இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூலை 2006 இதழ் 79 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட்டில் மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!
நேர்காணல்!
விக்கிபீடியா பற்றி நற்கீரன் இலட்சுமிகாந்தன்.
....!

-நற்கீரன் இலட்சுமிகாந்தன் டொராண்டோ, கனடாவில் வசிக்கும் தமிழ் இளைஞர்.
Ryerson பல்கலைக்கழகத்தில் பொறியியற் துறையில் (மின்னியல்-கணினி) இளமாணிப் பட்டப் படிப்பை முடித்து விட்டு, அதே துறையில் முதுமாணிப் பட்டப்படிப்பை தொடர்ந்து கொண்டிருப்பவர்.  தமிழ்,  தமிழ் கணிமை (Tamil computing) மாற்று சமூக கட்டமைப்புகள், ஓவியம் மற்றும் தத்துவம் ஆகிய துறைகளில் ஈடுபாடுள்ள நற்கீரன் தற்போது தமிழ் விக்கிபீடியாவில் ஆர்வத்துடன் கனடாவிலிருந்து பங்களித்து வருகின்றார். தமிழ் விக்கிபீடியா பற்றிய அறிமுகத்தினை ஏற்கனவே பதிவுகளில் வெளியிட்டிருந்தோம். இதுபற்றிய பல்வேறு சந்தேகங்களை மற்றும் சாத்தியங்களை மேலும் விளக்கும் வகையில் இந்த நேர்காணல் அமைந்துள்ளதானது இத்திட்டம் பற்றி அறிய விரும்பும் அனைவருக்கும் பயனளிக்குமென்பதில் சந்தேகமில்லை. மின்னஞ்சல் மூலம் நேர்காணலா எனச் சிலர் வியக்கலாம். நேர்காணலென்பது நேரில்தான் நடக்க வேண்டுமென்ற கட்டாயத்தை இன்றைய தகவற் தொழில் நுட்பம் இல்லாததாக்கி விட்டது. அந்த வகையில் இதுவும் நேர்காணலே. நக்கீரனின் விருப்பத்தின்படி அவரது புகைப்படத்தினை நாம் இங்கு இணைக்கவில்லை. ஆயினும் அவர் பற்றிய மேலதிக தகவல்களை அறிய விரும்பினால் இந்த 'மின் நேர்காணலை' முழுவதுமாக வாசிக்கவும்.-


கேள்வி 1:
விக்கிபீடியாத் திட்டம் பற்றி அண்மையில்தான் நானே அறிந்தேன். இந்நிலையில் இணையத்தைப் பாவிக்கும் பலருக்கு இன்னும்
இதுபற்றித் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை. இத்திட்டம் பற்றி, இதன் தோற்றம், வளர்ச்சி பற்றிப் பதிவுகள் வாசகர்களுக்குச்
சிறிது விளக்கிக் கூறுவீர்களா?


பதில் 1:
விக்கிபீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம்....விக்கிபீடியா
(http://www.wikipedia.org/) ஜனவரி 21, 2001ம் ஆண்டு இணையத்தில், ஆங்கிலச் சூழலில் யாரும் இலகுவில் தொகுக்க கூடியவாறு ஆரம்பிக்கப்பட்ட ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். அனைத்து மனித அறிவும் கட்டற்ற முறையில் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்ற உயரிய நோக்குடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத் திட்டம் இலாப நோக்கமற்ற, பக்க சார்பற்ற,  நடுநிலைமையை வலியுறுத்தும் ஒரு திட்டமாகும். இதன் நுட்ப கட்டமைப்பும் கட்டற்ற திறந்த வழியில் ஆக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது. விக்கிபீடியாவின் ஆரம்ப தாபகர்களில் ஒருவாரான ஜிம்மி வேல்ஸ் விக்கிபீடியாவை ஒரு நுட்ப கட்டமைப்பின் ஆக்கம் என்பதை விட ஒரு சமூக கட்டமைப்பின் ஆக்கம் என்பதையே வலியுறுத்துகின்றார். அதாவது, பல தரப்பட்ட பயனர்களின் பங்களிப்புக்களை உள்வாங்கி ஒரு கட்டற்ற திறந்த கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதற்கு தேவையான மனித வள சமூக கட்டமைப்பையே அவர் அவ்வாறு குறிப்பிடுகின்றார்.

1990 களுக்கு முன்பு என்சைக்லோபீடியா ஒவ் பிரிற்ரானிக்காவே தரமான கலைக்களஞ்சியமாக கணிக்கப்பட்டது. அது நேரடியாக துறைசார் வல்லுனர்களிடமும், தேர்ந்த தொகுப்பாளர்களாலும் பல வருடங்களாக தொகுக்கப்பட்டு அவ்வப்பொழுது இன்றைப்படுத்தப்பட்டுவந்த ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். ஆங்கிலத்திலேயே அதன் மூலப்பிரதி கிடைக்கும், தமிழில் கிடையாது. அதன் ஏறக்குறைய 20 பாரிய புத்தக கட்டுக்களும் $1000 மேலே விற்கப்பட்டது, எனவே மிகவும் பணம் படைத்தவர்களாலேயே
அப்பிரதிகளை வாங்க முடிந்தது. இந்நிலை என்காற்ரா போன்ற கணினி சார் சிடிரோம் கலைக்களஞ்சியங்களின் வருகையால் சற்று ஆட்டம் கண்டது. 1993 ஆண்டில் உலகளாவிய வலையின் வருகையும், அதனால் ஏற்பட்ட சமூக புரட்சசியும் தகவல்களை தொகுப்பதில் பகிர்வதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தன. ஆரம்பம் முதலே ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் தொடர்பாக பலர் திட்டங்களை செயல்படுத்த முனைந்த போதும், விக்கிபீடியாவே அவற்றுள் இந்தளவுக்கு வெற்றி கண்டது எனலாம்.

இன்று விக்கிபீடியா 3.8 மில்லியன் கட்டுரைகளுக்கு மேலே காவும், 1.25 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள பயனர்களையும்
கொண்டுள்ள ஒரு பன்மொழி கலைக்களஞ்சியம் ஆகும். இதன் பிரதான மூலம் ஆங்கிலாமாக இருப்பினும், இத்திட்டம் 200 மேற்பட்ட
மொழிகளில் இயங்குகின்றது. தமிழ் விக்கிபீடியாவும்
(http://ta.wikipedia.org/) அதில் ஒன்று.


கேள்வி 2:
விக்கிபீடீயாவின் இந்தக் கட்டற்ற கலைக்களஞ்சியம் பல்வேறு மொழிகளிலும் புகழ்பெற்று வருவதாக அறிகின்றேன். விக்கிபீடியாவின் தமிழ்க் கட்டற்ற கலைக்களஞ்சியத் திட்டத்தில் தாங்கள் இணைந்து செயல்படுவதாக அறிகின்றேன். இது பற்றி விரிவானதொரு விளக்கத்தை அளிக்க முடியுமா? இத்திட்டத்தில் யார் யாரெல்லாம் தங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றார்கள்?

பதில் 2:
தமிழ் விக்கிபீடியா 2003ம் ஆண்டு தொடங்கப்பட்டது. யார் முதலில் தமிழ் பக்கத்தை தொடங்கினர் என்று தெரியவில்லை. பலர் தமிழ் விக்கிபீடியா தொடங்கினால் நன்று என்று யாகூ குழுமங்களில் அலசிய சில அஞ்சல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால், மயூரநாதனே ஆரம்பப் பக்கங்களை அமைத்து, இடைவிடாது தொடர்ந்து பங்களித்து வருகின்றார். இன்று 500ற்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள பயனர்கள் உலகின் பல பாகங்களில் இருந்தும் பங்களிக்கின்றார்கள். இவர்களில் 25 - 50 பயனர்கள் வரையே குறிப்பிடத்தக்க
ஈடுபாடு காட்டுகின்றார்கள். ஒவ்வொரு நாளும் புது பயனர்கள் இணைகின்றார்கள், தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சி வேகம் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, அஸ்ரேலியா, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், வட அமெரிக்கா என்று அனைத்து பாகங்களில் வாழும் தமிழ் அன்பர்கள் பங்களிக்கின்றார்கள்.

தொல்காப்பியம், திருக்குறள் போன்றவற்றை தமிழ் மரபின் அக்கால கலைக்களஞ்சியங்களாக கருதலாம். தமிழ் இலக்கியங்களிலும் பல
பொருள் தரும் இலக்கிய வடிவங்கள் உண்டு. எனினும் அனைத்து தரப்பட்ட தகவல்களையும் தொகுத்து வகுத்துத் தர தமிழ் சூழலில்,  மரபில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. 1900 களில் அபிதான சிந்தாமணி என்ற இலக்கிய கலைக்களஞ்சியம் ஒன்று வெளிவந்தது; அது பிற துறை சார் தகவல்களை பகிரவில்லை. தமிழ் விக்கிபீடியாவிற்கு முன்பு இணையத்தில் கலைக்களஞ்சியம் உருவாக்க இம்முயற்சி :
http://www.kalanjiam.com/ மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அது வெற்றியளிக்கவில்லை.

அனைத்து துறைகளிலும் தமிழில் தகவல்களை தொகுத்து வகுப்பது தமிழ் விக்கிபீடியாவின் முக்கிய குறிக்கோள். குறிப்பாக இலக்கிய வட்டத்தால் புறக்கணிக்கப்பட்ட தொழில்நுட்பம், அறிவியல், கணிதம் சார் தகவல்களை தொகுப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. தமிழில் துறை சார் பின்புலத்தை உருவாக்கி நுண்ணிய தகவல்களை பகிர்வது தமிழ் விக்கிபீடியாவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. புதிய கருத்துருவாக்கங்களை (உதாரணம்: அலைந்துசூழ்வியல்) பகிர்வதற்கும், தமிழ் சூழலுக்கு அந்நியமான எண்ணக்கருக்களை பகிர்வதற்கும் தமிழ் விக்கிபீடியா ஏதுவாக இருக்கும் என்று நம்புகின்றேன். மேலும், செய்திகளை உடனுக்குடன் பகிர்வதற்கு, சீரிய முறையில் பதிவதற்கும் தமிழ் விக்கிபீடியா பயன்படக்கூடிய சாத்தியம் உண்டு.

கேள்வி 3:
எனக்கொரு சந்தேகம்... இந்தக் கலைக்களஞ்சியத்திற்கு யார் யாரெல்லாம் பங்களிக்க முடியும்? எவ்வகையிலெல்லாம் பங்களிக்க முடியும்?

பதில் 3:
ஆரிவமுள்ள எவரும் இத்திட்டத்தில் நேரடியாக பங்கு கொள்ளலாம். இத்திட்டம் இலாப நோக்கம் அற்றது, பக்க சார்பற்றது,  நடுநிலைமையானது என்பதை மீண்டும் சுட்ட விரும்புகின்றேன்.

யாரும் எந்த ஒரு கட்டுரையையும் எப்பொழுதும் மேம்படுத்தலாம். அனைவருக்கும் அழைப்பு. இதுவே விக்கிபீடியாவின் அடிப்படை
தத்துவங்களில் ஒன்று. அறிவின் தளங்கள் பல முனைகளில் பரந்து விரிந்து கிடக்கின்றன, உங்களின் ஈடுபாடு எதுவாகினும் தமிழில் அதை தர முன்வாருங்கள்.

அடிப்படையாக தமிழ், விடய நோக்கில் எழுதும் திறன், இணைய வசதி, தமிழ் தட்டச்சு திறன் மற்றும் தமிழ் விக்கிபீடியாவில் தொகுக்கப்பது நோக்கிய சில நுணுக்கங்கள் போன்ற அம்சங்கள் கூடி வந்தாலே பங்களிக்க கூடியதாக இருக்கும். சில ஆர்வலர்களுக்கு இவற்றுள் சில தடைகளாக உள்ளதை நாம் அறிவோம். தமிழ் மற்றும் துறைசார் அறிவு உடைய சிலருக்கு தட்டச்சு மற்றும் நுட்ப விடயங்கள் தடையாக் உள்ளன. ஆகையால்தான், தற்சமயம் அஞ்சல் மூலமாகவோ, அல்லது நேரடியாகவோ ஆக்கங்களை பெற்று தமிழ்
விக்கிபீடியாவில் சேர்பது குறித்தி அலசி வருகின்றோம். மேலும் பலருக்கு விக்கி தமிழ் நடை, இலக்கணம் சற்று தடையாக படுகின்றது. இத்திட்டத்தில் உள்ள பலரும் தமிழின் மாணவர்களே, எனவே அத்தயக்கம் தேவையற்றது. இலக்கண பிழை, எழுத்து பிழைகளை பிற பயனர்கள் மேம்படுத்துவார்கள் என்று எதிர்பாக்கலாம்.

எழுதுவதில் ஈடுபாடு இல்லாவிட்டால் நுட்ப நெறிப்படுத்தல், பக்க வடிவமைப்பு, வரைபடங்கள் தயாரித்தல் என்ற பல வழிகளில் பங்களிக்கலாம். பங்களிக்ககூடிய சில முறைகள் கீழே:

1. ஆக்க உருவாக்கம் (குறுங்கட்டுரை, மொழிபெயர்ப்பு, கட்டுரை விரிவாக்கம், கட்டுரை உருவாக்கம்)
2. ஆக்க மேம்படுத்தல் (விக்கியாக்கம், இலக்கண திருத்தம், பொருள் திருத்தம், நடை திருத்தம், தகவல் சரிபார்த்தல், விக்கி உள்
வெளி இணைப்புகள் சேர்ப்பு ...)
3. வகைப்படுத்தல் (இயல் வகை விரிவுபடம், வகை செய்தல்)
4. தள பராமரிப்பு/விக்கி சமூக கட்டமைப்பு (இன்றைப்படுத்தல், அறிமுகம்/ஒத்தாசை)
5. நுட்ப நெறிப்படுத்தல் (Technical Maintenance and Issues)
6. பக்க வடிவமைப்பு (Layout, Graphics)
7. திட்டமைப்பு/கொள்கை வழிகாட்டல்
8. தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தல் (Introduction/Awareness/Marketing)


கேள்வி 4:
பங்களிப்பவர்களுக்குக் குறிப்பிட்ட கல்வித்தகைமைகள் இருக்க வேண்டுமென்று ஏதாவது கட்டுப்பாடு இருக்கிறதா?

பதில் 4:
கல்வித்தகமைகள், வயதெல்லை என்று எதுவும் இல்லை. எனினும், மேலே குறிப்பிட்டது போல ஒரு பந்தியையோ, குறுங்கட்டுரையையோ, கட்டுரையையோ தமிழில் எழுதி, தட்டச்சு செய்து, தமிழ் விக்கிபீடியாவில் விக்கியாக்கம் செய்வது என்பது ஒரு சவாலகவே அமைகின்றது. தமிழ்ச் சூழலில் இது ஆர்வம் மற்றும் அடிப்படைக்கல்வி தகமைகள் உள்ளவர்களாலேயே ஏதுவாகின்றது.

கேள்வி 5:
இந்தக் கலைக்களஞ்சியம் கட்டற்ற கலைக்களஞ்சியமென அழைக்கப்படுகின்றதே. யாருமே இங்கு நுழைந்து தகவல்களை மாற்றி
விடலாமென்று கூறப்படுகின்றதே? அது பற்றிச் சிறிது விளக்குவீர்களா?


பதில் 5:
இனையத்தில் உலாவுதல்...கட்டற்ற திறந்த கலைக்களஞ்சியமாகிய தமிழ் விக்கிபீடியாவை யாரும், எப்பொழுதும் மேம்படுத்தலாம் என்பது உண்மையே. ஆனால், யாரும் கட்டுரைகளை தரம் குறைக்கும் விதத்திலோ, தனிப்பட்ட விருப்ப சார்பு நோக்கிலோ மாற்ற முடியாது. பிற பயனர்கள், நிர்வாகிகள் கட்டுரைகளுக்கு ஏற்படுத்தப்படும் மாற்றங்களை அடிக்கடி அவதானித்தபடியே இருக்கின்றார்கள். யாராவது தெரியாமலோ அல்லது விசமத்தனமாகவோ தரம் குறைவான மாற்றங்கள் செய்தால், அம்மாற்றங்களை துல்லியமாக அறிந்து இலகுவாக பழைய நிலைக்கு கட்டுரைகளை மாற்றம் செய்யலாம். விக்கி நுட்பம் ஒரு கட்டுரை மாற்றப்பட்டு, சேமிக்கப்படும் பொழுது அது அனைத்துப்
பிரதிகளையும் தொடர்ந்து சேமித்து வைக்கின்றது. யாரால் என்ன மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்பதை அது துல்லியமாக காட்ட
வல்லது.

இங்கு, செய்யப்படும் மாற்றம் தரம் குறைவானது என்று யார் தீர்மானிப்பது தொடர்பான கேள்வி எழுகின்றது. அநேக கருத்து வேறுபாடுகளுக்கு ஒவ்வொரு கட்டுரைக்குமுரிய பேச்சுப் பக்கத்தில் கலந்துரையாடி ஒரு சுமூகமான முடிவுக்கு வருவதே வழக்கம். ஒரு சமூகமாகவே சுமூகமான முடிவுகள் எட்டப்படும்.

அடிக்கடி கட்டுரைகள் தாக்குதல்களுக்கு உள்ளானால், அக்கட்டுரைகளைப் பூட்டு போடும் வசதியும் உண்டு. மேலும், முதற் பக்கம் போன்று முக்கிய ஒரு சில பக்கங்களை தமிழ் விக்கிபீடியா நிர்வாகிகளே மேம்படுத்த அனுமதி உண்டு.

கேள்வி 6:
யாரும் இங்கு நுழைந்து தகவல்களை மாற்றும அனுமதி இருப்பதால், இங்கு
ஏற்றப்படும் தகவல்களின் நம்பகத்தன்மைக்குப் பங்கம் வந்து விடாதா?


பதில் 6:
விக்கிபீடியாவின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி ஒரு முக்கிய அடிப்படைக் கேள்விதான். தமிழ் விக்கிபீடியாவிலோ அல்லது பிற விக்கிபீடியாக்ளிலோ கிடைக்கும் தகவல்கள் குறித்து எந்த வித உத்திரவாதமும் இல்லை.

எப்படி ஒரு தகவல் சரியாக இருக்கும் என்று கண்டறிய முடியும்? பிற தகவல் மூலங்களுடன் ஒப்பிட்டு அலசுவது ஒரு வழி. அதற்காகத்தான் நாம் இயன்றவரை ஆதாரங்கள், துணை நூல்கள், வெளி இணைப்புகளை வழங்குகின்றோம். உண்மை நிலைமையை அறிவது பயனரின் வேலை, அதற்கு இயன்றவரை உதவுவதே எம்முடைய நோக்கம்.

யாரும் மாற்றலாம் எனவே நம்பகத்தன்மை குறையாதா என்று கேட்டுள்ளீர்கள். அதற்கான பதிலை மேலே உள்ள பதில்களிலும்
காணலாம். ஆனால், மூடிய நிலையில் ஒரு கலைக்களஞ்சியம் தொகுக்கப்படுமானால், அது நம்பக்கூடியது என்று எப்படி ஏற்றுக்
கொள்வது. எனவே, நம்பகத்தன்மை என்பது பயன்பாட்டிலும் தங்கி உள்ளது. தரப்பட்ட தகவல்கள் உபயோகம் என்று நீங்கள் கருதினால்தான் இத்திட்டம் நீடிக்கும், இல்லாவிட்டால் தோற்றுவிடும்.

ஆனால், நாம் அனைத்து விடயங்களையும் யாரும் தொகுக்கலாம் என்று  நினைக்கவில்லை. இன்று தமிழ் விக்கிபீடியாவில் மருத்துவம், சட்டம் போன்ற துறைகளில் ஓரிரு மேலோட்ட கட்டுரைகள்தான் இருக்கின்றன. ஏன் என்றால் அத்துறை சார் வல்லுனர்கள் இன்னும் பங்களிக்கவில்லை, அல்லது உள்வாங்கப்படவில்லை. (அண்மையில் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.)
எனவே நம்பகத்தன்மை என்பது தமிழ் விக்கிபீடியாவின் பொது கூட்டறிவு கட்டமைப்பில்தான் தங்கியுள்ளது. இத்திட்டம் தமிழ் மக்களின் ஒரு கூட்டு மதிநுட்பத்தின் வெளிப்பாடு, அதன் நம்பகத்தன்மை எமது ஆற்றலில்தான் தங்கியுள்ளது.

கேள்வி 7:
மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்டு விரிந்து கொண்டிருக்குமொரு கலைக்களஞ்சியத்தில் யாராவது புகுந்து தகவல்களை
மாற்றி விட்டால், அவற்றைக் கண்காணிப்பதற்கென்று வசதிகளுண்டா? இந்தப் பிரச்சினை இத்திட்டத்தில் எவ்விதம் கையாளப்படுகின்றது? இந்த விடயத்தில் சிறு சிறு கட்டுப்பாடுகளை வைத்திருப்பது நல்லதென நினைக்கவில்லையா? உதாரணமாக அங்கத்தவர்கள் மட்டுமே தகவல்களை மாற்றலாமென்பது போன்ற கட்டுப்பாடுகள்.


பதில் 7:
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை எனது முந்தைய பதில்களிலும் சுட்ட முயன்றிருக்கின்றேன். அடிப்படையில் உங்கள் கேள்வி  தகவல்கள் விசமிகளால் தரம் இழந்து போவதைத் தடுப்பது எப்படி என்பதை மையமாகக் கொண்டது. நான் கூறியபடி நாம் சக மனிதர்களில் நல் எண்ணத்தை, நடத்தையை எதிர்பார்த்தே இயங்குகின்றோம். எனினும், தமிழ் இணையச் சூழலிலும் சரி, ஆங்கில இணையச் சூழலிலும் சரி சில விசமத் தனங்கள் உண்டு. அதை கையாள்வதற்குப் படிப்படியான சில செயலாக்க முறைகள் உண்டு. அவற்றைக் கீழே பகிர்ந்திட முனைகின்றேன்.

* யாரும் தொகுக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால் கணக்குள்ள பயனர்களுக்கு மேலதிக வசதிகள் அல்லது அனுமதிகள் உண்டு. உதாராமாக அவர்களே பக்கங்களை பெயர் மாற்ற அல்ல நகர்த்த முடியும். சமீபத்தில் ஆங்கில விக்கிபீடியாவில் சோதனையளவில் கணக்குள்ள பயனர்கள்தான் கட்டுரைகளை ஆரம்பிக்க முடியும் போன்ற ஒரு கட்டுப்பாடு வந்தது, ஆனால் அது தேவையற்றது என்று கண்டறிப்பட்டுள்ளது.

* 500 மேற்பட்ட பயனர்கள் இருந்தாலும், தமிழ் விக்கிபீடியா சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாய்ந்த 10 நிர்வாகிகள் பட்டியலில் உள்ளார்கள். இவர்களில் 6 பேர் வரையில் தற்சமயம் பல பங்களிப்புகளை நல்கி வருகின்றார்கள். நிர்வாகிகளுக்கு பக்கங்களை நீக்குவது, பூட்டப்பட்ட பக்கங்களை தொகுப்பது போன்ற மேலதிக அனுமதிக்கள் உண்டு.

* தமிழ் விக்கிபீடியாவில் இது தவிர நிர்வாகி அணுக்கத்தை வழங்ககூடிய இரு "அதிகாரிகள்" உண்டு. ஆங்கில விக்கிபீடியாவில் மேலதிக சில கட்டமைப்புகளும் உண்டு. (இப்படி பிரிவுகள் இருந்தாலும், அனைவரும் தன்னார்வலர்களே. எவ்வளவு பொறுப்பை நீங்கள் ஏற்கின்றீர்கள், எவ்வளவு நேரத்தை தர முன்வருகின்றீர்கள், எப்படி சமூகத்தில் இயங்குகின்றீர்கள் என்பதைப் பொறுத்துதான் எந்த வித்தியாசங்களும் அமைகின்றன. மற்றப்படி
அனைவரும் பயனர்களே).

* எந்த ஒரு மாற்றமும் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் பிரதிபலிக்கும். எந்த ஒரு பயனரும் அம்மாற்றங்களை அவதானித்து நடவடிக்கை எடுக்க முடியும்.

* ஒவ்வொரு பயனரும் தாங்களுக்கு முக்கியமான கட்டுரைகளை தனது கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கலாம். அக்கட்டுரைகளில் எவற்றையாவது யாரும் மாற்றும் பொழுது அம்மாற்றங்கள் தொடர்பான தகவல்களை அந்த பயனர் மின் அஞ்சல் மூலமாகவோ, அல்லது புதுப்பதிகை செய்யும் பொழுதோ பெற்று நடவடிக்கை எடுக்கலாம்.

* தமிழ் விக்கிபீடியா நிர்வாகிகள் அவ்வப்பொழுது தமிழ் விக்கிபீடியாவில் நிகழும் மாற்றங்களை அவதானித்த வண்ணமே இருப்பார்கள்.
ஆரோக்கியமற்ற மாற்றங்கள் இடம்பெறும் பொழுது அவற்றை அவர்கள் சீர்செய்ய முயலுவார்கள்.

* ஒரு சில குறிப்பிட்ட பக்கங்கள் அடிக்கடி கீழ்த்தரமான மாற்றங்களுக்கு உட்படுமானால் அப்பக்கங்களை பூட்டு போட்டு வைக்கலாம். அதாவது நிர்வாகிகளை தவிர பொது பயனர்கள் மாற்ற முடியாதபடி. மேலும், முதற் பக்கங்கள் போன்ற முக்கிய சில பக்கங்கள் இப்படி பூட்டு போடப்பட்டவையே.

* சில பயனர்கள் வேண்டும் என்றே தொடர் விசமத்தன வேலைகளில் ஈடுபட்டால் அவர்களின் ஐபிக்களை தடை செய்யலாம். மேலும் தொடர்ந்தால், மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும்.

இறுதியாக உங்களுக்கு சுட்ட முயல்வது யாதென்றால், நீங்கள் சுட்டியபடி சிறு சிறு கட்டுபாடுகள் உண்டு. அக்கட்டுபாடுகள் படி படியாக தேவைகேற்ப உபயோகப்படுத்த முடியும். தமிழ் விக்கிபீடியா தமிழ் ஆர்வலர்களிடம் பரந்த ஆதரவை கொண்டிருப்பதாகவே உணர்கின்றோம். குறைகள் இருந்தால் நேரடியாக கலந்துரையாடி சரி செய்யலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.


கேள்வி 8:
இங்கு ஏற்றபப்டும் தகவல்களின் சரி/பிழை எவ்விதம் தீர்மானிக்கப்படுகிறது?

பதில் 7:
சரியான தகவல்கள் பகிரப்படும் பொழுதே நம்பகத்தன்மை ஏற்படும். எனவே இக்கேள்விக்கும் நம்பகத்தன்மை தொடர்பான கேள்விக்கும் பதில் ஒன்றே. அதாவது பிற மூலங்களுடன் ஒப்பிடுவதன் மூலம் சரி பார்க்கலாம். அதற்காக கட்டுரைகள் ஆதாரம்
(using references in the writing process) காட்டி எழுதுதல் ஊக்கிவிக்கப்படுகின்றது. மேலும், ஆதாரங்கள், துணை நூலகள், வெளி இணைப்புகள் கட்டுரைகளுடன் இணைக்கப்படுகின்றன.

கட்டுரைகளை துறைவல்லுனர்கள், பிற பயனர்கள்
(Peer Review) சரி பார்ப்பதன் மூலம் உறுதிப்படுத்தலாம். சிறப்புக்கட்டுரைகளாக நியமிக்கப்படும் கட்டுரைகள் இயன்றவரை இப்படி சரி பார்க்கப்படுகின்றன.

கேள்வி 9:
மேலும் உங்களைப் பற்றியும், இத்திட்டத்தில் தாங்கள் இணைந்து கொண்டதன் பின்னணி பற்றியும் பதிவுகள் வாசகர்களுக்குச் சிறிது விளக்குவீர்களா?

பதில் 9:
இலங்கை எனது பிறப்பிடம், கனடா எனது வசிப்பிடம். தற்சமயம் பகுதி நேர வேலை, மற்றும் MEng படிப்பில் ஈடுபட்டுள்ளேன். தமிழிற்கு நான் ஒரு மாணவனே. ஆரம்பத்தில் "இதழ்களின் இணையம்" என்றும், பின்னர் "எனக்குள் உலகம்" (
http://worldinmind.blogspot.com/) என்று வலைப்பதிவுகளில் பதிந்து வந்தேன். தமிழில் நுட்பியல் அறிவியல் சார் படைப்புக்கள் அரிதாகவே கிடைப்பதும், அவற்றை ஆக்குவதில் உள்ள பல தடங்கல்களையும் உணர முடிந்தது. இதற்கு தீர்வாக விக்கிபீடியா அமையுமா என்று மயூரநாதனுடன் ஒரு வலைப்பதிவிற்காக அலசிய போதுதான் விக்கிபீடியாவின் சாத்தியத்தை அறிய முடிந்தது. தற்சமயம் தமிழ் விக்கிபீடியாவிலேயே ஆர்வத்துடன் பங்களித்து வருகின்றேன். என்னைப்பற்றிய மேலதிக தகவல்களை www.natkeeran.ca தளத்தில் கிடைக்கின்றன.

கேள்வி 10:
இத்திட்டத்தில் இணைந்து செயலாற்ற விரும்புவோர் தங்களுடன் தொடர்பு கொள்ள விரும்பினால் அவர்கள் தனிப்பட்டரீதியில் தங்களுடன் தொடர்பு கொள்வதற்குரிய விபரங்களை அறியத் தர முடியுமா?

பதில் 9
நிச்சயமாக
natkeeran@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தால் தமிழ் விக்கிபீடியா நோக்கி இயன்றவரை உதவுவேன். கனடாவில் (ரொறன்ரோ) என்றால் நேரடியாக சந்தித்தும் உதவ முடியும்.

விக்கிபீடியா திட்டம் பற்றி அத்திட்டத்தில் ஆர்வத்துடன் செயற்படும் ,கனடாவில் வசிக்கும் இளைஞர் நகீரன் அவர்களுடன் மின்னஞ்சல் மூலம் நேரகாணல் நடாத்தியவர் பதிவுகளுக்காக 'ஊர்க்குருவி'.
 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner