இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி  2008 இதழ் 97  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

.மீள்பிரசுரம்: திண்ணை.காமிலிருந்து.
குறிப்பேட்டுப் பதிவுகள்......

- வ.ந.கிரிதரன் -


அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பித்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. ... மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக் காட்டுவதாலும், அவற்றைப் பதிவு செய்தாலென்ன எனத் தோன்றியதாலும் அவற்றை இங்கே பதிவு செய்கிறேன். இது அந்த வகையிலென் முதலாவது பதிவு. காதல், அரசியல், சமூகம், இயற்கை, பாரதி, பிரபஞ்சமென விரியும் பதிவுகளிவை[அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பத்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. 'மார்க்ஸியமும், இலங்கைத் தமிழர் பிரச்சினையும் பற்றியதொரு சிறு ஆய்வு' என்னும் தலைப்பில் 15 பக்கங்களிலொரு ஆய்வுக் கட்டுரை அப்போதிருந்த என் மனநிலைக்கேற்ப 29/12/1982இல் எழுதப்பட்டுள்ளது. அக்கட்டுரை நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் ஒன்று: 'கம்யூனிஸ்ட்டுக்களும், கடவுளும், மதவாதிகளும், பரிணாமமும்' எனவும், அத்தியாயம் இரண்டு: 'மார்க்ஸியமும் அதன் மீதான நாத்திகம் பயங்கரவாதம் பற்றிய குற்றச்சாட்டுக்களும்' எனவும், அத்தியாயம் மூன்று: 'மானுட வர்க்கப் பிரச்சினைகளும், அக உணர்வுகளும் பற்றியதொரு கற்பனாவாதம்' எனவும், இறுதியான அத்தியாயம் நான்கு: 'புரட்சிகளும், புரட்சிகர எதிர்ப்புரட்சிகர சக்திகளும் (இலங்கைத் தமிழர் பிரச்னையுட்பட)' எனவும் மேற்படி கட்டுரையானது பிரிக்கப்பட்டுள்ளது. அன்றைய என் வயதுக்குரிய ஆவேசமும், சீற்றமும் கட்டுரை முழுவதும் இழையோடுகின்றதை அறிய முடிகின்றது. இது போல் பல கட்டுரைகள் என் குறிப்பேட்டில் காணக்கிடைக்கின்றன. உதாரணத்திற்கு 'போரும் மனிதனும், இன்றைய உலகும் நாளைய உலகும்', 'தத்துவஞானம் பற்றியதொரு விசாரம் அல்லது ஆய்வு', 'மனிதனும் கவலைகளும்', 'நிர்வாணமும் மானுடமும் (புதிய தத்துவம்)', 'இயற்கை மனிதனும், புதியதொரு தத்துவமும்', 'இயற்கையின் விதியொன்று', 'மனிதனின் இயற்கை, புற, அக உலகத்துடனான மோதல்கள் அல்லது ஆதிமனிதனிலிருந்து ...(ஒரு சிக்கலான பிரச்னை பற்றிய கண்ணோட்டம்)', 'கலையும் மனிதனும்', 'மானுடத்தின் வழிகாட்டிகள்', 'மனித வாழ்வும் துறவும்', 'ஆண் பெண் பற்றிய தொடர்புகள்', 'புத்தகங்களும் மனிதனும்', 'எனது குருமார்'... இவ்விதம் பல்வேறு தலைப்புகளில் காணப்படும் கட்டுரைகள், கவிதைகளெல்லாம் அன்றைய என் மனநிலையினைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

'மார்க்சிம் கார்க்கி'யின் புகழ்பெற்ற நாவலான 'தாய்' தான் முதன் முதலில் எனக்கு இடதுசாரித் தத்துவத்தினை, மார்க்சியத்தினை முதன் முதலில் கோடிழுத்துக் காட்டியது. அதன் பின் பல ஆண்டுகள் கழித்து என் மொறட்டுவைப் பல்கலைக்கழக இறுதியாண்டுகளில் மாஸ்கோ பதிப்பகத்தாரால் தமிழில் வெளியிடப்பட்ட பல மார்க்ஸிய நூல்களைக் குறிப்பாக 'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை', 'டூரிங்கு மறுப்பு', 'எங்கெல்சின் குடும்பம், சொத்து, தனியுரிமை', பல்வேறு மார்க்சிய அறிஞர்களால் எழுதித் தொகுக்கப்பட்ட 'வரலாற்றுப் பொருள் முதல்வாதமும், இயங்கியல் பொருள்முதல்வாதமும்', லெனினின் பல்வேறு நூல்கள் போன்றவற்றைப் பின்னர் நான் படிப்பதற்கு ஆரம்பத்தில் சுழி போட்ட நூலாக மேற்படி 'தாய்' நூலினைக் குறிப்பிட முடியும். பின்னர் இந்தத் 'தாய்' நாவல் என் சகோதரன், மற்றும் அவனது நண்பர்களுக்கும், இன்னும் பலருக்குமென எண்பதுகளில் தொடர்ந்தும் தன் பங்களிப்பினைத் தன் இறுதி மூச்சுவரை செய்யவும் தவறவில்லை.

மேற்படி 'தாய்' நாவல் எனக்குக் கிடைத்த வரலாறு சுவையானது. என் பால்யகாலத்துப் பருவத்தில் நான் ஈழநாடு மாணவர் மலரில் எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் 'மரங்கொத்தியும் மரப்புழுவும்' என்னுமொரு உருவகக் கதை எழுதியிருந்தேன். என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்த மிகச்சிறியதொரு சிறுவர் கதை அது. அதனை அப்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'வெற்றிமணி' என்னும் சிறுவர் மாத இதழ் பிரசுரித்திருந்தது. அச்சஞ்சிகையினை வாங்கும் பொருட்டு வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரும் சமயங்களிலெல்லாம் யாழ் நகரின் சந்தைக்கண்மையிலிருந்த 'அன்பு புத்தகசாலை'க்குச் செல்வது வழக்கம். அந்தப் புத்தகசாலையின் உரிமையாளர் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியானின் சகோதரரான அன்றைய பிரபல எழுத்தாளர்களொலொருவராக விளங்கிய 'புதுமைலோலன்'தான். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த வாலிபரே (கோபால் அல்லது பூபால் இவ்விதமொரு பெயர் அவருக்கு இருந்ததாக ஞாபகம்) கோர்க்கியின் 'தாய்' நாவலை எனக்கு இரவல் தந்துதவியவர். அவர்கூட யாழ் 'பி.ஏ.தம்பி லேனி'லுள்ள வீடொன்றில்தான் வாடகைக்கிருந்தார்). அவருடன் ஒப்பிடும்பொழுது வயதில் மிகவும் சிறுவனாகவிருந்த எனக்குத் தனது நூல்களைத் தந்துதவினார் அவர். செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' நாவலினையும் அங்குதான் வாங்கினேன்.

மேற்படி குறிப்பேட்டிலுள்ள பல கட்டுரைகள், கவிதைகள் முதலான ஆக்கங்கள் அப்போது நான் படித்த மேற்படி மார்க்சிய நூல்கள், நாவல்களின் தாக்கங்களினாலும், அப்போது நாடிருந்த சூழல் ஏற்படுத்திய தாக்கங்களின் விளைவுகளினாலும் என் எண்ணத்திலேற்பட்ட எதிர்த்தாக்கங்களே. அப்போது, அந்த வயதில் நான் புரிந்து கொண்ட தத்துவங்களினை நிலவிக் கொண்டிருந்த சமூக, அரசியல் மற்றும் பிரபஞ்சச் சூழல்களின் பின்னணியில் வைத்து ஆராய்ந்ததன் விளவான என மனப் பதிவுகளே. ஒருவகையில் அப்போது என் மனதில் பொங்கிக் கொண்டிருந்த உணர்வுகளுக்கு வடிகால்களாகவும் விளங்கின மேற்படி குறிப்பேட்டுப் பதிவுகளெனவும் கூறலாம்.

மிகவும் புகழ்பெற்ற நாவலாசிரியர்களான டால்ஸ்டாய், ததாவ்ஸ்கி போன்றோரின் புகழ்பெற்ற நாவல்களான 'புத்துயிர்ப்பு', 'குற்றமும் தண்டணையும்' போன்றவற்றையும், அண்டன் செகாவ் போன்றோரின் சிறுகதைகளையும் முதன் முதலில் அப்பொழுதுதான் வாசித்தேன். மேற்படி மாஸ்கோ பதிப்பக நூல்களையெல்லாம் கொழும்பின் கொம்பனித்தெருவிலுள்ள இத்தகைய நூல்களை விற்கும் புத்தகசாலையொன்றில் வாங்கினேன். ஒரு சிறு வட்டத்தினுள் சிறைப்பட்டுக் கிடந்த சிந்தனைகளை முதன் முதலில் அவ்வட்டத்தினை உடைத்து வெளியேற வைத்துச் செழுமையும் விரிவும் படுத்தியவை மேற்படி மார்க்ஸிய நூல்களும், இலக்கியப் படைப்புகளுமே.

இந்த நூல்களில் சிலவற்றை 1983 கலவரத்தின் முன் சந்தித்த பொழுது நண்பர் எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் பெற்றுச் சென்றிருந்தார். அன்றைய சூழலில் நான் சந்தித்த சிலரில் ஆழமான நூலறிவும், மார்க்ஸிய சிந்தனைகளும் கொண்டு விளங்கிய இளைஞர்களில் இவரும் ஒருவர். மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ச் சங்க வெளியீடான நுட்பம் இதழுக்கு நான் எழுதிய 'பாரதி கருத்து முதல்வாதியா பொருள்முதல்வாதியா?' என்னும் கட்டுரையினை வாசித்து விட்டு என்னுடன் சந்திக்க ஆவல்கொண்டு சந்தித்ததுடன் எமக்கிருவருக்கிடையிலுமான தொடர்பு முதன் முதலில் ஏற்பட்டது. இவர் நல்லதொரு சிறுகதையாசிரியரும் கூட. அப்போது சிரித்திரன் நடத்திய சிறுகதைப் போட்டியொன்றில் இவரது சிறுகதையொன்று ,'பாஸ்' என்று நினைக்கின்றேன், பரிசு பெற்றிருந்தது. அவருடன் சந்திக்கும் வேளைகளிலெல்லாம் 'புத்துயிர்ப்பு' போன்ற நாவல்களுட்படப் பல்வேறு சமூக அரசியல் விளைவுகள் பற்றியெல்லாம், மார்க்சியத் தத்துவங்கள் பற்றியெல்லாம் உரையாடிக் கொண்டிருந்தது ஞாபகத்திலுள்ளது. பின்னர் பல வருடங்களின் பின்னர் நாடு இந்தியப் படைகளின் ஆதிக்கத்திலிருந்த காலத்தில் கடிதமொன்று போட்டிருந்தார். அதில் மறக்காமல் மேற்படி 'பாரதி..' பற்றிய கட்டுரையினைக் குறிப்பிட்டிருந்தார். அதில் 'கொஞ்ச நாட்களுக்கு முன்னர் பாரதியின் மெய்ஞானம் என்றொரு நூல் வெளிவந்துள்ளது. பாரதி கருத்துமுதல் வாதியா பொருள் முதல்வாதியா என நீர் எழுப்பிய கேள்வியை - நீர் அன்று கூறியது போல் கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல்வாதத்திற்கும் ஒரு பாலமாக அவர் இருந்ததாக அல்ல - முழுமையாக ஆய்கிறது இந்நூல். அண்மையில் வெளிவந்த ஒரு நல்ல தத்துவார்த்த ஆய்வு நூல் இது என்பதை நான் துணிந்து கூறுவேன். ந.ரவீந்திரன் என்பவரால் எழுதப்பட்ட இந்நூல், பாரதி பற்றிய மயக்கங்களுக்கு பூரணமான தெளிவினை ஊட்டுவதாக உள்ளது. பாரதியின் ஆன்மிக நிலையையும், அவரது அரசியலில் அவர் பொருள்முதல்வாத நிலையை எடுப்பதையும் சுட்டிக்காட்டி ஒரு முரண்பட்ட மனிதராகி பாரதியை மறுத்து, ஆன்மிகம், அரசியல் இரண்டிலும் அவரது இயங்கியல், பொருள்முதல்வாத நிலையின் கூறுகளை இனங்கண்டு, தெளிவாக்குகிறது இந்நூல்.' என அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அன்று நிலவிய அரசியல், சமூகச் சூழல் பற்றிய அழகானதொரு விவரிப்பாகவும், இலக்கியத் தரம் மிக்கதாகவும் விளங்கிய அக்கடிதத்தினை அப்போது நான் வெளியிட்ட 'குரல்' கையெழுத்துப் பிரதியிலும் பதிவு செய்திருந்தேன். அச்சமயதில் யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் பயின்று கொண்டிருந்த என் கடைசித் தங்கையும் IPKF: Indian  Peace Killing Force என்னும் தலைப்பில் அப்போதிருந்த நிலையினைப் படம் பிடித்துக் கடிதமொன்றினை எழுதியிருந்தார். அதனையும் மேற்படி 'குரல்' கையெழுத்துப் பிரதியில் பதிவு செய்திருந்தேன். இவற்றைச் சமயம் வரும்போது பதிவுகளிலும் பதிவு செய்வேன்.

மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக் காட்டுவதாலும், அவற்றைப் பதிவு செய்தாலென்ன எனத் தோன்றியதாலும் அவற்றை இங்கே பதிவு செய்கிறேன். இது அந்த
வகையிலென் முதலாவது பதிவு. காதல், அரசியல், சமூகம், இயற்கை, பாரதி, பிரபஞ்சமென விரியும் பதிவுகளிவை. இவற்றில் பாரதி பற்றி எழுதிய சில கட்டுரைகளும், கவிதைகள் சிலவும் அவ்வப்போது சஞ்சிகைகள் மற்றும் பதிவுகள் இணைய இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.-

13/09/1982

கவிதை: இந்த மனிதர்! இந்த உலகம்! இந்த பிரபஞ்சம்!

ஆ...இந்த மெல்லிய இளந்தென்றல்...
இடையில் கலந்து வருமெழில் மலர்களின்
சுகந்த நறுமணம்...
பசுமை மண்டிக் கிடக்கும் வயல்வெளிகளில்
பாடிப் பறந்திடும் வானம்பாடிகளின்
இன்ப கானங்கள்...
ஆகா! ஆகா! ஆகா!
எத்துணை இனிமையானவை!
எத்துணை இன்பமானவை!

பதுங்கிக் காடுகளில் புகுந்துவரும்
நதிப்பெண்களே!
நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேன்
தெரியுமா? இளமை கொஞ்சுமெமுங்களெழிற்
துள்ளல் நடைகண்டு மோகத்தீயாலெந்தன்
நெஞ்சம் வேகுகின்றதே! புரியவில்லையா
பெண்களே!

மெல்லிய கருக்கிருளில் ஆழ்ந்து கிடக்கும்
அதிகாலைப் பொழுதுகளில்,
தூரத்தே ஒதுங்கி நின்று கண்சிமிட்டும்
நட்சத்திரத் தோகையரே!
உங்களைத்தான் தோகையரே!
நீங்கள்தான் எத்துணை அழகானவர்கள்!
எத்துணை அழகானவர்கள்!
நான் உங்களையெல்லாம் எவ்வளவு
நேசிக்கின்றேன் தெரியுமா? என்னினிய
தோழர்களே!
இந்த மண்ணினை, இந்தக் காற்றினை,
இந்த வெளியினை, அடிவானினை,
இந்த எழில் மலர்களை, மரங்களை,
இந்தச் சூரியனை, இதன் ஒளியினை,
இவற்றையெல்லாம் நான்
மனப்பூர்வமாக நேசிக்கின்றேன்.

இதோ இங்கே வாழும் இந்த மானுடர்களை,
ஆபிரிக்க நீக்ரோக்களென்றாலென்ன,
அமெரிக்க வெள்ளையரென்றாலென்ன,
அரபு முஸல்மானென்றாலென்ன,
ஆசிய தேசத்தவரென்றாலென்ன,
இவர்களையெல்லாம்,
இந்த மானுடர்களையெல்லாம்
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.
விரிந்த, பரந்த இப்பிரபஞ்சத்துக்
கோள்களை, கதிர்களை, பால் வீதிகளை,
ஆங்கு வாழும் தகைமைபெற்ற
உயிர்களையெல்லாம்
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.
நான் நேசிக்கின்றேன்.
இந்த உயிர்களிற்காகவே
இந்தப் பிரபஞ்சத்துப் புதிர்களை
விடுவிப்பதற்காகவே
என் நெஞ்சில் பொங்குமுணர்வுகளை
எழுத்தாக வடிக்கின்றேன்.
ஆமாம்! ஆமாம்! ஆமாம்!
ஆமாம்! ஆமாம்! ஆமாம்1

5/3/1983

கவிதை: பொறியின் கதை!

சிறு வித்தொன்றிலிருந்தொரு பெருவாலமரமும்
செழித்திலை தளிர்த்து நிற்கும்.
உருவொன்றினளவிற்கும்
உள்ளடக்கத்திற்கும் தொடர்புண்டாமோ?
உண்டென்பார் மதியற்ற பெருமூடர்!
ஒரு சிறு பொறியுமொருபோதில் பெருநெருப்பெனவே
ஓங்கிச் சுவாலை விட்டிடுமேயென்பதனையறியாரே
ஒருவேளை அவ்விதம் எண்ணுவர்; மதியிலிகாள்!
கருத்தொன்றின் பெருவீச்சில்
உருச்சிறுத்தேயுலர்ந்தொழிந்திட்டவரசுகளின்
வரலாறோ பலப்பல.
ஒரு சத்தியத்தின் ஒளிநாடி பறக்கின்ற பொறியெனிலோ
ஒருநாளில் பெரும் சுவாலையெனவேயொளி வீசிச் சுடர்ந்திடுமே!
அதனொளியில் சடசடத்துதிர்ந்துவிடும் அழுக்காறுச் சுவரெலாமே.
எரிந்து, பொசுங்கிச் சுவாலையெனவே ஆயிடுமே தீமையெலாம்.
உருவொன்றினளவிற்கு முள்ளடக்கத்திற்கும் தொடர்புண்டாமோ?
உண்டென்பார் மதியற்ற பெருமூடர்!
ஒரு சிறுபொறியுமொருபோதில் பெருநெருப்பெனவே
ஓங்கிச் சுவாலை விட்டிடுமேயென்பதனை யறியாரே
ஒருவேளை யிவ்விதம் எண்ணுவர்; மதியிலிகாள்!

29/05/1983

இலட்சியவாதிகளும் காதலும்!

'வலிமை சேர்ப்பது தாய் முலைப்பாலடா!
மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்' -- பாரதியார்.


ஏதாவதொரு இலட்சியத்திற்காக வாழ்பவர் மத்தியில் (விடுதலைப் போராளிகளுட்பட) காதலைப் பற்றியும், பெண்ணைப் பற்றியுமொரு சந்தேகக் கண்டோட்டம் நிலவுகின்றது. 'காதல்', 'பெண்' என்பவை தங்கள் இலட்சியத்தைப் பாழடித்து விடுவன என இவர்கள் கருதுகின்றார்கள். ஆயின் இது உண்மையா? லெனினோ, கார்ல் மார்க்ஸோ அல்லது காந்தியடிகளோ காதலை இகழவில்லையே. அம் மகாபுருஷர்களின் வாழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாகவன்றோ அவர்தம் காதற்கிழத்தியர் விளங்கினர்.

மேற்கூறிய சந்தேகத்திற்கு முக்கிய காரணம்... பெண்களை அடிமைகளாக வெறுமனே உடலிச்சை தீர்க்கும் போக கருவிகளாகக் கருதும் ஆண் தலையெடுத்த சமுதாய அமைப்பில் வாழுபவர்கள் மற்றவர்களைப் போல் பெண்களையும், காதலையும் வெறுமனே போகக் கருவிகளாக எண்ணிவிடுவதனால் தான் 'எங்கே அந்த மோகம் தங்களைத் திசை திருப்பி விடுமோ' என்று கருதுகின்றார்கள். உண்மையில் இவர்களைப் புரிந்துகொண்ட பெண்களால் இவர்களது இலட்சிய வாழ்வு மேலும் சிறப்படையுமே தவிர வேறல்ல. சரியான துணை கிடைத்து விட்டால் ஓர் ஆணின் வெற்றிக்கு எதுவுமே தேவையில்லை. பெண்கள் ஆண்களைப் போலவே சகலவித வேலைகளிலும் ஈடுபடக் கூடியவர்களாகவும், சில வேளைகளில் மிகுந்த மனோதிடமிக்கவர்களாகவும் விளங்குகின்றார்கள்.

மானுட வாழ்வின் வெற்றியே தூய காதலின் வெற்றியிலேயே தங்கியுள்ளது. இலட்சிய தம்பதிகள் தத்தமது மனக் கட்டுபாடுகள் மூலம் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்கின்றார்கள். காதலைக் காமத்தின் வெளிப்பாடாக மட்டும் கருதுபவர்கள்தான், பெண்களை வெறுமனே போகக் கருவியாகக் கருதுபவர்கள்தான், மன அடக்கமற்றவர்கள்தான் 'காதலையும்', 'பெண்'ணையும் கண்டதும் காததூரம் ஓட வேண்டுமென்று அலறுகின்றார்கள்.

'காதலினாலுயிர் தோன்றும் இங்கு
காதலினாலுயிர் வீரத்திலேறும்' - பாரதியார்.


மார்ச் 6, 1983.
கவிதை: ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!

நானொரு பைத்தியமாம். சிலர்
நவில்கின்றார். நானொரு கிறுக்கனாம்.
நான் சொல்வதெல்லாம் வெறுமுளறலாம்; பிதற்றலாம்.
நவில்கின்றார். நவில்கின்றார்.
ஏனென்று கேட்பீரா? நான் சொல்வேன். அட
ஏனெழுந்தீர்? நீருமெனை நினைத்தோரோ 'கிறுக்கனென'.
ஆதிமானுடத்திலிருந்தின்றைய மானுடம்' வரையில்
வரலாறுதனை
அறிந்திடப் போகின்றேன் அப்படியே அச்சொட்டெனவே
என்றதற்கியம்புகின்றார் எள்ளி நகைக்கின்றார் இவரெலாம்.
நான் சொன்னதெல்லாம் இதுதான். இதுதான். இதுதான்:
'நுண்ணியதில் நுண்ணியதாய், மிக நுண்ணியதாயுளவற்றினை
நோக்கிடும் வலுவிலொரு தொலைகாட்டி சமைத்து
ஒளி விஞ்சிச் சென்றுவிடின்
ஆதிமானுடத்தினொளிதனையே
அட நான் முந்திட மாட்டேனா என்ன. பின்
வரலாறுதனை அறிந்திட மாட்டேனாவொரு
திரைப்படமெனவே'. என்றதற்குத்தான் சொல்லுகின்றார்
கிறுக்கனாமவை உளறலாம்; பிதற்றலாம்.
'ஒளி வேகத்தில் செல்வதென்றாலக்கணத்தில்
நீரில்லையும் உடலில்லை. நீளமெலாம் பூச்சியமே.
நான் சொல்லவில்லை. நம்ம ஐன்ஸ்டைன் சொல்லுகின்றார்'
என்றே
நவில்கின்றார்; நகைக்கின்றார் 'நானொரு கிறுக்கனாம்'.
நியூட்டன் சொன்னதிற்கே இந்தக் கதியென்றால்
நாளை ஐன்ஸ்டைன் சொன்னதிற்கும் மாற்றம் நிகழ்ந்திடாதோ?
அட நான் சொல்வேன் கேட்பீர். நானுமிப் பிரபஞ்சந்தனையே
சுற்றிச் சுற்றி வருவேனென்றன் விண்கலத்திலவ்வேளை
செகத்தினிலிவ் வாழ்வுதனின் அர்த்தம்தனைச்
செப்பிவைப்பேன்.
நல்லதிவையெலாம் கிறுக்கல், பிதற்றல், உளறலென்பவரெல்லாம்
நவின்றிடட்டுமவ்வாறே. அதுபற்றியெனக்கென்ன கவலை.
எனக்கென்ன கவலையென்பேன்.

-
மார்ச் 6, 1983.-

நவம்பர் 11, 1982
கவிதை: சிறகுகளை விரிப்பீர்!

இரும்புச் சங்கிலிகளெங்கும் பரந்து, கவிந்து
வீதிகளினொவ்வொரு முடுக்குகளிலும்
தனித்து நிற்கும் சோகங்கள்....
ஓ! தோழரே! மெல்ல எழுவீர்.
ஆம். மெல்ல எழுவீர்.
படர்ந்து கிடக்கும் விலங்குச் சிறைகளை
உடைத்தெழுவீர். நொறுக்கிச் சிதைப்பீர்.
உங்களால், ஆம் உங்களால்தானது
முடியக் கூடும் தோழரே.
உங்கள் சிந்தனைச் சூளைகளில்
புடமிட்ட கருவூலங்களால்
ஆம்! நிச்சயம் உங்களால்தான்
அவை முடியக் கூடும் தோழரே.
உமது உறுதிய திண்ணெஞ்சும்
உமது சீரிய நல்வாழ்வும்
தோழரே!
வரலாற்றின் படிக்கற்கள் நீவிர்தான்.
நீவிரேதான்.
விடுதலைச் சிற்பிகளே! உமது
வேலையினைத் தொடங்கிவிடுவீர்.
கொட்டிடும் பனியிலும், கூதலிலும்
துப்பாக்கிக் குண்டுகளின் புகைச்சலிலும்
இருண்ட சிறைக் கோட்டங்களின்
தனிமைகளிலும்
உமது பணி சிறக்கட்டும்.
மெல்ல ஆனால் உறுதியாக உமது சிறகுகளை
விரிப்பீர். விரிப்பீர்.
மெல்ல ஆனால் உறுதியாகச்
சொர்க்கமொன்றின் தரிசனத்தினை
நீவிர் நிச்சயம் காண்பீர்.

- நவம்பர் 11, 1982 -

நவம்பர் 10, 1982
கவிதை: கோழைகளோ நாம்!

முள்ளந்தண்டொடிந்த கோழைகளோ
நாமெலாம். பொய்மை
படர்ந்துளதே பொய்கைப்
பாசியென.
நெஞ்சத்துரமெலாம் வற்றியதே
கோடை நீரென.
ஐயகோ! கேடுகெட்ட வாழ்வு
வாழ்கின்றோமே பேடிகளாய்
நாமெல்லாம்.
எலும்பெல்லாம் நடுநடுங்கிக்
கிடந்திடுதே உக்கிய தண்டெனவே.
மானமிழந்து, மதிகெட்டு எம்வாழ்வெலாம்
பாழானதே பாலைகளாயிதுவரை.
துப்பாக்கிகள் கொணர்ந்து வரும்
சிப்பா(பே)ய்'களின் சிரிப்பொலியில்
நடுங்கிச் செத்திடுவமே நாணமற்ற
பாபிகளாய்.
எரிகிறதே நெஞ்செல்லாம்; கனன்றெறிகிறதே
ஓங்கிடும் காட்டுச் சுவாலையெனவே. செஞ்
சுவாலையின் தீக்கங்குகள் வீசி வீசிப்
பரவட்டும் நாற்றிசையும். வீசி வீசிப்
பரவட்டும் நாற்றிசையும்.

- நவம்பர் 10, 1982 -

மே 29, 1983

கவிதை: கற்பனைப் பெண்ணே!

கற்பனைப் பெண்ணே! எங்கேயடீ போயொளிந்து கொண்டாய்?
பாலஸ்தீனத்து மணல்மேடுகளிற்குள்ளா?
அங்கு நிச்சயம் போயிருக்க முடியாது. அங்குனக்கென்ன
வேலை.
கற்பனையில் கனவு கண்டிட அவர்களிற்கெங்கே நேரம்?
தர்மத்திற்கான புனிதப் போரொன்றினையங்கு நீ
கண்டிடலாம்.
சத்தியத்தின் ஆவேசத்தில் வீசிடுங் காற்றின்
வெம்மையினை அங்கு நீ ஸ்பரிசித்திடலாம்.
ஒருபுறத்தே மாடமாளிகளைகளில் கூட கோபுரங்களில்
ஆணவத்தினெக்காளிப்பு தாண்டவமாடிடுகையில்
மறுபுறத்திலோ
காடுகளிலும் மேடுகளிலும் பள்ளத்தாக்குகளிலும்
'மரணத்துள் வாழு'மொரு நிலையிங்கேன்?
கற்பனைப் பெண்ணே! அடீ கற்பனைப்பெண்ணே!
நிஜங்களின் தரிசனம் உனக்குக் கிடைத்ததா?
ஏழ்மையிலவை தூங்கிக் கிடக்கின்றனவே. உனக்குத்
தெரிந்ததா?
புரிந்து கொண்டால் அறிந்து தெரிந்து கொண்டால்.. வாடி! வா!
இக்கவிதன் மடியில் நெஞ்சில் உனக்கு
நிறையவே இடமுண்டு. வாடி! வா!

-
மே 29, 1983 -

29 யூன் 1983

இடையிலொரு மொழிபெயர்ப்புக் காதற் கவிதையொன்று!
- இடையிலொரு மொழிபெயர்ப்புக் காதற் கவிதையொன்று. புஷ்கினின்
கவிதையினை இயன்றவரை மொழிபெயர்த்திருக்கிறேன். -


நான் உன்னைக் காதலித்தேன். அழிவதற்கு மறுக்கும்
அந்தக் காதல்... இன்னமும் இருக்கக் கூடும்.
யாரறிவார்? இவன் நெஞ்சினில் எரிந்து கொண்டிருக்கக்
கூடும்.
பிரார்த்தி! வருத்தமடையாதே!
என்னை நம்பு! என்னுடைய தெரிவின் மூலம்
நான் ஒரு போதுமே உன்னை
பிரச்சினையிலாழ்த்தியதில்லை.
துன்புற வைத்ததில்லை.
நானுன்னைக் காதலித்தேன்; எனக்குள்ளேயே,
நம்பிக்கையில்லாமலேயே,
ஆனாலும் உண்மையாக, வெட்கத்துடன்.
இன்னமும் அந்த மிருதுவான அன்பு
மிகுந்த ஆர்வத்துடன்
இங்கே தகதத்துக் கொண்டுதானுள்ளது.
என்னுடைய காதல் சுயநயலமானது. ஆயினும்
கட்டுப்படுத்த முடியாதது.
சொர்க்கம் உனக்கு இன்னுமொரு காதலைத் தரட்டும்
.
- 29 யூன் 1983 -

ஜூன் 6, 1983
கவிதை: மனப்பெண்ணே!

என்ன ஆயிற்றாம்? உன்னைத்தான் கேட்கின்றேனடீ!
என்னவாயிற்றாம்? அட உன்னைத்தானென் மனப்பெண்ணே!
உனக்கென்னவாயிற்றாம்? உரைப்பாயெனிலது நன்றன்றோ!
தாவித் தாவிக் குதியாட்டம் போட்டிருந்தவுன்னாலெங்ஙனம்
வாடிக் கிடந்திட முடிந்ததோ?
வனிதையே! விளம்புவையே!
போராட்டங்களிற்குள் புத்தெழுச்சி பெற்றனையே! பின்னேன்
பதுங்கி மாய்ந்து கிடக்கின்றனை.
பாய்ந்தெழு! பாய்ந்தெழு! பாய்ந்தெழு! அட,
பாய்ந்தெழத்தான் மாட்டாயோ பைங்கிளியே!
தோல்விகள் செறிந்திட்ட போதெல்லாம்
தோள்கொட்டி எழுந்து எழுந்து நின்றனையே!
சிரித்தனையே! ஆயின், வெட்டுண்ட விருட்சமென
வீழ்ந்து கிடப்பதுவும்தான் முறையாமோ?
விருட்டெனப் பொங்கியெழத்தான் முடியாதோ?
அட, உன்னைத்தானென் ஆருயிர் மனமே!
உன்னைத்தான்.
வாழுமிச் சிறுவாழ்விலுமுனைத்
தாழ்த்துவதுதானெதுவுமுண்டோ?
உண்டோ? உண்டோ? சொல் மனமே!
பிரபஞ்சச் சுழல்களிற்குள்
உரமற்று உளைவதாலென்ன பயனோ?
உளைவதாலென்ன பயனோ? பயனோ? பயனோ?


13 நவம்பர் 1982
தனிமையும் நானும்!

தனிமை! தனிமை! சிலவேளைகளில் மிகவும் கொடூரமாக விளங்குகின்ற போதிலும் தனிமைதான் எத்துணை இனிமையானது.
தனிமையில் என் நெஞ்சம் சம்பவங்களை அசை போடுகிறது. அதன் விளைவுகள் புடமிட்ட சிந்தனைச் சிதறல்களாக வெளிப்படுகின்றன.
எங்கும் நீண்டு, பரந்து, ஓவென்று ஆர்ப்பரிக்கும் அலைகடலைப் பார்க்கையில் என் நெஞ்சினை இனம் புரியாத சோகமொன்று கவ்விச்
செல்லும். தனிமையில் மூழ்கி நிற்கும் கடல் ஒரு துணையை நாடிச் சோகப் பண்ணிசைத்திடுமொரு பெண்ணாகத்தான் எனக்குத் தெரியும்.
நீண்டு பரந்து கிடக்கும் கடல் நங்கையினை மாலைகளில் பார்த்துக் கொண்டிருப்பதென்றால் அ·து போன்றதொரு ஆறுதல் வேறேது?

இதுபோல்தான் கானகச் சூழலும் என்னைக் கவர்ந்திழுத்து விடும். தனிமைகளில் ஏதோ சோகமொன்றின் கனம் தாங்கமாட்டாத
தோழர்களைப் போன்று விருட்சங்கள் ஏதோ ஒருவித அமைதியில் மூழ்கிக் கிடக்கும் நிலை; இடையிடையே துள்ளிப்பாயும் மர
அணில்கள்; சிட்டுக்கள்; அகவும் மயில்கள்; காட்டுப் புறாக்கள். ஓ! தனிமைகளில் கானகச் சூழல்களில் என்னையே நான் மறந்து விடுவேன்.

இரவுகளின் இருண்ட தனிமைகளில், தூரத்தே சோகத்தால் சுடற்கன்னிகளை நோக்குகையில் நெஞ்சினில் பொங்குமுணர்வுகள்...
தனிமைகள் என்னைத் தகித்து விடுகின்றன. தவிப்படையச் செய்து விடுகின்றன. சிந்தனைச் சிட்டுக்களைக் கூண்டிலிருந்து விடுவித்து
விடுகின்றன. சோகத்தின் பாதிப்புகளால் நெஞ்சினைப் புடம்போட்டு விடுகின்றன. தனிமைகள் தான் என்னை எழுத்தாளனாக்கி வைத்தன.
இயற்கையின் ஒவ்வொரு மூலையிலும், துளியிலும் மறைந்து கிடக்கும், பொதிந்து கிடக்கும் மிக மெல்லிய உணர்வுகளைக் கூட
உணர்ந்து விடும்படியான வல்லமையினைத் தனிமைகள் தானெனக்குத் தந்து விடுகின்றன.

தனிமைத் தோழர்களை நான் போற்றுகின்றேன். தனிமைத் தேவியரை நான் மனதார நேசிக்கின்றேன். காதலிக்கின்றேன். தனிமைத்
தத்துவவித்தகர்களை நான் தொழுகின்றேன். துதிக்கின்றேன். வாழ்த்துகின்றேன்.

தனித்திருக்கும், இருண்ட இந்த இரவுகள்....
கறுத்து வானை வெறித்து நிற்கும்
கடற்பரப்புக்கள்...
தனிமைத் தவமியற்றும் கானகத்து
விருட்சங்கள்...
ஓ1 இவ்வுலகம்தான் எத்துணை
இனியது! எத்துணை
எழில் வாய்ந்தது!
இன்பம்! இன்பம்! இன்பம்!
எல்லாமே இன்பம்! இன்பம்! இன்பம்!

-
13 நவம்பர் 1982 -


15 ஆகஸ்ட் 1982

ஒரு தீர்ப்பும் தமிழர் போராட்டமும்!

தென்னாபிரிக்காவின் இனவெறி பிடித்த அரசாங்கத்தின் கொடுமையான சட்டங்களிற்கு நிகரான சட்டமென சர்வதேச ஜூரிமாரால் கண்டிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பு சாதாரண குற்றவியல் சட்டக் கோவையின் கீழ் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் சிவநேசனைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த குட்டிமணி (யோகச்சந்திரன்), ஜெகன், கறுப்பன் ஆகிய எதிரிகளில் முதலிருவர்களையும் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தியூடர் டீ அல்விஸ் அவர்களிற்கு குற்றவியல் சட்டக் கோவை 296ஆம் பிரிவின்படி மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். விந்தையான தீர்ப்பு! ஆயுதப் படைகளின் தடுப்புக் காவலில் பெறப்பட்ட எதிரிகளின் வாக்குமூலங்களை ஏற்றுக் கொண்டு ஜூரிகளற்ற நீதிமன்றத்தில் நீதிபதி வழங்கிய தீர்ப்பு நீதியினையே அவமதிப்பதாகவிருக்கின்றது. எதிரிகள் புரிந்ததாகக் கூறப்படும் குற்றம் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலிற்கு வரமுன்னர் நிகழ்ந்துள்ளதால் தான் சட்டரீதியாக இத்தகைய தீர்ப்பினை வழங்க நிர்பந்திக்கப்பட்டதாகவும், வருந்துவதாகவும் நீதிபதி கூறுவது எதைக் காட்டுகிறது. நீதிபதியே தனது தீர்ப்பைப்பற்றி வருந்துவதாகக் கூறுகிறாரென்றால், நிலவும் சட்டத்தின் தன்மையினை, 'தர்மிஷ்ட்ட' அரசு எனக் கூறிக் கொள்ளும் அரசின் தம்மிஷ்ட்ட சட்டங்களின் தன்மைகளை யாவரும் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

ஆனால் இந்தத் தீர்ப்பினை மலர்ந்த முகத்துடன் ஏற்றுக் கொண்ட குட்டிமணியும், ஜெகனும் 'தங்களிற்குக் கருணையேதும் தேவையில்லையெனவும்', 'தங்களைத் தமிழ் மண்ணிலேயே தூக்கிலிடும்படியும், தங்கள் உடலை யாழ் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்கும்படியும், கண்களைப் பார்வையற்ற தமிழனொருவனுக்குக் கொடுக்கும்படியும்' கூறியிருப்பது அவர்களது மனத்திண்மையையும் இலட்சியப் போக்கினையும் காட்டி நிற்கின்றது.

"என்னைப் போல் தமிழ் இளைஞர்கள் இந்த நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படுவார்கள். அந்த அப்பாவித் தமிழ் இளைஞர்களும் பயங்கரவாதிகள் என்ற போர்வையில் மரணதண்டனைக்கு இலக்காவார்கள். ... நீதிபதி எனக்களித்த தீர்ப்பின் மூலம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு உத்வேகத்தினையும், உற்சாகத்தினையும் ஏற்படுத்தியுள்ளார். என்னைத் தூக்கிலிடுவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குட்டிமணிகள் தமிழ் ஈழத்தில் உருவாவார்கள். ஆனால் அவர்கள் அப்பாவிகளாக இருக்க மாட்டார்கள். அவர்கள் தமிழ் ஈழத்தின் தீரமிக்க வீரர்களாகவேயிருப்பார்கள்" (ஆதாரம்: 14-08-1982 வீரகேசரி).

குட்டிமணியின் இந்த இறுதி வாசகங்கள் அடக்குமுறைகளிற்காட்பட்டு வாடும் தமிழ் மக்களிடையே நிச்சயம் ஓர் எழுச்சியை ஏற்படுத்தும். விடுதலைக்கான போராட்டத்தினை அவை நிச்சயம் விரைவு படுத்தியே தீரும்.
-
15 ஆகஸ்ட் 1982 -

குறிப்பேட்டுப் பக்கங்கள் - 2!

20-09-1982.
-
அண்மையில் பெய்ரூட்டில் பாலஸ்த்தீன அகதிகளை லெபனான் வலதுசாரிப் படைகளும், இஸ்ரேலியப் படைகளும் கொன்றொழித்ததையிட்டெழுந்த உணர்வுகள். -

பெய்ரூட்டின் அகதிகள் முகாம்களில்
அடிபட்டு, மிதிபட்டு, துவைபட்டு,
வதையுற்று வெடிபட்டுக் கிடக்கும்
இரத்தம் தோயந்த மாமிசப் பிண்டங்களின்
மேல்...
அட மானிடா! என்னடா! உன்னைத்தான்!
அட மானிடா! முட்டாளே!
முழிக்கிறாயாடா? முழியடா! முட்டாளே!
முழியடா!
கர்த்தரின் சீடப்பிள்ளைகளின்
கூத்தினைப் பார்த்தாயாடா! பாரடா!
பாரடா! பைத்தியக்காரா!
பாரடா!
திருநீலகண்டனின் திருப்புதலவர்கள்;
புத்தனின் பாலகர்கள்;
அல்லாவின் அருமைந்தர்கள்;
பாரடா! இவர்களை. ஏய் உன்னைத்தான்!
யாரடா ? இவர்க்ளெல்லாரும்?
இவர்களின் கூத்தினால் எரியும்
குமுறும் இன்றைய உலகினைப்
பாரடா! பைத்தியக்காரா!
பாரடா! பைத்தியக்காரா!
தத்துவம் மட்டும் பேசிடும்
வித்தர்கள் - நெஞ்சினில் நீதி
செத்தவர்கள்.
அட! மானிடா! என்னடா! உன்னைத்தான்.
அட! மானிடா! முட்டாளே!
முழிக்கிறாயாடா? முழியடா! முட்டாளே!
முழியடா!
கொலம்பியாக்களில் ஏறிக்
கும்மாளம் மட்டும்தான் போடமுடியுமுன்னால்;
அப்பாவிகளின் சிரங்களில்
தர்மத்தின் தலைகளில
எப்-16களில் , மிக்-23களில்,
மிராஜ்களிலேறிக்
குண்டுகளை மட்டும் வேண்டுமானால்
உன்னால் கொட்டித்தள்ளிவிட
முடியும்! வேறென்னடா முடியும்?
அடி முட்டாளே! ஏய்! படு
முட்டாளே!
ஆயிரத்து ஐந்நூற்றுக்குமதிகமான
அப்பாவி உயிர்கள்...
அவர்கள் என்னடா குற்றம் செய்தார்கள்?
கண்டும் காணாதது போல் நிற்கிறாயே?
கயவனே! வெட்கமாயில்லை, நாயே!
வாயென்ன உனக்கு அடைத்துத்தான்
விட்டதா?
அமெரிக்கனொருவனின் தலைமயிருதிரட்டும்.
ஆகா! அயோக்கிய 'ராஸ்கலே'!
தத்துவம் பேசமட்டும், கருத்தரின், நீல
கண்டனின், புத்தனின், அல்லாவின்
பொன்மொழிகளைப் புடம்போடமட்டும்
வந்துவிடுவாய்! வரிந்து கட்டிக் கொண்டு
வந்து விடுவாய்! இல்லையாடா?
சுயநலநாயே! நயவஞ்சகப் பேயே!
அவர்கள் அப்பாவிகளடா!
அவர்கள் அப்பாவிகள்.
எந்தக் குற்றமும் செய்யாத
அப்பாவிப் பெண்டுகள், மழலைகளடா!
ஈவு இரக்கமற்ற அயோக்கிய ராஸ்கலே!
உனக்கென்னடா தெரியும் அவைபற்றி.
தத்துவம் மட்டும் பேசமுடியும்.
பேசு! பேசு! பேசிக்கொண்டேயிரு!
முட்டாளே! பேசு!
ஐயோ! என் பிரிய நண்பர்களே!
நண்பிகளே! செல்வங்களே!
உங்கள் இலட்சியக் கனவுகள் பூத்துக் குலுங்குவதாக!
பூத்துக் குலுங்குவதாக! பூத்துக் குலுங்குவதாக!

20-09-1982.

எதற்காக!

தனிமைகளென்னைத் தகிக்கும் வேளைகளில்
இனிமைகள் சிலநாடி உள்ளமேங்கும்; இம்
மண்ணில் வந்து பிறந்தோம்; பின்னொருநாள்
மண்ணோடு மண்ணாகிக் கலந்திடுவோம்.
இதுதான் வாழ்க்கையென்றால்.....
எண்ணங்கள் எழுந்து தலை விரித்தாடும்.
பயனற்று வாழ்க்கை கழிவதாயின், பிறந்த
பயனென்றொன்றுண்டா? உதவாத
உயிரற்ற ஒரு வாழ்வுக்காய்த்தானா இவ்
உலகில் வந்து பிறந்தோம்? சீறியெழும்
சிந்தனைகளின் தாக்கத்தால்
சிந்தை சுழன்று தடுமாறும்.
உயர்ந்து வீணே வளர்ந்து விட்டோம்.
'உவற்றாலேதும்' பயன்தானுண்டோ?
எண்ணங்கள் சில தோன்றிச் சலிப்பொன்று
எழுந்தாடத் தோட்டத்துப் பக்கம்
எழுந்து செல்வேன்.
கூழைக் குடித்தொருவன் பிறரைக்
கும்பிட்டே வாழ்வான்; அவ்
ஏழைகள் வயிற்றிலடித்தே மற்றவனோ
ஏப்பமொன்றை மெல்ல விடுவான்.
குடத்தினிலிட்ட விளக்காய் ஒருத்தி
குடிசையில் முடங்கிக் கிடப்பாள்.
'மிடியும்' 'மக்ஸி'களுமென்று மற்றவள்
மதர்ப்புடன் திரிந்து செல்வாள்.
படிப்பதற்கு மனமிருந்தும் ஒருத்தன்
பட்டினியால் கெட்டலைவான்.
குடியும், கூத்துமென்றே அடுத்தவன்
காரினில் கூடித்திரிவான்.
ஏற்றத் தாழ்வுகளால் இங்கு
எல்லாமே இரண்டு பட்டாச்சு;
மாற்றங்கள் எதுவுமின்றி
மனிதன் மறுகியே வாழலாச்சு; இம்
மாற்றத்தைக் கொணர மனதில்
சீற்றங்களிருந்துமென்ன?
முயற்சியைத் தொடங்கத் துணிவின்றி
அயற்சியில் ஆழ்ந்து கிடப்பேன்.

20-09-1982.

கவி மகாகவியின் 'குறும்பா'வைப் படித்த்தன் விளைவான முயற்சியில்.......
நகைச்சுவைக்கு இரு குறும்பாக்கள்:

இரண்டிற்குமேல் ஒருபோதும் இல்லை.
இவ்வாறு சொல்லி நின்றாள் முல்லை.
முல்லையவள் சொற் கேட்டு
முத்தனவள் கணவன் சொன்னான்:
ஆதலினால் இல்லைபெருந் தொல்லை.

காதலியைக் காண்பதற்காய் ஓடி.
காளையவன் சென்றிட்டானுளம் வாடி.
காத்திருந்த கன்னியவள்
காதலனைக் கண்டு மனங்
கனிந்து தழுவினாள் இன்பம் கோடி.

20-09-1982.

15-01-1983!
[கட்டுரையுமல்ல; கவிதையுமல்ல. ஒரு கருத்துருவம்] மனிதனே!

மனிதனே! நான் உனக்கொன்று சொல்வேன்; கேள்!
மற்றைய உயிர்கள் யாவினும் உன்னை உயர்ந்தவனாக
உருவகித்துப் புளகாங்கிதமடைந்து கொண்டிருக்கிறாய்.
இப்பிரபஞ்சமே நீதான் என்பதுபோல் பெரிதுமே
இறுமாந்து கிடக்கின்றாய்.
'தர்மம்', 'நீதி', 'நியாயம்', 'தர்மிஷ்ட்டம்', 'காருண்யம்''
என்றெல்லாம் பெரிதாகப் பெரிதும் அலட்டிக் கொள்கின்றாய்.
ஆனால் உண்மையில் நீ செய்வதென்ன?
உன் சக இனத்தவர்களையே வர்க்கங்களாக்கி
ஏழை, பணக்காரன், ஆண்டான், அடிமையென்று பிரிவுபடுத்தி
சிறுமைப்படுத்திக் கொண்டு வாழ்கின்றாய்.
இத்தகைய சிறுமைகளை உள்ளடக்கிய அமைப்பினைக் கட்டிக்
காப்பதனையே 'தர்மம்' என்கின்றாய். இதனிலும் பெரியதொரு
அதர்மம் வேறுண்டோ?
புசிப்பிற்காய், கேவலம் உன் வயிற்றுப் பசியிற்காய் நாள்தோறும்
உயிர்களைக் கொன்றொழித்துக் கொண்டே 'காருண்யம்'
பேசுகின்றாய். வெட்கமாயில்லை.
மனிதனே! உனக்கொன்று சொல்வேன் கேள்.
ஒவ்வொரு முடிவினையும் செய்யும் போதும்,
ஒவ்வொரு செயலினையும் புரியும் போதும்,
உன் சிந்தையை ஒருகணம் தீட்டிக் கொள்!
எப்போதும் உன் அறிவிற்கு எது சரியென்று படுகின்றதோ
அதனைச் செய்திட ஒருபோதுமே தயங்கிடாதே!
எத்தகைய எதிர்ப்புகள் வந்திடினும் சிறிதுமே
வளைந்து விட்டிடாதே!
உன் முடிவு மட்டும் சரியானதாக, தர்மமானதாகயிருக்குமாயின்
முடிவினைப்பற்றி நீ கவலைப்படுவதை விட்டுவிட்டு
காரியத்தினை ஆற்றிடு.
ஒருபோதுமே அதர்மமானதொன்றினை அறிந்தும் , அதற்கு
அடிபணிவதன் மூலம் உன் சுயமரியாதையினை இழந்து
வாழ்ந்திடாதே!
இஃது எவ்வாறோ, அவ்வாறே மற்றைய
மனிதனையும் சுயமரியாதை
தனையிழந்து வாழ்திடும்படியான செயல்களை
ஒருபோதுமே ஆற்றிடாதே!

15-01-1983!

14-01-1983!
இயற்கையின் விதியொன்று!

மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக் காட்டுவதாலும், அவற்றைப் பதிவு செய்தாலென்ன எனத் தோன்றியதாலும் அவற்றை இங்கே பதிவு செய்கிறேன். இது அந்த இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லாவிதமான உயிர்களையும், எல்லாவிதமான உயிர்களின் குணவியல்புகளையும் அல்லது எல்லாவிதமான செயல்களையும் ஆராய்ந்து பார்ப்போமாயின் ஒன்றினை வெகு தெளிவாகவே உணர்ந்து கொள்ளலாம். ஒருபுறத்தில் ஆக்ரோஷமான, ஆவேசமான போக்குகளென்றால் மறுபுறமோ எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாத அமைதியான போக்குகள் நிலவுவதைக் காணக் கூடியதாகவிருக்கின்றது. அதாவது ஒரு புறத்தில் மூர்க்காவேசமிக்க, புலாலுண்ணும் உயிர்கள்; கோபம்,. பொறாமை முதலிய பொங்கும் குணவியல்புகள். சீறி வெடிக்கும் சூறாவளி, புவி நடுக்கம், பெருகிடும் ஆறுகள், பீறிடும் எரிமலை, குமுறும் அலைகடல் போன்ற செயல்கள். இவை ஒருபுறமென்றால்... மறுபுறமோ இவற்றிற்கு முற்றிலும் நேர்மாறான இய்லபுகளை உள்ளடக்கிய உயிர்கள். சாந்தமே உருவான சாதுவான பசு, ஆடு போன்ற பிராணிகள். அமைதியான , இரக்கம் மிக்க, குணவியல்புகளை. சீறிக் குமுறிடும் இயற்கையின் விளைவுகளுக்கு நேர் எதிரான தன்மை மிக்க இயற்கையின் செல்வங்கள். மென் தென்றல். ஆனந்தம் மிக்க அமைதியான அருவிகள்.

இவ்வாறு இருபெரும் பிரிவுகளாக பிரிவுபட்டுக் கிடக்கும் உயிர்கள், குணங்கள், செயல்களில் முதலாவது வகையான் மூர்க்காவேசம், கோபாவேசம் மிக்க போக்குகளினால் விளைவதெல்லாம் நாசம்தான். அழிவுதான். கேடுதான். புலாலுண்ணிகள் மற்றைய உயிர்களை அழித்து நாசம் செய்கின்றன. எரிமலை வெடிப்புகள், பொங்கும் கடல், ஆறுகள், சூறாவளி போன்றவை பெருங்கேடுகளை நாசத்தினையே விளைவிக்கின்றன. கோபம், ஆத்திரம், பொறாமை போன்ற இயல்புகளோ பேரழிவுகளையே தோற்றுவிக்கின்றன. மாறாக இரண்டாவது வகையான அன்பான, அமைதியான, இரக்கம்மிக்க போக்குகளோவெனில் இன்பத்தினைத் தருகின்றன; ஆனந்தத்தினைத் தருகின்றன. முதல் போக்கு அழிவினை ஏற்படுத்துகின்றதெனில் இரண்டாவது போக்கோ புத்தாக்கத்தினைப, பொழிவினைத் தந்து விடுகின்றன.

இனி ஒரு மனிதனது வாழ்வையே எடுத்துப் பார்ப்போம். அறியாமையின் விளைவான மிருகங்களைப் போன்றே இம்மனிதனும் தன் நாவிற்காக, வயிற்றிற்காக மீன், தவளை, பாம்புக் கறி, கோழி, கவுதாரி, காடை, ஆடு, மாடு, எருமை, பன்றி, மான், மரை, அணிலென்று, இன்னும் பல்வேறு வகையான உயிர்களை நாள்தோறும் இலட்சக் கணக்கினில் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறான். இதன் மூலம் சிந்திக்குமாற்றலற்ற மிருகங்கள், பட்சிகளைப் போன்ற உயிர்களிற்கும், சிந்திக்கும் ஆற்றல் பெற்ற தனக்கும் எவ்வித வித்தியாசங்களுமில்லையென்பதனைக் காட்டிக் கொண்டிருக்கின்றான்.

உண்மையில் நவீன இயற்கை விஞ்ஞானம் கூறுவதென்ன்? புலாலுண்ணுதல் தற்காலிகமாக மனிதனுக்கு வேண்டுமானால் சக்தியினைப் பொலிவினைத் தந்திடலாம். ஆனால் உண்மையில் இவை உடல் நலத்திற்குப் பெருங்கேட்டினையே விளைவிப்பன. ஒரு மனிதனின் ஒவ்வொரு உறுப்புகளுமே இயல்பாக அவற்றிற்கு வேண்டிய சக்தியை விட மேலதிகமான சக்தியினைப் புலாலுண்ணுதலின் போது பெறுவதால் கூடுதலாக அவை வேலை செய்வதால் தங்களது வாழ்நாளைக் குறுக்கிக் கொள்கின்றன. அபப்டியானால் இந்த மனிதன் ஏன் தனக்குக் கேடு விளைவிக்கும் செயல்களை ஆற்றுகின்றான்?

அதற்குக் காரணம் மனிதனின் அறியாமைதான்; இவ்வுலகின் முக்கால்வாசிக்குமதிகமான மனிதர்கள் வறுமையிலும், பசி, பிணி, , கவலைகளால் சீரழிந்து கொண்டிருக்கையில், இயல்பாகவே பெருமளவிலான மனிதர்கள் அறியாமையில் உழன்று விட வழி ஏற்படுகின்றது. ஆனால் அதே சமயம் அளவிற்கு அதிகமான செல்வக் குவியலில் புரளும், ஆர்ப்பரிக்கும் மனிதக் கூட்டமோ தனது அறியாமையால் தன்னையே அழிப்பதோடு மட்டுமல்லாமல், சக உயிர்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றது. இதுதான் காரணம்.
இதுதான் சரியான காரணம்.

இதேபோல்தான் மனிதனது வாழ்நாளினைக் கோபம், பொறாமை, ஆசை போன்ற உணர்வுகள் சிதைத்து விடுகின்றன என்று நவீன விஞ்ஞானம் கூறுகின்றது. மனிதன் இத்தகைய குணங்களினால் தன்னை மட்டுமல்ல சக மனிதர்களையுமே அழித்துக் கொண்டிருக்கின்றான். நாடுகளுக்குள், நாடுகளிற்கிடையில் நாள்தோறும் போட்டி, பூசல்கள், போர்களினால, தனி மனிதர்கிடையிலேற்படும் மோதல்களினால் எத்தனையோ இலட்சக்கணக்கான உயிர்கள் அழிந்துகொண்டிருக்கின்றனவே.

இவையெல்லாம் உணர்த்தி நிற்பவைதான் எவை? அன்பு, இரக்கம், அமைதியான பண்பு இவையே இப்பூவுலகின் ஆனந்தத்திற்கு அத்தியாவசியமென்பதையல்லவா. கஷ்ட்டத்தில் உழன்று கிடப்பவனுக்கு உதவிடும்போதினில்தான் எத்துணை இன்பமயமானதாகவிருக்கின்றது. அன்பு செலுத்துகையில்தான் எத்துணை மகிழ்ச்சிகரமானதாகவிருக்கிறது.

ஆனால் இதற்காக ஏற்றத்தாழ்வுகளை, ஒருபக்கச்சார்பான சட்டதிட்டங்களை, சுரண்டல் ச்முதாய அமைப்பினை, ஒருபுறம் கோடிக்கணக்கில் ஏழைகளையும், இன்னுமொருபுறத்தில் ஒரு செல்வந்தக் கூட்டத்தினையும் உருவாக்கிட அனுமதித்திடும் சமுதாய அமைப்பினை அங்கீகரித்துக்கொண்டே 'அன்பு' பற்றிப் போதிப்பது கேலிக்கிடமானது. இருக்கின்ற பிரச்சினைகளை இன்னும் மோசமாக்கிடவே அவை வழிவகுத்திடும். மாறாக மானுட வர்க்கத்தினைச் சரியான வழியில் , பொதுவுடமை அமைப்பினை நோக்கித் திருப்பிக் கோண்டே அன்பினைப் போதிப்பதே சரியான வழி.
15-01-83.

சமர்ப்பணமொன்று........

இந்தச் சொல் மாலையை நானுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
ஏனேனில் என்னால் தற்சமயம் மட்டுமல்ல
இப்பிறவியிலேயே செய்யக் கூடியது இது ஒன்றுதான்.
சிலவற்றைச் சோல்லாமலிருக்க முடிவதில்லை.
இதுவும் அப்படிப்பட்டதொன்றுதான். இதயத்தின்
கோடியினில் கொலுவாக்கிடவேண்டிய நினைவு;.
உறவு.
உந்தன் சின்னஞ்சிறிய ஆனால் எளிய, இனிமையான
அதிகாலையையொத்த உலகில் பாடல்களை, வசந்தங்களை,
அருவிகளை, நீரூற்றுகளை,
நீ வார்த்தைகளால் சொல்லிவிடவேண்டிய தேவையென்ற
ஒன்று இங்கிருந்ததில்லை.
உனது அந்தக் கணகள் எல்லாவற்றையுமே எனக்குக்
கூறிவிட்டன.
வாழ்வின் அர்த்தங்களைப் புரியாத்தொரு பொழுதினில்
நீயாகவே இந்தச் சிறைக்குள் வந்து சிக்குண்டது
உனக்கே தெரியும்.
அர்த்தங்களைப் புரிந்த நிலையில்.. இன்றோ
விடுபட முடியாததொரு நிலை. அது
உனக்கும் புரியும். எனக்கும் தெரிகின்றது.
நான் வேண்டக் கூடியதெல்லாம் இது ஒன்றுதான்:
உன் இரக்கமிக்க நெஞ்சினில் அமைதி நிறையட்டும்.
வீதியினில் நீ எழிலெனப் படர்கையில்
கூடவே ஒரு சோகமும் படர்வதை
என்னால் அறிய முடிகின்றது.
எனக்கே புரியாமல், திடீரென உன்னாலெங்ஙனம்
நுழைந்திட முடிந்தது? நெஞ்சினில்தான்.
கள்ளமற்ற, வெள்ளைச் சிரிப்பில்
பரவிக் கிடக்கும் அந்த இனிமை...
அதன்பின்னே தெரியுமந்த அழுத்தம்...
அபூர்வமாக மலரும் சில மலர்களில்
நீயும் ஒன்றென்பதை அவையே உணர்த்தும்.
அன்று ஒயிலாகச் செல்கையில் , ஓரக்கண்ணால்
சிறைப்பிடித்துச் சென்றாயே. அந்தப் பார்வையை.
நான் உனக்குச் சொல்வதெல்லாம்,
சொல்ல முடிந்ததெல்லாம் இதனைத்தான்.
அந்தப் பார்வையைத் தப்பியோடிட ஒருபோதுமே
விட்டிடாதே. உந்தன் இதயத்தில்
ஆழ்ந்த அறையொன்றின் ஆழத்தே கொண்டுபோய்ச்
சிறை வைத்திடு.
ஏனெனில் சோகமுகிலகள் படர்கையில்,
பாதையில் இருட்டு செறிகையில்,
வாழ்வே ஒரு கேள்விக் குறியாகி,
இதயம் இரணமாகிச் செல்கையில்
அன்பே!
உன்னிதயத்தின் உற்றதோழனாக, தோழியாக
இருக்கப் போவது அது ஒன்றேதான்.
அதனால்தான் சொல்கிறேன். உன்னிதயத்தின்
ஆழத்தே அந்தப் பார்வைத் துண்டத்தைச்
சிறைப்பிடித்து வைத்திடு.
பாலைகளின் பசுமையென,
கோடைகளில் வசந்தமென,
அன்பே! உன் வாழ்வில், நெஞ்சிற்கு
இதமான ஸ்பரிசத்தைத் தந்திடப்
போவது அது ஒன்றுதான்.
உனக்காக என்னால்
வானத்தை வில்லாக வளைக்கவோ அல்ல்து
பூமியைப் பந்தாகவோ மாற்றமுடியாது.
ஆனால் அந்த உனது ஏங்குமிதயத்தின்
துடிப்பலைகளை இனங்கண்டிட முடியும்.
அவற்றை நெஞ்சினொரு கோடியில் வைத்து
அபிஷேகம் செயதிட முடியும்.
புரிகிறதாடீ! புரிந்தால் கவலையை விடு.
உன் பாதையில் இன்பப் பூக்கள்
பூத்துச் சொரிவதாக.

30-05-1983.

போரொன்றெழுந்து......

தலைக்குமேல் விமானங்கள் சீறிச் செல்லும்;
தலைகள் பல சிதறிச் செந்நீரில் மூழ்கும்;
படபடக்கும் 'மெஷின்கன்'களின் பேரிரைச்சலில்
பாலகர்கள் மார்புகள் துளைபட்டுக் கிடக்கும்;
கலைஞர் இரத்ததிலுருவான கட்டடங்கள்
நிலைகுலைந்து வீழ்ந்து சிதறிடும்;
ஆடைகள் நிலைகுலைந்து அங்கங்கள் பற்றி
அரிவையர் மானம் மதிலேறும்;
போரொன்றெழுந்து இப்பாரெங்கும்
பிணக்காடாகும்;
காரிருள் எங்கும் சூழம்;
கயவர்கள் செயல்கள் பரவும்;
மோதி மோதியே மக்களிங்கு
மாண்டு போவர்; அழிவர்;
அறிந்தவர் இறுமாப்பழியும்;
ஆள்பவர் கொட்டம் அடங்கும்;
பண்பாட்டுச் சிகரம் சரியும்;
பஞ்சத்தின் பிடியில் உலகம்
தஞ்சம்.
21-01-83.


சமர்ப்பணம்...

மீண்டும் இலங்கை பற்றியெரிகின்றது.
தூய மிருதுவான நெஞ்சங்களைச்
சிதைப்பதில்,
மீண்டும் நொந்த உள்ளங்களின்
மரண ஓலங்கள்.. பிலாக்கணங்கள்...
சோகநிழல்கள்...
சிதறிய பாதைகளில்
வாழ்வேயொரு கேள்விக்குறியாக....
அவமானம், அச்சம், வேதனை, சோகம்
அடியே! புரிகிறதாடீ! உன்னவர்
இங்கு புரியும் கூத்து.
என்ன செய்தாரிவர்? எடியே!
ஏன் மெளனித்து விட்டாய்? உன்னைத்தான்.
உன்னைத்தானடி!
மீண்டும், மீண்டும்.. முடிந்த கதை
தொடர்ந்த கதையாய்...
பென்சீன் வளையமாய்... அடியே!
இங்கு நடக்குமிந்தக் கூத்து..
இதற்கொரு முடிவு?
அன்பே! எனக்குப் பாலஸ்த்தீனத்துக்
கவிஞனொருவனின்
சொற்கள்தான் ஞாபகத்தில் வருகின்றன:
"கோழிக்குஞ்சுக்குக் கோதும்,
முயலிற்கு வளையும் உண்டு.
ஆயின் பாலஸ்த்தீனியனுக்கோ...?"
அன்பே! புரிகின்றதா?
'எலி வளையானாலும் தனிவளை'.
ஆமாம். அது இல்லாததுதான்.

9-06-1983.

குறிப்பேட்டுப் பதிவுகள் - 3

களத்தில் குதித்திடு!

என்று உன்னால் உனது சொந்த மண்ணிலேயே
தலை நிமிர்ந்து நிற்க முடியாமல் ஆகின்றதோ,
என்று உன்னால் சுதந்திரமாக உன் கருத்துகளை
எடுத்துரைக்க முடியாமற் போகின்றதோ,
உனது சோதரர்களின் உயிர்களுக்கு
உத்தரவாதம் என்று இல்லாதொழிந்து போகின்றதோ,
என்று என் தோழனே! பெண்மை கொத்தி
எகிறிடப் படுகின்றதோ,
என்று உனது சுயகெளரவம் சிதைக்கப்பட்டு
எரிக்கப்பட்டு கசக்கப்படுகிறதோ,
என்று உனது தாயின் கண்ணீரிற்கு
உன்னால் பதிலுரை பகரமுடியவில்லையோ,
என்று சுதந்திரமாக மூச்சு மூச்சுவிடுவதுகூட
மறுக்கப்பட்டு விடுகின்றதோ,
என்று உன் பிஞ்சுகளின் கொஞ்சல்களை இரசிக்கமுடியாது
உன்னால் ஆகிவிடுகின்றதோ,
என்று உன்னைச் சுற்றிலும் துப்பாக்கிகளின் புகையால்
அவலங்கள் பரவிடத் தொடங்கிடுதோ,
என்று உன்னைச் சுற்றிலும் அச்சம், அவலம், சோகம், சாவு
ஆகியன வலை பின்னத் தொடங்குகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் போராட்டமும், குமுறலும், விரக்தியுமே
வாழ்வென்றாகி விடுகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் , ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும்,
ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு கணத்தின்
ஒவ்வொரு துளியுமே..
வாழ்வே ஒரு கேள்வியாக, உயிர்ப் போர்முனையாக,
உருவாகி விடுகின்றதோ, அன்று , ஆமாம் அன்று,
நீ உனது போர்ப்பிரகடனத்தைத்
தொடங்கிவிடு!
சுதந்திரக் காற்றினைத் தரிசிப்பதற்கான
தர்மத்திற்கான உன் போர் முரசத்தினைக் கொட்டிடு.
கோழைத்தனத்தினக் குதறியெறிந்துவிட்டுக்
களத்தே குதித்திடு.
அன்று , உன்னை, இப்பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு துளியும,
ஒவ்வொரு எழிற்பட்சியும்,
மெல்லிய பூந்தென்றலும், நிலமடந்தையும்,
எழில் வானும், நட்சத்திரங்களும், கோள்களும்,
இளங்காலைப் பனியினொவ்வொரு துளியும்,
இளம்பரிதியினொவ்வொரு கதிரும்,
விருட்சத்தினொவ்வோரிலையும்,
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும்!

- 14-11-1982. -

வெளியில் அவர்கள்!

இந்தக் குடிய்சையினின்றும் வெளியே
இறங்கிடவே யான் அஞ்சுகின்றேன். ஆம்! ஏனெனில்
இங்கு நான் பூரணமனிதனாக, பூரண மனிதனாகவே
இருப்பதனை உணர்கிறேன்.
இருப்பதையுண்டு, உறங்கிட முடிகின்றது.
இன்பமே! உந்தனன்பினில் குளித்திட முடிகின்றது.
இங்கு யாரிடத்துமென் தன்மானத்தினை நான்
இழந்திடத் தேவையில்லை.
கூனிக் குறுகி யார் கால்,கையையும் பற்றிக்
கும்பிடும்போடுமொரு வாழ்வு இங்கில்லை.
உள்வைத்துப் புறம்பேசுமொரு
உழுத்த பழக்கத்திற்கு அவசியமேதுமில்லை.
ஆயின் அவர்கள் வெளியே நிற்கின்றார்கள்.
அவர்தம் வெடிமருந்து தோய்ந்திட்ட கைகளைப் போலவே,
இதயமும்... ஆம்! வெடிமருந்து தோய்ந்த நெஞ்சம் அவருடையது.
சிதைத்தல்! சீரழித்தல்! வதைத்தல்! அவர்தம் வாய்ப்பாடு
இதுவே.
அச்சமும், பேடிமையும், அடிமைச் சிறுமதியும் கவிந்த
புறவுலகோ,
பாவத்தின் சன்னிதியில் மாய்ந்து வேகும்; நோகும்.
தருமத்தின் சரித்திரத்தில் பொறுமைக்கும்
ஓரெல்லையுண்டு.
இனி ஒரு விதி செய்வோம். ஆம்! எந்நாளுமே
அதனைக் காத்திடப் போகின்றேன். அஞ்சிடப் போவதில்லை.
ஆமாம்! ஆமாம்! ஆமாம்!
இனி நானும் வெளியே இறங்கிடப் போகின்றேன்.
வெளியே இறங்கிடப் போகின்றேன்.
- 1982 -


எழுச்சியின் அர்த்தங்கள்!

இரத்தக் காட்டேரிகளின் கூத்தினில்...
இதோ.. மீண்டும் பனங்கூடல்கள் பற்றியெரிகின்றன.
'பூட்சுகள்' தடதடக்கப்
பாய்ந்துவரும் 'ட்ரக்'குகளின் பேரிரைச்ச்ல்களில்,
சாலைகளில், செம்மண் புழுதி பறக்கும்.
படலை மூடி, பெண்கள், பிள்ளைகள்
வியர்த்து, விதிர்விதிர்த்துப் பய்ந்து போய்ப்
பதுங்கிக் கிடப்பர். தம்
புருஷரைப் பற்றியணைத்துக் கொள்வர்.
ஆனால். அவர்கள்... எதற்கும்
அஞ்சுதலற்ற அரக்கர்கள்.
'இதுவென்ன வாழ்வு! சோகங்கள் கவிந்த
இருள்வாழ்வு. தொய்ந்த நெஞ்சினில் படரும் முகாரிகள்,
மூலைமுடுக்கெல்லாம் படர்ந்து கிடக்கும்
மயானத்து அமைதி.'
ஆயின் அவர்கள், மக்கள், எழுச்சியுறத்
தொடங்கி விட்டார்கள்.
கண்ணகிகள் போர்முரசம் கொட்டி விட்டார்கள்.
இளைஞர்கள் திண்தோள்கள் தினவெடுக்கத்
தொடங்கி விட்டன்.
மழலைகள் 'போர்ப்பரணி' ஜெபிக்கத் தொடங்கிவிட்டனவே.
பனங்கூடல்கள் 'சலசல'க்கின்றனவே காற்றினில்.
புரிகின்றதா? அவற்றின் அர்த்தங்கள்.
நாசங்களின் முடிவுகள் நாசங்கள்தான்.
அழிவுகளின அழிவுகள் அழிவுகள்தான்.
இந்த மண், ஆங்கு வீசிடும் தென்றல்,
எழில்மலர், பொய்கை, வான்,விருட்சங்கள்,
புட்கள் யாவுமே,
இசைக்கின்றனவே. அர்த்தங்கள் புரிகின்றதா?
சத்தியங்கள் சாவதில்லை. சாசுவதமானவை.
சத்தியங்கள் சாவதில்லை. சாசுவதமானவை.

- 15-3-1983-

உண்மையின் வெம்மை!

அடியே! நீ ஏனடீ வீணாக என்னுடன்
ஊடிக் கொள்கிறாய்?
நானப்படி என்னதான் கூறிவிட்டேனென்று
நீயின்று கோவித்தாய்?
உண்மையத்தானே உரைத்தேன்.
உணமை சுடுமென்பார்களே.
உன்னையுமது சுட்டதோடீ!
கண்ணே! கலங்குமுன் கயல்களைத் துடையடீ!
கவலைகளுடலின் புல்லுருவிகளன்றோ.
கண்களைவெட்டிச் செவ்விதழ் போதையேற்றிக்
கார் கூந்தல் பரப்பி
அன்னமென ஆயிழையே! நீ
அசைந்து நடைபயின்று வந்தாய்.
செழித்தவுன் அழகுகளிற்கிடையில் அகப்பட்டு
அல்லலுறுமுந்தன் மெல்லிடை பார்த்ததும்
உரிமைகளிழந்துழலுமெம்மவர் நிலைதானெந்தன் சிந்தையில்
எழுந்தது. எடுத்துச் சொன்னேன். அது தப்பா?
உண்மையைத்தானே உரைத்தேன். உந்தன்
செவ்விதழ்கள், நாணிச் சிவக்கும் வதனம், இவையெலாம்
இரத்தம் சிந்திய எம்மக்களைத்தான் ஞாபகப்படுத்தின.
இதைத்தானே இயம்பினேனென் கண்மணீ! இது தப்பா?
நீ'
இழுத்த இழுப்புகளிற்கெல்லாம் திரும்புமுந்தன் விழிகள்
அடிவருடிப் பிழைக்கும் அற்பர்களைத்தானே உருவகித்தன.
அதையும்தான் சொன்னேன். அதுவும் தப்பா என்ன?
உண்மையெனறாலே அது சுடத்தானே செய்யுமடீ என்
உத்தமீ! உன்னையுமது சுட்டுவிட்டாலதற்கு நானென்ன செய்ய?

- 1981.

பகற்காலத்து ஓசைகளெல்லாம் மெல்லமெல்ல
பதுங்கிக் கொண்டன. கருமைத் திரையின்
தழுவலில் நிலமடந்தை மெய்மறந்து கிடக்கும்
நேரம்.
நிசப்தம் கீறி நத்துக்களின் சோககீதங்கள்
பரவுகையில்,
காற்று மட்டும் சுழன்றி சுழன்று பேயாய்ப்
பொங்கி வெடிக்கும்.
அடே! வருண பகவானே உனக்கென்ன வந்ததோ?
ஆணவத்தின் கொப்பினில்
ஆடுவோர்தம் ஆட்டமெல்லாம் ஒருபோதில் சரி.
தனிமைப் போர்வைக்குள் முடங்கிக் கிடக்கும்
நெஞ்சக் கூட்டினுளோ...
எண்ணக் குவியல்களின் வெம்மையினில்
புயலொன்று வீசும்.
சுடர்ப்பெண்களே! சிரிக்கின்றீர்களா? கள்ளிகளா!
தொலைவிருப்பதால் தப்பினீர்.
நான் பொய்மைக்குள் மாய்ந்தவனல்லன்.
மெய்மையின் தரிசனத்தில் கவி வடிப்போன்.
புரிந்ததா? புரிந்துவிடின் கோழைகளே!
போய்விடுங்கள்.

29-05-1983

குறிப்பேட்டுப் பதிவுகள் -4!

13.1.1983:
மனிதரும், இயற்கை, புற, அக உலகத்துடனான மோதல்கள் அல்லது ஆதிமனிதரிலிருந்து ...(ஒரு சிக்கலான பிரச்சினை பற்றிய கண்ணோட்டம்).

மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக் காட்டுவதாலும், அவற்றைப் பதிவு செய்தாலென்ன எனத் தோன்றியதாலும் அவற்றை இங்கே பதிவு செய்கிறேன். இது அந்த இன்றைய மனிதர் தம்மை அதிபெரும் மேதாவியென்றும் , நாகரிகத்தின் உச்சணிக் கொப்பிலிருப்பவராகவும் மிகவும் பெரிதாகவே இயலும் போதெல்லாம தம்பட்டமடித்தும் பீற்றியும் கொள்கின்றார். கொலம்பியா விமானங்களிலேறி இப்பிரபஞ்சத்தையே சுற்றி வந்தவர் போல் கொக்கரித்துக் கொள்கின்றார். செயற்கையிருதயமென்ன, செயற்கை மனிதரையே உருவாக்கி விடுவோமென்பதுபோல் ஆர்ப்பரித்துக் கொள்கின்றார். இவையெல்லாம் மனிதரின் அறியாமையின் விளைவிலிருந்துருவான கர்வத்தின் வெளிப்பாடுகளே தவிர வேறல்ல.

ஆதிமனிதர், குகைகளிலும், காடுகளிலும், அலைந்து திரிந்த ஆதிமனிதர், இயற்கையுடன் பெரிதும் போராடியே வாழவேண்டியிருந்தது. ஆசை, கோபம், பொறாமை முதலான குணங்கள் அறியாமையில் கிடந்த ஆதிமனிதரைப் பெரிதும் ஆட்கொண்டதன் விளைவாக ஈவு, இரக்கமற்ற முறையில் கொலைகள், மோதல்கள் வெடித்துச் சிதறின; இரத்தம் ஆறாகப் பெருகியோடியது. பெண்களே சமுதாயத்தின் முக்கிய உறுப்பினர்களாக இருந்த காலகட்டமது. பெண்களின் தலைமையிலேயே குழுக்கள், குழுக்களாக ஆதிமனிதக் குழுக்கள் வாழ்ந்து வந்தன. ஒவ்வொரு குழுக்களின் தலைவராகப் பெண்ணேயிருந்தாள். ஆண்கள் இனப்பெருக்கம் செய்வதற்கும், உணவு சேகரிப்பதற்குமே பயன்படுத்தப்பட்டார்கள். இயலாதவர்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.

காலம் உருண்டோட, உருண்டோட மனிதரது சிந்தையிலேற்பட்ட வளர்ச்சியின் விளைவாக இயற்கைக்கும், மனிதருக்குமிடையிலான மோதலிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. உண்மையில் முற்றாக ஒழிக்கப்படவில்லையென்றே கூறலாம். இன்னும் ஆறுகள் பெருகி ஊர்கள் நாசமாவதும், எரிமலைகள் பொங்கி உருகுவதும், சூறாவளிகள் உயிர்களைச் சுருட்டிச் செலவதும் சர்வசாதாரணமல்லவா. இயற்கையை வெற்றி கொள்ளத் தொடங்கிய மனிதரின் வாழ்நிலைகளிலும் மாற்றங்கள் பல உருவாகின. நாடோடிகளாகத் திரிந்தவர் நாடு, நகரங்களை உருவாக்கினார். உற்பத்திகளின் விளைவாக ஏற்றத்தாழ்வுகள் உருவாகின. ஏழை, பணக்காரர் என்று மனித சமுதாயம் பிரிவுபட்டதிலிருந்து இன்றைய முதலாளித்துவ சமுதாய அமைப்பு வரையிலான காலகட்டத்தில் மனித சமுதாயம் பலவிதமான சமுதாய அமைப்புகளைக் கண்டு கொண்டது. எவ்வாறு இத்தகைய அமைப்புகள் (அடிமை உடமைச் சமுதாய அமைப்பு, நிலப்பிரபுத்துவ அமைப்பு முதலியவை) நீங்கி முதலாளித்துவ அமைப்பு உருவானதோ அவ்வாறே காலவோட்டத்தில் இவ்வமைப்பு நீங்கி இதனிலும் மேலானதொரு
அமைப்பு பொதுவுடமை வரும்.

ஆனால் மனிதரின் இதுவரை கால வரையிலான வரலாற்றினைப் பார்ப்போமாயின் ஒன்றினை வெகு தெளிவாகவே உணர்ந்து கொள்ளலாம். ஆதியில் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான பிரதானமான மோதல் நிலவியது. மனிதர் அச்சமயம் தமக்குள்ளும் மோதிக் கொண்டனர். ஆனால் இத்தகைய மோதல்கள் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான மோதல்களுடன் ஒப்பிடும்பொழுது மிகச்சிறிதளவாகவேயிருந்தன.

மாறாக, மனிதர் இயற்கையைப் பெரிதும் அடக்கிய காலகட்டத்திலிருந்து உருவான, இன்று வரையிலான காலகட்டத்தினை எடுத்துப் பார்ப்போமாயின் மனிதருக்கும் மனிதருக்குமிடையிலான மோதல்களுடன் ஒப்பிடும்பொழுது , மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான மோதல்கள் மிக்ச்சிறிதளவாகவேயிருப்பதைக் காணலாம். இந்த மோதல்களெல்லாம் மனிதர் மனிதருடன் தாமாக்வே ஏற்படுத்திக் கொண்ட மோதலகள். இந்த மோதல்களின் விளைவாக இக்காலகட்ட வரலாறு முழுவதுமே போர்களினாலும், இரத்தக் களரிகளினாலுமே நிரப்பப்பட்டிருப்பதைக் காணலாம்.

மண்,பெண், பொன் முதலான ஆசைகளின் விளைவாகவும், பொறாமை, கோபம் முதலான உணர்வுகளின் விளைவாகவும் உருவான பிரச்சினைகளே இன்றைய மனிதரின் சகல பிரச்சினைகளும். ஆக ஆரம்ப காலகட்டம் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான மோதல்களையே பிரதானமாகக் கொண்ட காலகட்டமானால், அதன்பிறகு தொடங்கிய இன்று வரையிலான காலகட்டமோ, மனிதருக்கும் , புற உலகுக்கும் (அதாவது மற்றைய மனிதர்கள், நாடுகள் முதலான புறவுலகம்) இடையிலான மோதல்களைக் குறித்திடும் காலகட்டமாகும்.

மனிதர் மட்டும் ஆசை, பொறாமை, கோபம் முதலான குணங்களை அறவேயொதுக்கித் தள்ளிவிடுவாரென்றால், மனிதரின் சகல பிரச்சினைகளுமே தீர்ந்த மாதிரித்தான். ஆனால் அப்படி இம்மனிதரால் வாழ்ந்திட முடியாமலிருக்கின்றதே. ஏன்? அதன் சரியான் காரணம் இதுதான்: மனிதர் தம்மையே உணரத்தொடங்கினால் இப்பிரச்சினைகள் யாவுமே தீரும். தீர அவர் தம் மனதினை உணர்ந்திட அதன் சக்தியில் நம்பிக்கை வைத்திட வேண்டும். எதனையாவது நன்கு கிரகித்துக் கொள்ளவேண்டுமென்றால் அமைதியான சூழலை நாடுகிறோமே. ஏன்? தெளிந்த மனதில் விடயங்கள் மிக இலகுவாகவே பதிந்து விடுகின்றன. அதுபோல்தான் மனிதரும் தம்மைப் பற்றி, தமக்கும் பிரபஞ்சத்திற்குமிடையிலான தொடர்புகள் பற்றிச் சிந்தித்து உணர்ந்திட வேண்டுமென்றால், முதலில் அவர் புற உலகச் சூழ்நிலைகளின் கோரத்தாக்குதல்களிருந்து விடுபட வேண்டும். எவ்வாறு இயற்கையின் கோரத்தாக்குதல்களிலிருந்து விடுபட மனிதர் இயற்கையைப் பற்றி ஆராய்ந்திடத் தொடங்கினாரோ, அவ்வாறே இன்றைய மனிதரின் சகல பிரச்சினைகளுக்கும் காரணமான, அவரே உருவாக்கிய புறவுலகச் சூழ்நிலைகளின் தாக்குதல்களுக்கான் காரணங்களை அறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். பசி, வறுமை, நோய், துன்பம் இவையல்லவா புறவுலகச் சூழலின் தாக்குதல்கள். இவற்றை நீக்கிட வேண்டுமானால், இவை உருவாகுவதன் காரணங்களை அறிந்திட வேண்டும். இவையனைத்திற்கும் காரணம் ஒரு சிலரிடம் அபரிமிதமானச் செல்வம் குவிந்திடுவதை அனுமதிக்கிற , அதாவது 'தனியுடமை' அமைப்பல்லவா காரணம். ஆக மனிதர் முதலில் செய்யவேண்டியது இத்தகைய அமைப்பினை உடைத்தெறிவதுதான். கார்ல்மார்க்ஸ் கூறுவதுபோல் பொதுவுடமை அமைப்பினை உருவாக்கிவிடுவதுதான்.

சரி இப்பொழுது இப்படியொரு கேள்வி எழலாம்? 'சரி பொதுவுடமை உலகம் முழுவதும் பரவியபின் என்ன நடக்கும்?'. விடை இதுதான்: அத்தகையதொரு நிலையில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனனுமொரு நிலை உருவாகும். மனிதர் தமது புற உலகப் பிரச்சினைகளிலிருந்து பெரிதும் விடுபடுமொரு சூழல் உதயமாகும். அந்நிலையில் மனிதர் தம்மையே , தம் மனதினையே அறிந்து கொளவதற்குப் பெரிதும் நேரம் கிடைக்கும். சகல பிரச்சினைகளிற்கும் காரணங்களான ஆசை, கோபம், பொறாமை முதலானவற்றினை நிரந்தரமாக உதறித்தள்ளிடக் கூடியதொரு நிலை உதயமாகும். இன்றைய மனிதரிற்கு இவ்வுண்மை தெரிந்தபோதும், அவர் நிரந்தரமாகவே , தூயவராக வாழுதற்கு அவர் சார்ந்திருக்கும் புறச்சூழல் விடுவதில்லை. ஆக, இயற்கைகளுடனான மோதல்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்ட மனிதரின் , அவரே உருவாக்கிய புறச்சூழலுடனான மோதல்கள் முற்றுபெற்றதும், அவருள்ளமைந்துள்ள அகவுலகுடனான மோதல்கள் ஆரம்பமாகும். அதன் வெற்றியிலேயே 'பிரபஞ்சத்தின் புதிர்' தங்கியுள்ளது. காலவோட்டம் நிச்சயமாகவே இதனைச சாதித்து வைத்திடும்.
13.1.1983.

விளக்கு!

காலக்கடலின் குமிழியென அர்த்தமற்ற
குறுவாழ்வில்
அவலங்களே அனர்த்தங்களாயவிந்திட
அர்த்தமற்றதொரு வாழ்வு.
'பொய்மையின் நிழல்படர்ந்து'
புழுங்குமுலகிலெல்லாமே நாசம்;
படுநாசம்; அழிவு; அழிவுதான்.
காரணமற்ற வாழ்வின் காரணம்தான்
யாதோ?
வெளியே, வெற்றிடமே, விரிகதிரே!
விடை பகின்றிடாயோ?
விடை பகின்றிடாயோ?
சலிப்பின் அலைக்கழிப்பில்
நலிந்திட்ட வுலகில்
வழிந்திடும் சோகங்களென்றுமே
தெளிந்திடாவோ?
அண்டச் சுடர்களே! அண்ரமீடாக்களே!
புதிரை அவிழ்ப்பீரோ? அன்றி,
முதிர வழி சமைப்பீரோ? கூறுவீர்.
நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்
நானென்றால் சிரிக்காதீர்.
திக்குத் திசையோ புரியவில்லை.
திணறலினில் மூச்சு முட்டித்
தடுமாறினேனே.
என்றாலுமொரு விளக்கமெங்கோ
ஒளிந்துதானுள்ளது.
விளக்கிடுவேன்; விளக்கிடுவேன்; அவ்
விளக்கின் ஒளிதனிலே
வழிதனைக் கண்டிடுவேன்; அவ்
வழிதனைக் கண்டிடுவேன்.

23.2.1983.

அமைப்பினை மாற்றி வைப்போம்.

சூடுசொரணையற்ற வாடிவிடுமொரு
அடிமையிருள் இவ்வாழ்வு. வண்டில்
மாடென மாயுமொரு
கேடுகெட்ட வாழ்வில் புதைந்தனமே.
இரவுகளெல்லாம் சோகம் பெய்து
இப்படியாயிற்றே குளிர்படர்ந்து.
வெளவால்கள் வாழுமொரு மண்டபமென
வாழ்வே மாறிப்போயிற்றே.
நாதியற்றதொரு நரக வாழ்வு.
சோதியற்ற பெரும் இருட்காடே.
தூங்கி வழிவோரே! தோள் கொட்டித்
துள்ளியெழுவீரே!
ஓங்கியொரு உதை கொடுப்பீரே!
ஒடிந்து வீழ இவ்வமைப்பினையே.
விரைவில், இவ்வுலகெங்கணுமே,
விரைந்து வருமே பொற்காலப் பறவையொன்று.
மென்மையான தன் இறகுகளை அது
மெல்ல விரித்து இன்பப்பாவினை இசைத்திடுமே.
அதன் கதகதப்பில் சூடுகாய்ந்திடுமிவ்வுலகினில்
அழகிய சொர்க்கமொன்றின் தரிசனம்
அவதரித்திடுமே! இனிமை சேர்த்திடுமே!
என்னே வாழ்வு! இவ்வாழ்வு!
பொன்னேயெனப் போற்றுவர் பொய்யர் இப்
புவிமீதினில் புழுத்திட்ட இவ்வாழ்வுதனையே.
என்னே வாழ்வு! இவ்வாழ்வு!
எரிந்த குடிசையெனப் புகையுமிவ்வாழ்வு!
ஏக்கம் தவிர்த்து எழுவீரே!
எட்டியொரு உதை கொடுப்பீரே!
தூக்கம் தனையொழித்து, இங்கொரு
சுதந்திரம்தனைப் படைத்திட
சுட்டெரிப்பீரே நும் நெற்றிக் கண்ணினால்
சீழ்படர்ந்த இவ்வமைப்பினையே!
28.12.1982!

குறிப்பேட்டுப் பதிவுகள்- 5!

18.8.1982!
தத்துவஞானம் பற்றியதொரு விசாரம் அல்லது ஆராய்வு!.

கருத்துமுதல்வாதமா, பொருள்முதல்வாதமா என்று மனிதர்கள் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கையில், விஞ்ஞானத்தின் வெற்றியும், மானிடரின் வளர்ச்சியும் பொருள்முதலவாதத்திற்கே ஆதரவாக நின்றன. பொருள் பிரபஞ்சத்தின் அடிப்படையென்று பொருள்முத்ல்வாதிகள் ஆதாரபூர்வமாக அல்லாவிடினும், பகுத்தறிவிற்கேற்ப அறுதியிட்டுக் கூறினர். இய்லபாகவே மூடநம்பிக்கைகளுடன் கூடிய மதமும், அதனைச் சார்ந்த கருத்துமுதல்வாதமும் அடிபட்டுப் போயிற்று. ஆனால் கருத்துமுதல்வாதம் , அறிந்தோர் மத்தியில்
மட்டுமே அடிபட்டுப் போயிற்று என்பதனையும் நாம் மறந்து விடலாகாது. அறியாமையும், சுரண்டல் சமுதாய அமைப்பிலுள்ள குறுகிய நோக்குள்ள அறிவினைப் பெற்று சமூகத்தில் படித்த பெரிய மனிதர்களாக உலாவிவரும் அறிந்தோர் கருத்து முதல்வாதத்தினை அழிந்து விடாதபடி காத்து வைத்திருபோராவர். உண்மையில் மானுட சமுதாயம் முழுவதுமே பொருளாதாரரீதியிலான விடுதலையினைப்
பெற்றபின்னரே, மானுட வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சிப் போக்கின் அடுத்த கட்டம் (மனரீதியிலானது) ஆரம்பமாகும்.

இதுவரை கால மானுட வர்க்கத்தின் சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப் போக்கினை அவதானிப்போமாயின், ஆதி காலத்து
மானுடர் அறியாமையில் வாழந்த காலகட்டத்தில், அவரது மனம் பூரணமாகத் தொழிற்பட ஆரம்பிக்காதவொரு காலகட்டத்தில் நிலவிய
தாய்வழி மரபினையொட்டிய பொதுவுடமைச் சமுதாய அமைப்பு, பின்னர் உற்பத்திக் கருவிகளின் பரிணாமவளர்ச்சிப்
போக்கிற்கேற்ப மாறுதலடைந்து வந்த ஆண்டான், அடிமை, அதாவது அடிமை-உடைமை சமுதாய அமைப்பு, நிலப்பிரபு-பண்ணையடிமை
அல்லது நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு, அதன் பின்னர் உருவான முதலாளித்துவ சமுதாய அமைப்பு, நவீன முதலாளித்துவ
சமுதாய அமைப்பு .... இப்படியாகப் பரிணாம வளர்ச்சிப் போக்கினைக் கொண்டுள்ள சமுதாய வரலாற்றுப் போக்கில் , அடுத்ததாக நிச்சயம
இன்னுமொரு மாற்றம் நிச்சயம ஏற்பட்டே தீரும். இன்னுமொன்றையும் இச்சமுதாய அமைப்பின் வளர்ச்சிப் போக்கில் அவதானிக்கலாம். அதாவது, எண்ணற்ற வர்க்கங்களாகப் பிரிந்து கிடந்த மானுடவர்க்கத்தினை, இச்சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப்போக்கு மேலும் மேலும் எளிய வர்க்கங்களாகப் பிரித்து, இறுதியில் முதலாளி, தொழிலாளி என்னுமிரு வர்க்கங்களை உள்ளடக்கியதொரு சமுதாய அமைப்பாக மாற்றி விட்டுள்ளது. இதற்கு அடுத்த படி நிச்சயமாக வர்க்கங்களேயற்றதொரு சமுதாய அமைப்பாகத்தானிருக்க முடியும். பொதுவுடமைச் சமுதாய அமைப்பு ஒன்றே அத்தகையதொரு அமைப்பாகவிருக்க முடியும். பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தின் மூலம் உருவாகும் அத்தகைய சமுதாய அமைப்பில் பொருள்முதல்வாதிகள் கூறுவதுபோல் இறுதியில் 'அரசு' என்னும் ஒன்றே இல்லாமல் போய்விடும். அது நிச்சயம். உண்மையில் 'அரசு' என்பதே இறுதியில் உதிர்ந்து உலர்ந்துதான் போய்விடும். ஆனால் அத்துடன் மானுடவர்க்கத்தின் சகல பிரச்சினைகளும் தீர்ந்து போய்விடுமா என்ன?

அதன்பிறகுதான் மானுட வர்க்கத்தின் சிந்தனைப் போக்கிலான பரிணாம வளர்ச்சிப் போக்கின் அடுத்தகட்டமான , அரவிந்தர் கூறும்
'உயர்நிலை மனம்' (Super Mind) உடைய 'உயர்நிலை மனிதர்களைக்' கொண்ட (Super Human) சமுதாய அமைப்பு உருவாகும். இதுவரை
கால மானுட வர்க்கத்தின் வரலாற்றுப் போக்கில் , சமுதாயத்தில் மட்டுமல்ல, சகல ஜீவராசிகளிலும், சகல நிலைகளிலும், பிரபஞ்சம்
முழுவதுமே பரிணாம வளர்ச்சிப்போக்கிற்காட்பட்டுத்தான் வந்துள்ளது. தத்துவஞானப் போக்கிலும் , ஆரம்பத்தில் மூட நம்பிக்கைகளுடன்
கூடிய கருத்துமுதல்வாதமும், இறுதியில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப பொருள்முதல்வாதமும் மானுட வர்க்கத்தினை ஆட்கொண்டன.
ஆனால் 'உயர்நிலை மனம்', 'உயர்நிலை மனிதர்க'ளைக் கொண்ட 'அதிமானுட' வர்க்கத்துச் சமுதாய அமைப்பிற்குரிய தத்துவஞானம்
எதுவாகவிருக்க முடியும்? நிச்சயம் பொருள்முதல்வாதம் மட்டுமாயிருக்க முடியாது. அதே சமயம் கருத்துமுதல்வாதமாக மட்டுமிருக்க முடியாது. இவற்றை இரண்டினையும் இணைத்த , இவற்றை மேலும் சுத்திகரித்ததொரு தத்துவஞானமாகத்தானிருக்க முடியும். மானுட வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சிப் போக்கு 'அதிமானுட' சமுதாய அமைப்புடன் நின்றுவிடுமா என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அப்படி நின்றுவிடாது அதன் அடுத்த படியினை , அதற்கடுத்த படியினையென்று...  பரிணாம வளர்ச்சிப் போக்கும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். தற்போதை மானிடருக்கு விளங்காமலிருக்கும், பிரபஞ்சம் பற்றிய உண்மைகளெல்லாம் அச்சமயத்தில் இலகுவாகத் தெரியவரும்.

இன்றைய மனிதர் 'விஞ்ஞானத்தால்' பிரபஞ்சத்தையே அளந்துவிட்டேன் என்பதுபோல் கொலம்பியா ஓடங்களில் கொக்கரிப்புடன் சேர்ந்து சிரிக்கின்றார். ஆனால் அவரால், கேவலம் இந்த விஞ்ஞானத்தால் 'அகவிடுதலைக்கு' எதையுமே ஆற்ற முடியவில்லை. ஆனால் விஞ்ஞானம் மானிடரின் அகத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளில் பூரணமாக இறங்குவதன்மூலம் , மானுட வர்க்கத்தின் 'அகவிடுதலைக்கு'  உதவி செய்ய முடியும். ஆனால் நாம் வாழும் உலகில் காண்பதென்ன? இன்றைய மனிதர் ஆக்கத் துறைகளைவிட, பாதுகாப்பு, பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு அழிவுத்துறைகளுக்கே விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி வருகின்றார். அணுக்குண்டுகளும், நியூத்திரன் குண்டுகளும், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளும் மானுட் வர்க்கத்திற்கே சவாலாயிருந்த போதிலும், நிச்சயம் மானுட வர்க்கத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சிக் கட்டமான 'அதிமானுட' சமுதாய அமைப்பு உருவாகியே தீரும். சூழ்நிலைகளும் அதற்கேற்ப உருவாகியே தீரும். -

29.11.1982!
மறுபடியும் அவள் நினைவு!

இன்று மறுபடியும் , மறுபடியும்
அடியே! உன்நினைவு! ஆம்!
பாலையிலோர் பசுமையென, அதி
காலையின் இனிமையென, பொன்
மாலையின் எழில்மயக்கமென
வாலைக்குமரீ! உந்தன் நினைவுகள்...
இன்று மறுபடியும், மறுபடியும்,
அடியே! உன் நினைவு! ஆம்!
கோடையின் குளிர்தென்றல், நீர்
ஓடையின் தண்னுணர்வு! மென்
வாடையின் வடிவழகு!
இன்று மறுபடியும், மறுபடியும்,
அடியே! உன்நினைவு! ஆம்!
அடீயே! உன் நினைவு!
பாடிப்பறந்த குயில்! அன்பே
ஓடியொளிந்த மயில்! அன்று
ஊடிநின்ற ஒயில்!
ஏன் துறந்தாய்?
இன்று மறுபடியும், மறுபடியும்,
அடியே! உன் நினைவு! ஆம்!
அடீயே! இன் கனவு!
விழியால் அருள் சொரிந்தாய்! கனி
மொழியால் பொருள் பதித்தாய்!
ஏன் பறந்தாய்? எனை மறந்தாய்?
இன்று மறுபடியும் , மறுபடியும்,
அடீயே! உன் நினைவு! ஆம்!
அடியே! உன் நினைவு!
நகையால் எனை வென்றாய்!
பகையால் தனைக் கொன்றாய்!
இன்று மறுபடியும், மறுபடியும்,
அடீயே! உன் நினைவு! ஆம்!
அடியே! இன்கனவு!

பயமில்லை! விடு!

எதற்குமே ஆமாம் எதற்குமே
நான் கவலைப்படப் போவதில்லை.
ஆம்! எதற்குமே!
போகுமுயிர் ஒருமுறையே
போகுமிவ்வுலகில்; உணரின்,
உணர்ந்தவனே நான்தான்! ஆமாம்!
நான்தான்! நானேதான்!
உணர்ந்தவனை உலகிலெதுதானெதிர்த்திடுமோ?
எதுவுமன்று! பின்
பயமேன்; அஞ்சுதல் கோழமையன்றோ.
பயந்து , பதுங்கிக் கிடந்ததனால் கண்ட பயனோ?
அவமானம்! துயரம்! கண்ணீர்!
இவையன்றோ.
இதுவுமொரு வாழ்வோ? இல்லை, சாக்காடு!
போக்கற்ற பிறவிகள் புழுத்திருக்கும்
சாக்காடு!
உழைந்தது போதும்! போதும்! ஆயினுமொரு
முடிவு காணுமுன்
போவது நன்றோ? இல்லை! இல்லை! இல்லை!
ஆயினந்தச் சக்தி
எனைக் காக்கும்! காக்கும்! காக்கும்!
பின்னேன் பயமோ? பயமில்லை!
விடு!     7.6.1983!

குறிப்பேட்டுப் பதிவுகள் -6!

நானும் என் எழுத்தும்!

'நான் ஏன் எழுதுகிறேன்?' நான் என்னையே இக்கேள்வியினைக் கேட்டுக்கொள்கிறேன். நான் என்னையே இக்கேள்வியினைக் கேட்டுக் கொள்வதற்கு , 'இன்றைய எழுத்தாளன்' ஒருவனைப் போன்று , பத்திரிகைகளில் பத்தி பத்தியாக எழுதிக் குவித்த தகுதியிருக்கின்றதாவென்று கேட்காதீர்கள்? அத்தகைய தகுதி எனக்கில்லையே என்ற ஆதங்கமிருக்கிறதாவென்றால்... ஆம். நிச்சயமாக இருக்கிறதுதான். குப்பைகளின்மேல் அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்குள்ள ஆர்வத்தையிட்டெழுந்த அனுதாபத்தால் விளைந்த ஆதங்கமே தவிர வேறல்ல. சரி விடயத்திற்கு வருவோம். நான் ஏன் எழுதுகிறேன்? நிச்சயமாக எனது மனத்திருப்திக்காக மட்டும் எழுதுபவனல்லன். பின், நிச்சயமாக என் எழுத்து மானுட சமுதாயத்திற்கு மிகுந்த பயனைத் தந்துவிடவேண்டுமென்ற பேராசையினால் விளைந்த உந்துதலின் விளைவாக, சீர்கெட்டுக் கிடக்கும் சமுதாயத்தில் நிலவிடும் வர்க்கவித்தியாசங்களால் நிலைகுலைந்து நிற்கும் அதன் இயல்பினை மாற்றியமைத்திட வேண்டுமென்ற பேரார்வத்தினால் எழுதுகின்றேன். ஏதோ பெரிய தலைவனாக எண்ணிக்கொண்டு பேசுகின்றானேயென எண்ணுகின்றீர்களா? மானுட வர்க்கத்தின் நன்மைக்காக எழுதிகின்றானென்கின்றானே , இவனது எழுத்து அவர்களைச் சென்றடைகின்றதாவென்று வினவுகின்றீர்களா? கவலையில்லை. தற்போதைய நிலையில் என் எழுத்துகள் மக்கள் கூட்டத்தினைச் சென்றடையவில்லை என்பது உண்மைதான். அதற்காக இவன் மனந்தளரவுமில்லை; மதி கெடவுமில்லை. தகுந்த வேளை வரும்போது , நிச்சயமாக என் ஒவ்வொரு சொல்லும், அதன் அர்த்தமும் மானுட சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் சென்றடைந்திடுமென்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் (மானுட சமுதாய வரலாறு ஒரு பரிணாம வளர்ச்சிப் போக்கு என்ற நம்பிக்கை காரணமாக) எனக்கு உண்டு. அந்த நம்பிக்கை இருப்பதால் மட்டுமே நான் எழுதுகிறேன்; எழுதுகிறேன்; எழுதுகிறேன்.

சரி. மானுட சமுதாயத்திற்காக எழுதுகின்றேன் என்றால்... காலக்குமிழிகளிலொன்றான மறைந்துவிடுமிந்த அற்ப வாழ்வுக்காக , இந்த அற்ப வாழ்வுடைய மானுட வர்க்கத்திற்காக எழுதுவதால் எனக்கென்ன நன்மை? ஒருவேளை நீ உயிருடனிருக்கையில் உன்னைப் புறக்கணித்து விடுகின்ற இச்சமுதாயம் நீ இறந்தபின் உன்னை அங்கீகரிப்பதால் உனக்கென்ன நன்மை? இவ்வாறு சிலர் கேட்கலாம்; கேட்பார்கள். இவர்களிற்கெல்லாம் நான் கூறுகின்ற பதில்: நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இங்குதான் பகவத்கீதையில் எனக்குப் பிடித்த கருத்து நினைவிற்கு வருகின்றது. 'கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே.' என்னைப் பொறுத்தவரையில் மனிதரொருவருக்கு இரு முக்கிய கடமைகளுண்டு; ஒரு தாயின் வயிற்றில் பிறந்ததற்காக அவளுக்குச் செய்யவேண்டிய கடமை ஒரு புறமிருக்க , மறுபுறம் அவர் வாழும் சமுதாயத்திற்காக அவர் ஆற்றவேண்டிய கடமை காத்து நிற்கின்றது. இந்தக் கடமைகளையெல்லாம் அவர் வெறுமனே 'தன் தாய், தன் இனம், தன் குடும்பம்' என்று சுயநலரீதியில் நின்று செய்வதால் வருவனவே சகல பிரச்சினைகளும், மோதல்களும். சமுதாயம், குடும்பம் எல்லாம் இப்பிரபஞ்சத்தின் ஒரு துளி. ஆக இப் பிரபஞ்சத்து உண்மைகளை உய்த்துணர்வதன் மூலம் சமுதாயம், குடும்பம் என்பவற்றைத் தகுந்த வழியில் காப்பதே மனிதரது இலட்சியமாயிருக்க வேண்டும். சமுதாயத்திற்காகக் குடும்பத்தையோ அல்லது குடும்பத்திற்காகச் சமுதாயத்தையோ துறப்பதோ அல்லது ஒதுக்கி விடுவதோ சரியான செயலல்ல. இரண்டிற்குமுரிய கடமைகளையும் பலனை எதிர்பாராமல் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதிலேயே ஆழ்ந்ததொரு திருப்தியிருக்கும். அப்படிச் செய்கையில், எதிர்பாராத இக்கட்டுகள் நேர்கையில், அதாவது குடும்பத்திற்குக் கடமையாற்ற முடியாததொரு நிலையேற்படுமாயின் அதனை ஏற்கத் தயாராகயிருக்க வேண்டும். ஆக, நான் இத்தகையதொரு நிலையில் நின்றுகொண்டுதான் செயலாற்றுகிறேன். இவ்விரு கடமைகளையுமே நான் எனது இரு கடமைகளாகக் கருதுகின்றேன். இவற்றை எவ்விதப் பலனையும் எதிர்பாராமல் செய்வதிலேயே ஒருவித பயனை அல்லது திருப்தியினை அடைகின்றேன். என்னுடைய ஆரம்பகாலக் கவிதையொன்றில் நான் பின்வருமாறு எழுதியிருக்கிறேன்:

'நாற்றமெடுக்கு மிவ்வுடல் ஒருநாள்
நீற்றுப் போவது நிச்சயமே! அதற்குள்
நன்றினைச் செய்து மடிவோம்; அதனையும்
இன்றே செய்து முடிப்போம்.
விழலிற்கிறைத்த நீராய், வாழ்க்கை
அழுகிய தேன் சுவைக் கனியாய்ப்
பாழ்பட்டுப் போவதோடா!
பயனற்றுக் கிடப்பதோடா!'

என்னைப் பொறுத்தவரையில் மேலுள்ள வரிகளேயென்னை, வாழ்க்கையில் ஒரு பயனை ஏற்படுத்தும்பொருட்டு, என் எழுத்தினை மானுட சமுதாயத்திற்காக வழிகாட்டியாக மாற்றும்படி ஊக்குவித்தன; ஊக்குவிக்கின்றன. நான் சமுதாயத்திற்காக எழுதும் அதே சமயம், நானும் அச்சமுதாயத்தின ஓர் உறுப்பினரென்பதை யாருமே மறந்துவிட வேண்டாம். எனக்கென்று, என் மனதிற்கேயுரிய இயல்புகளென்று சில இயல்புகள், சில எதிர்பார்ப்புகள், சில எண்ணங்கள் உண்டு என்பதை யாரும் ஒதுக்கித்தள்ளி விட வேண்டாம். அவற்றிலிருந்து ஒரு மனிதராலும் விடுபடுவதென்பது முடியாததொன்று. அந்த வகையில் சிற்சில வேளைகளில் என் எழுத்துகள் என் தனிப்பட்ட எண்ண அல்லது வேட்கைகளின் வெளிப்பாடாகவுமிருக்கலாம். அதனை யாருமே குறை கூறிட முடியாது. குறை கூறுபவர் என்னைப் பொறுத்தவரையில் ஒருபக்கச் சார்பான அறிவினைப் பெற்றவர்களிலொருவரே. சரி. இறுதியாக என் நோக்கத்தினைப் பின்வருமாறு கூறிடலாம். எனது நோக்கம் எனது எழுத்துகளின் மூலம் இம்மானுட சமுதாயத்திற்குச் சிந்தனைத் தெளிவினை ஏற்படுத்துவதேயாகும். மானுட சமுதாயத்தினை மட்டுமின்றி, சகல ஜீவராசிகளையும், இவ்வழகிய நீலவண்ணக் கோளினையும், இதுபோன்ற ஏனைய பல கிரகங்களையும், வெற்றிடங்கள் சூழ்ந்து கிடக்கும் பால்வெளிகளையும், ஆங்கு தனிமைகளில் தவமியற்றும் நட்சத்திரக் கூட்டங்களையும், வெற்றிடங்களைத் துளைத்துவரும் கதிரொளியையும், .. எல்லாவற்றையுமே ஆமாம் எல்லாவற்றையுமே, இந்தப் பிரபஞ்சப் புதிர்களை இனங்காண்பதன்மூலம் , இன்றைய மனிதரின் சரியான நிலையினை உய்த்துணர்வதன் மூலம், மனிதரின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் காண்பதே எனது பேனாவின் பிரதானமானதும், மகோன்னதுமான குறிக்கோளாகும்.'
28.9.19821

இயற்கையும் மனிதரும்!

ஒரு காலம் இருந்தது. மானுட வர்க்கத்தின் தோற்றுவாயின் ஆரம்பகாலகட்டமது. ஆறுகள் பொங்கிப் பெருகிப் பாய்ந்தோடின; மரங்கள் தழைத்துச் செழித்துக் கிடந்தன; புட்கள் பாடிப் பறந்து திரிந்தன; இயற்கையின் அரவணைப்பில் காடுகளில், குகைகளில், சமவெளிகளிலென்று ஆதிமானுடர் அலைந்து திரிந்த சமயத்தில், அவரிடம் அறிவு வளர்ச்சியுற்றிருக்கவில்லை. பரிணாம வளர்ச்சிப் போக்கின் ஆரம்பக் கட்டமது. அவர் மனிதிலோ ஒருவித திகில். செயல்களுக்கு அர்த்தம் புரியாத நிலையில் ஒருவித பயம் அவர் மனதை மூடியிருந்தது. இயற்கையோடு இயற்கையாக , அதனோரங்கமாக வாழ்ந்துவந்த ஆதிமானுடர் வரலாற்றில் நிகழ்ந்திட்ட பரிணாமப் போக்கின் இன்றைய விளைவோ? இயற்கையின் குழந்தையான மனிதரை, நாகரிக மனிதரின் அறிவு வளர்ச்சி அவர் தாயிடமிருந்து பிரித்து விட்டது. ஆதிமானுடரிடமிருந்த அறியாமையை அகற்றவேண்டிய வரலாறறின் இன்றைய வளர்ச்சிப் போக்கு, அவரது வாழ்முறைகளை இன்னுமொரு பிழையான நிலைமைக்கிட்டுச் சென்று விட்டதுபோல்தான் தெரிகின்றது. இன்றைய மனிதரின் போர்வெறிப் பூசல்கள் இவற்றையே உணர்த்தி நிற்பதாகப் படவில்லையா? இன்றைய இறுமாப்புமிக்க மனிதர் அறிவென்று கருதுவதெல்லாம், புதிய புதிய கண்டுபிடிப்புகளை வழங்கும் விஞ்ஞான அறிவினைத்தான். ஆனால் அவரது வாழ்க்கையைச் செப்பனிடக்கூடிய 'மனம்', அவரது 'மனம்' இன்னும் அந்தப் பழைய காட்டுமிராண்ண்டிக் காலத்து மனிதரிடமிருந்து எவ்விதத்திலேனும் பரிணாமம் அடைந்ததாகத் தெரியவில்லை. நாள்தோறும் பத்திரிகைகள் பெரிதாகக் கக்கும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, போர்ப் பூசல்கள் எல்லாம் எதை உணர்த்தி நிற்கின்றன? இவற்றைத்தானல்லவா? ஒருவேளை இனித்தான் மனிதரது மனப் பரிணாம மாற்றம் நடைபெறுமோ? ஆனால் அதற்கிடையில் அவரது அறிவு வளர்ச்சியின் கடந்த காலப் பிழையான பரிணாமப் போக்கால் மனிதரே தமக்கிடையில் இதுவரை ஏற்படுத்திக் கொண்ட சமுக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண்பதற்கே இன்றைய மனிதரின் பரிணாப் போக்கு ஒழுங்காக நடைபெற வேண்டியதன் அவசியம் அவசியமாகின்றது.

இயற்கைக்கும், இயற்கைவாழ் ஜீவராசிகளுக்குமிடையில் நிலவிவந்த ஒழுங்கான சமநிலையினை இன்றைய மனிதரின் ஆணவம் மிக்க அறிவு குலைத்து விட்டது. ஓங்கி வளர்ந்த பச்சைப் பசிய விருட்சங்களுக்குப் பதிலாக 'காங்ரீட்' காடுகளால் நிறைந்த மாநகரங்களையே காண்கிறோம். அங்கே புள்ளினங்களின் இன்ப கானங்களை நாம் கேட்கவில்லை. நாம் கேட்பதெல்லாம்,.. பார்ப்பதெல்லாம்... வானொலிகளின் அழுகுரல்களையும், தொலைக்காட்சிகளின் ஆரவாரங்களையும்தான். ஊர்வனவற்றின் ஆனந்தமான வாழ்க்கைக்கு இங்கு இடமேது? வாகனங்களின் பெருமூச்சுவிடுதலுடன் கூடிய ஊர்வலங்களையே காண முடிகிறது. தூய்மையான தென்றலென்று காவியங்கள் கூறலாம். ஆனால் இங்கு வீசும் தென்றலோ காபனோரொட்சைட்டு, கந்தவீரொட்சைட்டு போன்ற நச்சு வாயுக்களின் கலவையாகவன்றோவிருக்கிறது. போதாக் குறைக்கு சுயநிர்ணய உரிமை என்று பேசும் மானுடர் இறைச்சிக்காகக் கொன்று குவிக்கும் உயிரினங்களுக்கோ அளவில்லை. ஆமை, ஆடு, அணில், மாடு, மான், மரை, பாம்பு, தவளை,,,, இப்படி ஒன்றைக் கூட இந்தப் பாவி மனுசர் விட்டு வைப்பதில்லையே. மிருகங்களைப் பொறுத்தவரையில் சிந்தனையாற்றலற்றதனால் அவை ஒன்றையொன்று கொன்று தங்களைக் காத்துக் கொள்கின்றன. ஆனால் மானுடரோ.. ஆறறிவு பெற்ற அற்புதப் பிறவிகளென்று தம்மையே புள்காங்கிதத்துடன் வர்ணித்துக் கொள்கின்றார். இத்தகைய மனிதரும், மிருகங்களைப் போல் மற்றைய உயிர்களைக் கொன்று குவிப்பாரென்றால் இவருக்கும் அவற்றிற்குமிடையிலான வித்தியாசம்தானென்ன? மானுட விடுதலைக்காய் போராடும் மனிதர் சகலஜீவராசிகளினினதும் சுயநிர்ணய உரிமைகளையும் அங்கீகரிக்க வேண்டியவராகவன்றோயிருக்கின்றார். ஆனால் அவர் அதைச் செய்கின்றாரா என்ன?

இயற்கையாக உருவாகிய ஒவ்வொன்றுமே அதனதன் வாழ்நாள் முடிவுறும் வரையில் வாழுதற்குரிய சுயநிர்ணய உரிமையினை யாவருமே அங்கீகரிக்க வேண்டும். மனிதர் இயற்கையோடு இயற்கையாக , அதனோர் உறுப்பாகவொன்றி வாழ்வேண்டுமே தவிர, அதனைச் சிதைப்பதன்மூலம் 'காங்க்ரீட்' காடுகளை உருவாக்கி அதனோர் அங்கமாக வாழுவது அவருக்கு மட்டுமல்ல அவர் வாழும் இவ்வுலகிற்குமே ஏற்றதல்ல. இன்றைய மனிதரின் கட்டடக்கலையின் வளர்ச்சியில் இன்னுமொரு பரிணாமப் போக்கு எழவேண்டியதன் தேவை அவசியமாகின்றது. அவரது கட்டடங்களின் அடிப்படைத் தேவைகள் என்ன, எவை?

1. சூழலின் கோர விளைவுகளிலிருந்து அவரைக் காப்பது.
2. அவர் வசிப்பதற்கு.

இவற்றைப் பூர்த்தி செய்வதற்கு அவருக்குத் தேவையான கட்டடங்கள் இயறகையோடொத்ததாக, எளிமையானதாக உருவாக்கப்படல் வேண்டும். இவற்றை அடைவதற்கு முன்னோடியாக மனிதர் அளவற்று இனப்பெருக்கம் செய்வது நிச்சயம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். எதற்கும் ஓரளவின் அவசியம் தேவையாகின்றது. 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்றொரு பழமொழி பேச்சு வழக்கிலுண்டு.
இயற்கைக்கும், மனிதருக்குமிடையிலான தொடர்பு அறுந்து போகாதபடி செயலாற்ற வேண்டியது அதிமானுடத்தினை நோக்கி முன்னேறும் இன்றைய மனிதர் செய்ய வேண்டிய கடமையாகும்.

11.8.1982.

தாய்!

அந்தச் சிறு ஓலைக்குடிசை..
ஆழநடுக்காட்டின்
தனித்த , இருண்ட, வெறுமைகளில்
உறைந்து கிடக்கும்.
மரங்களில் மயில்கள்
மெல்ல அகவிச் செல்ல
மந்திகளின் தாவலால் தூரத்தே
மரம் முறியுமோசை
காதில் வந்து நுழையும்.
ஆனல் நீ மட்டும் வாசலில்
எந்நேரமும் காத்துக் கிடப்பாய்.
ஊர்மனைகளுக்குக் கூலிக்குப் போய்விட்ட
உந்தன் புதல்வனுக்காய்
வெறுமைகளுக்குள் நுழைந்து நிலைத்துவிட்ட
கண்களின் அசைவற்று...
சுருங்கிக் கிடக்கும் முகத்தில்
சோகம் குழம்பென அப்பிக் கிடக்க..
தனிமையில் காத்துக் கிடப்பாய்.
இருண்ட பின்னால் திரும்புமுன்
இளவலிற்காக நீ நாள்முழுக்கக்
காத்து நிற்பாயோ?
அம்மா!
அகமுடையானைக் கரம் பிடித்த
அந்த நாளில் நீ எத்தனை
கோட்டைகளைக் கட்டி வைத்தாய்?
அவையெலாம் இடிந்தனவோ?
என் பிரிய அம்மா!
புதல்வன் படித்துப் பட்டம் பெற்று...
நம்பிக்கைகளில் அம்மா
நீ சிலிர்த்துப் போயிருந்தாயோ?
உழைத்துருக்குலைவதற்கே உதித்த்
என்னருமை ஜீவன்களே!
ஒருகாலம் மெல்ல முகிழ்க்கும்.
தாயே! உன் பார்வையின் வெறுமைகள்
தீருமொரு நேரம் மெல்லவுதிக்கும்.
உழைப்பின் பயனை உணரும் ஒருவேளை
வந்து பிறக்கும். அம்மா!
அதுவரை என்னை மன்னித்துக்கொள்!

11.10.1982.
[மேலுள்ள கவிதை வன்னியின் ஆழநடுக்காட்டில் , 77 இனக்கலவரத்தைத் தொடர்ந்து ,அகதிகளாக மலையகத்திலிருந்து குடியேற்றப்பட்ட குடியேற்றத் திட்டமொன்றில் தன் புதல்வனுடன் தனிமையில் வசித்து வந்த ஒரு மூதாட்டியினைச் சந்தித்தபோதெழுந்த உணர்வின் வெளிப்பாடு. கோடைக்காலத்து நண்பகலொன்றில் , அயற்கிராமமொன்றுக்குக் கூலி வேலைக்காக மகன் சென்றிருந்த சமயமது. சிறியதொரு குடிசை. அரவம் கடித்தாலும் அழைப்பதற்கருகில் யாருமில்லை. இத்தகையதொரு சூழலில், இருண்ட பின்னால் வேலை முடிந்து வீடு திரும்பவிருக்கும் புதல்வனை எதிர்பார்த்து, ஒருவித சோகம் படர்ந்த முகத்துடனிருந்த அந்த மூதாட்டியின் கோலம் நெஞ்சிலேற்படுத்திய உணர்வலைகளின் பிரதிபலிப்பு.]

புள்ளின் சோகம்!

வீதியோரத்து மின்கம்பியொன்றில்
எந்நேரமும் தனிமையில்
அச்சிறுபுள் அமர்ந்திருக்கும்.
அந்தக் கண்கள்...
அப்படி என்னதான் சோகமோ?
இழந்துவிட்ட எதையோ தேடுவதுபோல்
அந்தப் பார்வையில் படர்ந்து கிடக்கும்
தேடலை உணர முடிகின்றது.
ஊருலாத்திக் குருவியின்
உள்ளே என்னதான் இரகசியமோ?
'எல்லையற்ற வானிலிஷ்ட்டம்போல்
துள்ளித்திரியலாமெழிற் புள்ளே'
என்றிசைப்பார் கவிஞர்.
மாரிகளில் மழைபெய்து மெல்ல
வெளிக்கையில்
நீரைச் 'சடசட'த்தகற்றியபடி
மெல்லவந்து நீ அமர்கையிலே
சிறு புள்ளே!
என்னிதயத்தேயும் மெல்லவொரு
ஏக்கம், சோகம் படரும்.
அறுந்துவிட்ட வீணையைப்போல்
துடிக்குமிதயத்தில்
கவிந்திருக்கும் சோகம்தான்
என்றும் தீர்வதில்லை என்னினிய
ஒற்றைப் புள்ளே!
என்னினிய ஒற்றைப் புள்ளே!
என்னாலுணர்ந்திட முடியவில்லையே!
மூடிய அந்தப் பெட்டகத்தின்...
சிறு புள்ளே! சாவிதான்
என்னிடமில்லையே.

12.6.1982

நன்றி: திண்ணை.காம்!
ngiri2704@rogers.com

பதிவுகள் தொடரும்........


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner