இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2008 இதழ் 107  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்: சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை - 1

அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் சித்ரா ரமேஷ்

- ஜெயந்தி சங்கர் -

சித்ரா ரமேஷ்ஜெயந்தி சங்கர் சித்ரா ரமேஷ் இலக்கியத்தைக் குறித்துப் பேசுமிடத்தில், 'இறைவன் இலக்கியம் இரண்டுமே இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும்
பரம்பொருள் தானே!', என்று சொல்லியிருப்பார். சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் 'வாழ்க்கையில் இலக்கியம்' என்ற தலைப்பில் விறுவிறுப்பாகவும் சரளமாகவும் உரையாற்றி எல்லோரையும் அசத்தியவர். இவருக்கு எழுத வேண்டும் என்பதில்
மிகப் பெரிய குறிக்கோள் இல்லாததால் அதிகமாக எழுதுவதை விட அதிகமாகப் படிக்க விரும்பும் வாசகியாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். படிப்பது என்ற விஷயம் பொழுது போக்கிற்காக சில சமயம் நிகழலாம். ஆனால், எழுதுவது என்பது வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் செய்யப்படும் விஷயம் இல்லை என்று சொல்வார் சித்ரா,

பதின்ம வயதிலேயே இவரது கட்டுரைகள் தமிழாசிரியையை விட இவருடைய தோழிகளுக்கு மிகவும் பிடித்திருக்கும். அந்தக் கட்டுரைகள் எந்த இலக்கண வரையறைக்குள்ளும் வராமல் சித்ராவின் பாணியில் அமைந்தவை. வெகுஜனப் பத்திரிகை ரசனையிலிருந்து விலகிநின்ற மேம்பட்ட எழுத்துக்களை இவரது மூத்த சகோதரர்தான் இவருக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.

'திண்ணை' இணையதளத்தில் 'ஆட்டோகிரா·ப்' என்ற 25 வாரங்கள் வெளியான இவரதுகட்டுரைத் தொடர் பரவலான வாசிப்பையும் கவனத்தையும் பெற்றது. சித்ரா, இந்தத் தொடரை 'எதிர்பாராமல் நடந்த இனிய விபத்து' என்று குறிப்பிடுவார். பெரிய திட்டங்கள் எதுவுமில்லாமல் எழுதத் துவங்கி, பின்னர் வாராவாரம் எழுதியிருக்கிறார். இந்தத் தொடருக்கு இன்றும் தொடர்ந்து வாசகர் கடிதங்கள் வந்தபடியிருக்கின்றன. இதுகுறித்துச் சொல்லும்போது, "வாசகர்கள் அந்த 'ஆட்டோகிரா·ப்'பில் தமது கையெழுத்தையும் பார்க்கிறார்கள்
என்று தோன்றுகிறது", என்பார் சித்ரா. வாசிக்கும் யாராலும் கட்டுரையில் சொல்லப்பட்டவற்றுடன் தன்னைப் பொருத்திப்பார்க்க முடியும். இந்தக் கட்டுரைகளில் சொல்லப் பட்டவை அவரது இளமைப்பருவத்தின் 'மலரும் நினைவுகள்' எனினும், சாதாரண நினைவலைகளைப் போலில்லாமல் ரசித்துச் சிரிக்கக்கூடிய அங்கதத்துடன் ஆங்காங்கே நிகழ்கால நிகழ்வுகளுடன் பொருத்தி மிகவும் சுவாரசியமாக எழுதியிருப்பார். இக்கட்டுரைத் தொடரில் இவரின் சமூக அவதானிப்புகளின் ஆழமும் விசாலமும் வாசிப்பவருக்கு தெள்ளெனப்புரியும்; பிரமிப்பையும் ஏற்படுத்தும். மொழி பாய்ச்சலாய் இருக்கும். கிரேஸி மோகன் நாடகங்களில் ஒரு ஜோக்குக்குச் சிரித்து முடிக்கும் முன்னர் சிரிப்பலையில் அடுத்த ஜோக் காணாமல் போவதைப் பார்த்திருப்பீர்கள், இல்லையா? அதுபோல அடுத்தடுத்த வாக்கியங்களுக்கு அடுக்கடுக்காகச் சிரிக்கத் தயாராக இருக்க வேண்டும். படித்து முடித்ததும் சொந்த நினைவுகளில் மூழ்கவும்தான்.

நகைச்சுவை என்றாலும் அதில் உள்ளுறையாக ஒரு உன்னத நோக்கம் இருக்க வேண்டும் என்று நம்புகிறார் சித்ரா. சார்லி சாப்ளின் நகைச்சுவையைப் போல். எழுத்து என்பது ஒரு காலப்பதிவு. அதில் ஈடுபடும் போது பொறுப்புணர்ச்சி தேவை. தவறான வார்த்தைகளோ அல்லது கருத்துக்களோ எழுத்தின் மூலம் பதிவு செய்யப்படும் போது அந்த தவறுக்கு ஒரு எழுத்தாளனே முழுப் பொறுப்பு. எனவே, எழுத்தும் எண்ணங்களும் எப்போதும் உன்னதங்களையே சொல்ல வேண்டும் என்பது ஒரு இலட்சியவாதம். அப்படி இலட்சியவாதங்கள் பேசி ஏமாற்றிக் கொள்ளும் இலட்சிய எழுத்தாளர் தான் இல்லை என்றும் ஒரு தவறானக் கருத்தைச் சொல்வதன் மூலம் சமுதாயப் பொறுப்புணர்ச்சியற்று இருக்க விரும்பவில்லை என்றும் சொல்வார். 'கனமான நோக்கம்' ஒன்றைமுன் கூட்டியே தீர்மானம் செய்து கொண்டு கதைகள் எழுத முடியாது. கட்டுரைகள் எழுதலாம். கதையின் இயல்பான ஓட்டத்தில் அவ்வப்போது கதாசிரியர் உள்ளே புகுந்து 'திருடாதே பாப்பா திருடாதே' என்று அறத்தைப் பேசாமல் ஆனால் அதே சமயம் அறம் வளர்க்க நினைக்கும் என்ற அடிப்படை எண்ணங்கள் எழுதுவதில் தனக்கு உண்டு என்றும் கூறுவார்.

சித்ராவின் 'பிதாமகன்' என்ற சிறுகதை அவருக்கு அங்கீகாரம் வாங்கிக் கொடுத்த இன்னொரு முக்கியப் படைப்பு என்று துணிந்து சொல்லி விடலாம். இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ஒரு பிரச்சனையைப் பேசும் இந்தச் சிறுகதை அற்புதமானது. வெளிநாட்டில் இறந்துபோன தந்தையின் பிரேதத்தைத் தன் சொந்த நாட்டுக்கு/ ஊருக்கு எடுத்துச் செல்ல முயலும்போது எதிர்கொள்ளும் சவால்களினூடாகப் பயணிக்கும் சிறுகதை இது. நெருக்கடிகள் மிகுந்த உலகில் ஒவ்வொரு செயலுமே வெறும் கடமையாகச் செய்யப் படுகின்றன என்பதைச் சுவாரசியமாகச் சொல்லும். செய்நேர்த்தியிலும் சரி வடிவத்திலும் சரி இந்தச் சிறுகதை சிறப்பாக அமைந்திருந்தது. வாசிப்பவருக்கு மூத்த தமிழ் எழுத்தாளர் தி. ஜானகிராமனின் எழுத்தை வாசித்தது போன்ற அனுபவம் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உண்டு. இந்தச் சிறுகதை சித்ரா ரமேஷின் எழுத்தின் மீதான எனது நம்பிக்கையைப் பலப்படுத்தியது என்றே உணர்ந்தேன்.

அதிக இடைவெளிகள் இல்லாமல் தொடர்ந்தும் எழுதவேண்டிய திறன்மிகுந்த ஓர் எழுத்தாளர் இவர். எண்ணிக்கையில் குறைவாகவே எழுதியிருந்தாலும் எழுதியவை 'சத்தான கதைகள்' என்று தன்னம்பிக்கையுடன் கூறும் சித்ரா ரமேஷ் ஒரு முதுகலைப் பட்டதாரி. தமிழகத்தில் பிறந்த இவர் இப்போது சிங்கப்பூர்க் குடிமகள். சிறுவயதில் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 1990களின் துவக்கத்தில் சிங்கப்பூருக்கு வந்த பிறகுதான் சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருக்கிறார். சிங்கப்பூரில் குடியேறிய பிறகு பல நட்புகள், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், தமிழ் முரசு, இணையம் போன்ற பல ஊடகங்களின் மூலம் படிப்பதற்கான இவருக்கான எல்லைகள் விரிவடைந்திருக்கிறது.சித்ராவின் அனைத்து முயற்சிகளுக்கும் துணைநிற்கும் அனுசரணையான இவரது கணவர் ரமேஷ் ஒரு பொறியாளர். பொறியியல் படிக்கும் கௌதம் என்ற ஒரு மகன், புகுமுகவகுப்பில் பயிலும் சுருதி என்ற ஒரு மகள் என்று இரண்டு குழந்தைகள் இவருக்கு.

எழுத்தைக் குறித்து கேட்டால் சொல்ல இவருக்கு நிறைய இருக்கிறது. யாரும் கையைப் பிடித்து எழுது என்று வற்புறுத்த முடியாது என்பார். அதே நேரத்தில் எழுதாமல் இரு என்று கையைக் கட்டிப் போடவும் முடியாது. எழுதாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுதிக் குவித்து இனிமேல் எழுத எதுவுமில்லை என்று நீர்த்து போகும் போதோ, அல்லது எழுத்து, இலக்கியம் எல்லாவற்றிலும் அவநம்பிக்கை ஏற்படும் போதோ நிகழலாம். இப்போதைக்கு இவருக்கு எழுத வேண்டாம் என்ற தீர்மானம் எதுவுமில்லை. கண்டிப்பாக இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணமே உண்டு. எழுத வேண்டும் என்று அவகாசம் கிடைக்கும் போது எழுத எதுவும் தோன்றாமல் போய்விடுகிறது. வேலைப் பரபரப்பில் இதை இப்படி எழுதலாமே என்ற கற்பனைகள் தோன்றும். பரீட்சை எழுதும் போது கவிதை வரிகள் எழுத வருவது போன்ற வாழ்வின் அபத்தங்களில் இதுவும் ஒன்றுரைப்பார். கையில் பேப்பர் பேனா எல்லாம் இருக்கும் போது வெற்றுத் தாள்கள் மட்டுமே மிஞ்சும்.

'கடல் கடந்த கனவு' என்ற இவரது சிறுகதை சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றது. தேசிய கலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்க்ஸ் இணைந்து இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் 'தங்கமுனைப் பேனா விருது -2005'ல் 'பறவைப்பூங்கா'விற்காக மூன்றாம் பரிசு பெற்றார். 'கடவுளின் குழந்தைகள்' என்ற இவரது சிறுகதை நாடக வடிவமாக்கப்பட்டு சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சிறந்த மேடைப்பேச்சாளரான இவர் ஓர் ஆசிரியருமாவார். இவரிடம் விஞ்ஞானப் பாடங்கள் பயிலும் மாணவர்கள் மெச்சிப் பேசுவதை நானே கேட்டதுண்டு. மாணவன் மெச்சும் ஆசிரியராக விளங்குவது,> அதுவும் இந்த யுகத்தில் எத்தனை சிரமம் என்று ஆசிரியர்கள் அறிவார்கள்.

பட்டிமன்ற மேடைகளிலும் இவர் பேசுவார். இயல்பாகவே கலகலப்பாகப் பேசி எல்லோரையும் கவரும் இவர், மனதில் பட்டதைப் பளிச்சென்று பேசக்கூடியவர்.வீட்டுப் பராமரிப்பிலும் சமையல் கலையில் கூடச் சிறந்து விளங்குபவர். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் செயலவை உறுப்பினராக பதவி வகிக்கும் இவரின் தலைமைத்துவமும் ஆளுமையும் சிங்கப்பூரில் மிகவும் பிரசித்தம். சித்ராவின் சமீபத்திய கனவு - விரைவில் தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றைப் பதிப்பிப்பது. அந்தத் தொகுப்பு வெளிவரும்போது சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களிடையே இவருக்கு இருக்கும் முக்கிய இடம் உறுதிப்படும் என்பதில் சந்தேகமில்லை.

jeyanthisankar@gmail.com
http://jeyanthisankar.blogspot.com/

***********************

பறவைப்பூங்கா

- சித்ரா ரமேஷ் -


சித்ரா ரமேஷ்அந்தப் பழங்கால பிரிட்டிஷ் கட்டடத்தை விட்டு வெளியே நடந்தாள். வெயில் முகத்தைச் சுட்டெரித்தது. இதைப் போன்ற உயரமான மேற்கூரையும் வளைவுகளையும், நீளமானத் தாழ்வாரங்களையும் கொண்ட கட்டடம் இன்னும் வேறு ஏதாவது இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தாள். ரா•பிள்ஸ் பிளேஸில் இல்லை டோபிகாட் எம்ஆர்டி அருகில் மெக்டொனால்ட் ஹவுஸ் இதே போலத்தான் இருக்கும். உள்ளே போய்ப் பார்த்தால்தான் தெரியும். தினமும் நடந்து போகும் பாதையில் எதிர்ப்படும் மனிதர்கள், முகங்கள், உடைகள், வாசங்கள் பழகிவிடுவது போல் கட்டடங்களும் பழகி விடுகின்றன. சில கட்டடங்கள் சிலீரென்று அளவுக்கதிகமாகக் குளுமையைத் தந்து மரண அறையைப் போல பயத்தைத் தருகின்றன. சில நண்பர்கள் போன்ற இதத்தைத் தரும். சில கட்டடங்கள் அம்மாவைப் போல் பாதுகாப்பைத் தரும். இத்தனை நாட்கள் காலையில் வேலைக்குப் போகும் போதெல்லாம் பாதுகாப்பைத் தந்த கட்டடம் இன்று அவளைப் வெளியேப் பிடித்துத் தள்ளியது.ஆட்குறைப்புச் செய்கிறது என்று சொல்லப் பட்டது. பாதிக்கும் மேற்பட்ட அறைகள் காலியாகவே இருந்து கொண்டுதான் இருந்தது. இப்போதல்ல. நிர்மலா வேலைக்குச் சேர்ந்த அன்றிலிருந்து அப்படித்தானிருந்தது.

நிர்மலாவும் ஷாலினியும் வாக்-இன்-இண்டர்வியூ என்று ஒன்றாக நேர்முகத் தேர்வுக்கு வந்தார்கள். வரவேற்பாளர்களாக இருக்க விரும்புகிறோம் என்று சொன்னதும் இண்டெர்வியூ செய்த பெண்மணி அழகாகச் சிரித்துச் சிரித்துப் பேசி இந்த ஹோட்டலில் வேலை செய்யும் அனைவருக்கும் எல்லா வேலைகளும் கற்றுத் தரப்படும். முதலில் ஹவுஸ் கீப்பராக பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு வேலை நிரந்தரமான பின் வரவேற்பாளராகவும் வேலை செய்யலாம் என்று வாக்குறுதி தந்தார். எல்லா வாக்குறுதிகளும் நிறைவேற்றப் பட வேண்டும் என்ற கட்டாயமா? வாழ்க்கையில் கடவுள் முன் உற்றார் உறவினர் முன் எடுக்கப் பட்ட வாக்குறுதியை தாஸ் காப்பாற்றவில்லை. இதென்ன பெரிய வாக்குறுதி? ஒரு வேலையில் சேர விருப்பம் தெரிவித்தப் பின் இன்னொரு வேலைக்கு மாற விரும்பும் சின்ன விஷயம். ஆனால் இந்தச் சின்ன விஷயம் நிறைவேறாமல் போனது கூட தன்னுடைய துரதிருஷ்டம் என்று நினைக்கவில்லை. அதைப் பற்றிப் பேசி நினைவூட்டலாம் என்றால் மேடம் மேரி சூ அந்த ஹோட்டலில் எங்கேயும் கண்ணில் படவேயில்லை. அவளுக்கும் நிறைவேறாத வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு ஷாலினி மாதிரி கோபித்துக் கொண்டு வேலையை விட்டுப்
போய்விட்டாளா?

இவர்களுக்கு படுக்கை விரிப்புகள் மாற்றுவது, பூச்சாடிகளில் பழையப் பூக்கள் மாற்றி புதுப் பூக்களால் அலங்கரிப்பது, கழிவறையில் வாசனைக் காற்றைப் பரவ விடுவது, குட்டி குளிர்ப்பதனப் பெட்டியில் சீல் செய்து வைக்கப்பட்டிருக்கும் பானவகைகளின் சீல் பிரிக்கப்பட்டிருக்கின்றதா என்று சரிப் பார்த்து போன்ற வேலைகள் தொடர்ந்தன. சீலை சும்மாத்தானே பிரித்துப் பார்த்தேன் அதிலிருந்து ஒரு சொட்டுக் கூட குடிக்கவில்லை இதை ஏன் பில்லில் சேர்க்கிறீர்கள் என்று அசட்டுக் கேள்வி கேட்கும் பெரிய மனிதர்கள், குடித்து விட்டு அதற்குப் பதிலாக கோக்கோ கோலாவை நிரப்பி என்னது சீல் பிரிக்கப்பட்டுள்ளதா நாங்க ஓப்பன் செய்யவே இல்லையே உங்க ஹவுஸ் கீப்பிங்லே பிரச்சனை என்று சாதிக்கும் சாமர்த்தியசாலிகள் இப்படி நிறைய பேரை சமாள்¢த்தாகிவிட்டது. ஒரு நாள் அறை வாடகை இருநூறு முன்னூறு வெள்ளி கட்டத் தயாராக இருப்பவர்களுக்கு ஏனோ இதில் ஒரு அல்பத்தனம் வந்து விடும். ஷாலினிதான் மெள்ள விசாரித்தாள். எங்களுக்கு ஏன் •பிரன்ட் ஆ•பிஸ் வேலையே கொடுப்பதில்லை என்றுக் கேட்டாள். ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு வந்து விட்டு எப்படி •பிரன்ட் ஆ•பிஸ் வேலை கொடுக்க முடியும் என்று பதில் வந்தது. ஷாலினி அன்று முழுவதும் கொதித்துக் கொண்டிருந்தாள்.

“நம்பளால தலையை விரிச்சு போட்டுக்கிட்டு வேலை செய்ய முடியாதா லா! நம்பக் கையால ரூம் சாவிய எடுத்துக் கொடுத்தா நம்ப கருப்பு ஒட்டிக்கிடுமா”, என்று ஆத்திரப்பட்டாள்.

“ஆமா! பெரிய வேலை! வீட்டுக்குப் பக்கமா •பாக்டரிலே வேலையிருக்கு நிம்மி! வாரம் நாலு நாள் ராத்திரி வேலை! மூணு நாள் லீவு! ராத்திரி வேலை முடியலைன்னா பகல் ஷி•ப்டுக்கு மாறிக்கலாம். நீயும் வந்துடேன்”, என்று தைரியமாக வேலையை விட்டாள். இவளையும் கூப்பிட்டாள். நிர்மலாவுக்கு வழக்கம் போல் தயக்கம். வரவில்லை என்று சொல்லிவிட்டாள்.

“நீ எப்போத்தான் ரொம்ப யோசிச்சிக்கிட்டேயிருக்கறப் பழக்கத்தை மாத்திக்கப் போறியோ? ரொம்ப யோசிச்சா எந்த இடத்திலேந்தும் மாறவே முடியாது”, என்று சொல்லிவிட்டு அவள் வேலை மாறி போய்விட்டாள்.

“ நம்ப ரெண்டு பேரும் தினமும் நல்லா டிரெஸ் பண்ணிக் கொண்டு சிடி பக்கம் வேலைக்குப் போகணும் ஸ்கூல் மாதிரி யூனி•பார்ம், ஷி•ப்ட் வேலைல்லாம் இல்லாம ஆ•பிஸ் வேலைக்குப் போகணும் ”, என்று ஆசைப் பட்டதே ஷாலினிதான். அவளால் கிடைத்த வேலைக்குத் தயக்கம் இல்லாமல் மாற முடிகிறது. நிர்மலாவால் முடியவில்லை. அவளுக்குத் தான் செய்யும் வேலையில் எந்தப் பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை. தினமும் வித விதமான மனிதர்களைச் சந்திக்க முடிந்தது. தினமும் செந்தோசாவுக்கும் பறவைப் பூங்காவுக்கும் எப்படிப் போவது என்று வழி சொன்னாள். தான் கடைசியாக செந்தோசாவுக்கும் பறவைகள் பூங்காவுக்கும் போனது எப்போது என்று யோசித்துப் பார்த்தாள். தொடக்கநிலை ஐந்தில் படிக்கும் போது ‘இளம்விஞ்ஞானி’ பேட்ஜ் வாங்குவதற்காக மிஸஸ் சான் கூட்டிக் கொண்டுப் போனாள். அந்தப் பறவைகள் இன்னும் உயிரோடு இருக்குமா? கிளிகளும் நாரைகளும் எத்தனை நாட்கள் உயிரோடு இருக்கும்? இருபது வருடம் இருக்குமா? இயற்கைச் சூழலை விட செயற்கைச் சூழலில் வாழும் பறவைகள் இன்னும் அதிக நாட்கள் வாழலாம். வேளாவேளைக்குத் தவறாமல் உணவு. உடலில் கோளாறு என்றால் உடனடியாக கவனிக்க மருத்துவ வசதிகள். தான் பார்த்த அதே கிளிகள் இன்னமும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கலாம். கணக்குகள் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கலாம். அதே நாரைகள் இறக்கைகள் விரித்து வரவேற்புத் தந்து கொண்டிருக்கும். தனக்கும் பத்து வருடமாக அதே இடம் அதே வேலை. எண்ணெயிட்டு சீராக ஓடும் இயங்கும் இயந்திரமாய் ஓட்டம். தீடீரென்று பறவைப் பூங்கா பறவைகளிடம் இந்தப் பூங்காவில் உங்களுக்கு இடமில்லை. இனிமேல் இங்கே உங்களுக்கு வேலை இல்லை என்று துரத்தி விட்டால் அவை எங்கே போகும்? பறக்கும் சக்தி இருந்தாலும் அதை முழுமையாக பயன்படுத்தி பறந்து செல்லப் பழகாதப் பறவைகள். அதிலும் சில அங்கேயே பிறந்து வளர்ந்திருக்கலாம். இரை தேடி அலையும் அவசியமே இல்லாமல் வாழப் பழகிவிட்டப் பறவைகள். என்ன செய்யும்?

சில சமயம் சுவாரஸ்யமான மனிதர்களைச் சந்தித்துப் பேசியதைத் தவிர வேறு எந்தப் பரபரப்பும் இல்லாமல் ஓடியது வாழ்க்கை. உலகத்தில் எல்லா மூலைக்கும் சென்று ‘வாழும் கலை’ கற்றுத் தரும் குரு அவர். தன் பெட்டியிலிருந்து எடுத்த கசங்கிப் போன

குர்த்தாவை அயர்ன் செய்ய முடியாமல் ஹவுஸ் கீப்பிங் செய்ய வந்திருந்த நிர்மலாவிடம் இதை அயர்ன் செய்ய உதவ முடியுமா என்று கேட்டதும் நிர்மலாவுக்கு சிரிப்பு வந்து விட்டது. சுற்றிலும் எக்கச்சக்க சிஷ்யர்கள் கூட்டம் இருந்து கொண்டேயிருந்தது. அன்று அதிசயமாய் சுற்றிலும் யாரையும் காணவில்லை. எல்லோரும் வெளியே எங்காவது சுற்றிப் பார்க்கப் போயிருந்தார்கள். மனிதக் கூட்டத்தின் நடுவே வெண்ணிற உடையில் தேவதூதன் போல் நின்று கொண்டு குழந்தைகளுக்குச் சொல்வது போல் கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்வது பற்றிச் சொல்லிகொண்டிருந்தார். நிர்மலாவுக்கு அந்த மாலை வேலை முடியும் நேரம். சில மேஜைகளும், விரிப்புகளும் எடுத்துக் கொடுக்கப் போயிருந்த போது மேடையில் குழந்தைப் போல சிரித்துக் கொண்டு நின்றிருந்தவரைப் பார்த்தாள். பத்தாயிரம் பேர் இருந்திருப்பார்கள். அதற்கும் மேல் ஒரு கூட்டம் வெளியில் தொலைக்காட்சிப் பெட்டியில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது. அனைவரும் கண்களை மூடி தியானத்தில் மூழ்க நிர்மலாவுக்கு வீடு திரும்பும் நேரம். அத்தனை பேரும் கண்கள் மூட இவளுக்கு லேசாகத் தூக்கம் வருவது போலிருந்தது. முதல் நாள் அத்தனைப் பேரையும் வசியப் படுத்தி வாழ்க்கையைப் பற்றி விளக்கியவருக்கு தன் சட்டையை சீராக்கிக் கொள்ளத் தெரியவில்லை. சிலரைப் பார்த்தால் உடனே பேசலாம் என்று தோன்றிவிடும். அவரைப் பார்த்ததும் பேசவேண்டும், எதாவது பேசிச் சீண்ட வேண்டும் என்று தோன்றிவிட்டது.

“என்ன சாமி! ஊருக்கெல்லாம் வாழும் கலை கத்துத் தறீங்க. இந்தக் கலைய நீங்க கத்துகலையா?”, என்று கேட்டதும் அவர் கண்கள் குழந்தையைப் போல் சிரித்தன.

“ தமிழ்ப் பொண்ணா நீ! அப்போ உங்கிட்டத் தமிழிலேயே பேசலாமே! என்னை சாமின்னெல்லாம் கூப்பிடாதே! நான் கடவுளும் இல்லை. சாமியாரும் இல்லை. ஒருத்தர் நமக்கெல்லாம் எட்டாத விஷயமாக இருக்கிறார். இன்னொருத்தர் உங்களை தன்னிடம் நெருங்க விடாமல் இருக்கிறார். நான் அப்படியெல்லாம் இல்லை. உங்களுக்கு ரொம்ப நெருக்கமாக இருந்த கிண்டர் கார்டன் டீச்சராக இருக்க விரும்புகிறேன். அதனால் என்னை குருஜின்னு இல்லேனா டீச்சர்ன்னு கூப்பிடு. இப்படிக் கூப்பிட்டால் எனக்கும் உங்களோடு குழந்தை மொழியில் பேச
முடிகிறது”,.

அவரே தொடர்ந்து “ என்னவோ கேட்டியே? வாழும் கலை கற்றுத் தருகிறேன் என்று சாதாரண வாழ்க்கைக் கலை எதையும் கற்றுக் கொள்ளாமல் விட்டு விட்டேன் போலிருக்கிறது. எல்லோராலும் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள முடிவதில்லையே”, என்று மிருதுவாகச் சிரித்தார்.

அவளை உற்றுப் பார்த்து விட்டு “ என்ன இவரைப் பார்க்கறதுக்கு எதுக்கு இவ்வளவு பெரியக் கூட்டம் என்று யோசிக்கிறாயா?”, என்றார்.

அவள் அவரிடம் தேவையற்ற மரியாதைப் போர்வைப் போர்த்திக் கொண்டு பொய் சொல்லத் தோன்றாமல் “ஆமாம்”, என்றாள்.

“உண்மையிலேயே நான் யாருக்கும் எதையும் சொல்லித் தருவதில்லை. எல்லோருக்கும் ஆசைகள், ஏக்கங்கள் வாழ்க்கையில் நிறைய எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள்

இருக்கின்றன. இவற்றையெல்லாம் மீறி தனக்கென ஒரு அடையாளம் தேடும் துடிப்பு இழுக்கின்றது. அதைப் பற்றி ஒரு மயிலிறகால் வருடி விடுவது போல் மென்மையாகப் பேசி மன இறுக்கத்தைத் தளர்த்தி விடுகிறேன். எல்லோருக்கும் எதோ ஒரு இழந்த சுகத்தைப் பெற்றத் திருப்தி. அவ்வளவுதான்”, என்றார். இவர் பேசுவதைக் கேட்க எத்தனைத் தன்மையாக இருக்கிறது. இதை போல் தன்னிடம் பேசுவதற்குக் கூட யாருமில்லை என்ற எண்ணமே அவளை துக்கத்தில் ஆழ்த்தியது. எவ்வளவு பெரிய மனிதர்! எத்தனை எளிமையாகப் பேசுகிறார்! தனக்கு மட்டும் ஏன் எதுவுமே எளிமையாக அமையவில்லை? காதல், கல்யாணம், குடும்பம், குழந்தைகள் இப்படி எதுவுமே எளிதாகவில்லை. வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் தொழிற்பேட்டையில் ஏதோ ஒரு வேலை, மாதாமாதம் சம்பளம், சீனப் புத்தாண்டு சமயம் போனஸ், பிக்கப் வேன் வைத்துக் கொண்டு சாமான்களை ஏற்றி இறக்கி வியாபாரம் பண்ணிக்கொண்டு, வார இறுதியில் அந்த வேனிலேயே ஜேபிக்கு இல்லை தேக்காவுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குத் தேவையானவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டு, அடுக்குமாடி வீட்டின் கீழேயே மினிமார்ட் பூக்கடை போட்டோக்காபி பண்ணும் கடை, மாதம் ஆயிரத்தைந்நூறு வெள்ளி கிடைத்தால் கூடப் போதும் குடும்பத்தை ஓட்டி விடலாம். இரண்டுக் குழந்தைகள். மூத்தது கிண்டர் கார்டன் இரண்டாவது நர்ஸரிப் பள்ளியில் கொண்டு விட்டு பள்ளிக்கூட வாசலிலேயே மூன்று மணி நேரமும் சின்னது அழுகின்றதா என்று பார்த்துக் கொண்டு வீட்டில் சமைத்துக் கொண்டு “பத்து வெள்ளி கொடுத்துட்டுப் போங்க! மார்க்கெட்டுப் போகணும்”, என்று முழுமையாக ஒரு ஆணைச் சார்ந்து வாழும் வாழ்க்கையை அவளால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

ஷாலினியும் இப்படித்தான் சாதாரணக் கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்கினாள்.

“பரிசம் போடறாங்க! வீட்டுக்கு வா!”, என்று கூப்பிட்டு விஜயனை அறிமுகப் படுத்தினாள். பழக்கப்படாத சேலையில் கால்கள் தரையிலேயே படாதது போல் மிதந்து கொண்டிருந்தாள். விஜய் விஜய் என்று சுற்றிச் சுற்றி வந்தாள். ரிஜிஸ்தர் செய்கிறோம் என்று ஒரு கொண்டாட்டம், விருந்து. வீடு வாங்கிட்டுத்தான் கல்யாணம். சிம்பிளா கோவில்ல சைவச் சாப்பாடு போட்டு நெருங்கின சொந்தக்காரங்களை மட்டும் கூப்பிட்டு செஞ்சா போறும்”, என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள். ஐந்து வருடமாயிற்று. இருவருமாக சேர்ந்து வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு கோவிலில் முறைப்படி கல்யாணமில்லாமலேயே கிட்டத்தட்ட கணவன் மனைவியாக வாழ்ந்த அலுப்பு மட்டும்தான் மிஞ்சியது. ஷாலினி இன்னும் நம்பிக்கையோடு கல்யாணம் முடிஞ்சதும் ஹனிமூன் நியுசீலாண்ட் போகலாம்னு இருக்கோம் என்றாள். இனிமேல் புதுமணத் தம்பதிகளாக அவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

தாஸ் இப்படியெல்லாம் காத்திருக்க வைக்கவில்லை. எல்லாம் புயல் வேகத்தில் நடந்து முடிந்தது. பார்த்தவுடன் காதல். அடுத்த சந்திப்பிலேயே தன் நண்பர்கள் எல்லார் முன்னிலையிலும் நாடகம் போல் மண்டியிட்டுத் தன் காதலை ஏற்றுக் கொள்ளச் சொன்னான். அதுவும் அவன் விளையாடுகிற கால்பந்தாட்ட மைதானத்திலேயே! விளையாடும் போதே காதலையும் சொன்ன விளையாட்டு வீரர் என்று உள்ளூர் நாளிதழில் செய்தி வேறு வந்தது. காதலின் உச்சத்தில் இருந்த போது அவன் செய்தது எல்லாமும்

பெரிய புரட்சியாகவும் தன்னை வாழ்விக்க வந்த தேவதூதனாகவும் தெரிந்தது. காதலைத் தெரிவித்ததும் தன் அம்மாவிடம் அறிமுகம் செய்து வைத்தான். மதம் மாறினால்தான் அடுத்தப் பேச்சு என்று அவன் அம்மா சொன்னதும் இதென்ன பெரிய விஷயம் என்று நிர்மலா ஏஞ்சல் என்று பெயர் மாற்றி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாள். இதெல்லாம் அம்மாவிடம் சொல்லவில்லை. சொன்னாலும் என்னப் புரியப்போகிறது என்று சொல்லவில்லை. சர்ச்சில் மோதிரம் மாற்றித் திருமணத்தை உறுதி செய்த போதுதான் அம்மாவிடமும் சின்னம்மாவிடமும் மெள்ளச் சொன்னாள். அம்மாவிடமிருந்து ஒரு உறுமல்தான். பேச்சுக் குறைந்து போனதிலிருந்தே இப்படித்தான். சின்னம்மாதான் அம்மா இதைச் சொன்னாள் அதைச் சொன்னாள் என்று அம்மாவின் ஒவ்வொரு அசைவுக்கும் எதாவது அர்த்தம் சொல்வாள். சின்னம்மா வழக்கதிற்கு மாறாக ஒன்றும் சொல்லவில்லை.

“ஆமா! இந்த ரெண்டு கிழவிகளும் சேந்து உனக்கு கல்யாணம் பாத்து பண்ணி வைக்கப் போறோமான்னு நீயே பாத்துக் கிட்டே! கல்யாணத்தைப் பாக்கறதுக்காவது உங்க ஆத்தாளை கூட்டிக் கிட்டுப் போ!”, என்றாள். மரியதாஸ¥க்கு தான் விளையாடுகிற கால்பந்தாட்டம் போல் பந்தை உதைத்து உதைத்துத் தள்ளி கோல் போடும் வேகம்தான் எல்லாவற்றிலும்! மரியதாஸ் முதன் முதலில் வீட்டுக்கு வந்த போது

“என்ன இந்த ரெண்டு பைத்தியக்கார கிழவிகளும் இங்க நம்ம கூடத்தான் தங்கியிருப்பாங்களா?’, என்று கேட்டான். அவன் ஏதோ பெரிய ஜோக் அடித்ததைப் போல் விழுந்து விழுந்துச் சிரித்தாள். ஆண்கள் இப்படித்தான் நகைச்சுவையாகப் பேசி மகிழ்விப்பார்கள் என்ற அசட்டுத்தனமான எண்ணம்தான்!

அம்மா ஆசையாக வாங்கி வைத்திருந்த புடவைகளில் எதையுமே இவள் கட்டியதில்லை. புடவை எடுத்துக் கொண்டு வரும் புடவை மூட்டைக்காரரிடம் அம்மாவுக்காக நிர்மலாதான் புடவை தேர்ந்தெடுத்துத் தருவாள். அம்மா கட்டி அழகுப் பார்க்க ஏது நேரம்? சரோங்கும் சட்டையும் தான் அம்மாவின் உடை. எப்போதும் சமையல் வாசம் வீசும் துணிகள். என்றாவது கோவில் போகும் போது ஆசையாக வாங்கி வைத்தப் புடவையில் ஒன்றை எடுத்து கட்டிக் கொள்வாள். அந்தப் புடவையில் மட்டும்தான் அம்மாவின் சமையல் வாசம் வீசாது. குஞ்சலங்களாகத் தொங்கும் முந்தானையைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் பின்னால் போவாள். தன் கல்யாணத்தன்று அம்மாவைப் புடவை கட்ட வைத்துக் கிளப்பினாள். அம்மாவுக்குப் ரொம்ப பிடித்தமான கிளிப்பச்சை நிறப் புடவை. அம்மா ஏதாவது கோவிலுக்குப் போகப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு கிளம்பியிருப்பாள். சர்ச்சைப் பார்த்ததும் மிரண்டு போய் உள்ளேயே வரமாட்டேன் என்று வெளியில் நின்று விட்டாள். ஆட்டுக் குட்டியை இழுத்துக் கொண்டு போவது போல் அம்மாவைத் தரதர வென்று இழுத்துக் கொண்டு
போகும் படியாயிற்று. தாஸ் என்ன இது இப்படி டிராமா போடறாங்க என்றுப் பல்லைக் கடித்துக் கொண்டான்.

திருமணம் முடிந்ததும் பெரிய விருந்து. தேனிலவு. எக்கசக்கச் செலவு. எதற்கு இத்தனைச் செலவு என்று கணக்குச் செய்து தலைவலிதான் மிச்சம். தன் பக்க விருந்தினர்கள் என்று எண்ணி இருபத்தியைந்து பேர் கூட வரவில்லை. எல்லோரும் தாஸ் கூட்டாளிகள், உறவினர்கள். எல்லோரையும் ரொம்ப நெருக்கமானவர்கள் என்று சொல்லிக் கொண்டான். இத்தனை மனிதர்களிடம் நெருக்கம் என்று காட்டிக் கொண்டவன் உண்மையாகவே

நெருங்கிய மனிதர்களிடம் நெருக்கம் காட்டவில்லை. அதையும் எத்தனையோ நாட்கள் தான் உணரவேயில்லை. மரியதாஸ் அவன் வீட்டுக்கு நிர்மலாவைக் கூட்டிக் கொண்டு போய் குடும்பம் நடத்தவில்லை. இங்கே இவள் வீட்டிலும் வந்து நிர்மலாவுடன் இல்லை. நினைத்த போது வந்து தங்குவான். தங்கிவிட்டு போகும் போதெல்லாம்

“இறநூறு வெள்ளி கொடு ஐந்நூறு வெள்ளி கொடு”, என்று தவறாமல் கேட்டு வாங்கிக்
கொண்டுப் போவான். பணம் இல்லையென்றால்

“சரி அந்த செயினைக் கொடு வளையலைக் கொடு”, என்று உரிமையோடு எடுத்துக் கொண்டுச் செல்வான்.

“ஒருநா தங்கிட்டு பணம் பிடுங்கிட்டுப் போறானே! அவன் குடுத்தனம் நடத்துற வீடா இல்லை வேற எதாவதுன்னு நெனைச்சிக்கிட்டு இருக்கானா?”, அம்மாவே முணுமுணுத்த போதுதான் நிர்மலாவுக்கு அவன் ஏன் இப்படி பணம் பணம் என்று அலைகிறான் அப்படியென்ன செலவு என்று கேட்கத் தோன்றியது.

“ஆம்பிளைக்கு ஆயிரம் செலவு இருக்கும். •புட்பால் டீம் வச்சி நடத்தறதுன்னா எத்தினிச் செலவு தெரியுமா? இப்ப செலவழிச்சா அப்புறமா ரெண்டு மடங்காத் திருப்பிடலாம். இதெல்லாம் உனக்குப் புரியாது”,

“நா இங்க வரச்ச உன்னோட அம்மாவையும் சின்னம்மாவையும் சும்மா வெளியில வந்து சுத்தாம இருக்கச் சொல்றியா? நா போன் பேசவே முடியலை இப்படிச் சுத்தி சுத்தி நடக்கறதைப் பாத்தா எரிச்சலாயிருக்கு”, என்று ஒரு நாள் கத்தினான்.

அம்மாவுக்கு சும்மாயிருக்க முடியாது. எப்போதும் நடைதான்! சாதாரண நடையில்லை. அசுர நடை! எதையோத் தொலைத்து விட்டுத் தேடும் அவசரநடை! கதவைத் திறந்து வைத்து விட்டால் அவ்வளவுதான்! வெளியில் நடக்க ஆரம்பித்து விடுவாள். அந்தக் குடியிருப்புப் பகுதியில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் அம்மாவைத் தெரிந்திருந்ததால் அம்மா இப்படி தனியே நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் மெள்ள பேச்சுக் கொடுத்து திரும்ப வீடு வரை கொண்டு வந்து விட்டுப் போவார்கள்.

“என்னம்மா! இப்படி நீ கிளம்பிப் போய்டறியே”, என்று கேட்டால்

“ நான் என்ன சின்னப் புள்ளையா தொலஞ்சுப் போறதுக்கு? இந்தா இருக்கிற கோயிலுக்குப் போனேன்”, என்று பதில் சொல்வாள்.

அந்தக் கோவிலை இடம் மாற்றி விட்டார்கள் என்று எத்தனை முறை சொன்னாலும்
அம்மாவுக்குப் புரிவதில்லை. என்றாவது அம்மா தெளிவாகப் பேசிக் கொண்டிருக்கும் போது

“அம்மா! அந்தக் கோவிலுக்கு இப்ப பஸ் எடுத்துதான் போகணும்! வேற இடத்துக்கு
மாத்திட்டாங்க!”, என்று சொல்லிப் பார்த்தாள்.

அம்மா”கோவிலை வேணா இடம் மாத்தலாம். சாமிய இடம் மாத்த முடியுமா? நான் சின்னப் புள்ளேலேந்து இருக்கிற சாமி இப்பொ எங்கே போயிருக்கும்?”, என்று கேள்வி கேட்ட போது பதில் சொல்ல முடியவில்லை. கல்முகத்துடன் பிரார்த்தனைகளை வாங்கிக் கொண்டு கருணையற்ற விதி படைத்தக் கடவுளிடம் அம்மா கொண்டிருந்த நம்பிக்கைகளை மாற்ற முடியாதுதான்!

“சின்னம்மா! நீங்களாவது கொஞ்சம் பாத்துக்கக் கூடாதா? அம்மா பாட்டுக்கு இப்படித் தனியா கிளம்பிப் போய் அடிபட்டு ஏதாவது ஆச்சுன்னா”, என்று சொல்லிப் பார்த்தாள்.

“ நா ஒத்தி இங்க வந்து மாட்டிக் கிட்டேன். இந்த ஆயா வேலையை வெளியே எங்கியாவது போய்ப் பாத்தேன்னா ஆயிரம் வெள்ளி சம்பளமாவது கிடைக்கும். உங்காத்தாவுக்கு நாந்தான் கதவைத் தொறந்து விட்ட மாதிரி பேசறியே! கதவு கொஞ்சம் தொறந்து இருந்தா காத்தா ஓடிர்றா! உங்கம்மாவைப் பாத்துக்க ஒரு மெயிட் ஏற்பாடு செய்யி! நானும் உன்னிய மாதிரி வேலைக்குக் கிளம்பிடுவேன்”.

சின்னம்மாவுக்கச் சாதாரணமாகவே பேசத் தெரியாது. இப்படி வாயால் கொட்டியே எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க முடிந்ததில்லை. அக்காவும் தங்கையுமாக இப்படி வாழ்ந்து பழகிவிட்டாள். ஆனால் எப்போதும் ஒரு ஆங்காரம்தான்! தன் வாழ்க்கையை எல்லோரும் சேர்ந்து திருடி விட்டது போல் ஒரு பதட்டம்!

“ இப்ப முன்ன மாதிரி பழைய ஆளுங்களைக் காணறதில்லை. பாதிப் பேர் செத்தாச்சு. மிச்சமிருக்கறவங்களும் வீடு மாறி போய்ட்டாங்க! முன்ன பின்னத் தெரியாதவங்களுக்கு நின்னு உதவி செய்யற அளவுக்கு இப்போ யாருக்கு நேரமிருக்கு?”, என்று கேட்டதும் சின்னம்மா ஒன்றும் சொல்லவில்லை. அம்மாவை விட்டால் சின்னம்மாவுக்கும் யாருமில்லை. அம்மாவைப் பார்த்துக் கொள்ள இயற்கையாகவே அமைந்தத் துணை! ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் என்பதுதான் இயல்பு என்றாலும் இருவருக்குமே அது அமையவில்லை. அம்மா அப்பாவைப் பற்றிப் பேசியதேயில்லை. சின்னையாப் பிள்ளை என்று பெயரின் பின்னால் வந்த தொடர்பைத் தவிர வேறு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அதைப் பற்றி எப்போதும் போல் சின்னம்மா மட்டும்

“ கையிலே ஒரு பொம்பளைப் புள்ளையக் கொடுத்துட்டு இருக்கியா செத்தியான்னுக் கூட பாக்கலையே அக்கா!”, என்று எப்போதாவதுப்
புலம்புவாள்.

“ஆமா! இருந்திருந்தா இன்னும் மூணு நாலு புள்ளைங்க மட்டும் மிஞ்சியிருக்கும் போவுது போ இந்த மட்டும் கரையேத்தறதுக்கு ஒரு புள்ளையோட விட்டுவிட்டுப் போய்ட்டானே!”, என்று அம்மா அதை பற்றியும் கவலைப் படவில்லை. ஆனால் சின்னம்மாவுக்குத் கல்யாணத்தின் மீது இருந்த நம்பிக்கை மறையவில்லை. ரொம்ப நாள் தனக்கு கல்யாணம் நடக்கும் குழந்தைகள் பிறக்கும் என்ற வாழ்க்கையின் அடிப்படை நோக்கத்தில் கொண்ட அசையாத நம்பிக்கை! அது நடக்கவேயில்லை என்ற நிலை ஆன போது வாழ்க்கையோடு ஏற்பட்டப் பிணக்கு நாளாக நாளாக ஆங்காரமாக மாறிவிட்டிருந்தது. பி சுசீலாப்


பாடல்களை மெல்லிய குரலில் பாடி கொண்டிருந்த சின்னம்மாவின் உருவம் அவள் நினைவிலிருந்து மறைந்து போய்விட்டது.

‘உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவரிடமும் சொல்லிவிடாதே’ என்று பொம்மையை வைத்துக் கொண்டு பாடும் சினிமாக் கதாநாயகியை போல் கற்பனை வாழ்வு மட்டுமே மிஞ்சியது.

தாஸ் வீட்டில் தங்கும் நாள்களில் அம்மாவை ஒரு அறையில் கட்டிப் போட்டது போல் வைப்பது கஷ்டம்தான்! அம்மா உழைப்பில் வாங்கிய வீடு. வருடக் கணக்கில் வெங்காயம் உரித்து மிளகாய் அரைத்து சமையல் வேலை செய்து வாங்கிய வீடு. அதில் அம்மா உரிமையாக நடமாடக் கூடாது என்று அவன் சொன்னதும் அதை அநியாயம் என்று சொல்லத் தெரியவில்லை. ஏன் அவனை எதிர்த்து எதுவுமே செய்ய முடிந்ததில்லை என்பது புரியவில்லை. ஆண்கள் அற்ற வீட்டில் வாழ்ந்துப் பழகிவிட்டவளுக்கு முதல் முதலில் ஒரு ஆணிடம் தன்னைக் கொடுத்த மயக்கமா! அந்த மயக்கம் கூட அவள் எதிர்பார்த்த உறவிலிருந்து மாறுபட்டு அவசர அவசரமாக இயந்திரக் கதியில் இயங்கி முடித்து விடுவான். ஏதாவதுப் பேசுவான் காதில் ஏதாவது கிசுகிசுப்பான் முத்தமிடுவான் என்ற எந்த எதிர்பார்ப்பிற்கும் இடமில்லாமல் இரைத் தேடும் கோழி இரை கிடைத்ததும் கொத்தி முடிந்து இடத்தை விட்டுக் கிளம்பிவிடுவதைப் போல் முடிந்து விடும். அவன் வரும் போதெல்லாம் தோன்றும் பரபரப்பு “சே! இவ்வளவுதானா!”, என்ற ஏமாற்றத்தில் முடியும். எல்லாம் முடிந்த பின் அவனுடன் அவன் உடல் சூட்டை அனுபவித்தப் படி பக்கத்திலேயே படுத்திருக்கலாம் என்று நெருங்குவாள். வந்த வேலை முடிந்த மாதிரி அவளிடமிருந்து விலகி இரவு இல்லை பகல் இல்லை எந்நேரமும் போனில் பேசிக் கொண்டிருப்பான்.

சாதாரணப் பேச்சே கிடையாது. “அவன் என்னை யாருன்னு நினச்சிட்டியிருக்கான்? நான் நேர்ல வந்து பேசிக்கறேன்.மலேசியாலேந்து ஆள் ஏற்பாடு பண்ணியிருக்கேன். இங்க இருக்கறவங்க யாரும் ஒண்ணும் செய்ய முடியாது”, உருட்டல் மிரட்டல் பேச்சுத்தான். பேசி முடிந்ததும் அவசர அவசரமாகக் கிளம்புவான். அந்த அவசரத்திலும் மறக்காமல் பணம் கேட்டு வாங்கிக் கொண்டுதான் கிளம்புவான்.

சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது கூட யாராவது தன்னை அடித்து விட்டார்கள், திட்டிவிட்டார்கள் என்றால் உடனே அம்மாவிடம் ஓடி வருவாள். அம்மா வந்து நாட்டாமைச் செய்ய வேண்டும். சாப்பாட்டுக் கடையில் எத்தனைக் கூட்டமிருந்தாலும் அம்மா அத்தனை வேலையும் விட்டு விட்டு தன்னுடன் பள்ளிக்கு வரவேண்டும். அம்மா அசரமாட்டாள்.

“உனக்கு வாயில்லை! கையில்லை! எங்கிட்ட வந்து சொல்றதை டீச்சர்கிட்டப் போய்ச் சொல்லு!”, என்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான் தன்னை யாருமற்ற அனாதைச் சிறுமியாகக் கற்பனை செய்து கொண்டு கழிவிரக்கம் அதிகமாக அழ ஆரம்பித்து விடுவாள். அவ்வளவுதான்! அஞ்சலை தன் வேலையை அப்படியே போட்டுவிட்டு அவளுக்காக சண்டை போடக் கிளம்பிவிடுவாள். அப்படி எத்தனை முறை பள்ளிக்கு வந்திருக்கிறாளோ! அப்புறம் வளர வளர

“அம்மா நீ எதுக்கு என் ஸ்கூலுக்கு வர்றே?”, என்று சண்டை போடுவாள். தன்னால் இனிமேல் தன் பிரச்சனைகளை சமாளிக்க முடியும் என்ற தைரியம் வந்ததும் அம்மா தேவையில்லாமல் போயிற்று.

“பெரிய மனுஷியாய்ட்டே! இனிமே நா ஸ்கூலுக்கு வந்தா உனக்குப் பிடிக்காது. சரி சோறு போடவாவது அம்மா வேணுமா?’, என்று அம்மா சிரித்துக் கொண்டே கேட்டாள். உலகத்தில் பாதிப் பேருக்கு மேல் அம்மாவை தங்கள் சுயநலத்திற்கு மட்டும் உபயோகித்துக் கொள்ளுகிறார்கள். அந்தக் கூட்டத்தில் தானும் ஒருத்தியாகி விட்டதை நினைத்து தன் மீதே சில சமயம் வெறுப்பாயிருந்தது.

தாஸ் பணம் கேட்டபோதெல்லாம் அம்மா குருவி சேர்ப்பது போல் சேகரித்த நகையெல்லாம் கொடுத்தாகிவிட்டது. இதற்கெல்லாம்
அம்மாவிடம் அனுமதி கேட்க வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்கக் கூட இல்லை.

“தாஸ் வர்றப்ப நீங்க ரெண்டு பேரும் உங்க ரூமிலேயே இருங்களேன். அம்மா இப்படி நடக்கறது அவருக்கு ரொம்பத் தொந்தரவா
இருக்கு”, என்று சொன்னதும்


“ ஆமா! பெரிய புருஷனை கண்டுட்டே! நானும் உங்கம்மாவும் பாக்காதப் புருஷன்!
இப்படி ராத்திரித் தங்கிட்டு மறுநா உங்கிட்ட பணம் வாங்கிட்டுப் போறவன் பேரு என்ன தெரியுமா? ஒரு நா உங்க மாமியா வீட்டுக்குப் போயிருக்கியா? அவங்கதான் மருமவன்னு துணிமணி, நகைநட்டுன்னு எடுத்துக் கொடுத்திருக்காங்களா? ஏதாவது நான் கேட்டா எனக்கு வாய் ஜாஸ்திம்பே! உங்கம்மாவுக்கு எதுவும் புரியாதுன்னு நீ வேண்ணா நெனச்சிக்கிட்டு இருக்கலாம். அவளுக்கு எல்லாம் புரியுது. அவ புலம்பறப் புலம்பலை வெச்சுத்தான் சொல்றேன்”, என்றாள் சின்னம்மா. அம்மாவுக்கு முன்புப் போல் நிதானம் இல்லை. ஞாபகமும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தால் அவளுக்கு எப்படியோ இதெல்லாம் புரிந்து விடுகிறது.

கடைசியில் அவள் பயந்தது போல்தான் எல்லாம் முடிந்தது. பணம் பணம் என்று எப்போதும் பணத்திற்காக பேயாய் அலைந்தான். ஊரெல்லாம் கடன். எல்லாக் கடன்காரர்களிடமும் நிர்மலா வீட்டு முகவரியைக் கொடுத்து விட்டு எங்கேப் போனான் என்றேத் தெரியாமல் கொஞ்சநாள் அலைந்து கொண்டிருந்தான். கடன்காரகள் கொடுத்தப் பணத்தைத் திரும்பப் பெறும் முயற்சியில் வாசலில் பெயிண்டைக் கொட்டி ஜன்னலிலும் கதவுகளிலும் சிவப்புமையால் எழுதப்பட்ட வாக்கியங்களை போஸ்டர் ஒட்டி கடனைத்
திருப்பிக் கட்ட முடியாத அவமானத்தை ஊர் முழுதும் தெரிவித்தார்கள். அம்மா முகத்திலும் சின்னம்மா முகத்திலும் வாசலில் எந்த ஒரு சின்னச் சத்தம் கேட்டாலும் பயரேகை. அக்கம் பக்கத்தினர் அவளிடம் சாதாரணமாகப் பேசவேப் பயந்தனர். போலிஸ், கோர்ட், விசாரணை என்று அவமானப் பட்டு அலைந்து அவன் ஜெயிலுக்குப் போன பிறகுதான் நிம்மதியாக வீட்டில் இருக்க முடிந்தது. ஆனாலும் பணப் பிரச்சனை பூதமாகத் துரத்தியது. வீட்டில் இருக்கும் ஒரு அறையை வாடகைக்கு விடலாம் என்று ஆள் தேடினாள்.

ஒருவருக்கு இருவராக வந்தார்கள். இருவருக்கும் மாறி மாறி ஷி•ப்ட் வேலை. ஒரு சமயத்தில் ஒருவர்தான் வீட்டில் இருப்பார். எப்படியோ அதிகப்படி வருமானம் வந்தால் சரியென்று வாடகைக்கு விட்டாயிற்று. ஆளுக்கொருப் பெட்டிப் பையுடன் தங்குவதற்கு வந்தார்கள். சின்னம்மா கேள்விகளால் குடைந்து எடுத்து விட்டாள்.

“ எங்க •பாக்டரிக்குப் பக்கமாயிருக்கு! தேவையில்லாம பஸ்ஸ¤ம் ரயிலும் புடிச்சு அலைய வேண்டாம்னு இந்த ரூமை வாடகைக்கு எடுத்தோம்”, என்று ஷண்முகமும் ராஜேந்திரனும் சொன்ன பிறகு கொஞ்சம் சமாதானம் ஆனாள். முதல் மாதம் ரூம் கதவு அடைந்தே கிடந்தது. தேவையில்லாமல் வெளியில் வரவே தயங்கினார்கள்.பிறகு அந்த இறுக்கம் குறைந்து கொஞ்சம் சகஜ பாவம் வர காபி டீ குடிக்க சமையலறையை உபயோகித்துக் கொள்ளலாமா என்றுத் தயங்கித் தயங்கித்தான் ராஜேந்திரன் அனுமதி கேட்டான். சண்முகத்துக்குப் பகலெல்லாம் வேலை. அவன் சாப்பாட்டுக்குப் பிரச்சனையில்லை. ராஜேந்திரனுக்குத்தான் இரவு நேர வேலை. ராத்திரி தூங்குவது போல் பகலெல்லாம் தூங்க முடியாதே! பசித்தால் அதற்காக எழுந்து சாப்பாடுக்கடையைத் தேடிப் போய் சாப்பிட அலுப்பாக இருக்கும். ஒரு அவசர சமையல் செய்து சாப்பிட சமையலறையை உபயோக்க ஆரம்பித்தான். வெளியில் சுதந்திரமாக வந்து அம்மாவுடனும் சின்னம்மாவுடனும் பேசிக் கொண்டிருப்பான். தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருப்பான். சின்னம்மா சமையல் செய்ய அலுத்துக் கொள்ளும் போதெல்லாம் சாப்பாடு வாங்கி வருவான். அவனே ஏதாவது சமையல் செய்து தர ஆரம்பித்தான்.

அன்று நிர்மலாவுக்கு தலைவலி. காய்ச்சல் வரும் போலிருந்தது. பசியுடன் வந்தாள்.

“சாப்பிட ஏதாவது இருக்கா”, என்று கேட்டாள்.

“ம்! இன்னிக்கு வெறும் ரொட்டிதான்! கையிலே ஏதாவது காசிருந்தாத்தானே மார்க்கெட்டுக்குப் போய் வாங்கலாம். உங்கம்மாவுக்கு மீன் இல்லேன்னா சாப்பாடு இறங்காதே!”, சின்னம்மா ஆரம்பித்து விட்டாள்.

நிர்மலாவுக்கு அலுப்பாக இருந்தது. தாஸைப் பார்த்து விட்டு வந்த அலுப்பு. வழக்கம் போல் அந்தக் கட்டடத்தையும் சுற்றுப்புறத்தையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. இதுவும் பழங்காலக் கட்டடம் போலத்தான் இருந்தது. சுற்றிலும் பெரிய மைதானம். அதைச் சுற்றிலும் பெரிய உயரமான முள்கம்பி வேலிகள். கம்பிவேலிமுடியும் உயரத்தில் பெரிய வளையங்களாய் சுருட்டப் பட்டிருந்த கம்பிவேலிகள். போகின்ற பாதையெங்கும் மஞ்சள் நிறப் பூக்கள் தீ போல் பரவி கம்பளம் விரித்திருந்தது. தீ மேல் நடக்க முடியுமா? தீ என்பது வெளியில் தகிக்கும் சூடு மட்டும்தானா? உள்ளுக்குள் பொங்கும் வெம்மைதான் உயிரா? பூக்களுக்குள்ளும் இந்த உயிர்த்தீதான் இப்படி மஞ்சள் நிறம் தருகிறதா? இந்தப் பூக்களை இங்கே வளர்ப்பதற்கு தாஸ் உதவியிருப்பானா? அந்த இடத்திற்குப் பொருத்தமில்லாத இதத்தைத் தந்தது அந்த மலர்கள். இவளைப் போலவே பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் காத்திருந்தனர். என்னக் குற்றம் செய்து இவர்களின் கணவர்கள், இந்தக் குழந்தைகளின் அப்பாக்கள், இந்தப் பெற்றோரின் மகன்கள் சிறையில் இருக்கிறார்களோ?

தாஸ் நிர்மலாவைப் பார்த்ததும் பரபரத்தான்.

“பன்னீரைப் பாக்கச் சொன்னேனே! பாத்தியா? அவன் எனக்கு ரெண்டாயிரம் வெள்ளி கொடுக்கணும். ஜோஸப் பணம் தர்றேன்னான். அவனையும் பாத்து வாங்கிடு! நம்ப லாயரைப் பாத்து பெயிலுக்கு ஏற்பாடு செஞ்சியா?”, என்று கேள்விகள்.

“பெயில் எடுக்கவே முப்பதாயிரம் வெள்ளி கட்டணும். அவ்வளவு பணத்துக்கு எப்படி ஏற்பாடு செய்யறது. அதெல்லாம் இப்போ முடியாது. பேசாம மூணு வருஷத்தை நல்லபடியாக முடிச்சுட்டு வாங்க”, என்று சொன்னதும்

“நா வெளிய வந்து என்னை உள்ளத் தள்ளினவங்களை சும்மா விட மாட்டேன். என்னை ஏமாத்திட்டு அத்தனிப் பேரும் வெளில இருக்காங்க!”, என்று ஆத்திரத்துடன் கத்தியதைக் கேட்டு தாஸ் வெளியே வந்தும் தனக்கு ஒன்றும் இன்பமான வாழ்க்கை காத்திருக்கவில்லை என்பது புரிந்தது. தமிழ் சினிமா கதாநாயகி மாதிரி “நீங்க ஜெயிலேந்து திருந்தி நல்ல மனுஷனா வரணும். அதுவரைக்கும் நானும் உங்க புள்ளையும் காத்திருப்போம்”, என்று வசனம் பேச வாய்ப்பில்லை. நல்லவேளை இந்தப் குழப்பமான தாம்பத்தியத்தில் குழந்தை பிறக்கவில்லை. அவன் பெயர் சொன்ன ஆட்கள் யாரும் தாஸ் பற்றிப் பேசக் கூடத் தயாராக இல்லை. முப்பதாயிரம் வெள்ளி கட்டினால்தான் பெயில் என்று லாயர் சொல்லிவிட்டார். இதை அவனிடம் சொன்னால்

“முப்பதாயிரம்தானே! எப்படியாவது புரட்டிக் கொண்டு வந்துக் கட்டிடு. நா வெளியே வந்ததும் அதை உடனே திருப்பித் தந்துடலாம்”, என்று பிடிவாதம் பிடித்ததைக் கேட்டுச் சிரிப்புத்தான் வந்தது. கையில் முப்பது வெள்ளி கூட இல்லாமல் வந்திருக்கிறாள். முப்பதாயிரம் வெள்ளி கட்டி இவனை வெளியில் கொண்டு வந்து இவன் குற்ற எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா? முப்பதாயிரம் வெள்ளிக்கு யாரிடம் போய் கையேந்த முடியும்? தண்டனை உறுதியானப் பிறகும்

“லாயரைப் பாத்துப் பேசி அப்பீல் பண்ணச் சொல்லு! அங்கப் போய் அவனைப் பாரு இவனைப் பாரு”, என்று வழக்கமான அர்த்தமில்லாதக்
கட்டளைகள். எதிர்பார்ப்புகள்.

அவனைப் பார்த்து விட்டு வந்தாலே உடலின் சக்தியெலாம் உறிஞ்சி விட்ட மாதிரி ஒரு பலவீனம் வந்து விடுகிறது. மாதம் ஒருமுறை தாஸைப் போய்ப் பார்க்காமல் இருக்கவும் முடிவதில்லை. அவன் அம்மாவிடம் போய் ஒருமுறைச் சொன்னதற்கு

“அவன் பாவத்தின் சம்பளம் இந்த தண்டனை!”, என்று சொல்லி விட்டு

“ இந்த முறை அவனுக்காக ஏற்பாடு செய்கிற பிரேயர் மீட்டிங்கில் நீயும் கலந்து கொள். அவன் செய்த பாவத்திலிருந்து மீண்டு வருவான்”, என்று வெறும் ஆறுதல் அதுவும் இவளுக்குத் தெரியாத புரியாத வார்த்தைகளில் ஆறுதல். எல்லாம் விதிப் படித்தான் நடக்கும் என்று சொல்வது என்ன மதமாக இருந்தால் என்ன? தன்னுடைய நிலைமையின் தீவிரம் புரியாத போது எந்தக் கடவுளிடமும் போய் முறையிடுவதில் என்னத் தீர்வு கிடைத்துவிடும்?

‘ரொம்பப் பசிக்குதே! சாப்பிட ஏதாவது இருந்தா சாப்பிட்டுட்டு ஒரு பனடால் போட்டுக்கணும் “, என்று சொன்னதும்

“இந்தாங்க! இதைச் சாப்பிடுங்க! ரவா உப்புமா! சைவம்தான்!”, என்று ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தான் ராஜேந்திரன்.

“பரவாயில்லை! வீட்ல ரொட்டிதான் இருக்கே! அதைச் சாப்பிட்டுக்கறேன். நீங்க உங்களுக்காகச் செஞ்சதை சாப்பிடுங்க”,

“அட! என்னங்க இதைத் திருப்பிப் பண்றத்துக்கு பத்து நிமிஷம் ஆகாது. சரி நா இன்னும் கொஞ்சம் செஞ்சு எடுத்திட்டு வறேன் ரெண்டு பேரும் ஷேர் பண்ணிச் சாப்பிட்டுக்கலாம்”, என்று சூடாகக் கொடுத்த சாப்பாட்டில் வயிறும் நிறைந்தது. அவன் காட்டியப் பரிவில் மனமும்
நிறைந்தது.

“மிஸ்டர் ராஜ்! எனக்கு இந்த மாதிரி அவசரச் சமையலெல்லாம் தெரியாது. கோல்ட் ஸ்டோரெஜ் சூப்பர் மார்க்கெட்டுல கிடைக்கிற ரெடி மெட் •ப்ரோசன் •புட் தான் இந்த மாதிரி அவசரத்துக்கு செய்வேன். இந்த மாதிரி சமையலெல்லாம் பத்தி அவ்வளவாத் தெரியாது”,என்று
நிர்மலா சொன்னதும்

“என்னங்க சமையல் பத்தி ஒண்ணும் தெரியாதுங்கறீங்க! எங்க ஊர்லலாம் பொண்ணுங்க வயசுக்கு வந்ததும் முதல்ல கத்துக்கற விஷயமே சமையல்தான். இன்னொத்தன் வீட்டுக்குப் போய் ஆக்கிப் போட வேணாமான்னு கத்துக் கொடுத்துடுவாங்க!”, என்று பெருமையாகச் சொன்னான்.

“உங்க கேர்ள் •பிரண்ட்டும் அப்ப சமையல் நல்லா செய்வாங்கன்னு சொல்லுங்க!”,
என்றாள்.

“ ஐயையோ! கேர்ள் •பிரண்ட்டா! தெரிஞ்சப் பொண்ணுங்கக் கிட்டயே அப்படியெல்லாம் போய்ப் பேச முடியாதுங்க! சின்ன கிராமம்! நீங்க நினைக்கிற மாதிரி கேர்ள்பிரண்ட்டு கிட்டக்க எல்லாம் பேச முடியாதுங்க!”,

“ கிராமம்ன்னா அங்கே காதல் கல்யாணம் எதுவுமே கிடையாதா என்ன?சும்மாச் சொல்லாதீங்க! உங்க ஊர் சினிமாவைப் பாத்தா அங்கே காதலைத் தவிர வேறு எதுவும் நடக்கிற மாதிரியேத் தெரியலையே!”,என்றதும்

“அது சினிமாங்க! அதைப் பாத்துட்டு எங்க ஊர்ல எல்லோரும் முறைப் பையனைக் கட்டிக்கறதுக்கு காத்திட்டு இருப்பாங்க! பச்சப் பசேல்ன்னு வயல்ல வேட்டில அழுக்குப் படாம வயல் வேலை செய்யறக் கதாநாயகன். இப்படி கற்பனைச் செய்யறீங்களா? வறண்டு போய் கிடக்கும் பூமி! பாதி ஆளுங்க பசி கண்ணை அடைக்க வயல்லயும் பாசனம் இல்லாம வேறு எந்த வேலையும் செய்யாம சுருண்டு படுத்திருப்பாங்க! பொம்பளைங்க காட்டுக்குப் போய் சுள்ளிப் பொறுக்கறதும், வீட்டில இருக்கிற சின்னப் பசங்கள்ளாம் படிக்காம பீடிச் சுத்திக் கிட்டும் இருக்காங்க! நீங்க கலர் கலராப் பாக்குற கிராமம் வேற!

அங்கே பஞ்சத்துல பரிதவிக்கிற கிராமம் வேற!”, என்று சொன்னவனைப் பார்க்கப் பார்க்கப் மனதில் அவன் சொன்ன வாழ்வின் அவலங்கள்
மனதில் சித்திரமாகப் பதிந்தன.

“அப்ப இங்கியே இருந்து நல்லாச் சம்பாதித்து நிம்மதியாக இருந்துவிட வேண்டியதுதானே”, என்றாள்.

“அது எப்படிங்க முடியும்? ஊர்ல எக்கச்சக்கக் கடன்! அம்மா அப்பாவைக் காப்பாத்தணும்! குடும்பத்தை முன்னேத்தணும்னு வந்துட்டு நம்ப நினைகிற மாதிரியெல்லம் இருக்க முடியுமா? மாசம் இத்தனி ரூபான்னு அவங்க செலவுக்கு அனுப்பிடணும். அப்புறம் கடனை அடைக்க இவ்வளவுன்னு தனியா சேத்து வைக்கணும்.”, என்றான்.

அப்படிப்பட்ட ஏழ்மையிலிருந்துதான் இங்கு வந்திருக்கிறான். இந்த இருவேறு வாழ்க்கைத் தளங்களில் இயங்குகிறது அவன் வாழ்க்கை! ஆனால் மீண்டும் ஊருக்குப் போய் வாழ்வதையே விரும்புகிறான். எல்லோர் வாழ்க்கையிலும் தேவைகளுக்கு மேல் ஏதோ அர்த்தம், பிடிப்பு, காதல், புரட்சி எல்லாம் இருக்கிறது. அதைப் போல் தன்னிடம் ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தாள். தின வாழ்க்கையே போராட்டமாகிவிட்டப் போது இதைப் பற்றியெல்லாம் சிந்தித்து தேவைகளுக்கு மேல் எதையும் தேடி அலையும் மனது தொலைந்து போய் விடுகிறது.

“ என்னங்க! நிலா காயற மாதிரி இந்த வெய்யில்ல காலாற நடந்து வர்றீங்க? எம்ஆர்டி வாசல்ல நில்லுங்க! ஐஞ்சு மணிக்கெல்லாம் வந்துடரேன்னு இவ்வளவு லேட்டா வர்றீங்களே!”, பேசும் மொழியில் இருந்த மரியாதை அவன் காட்டிய சிடுசிடுப்பில் இல்லை. ராஜேந்திரனுக்கு தொடர்ச்சியாக மூன்று நாள் இரவு நேர வேலை முடிந்தால் இரண்டு நாள் விடுமுறை! ஒருநாள் தூங்கிவிடுவான். இரண்டாவது நாள் இப்படிக் கிளம்பி வந்து விடுவான். இருவரும் சேர்ந்து எங்காவது சுற்றி விட்டு பிறகு தனித் தனியாக வீடு திரும்புவார்கள். எதற்கு இந்த நாடகம் என்பது நிர்மலாவுக்குப் புரியவில்லை. ராஜேந்திரன் தான் தயங்கினான்.

“தேக்கா பக்கம் மட்டும் போவேணாம். தெரிஞ்ச ஆளுங்க கண்ணுலப் பட்டா என்னன்னு சொல்றது?எங்க வீட்டுக்காரின்னு சொல்லலாமா?”,
என்றான்.

உடல் நெருக்கம்தான் இப்படி அவனைச் சுதந்திரமாகப் பேச வைக்கிறதோ? அது தற்செயலாக நிகழ்ந்த இரவு! முன்னிரவு நேரம் திடீரென்று மழைப் பிடித்துக் கொண்டது. வெளியில் மூங்கில் குச்சிகளில் தொங்கிக் கொண்டிருந்தத் துணிகளை எடுத்துப் போடலாம் என்று எடுக்க ஆரம்பித்தாள். மழையின் ஈரத்தால் குச்சியில் தொங்கிய துணிகள் கனத்தன. ராஜேந்திரன் அவன் அறையிலிருந்து வெளியில் வந்து இவளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தான்.

“இந்த மழை எங்க ஊர்ல பேஞ்சா இப்போ விதை போட்டதுக்கு நல்லாயிருக்கும்”, என்றான்.

“ரூம்ல தூங்காமத்தான் முழிச்சுகிட்டு இருந்தேன். நீங்க நடக்கற சத்தம் கேட்டு வெளில வந்தேன். சண்முகம் நைட் ஷோ சினிமா போய்ட்டான்”, என்று சம்பந்தமில்லாமல் பேசினான். அவன் கண்கள் மையிட்டுத்
தீட்டியது போல் பெரிய கண்கள்! அவளைப் பார்த்த போது அதில் கன்றுக்குட்டியின் கெஞ்சல் இருந்தது. ஆணின் அனல் கொதிக்கும்
பார்வை!

தனிமையில் இருப்பவர்களுக்கு இரவுகள் பயங்கரமானவை. அப்போது அவர்களுடைய தடைகள், அரண்கள் எல்லாம் உடைந்து விடுகின்றன. பகலின் கண்கூச வைக்கும் ஒளியை இரவுத் திரையாக மூடிவிடுகிறது. உள்ளத்துக் காமம் உடலைத் தாக்கும் போது பெண் உடல் ஆணுக்கும். ஆண் உடல் பெண்ணுக்கும் தானே ஆறுதல் தர முடியும்? முடிவில்லாத் தேடலைச் சலிப்பின்றிச் செய்யும் வேகம் அவனிடமிருந்தது. அவன் அனுபவமின்மையும் சந்தேகங்களும் அவளுக்குப் புதுமையாக இருந்தது. அவள் சிரித்ததைப் பார்த்ததும்

“ எதுக்கு இந்தச் சிரிப்பு! சந்தோஷமா இருக்கீயா?”, என்று அவன் ஒருமையில் கூப்பிட்டுக் கேட்டதும் அந்தக் கணம் அப்படியே நின்று விடக் கூடாதா என்றிருந்தது. மனதில் நினைப்பதையெல்லாம் சொல்லிவிட முடியாதே! அவன் தன் அறைக்குத் திரும்பிப் போகும் போது அம்மா நடக்க ஆரம்பித்து இருந்தாள். நிர்மலாவின் அறையிலிருந்து அந்த நேரத்தில் அவன் போனதைப் பற்றி அவளிடம் கேட்கவில்லை. ராஜேந்திரனைப் பார்க்கும் பார்வையில் மட்டும் ஏதோ ஒன்று இருந்தது. அதைப் பற்றி ராஜேந்திரனே

“உங்கம்மா என்னைப் பாக்கும் போது மட்டும் கொஞ்சம் கஷ்டமாயிருக்கு! உங்களை ஏமாத்திவிட்டதா நினைச்சுட்டாங்களா?”, என்று கேட்டான். தனிமையில் காட்டும் ஒருமை இன்னும் வெளியில் கூப்பிடும் போது மரியாதையாகவே தொடர்ந்தது.

“சண்முகத்துக்கு சந்தேகம் வந்துடும் நிர்மலா அதனால உங்களை வாங்க போங்கன்னே கூப்பிடறேன்”, என்றான்.

“ஏதோ நினைச்சுக்கிட்டே வந்ததுலே லேட்டாயிடுச்சு! எங்க வேலைத் தேடலாம்னு பாத்தேன்”, என்றாள்.

“இப்பப் பாத்துட்டிருந்த வேலைக்கு என்ன ஆச்சு?”,

“அந்த வேலை இனிமே கிடையாது. வேற வேலைத் தேட வேண்டியதுதான்”, என்றதும்

“உங்களுக்கு என்ன கவலை?இந்த மாதிரி வேலை உடனே கிடைச்சுடும்! எங்களை மாதிரி உடனே ஊரை விட்டு ஓட வேண்டாமே?”, என்று அவன் சொன்னதும் ஆமாம் இதென்ன பெரிய விஷயம்! இது இல்லை என்றால் வேறு ஒன்று! என்று மனம் சமாதானமாயிற்று.

“ ரொம்ப சோர்ந்து போயிருக்காப்புல இருக்கு! வாங்க ஏதாவது சாப்படலாம்!”, என்று ராஜேந்திரன் கூப்பிட்டான். அந்த ஆறுதலும் சாப்பாடும் அப்போது தேவைப்பட்டது. சாப்பிட்டு முடிந்ததும் அவன் சிரித்துக் கொண்டே “இன்னிக்கு நா நைட் •ஷிப்ட் போகணும்! நீங்க எனக்காக காத்திட்டு இருப்பீங்களேன்னுதான் ஓடி வந்தேன் நா இப்படியே கிளம்பறேன்”, என்று சொன்னதும் சட்டென்று மனதில் ஒரு வெறுமை. அவள் முகம் மாறியதைக் கண்டு

“பரவாயில்லை! இன்னும் எத்தனையோ நாட்கள் நமக்கு இருக்கிறது. அதிலும் எத்தனையோ இரவுகள்”, என்றான்.

தன்னுடைய அந்தரங்கத்தில் தன்னுடைய உடல் தேவையை மட்டுமே இவன் அறிந்திருக்கிறானோ! இன்று எனக்கு இவனுடைய
அருகாமை மட்டுமே வேண்டும் என்பது புரியவில்லையா? தான் விரும்பும் பெண்ணை உடலாக மட்டுமே பார்க்கிறானா? அவசரப்பட்ட அந்த இரவு ஏன் வந்தது? பலவீனப்பட்டப் பின் அதன் மறுபக்கம் தெரிகிறது. ஆண் விளையாடும் விளையாட்டின் வலியில்தான் தன் இன்பத்தை அடைகிறானா? அன்று அவளால் தனியே படுக்க முடியவில்லை. அம்மாவுடன் போய் ஒண்டிக் கொண்டாள். அம்மாவின் கை தன்னிச்சையாக லேசாக அவள் முதுகில் பட்டுக் கொண்டிருந்தது. அந்த இதமானத் தீண்டலே போதுமானதாக இருந்தது. அவளையும் மீறி ஒரு கேவல்! எங்கே சத்தமாக அழுது அம்மாவையும் சின்னம்மாவையும் எழுப்பி விடுவோமோ என்று அடக்கிக் கொண்டாள். அம்மாவின் முலையில் முட்டிப் பால் குடிக்கும் குழந்தையாக அடங்கிப் போனாள்.

புது வேலை! புதிதாக ஒரு வேலைத்திறன் கற்றுக் கொள்ள வேண்டும். பேக்கிங் செய்ய நாங்களே உனக்கு பயிற்சித் தருகிறோம். அதன் பிறகு பேக்கிங் பிரிவில் வேலை! முந்திய வேலையை விட கொஞ்சம் அதிகச் சம்பளம். பேக்கிங் செய்ய கற்றுக் கொண்ட போதே அவள் மேல் முட்டை நாற்றம் வீசுவது போல் உணர ஆரம்பித்தாள். கையில் எப்போதும் வெண்ணெயின் பிசுபிசுப்பு, பாலேட்டின் குழகுழப்பு. அவனில் வைத்து எடுக்கும் சுடசுட வந்த வித விதமான ரொட்டிகளையும் கேக்குகளையும் பார்க்கவே தனி ரசனையாக இருந்தது. அவளுடன் வேலை செய்யும் அமீனா தான் சொன்னாள்.

“பாடி ஷாப்புல ட்வெண்ட்டி டாலருக்கு ஒரு சோப் கிடைக்கும். கொஞ்சம் எக்ஸ்பென்ஸிவ் தான். அது வாங்கித் தேய்த்துக் குளி. அப்பத்தான் இந்த பேக்கிங் வாசனை உடம்பை விட்டுப் போகும்”, என்றாள். அதை வாங்கித் தேய்த்துக் குளித்தும் ஒரு மாதிரியாகதான் இருந்தது. நாளாக நாளாக சரியாகிவிடும். ராஜேந்திரனிடம்
உருவாக்கிக் கொண்ட இடைவெளிப் போல் பழகிவிடும்.

“ஏதோ நா தப்பா பேசிட்டேனா? வேலை கிடைக்கலேன்னு கவலைன்னு நினச்சு சரி நானும் உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்னு நினைச்சேன். இப்பத்தான் வேலை கிடச்சு உன் மூட் சரியாயிருக்குமேன்னு நேத்திக்கு உன் ரூம் கதவைத் தொறந்தேன். உள்ளே உங்க சின்னம்மா படுத்திருந்தாங்க! என்ன ஏதுன்னு அவங்கக் கேட்டு

குடைஞ்சுட்டாங்க. என் ரூம்ல லைட் •ப்யூஸ் ஆயிடுச்சு! உங்கக் கிட்ட வேற பல்ப் இருக்கான்னு கேக்க வந்தேன்னு சமாளிச்சேன்”,
என்றான்.

“சரி! சமாளிச்சிட்டீங்க இல்ல! அப்படியே இருந்துக்குங்க!”, என்றாள்.

“உனக்கு ஏதோ கோபம்! சரி இப்ப அதைப் பத்தி பேச வரலை. எனக்கு இங்க செஞ்ச வேலை முடிஞ்சாச்சு! இன்னும் ஒரு மாசத்துல கிளம்பறேன். அப்புறம் துபாய்லயோ மஸ்கட்லயோ வேலை கிடைக்கும். நம்ப இதையெல்லாம் பத்திப் பேசி ஒரு முடிவு எடுக்கணும்”, என்றான். நிர்மலாவுக்குத் ஒரு கணம் தூக்கிவாரிப் போட்டது.

ஏதோ ஒரு சின்னப் பிரிவுக்குப் பிறகு சமாதானம் சொல்லி பழைய மாதிரி ஆகிவிடும் என்று நினைத்திருந்தவளுக்கு ராஜேந்திரன் சொன்னது ஒரு நிமிடம் மனதில் பதிவாகவில்லை.

“என்ன முடிவு எடுக்க வேண்டும்?”, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“எங்கூட இந்தியா வாங்க! எங்க வீட்ல உங்களைப் பத்திச் சொல்றேன். இங்க என்ன செட்டில் பண்ணனுமோ அதைப் பத்தியெல்லாம் பேச வேண்டாமா?”, என்று கேட்டான்.

“என்னால் அப்படியெல்லாம் முடிவு எடுக்க முடியாது. தாஸ் விஷயமா நா இன்னும் டைவோர்ஸ் கேக்கணுமா வேணாமான்னு யோசிக்கவேயில்லையே!”, தடுமாறினாள்.

“என்னை என்ன கைவிட்டுட்டு ஓடிப் போறவன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா இல்ல மாசமாசம் நீ உபயோகப்படுத்திவிட்டு குப்பைத்தொட்டியில் போடும் விஷயமா நான்?”, அவன் கேட்ட கேள்வியின் நேர்மையில் அவன் கண்களைப் பார்க்க முடியவில்லை.

“நா உன்னைப் பைத்தியக்காரன் மாதிரி சுத்தி வர்றது உன்னை உண்மையாகவே லவ் பண்றதுனால தான் உனக்குப் புரியலையா?”,. இந்த வாழ்க்கையைத் தவிர வேறு எந்தச் சூழலைப் பற்றித் தெரியாத போது அம்மாவை விட்டு விட்டு தாஸைப் பற்றி கவலைப் படாமல் கிளம்பிவிட முடியுமா? அம்மா அட்டைப் பெட்டிகளைச் சேகரித்துக் கொடுத்து பணம் சம்பாதித்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வாளா? எம்ஆர்டீ நிலையங்களில் கைப்பிடிகளைச் சுத்தம் செய்து, கழிவறை வாசலில் காவல் காத்துக் கொண்டு இரு முதியபெண்களுக்கும் பரிதாபத்துக்குரிய வாழ்க்கைதான் காத்திருக்கிறதா?

“சரி என்னை என்னதான் பண்ணச் சொல்கிறாய்? எல்லாத்தையும் மறந்துவிட்டு ஊருக்குப் போய் திரும்ப வேல பாத்து ஊர்லயே நல்ல பொண்ணாய்ப் பாத்து கல்யாணம் கட்டிக்கறதுக்கு உன் அட்வைஸ் வேணாம். உன் புருஷனைப் பத்தி அப்புறம் யோசிக்கலாம். உங்க அம்மாவையும் சின்னம்மாவையும் எதாவது ஒரு ஓல்ட் ஏஜ் ஹோமில் சேத்துடலாம்! இந்த வீட்டில் ஒரு ரூமைப் பூட்டி விட்டு வாடகைக்கு விட்டுடலாம். என்னோட இப்ப கொஞ்ச நாள் இந்தியாவுக்கு வா! எங்க ஊர்ல வந்து இரு! அப்புறம் என்ன செய்யலாம்னு முடிவு செய்யலாம்”, என்று சொன்னது உண்மையாகி விடுமோ என்ற பயம்தான் மிஞ்சியது. அதுவும் அம்மாவையும் சின்னம்மாவையும் அனாதரவாக விட்டுவிட்டுப் போவதா? இந்த

ரெண்டு பைத்தியக்கார கிழவிகளும் நம்மக்கூடத்தான் இருப்பாங்களா என்று தாஸ் கேட்டதற்கும் இதற்கும் அதிக வித்தியாசமில்லை.

ஒரு மாதம்தான்! வாழ்நாளில் ஒரு மாதம் என்பது ஒரு துளிதான்! அதைப் பாதரசத் துளியாக்கினான். பிரிவை பற்றிப் அஞ்சி உறவை விட்டு ஓடும் மனநிலை. பிரிவு என்பது எந்தக் காலத்திலும் ஆணின் ஆயுதம்தானா? இந்தக் கொடூரமானக் காத்திருப்பை மௌனமாக ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.பிரிவு, காத்திருப்பு, கூடல், மீண்டும் காத்திருப்பு இவ்வளவுதான் தன் வாழ்க்கையில் மிஞ்சியிருக்கிறதா? சாயங்காலம் மழை பெய்யும் போதெல்லாம் அவன் மூச்சுக் காற்று தன் மீது படும் உணர்வு! மண்ணுக்கும் வானத்துக்கும் இருக்கும் ஒரே உயிர்த் தொடர்பான மழைதான் அவன் கற்றுத் தந்த அன்பின் அடையாளமா?

“இப்படியே இங்கியே ஏதாவது வேலைத் தேடிக்கிட்டு இருக்கக் கூடாதா?”, என்று கேட்டுப் பார்த்தாள்.

“இல்லை இப்ப எனக்கு கிடச்சிருக்கிற வேலை நல்ல வேலை! நான் எப்படியிருந்தாலும் ஊருக்குத் திரும்பிப் போறதில் எந்த மாற்றமும்
இல்லை”, என்று தீர்மானமாக சொல்லிவிட்டான்.

அன்று பறவைகள் பூங்கா போயிருந்தார்கள். அதற்கு முதல் வாரம் செந்தோசா சுற்றி வந்தார்கள். எல்லாப் பறவைகளும் சுதந்திரமாக இருப்பதைப் போன்று ஒரு தோற்றம். எத்தனை விதப் பறவைகள். நிஜமாகவே காட்டுக்குப் போனால் கூட இத்தனைப் பறவைகளை ஒரு நாளில் பார்க்க முடியாது. தேடி கண்டு பிடித்துப் பார்க்க ஒருமாதம் ஏன் ஒரு வருடம் கூட ஆகலாம்.

“ராத்திரி லேட்டாக் கிளம்பற •பிளைட்! எதுக்கு ராத்திரி தனியா வந்து கஷ்டப்படறே!”, என்று சொல்லிப் பார்த்தான்.

“எனக்கு என்ன ராத்திரிப் பகல்! அதுவும் இந்த ஊர்ல! ராத்திரி நீங்க வெளிலப் போய் பாத்ததில்லையா? ஒரு உலகமே ஓடிட்டு இருக்கும்!”, என்றாள்.

யலாம். பிறந்தநாள், தீபாவளின்னு வரும்போது கார்ட் “•போன் பண்ணிப் பேசிக்கலாம். ஈமெயில் அனுப்பிக்கலாம். சாட் செய் அனுப்பிக்கலாம்! ஆனா இதெல்லாம் தேவையான்னு நீதான் முடிவு செய்யணும்”, என்று அவன் சொன்ன போது

“நாளைக்கு தாஸைப் பாக்கப் போற நாள்”, என்றாள் அவன் கேள்விக்கான அர்த்தமில்லாதப் பதில்!

“அன்னைக்குப் பேர்ட்ஸ்பார்க் போனோமே ஞாபகம் இருக்கா? அதில இருக்கிற பறவைகளைப் பாக்கறச்சே உன் ஞாபகம்தான் வருகிறது. எல்லாம் சுதந்திரமாக பறப்பது போல் ஒரு பாவனையில் பறக்கிறது. உயரத்தில் ஒரு எல்லைக்கு மேல் பறக்க முடியாத படி ஒரு வலை போட்டு வச்சிருக்காங்கப் பாத்தியா? அப்படியே வலையைத் தாண்டிப்

பறந்து வந்தாலும் ரொம்ப நாள் வெளியே தாக்குப் பிடிக்க முடியாது. திரும்ப அங்கேயே போய்டும்”, என்று சொல்லி நிறுத்தினான்.

நான் மட்டுமில்லை எல்லாப் பெண்களுக்கும் இதைப் போல் ஏதாவது ஒரு கண்ணுக்குத் தெரியாத வலையில் இருப்பதைத்தான் விரும்புகிறார்கள். உனக்கும் கல்யாணம் ஆகும். உன் மனைவியும் இந்த மாதிரி ஒரு வலையில் இருப்பதைத்தான் நீயும் விரும்புவாய். உனக்கு ஒரு பெண் பிறக்கும் அந்தப் பெண்ணையும் இப்படித்தான் வளர்ப்பாய்.அதுவும் தானாக விரும்பி ஒரு வலையைத் தேடிச்செல்லும். கண்ணாடித் தடுப்பிலிருந்து கண் மறைகிற வரை கையசைத்துக் கொண்டேச் சென்றான். பேரிரைச்சலுடன் மழை பெய்து> ஓய்ந்த நிசப்தம். வலி நிறைந்த வெறுமை வீடெங்கும் நிறைந்திருந்தது. அம்மா மட்டும் தூங்காமல் அதிசயமாக நடந்து கொண்டிருக்காமல் உட்கார்ந்து கொண்டிருந்தாள். இப்படித்தான் அம்மா வேலை முடிந்த வரும் வரை பசியோடு நிர்மலாவும் அம்மாவுக்காக காத்துக் கொண்டு வாசலிலேயே உட்கார்ந்திருப்பாள். அம்மா சமையல் செய்த அலுப்புடன் வந்தாலும்

“என் ராசாத்தி! அம்மாக்காக காத்திட்டு இருக்கியா?”, என்று கொஞ்சலுடன் உள்ளே அழைத்துச் செல்வாள். அம்மாவுக்காக இல்லை அம்மா கொண்டு வரும் சாப்பாட்டுக்காக பசியோடு காத்திருக்கிறாள் என்பது இருவருக்குமேத் தெரியும். இருந்தாலும் அந்த நாடகம் இருவருக்குமே அப்போது பிடித்திருந்தது.

அம்மாவைப் பார்த்தாள். கண்களில் பசி தெரிந்தது. “ஏதாவது சாப்பிடறியாம்மா”, என்று கேட்டுவிட்டு குடிக்க ஹார்லிக்ஸ் கலக்கிக் கொண்டு வந்து கொடுத்தாள். பாதிக் குடித்து விட்டு நிர்மலாவுக்குக் கொடுத்தாள். அவளுக்கும் அப்போது ஏதாவது குடிக்க வேண்டும்
போலத்தான் இருந்தது.

“வாம்மா! ரொம்ப நேரமாயுடுச்சே! படுப்போம்!”, என்று அம்மாவுடன் போய்ப் படுத்தாள். அம்மாவுக்கு முதுகைக் காட்டிக் கொண்டுப் படுத்தாள். அம்மாவின் கை அவள் முதுகை வருடியது. அதன் பின் அவன் விட்டுச் சென்ற வெற்றிடம் சுருங்கிச் சுருங்கி ஒரு ஒளிப் புள்ளியாகி பின்னர் இரவின் இருளில் கரைந்தது.

தாஸிடம் முன்புப் போல் அந்த பரபரப்பு இல்லை. அவனே “நல்லபடியா இருந்தா சீக்கிரம் விட்டுருவாங்களாமே! சீக்கிரம் வரப் பாக்குறேன். அம்மா வந்து பாத்தாங்க. பிரேயர் மீட்டிங் செஞ்சாங்களாம். நீ ஏன் போகல?”, என்று கேட்டு விட்டு “பரவாயில்லை நிம்மி! உனக்கு எந்த மாதிரி இருக்கப் பிடிச்சிருக்கோ அப்படியே இருந்துக்க!”, என்றான்.


“வுட்லண்ட்ஸ்ல சிவன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பண்றாங்க! போகணும்”, என்று அம்மா முணுமுணுத்தது நினைவுக்கு வர

“சரி! நா கிளம்பறேன்! அடுத்த வாரம் வந்து பாக்கறேன்! அம்மாவையும் சின்னம்மாவையும் கோவிலுக்கு கூட்டிக்கிட்டுப் போகணும்”,
என்றாள்.

அந்த இடம் மஞ்சள் நிறப் பூக்களோடு இன்னும் ஆரஞ்சு நிறமும் ஊதா நிறமும்

கொண்ட பூக்களால் நிறைந்திருந்தது. ஏதோ பெயர் தெரியாத பறவைகள் பறந்து கொண்டிருந்தன. வேலை முடிந்து வந்ததிலிருந்தே
வயிற்றைப் பிரட்டுவது போலிருந்தது. வழக்கம் போல் பேக் செய்த வாசனையால் வரும் பிரட்டல்தான் என்று நினைத்தாள்.
பறவைப் பூங்காப் பறவைகள் இயற்கையாக கூடு கட்டி கூடிக் குலாவி முட்டையிடுமா? தெரியவில்லை. பறவைகள் என்றிருந்தால்
முட்டை போடாமல் இருக்குமா? அப்படியில்லாவிட்டால் அவை பறவையாக வாழ்வதற்கு வேறென்னதான் அடையாளம்?
வீட்டிற்குப் போய் நன்றாக சோப் போட்டுக் குளித்து விட்டுத்தான் கிளம்பவேண்டும். சாயங்கால நேரமானதால் எல்லாப் பறவைகளும்
மரங்களில் வந்து அடையும் நேரம். நல்லவேளை இன்று மழையில்லை. வெளியில் இதமான காற்று வீசிக் கொண்டிருந்தது.
மரங்களெங்கும் பறவைகளின் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.

chitra.kjramesh@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner