இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசமபர் 2008 இதழ் 108  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சிறுகதை!

மீள்பிரசுரம்:  சிங்கப்பூர்ச் சிறுகதை!~

அறை

- லதா -


லதா எனப்படும் கனகலதா சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார்.லதா எனப்படும் கனகலதா சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இலங்கையில் பிறந்து, சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறியவர். சிங்கப்பூர் தேசிய நாளிதழான தமிழ் முரசில் நீண்ட காலம் துணையாசிரியராகப் பணியாற்றுபவர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக் கலைகள் மன்றம் வெளியிட்டுள்ள கவிதைத் தொகுதியிலும் (1995), தேசியக் கலைகள் மன்றம் தொகுத்த நூற்றாண்டுக்கால சிங்கப்பூர்க் கவிதைகள் பன்மொழித் தொகுப்பிலும் (2000), 'கனவும் விடிவும்' என்ற இந்திய சாகித்திய அகாதமி வெளியிட்ட தற்காலத் தமிழ்ப் பெண் கவிஞர்கள் தொகுப்பிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவர் சிறுகதைகளும் எழுதி வருகிறார். இவரது ‘நான் கொலை செய்த பெண்கள்’ என்னும் புத்தகத்திற்கு $10,000 பெறுமதி மிக்க இவ்வாண்டின் சிங்கப்பூர் இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்த்தக்கது. ஈராண்டுகளுக்கு ஒருமுறை வழ்ங்கப்படும் இவ்விருதினை அண்மையில் சிங்கப்பூரின் சமூக வளர்ச்சி, இளையர் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் அண்மையில் வழங்கிச் சிறப்பித்தார். இவரது நூல்கள்: தீவெளி (கவிதைகள், 2003) ,பாம்புக் காட்டில் ஒரு தாழை (கவிதைகள், 2004)]. காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள 'நான் கொலை செய்யும் பெண்கள்' தொகுப்பில் இச்சிறுகதை இடம் பெற்றுள்ளது. -


புயலடித்தாலும் இந்த ஜன்னல் அளவுக்குத்தான் காற்று என் உலகத்துக்குள் வரும். கொஞ்ச நாள் முன்பு நில அதிர்வு ஏற்பட்டபோதுகூட, இந்த 22 மாடி புளோக்கில் என் நாற்காலி அசைந்தது மட்டும்தான் எனக்குத் தெரியும். எட்டடி அறைக்குள் உலகம் சுருங்கிவிட்டது. குளியல், தூக்கம், கனவு, படம், பாட்டு, படிப்பு, சந்தோஷம், சோகம் எல்லாம் இந்த அறைக்குள்ளேயே முடிந்து விடுகின்றன. தொலைபேசி இன்னும் அடிக்கவில்லை. மணி பன்னிரண்டுதான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொழுது விடிய இன்னும் நேரம் இருக்கிறது. கீழே கடைக்குப் போய்ப் பசியாறி வரலாம். பர்ஸ், போன் எல்லாம் இருக்கின்றன என்பதை உறுதிசெய்துகொண்டு கிளம்பத் தயாரானேன். ரேடியோவை அணைத்ததும் தான் வெளிச்சத்தம் கேட்கிறது.

நாலு மணிக்குப் படுத்தது. சற்று நேரம் முன்தான் எழுந்தேன். எழுந்ததும் காபி குடிக்க வேண்டும்போல் இருந்தது. காபி போட என் அறையில் எதுவுமில்லை. அவர்களது சமையல் அறைக்குத்தான் போக வேண்டும். குளிக்காமல் அறையைவிட்டு வெளியில் வந்ததில்லை.

பல் தேய்த்ததும் கடைக்குப் போய்க் காபி குடித்து விட்டு வரலாமா என்று நினைத்தேன். பதினொன்றரை ஆகிவிட்டது. காபி இனி எதற்கு என்று விட்டுவிட்டேன். துணி துவைக்கவும் அறையைச் சுத்தம்செய்யவும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் நேரம் கிடைக்கும்.

என் சின்ன அறைக்குள், அதன் குட்டி பாத்ரூமுக்குள் இருந்த வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டுவிட்டு அறையை ஒழுங்குபடுத்தினேன். கூட்டுமாறும் மோப்பும் வெளியில்தான் இருக்கின்றன. வெளியில் போய்க் கூட்டுமாறை எடுத்துவரலாமா என நினைத்து அறை வாசலுக்கு வந்தபோது சாம்பிராணி வாசனை மூக்கைத் தொட்டது. ஏதோ தொழுகை என்றுதான் நினைத்தேன். இந்நேரத்தில் என்ன தொழுகையாக இருக்கும் என யோசித்தேன். நாம் ஏன் இடையில் போய்த் தொல்லை தருவானேன் என நினைத்துக் கதவைத் திறக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்.

இதெல்லாம் உறைத்த புத்திக்கு சன்டிவியையும் ரேடியோவையும் அடக்கிவைக்கும் எண்ணம் ஏன் வராமல்போனது . . . ?

வீட்டுக்காரர்கள் காலையிலேயே திரும்பிவிட்டார்கள் போலிருக்கிறது. அவர்கள் முகம் பார்த்து இரண்டு வாரத்துக்கு மேலிருக்கும். போன ஞாயிற்றுக்கிழமைகூட உமா வீட்டிலேயே தங்கிவிட்டேன். அவர்களுக்கு ஒரு ஹலோ சொல்ல வேண்டும்.

புன்னகைக்கு முகத்தைத் தயார் செய்துகொண்டு, கதவைத் திறந்தேன். வீடெங்கும் மனிதர்கள்.என்னவாக இருக்கும் என யோசித்துக்கொண்டே மெல்ல வெளியில் வந்தேன். எதிரில் உட்கார்ந்திருந்த வீட்டுக்கார அம்மாவை நோக்கி நடந்தேன். 'ஹலோ' சொல்ல வாயைத் திறப்பதற்குள் . . .

'அபாங் சூடா மத்திலா, சூடா மத்தி' என்று திடீரென்று சத்தமாக அரற்றுகிறார்.

ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. சுவரில் சாய்ந்து தலையில் கைவைத்துக் குந்தியிருந்த அவர் கோலம்...

'வாட் . . .?'

நல்லவேளை. சத்தம் வெளியில் வரவில்லை. ஆனாலும் அத்தனை பேர் பார்வையும் என்னையே துளைக்கிறது. கண்களை உயர்த்தி நேராகப் பார்க்க முடியவில்லை. திடீரென்று ஒரு கூச்சம், அருவருப்பு. உடல் முழுதும் ஊர்கிறது.

இப்படியும் உலகத்தில் நடக்குமா என்ன? எங்காவது கேள்விப்பட்டதுண்டா? சொன்னால் கதை என்பார்கள். ஒரு கணத்துக்குள் பெரும் காட்சி மாற்றம்.

தலையில் அடித்துக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது. எப்படி என்று சொல்ல முடியாத அவமான உணர்வு உடலெல்லாம் கூசுகிறது.

பெரிய பெரிய பூக்களுடன் தடித்த நிறங்களின் கலப்பில் சிநேகமே கொள்ள முடியாமல் இந்த அறை முழுதும் தொங்குமே திரைச் சீலைகள்? இந்த நேரத்தில் ஒன்றைக்கூடக் காணவில்லை. அதைச் சுற்றி இருக்கும் பளபளப்பான ரிப்பன்கள்கூட இல்லை. எல்லா ஜன்னல்களும் கதவுகளும் திறந்து கிடக்கின்றன . . . முகத்தை மூட முடியவில்லை.

தரையின் ஈர்ப்புச் சக்தி குறைந்துவிட்டதுபோல் உடலில் வலு குறைந்து, கால்கள் மடிந்தன. சோபாக்களையும் காணவில்லை. பெண்கள் எங்கே நிற்கிறார்கள் . . . எதுவும் சரியாகப் புலப்படவில்லை. திடீரென்று யுகம் யுகமாக நடுத்தெருவில் சிலையாக நிற்பது போன்ற அலுப்பு. அப்படியே தரையில் உட்கார்கிறேன். தரை சில்லென்றி ருக்கிறது. இப்போதுதான் கழுவியிருக்க வேண்டும்.

'மை ஹஸ்பண்ட் . . .' அவர் மீண்டும் பேச்சைத் தொடங்குகிறார்.

'என்ன நடந்தது?'

'நேற்று ராத்திரி . . .'

நேற்றைய இரவையும் அந்தப் பொழுதின் உணர்வுகளையும் இன்னும் நான் அழிக்கவில்லை. வழக்கமான ஒரு சனிக்கிழமை. கோமள விலாஸ், ஷா ஹவுஸ், காபி பீன், கோப்பி தியாம் என்று பல மாதிரியான இருக்கைகளில் மாற்றி மாற்றி உடலைப் பொருத்திய அலுப்பு. நிறையப் பேசிச் சிரித்த நிம்மதி.

காற்றில்லாத, அசைவில்லாத நள்ளிரவு.

லிப்டின் சத்தத்துக்கே நான் சங்கடப்பட்டுக்கொண்டிருக்க, இரவின் ஏகபோக உரிமையோடு பக்கத்து வீட்டு நாய் குரைத்தது. 'ஸ் சும்மாயிரு . . .' மெதுவாகச் சொன்னேன். அது நிறுத்தவில்லை. தன்னை மறந்து குரைத்துக் கொண்டிருக்கும் அதற்கு என் பேச்சு எங்கே கேட்கப்போகிறது?

அத்தனை நேரம் கழித்து வந்திருக்கக் கூடாது. யாரும் கேட்கப்போவதில்லை என்றாலும் மற்றவர்களுக்குத் தொல்லை தருகிறோமா என்று சங்கடமாக இருந்தது. சந்தோஷமாகவும் இருந்தது.

எத்தனை மணிக்கு வந்தாலும் வாசம் பிடித்து வீட்டு வாசலுக்கு வந்துவிடுகிறது இந்த நாய். கதவு திறந்திருந்தால் வாலை ஆட்டிச் சிரிக்கும். இல்லாவிட்டால் என் மணம் காற்றோடு கலையும்வரை தொடர்ந்து குரைக்கும். அந்த வீட்டுக் கதவுக்கு அருகில் சென்று அதை அமைதிப்படுத்திவிட்டு வந்தேன்.

நல்லவேளை வீடு சலனமற்று இருந்தது. பெரும்பாலும் நான் திரும்பும் நேரத்தில் யாருக்கும் ஹலோ சொல்ல வேண்டியிருப்பதில்லை.

ஃபுட்பால் மாட்ச் இருந்தால் மட்டுமே டிவிக்கு முன் ஏதாவது கொரித்துக்கொண்டு முழித்திருப்பார்கள். இரவுத் தெருக்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுமளவுக்கு இந்த வீட்டுப் பையன் இன்னும் வளரவில்லை.

சிரமப்பட்டுச் சத்தமே எழாமல் சாவியைப் பொருத்தினேன். எத்தனை மென்மையாகத் திறந்தாலும் வாசல் கதவு சத்தம்போடும். இந்த வீட்டில் கதவுச் சத்தத்தை யாரும் கண்டுகொள்வதில்லை என்றாலும் உள்ளே நுழைந்து மீண்டும் கதவை மூடும் சில நிமிடங்கள் எப்போதும்போல நேற்றும் எனக்குப் பெரும் சங்கடத்தைத் தந்தன. எதிரில் இவர்கள் இருந்தால் ஒரு மாதிரியான சங்கடம் ஏற்படும். இல்லாதிருந்தால் இன்னொரு வகையில் சங்கடமாக இருக்கும்.

கதவைத் திறப்பதற்குள் தாழ்வாரத்து வெளிச்சம் உள்ளிருந்த இருட்டில் கொஞ்சத்தை விரட்டியிருந்தது. அப்போதே மனத்தை ஏதோ ஒன்று உறுத்தியது. எப்போதும் ஒழுங்குடன் இருக்கும் சோபா மெத்தைகள் லேசாக அசங்கிக் கிடந்தன. அறைக் கதவுகள் திறந்து கிடந்தன. ஏதோ ஒரு அவசரமும் அலங்கோலமும் வீடு முழுதும் சிதறிக் கிடப்பதாகப்பட்டது. வீட்டில் யாருமில்லை  போலிருக்கிறது. எங்காவது வெளியில் போயிருக்கலாம்.

வீட்டில் ஆள் இல்லை என்றதும் ஒரு வெறுமை வீடு முழுதும் படிந்தது. திடீரென்று தனிமை அழுத்தியது.

கதவை அடைத்து வீட்டை இருட்டாக்கினேன். உள்தாழ்ப்பாள் போடுவதா வேண்டாமா?

வீட்டுக்காரர்கள் காலையில் எத்தனை மணிக்குத் திரும்புவார்கள் எனத் தெரியாது. நான் எத்தனை மணிக்கு எழுந்திருப்பேன் என்றும் சொல்ல முடியாது. ஞாயிற்றுக்கிழமை என்றால் வெயில் எரிச்சலூட்டும்வரை தூங்குவேன். வேண்டாம் என்ற முடிவோடு, தாழ்ப்பாளைப் போடாமலே விட்டேன்.

தன்னிச்சையாகச் செருப்பைக் கழற்றிச் சுவரோடு ஒட்டியிருந்த செல்ஃபின் மேல்தட்டில் வைத்துவிட்டு நேரே என் அறை நோக்கி நடந்தேன்.

அந்த செல்ஃப் இப்போது இந்த அறையில் இல்லை. வெளி வாசலில் போட்டிருப்பார்களோ? என் செருப்பு என்ன ஆகியிருக்கும்? நான் எப்படி வெளியில் போவது? ஒரு பெரும் முடிவு எடுக்க வேண்டிய பெரிய பிரச்சினையில் சிக்கியதுபோலிருந்தது.

'நேற்று ராத்திரி 7 மணி இருக்கும். நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னார். நான் மருந்து எடுத்துக்கொண்டு வர்றதுக்குள்ள மயக்கமாயிட்டார். உனக்குத்தான் ரோஸ்மானைப் பற்றித் தெரியுமே, எதையும் கடைசி நேரத்தில்தான் சொல்லும் . . .' வீட்டுக்கார அம்மா என்னிடம்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். மலாய் கலந்த ஆங்கிலத்தில்.

எனக்கு ரோஸ்மானைத் தெரியாது. நான் அவருடன் விஸ்தாரமாகப் பேசியது இரண்டுமுறைதான். அறையைப் பார்க்க வந்தபோது நான் பேசினேன். குடிவந்த அன்று அவர் பேசினார்.

'இந்த வீட்டில் நீங்கள் பன்றி சாப்பிடக் கூடாது. வெளியில் சாப்பிட்டாலும் உடனே உள்ளே வந்துவிடாதீர்கள்' என்பது ரோஸ்மான் என்னிடம் பேசிய முதல் நீளமான வாக்கியம்.

'என்னது பன்றியா? நானா? நான் சுத்த சைவம். அசைவம் பற்றிப் பேசினாலே என் அம்மா தலையில் தண்ணியைக் கொட்டுவார்'
என்றேன்.

'நீங்கள் புத்த மதமா . . .?'

பௌத்தர்கள்தான் இங்கே சைவமாக இருப்பார்கள் போலும் என்று நினைத்துக்கொண்டே 'இந்து' என்றேன்.

பிறகு ஏதோ நினைத்தவராக 'உங்கள் அறைக்குள் நீங்கள் சாமி கும்பிடலாம். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை' என்றார்.

அதன்பின் சரியாக 15 தடவைகள்தான் அவருடன் பேசியிருப்பேன். வாடகைப் பணம்கொடுக்கும் சமயங்களில். அதுவும் வெயில், மழை பற்றித்தான். என்ன வேலை, என்ன சம்பளம் என்றெல்லாம் என்னை அவர் கேள்விகள் கேட்டதில்லை. குடிவரும் முன் என் எம்ப்ளாய்மெண்ட் பாஸ், வேலைத் தகுதிகளைச் சரிபார்த்து உறுதிசெய்ததுகூட ஏஜென்ட்தான். ரோஸ்மான் பற்றி நானும் எதுவும் கேட்பதில்லை. கேட்கத் தோன்றியதும் இல்லை. அறையைப் பார்க்க வந்தபோது கூட அறையைப் பற்றித்தான் கேட்டேன். எந்தப் பக்கம் கிழக்கு, காலையில் எந்தத் திசையில் வெளிச்சம் வரும் என்றெல்லாம் கேட்டது நினைவிருக்கிறது.

அவரது உடை, வீடு, பேச்சு முறைகள், குடும்பம் இவையெல்லாம் அவர் ஒரு சராசரி நடுத்தர வர்க்க சிங்கப்பூரர் என்னும் தோற்றத்தைத் தந்தன. நான் வாங்கும் சம்பளத்தில் பாதி இவர்கள் குடும்ப வருமானமாக இருக்கலாம். அதற்காக இவர்களின் ஹரிராயா கொண்டாட்டத்தை ஒருபோதும் குறைத்து எடைபோட முடியாது.

போன நோன்புப் பெருநாள் பண்டிகைக்கு வீட்டு அலங்காரத்தைப் போலவே பல நிறங்களில் வகைவகையான பலகாரங்கள் செய்திருந்தார்கள். அதேபோல் மனிதர்களும் வீட்டை நிறைத்திருந்தார்கள். அன்றும் நான் வீட்டில் இருக்கவில்லை.

இவர்களோடு இந்த ஹாலில் உட்கார்ந்திருப்பதென்றால், எப்போதாவது படம்பார்க்கும்போதுதான். இந்த வீட்டுக்காரர்கள் ஹிந்தி, தமிழ்ப் படங்கள் பார்ப்பார்கள். ரோஸ்மானுக்கு எம்ஜிஆர் படங்கள் பிடிக்கும். மொழி புரியாவிட்டாலும் ரசித்துப் பார்ப்பார். எம்ஜிஆர் படங்கள் பார்க்க எனக்கும் சலிப்பதில்லை. இந்த அம்மாவுக்கு ராஜ்கபூரை அதிகம் பிடிக்கும். எப்போதோ பரணில் தூக்கிப்போட்டுவிட்ட சங்கம் படம் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுவார்கள். அவர்கள் படம் பார்க்கும்போது நான் வீட்டில் இருந்தால் என்னைக் கூப்பிடுவார்கள். சிடி தருவார்கள்.

சில நேரங்களில் என்னிடம் சிடி இருக்கிறதா என்று கேட்பார்கள். இவர்களோடு உட்கார்ந்து படம் பார்ப்பதில் எந்தச் சங்கடமும் இருக்காது. படமே பேசிக்கொண்டிருக்கும். அது பேச்சை முடிக்கப்போகிறது என்று தெரிந்ததும் எழுந்து என் அறைக்குள் புகுந்துகொள்வேன். விவாதிப்பதற்கு எங்களுக்குள் எதுவுமே இருந்ததில்லை.

அவருக்கு எத்தனை பிள்ளைகள் என்று இதுவரை எனக்குத் தெரியாது. ஒவ்வொருமுறையும் யாராவது ஒரு சிறுமியோ சிறுவனோ கண்ணில் தட்டுப்படுவார்கள். அவர்கள் எல்லாரது முகமும் ஒன்றுபோலவே இருக்கும். அந்த முகங்கள் சரியாக நினைவில் இல்லை. முகங்களைப் பதித்துக்கொள்ள நான் முயன்றதும் இல்லை. அவர்கள் அனைவரையும் மொத்தமாக நிறுத்திவைத்துப் பார்த்தால் மட்டுமே அந்தக் குடும்பத்தின் அளவு தெரியும்.

இன்றும் வீட்டில் நிறையக் குழந்தைகள் ஓடித்திரிகிறார்கள். ஆனால் இவர்கள் யார் வீட்டுப் பிள்ளைகள் என்று தெரியவில்லை.

இனிமேல் இவர்கள் என்ன செய்வார்கள்? இந்த அம்மா வேலைக்குப் போகிறாரா? குடும்பத்தை எப்படி நடத்துவார்? சொந்தக்காரர்கள்
பணம் கொடுப்பார்களா?

'ரோஸ்மானுக்கு எந்த நேரமும் வாய் புகைய வேண்டும். சொன்னால் கேட்பதில்லை. அந்தப் புகைதான் கடைசியில் அவர் நெஞ்சை அடைத்துவிட்டது. ஆம்புலன்ஸ் கூப்பிட்டோம். பாதியிலேயே உயிர் போய்விட்டது. விடிகாலைதான் வீட்டுக்குக் கொண்டுவர முடிந்தது'
அழாமல் அழுகிறார்.

இத்தனை நடந்தது எனக்கு எப்படித் தெரியாமல் போனது? ஏன் என் கதவு தட்டப்படவில்லை? அவர்கள் தட்டியும் காதில் விழாத அளவுக்கு பாட்டைச் சத்தமாக வைத்திருந்தேனா? ஆனால் எந்தச் சத்தமுமே எனக்குக் கேட்கவில்லையே? இறப்பு இத்தனை அமைதியாக
இருக்குமா?

இவர்கூட இப்போது தொண்டை அடைக்கப் பேசுகிறாரே ஒழிய, ஒப்பாரிவைத்து அழவில்லை. இவர்கள் மத வழக்கப்படி கண்ணீர் சிந்தி அழமாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த அமைதியை எதிர்கொள்ள முடியவில்லை. இதுவரை அனுபவித்திராத
அமைதி.

ரோஸ்மான் இப்போது எங்கே? கேட்கத் தயக்கமாக இருக்கிறது. இவரோ பார்வையை எங்கோ தூரத்தில் சொருகிவிட்டு, வெறுமனே பேசிக்கொண்டிருக்கிறார். இவரது மெல்லிய குரலும் உடைந்த சொற்களும் என்னைக் குத்திக் கிழிக்கின்றன.

சே என்ன பெண் நான்? இந்த வீட்டில் இப்படி ஒன்று நடந்ததுகூடத் தெரியாமல் . . .

சோகத்தோடு கலந்திருந்த சாம்பிராணி மணம் மேலும் சித்திரவதை செய்தது. பத்து நிமிடங்களுக்கு முன்வரை எத்தனை நிம்மதியோடு சுகமாக என் குட்டி அறைக்குள் உலவிக்கொண்டிருந்தேன். எந்த உறுத்தலுமே இல்லாமல் நேற்று நள்ளிரவு தாண்டி வீடு திரும்பிக்
குளித்து . . .

காலநேரமில்லாமல் வீடு திரும்புவதையும் குளிப்பதையும் என் வீட்டில் நான் நினைத்தே பார்க்க முடியாது. ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்தாலே ஆயிரம் காரணம் சொல்ல வேண்டும். தூங்கியும் தூங்காமலும் அம்மா காத்துக்கொண்டிருப்பார்.

சாப்பிட்டியா, சாப்பிடறியா, எங்கே சுத்திட்டு வர்றே, வீட்டுப் பொறுப்பே இல்லே, பொம்பிளப் பிள்ளைன்னா அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டாமா எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டு எரிச்சலூட்டுவார். அம்மாவின் முணங்கல்களில் சில நேரங்களில் அப்பா எழுந்துவிடுவார். அவருக்குவேறு பதில் சொல்ல வேண்டும். அங்கு போல இங்கு எனக்காகச் சாப்பாடு காத்திருக்காது என்று எங்கோ ஒரு மூலையில் வலித்தாலும் யாருக்கும் எந்தப் பதிலும் சொல்ல வேண்டியதில்லை என்பது நிம்மதியாகவே இருக்கிறது.

'எல்லாம் முடிஞ்சு போச்சு. ரோஸ்மான் போயிட்டுது' வீட்டுக்கார அம்மா தொடர்ந்தார்.

'பாவி நீ ஒரு வார்த்தை கேட்கவில்லையே, உதவிக்கு வரவில்லையே, நாங்கள் துக்கத்தில் இருக்க நீ பாட்டுக் கேட்கிறாயா?' என்று இவர் நாலு வார்த்தை திட்டமாட்டாரா என்று இருக்கிறது.

ஆபத்தாண்டவராய் ஒரு பெண்மணி வருகிறார். சட்டென்று எழுந்து நிற்கிறேன். அவர் அவர்கள் பாணியில் என் கைகளைப் பற்றுகிறார்.

'நான் ஏதாவது செய்ய வேண்டுமா?' என்ன கேட்பது என்று தெரியாமல்தான் கேட்கிறேன்.

'தாங்ஸ்' என்கிறார் அவர்.

எதற்கு நன்றி என்று புரியவில்லை. அறையைவிட்டு வெளியில் வந்ததற்கா? இல்லை நான் கிளம்ப வேண்டும் என்பதற்கா? அதற்கு மேல் அங்கே நின்று என்ன செய்வது என்று புரியவில்லை.

பசிக்கிறது. என் செருப்பு வெளியில் காத்திருக்கிறது. ஆனால் இவர்கள் செருப்புகளோடு கலந்து நிற்கும் அவற்றில் நான் உரிமையோடு ஏறிச்செல்ல முடியாது. மெதுவாய் என் அறைக்குள் நழுவுகிறேன். இந்த வீட்டில் இருந்து இந்த அறை எப்படித் தனியாகக் கழன்று நிற்கிறது என்று புரியவில்லை. ஏதாவது ஒன்று செய்து இப்படியே இந்த அறையுடன் பறந்துவிடலாம் போலிருந்தது. வெளிப்புறத்தின் சோக மணம் உள்ளுக்குள் இல்லை. ஆனாலும் இந்த அறையையும் கழுவிச் சாம்பிராணி போட வேண்டுமோ?

வேறு செருப்புகளைக் கட்டிலுக்கடியில் தேடிப்பிடித்தேன். செருப்பை எப்படிக் கையில் எடுத்துப்போவது? ஒரு பையில் போட்டுக்கொண்டேன். உடையைச் சரிசெய்து, கண்ணாடி முன்நின்று மீண்டும் தலை வாரிக்கொண்டேன்.

வீட்டுக்கார அம்மாவிடம் என்ன சொல்லிவிட்டுப் போவது . . . மனத்தின் வேறுபுறத்தில் இரண்டு நாள்களுக்காவது இந்த அறைக்குத் திரும்பக்கூடாது என்று எண்ணம் ஓடிக்கொண்டிருக்கிறது. சாவு வீட்டுக்குப் போனால் சொல்லிக்கொண்டு வரக்கூடாது என்று அம்மா சொல்வது நினைவுக்கு வந்தது. ஆனால் செலவுக்குப் பணம் கொடுப்பார்கள். நான் பணம் கொடுக்க வேண்டுமோ? யாரிடம் கொடுப்பது?

வீட்டுக்கார அம்மாவிடம் இந்தச் சமயத்தில் எப்படிக் கொடுப்பது?

செருப்புப் பையோடு வெளியில் வருகிறேன். வீட்டுக்கார அம்மா அதே இடத்தில்தான் உட்கார்ந்திருக்கிறார் தலையைக் கவிழ்த்துக்கொண்டு. என்னால் எதுவும் பேச முடியவில்லை.

ஹாலைத் தாண்டி வருவதற்குள் பல யுகங்களைக் கடந்துவிடலாம்போலிருக்கிறது. வீட்டு வாசலைத் தாண்டியதும்தான் மூச்சு வருகிறது. அடுத்த பிரச்சினை, பக்கத்து வீட்டைக் கடந்து செல்ல வேண்டும்.

அடக் கடவுளே, நான் வெளியில் வரும் நேரத்தில்தானா அந்தப் பெண்ணும் நாயை வெளியில் அழைத்துவர வேண்டும். ஒரு நாளைக்கு வீட்டுக்குள் வைத்துப் பூட்டக் கூடாதா அது குரைக்கத் தொடங்கிவிட்டது. இனி லேசில் நிறுத்தாது. அந்தப் பெண் இழுக்க இழுக்க அது
இந்தப் பக்கமே பார்த்துக் குரைக்கிறதே?

சே. . . எல்லாரும் என்னையே முறைக்கிறார்கள் . . .

'ஏய் நில்லு . . .' வீட்டுக்குள் ஓடுகிறதே இந்த நாய்.

நான் என்ன செய்வேன் . . . இது என் நாய் இல்லையே . . . என்னைப் பார்த்ததும்தான் இந்த நாய் இப்படிச் செய்ய வேண்டுமா?

இப்படியே குதித்து ஓடிவிடலாமா?

லிஃப்டைப் பிடித்துக் கீழே வருவதற்குள் நான் செத்துவிடுவேன்போலிருக்கிறது.

வெயில் எரிக்கிறது. ஏதாவது ஜில்லென்று குடிக்க வேண்டும். கடையில் தண்ணியும் பேப்பரும் வாங்கிக்கொண்டு, பக்கத்தில் இருந்த குந்தில் அமர்கிறேன். அந்த நாய் என்னவாகியிருக்கும் . . . நாயைத் தூக்கி எறிந்திருப்பார்களோ . . . அப்படியே என்னுடைய பொருள்களையும் தூக்கி எறிந்துவிடுவார்களோ? என் பாஸ்போர்ட் . . . பாஸ் . . . லாப்டாப் எல்லாமே அங்குதானே இருக்கின்றன.

- காலச்சுவடு வெளியீடாக வெளிவரவுள்ள 'நான் கொலை செய்யும் பெண்கள்' தொகுப்பில் இச்சிறுகதை இடம் பெற்றுள்ளது.
நன்றி: காலச்சுவடு. -


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner