இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2008 இதழ் 97  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
மின்காணல்!

அமெரிக்காவில் த‌மிழ் வ‌ள‌ர்ப்போர் (3)!

- ஆல்பேர்ட் பெர்ணாண்டோ


எந்த ஒரு சமூகமும், எந்தச் சூழலிலும் "மொழி" என்ற தன் சொந்த அடையாளத்தைத் தொலைத்து விடக்கூடாது!தேமதுரத் தமிழ் அமெரிக்கத் தமிழர் இல்லங்களில், உள்ளங்களில் வேர் பாய்ச்சி விழுதுகள் விடக் காரணமானவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்! தமிழைத் தவமாய், வேதமாய், வேள்வியாய், சுவாசமாய், உயிராய், உணர்வாய் நேசித்து தமிழ் வாழ வளர தங்களை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக் கொண்டுள்ளவர்களின் வரிசையில் மூன்றாவதாக அமெரிக்காவின் இல்லிநாய்ஸ் மாநிலத்தில் சிகாகோவில் வாசம் செய்யும் அய்யா அழகப்பா இராம் மோகன் அவர்களின் காணல் இடம்பெறுகிறது.

1) தங்களைப்பற்றி ஒரு சிறு குறிப்பு ( பிறந்தது, வளர்ந்தது, படிப்பு, தொழில், புலம்பெயர்தலுக்கான காரணம், பணி...)

அழ.ராம்மோகன்:- நான் பிறந்தது மலேசிய மண்ணான பினாங்கில். 1939 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போர் காரணமாக இரண்டு வயது சிறுவனாக இருக்கும் பொழுது தந்தையார் ரப்பர் தோட்டம், வங்கித் தொழில் ஆகியவற்றை விற்று விட்டு குடும்பத்தோடு இந்தியா
திரும்பினார். எனது பூர்வீகம் கானாடுகாத்தான்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்த ஊரை இன்று இந்திய அரசாங்கம் தென் இந்தியாவில் நான்கு புராதன பூர்வீக இடங்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது, இது மதுரைக்கும் திருச்சிக்கும் இடையே உள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தையும் அழகப்பா பல்கலைக்கழகத்தையும் கொடையாக ஈந்த வள்ளல்கள் வாழ்ந்த ஊர்.

டில்லிக்கருகில் உள்ள பிர்லா கல்லு}ரியில் அறிவியல் பட்டமும், பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டமும் பெற்றேன், அதைத் தொடர்ந்து இரு ஆண்டுகள் சென்னையில் மோட்டார் வாகனத் தொழிற்சாலையில் பொறியியல் வல்லுனராகப் பணி, அதன் பின்னர் 1963ல் அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்காகச் சென்று 1965 ல் சிகாகோவில் முதுகலை பட்டம் பெற்றேன்.

அமெரிக்காவில் குடியுரிமை பெற்று இதுநாள் வரை அமெரிக்கத் தமிழனாகக் குடும்பத்தோடு இருந்து வருகிறேன், இரு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று கடந்த இரு ஆண்டுகளாக தமிழ்ப் பணி செய்து அது இன்றும் தொடர்கிறது.

எனது மனைவி திருமதி மீனாட்சி உணவு சத்து துறையில் முதுநிலை பட்டம் பெற்று ஆய்வாளாராக பல்கலைக்கழக மருத்துவ மனையில் பணி ஆற்றுகிறார். ஒரு மகன், ஒரு மகள், இருவரும் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து ஆளானவர்கள். பிள்ளை மருத்துவர், மகள் காப்பீட்டுத் துறையில் மேலாளர், 5 பேரக் குழந்தைகள், சுருக்கமாகச் சொன்னால், ஈன்ற நாடு மலேசியா! பண்பாட்டை ஊட்டி வளர்த்தது தமிழ்நாடு! என்னை உலகத் தமிழனாக ஆக்கி, என்னை எனக்கு முழுமையாகப் புரிந்து கொள்ள வைத்தது அமெரிக்கப் பின்புலம்.

2)அமெரிக்காவில் இருந்துகொண்டு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையை நிறுவி உலகெலாம் தமிழ் சமுதாய முன்னேற்றத்துக்கு மிகப்பலரும் பாராட்டும்வகையில் பணியாற்றி வருகிறீர்கள். இதனை நிறுவிய நோக்கம், செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து வாசகர்களுக்கு கொஞ்சம் விரிவாகச் சொல்லமுடியுமா?

அழ.ராம்: - சிறு வயதிலிருந்தே தமிழ் வழிக் கல்வி, ஆங்கிலத்திலும் அதன் வளம் காரணமாகப் பற்று, எனது தமிழ் ஆர்வம் மிகுதி, எங்கள் வீட்டில் தமிழ் புலவர்களுக்கு மிகுந்த மரியாதை, மிகுந்த உபசரிப்பு, எனது இளம் வயதில் தமிழின் அழகும் திறனும் என் மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின, தமிழ் இலக்கியமும் படைப்புகளும் என்னை வெகுவாக ஈர் த்தன, இருப்பினும் மனத்துக்குள் ஏதோ ஒரு பெரும் நெருடல், தேடல், அது தமிழ் நாட்டின் ஏழ்மையையும் சாதி மத ஏற்றத் தாழ்வுகளையும் பற்றியது, ஏன் இன்னும் அவைகள் ஓழிக்கப்படவில்லை. இந்தியச் சிந்தனை அதிலும் குறிப்பாக தமிழ்ச் சிந்தனை தான் தோற்றுவித்த சமயங்களின் மூலமாகவும். புலம் பெய ர்ந்து வந்து தமிழ் மண்ணில் ஒட்டிக்கொண்ட சமயங்கள் மூலமாகவும். ஏன் தமிழர்களை உலக நாடுகளுக்கு ஈடாக முன்னேற்றவில்லை என தேடினேன், அதற்காக வைணவம். சைவம். ஆசிவகம். சமணம். கிருத்துவம், இசுலாம், யூதம் போன்ற மதங்களை ஆழமாகத் தேடிப் போனேன் விடை காண. முழுமையான விடை எதிலும் கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், என்னுடைய 40 ஆண்டு அமெரிக்க வாழ்க்கையில், 1990 ஆம் ஆண்டில் எனக்கு இத் தேடலுக்கான விடை திருக்குறளை அமெரிக்க மக்களோடு ஒப்பிட்டுப் பார்த்ததில் கிடைத்தது. திருக்குறள் மற்றும் பலதரப்பட்ட சமய நூல்களோடு பல ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு இருந்ததால். அமெரிக்க மக்களின் ஒவ்வொரு வாழ்வியல் முறையும் திருக்குறள் நெறியோடு பெரும்பாலும் ஒத்துப் போவது தெரிகிறது, அமெரிக்க மக்கள் தங்களுக்கே தெரியாமல் திருக்குறளை அவர்களது நாட்டு அரசியலிலும். தனி மனித வாழ்விலும் பின் பற்றி வந்து கொண்டு இருக்கிறார்கள் எனக் கண்டேன், மனிதன். மனிதம். மனிதநேயஒருமைப்பாடு. சமயங்களுக்கு அப்பாற்பட்ட ஒழுக்க நெறி. போன்ற கருத்துக்கள் திருக்குறள் வெளிச்சத்தில் என்னுள் முழுமை அடைந்கன, தனி மனிதப் பிரச்சனைகளும் நாட்டுப் பிரச்சனைகளும் திருக்குறள் வெளிச்சத்தில் ஓடி விடுவதைக் கண்டேன், அத்தகைய அறநெறியை கிருத்து பிறப்பதற்கு முன்னரே ஒரு தமிழன் எழுதி வைத்துப்போனதைப் பார்த்து பிரமித்தேன், அதனால் திருக்குறளை வள்ளுவமாக ஏற்றுக் கொண்டேன். அதைத் தோற்றுவித்த தமிழ் பண்பாட்டின் மேல் ஒரு தனி மரியாதையும் ஏற்பட்டது, தங்களுக்குள்ளேயே இம்மாதிரி ஒரு புதையலை வைத்துக் கொண்டு தமிழர்கள் ஏன் அதை மறந்து இருளிலே நெடுங்காலமாக உழன்று கொண்டு இருக்கிறார்கள் என வியந்தேன், அதன் காரணமாக திருக்குறளை பொதுமறையாகவும் மற்ற சமய நூல்களை தனி மறைகளாகவும் கண்டு திருக்குறளை மூச்சும் மையமுமாக வைத்து உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை 1990ல் நானும் எனது அமெரிக்க நண்பர்களும் நிறுவினோம். அரசியலும். சாதி சமய வேறுபாடுகளும் இல்லாமல் திருக்குறளை உலக மக்களிடையேயும் தமிழ் மக்களிடையேயும் பல வழிகளில் கொண்டு செல்லவும். நம்பிக்கை வழி அல்லாமல் அறிவு சார்ந்த சிந்தனை வழிகளில் நின்று. தமிழில் மேற்கத்திய அறிவியலை கொண்டு வரவும் எமது அறக்கட்டளை இன்றுவரை தொடர்ந்து தொண்டு செய்து வருகிறது, இது வரை 17 திட்டங்கள் நிறைவேற்றுபட்டுள்ளன, அதன் முழு விபரங்களையும் எமது www.kural.org என்ற வலையில் காணலாம்.

குறிப்பாக திருக்குறளை பைபிளைப்போல உருவகப்படுத்தி 1800 பக்கங்களில் 1 அங்குல பருமனில் மிக மெல்லிய காகிதத்தில் அமெரிக்காவில் உள்ள பைபிள் அச்சிடும் அச்சகத்திலேயே 10,000 பிரதிகள் அச்சிட்டோம். அதன் தனிச் சிறப்பு என்னவெனில் திருக்குறளுக்கு மட்டும் 700 பக்கங்கள். அதோடு அத் திருக்குறளைத் தந்த தமிழ்ப் பண்பாட்டை கட்டுரைகளாக விளக்க 900 பக்கங்கள். அதைத் தொடர்ந்து மூன்றாவது பகுதியாக தமிழின எதிர்கால வழிகாட்டிக்கு 200 பக்கங்கள். இவ்வாறு மூன்று பகுதிகளையும் ஒரே புத்தகமாக ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சமைத்து உலகம் முழுதும் 2000 ஆண்டில் வெளியிட்டுப் பரப்பினோம். அதனை திரு.அப்துல் கலாம் இந்தியாவிலும், உச்ச நீதி மன்ற நீதிபதி திரு ராஜேந்திரன் சிங்கப்பூரிலும், மலேசிய அமைச்சர் திரு சாமிவேலு கோலாலம்பூரிலும் வெளியிட்டார்கள். இதைச் செய்து முடிக்க உலகத் தமிழர்கள் நன்கொடையாக 1,000,00 டாலர்கள் தந்து உதவினார்கள். இன்னொரு கோணத்தில் பார்த்தால் முதன் முதலாக உலகத் தமிழ்ச் சமுதாயம் தனக்குத்தானே செய்து கொண்ட முதல் கூட்டு முயற்சி இதுவாகத் தான் இருக்கும்.

திருக்குறளை 108 மந்திரங்களாக இசை வடிவிலும். திருக்குறள் காமத்துப்பாலை 25 ராகங்களாக இசை நாடக வடிவிலும் வெளியிட்டோம். புதுக் கவிதை. நினைக்கப்படவேண்டிய சான்றோர்களைப் பற்றிய சுருக்கமான திறனாய்வு போன்ற நூல்கள் வெளியிடப்பட்டன. இது ஒரு புறம் இருக்க, மேற்கத்திய அறிவியலை தமிழுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற பெரு நோக்கில் இரு பெரும் திட்டங்களை உருவாக்கினோம். ஒன்று ஸ்டீபன் ஹாங்கிங் என்ற இயற்பியல் அறிஞருடைய பிரபலமான "காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்" என்ற நுலை வெளியிட்ட திட்டம், மற்றொன்று இப்பொழுது தான் நிறைவு பெற்றது.இந்த பிரமாண்டமான இரண்டாவது திட்டத்தை நிறைவேற்ற 100,000 டாலர்கள் செலவானது. இது தமிழ் வழி கல்வி கற்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அறிவியல் திறத்தை குறிப்பாக இயற்பியல் சிந்தனைத் திறத்தை உலகத் தரத்திற்கு உடனே உயர்த்துவது பற்றியது. இத் திட்டத்தின் முக்கிய நோக்கம் அமெரிக்க ஆனென்பர்க் அறக்கட்டளையும் கேம்பிரிஜ் பல்கலைக் கழகமும் கூட்டாக உருவாக்கிய 26 மணி நேர அளவில் (52 அரை மணி நேர காட்சிகள்) உண்டாக்கிய இயற்பியல் பாடங்களையும் அதனோடு இணைந்த 3 புத்தகங்களையும் (1500 பக்கங்கள்) தமிழாக்கம் செய்து அறிவியல் தமிழை உலகத் தரத்திற்கு உயர்த்துவது தான், இதனை நிறைவேற்ற பொது மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம், நீங்களும் எதாவது ஒரு பள்ளியை தத்து எடுத்து இத் திட்டத்தைப் பரப்ப உதவலாம், மேலும் விபரங்களுக்கு என்னோடு thiru@kural.org என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் தொடணுபு கொள்க, அல்லது 630 985 3141 என்ற தொலைபேசி மூலம் கூப்பிடுங்கள்.

இனி வருங்கால திட்டங்கள் பற்றி கூறுங்கள் எனக் கேட்டுள்ளீர்கள், மூன்று திட்டங்களைத் தீட்டி உள்ளோம், முதலாவது 133 திருக்குறள் மந்திரங்களை வண்ணம் தீட்டும் புத்தகமாகவும். சிறு வயது குழந்தைகளும் சிறார்களும் மனவளக்கலையை (தியானம்) திருக்குறள் வழியல் இசை வடிவாக கற்கவும் ஆங்கிலம்-பிரெஞ்ச்-ஸ்பானிஷ்-தமிழ் ஆகிய 4 மொழிகளிலும் தயாரிக்க உள்ளோம்.
இரண்டாவது 133 திருக்குறள் மந்திரங்களை ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறு கதையாக புத்தக வடிவில் தயாரித்து அளிக்க உள்ளோம்.
மூன்றாவது தமிழ்ப் பண்பாட்டின் இசை-நாட்டிய-நாடகக் கூறுகளை ஒலி-ஒளி வடிவில் தகவல் களஞ்சிய குறுந்தகடுகளாக தர உள்ளோம், உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை, தொடர்பு கொள்க.

3)தமிழின வழிகாட்டியாக திருக்குறளை ஆங்கிலத்தில் எளிமையான விளக்கத்தோடு புதுமையாக கொணர்ந்தீர்கள்! இதனால் உலக மக்கள் தமிழ் பண்பாடு..உலகப் பண்பாடாக ஏற்கும் நிலைக்கு வித்திட்டிருக்கிறீர்கள்? இந்த நூலுக்கு வரவேற்பு எப்படியுள்ளது? எதிர்பார்த்த அளவுக்கு இந்த நூல் வெற்றியைத் தேடித்தந்துள்ளதா? இதை உலகமக்களிடையே எடுத்துச் செல்ல ஏதும் முயற்சி மேற்கொண்டிருக்கிறீர்களா?

அழ.ராம்: - தமிழ் மறையான திருக்குறளை உலகப் பொது மறையாக எடுத்துச் செல்ல எமது அறக் கட்டளை பல வழிகளில் செயல்பட்டும் தொடர்ந்து முயன்றும் வருகிறது, இதுவரை 10,000 பிரதிகளில் 9000 பிரதிகள் உலக மக்களால் வாங்கப்பட்டுவிட்டன, இப் புத்தகம் ஆங்கிலம் பேசும் அனைத்து நாடுகளிலும் பவனி வந்து கொண்டு இருக்கிறது, ஒரு புரவலரால் 200 க்கும் மேற்பட்ட இந்திய பல்கலைக் கழக நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது, எமது அறக்கட்டளை அமெரிக்க நாட்டு அனைத்து நூலகங்களுக்கும் இந் நூலைப் பற்றி செய்தி அனுப்பி அதன் பயனாக பல அமெரிக்க நூலகங்கள் இந் நூலை வாங்கி உள்ளன. வாசிங்டனில் உள்ள அமெரிக்க லைப்ரரி ஆப் காங்கிரஸ் நூலகத்திலும் உள்ளது. இன்னும் பல செய்ய வேண்டும். அதற்கு உங்களைப் போன்ற தமிழர்களின் ஒத்துழைப்பு தேவை. இது தொடர்பாக அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இதனைப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் அவர் எங்கிருந்தாலும் இந்த நூலின் 10 பிரதிகளை வாங்கி அன்பளிப்பாகத் தன்னைச் சுற்றி உள்ள தமிழரல்லாத நண்பர்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் குறள் நெறியும் பரவ வழி உண்டு. அதனால் அவர்களுக்கம் ஒரு லாபம் உண்டு. அது என்ன தெரியுமா? இதுவரை அவரைப் பற்றிய தன் நண்பரின் கணிப்பு உயர்ந்து இப்படியும் ஒரு பண்பாட்டுப் பிண்ணனி இவருக்கு உண்டா என்று வியந்து இனிமேல் தன் நண்பரைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு தனி மதிப்பும் மரியாதையும் இருவரிடையேயும் உண்டாகும். இன்னம் ஒரு வேண்டுகோள், ஒவ்வொரு தமிழனும் இனிமேல் ஒவ்வொரு திருமணம், பிறந்த நாள் விழாவில் இப் புத்தகத்தை அன்பளிப்பாக கொடுக்கும் பழக்கத்தை உணடு பண்ணிக் கொள்ள வேண்டும்.

4) இயற்பியல் பாடங்களையும் அதனோடு இணைந்த 3 புத்தகங்களையும் தமிழாக்கம் செய்து அறிவியல் தமிழை உலகத் தரத்திற்கு உயர்த்தும் தங்களின் மூன்றாவது திட்டமானது மிகவும் பயனுள்ள முயற்சியாகத் தெரிகிறது. நிறைவேற்ற பொது மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்று சொன்னீர்க‌ள். த‌மிழ‌க‌த்தில் பொதுமக்களிடம் இத‌ற்கு வ‌ர‌வேற்பு எப்ப‌டியுள்ள‌து?

அழ.ராம்: - 2007ம் ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் இருபது பள்ளிக்கூடங்களில் (தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ) தனிப்பட்ட புரவலர்களால் ஒரு பள்ளிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடையில் இந்த இயற்பியல் திட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அதோடு ஒரு பிரபலமான தனியார் துறை நிறுவனமான‌ சென்னை நியுமெரிக் பவர் சிஸ்டத்தின் நிர்வாக இயக்குனர் திரு.ஆர்.செல்லப்பன் தனது விஞ்ஞானப் பணியாளர்களுக்கு இத்திட்டத்தை உபயோகப்படுத்த வசதிகள் செய்துகொடுத்துள்ளது. இதன்மூலம் அவர்களது கண்டுபிடிப்பு திறன் மேலும் வளரும் என நம்புகிறது. இன்னும் பலர் எம்மோடு தொடர்புகொண்டு முனைந்து வருகிறார்கள்.

5) இது குறித்து த‌மிழ‌க‌ அர‌சின் க‌ல்வித்துறை அதிகாரிக‌ளை அணுகினீர்க‌ளா? அவ‌ர்க‌ள் மூல‌மாக‌ மேனிலைப்ப‌ள்ளிக‌ளிலோ, க‌ல்லூரிக‌ளிலோ இதைக் கொண்டு செல்ல‌ முய‌ற்சித்தீர்க‌ளா?

அழ.இராம்:- இதுகுறித்து தமிழக திட்டக்கமிசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். மிகுந்த ஆர்வத்தோடு பரிந்துரை செய்து எங்களது திட்டக்கோரிக்கையை கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்துள்ளார்கள். அதன்பின் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி மற்றும் திரு.தங்கம் தென்னரசு ஆகியோரையும் நேரில் சென்று பார்த்து நினைவு படுத்தினேன். இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.

பாண்டிச்சேரி அரசின் கல்வி அமைச்சர் திரு.ஷாஜகான் அவர்களையும் சந்தித்து இத்திட்டம் பற்றிவிளக்கினேன். அவர் மிகுந்த ஆர்வம் கொண்டு மூன்று முறை அழைப்புவிடுத்து கல்வியாளர்களையும், நூல்நிலைய நூலகர்களையும், சந்தித்து திட்டம் பற்றி விளக்க உதவி செய்தார்கள். இப்போது புதுச் சேரியில் உள்ள அனைத்து (50) நூலகங்களிலும் இத்திட்டத்தை நிறைவுபடுத்த ஆலோசித்து வருகிறார்கள். கூடியவிரைவில் புதுச்சேரி பொதுமக்களின் இயற்பியல் அறிவுத்திறன் உலகத் தரத்திற்கு உயர வாய்ப்புகள் பெருகும் என நம்புகிறேன்.

சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கை நடத்தும் தமிழ்நாடு விஞ்ஞான வளர்ச்சித்துறை இயக்குனரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அங்கும் இத்திட்டம் நிறைவேற்றப்படலாம். தமிழ்நாட்டில் எல்லாமே மெதுவாக நகர்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

6) த‌மிழ‌க‌ அர‌சில் பாட‌த்திட்ட‌க்குழுவொன்று உள்ள‌து. அவ‌ர்க‌ளை நீங்க‌ள் அணுகினால் இத‌ன் நோக்கம் நிறைவேற‌ வாய்ப்புள்ள‌தே?

அழ.இராம்:- எந்தவகையிலும் பாடத்திட்டத்தோடு முரணுடையது அல்ல; பாடத்திட்டத்திற்கு இணங்க உண்டாக்கப்பட்டதுமல்ல. இயற்பியல் எந்த ஒரு நாட்டுப் பாடத்திட்டத்திற்கும் கட்டுப்பட்டதல்ல. இத்திட்டம் உலகத் தரத்திற்கு ஏற்ப நிறைவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் பாடத் திட்டத்திற்கு மேலே இயற்பியல் திறனை வளர்க்க உதவும். அதுவும் ஒலி, ஒளி காட்சி வழியாகவும், எழுத்துவடிவிலும் பாடம் புகட்டிச் செல்கிறது.

இத்திட்டம் தமிழக பாடத்திட்டத்தை எந்தவகையிலும் மாற்றச் சொல்லவில்லை. பாடத்திட்டத்தோடு தேர்வு முறை அடிப்படையில் அல்லாது இயற்பியல் கருத்துக்களை எளிதில் காட்சி வழி விளக்கி இத்திட்டம் செயல்படுகிறது. அதே சமயம் பாடத்திட்டம் உபயோகிக்கும் அனைத்து தமிழ் கலைச் சொற்களையும் எமது இயற்பியல் திட்டம் கையாள்கிறது. ஆகவே பாடத்திட்டத் துறையோடு கலந்து செயல்படவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. இத்திட்டத்தின் மூலம், பாடத்திட்ட வரைமுறைகளில் எதிலும் மாற்றம் இல்லாமல் அரசின் பாடங்கள் மேலும் எளிதாக புரிய வழி உண்டாகும்.

7) பொதும‌க்க‌ளையோ, க‌ல்வித்துறை அதிகாரிக‌ளையோ நீங்க‌ள் ச‌ந்திக்கும்போது இது நல்லமுயற்சி என்று சொன்னாலும் அர‌சு அம‌ல்ப‌டுத்த‌வேண்டிய‌து என்று ஒதுங்கும் வாய்ப்புள்ள‌தால் நீங்க‌ள் க‌ல்வித்துறை அமைச்ச‌ரையோ, த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரையோ அணுகும் எண்ண‌முள்ள‌தா?

அழ.இராம்:- இத்திட்டம்பற்றி உரையாட தமிழக முதல்வரை சந்திக்க முயற்சிகள் எடுத்தேன். இதுவரை அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. கல்வித்துறை அமைச்சரை மட்டும்தான் நேரில் கண்டு பேச அனுமதி கிடைத்தது.

8) வருங்காலத் திட்டமான 133 திருக்குறள் மந்திரங்களை வண்ணம் தீட்டும் 4மொழி வெளியீடு எந்த அளவில் உள்ளது?

அழ.இராம்:- திருக்குறள் மந்திரங்களை நான்கு மொழிகளில் வெளியிடும் திட்டம் 2008ம் ஆண்டு நிறைவு பெறும். ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பும் பிரெஞ்ச் மொழிபெயர்ப்பும் நடைபெற்றுக்கொண்டுவருகிறது. இந்தப் பேட்டியை வலையில் படிக்கும் நேயர்களில் யாரேனும் பிரெஞ்ச், ஸ்பானிஷ் மொழிபெயர்ச்சி உடையவர்கள் என்றால் thiru@kural.org என்ற மின்னஞ்சல் மூலம் உதவி செய்ய முன்வரலாம்.

9) 133 திருக்குறள் மந்திரங்களை சிறு கதையாக புத்தக வடிவில் தயாரித்தளிக்கும் பணியைச் செய்வது யார்? அது எந்த நிலையில் உள்ளது? இதற்குரிய சிறுகதைகளை யாரேனும் எழுதிக்கொடுக்க முன்வந்தால் அந்த எண்ணமுடையவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ளலாமா?

அழ.இராம்:- திருக்குறள் மந்திரங்களுக்கான சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டும், எழுதச் சொல்லப்பட்டும் வருகிறது. உங்களில் யாரேனும் எழுத முன்வந்தால் வாய்ப்புகள் கொடுத்து வரவேற்போம். உடனே என்னை thiru@kural.org என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.

10) தமிழ்ப் பண்பாட்டின் இசை-நாட்டிய-நாடகக் கூறுகளை ஒலி-ஒளி வடிவில் தகவல் களஞ்சிய குறுந்தகடுகளாக தரும் முயற்சியில் திரைப்பட நடிகநடிகையரை ஈடுபடுத்தும் எண்ணமுள்ளதா?

அழ.இராம்:- இன்றைய தமிழ்நாட்டில் திரைப்பட கலைஞர்கள்தான் அதன் தலைவிதியை நிர்ணயித்து வருகிறார்கள். ஊடகங்கள் முழுவதும் அவர்களைப் பற்றிய செய்திகளும், அரசியலில் அவர்களது தலைமை போட்டிகளும், மத, ஆன்மீக பண்பாட்டுக் கூறுகளில் அவர்களது பாதிப்பும் அளவுக்குமேல் காணப்படுகிறது.

அதனைப்பின்பற்றி தமிழ் நாட்டின் இசை - நாட்டிய - நாடகச் செய்திகளை இன்னும் ஒரு திரைப்பட பின்புல பாதிப்புடன் செய்ய விழையவில்லை. சில சமயங்களில் தமிழும், தமிழ் இசையும், தமிழ்ப் பண்பாடும் தேடினாலும் திரைப்படத் துறையில் இன்று கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆகவே எங்களது ஒலி, ஒளி குறுந்தகடுகள் திரைப்பட ஊடகத்திற்கும் அப்பால் சென்று, தமிழகப் பண்பாட்டுப் பின்னணியில் செயல்படும்.

11) இதுவரை சாதித்தது என்ன? இனி சாதிக்கப்போவது என்ன?

அழ.இராம்:- கடந்த இருபது ஆண்டுகளாக இந்த அறக்கட்டளையைப் பற்றிச் சொல்லி ஆதரவு தேடும் பணிமூலமாக தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளுக்கும் மூன்று முறை சென்று வந்தேன். ஒத்த மனம் உள்ள தமிழர்கள் அங்கெல்லாம் இருக்க காணும் பேறு பெற்றேன். அவர்கள் எல்லாம் எனக்கு தமிழ் தந்த உறவு. குறிப்பாக அவர்களை எல்லாம் பற்றி திருக்குறள் புத்தகத்தின் இறுதிப் பகுதியில் நன்றி கூறியுள்ளேன். நேயர்கள் அனைவரும் மேலதிக விபரங்களுக்கு அங்கு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

12) உங்கள் கருத்துக்கு ஒத்த எண்ணத்தோடு உடன் வந்தவர்கள் குறித்து உங்களுக்குள் மலரும் நினைவுகள் இருக்கும். அவர்கள் குறித்துப் பகிர்ந்துகொள்ள இயலுமா?

அழ.இராம்:- இந்தப் பொதுப்பணியில் என் மனதை நெகிழ்வித்த ஒன்றல்ல இரண்டு சம்பவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒன்று, திருக்குறள் புத்தக வெளியீட்டிற்கு முன் அத‌ன் நிமித்தம்சிங்கப்பூர் வானொலி நேர்காணல் நிகழ்ச்சியில் நடந்தது. இரவு 10.30லிருந்து 12.00 மணிவரை நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கேள்விகள் கேட்டு பங்கேற்றார்கள். அவர்களை எல்லாம் இத் திட்டத்திற்கு ஆதரவு தந்து ஊக்குவிக்குமாறு வேண்டினேன். அதன் பின்னர் நான் சிகாகோ வந்தடைந்தபோது என் மனதை நெகிழ்வித்த சம்பவம் நடைபெற்றது. தபால்களை திறந்து பார்த்தபோது பெயரைச் சொல்லாமல் முகவரியும் இல்லாமல் "ஒருவர்" என்னையும் என் பணியையும் வாழ்த்தி எந்த இடையூறு வந்தாலும் சளைக்காமல் எதிர்நின்று இந்தப்பணியை முடித்துவிடுங்கள் எனக்கேட்டு அதற்காக 5000 சிங்கப்பூர் டாலர்கள் கொண்ட ஒரு மணி ஆர்டரையும் இணைத்து அனுப்பி இருந்தார். இதுநாள்வரை அவரைத் தேடி வருகிறேன். அவரை அடையாளம் காண இயலவில்லை. இதனை அவர் படித்தால் உடனே என்னோடு தொடர்புகொள்ளக் கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டு, திருக்குறள் நூல் வெளியீடு அன்று அதன் முதல் பிரதியை மேதகு திரு.கலாம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள யார் தகுதியுடையவர் என தேடியபொழுது கிடைத்தவர் கேரளநாட்டு மடபதி சிவானந்தர் ஆவர்கள்.அவர் ஆதிசங்கரர் பிறந்த காலடிக்கருகே உள்ள ஊரில் இன்று ஒரு பெரிய இயக்கத்தையே வள்ளுவர் காட்டிய வழியில் நின்று திருக்குறளை வேதப்புத்தகமாகக் கொண்டு நடத்தி வருகிறார். அவரோடு இன்று 30,000 கேரளமக்கள் சார்ந்து இருக்கிறார்கள். அவரை நேரில் காணச் சென்றேன். அவரோடு ஒருநாள் முழுதும் இருந்துவந்தேன். அந்தமகா பெரியவருக்கு அந்தமுதல் பிரதியை திரு.கலாம் கொடுத்தபொழுது என் மனது நெகிழ்ந்தது!
ஒரு வியப்பூட்டும் செய்தி! அவர்களது வேதப்புத்தகம் மலையாள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம்!

13) வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நீங்கள் தெரிவிக்கும் செய்தி என்ன?

அழ.இராம்:- தமிழர்கள் ஒரு மொழியினர்! ஆனால் பலநாட்டினர், என்ற நோக்கோடு வாழ வேண்டும். குழுக்கள் குழுக்களாக வாழாமல் கூடி வாழ வேண்டும். தமிழர்கள் எச்சாதியினர் ஆயினும் எந்த மதத்தவராயினும் திருக்குறளை பொதுமறையாகவும் மற்றைய மறைகளை தனிமறைகளாகவும் ஏற்று வாழவேண்டும். திருக்குறள் தான் தமிழர்களது மையப்புள்ளி. அப்புள்ளியைக்கொண்டு வரையப்படும் தமிழ் வட்டம் எல்லா சாதியினரையும், மதத்தினரையும், நாட்டினரையும், இனத்தினரையும் ஏற்ப பிரிவடையும் சக்தியுள்ளது. மற்ற வட்டங்களில் தமிழர்கள் இயங்கினால் இணையும்பொழுது முட்டிக்கொள்வார்கள்; உடைந்தும் போவார்கள். உலகநாடுகளில் எங்கினும் ஒரு தமிழன் இன்னலுற்றால் அவனுக்காக கண்ணீர் சிந்த ஏணைய தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அவர்களது பாதுகாப்பு. வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!! நன்றி.


albertgi@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner