இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2007 இதழ் 94 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அக்கரைத் தமிழர்கள்!
தமிழ்க்கொடி 2006 - ஆழி வெளியீடு ஆண்டு மலரிலிருந்து!
சிக்கலில்லாமல் தொடரும் வாழ்க்கை!

- ஜெயந்தி சங்கர் -


சிக்கலில்லாமல் தொடரும் வாழ்க்கை! - ஜெயந்தி சங்கர் -மக்கட் தொகையில் முதியோரின் விகிதம் கூடிக்கொண்டு வருவதால் கடந்த சில வருடங்களாகவே சலுகைகள் பல கொடுத்து பிள்ளை பெற்றுக் கொள்ள குடிமக்களை ஊக்குவித்து வருகிறது சிங்கப்பூர் அரசாங்கம். இந்தியர்களின் மக்கள் தொகையில் வயதான பெண்களைக் காட்டிலும் வயதான ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியர்களில் தமிழர்கள்
பெரும்பான்மையினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு சிங்கப்பூர் மக்கள் தொகையில் இந்தியர்களின் சதவீதம் கூடியிருக்கிறது. அதைப் போலவே கருவள விகிதத்திலும் இந்தியர்கள் சீனர்களைக் காட்டிலும் அதிக குழந்தைகளைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். சிங்கப்பூர் புள்ளியியல் துறை வருடக் கடைசியில் வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவர அறிக்கையில் இவ்விவரங்கள் தெரிய வந்துள்ளன. இனவாரியாக நோக்குகையில் இந்தியர்களின் மக்கள் தொகை 1990ம் ஆண்டின் 7.1 விழுக்காட்டிலிருந்து 2000ம் ஆண்டில் 7.9 விழுக்காடாக உயர்ந்து, 2006ல் 8.8 விழுக்காட்டைத் தொட்டுள்ளது. ஆனால் மற்ற இனத்தவர்கள் குறைந்திருக்கின்றனர். ஆனாலும் மொத்த மக்கள் தொகையில் சீனர்கள் 75%, மலாய் இனத்தவர் 14%, இந்தியர்கள் 8.8%  என்பது ஓரளவு மாறாமலேயே இருக்கிறது என்பதும் குறிப்பத்தக்கதே.

இந்திய, சிங்கப்பூர் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் இணைத் தலைவரான டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் அறுவர் அடங்கிய
சிங்கப்பூர் நாடாளுமன்றக் குழுவிற்கு தலைமை தாங்கி இந்தியா சென்றார். இந்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவைப் பிரதமர் லீ சியன் லுக்ங் துவக்கி வைத்தார்.இந்தியாவில் டாக்டர் விவியன் தலைமையிலான குழு நிதியமைச்சர் திரு ப சிதம்பரம், வர்த்தக, தொழில் அமைச்சர் கமல்நாத், எரிசக்தித் துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோரை முக்கியமாகச் சந்தித்தனர்.

ஒரு மாத காலம் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நீடிப்பது சிங்கப்பூரின் கலாசாரம். முதல் சில நாட்கள் குடும்பம் உறவினர் நெருங்கிய நட்புவட்டம் என்று கொண்டாடிவிட்டு ஆங்காங்கே பலமட்டங்களிலும் பலகட்டங்களிலும் குறிப்பாக இனநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படும். சேலைகட்டும் கலாசாரத்தினை வளர்த்தெடுக்கும் 'சேலை அழகு ராணி'ப் போட்டிகள், பொங்கலை ஒட்டியும் கோலம் ரங்கோலி வரையும் போட்டி போன்றவை ஆங்காங்கே சமூக நிலையங்களிலும் கோயில்களிலும் ஏற்படுத்தப் பட்டன. தைபூசம் தவிர கந்த சஷ்டி, திருமுறை மாநாடு போன்ற சமயவிழாக்களும் வழக்கம் போல இவ்வாண்டும் கோவில்களில் கோலாகலத்துடன்
கொண்டாடப்பட்டன. டிசம்பர் 5ம் தேதி மெக்பர்சன் சமூக மன்றத்தின் தீப ஒளி 2006 விழா கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சியை மெக்பர்சன் சமூக மன்றம் கடந்த 16 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மெக்பர்சன் சமூக மன்றத்தில் பல்லினக் கலைப் பண்பாட்டு நிகழ்ச்சி மன்றத்தின் வளாக உள் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மெக்பர்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், துணை சபாநாயகர், மற்றும் தென் கிழக்கு வட்டார மேயருமான மத்தையாஸ் யாவ் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர்
தமது உரையில், இந்திய இனத்தவர் மற்ற இனத்தவர்களுடன் பண்டிகைகளைக் கொண்டாடுவது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இதேபோல் மற்ற இனத்தவர்களும் அவரவர்களின் பண்டிகைகளைக் கொண்டாடுவதனால் நாட்டின் ஒற்றுமை வளர்வதாகவும் கூறினார்.

சிங்கப்பூர் முதியவர்கள் இதய நோய், அதன் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டுள்ளனர் என்று
சிங்கப்பூர் இதய அறநிறுவனம் அண்மையில் மேற்கொண்டுள்ள ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது. இதய நோய் பற்றி மக்கள் பெரிதாகக் கவலைப் படுவதில்லை. மருத்துவப் பரிசோதனைகளும் செய்து கொள்வதில்லை என ஆய்வு காட்டுகிறது. வாழ்க்கை முறை சரியாக இருந்தால் இதய நோய் ஏற்படாது என பலர் கருதுகின்றனர். ஆனால் வாழ்க்கை முறை மட்டும் காரணமல்ல. இதய நோய் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மரபு வழியாகவும் இந்நோய் ஏற்படும் என்று சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தின் தலைவர் கூறினார். சரியான உணவை உண்டு, உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. புகை பிடித்தல் போன்ற பழக்கங்களை நிறுத்த வேண்டும். மேலும் தேவையான மருந்துகளையும் தவறாது சாப்பிட வேண்டும் என்றும் அவர் சொன்னார். இதய நோயினால் அதிகம் பாதிக்கப்படக்
கூடியவர்கள் இது பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற தகவலையும் அந்த ஆய்வு சொல்கிறது. குறிப்பாக முதிய சிங்கப்பூரர்கள் இதய நோய் குறித்த புரிந்துணர்வு இல்லாது இருக்கிறார்கள். உயிர்க்கொல்லி நோயான இதயநோய் சிங்கப்பூரில் பலரைப் பாதிக்கிறது. இதய நோய்க்கு ஆளாவோர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியர்கள் இருக்கிறார்கள். இதய நோய் ஏற்படுவதற்கு ரத்த அழுத்தம், அதிக ரத்தக் கொழுப்பு போன்றவையும் காரணம். 16 வயது முதல் 69 வயது வரை உள்ளவர்களில் 16.9 விழுக்காட்டு இந்தியர்களுக்கு அதிக ரத்தக் கொழுப்பு உள்ளது. இதில் ஆண்களின் எண்ணிக்கையே அதிகமாம்.

அரசாங்கம் 2006 ஆண்டின் இறுதியில் சிங்கப்பூரர்களுக்கே 'முன்னுரிமை' வழங்கும் என்று சொன்னது. மக்கள் செயல் கட்சியின் மாநாட்டில் கொள்கைகளை விளக்கிப் பேசிய பிரதமர் லீ சியன் லுங் இதனைத் தெரிவித்தார். சிங்கப்பூரர் அல்லாதவர்களுக்கு கல்வி, சுகாதார பராமரிப்புக் கட்டணங்கள் உயர்த்துவது பற்றிய திட்டங்களை வெளியிட்டார். இதனால், இந்தியாவிலிருந்து இங்கு வந்து வசிக்கும்
நிரந்தரவாசிகள் மற்ற நிரந்தரவாசிகளைப் போலவே பாதிக்கப்படுவர். இந்திய நிரந்தரவாசிகளில் தமிழர்கள் பெரும்பான்மை. கல்விக் கட்டணம் முன்பே யாராலும் திட்டமிடக்கூடியது தான். ஆனால், மருத்துவ/பராமரிப்புக் கட்டணத்தையும் கூடுவது தான் கொஞ்சம் நெருகிறது. நோய் 'குடிமகனா' 'நிரந்தரவாசியா' என்று தெரிந்து கொண்டு தாக்குவதில்லையே.

அனைத்து வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவச் செலவுகளுக்காக மருத்துவ காப்புறுதித் திட்டம் தொடங்குவது பற்றி மனித வள அமைச்சு ஆய்வு செய்து வருகிறது. மருத்துவ காப்புறுதி 'வொர் பர்மீட்டி'ன் நிபந்தனைக்கு உட்பட்டிருக்கும் என்று மனித வள அமைச்சர் டாகடர் இங் கூறினார். அதிகமான முதலாளிகள் தங்கள் வெளி நாட்டு ஊழியர்களுக்கு மருத்துவ காப்புறுதிகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இத்தகைய காப்புறுதிகளை ஏற்பாடு செய்திருக்காது என்று நம்பப்படுகிறது. பெரிய நோய் ஒன்றினால் நிறுவனத்தில் பல ஊழியர்கள் நோய்வாய்ப் படும் போது நிறுவனம் அனைத்து மருத்துவ செலவுகளையும்
ஏற்கவேண்டும். ஆனால், அது மிகவும் கடினமானது என்பதால் மனிதவள அமைச்சு எந்த வழியில் உதவ முடியும் என்று ஆய்வு செய்து வருகிறது என்றும் டாகடர் இங் கூறினார். சில முதலாளிகள் அமைச்சை அணுகி வெளிநாட்டு ஊழியர்களுக்கு குழு காப்புறுதி இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார்கள். அதுவும் ஒரு நல்ல திட்டம் என்றும் டாக்டர் இங் கூறினார். இக்காப்புறுதித் திட்டம் உறுதியானால் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு/ இந்திய/தமிழக ஊழியர்கள் பயன் பெறுவர். மிகவும் வரவேற்கக்கூடிய திட்டம் இது. சிங்கப்பூரின் 'அக்கினிக்கூத்து' நாடகக்குழுவினைச் சேர்ந்த நாடகாசிரியரும் கவிஞருமான இளங்கோவன் அவர்களின் தயாரிப்பில் Substation அரங்கில் ஆங்கில நாடகம் கண்ணிவெடி (Mines) 2005ல் அரங்கேறி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. சர்ச்சையையும் தான். 2000த்தில் 'தலாக்' நாடகம் நாட்டின் (ஊடக) சென்ஸார் விதிகளையே மறுபரிசீலனைக்கு கொண்டு போனதெல்லாம் பழைய செய்தி தான்.
ஆண்டின் பிற்பகுதியில் இவரது ஓரிரு நாடகங்கள் அரங்கேறியிருந்தாலும் 2006 ஆகஸ்டில் இளங்கோவனின் பத்து பகுதிகளைக் கொண்ட 'ஸ்மெக்மா' எனும் நாடகத்தினை அரங்கேற்ற சென்ஸார் போர்ட் அனுமதி மறுத்தது. சொல்லப்பட்ட காரணங்கள் ஏராளம். இந்த மறுப்பும் மிகுந்த சர்ச்சைக்குட்பட்டது. இவை மிகவும் விலாசமான தனி ஆய்வுக்குரியவை.

ஓவியம், அரசியல், ஊடகம், வர்த்தகம் போன்றவற்றில் சிங்கப்பூரின் தமிழர்களுக்கு இருக்கக்கூடிய ஈடுபாட்டினைவிட இலக்கியம்,
விழாக்கள் போன்றவற்றில் அதிகமாகவே ஈடுபாடு இருப்பதாக உணரமுடிகிறது. 'முழுமை'யை நோக்கிய தொடர்பயணமாக
இலக்கியத்தைப் பார்க்கும் மனோபாவம் பெரும்பான்மையான படைப்பாளிகளிடையே இருப்பதில்லை என்பது ஒரு குறையே.
படைப்பாளிகளிடையே விமரிசனத்தை ஏற்கமுடியாத மனப்பான்மையையும் தாண்டி இலக்கியத்தில் உள்ள ஆர்வம் ஆரோக்கியமானது தான். இருந்தாலும், 'நான் எழுதவதெல்லாம் இலக்கியம்', என்றோ 'நான் எழுதவது மட்டுமே இலக்கியம்' என்றோ வரையப்பட்ட வட்டத்திலிருந்து வெளியேறி வந்தால் இன்னமும் ஆரோக்கியம் கூடும். நூல் வெளியீடுகள் அதிகரித்து வருகின்றன. அதை வைத்து படைப்புகளின் எண்ணிக்கை கூடிவருவதை வேண்டுமால் கொண்டாடலாம். இலக்கியத்தரம் கூடிவிட்டதாகச் சொல்லி விடமுடியுமா? ஊடகம் என்றால், பெரும்பான்மையான தமிழர்களுக்கு வானொலியிலும் தொலைக் காட்சியிலும் ஏன் நாளிதழிலுமே கூட சினிமா மற்றும் சினிமாத் தொடர்புடையவற்றுடன் நின்று விடுவதாகவே தெரிகிறது. அதையும் தாண்டி நடப்பு விவகாரங்களிலோ மற்ற
பொழுதுபோக்கு இல்லாதவற்றிலோ கவனம் செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவு தான். தொலைக்காட்சியில் ஒலிபரப்பான சமூகப் பிரச்சனைகள் சார்ந்த பல நிகழ்ச்சிகள் பயனுடையவையாக அமைந்தன. ஒரே தமிழ் வானொலியான 'ஒலி' தன் நிகழ்ச்சிகளின் தரத்தினைக் கட்டிக்காத்து சிறப்பாகச் செயல் பட்டது.

தமிழகத் தேர்தலின் போது சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான 'தமிழ் முரசு' விற்பனையில் இதுவரை கண்டிராத எண்ணிக்கையைத் தொட்டது. சிங்கப்பூரில் நடந்த ஒரு குழந்தையின் கொலைச்செய்தியும் காரணமென்றாலும் தமிழக ஊழியர்களின் அத்தேர்தலில் ஏற்பட்ட ஆர்வமே இன்னொரு முக்கிய காரணம். ஊழியர்களின் ஈடுபாடான சினிமா, அரசியல் மற்றும் கிரிகெட் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது. தமிழகத்திற்கே நிருபரை அனுப்பியது. தமிழ் முரசு தனது இதழில் வரவேற்கக்கூடிய பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தது. திங்கள் தோறு இணைப்பாக வரும் மாணவர் முரசினை மாணவர்களே வடிவமைத்திட மாணவர்களை
அழைத்துள்ளது.

'வாசகர் வட்டம்' 2005ல் துவங்கி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடக்கிறது. ஒரு நூலைப் படித்துவிட்டு ஆய்வுக்கட்டுரை
வாசிப்பார்கள் சிலர். பின்னர், நூலைப்பற்றி முழுமையாக ஆராய்ந்து கலந்துரையாடல் நடை பெறும். இந்தக் கூட்டத்தின் நோக்கம் வாசிப்பு அனுபவத்தினைப் பகிர்ந்து வாசித்தலில் வளர்ச்சியடைதல். கட்டுரைகள் வாசிக்கப்பட்ட பின்னர் சுவாரஸியமான கலந்துரையாடலும் உண்டு.இவ்வாண்டு ஆதவனின் காகிதமலர்கள், உமா மகேஸ்வரியின் வெறும் பொழுது, (மராத்தியிலிருந்து) நந்தகிஷோர் ஆச்சாரியாவின்
மொழிபெயர்ப்பு/நாடகம் (தமிழில் பொன்.இராமச்சந்திரன்) 'மகாபாரதத்தில் பெண்ணியம்', ஈழப்பெண் எழுத்தாளர் தாட்சாயணியின் 'ஒரு மரணமும் சில மனிதர்களும்' சிறுகதைகள் போன்ற பல படைப்புகள் ஆழமாகவும் அகலமாகவும் ஆராயப் பட்டு வலைப்பதிவிலும் (blog)  சேமிக்கப் படுகிறது. மீண்டும் பார்க்கும் சுமார் 20 பேரைத் தவிர வேறு யாரையும் புதிதாகப் பார்க்க முடிவதில்லை என்பது குறைதான்.

'தமிழிலக்கியத்தைப் பற்றி பேசி, கலந்துரையாடி அதன் வழி தமிழின்பம் துய்த்தல்' எனும் ஒரே நோக்கத்தோடு பன்னிரெண்டு
ஆண்டுகளுக்கும் மேலாக மாதமொரு முறை மிகச் சிறப்பாக இயங்கி வருவது 'இலக்கிய வட்டம்'. நிரந்தரமாய் பங்கெடுப்போர்
பத்துபேரும், முடிந்தபோது வருவோர் பத்துபேரும் மட்டுமே கொண்ட இக்கூட்டத்தில் உள்ளூர் வெளியூர் தமிழறிஞர்கள் சமய, சமயம் சாராத இலக்கியங்களைக் குறித்து உரையாற்றுவர். சமயம் சார்ந்த இலக்கிய வகையென்றாலும் அதனைத் தமிழிலக்கியமாக மட்டுமே ரசித்து வருகின்றனர். சுவாரஸியமான கலந்துரையாடலும் உண்டு. இங்கு வரும் இலக்கிய ஆர்வலர் ஏமார்ந்துபோனதாய் சரிதிரம் இல்லை. 'இலக்கிய வட்டம்' இவ்வருடம் தவிர்க்க முடியாத காரணங்களால் சின்ன தொய்வினை எதிர்கொண்டாலும் கூட்டங்கள் நடந்தேறின.

'சிங்கப்பூர் இலக்கியப் பரிசு-2006' விழாவில் தமிழுக்கு முதல் பரிசு வழங்கப்படவில்லை. 2005 தேசிய கலைக் கழகமும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்க்ஸ�ம் இணைந்து நடத்திய 'தங்கமுனை விருதி'லும் இதே தான் நடந்தது. இவையிரண்டும் சிங்கப்பூரைப் பொருத்தவரை 'சாஹித்ய அகாதமி' மற்றும் 'ஞான பீடம்' விருதுகளுக்குச் சமமானவை. ஏற்கனவே சில முறை தமிழுக்கு ஏற்பட்ட கதி தான்; புதிதொன்றுமில்லை. விதிமுறைகளில் சேர்த்துள்ளதைத் தான் கடைபிடிக்கிறார்கள் என்ற போதிலும் இவை ஏற்படுத்திய அதிர்வுகள் அதிகம். தமிழிலக்கியக் குழுக்களிடையே இதனை அவரவர் சௌகரியத்திற்கும் புரிதலுக்கும் ஏற்றவாறு உள்வாங்கினார்கள். உள்ளூர்
வெளியூர் நடுவர்களின் மழுப்பலான விளக்கங்கள் பலருக்கும் அதிருப்தியினையே ஏற்படுத்தியதாகத் தெரிய வந்தது.
படைப்பாளர்களிடையே ஒவ்வொரு முறையும் ஏற்படும் 'இனிமேல் எழுதப் போவதில்லை' எனும் பொருளில் வெவ்வேறு சொற் பிரயோகங்களில் பிரசவ வைராக்கியங்கள் மனதளவிலும் உதட்டளவிலும் ஆங்காங்கே இம்முறையும் எழுந்தன. இரண்டு
சந்தர்ப்பங்களிலும் ஏராளமான ஊகங்களையும் உணர்ச்சிகளையும் ஆங்காகே பார்க்கவும் உணரவும் முடிந்தது. தமிழ்ப்பற்று
கட்டுக்கடங்காமல் பீரிட்டதில் படைப்புக்கும், இலக்கியத்துக்கும் ஏன் வாசிப்புக்குக்கூட சம்பந்தமேயில்லாத சிலர் தனியாகவும் பொதுக்
கூட்டங்களிலும் 'தமிழுக்கு மட்டும் ஏன் இப்படி?', என்று சன்னதம் வந்து ஆவேசப்பட்டதாகச் செய்திகள் காதில் விழுந்தன.

ஹென்டர்சன் சமூக மன்றத்தின் ஏற்பாட்டில் 'பட்டிமன்றம்' ஒவ்வொரு மாதமும் நடை பெறுகிறது. இன்றைய தமிழ்ப் பாடல்களில் இலக்கியச் செறிவும் தமிழ் வளமும் உள்ள பாடல்கள் நிறையவே உள்ளன (இது தமிழுக்கு தலை நிமிர்வு/தலைக்குனிவு) என்பது போன்ற வித விதமான தலைப்புக்களில் சிறப்பாக நடக்கும் இந்நிகழ்வில் நிறைய பேச்சாளர்கள்/ பட்டிமன்றப் பேச்சாளர்கள் உருவாகக் கூடிய சாத்தியங்கள் நிலவி வருகின்றன.

சுமார் 4-5 வருடங்களாக கடற்கரைக் 'கவிமாலை' என்ற ஒரு கூட்டம் மாதமொருமுறை கூடுகிறது. கவிஞர்களை வளர்த்தெடுக்கும் நோக்கில் கவிஞர் திரு.பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் துவங்கிய சிறு கூட்டம். இன்று வளச்சியடைந்துள்ளது. ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டு எல்லோரும் கவிதை வடிப்பார்கள். உடனுக்குடன் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளும் கொடுக்கப் படுகின்றன. பிறகு, பரிசு பெற்ற மற்றும் எல்லாக் கவிதைகளுமே படைப்பாளிகளாலேயே படிக்கப் பட்டு மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளப் படுகின்றன. படைப்புத் திறன் தனக்கு இருப்பதைக் கண்டறிந்தவர்களும், அத்தோடு நின்றுவிடாமல் மென்மேலும் வளர்த்துக் கொண்டவர்களும் உண்டு. பலகாலமாக எழுதுபவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தம் வளர்ச்சியில் தேக்கம் கண்டவர்களும் அதிகம் உளர். தலைப்பு கொடுத்து
புத்தாக்கச் சிந்தனையை ஒரு வட்டத்துக்குள் சுற்றவிடும் முறையில் கொஞ்சம் தளர்ச்சி ஏற்படுத்தி படைப்பாளிக்கு இன்னும் அதிக சுதந்திரம் கொடுத்து வளர்த்தெடுக்கலாம். சில இளைஞர்கள் திரைப்படப்பாடல்களும் ஆல்பங்களுக்கும் பாட்டுகள் எழுத ஆசைப்பட்டு தமிழகத்துக் கிளம்பிச் சென்றுள்ளார்கள்.

2003 ஆம் வருடத்திருந்து 'கவிமாலை இலக்கியக் கணையாழி விருது' சிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது வரை, வானொலியின் முன்னாள் மூத்த தயாரிப்பாளரும் இலக்கியப் படைப்பாளருமான திரு பி.கிருஷ்ணன்,  வெண்பாச்சிற்பி இக்குவனம், தொலைக் காட்சி முன்னாள் செய்தி ஆசிரியர், ஆனந்தவிகடனின் முன்னாள் துணை ஆசிரியர், எழுத்தாளர் ஜே.எம்.சாலி ஆகியோருக்கு வழங்கப் பட்டிருக்கிறது. இவ்வாண்டு ஜாலான் புசார் சமூகமன்றதின் இந்திய நற்பணிச்செயற்குழுவுடன் இணைந்து, சமூகமன்ற மேலாண்மைக்குழு உறுப்பினரும், சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர்சங்கத்தின் தலைவருமான புதியநிலா சிறப்பாசிரியர் திரு ஜஹாங்கீர் தலைமையில் கணையாழி விருதுவிழா நடைபெற்றது. நவம்பர் 26, 2006 நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
சிங்கப்பூர் சித்தார்த்தன் எனும் புனைபெயரில் இலகுதமிழில் இனிக்கும் இலக்கணம் எழுதி தமிழக அரசின் விருதைப்பெற்ற தமிழாசிரியர் பா. கேசவன் அவர்களுக்கு "கவிமாலை இலக்கியக் கணையாழி விருது 2006" வழங்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டதுமே சிங்கப்பூர் கவிஞர், மாதவி இலக்கியமன்றத்தின் தலைவர் மறைந்த மலர்மாணிக்கம் அவர்களுக்கும் தமிழகத்தில் மறைந்த மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களுக்கும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிங்கப்பூர் இந்தியர் வர்த்தகம் மற்றும் தொழிற்சபையின் தலைவர் திரு M.ராஜாராம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்தியாவின் சாகித்ய அகாடமியின் தமிழ் மாநிலக் குழுத்தலைவர், விமர்சகர், கவிஞர், பேராசிரியர் முனைவர் பாலா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் சில நிகழ்ச்சிகள் நடந்தேறின.

முப்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் மொழி வளர்ச்சிக்குத் துணை புரிந்து வரும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் கவிமாலையைப் போலவே 'கவிச்சோலை' என்றொன்றை மாந்தோறும் நடத்துகிறது. இங்கு மரபிலக்கணப்பாடம் கற்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது தவிர, வருடாவருடம் 'முத்தமிழ் விழா' நடத்துகிறது. சின்னஞ்சிறார்களுக்கு மாறுவேடப்போட்டி, சிறார்களுக்கு கதை சொல்லும் போட்டி,
பேச்சுப்போட்டி, மாணவர்களுக்கு கட்டுரை/கதை எழுதும் போட்டி என்று ஏற்பாடு செய்து வருகிறது. பொதுப் பிரிவில் சிறுகதைப்
போட்டியும் நடைபெறும். கழகத்தின் தலைவராக திரு. நா.ஆண்டியப்பன் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் கழக நடவடிக்கைகளில் வரவேற்கத் தக்க முன்னேற்றங்களை உணர முடிகிறது.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய தமது முப்பதாம் ஆண்டு நிறைவு விழா, முத்தமிழ் விழாவாக சிங்கப்பூர் பாலிடெக்னிக்கின் கலையரங்கில் கடந்த 2006 ஜூலை 29ம் தேதி மாலை சிறப்பாக நடந்தேறியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கி நடனம், நாடகம், பாலர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாறுவேடப்போட்டி, வெற்றிபெற்ற குழந்தைகளுக்கும் சிறுகதை, கவிதைப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசளிப்பு என்று ஒரு முழுமையான கலை நிகழ்ச்சியாக இருந்தது. விழாவிற்குத்
தலைமைதாங்கி தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசிவிட்டு அமர்ந்தார் திரு.தர்மன் ஷண்முகரத்னம், சிங்கப்பூரின் கல்வியமைச்சர் மற்றும் உதவி நிதி அமைச்சர். கருத்துரையை திரு.ஜெயமோகனும், இலக்கியப்பேருரையை திரு.வைரமுத்துவும் ஆற்றினார்கள். 'இலக்கியம் என்பது எதற்காக' என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் மிகச்சிறப்பாகப் பேசினார். நல்ல முறையில் கூட்டம் இப்பேச்சினை ஏற்றது. அடுத்து பேசிய கவிஞர் வைரமுத்துவின் பேச்சு வழக்கமான தரத்தில் இல்லை என்று பலரும் அன்று உணர்ந்தனர். அடுத்தநால்
நடந்த கவியரங்கில் இந்தக்குறையைச் சரிக்கட்டிவிட்டார். சிங்கப்பூரில் தமிழுக்கு அடையாளம் கொடுத்த தமிழவேள் திரு.கோ.சாரங்கபாணி அவர்களுடைய நினைவாக ஒவ்வொரு வருடமும் முத்தமிழ் விழாவில் 'தமிழ்வேள் விருது' வழங்கும் பணியும் நடந்து வருகிறது. இம்முறை கழகத்தின் முன்னாள் தலைவர் கவிஞரேறு அமலதாசு அவர்களுக்கு அவ்விருது வழங்கப்பட்டது. ஐந்தரை பவுனும் பாராட்டுச்
சிறப்பிதழையும் பெற்ற அவர் குரல் தழுதழுக்க நெகிழ்ந்து 'ஏற்புரை' வழங்கினார்.

ஸ்ரீதண்டாயுதபாணி கோவில் திருமண மண்டபத்தில் 18-நவம்பர் 2006 சனிக்கிழமை அன்று மாலை சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்
கழகத்தால் கண்ணதாசன் விழா - 2006 மிகச்சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. சிறப்பு விருந்தினராக திரு M. ராஜாராம் (தலைவர், சி.இ.வ.தொ.ச) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கண்ணதாசனுக்கு நெருக்கமான சினிமா இயக்குனர் திரு SP. முத்துராமன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியினை கழகத்தின் செயலாளர் மிக அழகாகத் தொகுத்து வழங்கினார். நடனம், பாட்டு என கலைநிகழ்ச்சிகள் கண்ணுக்கு விருந்து படைத்தன. கவிஞர்கள் கண்ணதாசனுக்குக் கவிதாஞ்சலி படைத்தார்கள்.
கண்ணதாசனின் பாடல்களை பாடல் போட்டியில் கலந்து கொண்ட எட்டுப் பாடகர்கள் சிறப்பாகப் பாடி அனைவரது பாராட்டையும்
பெற்றார்கள். பழைய பாடல்கள் அனைத்தும் இனிய இசையோடு புரியும் வார்த்தைகளாகக் கூட்டத்தாரின் நெஞ்சம் தொட்டு
அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தின. கூட்டம் சுமார் 400 - 500 பேர் இருக்கும்; மண்டபம் நிறைந்திருந்தது. நிகழ்ச்சியில் போட்டியில் வென்றவர்களுக்கு ரொக்கப்பரிசுகளும், நிதியுதவி அளித்தவர்களுக்கு நினைவுப்பரிசுகளும் வழங்கி சிறப்புச்செய்தார்கள்.சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தலைவர் அவர்கள் உரையாற்றுகையில், " வரும் 2007 ஆண்டு கண்ணதாசன் உயிரோடு இருந்தால் 80ஆம் ஆண்டு சதாபிஷேக விழாவாக இருக்கும். ஆகவே, கழகம் 2007 கண்ணதாசன் விழாவினை 3 நாட்கள் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது", என்று சொன்னார். திரு எஸ்.பி.முத்துராமன் அவர்கள் தமது உரையில் கண்ணதாசனோடு தனக்கிருந்த உறவை, அனுபவங்களைப் பகிர்ந்து
கொண்டதோடு சிங்கப்பூர் தமிழர்களுக்கு குறிப்பாக எழுத்தாளர்களுக்கு, இளையர்களுக்குப் பல செய்திகளைச் சொன்னார். கழகத்தின் துணத்தலைவர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இவ்வருடத்தின் பிற்பகுதியில் இளம் பிள்ளைகள் தமிழில் வாசிப்பதை ஊக்குவிக்க 'தமிழில் வாசிப்போம், பேசுவோம்' என்ற சிறப்புக்
கதை நேரத்திற்கு தேசிய நூலக வாரியம் ஒழுங்கு செய்தது. அங் மோ கியோ நூலகத்திலும் உட்லண்ஸ் வட்டார நூலகத்திலும் கதை
நேரம் நடந்தது. பாலர் பள்ளி மாணவர்களும் தொடக்கப் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். கற்பனை ஆற்றல், தமிழில் பேசும்
திறன், தன்னம்பிக்கை ஆகியவற்றை பிள்ளைகளிடம் ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு அனைவருக்கும் அனுமதி
இலவசம்.

பொதுவாக தமிழர்களிடையே வாசிப்புப் பழக்கம் அதிகரித்து வந்தபோதிலும், பதின்பருவத்தினர் வாசிப்பதில்லை என்று கணக்கெடுப்புகள்
கூறுகின்றனர். படிப்பவர்களில் பெரும்பாலோர் இறுதி இருபதுகளிலும் அதற்கு அதிக வயதுடையவர்களும் தான். சில இளையர்களுக்கு நூலகக் கிளைகள் இருக்குமிடம் கூடத் தெரிவதில்லை. அப்படியே படிக்கும் இளையர்களும் ஆங்கிலத்தையே வாசிக்க விரும்புகிறார்கள்.
வாசிக்கும் கலாசாரத்தினை மேலும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் வருடாவருடம் மூன்று மாதங்களுக்கு நடக்கும் 'வாசிப்போம் சிங்கப்பூர்'  என்ற இயக்கம் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஏற்பாட்டில் நடத்தப் படுகிறது. இதற்காக நான்கு மொழிகளிலும் 12 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துரையாடல், நூலாய்வுரைகள் என்று விதவிதமான நிகழ்வுகள் நடத்தப் படுகின்றன. எல்லா வயதினரையும் கவரும் நல்ல படைப்புகள் தேர்ந்தெடுக்கப் பட்டு முன்னிலைப் படுத்தப் படுகின்றன. 2005 ஆம் ஆண்டில் தமிழிற்கு ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்', சிவசங்கரியின் ' 47 நாட்கள்' மற்றும் உள்ளூர் படைப்பாளியான அமரர் நா. கோவிந்தசாமியின் 'தேவு'  ஆகியவை தேர்ந்தெடுக்கப் பட்டன. 'வாசிப்போம் சிங்கப்பூர் 2006' நிகழ்விற்கு அசோகமித்ரனின் 'ஒற்றன்', திலகவதியின் 'கல் மரம்' மற்றும் உள்ளூர் எழுத்தாளர் புதுமை தாசனின் 'உதிரிகள்' ஆகிய மூன்று நூல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டன. இதில் related reading பிரிவில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் எழுதிய 'நாலேகால் டாலர்' சிறுகதைத் தொகுப்பு தவிர வேறு இரண்டு நூல்கள் பரிந்துரைக்கப் பட்டன.

சிங்கப்பூர் கல்வி அமைச்சின் ஆதரவுடன் சிங்கப்பூர் கல்விப் பேராளர்கள் 27 பேர் 2006 வருடக்கடைசியில் இந்தியாவுக்குக் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர். இப்பேராளர்களில் நால்வர் தமிழர்கள். பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றனர். பதின்மூன்று பள்ளிகளைச் சேர்ந்த இக்குழுவினர் சென்னையிலும் பெங்களூரிலும் ஒரு சில கல்வி நிலையங்களுக்குச் சென்று பார்வையிட்டனர். இந்தியாவின் கற்றல், கற்பித்தல் முறைகளை அனுபவரீதியாக அறிந்து கொள்ளுதல் இப்பயணத்தின் முக்கிய நோக்கம் என்றறியப் படுகின்றது. மற்ற இன முன்னணி மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒரு இந்திய மாணவி ஆறாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 2006 ஆம் வருடம் 12 வருடங்களுக்குப் பிறகு தேசிய அளவில் முதலிடத்தில் வந்திருக்கிறார் என்பது இங்கு மிகவும் பெருமையுடன் குறிப்பிடத்தக்கது.

படிப்பை நிறுத்துவோர் எண்ணிக்கையை குறைக்க பள்ளிப் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கல்வி அமைச்சு குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி ஆசிரியர் தினத்தை முன்னனிட்டு 2006 ஆகஸ்ட் 31ம் தேதி பேசிய பிரதமர் லீ சியென் லுக்ங், பள்ளிப் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 3% ஆக உள்ளது என்றும் இதை அரசாங்கம் 1.5% ஆக குறைக்க அடுத்த 5 ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவ்விஷயத்தில் சிண்டா (SINDA- Singapore Indian Development Association) இந்திய மாணவர்களின் உயர்விற்குக் கணிசமான பங்கினை ஆற்றி வருகிறது.

காலஞ்சென்ற திரு எஸ் ராஜரத்தினம் பெயரில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய பட்டப்படிப்பு பாடத்துறை ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. நவீன சிங்கப்பூரைத் தோற்றுவித்த தந்தையரில் ஒருவரும், நன்கு மதிக்கப்பட்ட அரசதந்திரியும், வியூகச் சிந்தனையாளருமான காலஞ்சென்ற திரு எஸ் ராஜரத்தினத்தின் பெயரில் புதிய பாடத்துறை அமைக்கப் பட்டது. அதிபர் எஸ் ஆர் நாதன் வாசகத் தகட்டை வெளியிட்டு, எஸ் ராஜரத்தினம் அனைத்துலகக் கல்வி பாடத்துறையை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார். அதிபர் நாதனுக்கு �S. Rajaratnam On Singapore: From Ideas to Reality� என்ற தலைப்பிலான புத்தகம் வழங்கப் பட்டது. காலஞ்சென்ற திரு எஸ்
ராஜரத்தினத்தின் வாழ்க்கையை நினைவு கூரும் இந்நுலில் அதிபர் நாதனின் முன்னுரை இடம் பெற்றது. 'எஸ். ராஜரத்தினம்
அனைத்துலகக் கல்வி பாடத் துறை'க்காக S$40 மில்லியன் அறக்கட்டளை நிதியும் அமைக்கப் பட்டுள்ளது. 2007 ஜனவரி முதல் தேதி செயல்படத் தொடங்கும் புதிய பாடத்துறை, அரசதந்திர உறவிலும் பாதுகாப்பு விவகாரங்களிலும் திறன் பெற்ற புதிய தலைமுறை தலைவர்களை உருவாக்கும்; ஆசிய பசிபிக் வட்டாரத்தைப் பாதுகாக்கும் கொள்கைகளை வகுக்க உதவும் ஆய்வுகளையும் நடத்தும். சிறைத் தண்டனையும் பிரம்படியும் பெற்ற பதின்பருவக் குற்றவாளி ஒருவன் 2006 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தியச் சமூகத்தின் மொத்த கவனத்தையும் அக்கறையையும் ஈர்த்தான். பொதுவாக உடைந்த குடும்பச் சூழலே காரணமாகக் காட்டப்பட்டது.

சிங்கப்பூரின் இன்றைய வெற்றிகர வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரும் சிறந்த தொழிற்சங்கவாதியும் போராட்டகுணத்தில் இரும்பு மனிதராகவும் விளங்கிய திரு. தேவன் நாயர், கனடாவிலுள்ள ஹாமில்டன் நகரில் 2005 டிசம்பர் 7 அன்று மறைந்தார். சிங்கப்பூரின் மூன்றாவது அதிபராகவும் திரு.லீ குவான் இயூ அவர்களுக்கு நீண்டகால நெருங்கிய நண்பராகவும் விளங்கியவர் அவர். இடதுசாரிகளிடமிருந்தும் ஆங்கிலேயர்களிடமிருந்தும் நாட்டை மீட்டு வெற்றிப்பாதையில் செலுத்த வேண்டிய அவசர தருணத்தில், திரு. லீ குவான் யூ அவர்களுடன் இவர் ஆற்றிய பணி மகத்தானது. அவ்வாண்டின் துவக்கத்தில் தனது மனைவியை இழந்த அவருக்கு மூன்று
மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.

மிகப்பெரிய நிகழ்வுகள் எதுவுமில்லா விட்டாலும் 2006 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் தமிழ்ச் சமூகத்திற்குப் பெரிய சிக்கல்கள் எதுவும்
இல்லாமல் ஒரு நல்ல வருடமாகவே அமைந்தது.

sankari01sg@yahoo.com

© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner