய்யக் கூடியதாகவிருக்கும்.

நன்றி: திண்ணை, பதிவுகள், தேடல்

19. பிரபஞ்சத்து மாயங்கள்! 'கரும் ஈர்ப்பு மையங்கள் '!

- வ.ந.கிரிதரன் -


சாதாரண மனிதரிலிருந்து விஞ்ஞானிகள் வரை மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்துப் புதிரென்று ஒன்றிருந்தால் அது இந்தக் கருந்துளைகள் (Black Holes) தான். உண்மையில் இவற்றைத் தமிழில் கருந்துளைகள் என மொழிபெயர்ப்பதை விடக் 'கரும் ஈர்ப்பு மையங்கள் ' என மொழி பெயர்ப்பதே மிகவும் பொருத்தமாகவிருக்குமெனக் கருதுகின்றேன்சாதாரண மனிதரிலிருந்து விஞ்ஞானிகள் வரை மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்துப் புதிரென்று ஒன்றிருந்தால் அது இந்தக் கருந்துளைகள் (Black Holes) தான். உண்மையில் இவற்றைத் தமிழில் கருந்துளைகள் என மொழிபெயர்ப்பதை விடக் 'கரும் ஈர்ப்பு மையங்கள் ' என மொழி பெயர்ப்பதே மிகவும் பொருத்தமாகவிருக்குமெனக் கருதுகின்றேன். ஏனெனில் இவை மிகவும் ஈர்ப்புச் சக்தி மிக்கவை. ஒளிக்கதிர்களையே வெளியேற முடியாத அளவிற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையான இவற்றை கரும் ஈர்ப்பு மையங்களென அழைப்பதே சரியென்றெனக்குப் படுவதால் இவை இனி கரும் ஈர்ப்பு மையங்கள் என்றே அழைக்கப் படும்.

ஒளிக்கதிர்களையே தப்பியோட விடாது சிறைப்பிடித்துவிடுமளவிற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையாக இவை இருப்பதால் இவை மிகவும் விந்தையானவை. இரகசியமானவை. புதிரானவை. இவற்றை நேரடியாகப் பார்க்கும் வல்லமை படைத்தவர்கள் இருப்பார்களேயானால் அவர்களால் தாங்கள் கண்டதை எமக்குத் தெரிவிப்பதற்குக் கூட முடியாது. ஊகங்கள், பக்க விளைவுகள் இவற்றைக் கொண்டு மட்டும் தான் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள, அனுமானித்துக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.

கரும் ஈர்ப்பு மையங்கள் உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களே. விண்ணில் நாம் காணும் நட்சத்திரங்களை அவற்றின் திணிவினை சூரியனின் திணிவுடன் ஒப்பிட்டுப் பிரிக்க முடியும். இவ்விதம் பெறப்படும் திணிவு சூரிய திணிவு (Solar Mass) என அழைக்கப் படும்.நட்சத்திரங்களின் திணிவானது ஒரு குறிப்பிட்ட சூரியத் திணிவிலும் அதிகாக இருக்கும் பொழுது அந் நட்சத்திரம் கரும் ஈர்ப்பு மையமாக உருவாகும் வாய்ப்பு உண்டு. இத்திணிவுக்கும் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானிகளிலொருவரான சந்திரசேகருக்கும் மிக முக்கியமானதொரு தொடர்பு உண்டு. அதுவென்ன என்பதை இக்கட்டுரையின் இறுதியில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

ஐன்ஸ்டனின் பொதுச் சார்பியற் கோட்பாடானது (General Theory Of Relativity) இத்தகைய கரும் ஈர்ப்பு மையங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை எதிர்வு கூறிய போதும் , சுமார் 200 வருடங்களுக்கு முன்னரே ஆங்கிலேயரொருவரும் பிரெஞ்சுக்காரரொருவரும் இத்தகைய பொருட்கள் இப்பிரபஞ்சத்தில் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் கூறியுள்ளார்களென்பதும் வியப்பிற்குரியது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோன் மைக்கல் என்பவரால் 1783 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரையொன்றில் மிகவும் ஈர்ப்புச் சக்தி கூடிய நட்சத்திரங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோன் மைக்கலின் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்ட சில வருடங்களின் பின்னர் பிரெஞ்சு விஞ்ஞானியான 'மார்கிள் டி லாப்பிளாஸ் ' என்பவர் தான் எழுதிய 'இவ்வுலகின் அமைப்பு முறை ' பற்றிய நூலிலும் இது போன்ற கருதுகோள்களை முன்வைத்திருந்தாரென அறியக் கிடக்கின்றது. ஆனால் ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியற் கோட்பாடே முதன் முதலாகக் கணிதச் சூத்திரங்கள் அடிப்படையில் கரும் ஈர்ப்பு மையங்கள் பற்றித் தற்போது அறியப் பட்ட அர்த்தத்தில் எதிர்வு கூறின. உண்மையில் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகளுக்குக் கிடைத்த இன்னுமொரு வெற்றியென்றே இதனைக் கூறலாம். அதே சமயம் 'வெளி ', 'நேரம் ' என்பவை சுயாதீனமற்றவை. சார்பானவை என்பதை முதன் முதலாக ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியற் கோட்பாடு இவ்வுலகிற்கறிவித்ததும் குறிப்பிடத் தக்கது.

ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியற் கோட்பாட்டின்படி மிகமிக அதிகமான ஈர்ப்புச் சக்தி மிக்க நட்சத்திரங்கள் தம்மைச் சுற்றியுள்ள வெளியினை அதிகமாக வளைத்து விடுகின்றன. இவ்வளைவிற்குள் அகப்படும் எவற்றையும் அவை உறுஞ்சி ஏப்பம் விட்டு விடுகின்றன. மிகவும் சிக்கலான விசயம் என்னவென்றால், சாதாரண மனித அனுபவத்தைக் கொண்டு வெளி வளைகிறதென்பதைக் கற்பனை செய்து பார்ப்பதே சிரமமாக நம்ப முடியாததாகவிருக்கின்றது. இந்நிலையில் கரும் ஈர்ப்பு மையங்களைக் கூடக் கண்ணால் பார்க்க முடியாத நிலைமையிருக்கையில், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் கரும் ஈர்ப்பு மையங்கள் வெளியினை வளைப்பதை எப்படி நம்புவது ?

நட்சத்திரங்கள் பிரபஞ்சத்தில் பரந்து காணப்படும் தூசு, வாயு, ஆகியன ஒன்று சேர்வதன் விளைவாக உருவாகின்றன. இவ்விதமாகத் தம்மிடையிலான ஈர்ப்புச் சக்தியின் விளைவாக ஒன்று சேரும் வாயு அணுக்களில் சுய அசைவு பெருமளவு காணப்படும். இதனால் ஐதரசன் அணுக்கள் தமக்குள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கொள்ளத் தொடங்கும். இறுதியில் இவ்விதம் மோதிக் கொள்ளூம் ஐதரசன் அணுக்களிடையில் வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க மோதலின் விளைவாக அவை அழிந்து ஹீலியம் அணுக்களை அவை உருவாக்கும். இவ்விதம் ஐதரசன் அணுக்களின் அழிந்து ஹீலியம் அணுக்கள் உருவாகும் போது ஐதரசன் அணுக்களின் திணிவினொரு பகுதி சக்தியாக மாறுகின்றது. இச்சக்தி மிகவும் அதிகமானது. பொருளானது அழிந்து உருவாகும் சக்தியின் அளவு எத்தனையோ கோடிக்கணக்கான யூல்களிலிருக்கும். இதனையே ஐன்ஸ்டைனின் மிகவும் புகழ் பெற்ற சூத்திரமான E = MC ^2 நிரூபிக்கின்றது. சிறிய திணிஅவு கூட ஒளி வேகத்தின் வர்க்கத்தினால் பெருக்கப் படுவதன் காரணமாக மிகவும் அதிகமான அளவிலிருந்து விடுகின்றது. இத்தகைய தாக்கங்களே ஐதரசன் குண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தப் படுகின்றன. உண்மையில் நட்சத்திரங்களை மாபெரும் ஐதரசன் குண்டுகளென்று கூடக் கூறலாம்.

இவ்விதமாக நட்சத்திரங்களில் சக்தி வெளிப்படும் போது உருவாகும் வெளிப்புறம் நோக்கிய அமுக்கமும், அவற்றின் அணுக்களிற்கிடையில் காணப்படும் உட்புறம் நோக்கிய ஈர்ப்புச் சக்தியும் ஒன்றினையொன்று ஈடு படுத்துவதால் நட்சத்திரங்கள் நீண்ட காலத்திற்கு நிலையாக ஒளிரும் ஆற்றலினைப் பெறுகின்றன. நட்சத்திரங்களின் திணிவிற்கேற்ப மேற்படி சுடர்களின் ஒளிரும் காலகட்டமும் வேறுபடுகின்றன. திணிவு கூடிய நட்சத்திரங்கள் அவற்றில் காணப்படும் ஈர்ப்புச் சக்தியின் அதிக அளவு காரணமாகக் கூடிய தாக்குதல் வேகத்தினைக் கொண்டிருப்பதால் விரைவில் எரிந்து விடுகின்றன. நமது சூரியனைப் பொறுத்தவரையில் இவ்விதம் நிலையாக இருக்கக் கூடிய காலகட்டம் சுமார் பத்து பில்லியன் வருடங்கள். ஏற்கனவே ஐந்து பில்லியன் வருடங்கள் கழிந்து விட்டன. இன்னும் ஐந்து பில்லியன் வருடங்கள் மீதி இருக்கின்றன. அச்சமயம் மனித இனம் வேறு சுடர்க் கூட்டங்களிலுள்ள கோள்களிலொன்றில் அல்லது தானே உருவாக்குமொரு பிரமாண்டமான செயற்கைக் கோளொன்றில் தங்குவதற்குாிய ஆற்றலினைக் கொண்டிருக்க வேண்டும்.

இவ்விதமாக எரியும் நட்சத்திரங்கள் ஒரு நிலையில் எரிவதற்குரிய எரிபொருள் முடிவடைந்த நிலையில் குளிர்ந்து சுருங்கத் தொடங்கும். இவ்விதமாகச் சுருங்கும் சுடர்களின் எஞ்சியுள்ள திணிவின் அளவிற்கேற்ப அவற்றின் முடிவும் அமைந்து விடுகின்றன. இவ்விதமாக எரிந்த நிலையிலுள்ள நட்சத்திரங்களின் திணிவானது 1.44 சூரிய திணிவிற்கும் (Solar Mass) குறைவாகயிருப்பின் அந்நட்சத்திரங்கள் 'வெண் குள்ளர் ' (White Dwarf ) என்னும் நிலையினை அடைந்து விடுகின்றன. மேற்படி திணிவானது 1.44ற்கும் 3ற்குமிடையிலான சூரிய திணிவினைக் கொண்டிருந்தால் அவை 'நியூத்திரன் நட்சத்திரங்களாகவும், 3 சூரிய திணிவிற்குமதிகமானவையாக இருப்பின் அவ்விதமான நட்சத்திரங்கள் 'கரும் ஈர்ப்பு மையங்கள் ' ஆகவும் மாறிவிடுகின்றன. இந்தத் தொடர்பினைக் கண்டு பிடித்தவர் இந்திய விஞ்ஞானியான சந்திரசேகர். இதனால் தான் மேற்படி எல்லை 'சந்திரசேகர் எல்லை' ( Chandrasekhar Limit) எனக் கூறப்படுகின்றது. இதற்காகவே பல வருடங்களின் பின்னால் நோபல் பரிசும் வழங்கப் பட்டது.

எந்தவொரு பொருளினையும் குறிப்பிட்ட அளவிற்கு அமுக்கிச் சிறுக்க வைப்பதன் மூலமும் கரும் ஈர்ப்பு மையங்களை உருவாக்க முடியுமென ஐன்ஸ்டனின் சூத்திரங்களின் உதவியுடன் கண்டறிந்து கூறியவர் ஜேர்மன் விஞ்ஞானியான 'கார்ல் சுவார்ஸ்சைல்ட்' ( Karal Schwarzschild ) என்பவர். இவரது ஆய்வின் படி நமது சூரியனை மூன்று கிலோ மீற்றர் ஆரையுள்ளதொரு கோளமாக ஆக்குமளவுக்கு அழுத்ததினைப் பிரயோகித்தால், அது போல் நமது பூமியினை 0.9 மீற்றர் அளவுள்ள கோளமாக மாற்றும் வகையில் அழுத்ததினைப் பிரயோகித்தால் சூரியனும் பூமியும் கூடக் கரும் ஈர்ப்பு மையங்களாக மாறிவிடுமென்பதை இவரது ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.

கரும் ஈர்ப்பு மையங்களிற்குள் அகப்பட்ட எவையும் திரும்பி வரமுடியாமலிருப்பதால் அவற்றை அறிவதற்கு அவற்றிற்கு அண்மையிலிருக்கும் ஏனைய நட்சத்திரங்களில் அவை ஏற்படுத்தும் தாக்கங்களைக் கொண்டு அறிய முடியும்மென விஞ்ஞானிகளின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது பிரபஞ்சத்தில் அதிகமாகக் காணப்படும் 'இணை நட்சத்திரங்கள் ' ( Binari Stars ) இவ்விடயத்தில் உதவுகின்றன. இவ்விதமானதொரு இணை நட்சத்திரமான 'சைனஸ் ' நட்சத்திரக் கூட்டத்திலிருந்து பெருமளவில் x கதிர்கள் வருவது அவதானிக்கபட்டது. பிரபல விஞ்ஞானியான 'ஸ்டீபன் ஹார்கின்ஸ்'சின் ஆய்வுகளின்படி மேற்படி 'சைனஸ் ' இணை நட்சத்திரங்களிலுள்ள ஒரு நட்சத்திரமானது கரும் ஈர்ப்பு மையமாகும். அதன் ஈர்ப்பினால் அவ்விணையின் மற்ற நட்சத்திரத்திலிருந்து பொருளானது கரும் ஈர்ப்பு மையத்தினை நோக்கி ஈர்க்கபடுகின்றது. இதன் விளைவாக பொருளானது சூடேறி வெளிப்படும் கதிர்களே அவதானிக்கப்பட்ட x கதிர்களாகும். மேற்படி x கதிர்களின் இயல்பிலிருந்து ஈர்க்கும் நட்சத்திரத்தின் திணிவு ஆறு சூரிய திணிவு எனக் கணக்கிடப்பட்டது. 'சந்திரசேகரின் எல்லையின்' படி இந்நட்சத்திரம் இந்நட்சத்திரம் ஒரு கரும் ஈர்ப்பு மையமாகவிருக்கலாமெனக் கருதப்படுகின்றது.

இத்தகைய கரும் ஈர்ப்பு மையங்களின் அபரிதமான ஈர்ப்பு ஆற்றலினால் ஈர்க்கப்படும் பொருளானது இறுதியில் சிதைந்து அதனையுள்ளடக்கியுள்ள வெளிகூட இல்லாதொழிந்து விடுகின்றது. இந்நிலையில் கரும் ஈர்ப்பு மையத்தினுள் நமது பிரபஞ்சத்துப் பெளதிக விதிகள் எல்லாமே செயலிழந்து விடுகின்றன. கரும் ஈர்ப்பு மையங்களை ஐன்ஸ்டைனின் கணிதச் சூத்திரங்கள் எதிர்வு கூறுவதைப் போல் கரும் ஈர்ப்பு மையங்களிற்கு எதிரான 'வெண் துளைக 'ளினையும் (Whit Holes) எதிர்வு கூறுகின்றன. மேற்படி கரும் ஈர்ப்பு மையங்களையும் வெண்துளைகளையும் இணைக்கும் அமைப்புகளும் பிரபஞ்சத்தில் காணப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக பெளதிக வானியல் விஞ்ஞானிகளின் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. இவற்றை Worm Holes ' எனவும் அழைக்கின்றனர். தற்போதைய நிலையில் பிரபஞ்சத்தின் பிரமாண்டமான அளவு காரணமாகவும், மனித வாழ்வின் குறுகிய காலகட்டம் காரணமாகவும் பிரபஞ்சத்தினூடு ஊடறுத்து பல ஒளி வருடங்களைக் கடந்து பயணிப்பது முடியாத காரியமாகவிருந்து விடுகின்றது. இந்நிலையில் மேற்படி 'புழுத் துளைகள் ' பிரபஞ்சத்தின் தொலைவினை மனித இனமானது தனது வாழ்நாளிலேயே கடப்பதற்கான சாதனமோவெனவும் விஞ்ஞானிகள் ஐயுறுகின்றார்கள். பூமியின் ஈர்ப்புச் சக்தியினையும் மீறும் ' தப்பும் வேகத்தில் ' ( Escape Velocity ) செல்லும் ராக்கட்டினுள் பிரயாணிக்கும் மனிதர், தற்போதைய நிலையில் அசாத்தியமாகக் கருதப்படும் 'கரும் ஈர்ப்பு மையங்களி 'னூடான பயணம் சாத்தியமாகும் பட்சத்தில் மேற்படி 'புழுத் துளைகள் ' மூலம் பிரபஞ்சம் முழுவதும் பயணம் செய்யும் காலம் வருமோவென வானியற் பெளதிகவியலாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

உசாத்துணை நூல்கள்:

1. Frozen Star By George Greenstein
2. A Brief History of Time By Stephen Hawking
3. One Two Three infinity by George Camow
4. Relatively Speaking by Eric Chaisson
5. Black Holes and Warped Space Time by William J.Kaufmann
6. 'Stephen Hawking : quest for a theory of every thing ' By Kitty Fergusson

நன்றி: வீரகேசரி (இலங்கை), திண்ணை.காம், பதிவுகள்.காம்.

20. ஆய்வு: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு'

- வ.ந.கிரிதரன் -


ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுகக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன....உள்ளே


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner