இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2007 இதழ் 94 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
தொடர்நாவல்!
அமெரிக்கா!

- வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்!

இளங்கோவின் குறிப்பேட்டிலிருந்து..........

நியூயார்க்கின் துறைமுகத்தில் நின்றபடி தனது குடிமக்களை, வந்தேறு குடிகளை, அடக்கு ஒடுக்கு முறைகளுக்குள்ளாகி ஓடோடிவரும் அகதிகளை வரவேற்கும் சுதந்திரதேவி ஏன் சிலையாக நிற்கிறாளென்று இப்பொழுதுதான் தெரிகிறது? சுதேசிகளுக்கொரு சட்டம். விதேசிகளுக்கொரு சட்டம். சுதேசிகளுக்குள்ளும் வர்ண அடிப்படையில் நிலவுகின்ற இன்னுமொரு சட்டம். அபயக் குரலெழுப்பி ஓடிவரும் வாழ்க்கை வழக்கம் போலவே உருண்டோடிக் கொண்டிருக்கிறது. ஒரு சில சமயங்களில் சலிப்பு மிகவும் அதிகமாகி நம்பிக்கை தளர்ந்து விடுகிறது. அச்சமயங்களிலெல்லாம் எந்தவிதமான எதிர்மறையான சிந்தனைகளும் தாக்கவிடாமலிருப்பதற்காக நேரம் காலமென்றில்லாமல் நகர் முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருப்பேன். அருள் கூட சில சமயங்களில் என் அலைச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அறையிலேயே தங்கி விடுவான். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, சூழலை, சமூக வாழ்க்கையினை எனப் பல்வேறு விடயங்களை அறியும்பொருட்டுக் கவனத்தைத் திருப்பினேன். அவ்வப்போது நகரத்தின் பிரதான நூலகத்துக்குச் செல்வதுமுண்டு. ஒரு சில சமயங்களில் புரூக்லீன் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் நண்பர்களைச் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதலாக அளவளாவி வருவதுமுண்டு.

இதே சமயம் அனிஸ்மான் கூறியபடி மான்ஹட்டனிலிருந்த பலசரக்குக் கடையொன்றை நடாத்திக் கொண்டிருந்த குஜராத் தம்பதியினரிடமிருந்து வேலை வழங்கற் கடிதமொன்றினையும் எடுத்து வேலை செய்வதற்குரிய அனுமதிப்பத்திரத்துக்காக விண்ணப்பித்தோம். அதே சமயம் அனிஸ்மான் கூறியபடியே எம் விடயத்தில் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைத்தத்னாலேற்பட்ட மனித உரிமை மீறல்கள் விளைவித்த பாதிப்புகளுக்காக அமெரிக்க அரசிடம் நட்ட ஈடு கேட்டும் விண்ணப்பித்தோம். நாட்கள்தான் வேகமாகச் சென்று கொண்டிருந்தனவே தவிர காரியமெதுவும் நடக்கிறமாதிரித் தெரியவில்லை. இதே சமயம் மீண்டும் பகல் நேரங்களில் வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தோம். இவ்விதமாகக் காலம் சென்று கொண்டிருந்தபோதுதான் ஒருநாள் நண்பகற் பொழுதில் மகேந்திரனைச் சந்தித்தேன். இவன் கிரேக்கக் கப்பலொன்றில் பல வருடங்களாக வேலை பார்த்து விட்டு அண்மையில் அக்கப்பல் நியூயார்க் வந்திருந்த சமயம் பார்த்து இங்கேயே தங்கி விட்டவன். இப்பொழுது என்னைப்போல் வேலை தேடிக் கொண்டிருந்தான். ஒரு நாள் வழக்கம் போல் பகல் முழுவ்தும் அலைந்து திரிந்து சலித்துப் போய் நாற்பத்திரண்டாவது வீதியிலிருந்த பிரதான பஸ் நிலையத்தில் பொழுதினை ஓட்டிக் கொண்டிருந்தபொழுது அவனாகவே வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தான் வேலை தேடித்தருமொரு முகவனைச் சந்திக்கப் போவதாகவும் , அவன் மிகவும் திறைமைசாலியென்று கேள்விப்பட்டிருப்பதாகவும், நான் விரும்பினால் நானும் அவனுடன் அந்த முகவனைச் சந்திக்க வரலாமென்றும் கூறினான். அவனது கூற்றிலிருந்த உற்சாகம் சலித்துக் கிடந்த என் மனதிலும் மெல்லியதொரு நப்பாசையினை ஏற்படுத்தியது. அத்துடன் மகேந்திரன் கூறிய இன்னுமொரு விடயம்தான் எனக்கு மீண்டும் அத்தகையதொரு நப்பாசையினை ஏற்படுத்தக் காரணமாகவிருந்தது. அவனறிந்தவகையில் இந்த முகவன் அவனைச் சந்திக்கும் முதல்நாளிலேயே உடனடியாக வேலைக்கு அனுப்பி விடுவானாம். அதுதான் அவனது சிறப்பாம். அவன் அமெரிக்க மண்ணில், குறிப்பாக நியூயார்க் மாநகரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் மக்களனைவருக்கும் ஆபத்தில் அபயமளிக்கும் கடவுளாம். அவன் இவ்விதமாகவெல்லாம் அந்த முகவனைப் பற்றி அளந்து கொட்டவே நான் கேட்டேன்: "இதையெல்லாம் எங்கையிருந்து நீ அறிந்து கொண்டனி". அதற்கவன் வழியில் சந்தித்த ஸ்பானிஷ்காரனொருவன் கூறியதாகவும், அவன் தந்திருந்த பத்திரிகையொன்றிலும் இந்த முகவனின் விளம்பரம் வந்திருந்ததாகவும், அதில் கூட இவனைச் சந்திக்கும் எவரையும் உடனடியாகவே வேலை செய்யுமிடத்திற்கு அனுப்பிவிடுவதில் இவன் சமர்த்தனென்று குறிப்பிடப்பட்டிருந்ததைத் தான் பார்ததாகவும் கூறியபொழுது எனக்கும் அந்த முகவன்பேரில் நல்லதொரு அபிப்பிராயமேற்பட்டது. இதன்விளைவாக நானும் மகேந்திரனுடன் சேர்ந்து அந்த முகவனிடம் செல்வதற்குச் சம்மதித்தேன். விடா முயற்சியில்தானே வாழ்க்கையின் வெற்றியே தங்கியுள்ளது. ஊக்கமது கைவிடேலென்று அவ்வைக் கிழவி கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துரைத்திருக்கின்றாளல்லவா.

பப்லோ ஒரு ஸ்பானிஷ்கார முகவன். மிகவும் அழகிய தோற்றமும், மயக்கும் குரல்வாகும் வாய்க்கப்பட்டவன். அவனும் நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கண்மையிலுள்ள சிறியதொரு காரியாலயத்தில் தன் தொழிலை நடாத்திக் கொண்டிருந்தான். நாங்களிருவரும் அவனைச் சந்தித்தபொழுது அவன் சிறிது ஓய்வாகவிருந்தான். ஓரிருவர்தான் அவனைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தார்கள். அவர்களையெல்லாம் அனுப்பிவிட்டு எம்மிடம் வந்தவன் எங்களிருவரையும் தன்னறைக்கு அழைத்துச் சென்றான். எங்களிருவரின் சோகக் கதைகளையும் மிகவும் ஆறுதலாகவும், அனுதாபத்துடனும் கேட்டான். அதன்பிறகு அவன் கூறினான்: "உங்களைப் போல்தான் நானும் ஒருகாலத்தில் தென்னமெரிக்காவிலிருந்து இந்த மண்ணுக்குக் கனவுகளுடன் காலடியெடுத்து வைத்தவன். அதனால் உங்களது உள்ளத்துணர்வுகளை என்னால் நன்கு உணர முடிகிறது. அன்று நானடைந்த வேதனையான அனுபவங்களின் விளைவாகத்தான், இவ்விதமாக இந்த மண்ணில் நான் அன்று வாடியதைப் போல் வாடும் உங்களைப் போன்றவர்களுக்கு உதவுவதற்காக இந்த வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தையே ஆரம்பித்தேன். இதற்காக நான் அறவிடுவதும் கூட அப்படியொன்றும் பெரிய கட்டணமல்ல. ஐம்பது டாலர்கள் மட்டும்தான்".

அதன்பின் எங்களிருவரையும் வேலை தேடுவதற்கான விண்ணப்படிவங்களை நிரப்பும்படி தந்தான். தான் எங்களிருவரையும் நல்லதொரு தொழிற்சாலைக்கு அனுப்பப் போவதாகவும் , அதற்கேற்ற வகையில் அனுப்புமிடத்தில் எம் வேலை அனுபவங்களைக் கூறவேண்டுமெனவும் அறிவுரைகள் தந்தான். ஐம்பது டாலர்களைக் கட்டிய மறுகணமே தொலைபேசியில் யாருடனோ எம்மிருவரின் வேலை விடயமாகக் கதைத்தான். உடனடியாகவே அனுப்பி வைப்பதாகவும் உறுதியளித்தான். அதன்பிறகு எங்கள் பக்கம் திரும்பி "நண்பர்களே! இன்று நீங்கள் யார் முகத்தில் விழித்தீர்களோ! உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. உங்களிருவரையும் நகரிலுள்ள நல்லதொரு 'மெயிலிங்' தொழிற்சாலைக்கு அனுப்பப் போகின்றேன். வேலையும் அவ்வளவு சிரமமானதல்ல. மெயில்களை தரம் பிரிப்பதுதான் பிரதானமான வேலை. அது தவிர வழக்கம்போல் தொழிற்சாலைக்குரிய பொதுவான வேலைகளுமிருக்கும். வேலையை மட்டும் ஒழுங்காகச் செய்தீர்களென்றால் உங்களிருவருக்கும் நல்லதொரு எதிர்காலமே இருக்கிறது. என்னை உங்களின் கடவுளாகவே கொண்டாடுவீர்கள்." இவ்விதம் கூறியவன் குயீன்ஸ்சில் 'ஸ்டெயின்வே' பாதாள இரயிற் தரிப்பிற்கண்மையிலிருந்த தொழிற்சாலையொன்றின் முகவரியைத் தந்து, அங்கு சென்றதும் மனேஜர் டோனியைச் சந்திக்கும்படி கூறி வாழ்த்தி அனுப்பி வைத்தான்.

தொடர்நாவல்: அமெரிக்கா! - வ.ந.கிரிதரன் - அத்தியாயம் இருபத்தொன்று: கார்லோவின் புண்ணியத்தில்... .மகேந்திரனோ இதனால் பெரிதும் உற்சாகமாகவிருந்தான். "பார்த்தியா. ஆள் வலு கெட்டிக்காரன்தான். இவனைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான்" என்றான். இதே சமயம் என் நெஞ்சிலும் ஆனந்தம் கூத்தாடாமலில்லை. இந்த வேலை கிடைத்ததும் இரவு அருளிடம் கூறி அவனை அதிசயிக்க வைக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன். அத்துடன் அவனையும் அடுத்தநாள் பப்லோவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த வேண்டுமென்றும் மேலதிகத் திட்டமொன்றினையும் போட்டேன். இவ்விதமான திட்டங்கள், கனவுகளுடன் அத்தொழிற்சாலையினைச் சென்றடைந்தோம். 'ரிசப்ஷனில்' இருந்தவளிடம் மனேஜர் டோனியைச் சந்திக்க வந்த விடயத்தைக் குறிப்பிட்டோம். அச்சமயம் அவ்வழியால் வந்த நடுத்தர வயதினான வெள்ளை நிறத்தவனொருவன் "நான் தான் நீங்கள் குறிப்பிடும் டோனி. யார் உங்களை அனுப்பியது பப்லோவா" என்றான். நாம் அதற்கு "ஆம்" என்று பதிலளிக்கவுமே அவன் உடனடியாக எங்களிருவரையும் அருகிலிருந்த உணவறைக்குக் கூட்டிச் சென்றமர்த்தினான். அத்துடன் பின்வருமாறும் கூறினான்: "உண்மையைச் சொன்னால் எனக்கு இந்த ப்ப்லோவை யாரென்றே தெரியாது. அண்மைக் காலமாகவே இவன் என் பெயரை எப்படியோ தெரிந்து கொண்டு உங்களைப் போல் பலரை இங்கு இவ்விதமாக அனுப்பி வைக்கின்றான்." . எங்களிருவருக்கும் பெரிதும் திகைப்பாகவிருந்தது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. டோனி மேலும் தொடர்ந்து "யாரவன்? வேலை வாய்ப்பு தேடித்தரும் முகவனா?" என்றான். அதற்கு நாங்களிருவரும் 'ஆமென்று ' தலையாட்டவே அவன் கேட்டான்" "இதற்காக நீங்களேதாவது பணம் கொடுத்தீர்களா?" இதற்கும் நாம் பரிதாபமாக 'ஆமென்று ' பதிலிறுக்கவே அவன் சிறிது பரிதாப்பட்டான். அத்துடன் கூறினான்: "இந்த விடயத்தில் நான் கூறக் கூடியது இது ஒன்றுதான். இந்த விடயத்தை இங்குள்ள காவற துறையினரிடம் சென்று முறையிடுங்கள். இல்லாவிட்டால் இவன் தொடர்ந்தும் உங்களைப் போல் பலரை ஏமாற்றிக் கொண்டேயிருப்பான். என்னை இந்த விடயத்தில் நீங்கள் சாட்சியத்திற்காக அழைத்தால் வந்து கூறத் தயாராகவிருக்கிறேன்."

அச்சமயத்தில் மகேந்திரனின் முகத்தைப் பார்த்தேன். என்னைப் பார்ப்பதற்கே கூச்சப்பட்டுக் கொண்டிருந்தான். வெளியில் வந்தபொழுது சிறிது நேரம் இருவருமே ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. காவற் துறையினரிடம் முறையிடும்படி டோனி கூறியது நினைவுக்கு வந்தது. எப்படி முறையிடுவது? நாங்களோ வேலை செய்வதற்கும் அனுமதியற்ற சட்டவிரோதக் குடிகள். சட்டவிரோதமாக வேலை செய்வதற்காகப் பணம் கொடுத்தோமென்று எவ்விதம் அவர்களிடம் முறையிடுவது? எங்களைப் போன்றவர்களின் நிலையினைப் பயன்படுத்திப் பணம் பறிப்பதற்குத்தான் எத்தனையெத்தனை கூட்டங்களிங்கே?

அச்சமயம் மகேந்திரன் பப்லோவைப் பற்றி 'அவனைச் சந்திக்கும் முதல்நாளிலேயே உடனடியாக வேலைக்கு அனுப்பி விடுவானாம். அதுதான் அவனது சிறப்பாம். அவன் அமெரிக்க மண்ணில், குறிப்பாக நியூயார்க் மாநகரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் மக்களனைவருக்கும் ஆபத்தில் அபயமளிக்கும் கடவுளாம்' என்று கூறியது நினைவுக்கு வந்தது. இலேசாகச் சிரிப்பும் வந்தது. "என்ன சிரிக்கிறாய்?" என்றான் மகேந்திரன்.

"நீ அவனைப் பற்றி ஆரம்பத்தில் கூறியதை நினைச்சதும் சிரிப்பு வந்த'தென்றேன்.

அவன் புரியாத பார்வையுடன் என்னைப் பார்த்தான்.

நான் கூறினேன்: "நீ தானே சொன்னாய் அவன் முதல்நாளிலேயே வேலைக்கு அனுப்பி விடுவதில் வல்லவனென்று. அதை நினைச்சுத்தான் சிரித்தேன். ஒரு விதத்திலை அதுவும் சரிதான். எங்களையும் உடனேயே வேலை செய்யுமிடத்துக்கு அனுப்பி விட்டான்தானே. வேலைக்கு அனுப்புவதிலை கெட்டிக்காரனறுதானே சொல்லுகிறான். வேலையை எடுத்துத் தருவதிலை கெட்டிக்காரனென்று அவன் கூறவில்லைதானே. இந்த விதத்திலை அவன் தன்னைப் பற்றிப் பண்ணியிருக்கிற விளம்பரம் சரிதானே"

இதைக் கேட்டதும் மகேந்திரனின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே!

அன்றிரவு அறைக்குத் திரும்பியபொழுது அருள்ராசா கேட்டான்: "ஏதாவது கொத்தியதா?".சென்ற விடயம் வெற்றியா , தோல்வியா அல்லது காயா பழமா என்பதற்குப் பதிலாக நாம் 'கொத்தியதா' என்ற சொல்லினைப் பாவிப்பது வழக்கம். அந்த வழக்கத்தில்தான் அருள்ராசா அவ்விதம் கேட்டான். ஆனால் அவனுக்குப் பப்லோவென்றோர் அரவம் கொத்திய விடயத்தை எவ்விடம் தெரிவிப்பது?

[தொடரும்]

அமெரிக்கா (கடந்தவை)....உள்ளே

ngiri2704@rogers.com


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner