இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2008 இதழ் 100  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நேர்காணல்!
நவீன தமிழ்க் கவிதைகளும், நானும்!
கவிஞர் கோ.கண்ணனுடன் ஒரு சந்திப்பு!

- நேர்காணல் - லதா ராமகிருஷ்ணன் -


கவிஞர் கண்ணன்சமீபத்தில் விருட்சம் வெளியீடாக வந்துள்ள 'மழைக்குடை நாட்கள்' என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் கோ.கண்ணன் தர்மபுரி அரசுக் கல்லூரியில் தமிழ்த் துறையில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். -சமீபத்தில் விருட்சம் வெளியீடாக வந்துள்ள 'மழைக்குடை நாட்கள்' என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் கோ.கண்ணன் தர்மபுரி அரசுக் கல்லூரியில் தமிழ்த் துறையில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். 1969ம் ஆண்டு பிறந்த கண்ணனுக்கு மிக இளம் வயதிலேயே பார்க்குந்திறன் பறிபோய்விட்டது என்றாலும் அதையும் மீறி கல்லூரிப் படிப்பை முடித்தவர். தர்மபுரி மாவட்டத்திலேயே பி.ஹெச் டி பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற மாணவர் இவர் தான்.

'தமிழ் நாவல்களில் தலைமுறை இடைவெளி' என்ற பொருளில் இவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வேடு காவ்யா பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. நவீன கவிதைகளை வாசிப்பதிலும், எழுதுவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் கண்ணன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இலக்கிய நிகழ்வுகளுக்குத் தவறாமல் போய் வருகிறார்.

மனைவி, மூன்று குழந்தைகள், தாய், தந்தை, சகோதரியோடு வசித்து வரும் கோ.கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு 'ஓசைகளின் நிறமாலை' 2006 அக்டோபரில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது. வருடாவருடம் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்து புதிதாக வெளியாகியிருக்கும் தமிழ் இலக்கியப் புத்தகங்களை வாங்கிச் செல்வது கண்ணனின் வழக்கம். புத்தகங்கள் கையிலிருந்தாலும் அவற்றை படித்துக் காட்ட உரிய ஆள் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம். ஆனால்,இந்த வருடம் ஜனவரியில் நடந்தேறிய புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் 'ஆடியோ காசட்' வடிவில் தமிழின் சில குறிப்பிடத்தக்க படைப்புகளை அறிமுகப்படுத்தியிருந்தது! எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, அசோகமித்திரன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன்,
புதுமைப்பித்தன் முதலியோரின் படைப்புகள் காசட்டில் கிடைத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், தான் அவற்றில் சிலவற்றையும், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு போன்ற நூல்கள் சிலவற்றையும் கிழக்கு பதிப்பக ஸ்டாலில் இருந்து வாங்கிக் கொண்டு போய் கேட்டு மகிழ்ந்ததாகவும் கூறும் கண்ணன் இதுபோல் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஒலிப்பேழைகள் வெளியிடப்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்று
கருத்துரைக்கிறார். தவிர, வாங்கிய ஒலிப்பேழைகளில் சா.கந்தசாமி, ஜெயகாந்தன், ஆதவன் முதலியோரின் படைப்புகள் சீரிய முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சே குவேரா, காஸ்ட்ரோ, முதலிய நூல்கள் சரியாக ஒலிப்பதிவு செய்யப்படவில்லை. இந்தக் குறைபாடு நீக்கப்பட வேண்டியதும், தவிர்க்கப்பட வேண்டியதும் அவசியம் என்றும் தெரிவிக்கிறார்.

'மழைக்குடை நாட்கள்' என்ற அவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பில் அவருடைய பேட்டி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. கவிஞர். கோ.கண்ணனின் அந்த பேட்டியும், அவருடைய கவிதைகள் சிலவும் இங்கே தரப்பட்டுள்ளன.கண்ணனின் கவிதைத் தொகுப்பு கிடைக்குமிடம் : நவீன விருட்சம் (ஆசிரியர் அழகியசிங்கர்: 9444113205)

கண்ணனின் கைபேசி எண்: 9443786921
விலாசம் : கோ.கண்ணன்
மூத்த விரிவுரையாளர்
தமிழ்த் துறை
அரசு கலைக் கல்லூரி
தர்மபுரி மாவட்டம்
தமிழ்நாடு


நவீன தமிழ்க் கவிதைகளும், நானும்!
கவிஞர் கோ.கண்ணனுடன் ஒரு சந்திப்பு

- நேர்காணல் - லதா ராமகிருஷ்ணன் -


லதா ராமகிருஷ்ணன்: எப்பொழுதிலிருந்து எழுதத் தொடங்கினீர்கள்?

கவிஞர் கண்ணன்எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன்:கவிஞர் கோ.கண்ணன்: முனைவர் பட்டம் பெற்ற பிறகு தான் எழுதத் தொடங்கினேன். இலக்கிய ஆர்வம் என்பது பள்ளிநாட்களிலிருந்தே ஆரம்பித்து விட்டது.நேரமும், வாய்ப்பும் கிடைக்கும்போதெல்லாம் பிறரை வாசிக்கச் சொல்லிக் கேட்பேன், அல்லது, ப்ரெய்ல் எழுத்தில் கிடைக்கும் புத்தகங்களை வாசிப்பேன். கல்லூரி இதழ்களில் எழுதியதுண்டு. முதுகலைப் பட்டப்படிப்பு சமயம் கல்லூரியில் நடந்த கவிதைப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு வாங்கினேன். என்றாலும், அப்போது எழுதியவற்றை யெல்லாம் தரமான கவிதைகள் என்று சொல்ல முடியாது.

லதா ராமகிருஷ்ணன்: நவீன தமிழ்க் கவிதையுலகம் உங்களுக்கு எப்படிப் பரிச்சயமாயிற்று?

கவிஞர் கோ.கண்ணன்: ஆரம்பத்தில் நானும் வெகுஜனப் பத்திரிகைகளில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த கவிதைகளைத் தான் படித்துக் கொண்டிருந்தேன். முதுகலைப் பட்டப்படிப்பை தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அங்கே திரு.பாரதிபுத்ரன் வாராவாரம் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்தி வந்தார். அது எனக்கு நவீன கவிதைகளின் அறிமுகத்திற்கான, ஆர்வத்திற்கான வித்தாக அமைந்திருக்கலாம். தர்மபுரி
அரசுக் கல்லூரியில் தமிழ்த் துறையில் ஆசிரியப் பணி கிடைத்த பிறகு, 1994ம் ஆண்டு வந்து சேர்ந்த ஜவஹர் என்ற மாணவர், இன்றளவும் என்னுடைய அருமை நண்பராயிருப்பவர், பல நவீன தமிழ்க்கவிதைத் தொகுதிகளை எனக்கு வாசித்துக் காட்டினார். முனைவர் பட்டம் பெற அவர் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற பிறகும் எனக்கு தொடர்ந்து பல நவீன தமிழ்க் கவிதைகளை அறிமுகம் செய்து வருகிறார். கவிஞர் அபியின் கவிதை தொகுப்பு தான் நான் வாசித்த குதல் நவீன கவிதைத் தொகுதி. பிறகு, பிரம்மராஜன், குட்டி ரேவதி என பலரின் கவிதைத் தொகுப்புகள்
பரிச்சயமாயின்.

லதா ராமகிருஷ்ணன்: நவீன தமிழ்க்கவிதைகள் உங்களிடம் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தின?

கவிஞர் கோ.கண்ணன்: இந்த வகையான கவிதைகளைப் படிக்க ஆரம்பித்ததும், அதற்கு முந்தி கவிதைகளாக அறியக் கிடைத்திருந்த, அலங்கார வார்த்தைகளும், மிகையுணர்ச்சிகளுமாயிருந்த கவிதைகளை என்னால் ரசிக்க முடியாமல் போனது. ஒரு புதினத்தையோ, அல்லது, சிறுகதையையோ படிக்கும்போது நமக்கு நேரிடையான, தெளிவான ஒற்றை அர்த்தப் பிரதி கிடைகிறது. அப்படியில்லாமல் நிஜமான நவீன தமிழ்க்கவிதை ஒவ்வொரு வாசிப்பின்போதும் புதிய புதிய அர்த்தத்தை விரித்து வைப்பது என்னை இந்தவகைக் கவிதையின்பால் அதிகதிகமாக
ஈர்த்தது. நவீன தமிழ்க்கவிதையிலுள்ள தேடலும் என்னை அதன்பால் ஈர்க்கும் அம்சமாக விளங்குகிறது.

லதா ராமகிருஷ்ணன்: நவீன தமிழ்க்கவிதைகளில் இருண்மை நிரம்பியுள்ளது என்று கூறப்படுவது பற்றிய உங்கள் கருத்து என்ன?

கவிஞர் கோ.கண்ணன்: இருண்மை என்ற வார்த்தையை கவிதைக்குப் பயன்படுத்துவதே தவறு. மற்றபடி, சங்கக் கவிதைகளிலேயும், சித்தர் பாடல்களிலேயும் கூட பூடகத்தன்மை உண்டுதானே! லா.சரா. முதலில் புரியவில்லை. அதனால், பிடிக்கவில்லை. இப்பொழுதும் முழுக்கப் புரிந்ததென்று சொல்ல முடியாது. ஆனால், பிடிக்கிறது. ஏனெனில், இளங்கலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டில் இருந்ததைக் காட்டிலும் இப்போது நான் வளர்ந்து விட்டேனல்லவா!

லதா ராமகிருஷ்ணன்: ஏன் எழுதுகிறீர்கள்? எப்படி எழுதுகிறீர்கள்?

கவிஞர் கோ.கண்ணன்: மனசு அமைதியற்று இருக்கும்போது உள்ளே சிக்கலும், குழப்பமுமாக, புதிய உணர்வுகள் தோன்றும். சந்தோஷத்தை மற்றவர்களோடு சுலபமாகப் பகிர்ந்து கொள்ள முடியும். துக்கத்தை முடியாது. அப்படியே பகிர்ந்து கொண்டாலும் மற்றவர்கள் அதை புலம்புவதாகப் பகுக்கக் கூடும். எனவே, என்னுடைய உணர்வுகளையும், வலி வேதனைகளையும் என்னோடு நானே பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக கவிதை எழுதுகிறேன்.

லதா ராமகிருஷ்ணன்: ஒரு விஷயம் மனதை அலைக்கழிக்கும்போது அது மனதிற்குள் ஒரு மூலையில் தன்னை கவிதையாக உருவாக்கிக்
கொண்டேயிருக்கும்.

கவிஞர் கோ.கண்ணன்: மனதில் உருக்கொள்ளும் வரிகளை 'ப்ரெயில் டைப்ரைட்டரில் எழுதி கொண்டு விடுவேன். கல்லூரியிலும், 'ப்ரெயில்' எழுத்தாணி இருக்கிறது. அதைக் கொண்டு அவ்வப்போது தோன்றும் வரிகளையும், அலைக்கழிக்கும் உணர்வுகளையும் பதிவு செய்து கொண்டு விடுவேன்.

நெருக்கமான நட்பினர் சிலரிடம் என்னுடைய கவிதைகள் குறித்து ஆலோசனைகள் கேட்பதுண்டு. அவர்கள் முன்வைக்கும் ஆலோசனைகள் உகந்ததாக இருப்பின் ஏற்றுக் கொள்வேன்.

நானேயும் சில வார்த்தைகளை மாற்றிச் செதுக்குவேன். வார்த்தைகளைச் செதுக்குதல் 'அணி'' என சங்க இலக்கியத்திலும் உண்டு.

லதா ராமகிருஷ்ணன்: உங்களுடைய முதல் தொகுதியான 'ஓசைகளின் நிறமாலை'யில் அதே தலைப்பிட்ட கவிதை ஒன்று இடம்பெறுகிறது.  உணர்வுகளை, ஒலிகளை நிறப்படுத்திப் பார்க்கும் அந்தக் கவிதையை எப்படி எழுதினீர்கள்?

கவிஞர் கோ.கண்ணன்: பார்வையற்றவர் என்ற அளவில் நான் படித்தது, கேட்டு உள்வாங்கிக் கொண்டது, உய்த்துணர்ந்து பார்த்தது, கற்பனை ஆகியவற்றின் கலவையாகத் தான் என்னால் இயற்கையை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. நூறு சதவிகிதம் அதை சரியாக உள்வாங்கிக் கொண்டதாகச் சொல்ல முடியாது.

The Blind Musician என்ற படைப்பில் ஒரு பார்வையற்ற கதாபாத்திரம் வரும். அவர் ஓசைகளோடு நிறங்களை அடையாளப்படுத்த பல உதாரணங்களைக் கூறுவார். அந்தக் கதையின் தாக்கமாகவும் என் கவிதையைச் சொல்ல முடியும். அந்தக் கதை தமிழில் ப்ரெயில் எழுத்தில் இருக்கிறது.

ஆனால், அந்தக் கதையின் தாக்கம் தான் என் கவிதை என்று எனக்குத் தெரிவதற்கு வெகு நாட்களாயிற்று.

சாலையில் நடக்கும் போது ஸ்கூட்டர் சப்தம் கேட்டது. கோயில் மணியோசை கேட்டது. இவற்றை நிறப்படுத்திப் பார்த்தால் என்ன என்று தோன்றியது.

லதா ராமகிருஷ்ணன்: 'அவரவருடைய, அல்லது, அவர்கள் சார்ந்த மனிதர்களுடைய பாதிப்புகளை எழுதுவது' என்பது பற்றிய உங்கள் கருத்து?

கவிஞர் கோ.கண்ணன்: நான் இந்த சமூகத்தில் பிறந்திருக்கிறேன், வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற அளவில் என் கவிதைகளில் கண்டிப்பாக சமூகத்துடனான என் தொடர்புறவாடல் உள்ளார்ந்த அம்சமாக இடம்பெற்றிருக்கும்,. அதேபோல், பார்வையின்மை குறித்த என்னுடைய எண்ணப்பதிவுகள் அகவய, புறவய அளவில் இடம்பெற்றிருக்கும். ஆனால், நான் அதைப் பற்றி மட்டும் தான் சிந்திப்பேன், சிந்திக்க வேண்டும், படைக்க வேண்டும் என்று
எதிர்பார்ப்பதோ, கட்டாயப்படுத்துவதோ சரியாகாது. அதேபோல், நான் பார்வையின்மையைப் பற்றி பேசினாலும் அது வேறொருவருக்கு வேறொரு வாசகப்பிரதியைத் தர வழியுண்டு. உதாரணத்திற்கு, என்னுடைய குறுங்கவிதை :

இருட்டில் படிக்கும் எமது விழிகள்

சுட்டு விரல்கள்

இது தாம்பத்ய உறவு குறித்த கவிதையாக ஒரு வாசகப்பிரதியை அளித்திருக்கிறது!

லதா ராமகிருஷ்ணன்: ஊடகங்கள் உடல் ஊனமுற்றவர்களைச் சித்தரிப்பது குறித்து ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?

கவிஞர் கோ.கண்ணன்: ஊடகங்கள் சரிவரச் சித்தரிப்பதேயில்லை. உடல் ஊனமுற்றவர்களை ஒரேயடியாக, மிகையுணர்ச்சி ததும்ப, தூக்கிப் பிடிக்கவும் வேண்டாம்; தூக்கிப் போடவும் வேண்டாம். சக மனிதர்களாக அவர்கள் சித்தரிக்கப்படுதலே ஆரோக்கியமான போக்கு. ஆனால், இத்தகைய அணுகுமுறை வெகு அரிதாகவே கைக்கொள்ளப்படுகிறது. மேலும், உடல் ஊனமுடையவர் ஒருவரைப் பற்றிய சித்தரிப்பு அத்தகைய ஊனமுடையவர் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஆகிவிடவும் கூடும். எனவே, ஊடகங்களிடம் இது பற்றிய கவனம் தேவை.

லதா ராமகிருஷ்ணன்: வாசிப்பையும், எழுத்தையும் எளிதாகச் செய்து வர முடிகிறதா உங்களால்?

கவிஞர் கோ.கண்ணன்: உண்மையிலேயே இது பெரிய சவால். அச்சில் எல்லாம் வருகிறது. என்றாலும், படித்துக் காட்ட ஆட்கள் கிடைப்பதில்லை. சமமான ஆர்வமும், மொழிப்புலமையும் உள்ள வர்கள் கிடைப்பது இன்னும் அரிது. பொதுவாக, படித்துக் காட்ட முன்வருபவர்கள் தங்களுக்கு ஆர்வமில்லாத விஷயங்களைப் படித்துக் காட்ட விரும்புவதில்லை.

லதா ராமகிருஷ்ணன்: கவிதை எழுதி முடித்த பிறகு என்னவாக உணர்வீர்கள்?

கவிஞர் கோ.கண்ணன்: எழுதும் வரை கவிதை என்னை அலைக்கழித்துக் கொண்டிருக்கும். எழுதிய பிறகு மனதில் அமைதி நிறையும். எழுத நினைத்ததை எழுதி விட்ட நிறைவு சில கவிதைகளில் கிடைக்கும். சிலவற்றில் கிடைக்காது.

கோ.கண்ணனின் கவிதைகள் சில:

1 ) அன்புமகள் ஜீவஓவியாவுக்கு..

கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவையினும்
செம்மையுறும் செய்வினை;
அணைத்திடுந்தோறும், அணைத்திடுந்தோறும்
மெய்யாய் மேனி உயிர்ப்புறும்
அமிர்தத் தழுவல்;

பன்மொழிப் பாவலர்க்கும்
பொருள் ஆழம் விளங்கா
மொழி கடந்த
நவீன கவித்துவ புதுமொழி;

தீது அற்ற ஒரு சித்தனும்
பித்துற்றுத் திகைத்துக் குழம்பும்
ஒரு பேதமைப் போக்கு;

மிக நுண்ணிய 'பாவம்' காட்டும்
அதி நூதன நர்த்தகியையும்
தோற்பிக்கும் எழில்மிகு நாடக மெய்ப்பாட்டு அசைவு;

உலோக உள்ளங்களையும்
உருக்கும் பண்களையும்
மண்ணாக்கும் மாசற்ற சிறு சிணுங்கல்;

இமாலயத் துயரையும் இடித்து நொடியில்
பொடியாக்கும் சிற்றிதழ் புன்னகை;


பின்னேழு பிறவியல்ல,
பேசறு பெருமானே,
ஏழாயிரங்கோடி பிறவி வேண்டும்
குழந்தைமையைச் சுவைக்க

2) மீன்களின் தாகம்

மீன்களுக்கு தாகமுண்டா?
உண்டு!
மான்களின் பசியைப் போல் வெளிப்படையானதல்ல
அது.
ஞானியர் தேடலைப் போல்
அந்தரங்கம் நிறைந்தது அது.
மீன்களின் தாகம் பற்றி
நீருக்கோ, நீர்நிலைகளுக்கோ, நீர்வாழ் உயிர்களுக்கோ
ஒருபோதும் கவலை இருந்ததில்லை.
அதனால் அவைகளுக்கு மீன்களின் தாகம் பற்றி
தெரிந்திருக்க நியாயமில்லை.
மீன்களின் தாகம் பற்றி எவருக்குப் புரியும்?
எவைகளுக்குத் தெரியும்?
எவெரேனும், எவையேனும் சுயம் கலைந்து
மச்ச அவதாரம் தரிப்பின்
தெரியக்கூடும் _
மீன்களின் தாகமும்,
மீன் உலக நிதர்சனமும்.


3) தோற்றப் போலிகள்

தொலைவில் இருந்து
செவிமடுத்தால்
பூமணக்கும் ( நாறும் ) வார்த்தை;
உடனிருந்து
உற்றுநோக்கினால்
பீநாறும் வாழ்க்கை.

4) அங்கீகரிக்கப்பட்ட நெருக்கடிநிலைப் பிரகடனம்

என் பெயர் தாங்கி வரும் அஞ்சல் உறைகள்
உம் பேய்ப் பசியால் திறக்கப்படுகின்றன.
பயமில்லை;
பாதகமுமில்லை.
விளைந்த வயலுள் புகுந்த மாட்டு மந்தையென
இமைப் பூக்கள் விரிந்து குவியுமுன்
உறைக்குள் உள்ளவை மேய்ந்து அசைபோட்டு
செரிக்கப்படுகின்றன!
இது மாயாஜாலமில்லை.

பறவைகள் பறந்ததன் தடயத்தை
வானிடை காண முடியாதது போல்
மீண்டும் அஞ்சல் உறைகள் ஒட்டப்படுகின்றன
புத்தம்புதிது போல்;
திணிக்கப்படுகின்றன என் கைகளில்.

என்னுடைய அலைபேசி நிகழ்வுகள்?
எனது மெய்ப்பாடுகள்?


-------------------

உண்ணல் முதல் மலங்கழித்தல் ஈறாக
தலைமுடி தொடங்கி காலடி வரை
அத்தனை செயல்பாடுகளும்
சர்வ அங்க அசைவுகளும்
உம் அநாகரீகக் 'காமரா'க் கண்களால்
வேவு பார்க்கப்படுகின்றன.

உம் உளச்சான்றின் உறுத்தல் தாளமாட்டாமையால்
என் தேக இடப்பெயர்ச்சிக்குப் பின்
என் நிழலைக் கைது செய்து
யுத்தவிசாரணை நிகழ்த்துகிறீர்கள் நீங்கள்.
என் இருப்பின் மேல்
பயங்கரக் குற்றம் சுமத்துகிறீர்கள்.
தண்டனையாக நெருக்கடிநிலையும்
பிரகடனப்படுத்துகிறீர்கள்;
நன்று! மிக நன்று! ஆட்சேபம் துளியுமின்றி
ஆமோதிக்கிறேன்
உம் நெருக்கடி நிலையை.
உம் பொய்க் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டு அல்ல _
ஒரு மனநோய் மருத்துவமனை
சீரழியலாகாது என்ற பொதுநல நோக்கம் கருதியே.


ramakrishnanlatha@yahoo.com

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner