இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2008 இதழ் 107  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசியல்!

உறுதியான இந்தியாவும், ஈழத்தமிழர்களின் அரசியற் பிரச்சினையும்!

தமிழகத்தில் மீண்டும் ஈழத்தமிழர்கள் சார்பான ஆதரவுக் கூட்டங்களும், உண்ணாவிரதச் செயற்பாடுகளும் , கடையடைப்புகளும் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினராலும் மேற்கொள்ளப்பட்டு வருமொரு சூழல் பல வருடங்களுக்குப் பின்னர் ஏற்பட்டிருப்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் ஆதரவினையளிக்குமொரு விடயம். அதேச்மயம் ஈழத்தமிழர்களின் பிரச்சினையினைத் தமிழக அரசியல்வாதிகள் சிலர் தமது அரசியல் சுய இலாபங்களுக்காகப் பயன்படுத்தவிளைவதைப் பார்க்கிறோம். அதே சமயம் முன்னாள் முதல்வரான செல்வி ஜெயலலிதாவுக்குக் கொலை மிரட்டல் விடப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். இவையெல்லாம் மீண்டும் ஈழத்தமிழர்கள் மீதான தமிழக மக்களின் உணர்வலைகளைத் தடுத்து நிறுத்தி விடும் அபாயத்தினையும் கோடுகாட்டி நிற்கின்றன. இதற்குத் தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கும் செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். ஈழத்துத் தமிழ் அரசியல் அமைப்புகள் தமிழக அரசியல்வாதிகளின் போட்டி , பூசல்களுக்குள் மூக்குகள் நுழைப்பதை நிறுத்தவேண்டும். அதற்குப் பதிலாக அவர்களின், தமிழக அரசியல்வாதிகளின், ஒற்றுமையான ஆதரவுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். கருத்துகளைக் கருத்துரீதியாக அணுக வேண்டும்.

ஈழத்துத் தமிழர்களின் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாதென்ற கருத்துள்ள கூற்றுகள் இந்திய, தமிழக அரசியல்வாதிகள் சிலரால் தெரிவிக்கப்ப்ட்டிருக்கின்றன. அதே சமயம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பின் பொருட்டு, ஸ்ரீலங்கா அரசானது சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவியினைப் பெறாமலிருப்பதற்காக அதனை, ஸ்ரீலங்கா அரசினைத், தம்பக்கம் இழுத்து வைப்பதற்காக இராணுவ உதவிகள் வழங்க வேண்டுமென்ற கருத்துள்ள கூற்றுகள் இந்திய அரச அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. முதல் கூற்றினைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களின் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினையென்ற நிலையிலிருந்து சர்வதேச அரசியல்பிரச்சினைகளிலொன்றாகப் பரிணாமமடைந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன. 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து இந்தியாவுட்பட அண்மைய நோர்வே ஆதரவுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் வரை நடைபெற்ற சர்வதேச அரசியற் செயற்பாடுகள் பின் எதனைப் புலப்படுத்துகின்றன? இந்நிலையில் ஈழத்துத் தமிழ மக்களின் பிரச்சினைகளை உள்நாட்டுப் பிரச்சினையாக ஒதுக்கிவிட முடியாது. அதிலும் இந்தியா தன் படைகளை அனுப்பி ஈழத்தமிழர்கள் விடயத்தில் செய்து கொண்ட ஒப்பந்தம் கிழிக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்படாமலிருக்குமொரு நிலையில் இன்று ஈழத்தமிழர்களின் பிரச்சினையை உள்நாட்டுப் பிரச்சினையாகக் காரணம் காட்டி தட்டிக் கழிப்பது நகைப்புக்கிடமானது.

இதே சமயம் இன்னுமொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். தெற்காசியாவின் வல்லரசான இந்தியாவின் குடிமக்களில் ஒருபிரிவின்ர் மீது , அதாவது தமிழகக் கடற் தொழிலாளர்கள்மீது, இலங்கை அரசின் கடற்படையினர் மேற்கொண்டுள்ள தாக்குதல்களில் இதுவரையில் நூற்றுக் கணக்கானவர்கள் பலியாகியுள்ளார்கள். தமிழர்களென்ற காரணத்தினால்தான் அவர்கள் பற்றிய விடயத்தை இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் புறக்கணிக்கிறார்களா? அந்த அப்பாவி மக்களை இந்தியர்களென்று கருதியிருந்தால் , இந்திய மத்திய அரசானது மிகக் கடுமையான அரசியற் செயற்பாடுகளை எடுத்திருக்க வேண்டும். ஏன் எடுக்கவில்லை? அவ்விதம் எடுக்காமல் தொடர்ந்தும் , தன் மக்களைக் கொன்று குவிக்கும் அரசொன்றுக்கு எதற்காக இராணுவ உதவிகளை வழங்கி வர வேண்டும்?

தவிர, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு மிக முக்கியமானதொன்று தமிழகத்தில் பிரிவினைக் கோசம் எழாமலிருப்பதாகும். ஈழத்தமிழர்களின் மீதான இராணுவ ரீதியிலான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசியல்ரீதியிலான தீர்வினையொட்டிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாமல், விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கிறோமென்ற கோதாவில் இன்றைய இலங்கை அரசின் இராணுவத் தீர்வுச் செயற்பாடுகளுக்கு உதவி வழங்கும் இன்றைய இந்திய அரசின் செயற்பாடுகள் தொலைநோக்கில் ஆரோக்கியமற்றவை. பாரதத் தமிழர்களைப் பிரிவினை பற்றிச் சிந்திக்கத் தூண்டும் தன்மையினைக் கொண்டவை. இதனை இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் அறியாமலிருப்பது விந்தையானது.இலங்கை அரசானது சீனா மற்றும் பாகிஸ்தான் அரசுளின் உதவிகளை நாடுவதாக நகர்வுகளை முன்வைப்பதன் நோக்கமே இந்தியாவைத் தன காலடியில் விழ வைப்பதன் பொருட்டுத்தான். இதனைப் புரிந்து கொள்ளாமல் இந்திய அரசானது இலங்கை அரசுக்கு வளைந்து கொடுப்பதானது சிரிப்புக்கிடமானது. இவ்விதம் வளைந்து கொடுப்பது இந்திய தேசிய
நலன்களுக்காகவென்பது அதைவிட நகைப்புக்கிடமானது. ஏனெனில் இந்திய தேசிய நலன்களுக்கு மிகவும் ஆபத்தானது தமிழக மக்களைப் பிரிவினை நோக்கிச் சிந்திக்க வைக்கும் நடவடிக்கைகள். இத்தகைய அரசியற் செயற்பாடுகள்தான் காலப்போக்கில் தமிழகத்தமிழர்களைப் பிரிவினை நோக்கிச் சிந்திக்க வைக்குமென்ற அடிப்படை உண்மையினைக் கூட அறிய முடியாதபடி இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களிருப்பது ஆச்சரியமளிப்பது. யானை தன் தலைக்குத் தானே மண்வாரிப் போடுவதென்பது இதனைத்தானோ? மேற்படி ஈழத்தமிழர்களின் பிரச்சினை காரணமாக இதுவரையில் நூற்றுக் கணக்கில் அப்பாவிகளான தமிழக மீனவர்கள் பலியாகியுள்ளார்கள். இந்நிலையில் தமிழக அரசியல்வாதிகளோ அல்லது இந்திய மத்திய அரசியல்வாதிகளோ, அதன் கொள்கை வகுப்புச் செயலர்களோ ஒதுங்கியிருக்க முடியாது.ஆயினும் இன்றைய இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களின் புத்தி சாதுரியமற்ற அரசியல் நகர்வுகள் அதனைத்தான் செய்கின்றன. நவீன உலக அரசியலரங்கில் வளர்ந்து வரும் பிரதான வல்லரசுகளிலொன்றான இந்தியாவை உடைப்பதே சீனாவை உடைப்பதைவிட இலகுவானதெனக் கருதிச் சந்தர்ப்பம் பார்த்து நகர்வுகளை நகர்த்தும் மேற்குலக அரசியல் *சாணக்கியர்களுக்கு இன்றைய இந்திய அரசின் கொளகை வகுப்பாளர்களின் இலங்கை அரசு சார்பான நகர்வுகள் பெரிதும் உற்சாகத்தைக் கொடுக்கும் செயல்கள். இனித் தமிழகத்தில் பிரிவினையைத் தூண்டும் நடவடிக்கைக்கு எண்ணெய் ஊற்றி எரிக்கும் பணியில் அவர்கள் மும்முரமாகக் கவனத்தைச் செலுத்தக் கூடும்.

தெற்காசிய வல்லரசான பாரதத்திற்கும், இலங்கை அரசுக்குமிடையில் உருவான 1987 சமாதான ஒப்பந்தத்தை இலங்கை அரசு இதுவரையில் நடைமுறைப்படுத்தவில்லையென்பது மட்டுமல்ல மீறியும் விட்டது. வடகிழக்கைப் பிரித்தும் விட்டது. இந்நிலையில் அந்த ஒப்பந்தத்தை மீறிய ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல், தொடர்ந்தும் ஈழத்தமிழ மக்கள்மீது இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து அப்பாவித்தமிழர்களைக் கொன்று குவிக்கும் அரசொன்றுக்குச் சார்பான , தன் சொந்த மக்களின் ஒருபகுதியினரின் (தமிழக மக்களின்) அரசியல் அபிலாசைகளைப் புறக்கணிக்கும் வகையிலான அரசியற் செயற்பாடுகளை இந்திய மத்திய அரசானது தொடர்ந்தும் முன்னெடுத்து வருவது ஒற்றுமையான, வலிமையான இந்தியாவுக்கு தொலைநோக்கில் ஆரோக்கியமானதல்ல. உறுதியான இந்தியாவின் எதிர்காலம் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்விலேயே தங்கியுள்ளது. ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டு , இராணுவத்தீர்வின் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முனையும் இலங்கை அரசின் செயற்பாடுகளும், அதற்கு மறைமுகமாகத் துணை போகும் இன்றைய இந்திய அரசின் செயற்பாடுகளும் நிலையான வெற்றியினையோ, சமாதானத்தையோ வழங்கப் போவதில்லையென்பதுதான் வரலாறு நமக்குக் கற்றுத் தரும் பாடம். ஏனெனில் ஒரு சில இளைஞர்களின் முயற்சியுடன் தொடங்கிய ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அன்றைய நிலையில் ஸ்ரீமா அம்மையாரின், 'தம்மிஷ்ட்டர்' ஜே.ஆரின் அரசுகள்
மிகவும் பலம் வாய்ந்த இராணுவ பலத்துடன் அடக்க முனைந்தனவே முடிந்ததா? முடியவில்லையே. இன்றெவ்விதம் முடியும்? ஏனெனில் அன்றைய இலங்கை அரசுகளுக்கும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் அமைப்புகளுக்குமிடையிலான இராணுவ பலத்திலிருந்த வித்தியாசங்களுடனொப்பிடுகையில் இன்று இலங்கை அரசின் படைகளுடன் மோதும் விடுதலைப் புலிகள் மிகவும் வலிமையாகவிருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கிடையில் உள்முரண்பாடுகளை வளர்த்து, அதன் மூலம் தமிழ்ப் பகுதிகளில் , ஏன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கூட இலங்கை இராணுவம் வலிந்து தமக்குச் சார்பான அரசு இயந்திரங்களை நிறுவலாம். ஆனால் அவை நீண்ட கால அடிப்படையில் வெற்றியளிக்கப் போவதில்லை. ஏனெனில் இன்று கிழக்கில் மீண்டும் தமது கொரில்லாத் தாக்குதல்களை ஆரம்பித்திருக்கும் விடுதலைப் புலிகள் மீண்டும் தமது வழமையான கொரில்லாத் தாக்குதல்களை வட கிழக்கெங்கும் தொடர்வார்கள். தொடர்ச்சியான அத்தகைய தாக்குதல்களை இலங்கை அரசால் ஒருபோதுமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினை அடையாமல் தீர்க்க முடியாது. நிறுத்த முடியாது. இதுவரை ஆட்சியதிகாரத்திலிருந்த, இருக்கின்ற இலங்கை அரசுகளின் தவறான அரசியற் செயற்பாடுகள்தான் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசப் பிரச்சினைகளிளொன்றாக இன்று மாற்றி விட்டிருக்கின்றன. இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு உடனடியான தீர்வு சகல தரப்பினரும் இராணுவ ரீதியிலான செயற்பாடுகளை நிறுத்தி, மீண்டும் அமைதிக்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதுதான். தமிழ் அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகள் நட்புரீதியில் தீர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மேற்படி பிளவுகளை ஆளும் அரசியல் இயந்திரங்கள் தொடர்ந்தும் தமது நலன்களுக்காகப் பயன்படுத்தி வரும் செயற்பாடுகள் தொடரவே செய்யும். உறுதியான இந்தியாவுக்கு, உறுதியான இலங்கைக்கு அவசியமான அடிப்படையான அரசியல் நகர்வுகளிவை. இவை முன்னெடுக்கப்படாமல் போகும் நிலையில், இல்ங்கை ம்ட்டுமல்ல இந்தியாவும் அதன் தொடர்ச்சியாகப் பிளவுறும் அபாயமொன்றுண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

- நந்திவர்மன் -

*http://www.geotamil.com/pathivukal/india_southasia_tamils.htm


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner