இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2007 இதழ் 91 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!
இயல்விருது 2006 ஒரு பார்வை!

த.சிவபாலு B.Ed Hons, M.A

கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறன்ரோ பல்கலைக்கழத் தென்னாசிய இலக்கிய மையமும் சேர்ந்து அகில உலக ரீதியில் இந்த விருதினை தமிழ் இலக்கியத்திற்குப் பணியாற்றுகின்ற தலைசிறந்த பணியாளர்களுக்கு வாழ்நாள் இயல்விருதினை வழங்கி கௌரவப் படுத்தி வருகின்றன. 2006ம் ஆண்டுகான இயல்விருதினைப் பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரபல நாடகரும், ஊடகவியலாளருமான திரு. தாசீசியஸ் அவர்கள்.

கடந்த 3.06.2007 ஞாயிறன்று மாலை ரொறன்ரோ பல்கலைக்கழககத்தின் வில்லியம் டூ கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது இயல்விருது வழங்கும் நிகழ்வு. இந்த விழா இயல்விருதுக் குழவின் தலைவரும், ரொறன்ரோ பல்கலைக்கழக பேராசிரியருமான செல்வா கனகநாயகம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

செல்வி சங்கரி கனகநாயகத்தின் அறிமுக உரையோடு ஆரம்பமானது விருது விழா.

வாசுதேவன் இராஜலிங்கத்தின் மிருதங்க சேஷ்திரத்தின் இளங்கலைஞர்கள் மங்கள இசையை வாசித்து பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டனர். மிருதங்கம் வாசித்த கிருஷ்ணா ருத்திராவிற்கு பரிசில் வழங்கிப் பாராட்டினார் நாடகர் தாசீசியஸ்.

விழாவுக்கு வந்திருந்தோரில் சிலர்...

தலைமை உரையின் போது இந்த விழாவில் இந்த வருடம் மேலும் சில பணிகளை மேற்கொண்டவர்களை கௌரவிப்பதனை உள்ளடக்கியுள்ளோம் எனக்குறிப்பிட்டதோடு கடந்த காலங்களில் தாம்மேற்கொண்ட விருதுகளில் தெரிவானோர் ஜோர்ச் காட், சுந்தர ராமசாமி, கணேஸ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர் போன்றோரின் தமிழ்ப் பணியினை எமது குழு ஆய்ந்து இயல்விருதினை வழங்கி இருந்தது. அதே அடிப்படையில் இந்த ஆண்டு பிரபல நாடகரும், இயக்குநரும் ஊடகவியலாளரும் விமசகருமான திரு. தாசீசியஸ் அவர்களுக்கு இந்த விருதினை வழங்கத் தீர்மானித்தோம் என்ற அவர் இந்த இயல்விருதுக்கு தெரிவு செய்யும் குழுவில் அங்கம் வகிக்கும் பேராசிரியர் அரசு அவர்கள் இன்று இங்கு எம்மோடு கலந்துகொள்வது அவரின் வாயாலேயே இயல்விருதுக்கும் மற்றய பரிசில்களும் எப்படித் தெரிவு இடம்பெறுகின்றது என்பது பற்றி அவரே நேரடியாக உரையாற்றுவது பொருத்தமானதும் எம்மிடையே உள்ள பல சந்தேகங்களைத் தீர்க்கவல்லதுமாகும் என்ற அவர், இந்தமுறை மேலதிகமாக கதை, கவிதை, அரங்கம், தொழில்நுட்பம் சார்ந்து சிறந்த பணியினை மேற்கொண்டவர்கழளயும் கௌரவிக்க முந்வந்துள்ளமை இதுவரைகாலமும் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளிலிருந்து சற்று மாறுபட்டதாக நேரத்தையும் சற்று நீடிப்பதாக அமைகின்றது எனக்கூறி அவை கதை, கட்டுரை, கவிதை, என்பவற்றிற்குக் குறிப்பிட்டு அதற்காக நாம் பலரின் உதவியை நாடினோம் பலர் இந்த முயற்சிக்குத் தாமாகவே முன்வந்து பரிசில்கள் வழங்கமுன்வந்துள்மையையும் பாராட்டிய அவர் தொடர்;ந்து உரையாற்றுகையில் நாம் இந்தமுறை அறிமுக்படுத்தியுள்ள பரிசில் இலக்கிய, தொழில்நுட்பத்துறைகள் போன்ற பல்துறைகளிலும் சேவையாற்றியவர்களுக்கு வழங்கிக் கௌரவிக்கப்படுகின்றது எனத் தலைமையுரையில் குறிப்பிட்டார்.

பல்கலைக் கழக மாணவன் செல்வன் கஜன் யோகரட்ணம் அவர்களால் கடந்த கால நிகழ்வுகள் பற்றியும் இயல்விருதுக் குழுபற்றிய தெளிவான குறுந்திரைப்படக் காட்சிகளைக் காட்டினார்.

தொடர்ந்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்து அஸ்வின் பாலமோகன் தமிழ் மொழியினைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பாடநெறியாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்பற்றி ஆங்கிலத்தில் குறிப்பிட்டதோடு தமிழ் மொழி பல்கலைக் கழகத்தில் அறிமுக் பாடமாக அல்லாது ஆய்வு மொழியாக இடம்பெறவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து செல்வன் ராஜ் குணரத்தினம் அழகிய தமிழில் உரையாற்றினார். ஆவர் மெல்லத்தமிழ் இனிச்சாகும் என்றோர் பேதை உரைத்தான் என்ற பாரதியின் அடிகளை நினைவு கூர்ந்து பல மொழிகள் உலகில் தோன்றி அழிந்துள்ளன ஆனால் தமிழ் ஒரு சருகு மொழியல்ல காய்ந்து போவதற்கு அது ஆழ வேரூன்றிய ஒரு மொழி. அது சாகாது வாழும் என்ற அவர் பல மாணவர்கள் தமிழைக் கற்கவில்லையே என்ற ஆதங்கத்தைத் துடைக்க இது வழிவகுத்தது என்றார். 2002 ஆரம்பிக்கப்பட்ட தமிழ்; கற்கைக்கான இந்த முயற்சி 2006இல் வெற்றியளித்தது. பட்டப்படிப்பு, ஆய்வு மையம் நிறுவப்படவேண்டும் என்னும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்து அதற்குத் தமிழ்சமூகம் ஒத்துழைக்கவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.

மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அரசு அவர்கள் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் நடைமுறைபற்றிய ஒரு விளக்கத்தை அளித்து உரையாற்றினார். பல்வேறு படைப்பாளிகளின் படைப்புக்கள் உலகெங்கும் இருந்து பரிந்துரை செய்யப்ட்டன. அந்த அடிப்படையில் வந்த பெருந்தொகையான பரிந்துரைகளில் இருந்து தெரிவு செய்யும் பணி தெரிவுக்குழுவுக்கு முன்னால் வைக்கப்பட்டது. இது மிகவும் சிக்கலானது. பெரும்பான்மையினரின் விருப்பின்பேரில் தெரிவு செய்யப்ட்டவற்றையே பரிசில் அல்லது விருது கிடைக்க முன்வைக்கப்படுகின்றன.

இயல்விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார் நாடகர் தாசீசியஸ்

ஆழிசூழ் உலகம்’ ஒரு முக்கிய இலக்கிய நாவல். முதலாவது கடல் உயிரினங்கள் பற்றி தெளிவான விளக்கத்தைத் தந்துள்ளதோடு சிறந்த நாவலாகவும் காணப்படுகின்றது. இந்த நூலைப் பரிந்துரை செய்தவர்களில் நானும் ஒருவன்.
அறவாணியான ரேவதி எழுதிய ‘அகப்புனைவு- உணர்வும் உருவமும்’ என்னும் நூல் அவரது முதல் நூல். யாரும் தொட்டுப்பார்த்திராத ஒரு பிரச்சினையை முன்வைத்து எழுதப்பட்ட நூல் அந்த நூல் தெரிவு செய்யப்பட்டதில் எனக்கும் பங்கு உண்டு. இவற்றிற்கு யாரும் எந்தவிதமான சாயத்தையும் பூசமுடியாது. தொழில் நுட்ப இயல், கவிதை தொடர்பில் எனக்குப் பங்கில்லை. மேலை நாடுகளில் உள்ள சமூகத்தில் இடம்பெறும் விருதுகள் போன்ற நிலைமைகளை ஒப்பு நோக்கி அவரை கலந்துரையாடப்படவேண்டிவை. தமிழ் செம்மொழியாக்கப்பட்டமை மிக்க மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விடயம். தமிழ் நாட்டு அரசுக்கு ஒரு கோடி நிதியை இந்த மொழி ஆய்வுக்கு ஒதுக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசு வைத்துள்ளது. தமிழர்கள் வாழும் இடங்களில் இந்தத் திட்டத்தின் பலாபலன்கள் நடைமுறைக்கு வரலாம். நூன் அரசியல் செல்வாக்கு உள்ளவன் அல்ல. பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இந்தியாவில் இரண்டு மாதங்கள் தங்கியிருக்க உள்ளார் என்பதனை அறிகின்றேன். அவர் இந்த விடயத்தில் முதல்வர் கருணாநிதியோடு கலந்துரையாடக்கூடியவர். தனது செல்வாக்கைப் பயன்படுத்தமுடியம். அதற்கான முயற்சியை நான் செய்வேன் என்ற அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் சமகாலத்தில் வாழும் ஒருவரை கொண்டாடவேண்டும் என்பது வரவேற்கத்தக்கதும் பாராட்டப்படவேண்டியதும் ஒன்று. ஈழத்தில் உருவான வளமான நாடக வடிவங்களைப் பேராசிரியர் சு.வித்தியானந்தன், தாசீசியஸ், குழந்தை சண்முகலிங்கம், யாழ் அரங்கக் கல்லூரி போன்வற்றினூடாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இத்தகைய பெரு முயற்சிகள் இந்த்pயாவில் பதிவுகளாக்கப்படவில்லை. ஐரொப்பிய சமூகத்தில் உருவாகியது போன்ற ஒரு நாடக மரபு ஒன்று ஈழத்தில் உருவாகியிருக்கின்றது. பல்துறை பயிற்சி அனுபவங்களைப் பயன்படுத்தி மரபு சார்ந்த நாடக அரங்கங்களை வளர்த்திருக்கின்றார் தாசீசியஸ். 1983 கறுப்பு யூலைக்குப் பின்னர் தமிழருக்கான அரங்கச் செயற்பாட்டு வெளிப்பாடு எங்களோடு அவரை உறவு கொள்ளவைத்தது நினைவு கூரத்தக்கது. அவரை அங்கீகரித்துச் தமிழ்ச் சமூகம் ஒன்றுசெர்ந்து கொண்டாடுகின்ற இந்த நிகழ்வில் மகிழ்ச்சி அடைகின்றேன். தாசீசியஸ் இந்த இயல்விருதினால் பெருமையடைகின்றார் என்பதைவிட இயல்விருது தாசீசியஸினால் பெருமை அடைகின்றது என்பதே பொருத்தம் என்ற அவர் நான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் 75 அகவைப் பூர்த்திக் கொண்டாடத்தில் கலந்துகொள்ள வந்துள்ளேன். ஏனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்துவேன் என்றும் குறிப்பிட்ட அவரின் கைகளால் இயல்விருதினை வழங்கிக் கௌரவிக்கப்பட்டார் நாடகர் தாசீசியஸ்.

தொடர்ந்து இடம்பெற்ற பரிசில் வழங்கல் வைபவங்களை செல்விகள் கன்னிகா திருமாவளவன், பிரா ரஞ்சித், தாரணி கருணாகரன், பிரவீனா கருணாகரன் ஆகியோர் அறிமுகம் செய்து உரையாற்ற பரிசில்கள் வழங்கப்பட்டன.

பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நினைவுப் பரிசாக அவரின் மகன் கலாநிதி ஒப்பிலாமணி அவர்களும், பிரபல வர்த்தகர் திரு, திருமதி ஜெயராமன் தம்பதியினர் பேராசிரியர் மயில்வாகனம் நினைவுப் பரிசினை வின்சர் பல்கலைக்கழகப் பேராசிரியர் நந்தகுமார் தம்பதியினர் கவிஞரும், பேராசிரியருமான சேரனுக்கு அவரின் கவிதை நூலான ‘மீண்டும் கடலுக்கு’ வழங்கினர். இதனை அறிமுகம் செய்து உரையாற்றினார் கன்னிகா திருமாவளவன்.

பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நினைவுப் பரிசாக அவரின் மகன் கலாநிதி ஒப்பிலாமணி அவர்களும், பிரபல வர்த்தகர் திரு, திருமதி ஜெயராமன் தம்பதியினர் பேராசிரியர் மயில்வாகனம் நினைவுப் பரிசினை வின்சர் பல்கலைக்கழகப் பேராசிரியர் நந்தகுமார் தம்பதியினர் கவிஞரும், பேராசிரியருமான சேரனுக்கு அவரின் கவிதை நூலான ‘மீண்டும் கடலுக்கு’ வழங்கினர். இதனை அறிமுகம் செய்து உரையாற்றினார் கன்னிகா திருமாவளவன்.

சுந்தரராமசாமி நினைவுப்பரிசினை பிரா ரஞ்சித் அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து தமிழ் எழுத்துருவை அறிமுகப்படுத்தி அதனை இலவசமாக அனைவரும் பயன்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த சிறினிவாசன் அவர்கள் விஞ்ஞானி வெங்கட்ட ராமனிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

எழுத்தாளர் ரேவதி அவர்களின் ‘அகப்புனைவு- உணர்வும் உருவமும்’ என்னும் அறவாணிகளின் உணர்வினை வெளிக்கொண்டுவந்துள்ள கதைநூலுக்கு வழங்கப்பட்டது. இதனை செல்வி தாரணி ரகுநாதன் அறிமுகம் செய்துவைத்தார். இந்தப்பரிசினை திரு, திருமதி பிரபாகரன் தம்பதியினர் ரேவதியின் சார்பில் பெற்றுக்கொண்டனர்.

அடுத்த பரிசு ஆழிசூழ் உலகு என்னும் நாவல் இலக்கியத்திற்கு வழங்கப்பட்டது. இதன் ஆசிரியர் ஜோடிக்குரூஸ் ஆவார். இது சிறந்த நாவலர் இலக்கியமாகச் சிபார்சு செய்யப்பட்டது. இதனைச் செல்வி பிரவீனா கருணாகரன் அறிமுகம் செய்துவைத்தார்.

இயல் விழா 2006 நிகழ்வில்.....

தொடர்ந்து பத்திரிகை ஆசிரியரும், சிறந்த விமர்சகருமான சிறிஸ்கந்தன் அவர்கள் தாசீசியஸ் அவர்களின் இயல்விருதுக்கான அறிமுக உரையினை மேற்கொண்டார். எனது பாடசாலைக் காலத்தில் இப்படியும் நாடகங்களைப் போடலாமா என என்னை ஏங்கவைத்தவர் ஈழக்கூத்தன் என்ற பீடிகையோடு தனது உரையைத் தொடர்ந்த அவர் கலையரசு சொர்ணலிங்கம், பேராசிரியர் சு.வித்தியானந்தன் போன்றோரின் நாடகங்கள் பற்றிக் குறிப்பிடடதோடு அ.ந.கந்தசாமி, இ.முருகையன், இ.சிவாநந்தன் போன்றோரின் நாடகங்களை நெறியாளுகை செய்ததோடு நடித்தும் நாடகத்துறைக்குப் புதுமெருகூட்டியதைக் குறிப்பிட்ட அவர் தொடர்ந்து அவரின் இளமைக்கால நாடக அனுபவம், பல்கலைக்கழகக் காலத்தில் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நாடகங்களில் நடித்தமை பின்னர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அவர் மேற்கொண்ட நாடக முயற்சிகளும் நாடகப்பயிற்சிகளும் பற்றிக் குறிப்பிட்டதோடு தமிழ் அகராதியில் ‘நாடகன்’ என்ற சொல்லுருவாக்கத்திற்கு காரணமானவர் என்றும் குறிப்பிட்டார். தமிழ் நாடகத்துறையில் மட்டுமல்ல நோர்வே, ஜெர்மனி, சுவிஸ் போன்ற நாடக மையங்களிலும் தடம் பதித்தவர். சுவிஸில் நடந்த 700வடி ஆண்டுக் கொண்டாட்டத்தில் அந்நாட்டுக் கலைத்துறை ஆலொசனைக் குழவில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியவர் என்பதும், ஒரு ஊடகராக லண்டன் பிபிசி, பிரான்சில் ரிரிஎன் போன்றவற்;றிலும் தனது தடத்தைப் பதித்தவர் அவரது நாடகங்கள் பலமொழிகளிலும் மேடை ஏற்றப்பட்டதனையும் அவரது பிச்சைவேண்டாம், பொறுத்தது போதும் போன்ற நாடகங்கள் இன்றும் பேசப்படும் அளவிற்கு பிரபலம் வாய்ந்தவை என்பதனைக் குறிப்;பிட்டதோடு இலக்கியத் தோட்டத்;தின் 2006ம் ஆண்டுக்கான இயல்விருதுக்கு அவரைத் தெரிவு செய்துள்ளமை பாராட்டத்தக்கது என்ற அறிமுகப்படுத்தத் தனக்குக் கிடைத்த வாய்ப்பு பெரும் பாக்கியமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

இறுதியாக சட்டத்தரணியும் சமூகத் தொண்டருமான மனுவல் ஜேசுதாசன் அவர்கள் உரையாற்றினார். ஆவர் இயல்;விருதுக்கு இலக்கியத்தோட்டம் ஆற்றிவரும் பணிகளைப்பாராட்டி அவர்கள் எவ்வளவு சிரமத்திற்கு மத்தி;யில் இ;த்தகையதொரு ஏற்பாட்டைச் செய்துள்ளார்கள் என்பதனை முன்னிலைப்படுத்தி இதில் பங்குகொண்டு உழைக்கும் பேராசிரியர் செல்வா கனகநாயகம், எழுத்தாளர் அ.முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம், காலம் செல்வம் போன்றோருக்கும் தனது நன்றியினையும் பாராட்டினையும் தமிழ் மக்கள் சார்பாகத் தெரிவித்து உரையாற்றினார்.

தொடர்ந்து விருதினைப் பெற்றுக்கொண்ட நாடகர் தாசீசியஸ் ஏற்புரை நிகழ்த்தினார். அவரின் உரை வாசகர்களின் கவனத்திற்காக அப்படியே தரப்படுகின்றது. அவர் தனது உரையை ஆற்றுவதற்கு முன்னர் தன்னை வரவேற்று உரையாற்றிய செல்வி ரஞ்சித், அறிமுக உரையாற்றிய ஸ்ரீஸ்காந்தன், மங்கள இசை நிழக்ச்சியைத் தந்த சிறார்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

தாசீசியஸ் ஏற்புரை:

எனது இனத்தின் பெருமை சார் அறிஞர்களே, வெவ்வேறு அறிவுப் புலமைப் பெருந்தகைகளே, எனது இனத்தின் மூல வேர்க் கலைகளைப் போற்றிப் பாதுகாக்கும் கலைஞர்களே, கலை ஆதரவாளர்களே, எனது இனிய தமிழ் உறவுகளே, ஒவ்வொருவரையும் அன்போடு வணங்குகின்றேன்.
நம் மொழி அறியாப் பெருமக்கள் சிலர் விழா ஏற்பாட்டாளர்களை மதிக்கவென்று இங்கே வருகை புரிந்திருக்கின்றார்கள். அவ்வப்போது அவர்களோடு ஆங்கிலத்தில் சொல்லாட
எனக்கு அருள்கூர்ந்து இடம் தாருங்கள்.

உலகத் தமிழ்க் கல்விமான்களாலும் பேரறிஞர்களாலும்
புலத்தில் வழங்கப்படும் ஒற்றைப் பெரும் உயர் விருது இது.
தக்கான் என்று இவ்வாண்டுக்காய் என்னைத் தேர்ந்n;தடுத்த ஒவ்வொருவருக்கும் நன்றி கூறுகிறேன். உங்கள் முன்னிலையில் என் வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்க
அனுமதி தாருங்கள்.

இரண்டாவது உலகப்போர்க் காலத்தில் தமிழீழம் தாழையடியில் 1940 டிசெம்பரில் பிறந்தேன். அக்கா, இரண்டு தம்பிமார், ஒரு தங்கை.
புலத்தில் லண்டன் அகதிக் கூண்டக்கு 1985 இலே மனைவியோடும் மூத்த மகளோடும் வந்தேன். இங்கே புலம் பெயர்ந்த வாழ்க்கையில் புதிய துளிர்ப்பின் கட்டியமாக இரண்டாவது மகள்.

எனது தொடக்கக் கல்வி, எனது ஊரில்! எனது ஏழாவது வயதில், ஆண்டு இறுதிப் பள்ளிப் பரிசளிப்பு விழாவில் எனக்குத் தனி நடிப்புப் பரிசு ……… .நடிப்புக்கான முதல் பரிசு அது.
மகாகவி பாரதியாராக நான் வேடமிட்டு மேடையில் தோன்றியபோது, நான் பிறக்க முன்னரே இறந்துவிட்ட என் அம்மாத் தாத்தாவின் தோற்றத்தை அப்படியே உரித்து வைத்திருப்பதாக ஊர் கூறியது.

இடுப்பிலே வேஷ்டி, மேலே சட்டை, அதற்கு மேல் கோட், தலையில் தலைப்பாகை. இவையே புலவரும் அண்ணாவியாருமான என் பேரனாரின் தோற்றமாம்.

நாவாய் ஏறிக் கடல் கடந்து தூத்துக்குடி சென்று
தமிழும் நாடகமும் சித்த வைத்தியமும் கற்று வந்ததால்,
சுற்று வட்டாரத்தில் அவருக்குத் தனிப் பெயர்!

சரியாக 60 ஆண்டுகள் கழித்து இன்று கடல் கடந்த கனடாவில்,
உயர் மாட கோபுர தோற்றப் பொலிவும் கல்விச் செழுமையும் பொதிந்த ரொறென்ரோ பல்கலைக் கழக கீழைத் தேய கல்விப்பீட அனுசரணையோடு, என் இனத்தின் தேர்ந்த சான்றோர் வீற்றிருக்கும் இயல் பீடம் மாண்பேற்றி என்னை அழைத்து
எனது காவோலைப் பருவத்தில் பரிவோடு வழங்கும்
வாழ்நாள் சாதனை விருதைப் பெறுகிறேன். நன்றி கூறுகிறேன்
ஏழு வயதிலே யான் முதல் விருது பெற்ற போது, எனது முயற்சியைக் கணிக்காது என் தாத்தாவை நினைவுகூர்ந்து போற்றினார்கள்.அதே போலத்தான் இன்றும்! நாடகத்தில், ஊடகத்தில், பிள்ளைத் தமிழில் என்னோடு கூடி வழி நடந்து,
என்னைச் செதுக்கி, மெருகிட்ட நாடகர்களை, ஊடகர்களை, என் தமிழ் ஆசான்களை ஒதுக்கிவிட்டு, இந்தத் தனியொருவனுக்கு விருது வழங்குகின்றீர்கள்.

நாடகமும் சரி, ஊடகமும் சரி, இன்றைய தமிழ்க் கல்வி வழிப் படுத்தலும் சரி, எல்லாமே கூட்டு முயற்சிகள் தாமே! தனி மனிதனின் பங்களிப்பு, அங்கு சிறு துரும்பே!

மரத்தை மறைத்ததுவோ மாமத யானை என்ற கூற்றை நினைத்து, என்னை ஆற்றுப் படுத்திக் கொள்கின்றேன்.

மேடையில் பாரதியின் ஆடைப் புனைNவு எனக்கு முதல் விருதைப் பெற்றுத் தந்தாலும், மேடையில் ஆடை களைந்த நிர்வாண விபத்தே

நாடகத்தில் என்னை நிலைப் படுத்திய சம்பவம் என்பேன்.

பத்து வயதிலே

இளவாலை புனித என்றியர் விடுதிப் பள்ளியிலே சேர்ந்த முதல் ஆண்டிலேயே

அந்த இனிய விபத்து நேர்ந்தது.

ஏழைக் குசேலரின் மூத்த மகனாக…….;

கல்லூரிக் காலம் முழவதும்

தமிழ் மற்றும் ஆங்கில நாடக ஈடுபாடு!

கல்லூரி, வட்டாரம், மாவட்டம், மாநிலம், அகில இலங்கை என்ற அடிப்படையில், நாடகம், பேச்சுப்போட்டி என்று கலை நதி ஓட்டம்! …

பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியில் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு! அங்கே முழுக்க முழுக்கப் படிப்பு!

1962 இலே பேராதனைப் பல்கலைக் கழகப் பிரவேசம்.

நம் மொழிக்கு அணி சேர்த்த தமிழ்ப் பேராசிரியர்கள் மு. கணபதிப்பிள்ளை, வீ. செல்வநாயகம், சு. வித்தியானந்தன், கைலாசபதி, சதாசிவம், வேலுப்பிள்ளை, தனஞ்செயராசசிங்கம், சண்முகதாஸ் ஆகியோரிடம் மொழி வளம் பெற்ற செருக்கு எனக்கு!

ஆங்கில பீட பேராசிரியர் ஆஷ்லி ஹல்ப்பே அவர்களின் ட்றாம் சொக் இலே நாடக, அரங்கப் பயிற்சி பெறுகிறேன்.

1966 இலே கொழும்பு வாழ்க்கை தொடங்குகிறது.

அங்கே லயனல் வெண்ட்ற் தியேட்டரில் சாதனைக் கொடி நாட்டியிருந்த

ஏணெஸ்ட் மக்கின்ரயர் என்ற இலங்கை நாடக மேதையின் அரவணைப்பில்

மேற்குலக நாடகப் பயிற்சி!

அடுத்த ஐந்து ஆண்டில் ஷேக்ஸ்பியர், பேர்டோல்ட் பிறெக்ற், இப்ஸன், பேணட் ஷோ, ஒஸ்கார் வைல்டு. டெனசீ உவிலியம்ஸ், பிரண்டெலோ, நோல் கவாட்,மக்சிம் கோக்கி, மக்ஸ் ஃப்றிஸ்ச் போன்ற மேதைகள் எழுதிய நாடகங்களைத் தயாரிப்பதில்

மக்கின்ரயர் சேர்த்துவிட,

நுணுக்கமான பயிற்சி பெறுகிறேன்.

தமிழ்ப் பாரம்பரிய மண்ணிலே புதைந்திருக்கும் தமிழ்க்கலை மூலவேர்களிலேயே நம் எதிர் காலக் கலை வடிவங்கள் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதில்

எனக்கு அன்றே உறுதியான நம்பிக்கை!

மக்கின்ரையர் உற்சாக ஆதரவு தருகின்றார்.

கலை மூல வேர்த் தேடல் தொடங்கு முன்னம்

பிள்ளையார் சுழி போட,

என் ஆசான் சு. வித்தியானந்தனிடம் செல்கிறேன்.

கூத்து அண்ணாவிமாரின் பட்டியல் தருகிறார்.

புறப்படுகிறேன்.

வாயில் வரை வந்த எங்கள் வித்தியின் கொடுத்துச் சிவந்த கரம்,

எனது சட்டைப் பைக்குள்,

நாடகத் தேடல் முயற்சிக்காக,

செலவுக் காசு திணிக்கிறது.

வாழ்த்தி வழியனுப்புகிறார்.

தேடல் முயற்சி, தொடக்கத்தில் இலகுவாக இருக்கவில்லை……... திடீரென்று ஓர் அதிர்ஷ்டக் கொடை இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத் தாபனத் தயாரிப்பாளர் கே. எம். வாசகர் வடிவில் வருகிறது.

எனது முயற்சியை வானொலி நிகழ்ச்சியாக்குகின்றார்;. மறு வாரமே விண்ணப்பங்கள் வந்து குவிகின்றன. …………

எனது அடுத்த அதிர்ஷ்டக் கொடை ஞானம் லம்பேட் வடிவில் வருகிறது.

வார இறுதியில் நான் கிராமங்களை வலம் வர,

வந்து சேரும் நாடகப் பிரதிகளைத் தாமே தேர்ந்தெடுத்து வரிசைப் படுத்தி,

ஒலிப் பதிவுத் தேதிகளை நிர்ணயித்து,

கூத்து மன்றங்களோடு தொடர்பு கொள்ளும் பணியைக் கொழும்பில் இருந்து

ஞானம் லம்பேட் மேற்கொள்ளுகின்றார். ;. ……..கிராமங்களுக்குக் கூடி வந்து கலை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்குகிறார்.

தமிழில் மேடை நாடகம் தயாரிக்கத் தொடங்கும்போது மேடை நிர்வாகத்துக்காக நம்பிக்கைக்கு உரிய வேறு எவரையும் தேட வேண்டிய அவதி எனக்கு இல்லை.

கொழும்பிலே மொழி பெயர்ப்பாளனாகத் தொடங்கிய என் வாழ்க்கை,

பதிப்பாசிரியனாகவும்

கல்வி நிர்வாக சேவையாளனாகவும் நீள்கின்றன.

சிறீ ‘லங்கா பல்கலைக் கழகத்திலும் கொழும்பு பல்கலைக் கழகத்திலும் பொதுக் கல்வி, நாடகம், கல்வி நிர்வாகம் என மூன்று உயர் பட்டமேல் டிப்ளோமாக்கள்.

நாடக டிப்ளோமாவில்

பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி என்ற நம் தமிழ்ச் சிந்தனைப் பெரியனிடம்

கிரேக்க - தமிழ் நாடக ஒப்பியல் வரலாறு - புதிய விளக்க

தானம் பெறுகிறேன்.

கொழும்பு அக்குவைனஸ் பல்கலைக் கழகக் கல்லூரியினர்,

நாடக அரங்கக் கலைகள் தொடர்பான

இரண்டரை ஆண்டு உயர் பட்ட கற்கை நெறி ஒன்றை நடத்துகிறார்கள்.

நாடக அரங்க முதல்வர் மக்கின்ரயரே முன் நின்று நெறிப்படுத்துகின்றார்.

ஐராங்கனி சேரசிங்ஹ, மஹிந்த டயஸ், பேர்சி கொலின் தோமே, தெரனியகல, ஆதர் வன்லங்கன்பேர்க், வஜிரா சித்திரசேன, சொலமன் ஃபொன்சேகா, போன்ற வித்தகர்களிடம் வேறு வேறு துறைகளில் கற்கிறேன்.

லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் திரைப்படப் பயிற்சி வழங்குகின்றார்.

அவருடைய கொலு ஹதவத்த படத் தயாரிப்பிலும் நிதானய பட எடிற்றிங் இலும் பயிற்சிகள் கிடைக்கின்றன.

ஆங்கிலத்தில் மகாபாரத நாடக காவியம் படைத்த பீட்டர் பொட்டர்,

பிரிட்டிஷ் கௌன்சில் கலாசார இளந் தூதுவராக

கொழும்பு வந்து ஒரு மாத கால நாடகப் பயிற்சி வழங்குகின்றார்.

அப்படி வந்தவர்களில் இன்னொருவர் றிச்சட் ஸ்கெச்னர். அவர், அமெரிக்கர்.

எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டக் கொடைகளில் முக்கியமான ஒருவர்,

திருக்கோணமலை கா. சிவபாலன்.

இன்று, அவர் ஒரு மனித உரிமைச் சட்டத்தரணி

. சட்டக் கல்லூரி விடுதியில் ஒரே கூடத்தில் தங்கியிருக்கிறோம்;

கலை முயற்சிகளில் என்னை ஓய விடாது, விரட்டி விரட்டிப் பங்கெடுக்கச் செய்கிறார்.

தமிழ் நாடகத் தயாரிப்புக்கு நான் தயாரானதும்,

நாடோடிகள் நாடக மன்றத்தைத் தாமே முன்னின்று நிறுவி

எனது நன்னீர்ப் பொய்கை ஆகிறார்;. …….அம்மன்றம் மஹாகவியின் கோடை என்ற பா நாடகத்தை மேடையிடத் தேர்ந்தெடுக்கிறது.

தமிழ் நாட்டிலும் சரி, இலங்கையிலும் சரி, அரங்கப் படுத்தப்பட்ட முதல் தமிழ்க் கவிதை நாடகம்

மஹாகவியின் கோடையே என்று நிறுவப் படுகிறது.

நவீன அரங்க விதிகளுக்கு அமைவாக மேடையிடப்பட்ட கோடையின் செப்பலோசையானது செய்யுளோசைஅல்லவே என்று பலரைத் துணுக்குற வைக்கிறது. மக்கின்ரயர் தந்த மேற்கத்தைய நாடகக் கற்கை ஆளுமையோடு அவர்களை எதிர் கொள்கிறேன்.

சில மாதங்கள் முன்னதாகத்தான் ஆங்கிலத்தில் சேக்ஸ்பியரின் ஹம்லெற் மேடையேற்றி இருந்தோம். அதன் செப்பலோசை அளவு கோலையே

கோடை செப்பலோசையாகவும் கொண்டேன் என்பதை இரண்டு நாடகங்களில் இருந்தும் எடுத்துக் காட்டுகிறேன்.

குறிப்பாக, லோறனஸ் ஒலிவியே போன்றோரின் வருகையின் பின் கவிதை நாடகங்களில் கையாளப்பட்டு வரும் செப்பலோசை நடை மாற்றத்தை நினைவூட்டுகிறேன்.

கோடையின் வெற்றியே முருகையனின் கடூழியம், அம்பியின் வேதாளம் சொன்ன கதை, மஹாகவியின் புதியதோரு வீடு ஆகிய கவிதை நாடகங்கள் அடுத்தடுத்து மேடையேறக் காலாகியது என்கிறார்கள்.

இவற்றை நெறிப்படுத்திய நா. சுந்தரலிங்கம், சுஹைர் ஹமீது, தாசீசியஸ் மூவரும் தமிழ் அரங்க நெறியாட்சி வழி காட்டிகளாக முதன்மைப் படுத்தப் படுகின்றார்கள்.

மஹாகவியின் புதியதொரு வீடு, நாட்டார் பாடல்கள் பின்னி வரும் கவிதை நாடகம்.

மீனவ களமே கதைப் புலம்.

எனவே பாடல் வடிவம் தேடி நீர்கொழும்பு, சிலாபம், வடமராட்சி நீள்கரை, முல்லைத்தீவு, தென்னைமரவாடி வரை,

அந்த அந்த இடங்களில் வெய்யில் குளித்து,

கால் நடையாகவே செல்கின்றோம்…….

மன்னார், தாழ்வுபாட்டில்,

மாலை ஆழக் கடல் போய்க் காலை கரை மீளும் படகொன்றில் நானும் மஹாகவியும் ஏறுகிறோம். ………

மாலைக் கருக்கலில் வலை படுக்கும்போது ஒரு வகைப் பாடல்.

வைகறைக் கருக்கலில் வலை இழுக்கும்போது வேறொரு வகைப் பாடல்.

இடையே வலை வழியும் ஐந்து மணி நேரமும் ஒரு மீனவர் மட்டும் குறட்டைத் தாளம் போட,

ஏனைய நான்கு பேரும் மாறி மாறி மீனவப் பாடல்களால் எங்களைச் செல்வந்தர் ஆக்குகின்றார்கள். ………….

.காலையில் கரை திரும்பியதும், ………………நான் என் தமிழ்க் கலை மூலவேர்த் தேடலைத் தொடர்கின்றேன்.

இந்தத் தேடலின்போது நான் சந்தித்த சில சித்தர்கள் விளையாட்டாகக் கற்பித்த சில பயிற்சிகள

; எனது 'உன்னை நீ அறிவாய்!" ............ தேடலுக்கு

எவ்வளவு உறுதுணையாக அமைந்தன என்பதை,

பயிற்சிகள் வளர, வளர காலப்போக்கில் உணரத் தொடங்குகின்றேன்.

வன்னி மாவட்ட புளியம்பொக்கணை வெள்ளி நாகக் கோவிலில்

காலாகாலம் பாடப்பட்டு வரும் பாடல் வகை ஒன்றைப் பதிவு செய்வதற்காக அங்கு செல்கின்றேன். …………முதல் தடவையாக புளியம்பொக்கணையில

; ஏரம்புச் சித்தரைச் சந்திக்கிறேன். ….

'சிவனுக்கு நெற்றிக் கண் என்றால், மனிதனுக்கு நெற்றிப் பொட்டு. ஒவ்வொரு பொறி மூலமும் ஒவ்வொரு புலனை அறிகிறாய். பொறிக்குப் பயிற்சி கொடு. புலனை வளர்த்தெடு. ஐம்புலன்களும் கூர்மைப்பட்டு ஒன்று திரளும்போது அது நெற்றிப்பொட்டில் கூடு கட்டும். உள்ளே வரம்பற்ற வெளி விரியும். அங்கு ஒளி பரவும்," என்று சித்தர் அடுக்கிக் கொண்டே போகிறார். ……

ஏரம்புச் சித்தரோடு பழகத் தொடங்கிய பின், ஸ்ரனிஸ்லவ்ஸ்கி, ரோல்ஸ்ரோய், விவேகானந்தர், பேட்ரண்ட் றஸெல், சிக்மண்ட் ஃப்றொய்ட், கார்ல் யுங், மக்கியாவெலி, ரூஸோ, மார்க்ஸ், நியெட்ஷே, மாவோ, றிச்சட் ஸ்கெச்னர், சண்முகதாசன், வானமாமலை, கைலாசபதி, ராமானுஜன், முத்துசாமி, சுந்தர ராமசாமி, கோவை. ஞாநி, அன்ரன் பாலசிங்கம் போன்றோரின் சிந்தனைகளும் வழி காட்டல்களும்

வேறு வேறு துறைகளில்

வேறு வேறு காலங்களில்;

எனக்குப் புரியக்கூடியவையாக,

அல்லது முரண்பாடுகளை விளக்குவனவாக ஈர்க்கத் தொடங்குகின்றன.

சுபசிங்ஹ என்ற சிங்கள சித்த வைத்தியரின் தொடர்பு, என்னை இன்னொரு கட்டத்துக்கு இட்டுச் செல்கின்றது. தமிழ்க் கலை வேர்த் தேடலில் ஒரு தடவை வவுனியா செல்கின்றேன். அங்கே, ஈறற்பெரியகுளம் மூலிகை மலை பற்றி யாரோ கூறுகின்றார்கள். ………மறு நாள் விடியுமுன் மலையில் ஏறுகின்றேன். …………ஓரிடத்தில் நின்று கரங்களை நீட்டி உயர்த்தும் ஒத்திசைவோடு மூச்சுப் பயிற்சியையும் இறுதியில் சூரிய கவசப் பயிற்சியையும் புரிகின்றேன். கனைப்புச் சத்தம் கேட்டுத் திரும்புகிறேன்.

முதியவர் ஒருவர்.

கையில் குடலை.

அதனுள் அவர் கொய்த சிறிதளவு மூலிகைகள்.

'என்ன, சூரிய கவசமா?" என்கின்றார்.

'உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்கிறேன்.

'நான் ஒரு வைத்தியன். வுhரும், பேசிக் கொண்டே போகலாம்," என்று அந்த சிங்கள மருத்துவர் கூற, விரிவாகப் பரஸ்பர அறிமுகம் செய்தபடி, பேசிக் கொண்டே நடக்கிறோம்………

என்னை ஒரு எளிமையான கூடத்துக்குள் மருத்துவர் கூட்டிச் செல்கின்றார்.

பரணில் இருந்து ஒரு மரப் பெட்டகத்தை இறக்குகின்றார்.

அது நிறையக் கட்டுக் கட்டாக ஓலைச் சுவடிகள்.

ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கின்றன.

ஓரத்தில் உள்ள ஒன்றைத் தேடி எடுத்துக் கட்டைப் பிரித்துப் படிக்கத் தொடங்குகிறார்.

திகைத்துப் போகிறேன்.

கட்டிறுக்கமான தமிழ்ச் சுலோகங்கள்.

படித்ததும் சிங்களத்தில் பதம் சொல்லுகின்றார். அவருக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது.

பாலனாய் இருக்கும்போது

வரிக்கு வரி தந்தை ஓத,

கேட்டு ஓதி

மனனம் செய்தது.

சுபசிங்ஹ சித்தரிடம் நிறையப் பயில்கின்றேன்………..பிரபஞ்ச லயத்துடன் பொருந்திய பின், உடலின் வௌ;வேறு தளங்களினூடாக உள்மன

உந்தலோடு சுவாசத்தைச் செலுத்துதல்,

பக்க வாட்டாகச் சுவாசத்தை மேலெழுப்பி

வியர்வை, கண்ணீர் உகுக்கச் செய்தல்,

சவாசன நிலை நீட்டித்தல்,

மூலத்தின் வழியாக நீரை உடலினுள் இழுத்தல்

; போன்றவை சுபசிங்ஹ சித்தரிடம் கற்ற பயிற்சிகளே!

சூரிய கவசப் பயிற்சியை எனக்கு அறிமுகம் செய்தவர்,

மன்னார் நறுவிலிக்குளம் மொத்தம் போல் என்ற சித்த வைத்தியர்………..;

. மாதோட்டப் பாங்கில்

என்றிக் எம்பரதோர் என்ற முதல் கூத்தை எழுதிய கபிரிகேற் புலவரின் பரம்பரையில் வருபவர் எஸ் எம் போல்.

அவரைச் சந்தித்த பின்னரே அவர் ஒரு சித்த வைத்தியர் என்பது தெரிய வருகிறது.

நான் ஐம்புலன் ஐம்பொறிப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருப்பதை அவதானித்த பின்

பஞ்ச பூதப் பயிற்சியை முதலில் எனக்குக் கற்பிக்கிறார்.

நீர், நிலம், மரம், நெருப்பு ஆகியவற்றைக் கற்ற பின்,

வளி அல்லது ஆகாயம் கற்கத் தயாராகிறேன். ………

வளியை விட்டுவிட்டு, வாழ்க்கைக்குத் தேவையான உலோகத்தை உள்வாங்குங்கள் என்கின்றார்.

அதுதான் பழந் தமிழ் முறையும்கூட என்று அழுத்திக் கூறுகிறார்.

நம் தமிழ்த் தொன்மை வழிமுறைகளோடு வாழ்ந்து,

தங்கள் தெளிவு வலிமையால் என்னையும் ஆழ்மனக் கடையலுக்கு உட்படுத்தி,

புலன் துலக்கம் பெற

என் தமிழ்ச் சித்தர்கள் உதவியபின்,

ஸ்ரனிஸ்லாவ்ஸ்கி கூறும் நடிகரை உருவாக்கல்,

உள் மனத் தெளிவு,

உறை நிலை உயிர்த்துவம் போன்ற

நுண்ணிய நாடகப் பயிற்சி முறைகள்

எனக்கு இலகுவாகின்றன.

எனது கலை மூலவேர்த் தேடலின்போது

அநேகமாக தமிழீழத்தில் உள்ள அத்தனை கிராமங்களுக்கும் செல்கின்றேன். அனைத்துத் தீவுகளுக்கும் செல்கின்றேன்.

சிறந்த அம்மானை வடிவங்கள் நெடுந்தீவிலும் பொலிகண்டியிலும் கிடைக்கின்றன.

தரமான பரணி சில்லாலையில் கிடைக்கிறது.

பிசிறில்லாத் தாழிசை வங்காலையில் கிடைக்கிறது.

ஆட்ட வடிவங்கள் மட்டக்களப்பிலே அத்தனை கிராமங்களிலும்,

மன்னாரிலே வங்காலையிலும்,

மலையகத்தின் பெருந் தொகைத் தோட்டங்களிலும்,

யாழ்ப்பாணத்திலே வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியிலும் கோண்டாவில் டிப்போவடியிலும்

பொலிவோடு கிடைக்கின்றன.

நல்ல காத்தவராயன் கூத்தும் துள்ளல் நடையும்

நெல்லியடி-காளி கோவிலடியிலும் பளை-வண்ணாங்கேணியிலும் உடுத்துறை-ஆழியவளையிலும் கிடைக்கின்றன.

யாழ்ப்பாணத்திலே எனது கூத்துத் தேடலின் போது, அனுபவ விழுதுவிட்ட அண்ணாவிமார் ஆனைக்கோட்டை குருசுமுத்து, பாசையூர் பாவிலுப்பிள்ளை, முல்லைக்கவி அமிர்தநாதர், ஆழியவளைக் கதிர்காமு போன்றோரும், எல்லோராலும் போற்றப்பட்ட நடிகமணி வைரமுத்து, புகுந்தான் யோசேப்பு ஆகியோருமஎனது நாடக அறிவுத் தேடலுக்குச் செழுமையூட்டுகிறார்கள்.

மட்டக்களப்பிலே வட மோடி, தென் மோடி வடிவங்களில் ஆளுமை பூண்ட ஆசிரியர் நல்லலிங்கம், ஓடியோடி உதவும் அன்புமணி, கலாசார அதிகாரி எதிர்மன்னசிங்கம் ஆகியோர் தந்த தொடர்புகள் புதுப்புது கலைக் கோலங்களை என் முன் படைக்கின்றன. பேராசிரியர் வித்தியின் கூத்து மாணவர்கள் மௌனகுரு, பேரின்பராசா, அழகரத்தினம் என்ற பெயர்களைக் கேட்டதும் பல கூத்துக் கபாடங்கள் திறக்கின்றன. முகமன் கூறி வரவேற்று, ஆடலும் பாடலுமாய் ஊட்டம் அளிக்கின்றன.

மன்னாரில் மருத்துவச் சித்தர் மொத்தம் போல் வீட்டில் மட்டும் 10, 12 குடங்கள்!

பட்டு;த் துணியால் போர்க்கப்பட்டிருக்கின்றன.

உள்ளே ஓலைச் சுவடிகள்!

கூடுதலானவை, மாதோட்டக் கூத்துக்கள்!

சில யாழ்ப்பாணப் பாங்கு!

மீதி, மருத்துவச் சுவடிகள்!

மாதோட்டக் கிராமங்கள் பலவற்றில் எனது கூத்துக் கல்வி வளர்கின்றது.

தமிழ்க் கலைகளின் தழுவல்களையும் பெயர்ப்புகளையும் அவை இலங்கையில் சென்றடையும் இடங்களையும் கண்டறிய வேண்டுமானால்

சிங்களக் கலைகளையும் கற்க வேண்டும் என்று துணிகிறேன்.

ஆகவேதான் கண்டிய நடனத்தை குருநான்சே சோமபால முதுன்கொத்கேயிடமும், ஹிந்துஸ்தானி சங்கீதத்தை, கொழும்பு ரவர் ஹோல் சிங்கள நாடக பாரம்பரியத்தில் வந்த ஸங்கதாஸ குருநான்ஸேயிடமும் கற்கிறேன்.

கண்டிய நடன கற்கையின்போதுதான், கட்டுகாஸ்தோட்டையில் மலையகத் தமிழ் மக்களின் கலை வடிவங்கள் என் கண்களில் தட்டுப்படுகின்றன.

மலையகத் தோட்ட நகரங்களில் வாரக் கணக்கில் தரித்திருந்து அர்ச்சுனன் தபஸ{, காமன் கூத்து போன்ற நாடகங்களின் ஆடல் பாடல்களைக் கற்கிறேன்.

இவை அனைத்தும் நாடோடிகள் குழவின் அடுத்தடுத்த நாடகத் தயாரிப்புக்களுக்கு உதவியாய் அமைகின்றன. மஹாகவியின் புதியதொரு வீடு நாடகத்தில் வரும் சூறாவளியில் கண்டிய நடனச் சுழல் கரணங்கள் தூள் கிளப்புகின்றன. சில ஆண்டுகளின் பின் கந்தன் கருணைக்கு, கண்டிய நடனத்தோடு மலையக ஆட்டமும் வலுவூட்டுகின்றது.

கொழும்புக்குப் படிக்க வந்த ஞானம் லம்பேட், நூல் நிலையங்களையும் முழுமையாகப் பயன்படுத்தித் தமது கலை, இலக்கிய ஈடுபாடுகளையும் விசாலப் படுத்துகிறார்…….. நா. வானமாமலையின் நேரடி எழுத்து நட்பும் ஞானம் லம்பேட்டுக்குக் கிடைக்கிறது.

புதுக் கவிதை ஈடுபாடும் ஏற்படுகிறது.

இவற்றின் திரண்ட உந்துதலோடு, அலெக்ஸி ஆபுஸோவ் எழுதிய ரஷ்ய நாடகத்தைச் சுலபமாக மொழி பெயர்க்கிறார். கட்டுப்பத்தை பல்கலைக் கழகத் தமிழ் மன்றத்தினர் தங்கள் நாடகம் ஒன்றை நெறிப்படுத்த எனக்கு அழைப்பு விடுத்த போது, அங்கு ஞானம் லம்பேட்டின் பிச்சை வேண்டாம் வெற்றி நாடகமாகக் கொடி ஏறுகிறது.

நாடகத்தில் எனக்குக் கிடைத்த இன்னொரு அதிர்ஷ்டக் கொடை நா. சுந்தரலிங்கம் ஆவார்;…….;. நா. சுந்தரலிங்கத்தின் அபசுரம், விழிப்பு, இரண்டுமே தனிச் சிறப்புப் பெற்ற நாடகங்கள். அப்ஸ்ட்றக்ற் வடிவில் அமைந்த அபசுரத்தில் பொதுவர் என்ற முக்கிய பாத்திரத்தை அவர் என்னிடம் தருகிறார். அபத்த நாடகங்களில் மக்கின்ரயர் தந்த உறுதியான பயிற்சி துணை வர, உலக பாரம் சுமக்கும் பொது மகனாக கூனல் முதுகோடு ஒரு மணி நேர நாடகம் முழவதும் மேடையை அளக்கிறேன்.

ஆனாலும் நா. சுந்தரலிங்கத்தின் விழிப்பு நாடகமே சிறந்த நடிகனாக எனக்குத் தேசிய விருது பெற்றுத் தருகிறது.

ஒரு நாடகனுக்கு முக்கியமான

தேசிய விருது எனதாகிறது. சுpறந்த நாடகத் தேசிய விருது நா. சுந்தரலிங்கத்துக்குக் கிடைக்கிறது.

சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் விழிப்புப் போராட்டம் தொடுத்த தருணத்தில்

நெல்லியடி அம்பலத்தாடிகள் கந்தன் கருணை நாடகத்தை ஊர் ஊராகக் கொண்டு சென்று ஆலயப் பிரவேச முனைப்புக்கு வலுச் சேர்க்கிhர்கள்.

எழுத்தாளர் ரகுநாதனின் மூலக் கதையை நாடகமாக எழுதியிருந்த அண்ணாவியார் இளைய பத்மநாதன்

புது மேடைத்துவ வடிவமைப்புக்காக பிரதியை என்னிடம் ஒப்படைக்கிறார். எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டக் கொடைகளில் அண்ணாவியார் இளைய பத்மநாதனும் ஒருவர்.

கந்தன் கருணை நாடகத்தில் அண்ணாவியார் இளைய பத்மநாதன் ஏற்கெனவே யாத்திருந்த முக்கிய சில காத்தவராயன் வகைப் பாடல்களை மூலப் பாடல்களாக வைத்துக்கொண்டு, மீதிப் பாடல்களை, மலையக, மன்னார், யாழ்ப்பாண, மட்டக்களப்பு வடிவங்களில் எழுதுகிறோம். இதே பகுதிகளில் இருந்து நடிகர்களையும் தெரிவு செய்கிறோம். முருகையன், இ.சிவானந்தன், மௌனகுரு, முத்துலிங்கம், தாசீசியஸ், எல்லோருமே பாடல்கள் எழுதுகிறோம்.

பேரறிஞர் முருகையன் ஓரிரு பாடல் எழுத இசைந்து வந்ததே எனக்கு ஒரு பெரிய கௌரவம்.

காமன் கூத்து லாவணி கற்றிருந்தேன்.

யாழ்ப்பாண ஆசிரியம் எனக்குத் தெரியும்.

மன்னார் விருத்தம், ஆடல் தரு கற்றுத் தர றோய் லம்பேட் இருந்தார்.

மன்னார் ஆட்டங்களை உறுதிப்படுத்த ஞானம் லம்பேட் இருந்தார்.

மட்டக்களப்பு வடமோடி, தென்மோடி ஆட்டம், பாட்டு இரண்டிலும் செழுமை பெற்ற கூத்து வளன் மௌனகுரு,

எனது எண்ணம் புரிந்து,

ஆட்டம் பழக்குகின்றார்.

முக்கிய பாத்திரமும் ஏற்கிறார்.

நாடகத்தின் கருப் பொருளும் தமிழ் மண்ணின்; சம காலப் பிரச்சினையே.

ஏனவே, தமிழ்த் தேசிய நாடக வடிவமைப்புக்கான முதல் விதை அங்கு வித்தூன்றப் படுகிறது என்று விமர்சகர்கள் சிலாகித்துக் கூறுகிறார்கள்.

கொழும்பு பல்கலைக் கழகம், வித்யோதய பல்கலைக் கழகம், இசிப்பத்தன கல்லூரி ஆகியவற்றின் தமிழ் மன்றங்களுக்கும் தமிழ் நாடகங்கள் செய்யும் வாய்ப்புக் கிடைக்கிறது!

நாடக பட்டமேல் உயர் டிப்ளோமாவுக்காக பல்கலைக் கழகத்தில் மீண்டும் கூடியபோது, மஹாகவிக்குப் பின் என்னை ஆகர்ஷித்த அடுத்த பெரும் நாடகாசிரியனைச் சந்திக்கிறேன். குழந்தை சண்முகலிங்கமே அவர்! ……..தம்ம ஜாகொடவும் நானும் சிங்கள நகரங்களில் நாடகர்களுக்கான தொடர் பயிற்சிகள் வழங்குவது பற்றி அறிந்ததும் விவரம் விசாரிக்கிறார். அவருடைய அன்பு ஆணையை மீற முடியாமல் யாழ்ப்பாணத்தில் தொடர் பயிற்சிகள் வழங்க ஒப்புக் கொள்கின்றேன். ……….

திருநெல்வேலி சந்திக்கு அருகே இந்து இளைஞர் மண்டபம் செல்கின்றேன். அங்கேதான் யாழ்ப்பாணம் நாடக அரங்கக் கல்லூரி செயல்படத் தொடங்குகின்றது. அங்கு; 60, 70 பயிற்சியாளரைக் கண்டதும் மலைத்துப் போகிறேனதிருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, நெடுந்தீவு என்று வெகு தொலைவிடங்களில் இருந்தெல்லாம் பயிற்சிக்காகப் பயணம் செய்து வருகிறார்கள் என்பதை அறியும்போது பொறுப்பு மிக அதிகமாகிறது……...

வாரா வாரம் கொழும்பு – யாழ்ப்பாணம் - கொழும்பு

என்று மாறி மாறிப் பயணம் புரிவது சிரமம் தருகிறது. கல்வி நிர்வாக சேவையில் இருந்த நான், அடுத்த பதவி உயர்வுக்கு முன் கற்பித்தல் அனுபவம் பெற வேண்டும் என்ற விதியைச் சுட்டிக்காட்டி,

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு ஓராண்டுப் பயிற்சிக்காகச் செல்கிறேன்……..

ஐ பி சி தமிழ் என்ற புலத்துத் தமிழ் வானொலியை லண்டனில் நான் தொடக்கியபோது

அதற்குத் தலைமை தாங்கி,

பாதிச் சுமையைத் தன் தோளில் சுமந்த பொறியியலாளர் ஞானரட்னசிங்கம்,

யாழ் மத்திய கல்லுரியில் என்மீது சுவறிய ஆசீர்வாத வரவே……

யாழ்ப்பாணம் நாடக அரங்கக் கல்லூரிக்கு நான் வந்து சேர்ந்போது,

கலை வளம் வற்றிய நிலையில் யாழ்ப்பாணம் துவண்டு கொண்டிருந்தது என்பதல்ல.

காலா காலமாக வழங்கி வரும் நாட்டுக் கூத்துக்கள் அங்கே இருந்தன.

வௌ;வேறு தொழில் சார்ந்த மக்களிடையே அவர்கள் தொழில் சார்பாகப் பேணி வரும் நாடகப் பண்பு சார் ஆடல் பாடல் வடிவங்கள், தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தன.

சமூக விழாக்கள் கலைக் கோலம் பூண்டிருந்தன.

சமய விழாக்கள் தொடர்பாக ஆண்டாண்டாகப் புதுப்பித்துப் பொலிவு பெற்று வரும் கரகம், கும்மி, கோலாட்டம், காவடி போன்ற கரண வடிவங்கள்,போற்றப்பட்டு வந்தன.

கலையரசு சொர்ணலிங்கம், நடிகமணி வைரமுத்து போன்ற நாடக பிதாமகர்கள் வேரோட விட்டிருந்த செழுமையான நாடக வடிவங்கள் போற்றி வளர்க்கப் பட்டுக் கொண்டிருந்தன.

இவை அனைத்தும் நிலவும் சுகமான சூழலுக்கே நான் வந்து சேருகிறேன்.

உலக நாடகப் பண்புகளை, அவற்றின் இலக்கண அமைதியுடன் கற்றுத் தேறி, அவற்றை அறிமுகப் படுத்துபவனாகவே நான் குழந்தையரின் சாரத்தியத்தில் தொடங்கும் நாடக அரங்கக் கல்லூரியை அடைகிறேன்

பயிற்சி பாதி, நாடகத் தயாரிப்பு பாதியாக வளர்கிறோம்;. ஓராண்டுப் பயிற்சியின் பின் நாடக அரங்கக் கல்லூரி தனக்கென நிறுவும் இரசிகர் அவையின் முன் கல்லூரி நாடகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மேடையேறுகின்றன. அனைத்துலகக் குழந்தைகள் ஆண்டில், குழந்தை சண்முகலிங்கத்தின் “கூடி விளையாடு பாப்பா!” கொழும்பு வரை செல்கின்றது. ஏ. சீ. தாசீசியசின் “பொறுத்தது போதும்!” என்ற மோடிப்படுத்தப்பட்ட நாடகம்,; தேசிய நாடகப் போட்டிக்காக கொழும்பு செல்கிறது.

கடமை நிறைத்த உவகையோடு காவலாளி வெளி நாடு செல்கின்றேன். மாதங்கள் சில கழிய, செய்தி வருகின்றது. சிறந்த நாடகத்துக்கான ஜனாதிபதி விருது உட்பட, நான்கு ஐந்து விருதுகளாம்.

முப்பதுக்கும் அதிகமான மொழிகளில் இயங்கும் லண்டன் பிபிசி யில் வேலை பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது.

எனது உலக கலைத் தொடர்புகள் விரிவடைகின்றன.

குர்தீ , சோமாலிய கலைக் குழுக்களுக்குப் பயிற்சி வழங்கும் வாய்ப்பும் எட்டுகிறது. நம்மைப் போன்ற அகதி இனத்தவர்கள் அவர்கள்.

அதே இழப்பு!

அதே ஏக்கம்!

, ஒலித் தமிழ் வலவன்; சங்கரண்ணா சங்கர் என்ற பெரியனின் தமிழ் அறிமுகம் பி பி சி யில் கிடைத்ததே மிகப் பெரும் கொடை என்பேன்.

லண்டன் பிபிசி யின் சென்னை அலுவலக விரிவாக்கம் தொடர்பாக

ஐந்து மாதப் பணித் திட்டத்தில் பிபிசி என்னை இந்தியாவுக்கு அனுப்ப,

கொழும்பில் முன்பு என் நாடக வளர்ச்சிக்கு பெரும் பலம் ஊட்டிய வீ. சுந்தா,

சென்னையில் எனது கலை, இலக்கிய, நாடகத் தொடர்பு வட்டங்களை விசாலப் படுத்தி உதவுகிறார்.

அன்று சுந்தா அறிமுகப் படுத்திய சி. அண்ணாமலை என்ற தமிழ் நாட்டு இலக்கியச் செவ்வளன்

இன்றும் அங்குள்ள கலைக் களத்தோடு எனக்கு உயிர்த் தொடர்பு ஏற்படுத்தித் தந்து உதவிக் கொண்டிருக்கிறார்.

தமிழ் நாட்டில், தமிழ் இலக்கியத் தத்துவப் பேராசான் வீ.அரசு, முன்னணி நாடக நெறியாளர் மங்கை போன்றோர் எனக்கு ஊட்டிய நாடக வளங்களால் ஒரு சுற்றுப் பருத்துவிடுகிறேன். வௌ;வேறு இடங்களில் நாடகப் பயிற்சிப் பட்டறை நடத்துகிறேன்.

எனது பிபிசி பணியோடு தமிழ் நாடக முயற்சியும், லண்டனில் தொடர்கிறது. அண்ணாவியார் இளைய பத்மநாதன் எழுதிய மீண்டும் ராமாயணம் மீண்டும் பாரதம் பிரதி எனக்குக் கிடைக்கிறது. லண்டனில் அது மேடையேறிஅண்ணாவியாருக்கும் நடிகர்களுக்கும் புகழ் சேர்க்கிறது. அப்போதிருந்தே லண்டன் களரி, ஒரு காத்திரமான கலைக் கூடமாகச் செயல்படத் தொடங்குகின்றது.

. வேரறுந்து,

புலம் பெயரந்து,

வளமாக வாழ வகையின்றித் திகைத்து நிற்கும் நிலையிலும்

தங்கள் மண்ணின் கலைகளைப் பதியனிட்டு வளர்த்தெடுக்க வேண்டும்

என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு ஒன்றிணைந்தவர்களே களரிக் கலைஞர்கள்.

பொழுது போக்குக் கேளிக்கைகளைக் குறைத்து, தங்கள் நாடக முயற்சிகளை அர்த்தம் உள்ளதாக்கும் முடிவோடு,

மண்ணையும் புலத்தையும் கலையால் ஒன்றிணைக்கும் உறவுப் பாலமாக களரியை வடிவமைக்கிறார்கள்.

மண்ணில் நடைபெறும் சம்பவங்கள் -

அவலமோ, வீரமோ, சாதனையோ –

இடம்பெற்ற மறு வாரமே அவற்றுக்கு நாடக வடிவம் கொடுத்து மக்கள் முன் கொண்டு செல்வதில் முனைப்பாக நிற்கிறார்கள்.

அகதிப் புகலிடத்துக்குப் பொருந்துவதாக, உடனடி அரங்கம் - இன்ஸ்ரன்ற் தியேட்டர் - உலக அரங்கில் உருவாகிறது.

நாடக நட்புக் கரங்களை அகல விரிக்கவும், தமிழ்க் கலை மூல வேர்களைத் தேடவும் லண்டன் களரியினர் தென்னிந்தியாவுக்கு மேற்கொண்ட ”நாராய்! நாராய்!” கலைப் பயணம், தமிழக நாடகக் கலை வளன்களுடன் ஒரு கலைப் பால உறவை ஏற்படுத்தித் தருகிறது. சென்னை பல்கலைக் கழகத் தமிழ்த் துறைப் பீடாதிபதி வீ. அரசு, நாடக நெறியாளர் மங்கை, முனைவர் பழநி போன்றோர் வளரத்து வந்த சென்னை பல்கலை அரங்கம் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கின்றது. தமிழ் நாடு பூராவும் உள்ள பல நாடகர்கள் களரியின் தமிழக கலைப் பயணத்துக்கு வரவேற்பு இனிமை ஊட்டுகிறார்கள்.

உலகத் தமிழ் நாடகர்களை

மூன்றாண்டுக்கு ஒரு தடவை ஒன்று கூட்டுவதன்

மூல நோக்கத்துடனேயே நாராய்! நாராய்! கலைப் பயணம்

லண்டன் களரியினரரல் கருவூட்டப் படுகிறது

. வௌ;வேறு பல்கலைக் கழகங்களுக்குச் செல்கிறோம்.

பங்க@ர் தமிழ்ச் சங்கத்திலும் உணர்ச்சி பூர்வமான வரவேற்புப் பெறுகிறோம்.

ஆய்வு நிலையங்களுக்குச் செல்கிறோம்.

சென்ற இடமெல்லாம் ஆங்காங்கே கருத்தரங்குகள்! நாடகங்கள்! அன்பு உபசாரங்கள்! நீக்கமின்றி, சென்ற இடமெல்லாம் ஒப்புடன் முகமலர்ந்து கிடைத்த தமிழ் வீட்டு விருந்துபசாரத்தில் திக்குமுக்காடிப் போகிறோம். இவை அனைத்துக்கும் பின்னே பேராசான் வீ. அரசு, தமது அணியோடு சோர்வின்றிச் செயல் பட்டதால் லண்டன் களரியின் கலைப் பயணத்துக்கு இரட்டிப்பு வெற்றி!

அகதிப் புலக் கூண்டில் எனக்கு இன்னொரு நாடகக் கபாடம் திறந்தவர்;, அன்ரன் பொன்ராஜா. குழந்தை சண்முகலிங்கம் நடத்தும் நாடக அரங்கக் கல்லூரியில் ……….பயிற்சி பெற்றவர். கந்தன் கருணையில் நடித்தவர். சுவிற்சலாந்தில் வசிக்கும் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது.

சுவிஸ் மண்ணுக்குப் பறக்கிறேன்

புலத்திலே , நம்மவருக்காகவேதான் கலை நிகழ்ச்சிகளை நாம் நடத்துகிறோம்

. அழைப்பில் அங்கே வந்து அமரும் ஒரு சில மேலை நாட்டவருக்கு, அவை காட்சிப் படிமங்களேயன்றிக் கருத்துப் படிமங்களல்ல.

அன்ரன் பொன்ராஜா, சுவிஸ் நாட்டவரையே இலக்கு வைத்து மெயின்ஸ்ட்றீம் தியேட்டரில் தம் நாடகங்களை மேடையேற்றி

நம் மண்ணின் பிரச்சினைகளையும் நம் கலை வடிவங்களையும் விவரமாக அறிமுகப் படுத்துவதில் தீவிரம் காட்டுகிறார். ….

. நாம் பஞ்சப் பிழைப்புக்காக வந்தவர்களல்லர்.

உயிர்த் தஞ்ச வாழ்வு தேடி வந்தவர்கள் என்பதை உணர்த்தும் வகையில்

ஈழக்கூத்தனின் ‘சிறீ சலாமி – என்ற பெயரில் தமிழ், ஜேர்மன், ஆங்கிலம் விரவிய மூன்று மொழிகளில் நாடகத்தை வடிவமைக்கிறோம். இந்த நாடகத்தின் வௌ;வேறு வளர்ச்சிக் கட்டங்கள் சுவிஸ் தொலைக்காட்சியினரால் பதிவு செய்யப்படுகினறன. இன்றைய சுவிஸ் நாடக அரங்கில் பேசத் தகுந்த நாடகாசிரியனாக எனக்கு - ஈழக்கூத்தனுக்கு- இடம் உருவாக்கி, அன்ரன் பொன்ராஜா எனக்குப் பெருமை தருகிறார். ஆனாலும் வௌ;வேறு மாநிலங்களில் சிறந்த நாடகனுக்கான விருதுகளை வௌ;வேறு ஆண்டுகளில் அன்ரன் பொன்ராஜா பெறும்போது, என் நோற்றான் கொல் எனத்

தகுநிலையில் நான் எய்திய சந்ததி விருத்தி என்ற திருப்தி இருக்கிறதே,

அதுவே அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த பெருங் கொடை என்று நெஞ்ச ஈரலிப்போடு கூறுவேன்.

. சுவிற்சலாந்து தனது 700 ஆம் ஆண்டு நிறைவை விமரிசையாகக் கொண்டாடியபோது, வெளி நாட்டவர்களான அன்ரன் பொன்ராஜாவும் ஏ. சீ. தாசீசியசும் அரசின் கலைத் துறை ஆலோசகர்களாக நியமனம் பெறுகிறார்கள்.

ஒரு நாடு பிரிக்கப் பட்டாலென்ன,

பல மாநிலங்கள் ஒன்றிணைக்கப் பட்டு

ஒரு நாடாக ஆக்கப் பட்டாலென்ன,

அனைத்துக்கும், மக்களின் சுபீட்சமே அடிப்படையாகும்

என்ற கருத்தின் அடிப்படையில் -

ஈழக் கூத்தனின் புரூடர் கிளவுஸ் உண்ட் பாண்டவா பிறின்சென் - என்ற

என் மும்மொழி நாடகம்

மீண்டும் சுவிற்சலாந்தில் மேடையேறுகிறது.

கடந்த ஆண்டில் மேடையேற்றப்பட்ட - ஹப்பி பேத் டே வில்லியம் தெல் - நாடகத்தின் கூத்துப் பகுதியைத் துலக்கும் பணியை அன்ரன் என்னிடம் ஒப்படைக்கிறார். தமிழ் நாடு தெருக்கூத்து ஆடைப்புனைவும்

ஈழத்துக் கூத்துப் பாடலும் ஆட்டமும் இணைந்து

தமிழ்க் கலைச் செழுமையைப் பறை சாற்றிய அந்த நாடகம்,

பொன்ராஜாவுக்கு மேலும் ஒரு மாநில விருதைச் சூடுகிறது.

எனக்குப் பெருமை தருகிறது.

லண்டனிலே பி பி சி யிலிருந்து விலகி,

ஊடகத் தொழில் நுட்ப ஞானம் பெற்றிருந்த ரீ. ஞானரட்னசிங்கம் தலைமையில்

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - ஐ பி சி தமிழ் -

என்ற 24 மணி நேர வானொலி ஒன்றைத் தொடக்குகிறோம்.

ஐரோப்பா, மத்திய கிழக்கு முழுவதற்கும் இலவசமாகவே செல்லும் அந்த வானொலி வழியாக,

உணவுத் தடை,

மருந்துத் தடை,

செய்தித் தடை ஆகியவற்றால் முடக்கப்பட்டும் இருட்டடிக்கப் பட்டும்

திணறிக் கொண்டிருந்த இலங்கையின் – தமிழர் பாரம்பரிய மண்ணுக்கும்

தடை உடைத்து

ஒரு மணி நேரச் செய்தி கொண்டு செல்கிறோம்.

தென்னிந்தியத் தமிழக மக்களும் நம் மண்ணின் உண்மை நிலை உணரும் நிலையை ஏற்படுத்துகிறோம்.

மண்ணின் அவலங்களை ஐரோப்பாவில் வாழும் மக்களுக்கு விலாவாரியாக எடுத்துரைக்கிறோம்.

இவ்வாறு, காத்திரமான ஒரு தருணத்தில் உயிரோட்டமான உறவுப் பாலத்தை உருவாக்குகிறோம்.

உணவுத் தடையும் மருந்துத் தடையும் மனித உரிமை மீறல்களே எனவும், மனிதாபிமானக் கொடுமையே எனவும் அனைத்துலகுக்கு அடித்துக் கூறுகிறோம்.

ஐரோப்பாவின் இந்தப் புதிய வானொலி உறுதியாகக் கால் ஊன்றத் தொடங்கிய பின்னர்,

அதை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் ஆளுமையும் ஊடக வளமும் தம்மிடம் இருப்பதாகக் கூறிப் பொறுப்பேற்க வந்தவர்களிடம்

அதை உவகையோடு ஒப்படைத்து விட்டு,

ஞானரட்னசிங்கமும் நானும் ஒதுங்குகிறோம்

அடுத்த வாரம், ஐ பி சி யின் பத்தாண்டு நிறைவு!

ஒதுங்கியிருந்தாலும் நம் ஒலி இல்லாக் குரலில்,

இன்று செய்தி ஒலிச் சுருதி கூட்டி நிற்கும்

அந்தச் சேயை நிறைவாக வாழ்த்துகிறோம்.

ஜேர்மனியில் இருந்து ஓர் அழைப்பு.

சிவசோதி வரதராஜா கூப்பிடுகிறார்.

புலம் பெயர்ந்த களங்களில் இயங்கும் வார இறுதித் தமிழ்ப் பள்ளிகளில் நம் பாலருக்குத் தமிழ் அறிவு ஊட்ட, பாட நூல்கள் தயாரிக்கும் திட்டத்தில் பங்கெடுக்க வருமாறு கேட்கிறார். , குழந்தைகள் கல்விப் பணியில் ஈடுபட மனம் ஒப்பி ஜேர்மனி செல்கின்றேன்.

 தமிழ் நாட்டில் இருந்து அகஸ்தியலிங்கம், சுந்தரமூர்த்தி என்று இரண்டு பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள்,

 40 இலக்கண நூல்களுக்கு மேல் எழுதிய அண்ணாமலைப் பேரறிஞர் சண்முகம்,

 உலகத் தமிழாராய்ச்சி மையத்தின் தலைமைப் பணிப்பாளர் இராமர் இளங்கோ,

 பட்டறிவுப் பலத்தோடு நடைமுறைப் பணிக்கு வேகம் தந்த சிங்கப்பூர் பேராசிரியர் திண்ணப்பன்,

 கொழும்பில் இருந்து பேராசிரியர் சந்திரசேகரன்,

 யாழ்ப்பாணத்தில் இருந்து பேராசிரியர் காரை சுந்தரம்பிள்ளை

 ஆகியோரை ஒன்று திரட்டி அழைத்தபடி

 நம் தமிழ் அறிவுச் சொத்து

 பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி

 வந்து சேர்கிறார்.

 மூன்று வாரங்கள் அவர்களுடைய கூர்மையான வழிகாட்டலில் மல்லீஸ்வரி , நிர்மலா, புலவர் அழலாடி, தாசீசியஸ் ஆகியோர் பாடங்களைக் கூடி எழுதுகிறோம். ………

;. ஒவ்வொரு வகுப்புக்கும் தேவையான உரையாடல் இறுவட்டுச் சாரத்தியத்தை வரதராஜா என் மீது சுமத்திய வேளை,……..அப்பணியில் ஈடுபடுகிறேன்.

ஊர்த் தமிழ்ச் செப்பல் ஓசையோடு

புலத்துத் தமிழ்ப் பாலர்களின் காதில்

மொழி ஒலி பாய்ச்ச எனக்கு வாய்ப்பளித்த சிவசோதி வரதராஜாவை

இன்று நன்றியோடு நினைவு கூருகின்றேன்.

ஃபிரான்ஸ் ரீ ரீ என் - தமிழ் ஒளிப் பணிமனையில் தரித்திருந்து

அதைச் சீர்மைப் படுத்துமாறு அன்புத் தலைமைகள் பணித்து, நிகழ்ச்சிப் பணிப்பாளர் பதவியில் அமர்த்த,

பதினெட்டு மாதங்கள் அங்கு தரித்து, திட்டங்களை வகுத்துத் தலைமையிடம் ஒப்படைத்து விட்டு லண்டன் திரும்புகின்றேன்.

புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடையே மண்ணின் கரிசனையோடு இயங்குபவர்கள் பலர்.

நீதியான சமாதானத்துக்காகவும் மக்களாட்சிக்காகவும் குரல் கொடுக்கும் அமைப்புக்களும் பல.

புலத்திலே இவை ஒன்றுபட்டு நின்று, தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் பெருகத் தொடங்க,

அதற்கு வடிவம் கொடுக்கும் விதத்தில்,

அதற்கான திட்டமிடல் குழுவில் சேர்க்கப்படுகிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சீ ஜே பி டி – சென்ரர் ஃபோர் ஜஸ்ற் பீஸ் அன்ட் டெமோக்றசி – என்ற பதாகையின் கீழ் இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறோம்.


சீ ஜே பீ டி யின் கனதியும் உத்தேசப் பயன்பாடும் அனைத்துலக மட்டத்தில் உணரப்பட்ட நிலையில் அது நிறுவக மயப் படுத்தப்படுகிறது.

கருவை வளர்த்து உருவாக்கியவர்களில் நடராஜா இளங்கோ அனைத்துலக ஒருங்கிணைப்பைப் பொறுப்பேற்க,

அன்ரன் பொன்ராஜாவும் தாசீசியசும் பணிப்பாளர்களாக்கப் படுகிறார்கள்.

இந்த முயற்சியில் ஆனா எழுதப்பட்ட முதல் நாளில் இருந்து வழி-ஒளி பாய்ச்சிய அறிஞர் நடேசன் சத்தியேந்திரா,

தொடர்ந்தும் அறிவு வழி காட்ட இசைகிறார்.

சுவிற்சலாந்து லுற்சேண் நகரில் இதற்கான பணிமனை நிறுவப் பட்டதும் அங்கே ஒடுங்குகிறேன்.

இன்று அங்கேதான். நாளை எங்கேயோ?

இனி, இந்தப் பொது அவையிலே

என் உள் வீட்டுக் கதை பறையவும் அருள் கூர்ந்து அனுமதி தாருங்கள்.

என்ர ஐயா! என்ர அம்மா!

தங்களுடைய ஐந்து பிள்ளைகளும் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற வேட்கையோடு,

கிராமத்தில் இருந்து நகரத்து விடுதிப் பள்ளிகளுக்கு எங்களை அனுப்பிப் பெருஞ் செலவு செய்தவர்கள்.

ஆளணி வசதிகளோடு அவர்கள் செல்வந்தர்களாகவும் இருந்தார்கள்.

வறுமையையும் சந்தித்தார்கள்.

ஆனால், பிள்ளைகளை மேல் நிலைப் படுத்துவதில் என்றுமே குறியாக இருந்தார்கள்.

அவர்களுடைய மன உறுதி பிள்ளைகளிலும் படிந்தது.

என்ர அக்காச்சி! தன்ர முதல் சம்பளத்தில் முதலில் வாங்கியது இந்தத் தம்பிக்குத்தான்.

உடுப்பு.

என்ர ஆசைத் தம்பி தன்ரஅண்ணாவுக்கு என்ன என்ன பிடிக்கும் என்று தேடித் தேடிச் சுவையாக வாங்கி வருவான்.

நான் ஒரு சாப்பாட்டு ராமன்!

என்னுடைய சின்னத்தம்பி, சாப்பாட்டு விடயத்திலே மட்டும் என்னோடு போட்டி.

ஆனால் பெரியண்ணா நல்லாக வர வேண்டும் என்பதில் சின்னனில் இருந்தே, இன்றைக்குக் கூட, அவனுக்குத் துருவ அக்கறை!

துருவப் பிடிவாதம்!

அடுத்தது எங்கள்வீட்டுக் கடைக் குட்டி!

என்ர தங்கச்சி!

எல்லோருக்கும் செல்லம்!

நாங்கள் அம்மாவிடம் அடி வாங்கியதில்லை.

ஆனால் தஙகைச்சியிடம் எல்லோரும் நன்றாக செல்ல அடி வாங்கியிருக்கிறோம்.

விடுதியில் இருந்து ஐந்து பேரும் விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது என்ன கலகலப்பு!

இனி,

இன்று எனக்கு எல்லாமே ஆகிவிட்ட

என்ர விமலா!

அவள், என்னுடைய முற் பிறப்புத் தேட்டம்.

நான், என்ர பிள்ளைகள் கவிதா, நிவேதா, - எல்லாருடையவும் சுமைதாங்கி என்ர விமலாதான்.

வீட்டுப் பொறுப்பு!

வேலைக்குப் போய் உழைப்பு!

சுறுசுறுப்பு!

எந்த இக்கட்டான கட்டத்திலும் என் கவலையைக் கலைக்கும் கலகலவென்ற சிரிப்பு!

எனக்கும் என்னுடைய சுற்றத்துக்கும் நல்லதையே நினைப்பவள்! நல்லதையே புரிபவள்! அதுதான் உண்மை. மிகையல்ல.

நான் பாதி, அவள் பாதி என்றால்,

எங்களில் முதல் பாதி விமலாவேதான்!

எனக்கு அவள் குஞ்சு! அவளுக்கு நான் குஞ்சு!

இங்கிவளை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று இதய உச்சாடனம் செய்கின்றேன்.

எனது ஏற்புரையை நிறைந்த நன்றியோடு நிறைவு படுத்து முன்,

மீண்டும், பெரிய முகவரி இல்லாத எனது சிறிய ஊர்த் தமிழ்ப் பள்ளிக்குக

; கூடு பாய்கின்றேன்.

அறுபது ஆண்டுகள் முன்னதாக

எனது ஏழு வயதில் முதல் நாடக விருது பெறும்போது ஊர் கூடி வாழ்த்தியது.

இன்று, உலகப் பெரு நாடுகளில் ஒன்றான கனடாவில்,

கனதியான முகவரி கொண்ட ரொறொன்ரோ பல்கலைக் கழக தெற்காசிய பிரிவும்

என் இனத்தின் தேர்ந்த சான்றோர் வீற்றிருக்கும் இயல் பீடமும்

இந்த முதிய வயதில் என்னைப் பாராட்டுகிறது.

திரும்பிப் பார்க்கிறேன்.

நாடகனாக,

ஊடகனாக,

கல்விச் சேவகனாக,

இனத்தின் இன்றைய தேவைப் பணியாளனாக,

நான் இதுவரை நடந்து வந்த பாதையில்

என்னோடு கூடி வழி நடந்தவர்களை,

வழி நடத்தியவர்களை,

வழியில் என் இம்சைகளைப் பொறுத்தவர்களை,

வெற்றிகளின்போது என் முதுகில் தட்டிக் கொடுத்தவர்களை –

எல்லோரையும் நெஞ்சில் இருத்துகிறேன்.

பூஜிக்கிறேன்.

அவர்களால் உருவானவன் நான்.

அவர்களால் வளர்ந்தவன் நான்.

இந்த விருதை அவர்கள் சார்பாக இங்கே சமுகமளித்திருக்கும் அவையினர் ஒவ்வொருவரிடம் இருந்தும் நன்றியோடு ஏற்கிறேன்.

நெஞ்சம் நிறைய ஒவ்வொருவருக்கும் நன்றி கூறுகிறேன்.

நல்லாய் இருங்கள் என்று இதய சுத்தியோடு வாழ்த்துகிறேன்.


thangarsivapal@yahoo.ca


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner