இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2009 இதழ் 111  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!
நினைவுகளின் தடத்தில் - (25 & 26)

வெங்கட் சாமிநாதன்


வெங்கட் சாமிநாதன்கும்பகோணம் பள்ளிக்கூடம் போக தினம் ஐந்தரை மைல் காலையிலும் பின் உடையாளூர் திரும ஐந்தரை மைல் மாலையிலும் நடந்து செல்லும் வாழ்க்கையென்றாலும், கும்பகோணம் பள்ளி நேரங்களும், அதோடு ஒட்டிக்கொண்டு வந்து விட்ட உடையாளூர் கிராம வாழ்க்கையும் கொஞ்சம் கொஞமாக பிடித்துத் தான் போயின. பள்ளிக்கூடத்தில் முற்றிலும் புதிய சூழல். என்னமோ இஷ்டபாடம் (Optional subjects) எடுத்துக்கொள்ள வேண்டுமாக்கும் SSLC யின் கடைசி இரண்டு வருஷங்களில் என்று எனக்குச் சொல்லப்பட்டது. உயர் கணிதம், பௌதீகம், ரசாயனம் என்னும் மூன்று பாடங்கள் கொண்ட MPC க்ரூப் எடுத்துக்கொண்டால் பெரிய பெரிய வேலைக்குப் போகலாமாக்கும், எஞ்சினீயர் ஆகலாமாக்கும் என்று எல்லாரும் சொல்ல, எனக்கென்ன தெரியும், நானும் எஞ்சினீயராகப்போறேன் என்று அந்த க்ரூப் கேட்டேன். கொடுக்கப்பட்டது. முதல் நாள் பௌதீகம் நடந்த வகுப்புக்குப் போனால், வாத்தியார் சொன்னது ஒரு மண்ணும் புரியவில்லை. உயர் கணித வகுப்பு அதற்கு மேல். யாரிடம் போய் நான் என்ன கேட்டு விளங்கிக் கொண்டு படித்து தேறமுடியும்? இங்கு யார் இருக்கிறார்கள் எனக்கு சொல்லிக்கொடுக்க? வீடு திரும்பும் வரை எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருண்டு வந்தது. அம்மா கேட்டாள், என்னடா ஆச்சு, என்னமோ போல இருக்கியே? என்று. அப்பா வந்ததும் அம்மா சொன்னாள், "அவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை, சொரத்தாவே இல்லை" என்று சொல்லி விட்டாள். எல்லோரும் என்னைச் சூழ்ந்து உட்கார்ந்து விட்டார்கள். அப்பா அம்மா தான் என்றில்லை. மூன்று தங்கைகளும் சூழ்ந்து கொண்டு என் முகத்தையே கவலையோடு பார்த்தார்கள். "அண்ணாவுக்கு ஏதோ ஆயிடுத்து" என்று கவலை அவர்களுக்கு. நிலக்கோட்டையாக இருந்திருந்தால், மாமா திட்டி யிருப்பார். இங்கு என்னைச் சூழ்ந்து கொண்டு எல்லோரும் கவலைப் பட்டார்கள். இது புது அனுபவமாக இருந்தது எனக்கு.

தாழ்வாரத்தை ஒட்டிய கூடத்தில் ஹரிகேன் விளக்கின் மங்கிய மஞ்சள் ஒளியில் நடந்த அங்த மகா நாட்டில், "கஷ்டமா இருக்கற பாடத்துக்கு ஒரு முழுக்கு போட்டுட்டு வேறே பாடம் எடுத்துக்கறது, இஷ்ட பாடங்கள் தான் நிறைய இருக்கே, என்னத்துக்கு வேண்டாதத கட்டிண்டு அழணும்?" என்ற தீர்மானம் நிறைவேறியது. மறு நாளே வேறே என்ன எடுத்துக்கலாம் என்று நானே யோசித்து, ஒரு வேளை வேலை தேடி வடக்கே போவதென்றால் உபயோகமாக இருக்கும் என்று, பாகவதர் கிராப் வைத்துக்கொண்டிருந்த ஹிந்தி பண்டிட் வகுப்பில் சேர்ந்தேன். அப்படி ஒன்றும் ஹிந்தியையும் ஒழுங்காகப் படித்தேன் என்று சொல்ல முடியாது. ஹிந்தி வகுப்பில் என்னையும் சேர்த்து மூன்று பையன்கள், ஆறு பெண்கள். ஏதோ எம்ப்ராய்டரி, தையல் க்ளாஸ் போல இந்த ஹிந்தி வகுப்பிற்கும் அந்த மரியாதை தான் என்று தோன்றிற்று.

எனக்கு சிரமம் கொடுக்கத் தொடங்கிய இன்னொரு பாடமும் உண்டு. அது நம் தேனினும் இனிய தமிழ் தான்.. அந்த ஆண்டு தமிழ்ப் பாடங்கள் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே, தமிழ் வாத்தியார் எடுத்த பாடங்கள் என்னை பயமுறுத்துவனவாக இருந்தன. என்னென்னமோ தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். தமிழ் வகுப்பில் காய்கள் எங்கிருந்து வந்தன என்று நான் திகைத்துப் போனேன். எப்படிடா இங்கே படித்து தேறப்போகிறேன், எதைத் தொட்டாலும் அது பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்து விடுகிறதே, தமிழ் எப்படி இவ்வளவு சிரமப்படுத்தும் ஒன்றாகியது என்று எனக்கு விளங்கவில்லை. ஆனால் அதில் ஒரு நன்மையும் இருந்தது. தமிழ் வகுப்பில் தான் எனக்கு மிக ஆப்தமான நண்பனும் கிடைத்தான். ஆர். ஷண்முகம் என்று பெயர். வகுப்பிலேயே ஷண்முகம் தான் உயரமானவன். வயதிலும் மூத்த ஒரு தோற்றமும் உண்டு. வித்தியாசமான உடையும் அணிந்து வந்தவன். எல்லாரும் சட்டையுடன் காற்சட்டையோ வேட்டியோ அணிந்து வந்தால், ஷண்முகம் ஜிப்பாவும் வேஷ்டியும் பாகவதர் க்ராப்புமாக தன்னை மற்றவர்களிடமிருந்து தன்னை வேறு படுத்தும் தோற்றமுடையவன். எப்படியோ எனக்கும் அவனுக்கும் அத்யந்த சினேகம் உண்டாகிவிட்டது. என்னை பிரமிக்க வைத்த இன்னொரு காரணம், தேமா புளிமா என்னை பயமுறுத்திய மறு நாளே, "என்ன சாமிநாதன், இதையெல்லாம் நான் படிக்கவே வேண்டாம். எனக்குத் தெரியாத தேமாவும் புளிமாவுமா? ரொம்ப நாளாவே நான் இதில் தான் மூழ்கி நீந்திக்கொண்டிருக்கேன்" என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 'படிக்கவே வேண்டாம் என்கிறான், ரொம்ப நாளா அதிலேயே உழண்டுண்டிருக்கானாமே" என்று திகைத்தேன். சும்மா அளக்கறான், பெரிய மனுஷனா என்கிட்டே காட்டிக்கறான் என்றே நினைத்தேன். திடீரென்று ஒரு நாள் அவன் ஒரு பத்திரிகையின் அச்சடித்த நான்கு பக்கங்களை என்னிடம் காட்டினான். "இதைப் பார்" என்று. அது கும்பகோணத்திலிருந்து வெளியாகும் "காவேரி" என்ற பத்திரிகையில் வெளியாகியிருந்த ஷண்முகம் எழுதிய கட்டுரை. அதில் அவன் எழுதிய கவிதைகளும் இருந்தன." நான் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனேன். "இது பழைய பத்திரிகை. எந்த மாசத்தது பாத்தியா? நான் எழுதியது என் கிட்டவே இல்லை. பெரிய தெருவிலே நான் சாமான் வாங்கறப்போ இதை எனக்குப் பொட்டணம் கட்டிக்கொடுத்தான். அது நான் எழுதியதா இருந்ததா, "இது நான் எழுதினதுங்க"ன்னு சொல்லி, "கட்டுரையின் மற்ற தாட்களையும் கொடுன்னு அவனைக் கேட்டு வாங்கி வந்தேன்". என்றான்.

எனக்கு கும்பகோணம் பாணாதுரைப் பள்ளியில் கிடைத்த அரிய, ஒரே நண்பன் ஷண்முகம். அவனுக்கும் என்னைப் பிடித்துப் போயிற்று. என்னிடம் அவன் என்ன கண்டான் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்த நாட்களில் எனக்கு ஷண்முகம் தான் எனக்கு ஹீரோ மாதிரி. என்ன காரணத்தாலோ தமிழ் வாத்தியார் தேமாங்காய் புளிமாங்காயை இரண்டொரு நாட்களிலேயே விட்டு விட்டார். அதெல்லாம் பெரிய வகுப்புகளுக்கு நடத்த வேண்டிய சமாச்சாரம் என்றோ என்னவோ தெரியாது. ஆனால் தேமாங்காயும் புளிமாங்காயும் போனாலும் அது எனக்குத் தந்த சண்முகம் என்ற நண்பன், நான் வேலை தேடி ஒரிஸ்ஸாவுக்குப் போன பிறகும் என்னை விட்டுப் போகவில்லை. அதற்கும் முன், முதல் வடநாட்டுப் பயணமாக ஜெம்ஷெட்பூருக்குப் போக கும்பகோணம் ரயில் நிலையத்தில் நான் காத்திருந்த போது யாரைப் பார்த்தேன்? ஷண்முகத்தைத் தான். 1948-ம் வருடம் ஜூலை மாதம் 27 அல்லது 28 தேதியாக இருக்கவேண்டும் அன்று. பின்னர் நான் ஒரிஸ்ஸாவில் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். எங்கள் தொடர்பு விட்டுப் போகவில்லை. ஷண்முகம் சிதம்பரத்திற்குப் பக்கத்தில் கிள்ளை என்று தான் நினைவு, அங்கு தொடங்கப்பட்ட காந்தி ஆஸ்ரமத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கினான். நான் விடுமுறையில் ஒரு முறை தெற்கே வந்த போது, நான் கிள்ளை போய் ஷண்முகத்தைச் சந்தித்தேன். அதன் பிறகு எப்படியோ தொடர்பு விட்டுப் போயிற்று. அந்நாட்களில் சண்முகம் எனக்கு எழுதிய கடிதங்கள் செய்யுள் வடிவிலேயே இருக்கும். அந்த சிறு வயதிலேயே வெகு லாகவமாக, செய்யுள் இயற்றும் திறமை வாய்த்திருந்த சண்முகம் கவிஞனாக மலர்ந்தானா, இல்லை தமிழ் வாத்தியாராகி தேமா புளிமா சொல்லிக்கொடுக்கத்தான் விதி என்றாகியதா என்பது தெரியவில்லை. ஷண்முகத்திற்கு சொந்தம் மாயவரம் பக்கத்தில் மணல் மேடு என்ற ஊர். அந்த நாட்களில் ஒரு நாள் மணல் மேடு போகவேண்டும் ஷண்முகத்தைப் பார்க்க வேண்டும், இல்லை, அவனைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஆனால் அது நடக்கவில்லை.

படித்துக் கொண்டிருந்த போது ஷண்முகம் தங்கியிருந்தது காவிரி தாண்டி மேலக்காவேரியைக் கடந்து சுவாமி மலை பாபுராஜபுரம் போகும் சாலையில் மேலக்காவேரிக்கு அடுத்து இருக்கும் கொட்டையூர் என்ற கிராமத்தில். நான் ஒரு முறை அவன் கொட்டையூர் வீட்டுக்குச் சென்று ஒரு புத்தகம் வாங்கி வந்தேன். என்ன புத்தகம்! அடால்ப் ஹிட்லரின் சுய சரிதம் "எனது போராட்டம்" (Mein Kemph) தமிழ் மொழிபெயர்ப்பில். சுமார் 500 பக்கங்கள் கொண்ட தடி புத்தகம்.

பாடபுத்தகங்களை விட இவற்றில் தான் எனக்கு மிகுந்த ருசி இருந்தது. அதற்கு ஏற்றாற் போல, ஒரு நாள் தலைமை ஆசிரியர் வகுப்பில் எல்லோருக்கும் சொன்னார், 'நீங்கள் எல்லாம் பாட புஸ்தகமே கதீன்னு இருக்கப்படாது. லைப்ரரீலேருந்தும் வெளி புஸ்தகங்களைப் படிக்கணும். நான் லைப்ரரேரியன் கிட்டே சொல்லிருக்கேன். அவர் புஸ்தகம் கொடுப்பார். படித்து ஒழுங்கா கிழிக்காம திருப்பிக் கொடுக்கணும்" என்று சொன்னார். உடனே இடைவேளையில் நாங்கள் நாலைந்து பேர் லைப்ரேரியனிடம் ஒடினோம். "கதைப் புஸ்தகமெல்லாம் கொடுக்க மாட்டேன். இலக்கிய புஸ்தகம் தான் கொடுக்கச் சொல்லிருக்கார் ஹெட்மாஸ்டர்" என்றார் அவர். அந்த காலத்தில் மட்டுமல்ல, ரொமப காலத்துக்கு இலக்கிய என்றால், புறநானூற்றுச் சொற்பொழிவுகள், கம்பர் தரும் காட்சி போன்றவை தான் இலக்கியம் என்று சொல்லப்பட்டது. இலக்கியப் புகழ் வாய்ந்த கலைமகள் பிரசுர பட்டியலில் கூட, சிறுகதை, நாவல், வரலாறு என்ற தலைப்புகளைத் தாண்டி இலக்கியம் என்ற தலைப்புக்கு வந்தால், கி.வா.ஜ., பி.ஸ்ரீ., டி.கே. சிதம்பர நாத முதலியார், போன்றோரின் கம்ப ராமாயண, சங்க இலக்கிய சொற்பொழிவுகள், விளக்க கட்டுரைகள் தான் காணப்படும். ஒரு வேளை இன்றும் கூட அந்த நிலைதானோ என்னவோ.

அந்த அறிவிப்பினால் எனக்கு ஒன்றும் பாதகம் ஏற்படவில்லை. எனக்கு பிடித்தமான புத்தகங்கள் கிடைத்தன தான். இப்போது நினைவிலிருக்கும் புத்தகங்கள், எங்கள் பாணாதுரைப் பள்ளி லைப்ரரியிலிருந்து எடுத்துப் படித்தவை என்று சொல்லப்போனால், சுபாஷ் சந்திர போசின் 'இளைஞன் கனவு" (இதன் ஆங்கில தலைப்பு என்னவென்று தெரியாது), வ.ரா. எழுதிய "தமிழ் நாட்டுப் பெரியார்கள்", ஜவஹர் லால் நேரு அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய சொற்பொழிவுகள் அடங்கிய அரசியல் நிர்ணய சபை என்னும் தொகுப்பு, வெ.சாமிநாத சர்மாவின் புத்தகங்களில் நினைவிலிருப்பது, முஸ்தபா கெமால் பாஷா, யோகி சுத்தானந்த பாரதியின் புத்தகங்கள் என்பன உடனே நினைவுக்கு வருபவை. இன்னும் சிரமப்பட்டு யோசித்தால் இன்னம் நாலைந்து நினைவுக்கு வரலாம். ஆனால் இந்த திட்டம் வெகு சீக்கிரம் கைவிடப்பட்டது, ஏனோ தெரியாது. ஆனால், சண்முகத்திடமிருந்து எனக்கு புத்தகங்கள் கிடைத்து வந்தன. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், எனக்கு என் பள்ளி நாட்களிலேயே சிதம்பர ரகுநாதனைத் தெரியுமென்றால், அதற்குக் காரணம் ஷண்முகம் தான். நான் படித்த முதல் புத்தகம் சிதம்பர ரகுதானின் "ஓர் இரவு". அப்போது அது தடைப்படுத்தப்பட்ட புத்தகம். ஆபாசமான புத்தகம் எழுதிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறை வாசம் கூட இருந்தார் என்று பத்திரிகைகளில் அப்போதோ அல்லது பின்னரோ படித்தேன். பாஸ்கரத் தொண்டைமான், "இவன் என் தம்பியே இல்லை" என்று கோபத்துடன் சொன்னதாகவும் செய்தி படித்தேன். அப்போது பாஸ்கரத் தொண்டைமானை எனக்குத் தெரியாது. சிதம்பர ரகுநாதனின் அண்ணன் என்பதை மட்டும் தெரிந்து கொண்டேன்.

29.7.08

நினைவுகளின் தடத்தில் - (26)

வெங்கட் சாமிநாதன்உடையாளூர் தன் 19-ம் நூற்றாண்டு சூழலையும் மீறி 20-ம் நூற்றாண்டின் 1940-க்களின் தமிழ் வாழ்க்கைக் கூறுகள் சிலவற்றைத் தனக்குப் பெற்றுக்கொள்வதில் எப்படியோ வெற்றி அடைந்தது என்று தான் சொல்லவேண்டும். தபால் அலுவலகம் போகவேண்டியிருந்தால் மூன்று மைல் தொலைவில் உள்ள வலங்கிமானுக்குத் தான் நடை போடவேண்டும் என்று சொன்னேன். ஆனால் எப்படியோ தமிழர் வாழ்க்கையில் இன்றியமையாத அம்சங்களான ஆனந்த விகடன், கல்கி பத்திரிகைகளை உடையாளூர் தனக்கு மறுத்துக் கொள்ளவில்லை. அவை கிடைத்தன. எப்படி என்று சொல்ல இப்போது எனக்கு நினைவில் இல்லை. எங்கள் ஊரிலும் ஒரு சிறிய வாசக சாலை. ஊருக்கு ஏற்ற எளிமை கொண்டது அது. உடையாளூருக்கே வந்த ஒரே ஒரு ஆனந்தவிகடனும் கல்கி பத்திரிகையும் எங்கள் வீட்டுக்கு தவறாமல் கும்பகோணத்தில் வெளிவந்த அடுத்த நாள் வந்து விடும். எங்கள் ஊர வாசக சாலைக்கு வந்த பத்திரிகைகள் இவை இரண்டு மாத்திரமே. குமுதம் அப்போது இன்னம் தமிழ் நாட்டுக் கடைகளில் தொங்கத் தொடங்கவில்லை. எங்கள் வீட்டுக்குவரக் காரணம், என் அப்பா தான் வாசகசாலையில் பொறுப்பாளர், செயலாளர், பொருளாளர் எல்லாம். எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடு காலி வீடு. ஆனால் அதன் உரிமையாளர், வெளியூரில் எங்கோ இருப்பவர் எப்போதாவது வருவார். அவர் மட்டும். அதற்கும் அடுத்த வீடும் காலி வீடு. அது வீடல்ல. திண்ணையற்ற ஒரு கூடாரம். நாட்டு ஓடு வேய்ந்த ஒரு கூடம், கதவைத் திறந்தால், அக்கூடம் விரியும். அதில் ஒரு அலமாரி. ஒரு பெஞ்ச் இருக்கும். அந்த அலமாரியில் தான் பழைய ஆனந்த விகடன், கல்கி பத்திரிகைகள் அடுக்கி யிருக்கும். அதோடு, தொடர்கதைகள் முடிவுற்றால் அவற்றைத் தொகுத்து பைண்ட் செய்து பத்திரமாக அடுக்கு வைத்திருப்பார் அப்பா. இந்த காலி வீடு தான் எங்கள் ஊர் வாசகசாலை.

பத்திரிகை வந்ததும் அதை வாங்க நான் ஓடுவேன். முதலில் படிப்பது நானா அம்மாவா என்பது சமயத்தைப் பொறுத்தது. அம்மா எல்லா பத்திரிகைகளையும் வெகு ஆர்வமாகப் படிப்பாள். தான் தான் முதலில் படிக்கவேண்டும் என்று என்னுடன் போட்டி போடுவாள். ஆக நிலக்கோட்டையில் தொடங்கிய ஆனந்த விகடன், கல்கி பித்து, எதிர்பாராத ஆச்சரியமாக உடையாளூரிலும் தொடர்ந்தது. அங்கு இருக்கும் போது தான் லட்சுமியின் லட்சியவாதி, கல்கியின் பொன்னியின் செல்வன் எல்லாம் தொடராக வரத்தொடங்கின என்று நினைக்கிறேன். ஒரு வேளை அது கல்கியின் அலை ஓசையாக இருக்கலாமோ என்னவோ. அந்நாட்களில் இவ்விரண்டைத் தவிர வேறு வெகுஜனப் பத்திரிகைகள் எதுவும் இருந்ததில்லை. காவேரி, கலைமகள் போன்ற பத்திரிகைகள் இருந்தன தாம் ஆனால் அவை சாதாரண மாக எல்லோரும் படிக்கும் பத்திரிகைகளாக இல்லை. காவேரி பத்திரிகை கும்பகோணத்திலிருந்தே பிரசுரமாகி வந்தது. நான் பாணாதுரை ஹை ஸ்கூலுக்குப் போகும் வழியில் தான் அந்த பத்திரிகையில் அலுவலகம் இருந்தது. என் வகுப்புத் தோழன் ஷண்முகம் அதில் அவன் கவிதையும் கட்டுரையும் வந்திருப்பதைக் காட்டி அவன் மூலம் தான் காவேரி பற்றி நான் தெரிந்து கொண்டேன்.

அப்பா பத்திரிகைகளுக்குப் பொறுப்பாளராக இருந்தாதே ஒழிய பத்திரிகைகளில் அதிகம் ஆர்வம் காட்டியதில்லை. ஆகவே அதிகம் தலையிடுவதில்லை. அவருக்கு இந்த தொடர்கதைகளில் எல்லாம் ஏதும் ருசி இருந்ததில்லை. அவரிடம் ஒரு பொறுப்பு தரப்பட்டதால் அதை நன்றாகச் செய்யவேண்டும் என்ற அளவில் தான் அவர் ஈடுபாடு அதில் இருக்கும். அதிலும் அவர் படித்தது கிரந்த எழுத்துக்களில். தமிழ் எழுத்துக்களும் தெரியும் தான். வீட்டில் தர்ம சாஸ்திரப் புத்தகங்களோடு, காளிதாசனின் ரகுவம்சமும், எல்லாமே கிரந்த எழுத்துக்களில் அச்சிடப்பட்டு இருந்ததைப் பார்த்திருக்கிறேன். இதெல்லாம் கூட பாடசாலையில் சொல்லிக் கொடுப்பார்களா என்று இப்போது அது பற்றி எழுதும் போது தோன்றுகிறதே ஒழிய அப்போது இது பற்றியெல்லாம் நினைத்துப் பார்த்ததில்லை.

இதையெல்லாம் படிக்கும்போது நான் ஏதோ சிறு வயதிலிருந்தே ஒரு பெரிய படிப்பாளியாக, அறிவு நிறைந்த சிறுவனாக இருந்தேன் என்ற அபிப்ராயத்தைச் சிலர் பெறலாம். இந்த விவரங்களில் ஏதும் சிறப்பு இல்லை. சாதாரண விவரங்கள் தான். அத்தோடு நான் வகுப்பில் அமைதியாக இருந்து தன் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டவன். வகுப்பில் ஓரு பையன் என்னிடம் கோபம் கொண்டால் இங்கிலீஷில் பேச ஆரம்பித்து விடுவான். நன்றாகவே இயல்பான லாகவத்துடன் பேசுவான். நான் பதில் சொல்லத் திணறிப் போவேன். பேசாமல் இருப்பது தான் உத்தமம் என்று முடிவுக்கு வரும் புத்திசாலித்தனம் என்னவோ அப்போதே என்னிடம் படிந்திருந்தது. இப்படித்தான் ஹிந்தி வகுப்பிலும். என் வகுப்பில் இருந்த ஆறு பெண்களும் ஹிந்தி வகுப்பில் ஆஜர் ஆனார்கள். இது எப்படி பெண்களுக்கு உகந்த பாடம் ஆயிற்று என்பது எனக்குப் புரிந்ததில்லை. தையல், எம்ப்ராய்டரி மாதிரி ஹிந்தியும் பெண்கள் படிப்பதற்கான பாடமோ என்று தோன்றும். என்னைத் தவிர இன்னொரு பையன், மிக அழகானவன், நல்ல உயரமும் ஒரு கண்ணிய தோற்றமும் கொண்டவன். வீரராகவன் என்பது பெயர். சென்னைக்கு நேரு வருகிறார் என்று பள்ளியிலிருந்து விடுமுறை கேட்டு சென்னை சென்று நேருவைப் பார்த்துவிட்டு வந்தவன். அதனாலேயே, ஒரு பெரிய அட்டகாசமான வீர சாகஸ காரியத்தைச் செய்த சாதனையாளன் என்ற பிம்பத்தை என்னில் அவன் பதித்துவிட்டிருந்தான். ஒரு நாள் அந்த பெண்கள் வகுப்பில் ஹிந்தி ஆசிரியருடன் பேசிக்கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி துளசி தாசரின் ராமசரித் மானஸ் புத்தகத்தை வீட்டிலிருந்து எடுத்து வந்து ஹிந்தி ஆசிரியருக்குக் கொடுத்தாள். அதைப் பற்றி ஹிந்தி ஆசிரியரும் இரு பெண்களும் பேசிக்கொண்டிருந்தது என்னில் ஒரு பெரிய பிரமிப்பையே உண்டாக்கிவிட்டது. இதுகளுக்கு என்ன புரியும்? அது என்ன பாஷை, ஹிந்தியா, அவதியா என்று நினைப்பேன். எதற்காகச் சொல்கிறேன் என்றால், இப்படி சிலரைப் பார்த்து எனக்கு மிகவும் மலைப்பாக இருக்கும். அப்போது ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் எதுவும் தொடங்கப் படவில்லை. பின்னர் தான் வரவிருந்தது. கும்பகோணத்தில் தான் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. கும்ப கோணம் காந்தி பார்க்கில் தான் அந்த வெற்றி விழாக் கூட்டம் நடந்தது. அதற்கு திராவிட கழகத் தலைவர் எல்லோரும் வந்திருந்தார்கள். அதில் கருணாநிதி இல்லை. அப்போது அவர் தலைவர் ஸ்தானத்தை அடைந்திருக்கவில்லை. அந்தக் கூட்டத்தின் பேச்சுக்களைக் கேட்கவேண்டும் என்றே நான் உடையாளூரிலிருந்து கும்பகோணம் வந்திருந்தேன்.

உடையாளூருக்குப் படிக்க வந்த முதல் சில மாதங்களிலேயே பல சம்பவங்கள் ஒன்றையொன்று தொடர்ந்து அடுக்கடுக்காக நடந்துவிட்டன. நிலக்கோட்டை மாமி வருஷத்தில் பாதி நாட்கள் நிலக்கோட்டையிலும் பாதி நாட்கள் தன் பெற்றோரிடமும் கழிப்பாள் என்று சொன்னேனே. நான் உடையாளூருக்குக் கிளம்பிய போது மாமி மதுரையில் இருந்தாள். உடையாளூருக்கு வந்த சில மாதங்களுக் குள்ளேயே மாமி உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் உடம்பு குணமாகாமல் இறந்து விட்டதாகவும் ஒரு கார்டு வந்தது மாமாவிடமிருந்து. இது எனக்கு துக்கம் தந்த இழப்பு. மாமியின் சண்டைகள் எல்லாம் மாமாவுடனும் பாட்டியுடனும் தான். எங்களிடம் அவள் மிக பிரியமாக இருந்தாள். அதிலும் ரொம்ப சின்ன வயசிலேயே காலமாகிவிட்டது ஒரு துக்கம். மாமிக்கு 27-28 வயசு தான் இருக்கும் அப்போது. கடைசிக் குழந்தைக்கு ஒரு வயது தான் இருக்கும். மாமா அதன் பிறகு கல்யாணம் செய்துகொள்ளவில்லை. நான்கு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்போடு தாம்பத்திய வாழ்க்கை வாழ்ந்த வரை அவருக்கு எவ்வித சந்தோஷந்த்தையும் கொடுக்கவில்லை. எப்போதும் பணப் பற்றாக்குறை. பாட்டியும் மாமியும் சுமுகமாக இருந்த நேரங்கள் மிகவும் குறைவு. இடையில் நான் உடையாளூரிலிருந்து நிலக்கோட்டைக்கு விடுமுறையில் சென்ற ஆரம்ப காலத்தில், மாமாவுக்கு பெண் கொடுக்க வந்தவர்களை நான் பார்த்திருக்கிறேன். மாமா அவர்களை அதிகம் பேசவிடுவதில்லை. கல்யாணம் செய்து கொள்வதாக எண்ணமே இல்லை என்று நிர்தாக்ஷண்யமாகச் சொல்லி அவர்களை அனுப்பி விடுவார். மாமி இறந்த போது மாமாவுக்கு 37 வயது இருக்கும். அது காறும் வாழ்ந்த வாழ்க்கை அவருக்கு அவ்வளவு விரக்தியைத் தந்துவிட்டது ஒரு சோகம் தான். ஆனால் அவர் எடுத்த முடிவு தான் அவரைப் பொறுத்தவரை சரியானது என்பது மட்டுமல்லாமல் நடைமுறைச் சாத்தியமானது மாகும். இருப்பினும் இப்போது அது பற்றி நினைத்துப் பார்க்கும் போது, வாழ்க்கை அவருக்குத் தந்தது எதுவும் இல்லை என்ற எண்ணம் வேதனையானது.

என் இரண்டாம் தங்கை, வயது 8 இருக்கும். லக்ஷ்மி என்று பெயர். திடீரென்று மஞ்சள் காமாலையால் பீடிக்கப்பட்டாள். ஊரில் இருந்த நாட்டு வைத்தியர் சிகித்சையால் எந்த குணமும் இல்லாது போகவே மாட்டு வண்டியில் அவளை ஏற்றி கும்பகோணம் - வலங்கிமான் ரோடில் இருந்த சாக்கோட்டை என்னும் கிராமத்தில் இருந்த ஒரு பேர் வாங்கிய நாட்டு வைத்தியரிடம் காண்பித்தோம். அவரும் ஏதோ தனக்குத் தெரிந்ததைச் செய்தார். ஆனால் தங்கை உடல் மஞ்சள் பூத்து, ஊதிக்கொண்டே வந்தது. ஒரு நாள் அந்த சாக்கோட்டை வைத்தியர், " குழந்தைக்கு பிரியமானது எதுவும் வேண்டுமென்று கேட்டால், மறுக்கவேண்டாம், செய்து கொடுங்கள்" என்று சொல்லி விட்டார். அதன் அர்த்தம் எனக்கு அன்று புரியாவிட்டாலும், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் புரிந்து விட்டது. எங்கள் பார்வை படாது மனதுக்குள் குமைந்து குமைந்து அழுதுகொண்டிருந்தனர். ஒரு நாள் பிற்பகல் மணி 4 இருக்கும். தாழ்வாரத்தில் லக்ஷ்மி படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். மஞ்சள் பூத்து கனத்து விட்ட உடம்பு. கர் கர் என்று குறட்டை விடுவது போல மூச்சு பெரிதாக வந்துகொண்டிருந்தது. நாங்கள் எல்லோரும் சுற்றி உட்கார்ந்திருந்தோம். அம்மா தலையில் கை வைத்தபடி ஒரு பக்கம் சுவற்றில் சாய்ந்திருந்தாள். அப்பா எதிரில் ஒரு தூணில் சாய்ந்துகொண்டு வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார். நாங்கள் கொஞ்சம் தள்ளி என்ன செய்வது என்று தெரியாமல் மாறி மாறி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தோம். திடீரென்று அந்த கர் கர் சத்தம் நின்றது. அவ்வளவு தான். அம்மா அப்பாவின் கதறல் தாழ்வாரத்தை நிறைத்தது. லக்ஷ்மியின் கதை முடிந்தது. ஒரு உயிர் பிரிவதைப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பார்த்திருப்பது அது தான் முதல் தடவை. கடைசித் தடவையும் கூட.

மறு நாள் ஒரு ஆள் வந்து சொன்னான். "உடம்பெல்லாம் ஒரே தண்ணியா இருந்துச்சா. உடம்பு வேகவே மாட்டேன்னுடுச்சுங்க ரொம்ப நேரம்" என்று சொல்லி விட்டான். அம்மா கதற ஆரம்பித்து விட்டாள். பின் ஒரு நாள் ஏதோ காரியத்துக்காக அழைத்து, ஏதோ நினைவில் 'லக்ஷ்மி' என்று நான் குரல் கொடுத்து விட்டேன். அதைக்கேட்டு விட்ட அம்மா, 'லக்ஷ்மி'தான் போய்ட்டாளேடா" என்று மறுபடியும் 'ஒ' வென்று அழ ஆரம்பித்து விட்டாள். அப்போது தான் என் தவறு தெரிந்தது.

ஒரு நாள் திடீரென்று 35 வயதுள்ளவர், நல்ல சிகப்பும் தாட்டியான உடலும் கொண்டவர், தன் மனைவி, 9 வயது மகனோடு வந்தார். அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த என்னை, '"யாருடா இது, இவ்வளவு சௌஜன்யமா இங்கே வந்து உட்கார்ந்து கொண்டுருக்காளேன்னு திகைச்சுப் பாக்கறான்" என்று வந்தவர் சொல்லவே, அப்பாதான், "இனிமே தான் அவன் நம்ம மனுஷாள்ளாம் யார் யாருன்னு தெரிஞ்சிக்கணும், இது உன் அத்திம்பேர்டா, அது உன் ஜெயம் அத்தை, இது மணி, அத்தை பிள்ளை. எல்லாரும் லாகூர்லேயிருந்து வந்திருக்கா. இனிமே இங்கே தான்டா இருப்பா. லாகூருக்குத் திரும்பிப் போகமாட்டா." என்றார். பிறகு தான் அவர்கள் கதை பூராவையும் தெரிந்து கொண்டேன். அத்திம்பேர் லாகூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ரொம்ப வருஷமா. ஆனால் அங்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்த மதக் கலவரங்கள் உச்ச கட்டமடையவே, அவர் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டுச் சொந்தக்காரர், ஒரு முஸ்லீம், சொல்லி விட்டார். " ஏற்கனவே ஊர் இருக்கற நிலவரம் உங்களுக்குத் தெரியும். இப்போ இன்னம் ரொம்ப மோசமா போயிண்டிருக்கு. நான் இது வரைக்கும் உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது காப்பாத்திட்டேன். இனி என்னால் முடியாது என்று தோன்றது. என் கண் முன்னாலே எதுவும் வேண்டாதது நடந்து அதை நான் பாக்கக்கூடாது. பஞ்சாப் பூராவுமே இப்படித்தான் இருக்கு. நீங்க இங்கேயே வேறே எங்கேயும் போய் இருக்கலாமான்னு யோசிக்க வேண்டாம். முடியாது. இந்த இடத்தை விட்டு சீக்கிரமா உங்க ஊருக்குப் போறது தான் நல்லது. உடனே கிளம்புங்க," என்று சொல்லிவிட்டானாம். "வேறு எங்கே போறது?. அவசர அவசரமாகக் கிளம்பி வந்தோம். பாங்கில் கிட்டத் தட்ட ரூபாய் 25,000 இருக்கும் . அதைக் கூட எடுக்க முடியவில்லை. அப்படியே எல்லாத்தையும் போட்டது போட்டபடி விட்டுட்டு வரவேண்டியதாயிடுத்து. இனிமே இங்கே வந்து தான் ஏதாவது வேலை பாக்கணும்" என்று அவர் வந்திருக்கிறார். அத்தையை இங்கு விட்டு விட்டு அவர் மதராஸ் போவதாக எண்ணிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். நான் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

வெங்கட் சாமிநாதன்/21.8.08
vswaminathan.venkat@gmail.com


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner