இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2008 இதழ் 100  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் அஞ்சலி!
சுஜாதா என்ற சிறந்ததொரு படைப்பாளி
 - குரு அரவிந்தன் -

எழுத்தாளர் சுஜாதாசகலதுறைகளிலும் தனித்துவம் பெற்றுத் துலங்கிய, மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரைத் திடீரென நாங்கள் இழந்துவிட்டோம் என்ற அந்தத் துயரச்செய்தி இலக்கிய ஆர்வலர்கள் எல்லோரையும் ஆறாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. சிறுகதைகள், நாவல்கள், அறிவியற் புனைகதைகள், அறிவியற்கட்டுரைகள் மட்டுமல்ல, கலை, இலக்கியம் கவிதை தொழில்நுட்பம் கணணி விஞ்ஞானம் திரைப்படம் நாடகம் விளையாட்டு ஆன்மீகம் தொடர்புசாதனங்கள் என்று அவர் தொட்டுச் செல்லாத இடமே இல்லை எனலாம். தனது சிறந்த ஆளுமை மூலம் லட்சக்கணக்கான வாசகர்களையும், ரசிகர்களையும் தனக்காக உருவாக்கிய பெருமைக்குரியவர். தனது மனைவியின் பெயரையே தனது புனைப் பெயராக மாற்றிக் கொண்ட ஸ்ரீ ரங்கத்தைச் சேர்ந்த எஸ். ரங்கராஜன்தான் எழுத்தாளர் சுஜாதா என்று இலக்கிய ஆர்வலர்களால் அழைக்கப்பட்டார். இவர் தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் பூராவும் அபிமான வாசகர்களைக் கொண்டிருந்தார். இவருக்கு கேசவ பிரசாத், ரங்கா பிரசாத் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

திருமதி சுஜாதாதிரு. எஸ். ரங்கராஜன் அவர்கள் 1935ம் ஆண்டு மே மாதம் 3ம்திகதி தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கத்தில் பிறந்தார். இவரது தகப்பனாரின் பெயர் சீனிவாசராகவன். தாயாரின் பெயர் கண்ணம்மா. ஸ்ரீ ரங்கத்தில் உள்ள பாட்டியின் வீட்டிலேயே தங்கிப் படித்த ரங்கராஜன் தொடக்கத்தில் அங்கே உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், அதைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள சென். ஜோசப்கல்லூரியில் பி. எஸ். சி. இயற்பியலும் (1952-1954) கற்றார். தொடக்கத்தில் அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த இவர், 1970ம் ஆண்டு பெங்களுரில் உள்ள பரத் எலக்றிக்கல்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். இவரது தலைமையிலான குழுவினரே தேர்தலின்போது இலகுவில் வாக்குகளை எண்ணக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து இந்தியாவில் அறிமுகப்படுத்தினர். இதன் காரணமாக தேர்தல் முடிவுகளை இலகுவாகவும், விரைவாகவும் அறியக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். எழுத்துலகில் அதிரடியாகப் புகுந்த சுஜாதா அவர்கள், ஒரு துணிப்பையை தோளிலே தொங்கப் போட்டுக் கொண்டு ஒவ்வொரு பத்திரிகைக் காரியாலயமாகத் தங்கள் ஆக்கங்களைப் பிரசுரிப்பார்களா என்ற தவிப்போடு ஏறி இறங்கிக் கொண்டு இருப்பவர்கள்தான் இந்த எழுத்தாளர்கள் என்ற ஒரு தவறான மாயையைத் துணிவோடு உடைத்தெறிந்து சாதனை படைத்துக் காட்டியவர். அதுமட்டுமல்ல ஒரு சிலர் தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொண்டு தாங்கள் என்ன எழுதுகிறோம் என்பதுகூடப் புரியாமல், அதை வாசிக்கும் வாசகர்களுக்கும் புரியாமல் எழுதிக் கொண்டிருந்த
காலத்தில், தனது எளிமையான உரைநடை மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்தவர்தான் சுஜாதா அவர்கள். மேற்கத்திய இலக்கியத்தில் பரபரப்பாயிருந்த வேகமான துள்ளல் எழுத்து இவருக்குக் கைவந்த கலையாயிருந்தது. தமிழ் அறிவியலுக்கும், கணிப்பொறியியலுக்கும் அவர் செய்த பங்களிப்பு மறக்க முடியாதது.

இவரது முதலாவது சிறுகதை 1953ம் ஆண்டு திருச்சியில் இருந்து வெளிவந்த சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. 1962ம் ஆண்டு குமுதம் சஞ்சிகையில் வெளிவந்த இடது ஓரத்தில் என்னும் சிறுகதை மூலம் பல வாசகர்களைத் தனக்காக உருவாக்கிக் கொண்டார். அதைத் தொடர்ந்து பிரபல பத்திரிகைகள், சஞ்சிகைகள் எல்லாம் இவரது ஆக்கங்களை விரும்பிப் பிரசுரிக்கத் தொடங்கின. கணேஷ், வசந்த் என்ற கற்பனைப் பாத்திரங்களை நிஜமாகவே நடமாடவிட்ட, இவரது ஆக்கங்கள் வெளிவராத பத்திரிகைகள் சஞ்சிகைகள் தமிழகத்தில் இல்லை என்றே சொல்லலாம். இவரது கற்றதும் பெற்றதும், கடைசிப் பக்கம், சுஜாதா பதில்கள், ஏன் எதற்கு எப்படி? அதிசய உலகம் போன்றவை பலராலும் பாரட்டப்பட்டன. குமுதத்தில் வெளிவந்த ரத்தத்தின் நிறம் சிவப்பு என்ற சரித்திரத்தொடர் சிலரின் மனதைப் புண்படுத்தியதால் பெருந்தன்மையோடு அத்தொடரைப் பாதியில் நிறுத்திக் கொண்டார்.
குமுதம் பத்திரிகையின் ஆசிரியராகவும் சுஜாதா சிறிது காலம் கடமையுமாற்றினார்.

எழுத்தாளர் சுஜாதாதிரைப்படத் துறையிலும் இவர் சாதனைகள் பல படைத்தார். காயத்திரி என்ற தலைப்பை உடைய இவரது சிறுகதை முதலில் திரைப்படமாகியதைத் தொடர்ந்து பிரியா என்னும் தொடரும் திரைப்படமாக வெளிவந்தது. நினைத்தாலே இனிக்கும், நாடோடித் தென்றல், ரோஜா போன்ற படங்களின் வெற்றிக்கு இவரது பங்களிப்பும் ஒரு காரணமாகும். கமலின் விக்ரம் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியது மட்டுமல்ல, திரைக்கதையின் முக்கியத்துவம் கருதி திரைக்கதை ஆசிரியரின் பெயருக்கு தயாரிப்பாளர்கள் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய முறையிலும், தனி பிரேமில் திரைக்கதை வசனகர்த்தாவின் பெயரைப் போடும் வகையிலும் திரைப்படத் துறையில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். ஜீன்ஸ், முதல்வன், இந்தியன், நிலாக்காலம், கண்டுகொண்டேன், போய்ஸ், இருவர், ஆய்த எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால், மதுரநாயகம், சிவாஜி ஆகிய படங்களுக்கு இவரே திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். கடைசியாக சங்கரின் இயந்திரா (ரோபோ) படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்துவிட்டே எங்களைவிட்டுப் பிரிந்துள்ளார். பாரதி படத் தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர். திரைப்படத் துறையில் இவருக்கு இருந்த இந்த அனுபவங்களைக்
கொண்டு திரைக்கதை வசனம் எழுதுவது எப்படி என்ற ஒரு நூலையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். சினிமா கதாநாயகர்களுக்கு மட்டுமே வீதியோரத்தில் கட்டவுட் வைத்த பாரம்பரியத்தை மாற்றி எழுத்தாளர்களுக்கும் வைக்க முடியும் என்பதை ஆனந்தவிகடன் பத்திரிகை மூலம் நிரூபித்துக் காட்டியது மட்டுமல்ல, யாருக்கும் அடிபணியாத எழுத்தாளராகவே கடைசிவரையும் இருந்தார்.

ஒரு கெட்டிக்கார எழுத்தாளனது மதிப்பு, ஒரு பத்திரிகை முதலாளியின் அந்தஸ்தை விடவோ, சினிமா இயக்குணரின் அந்தஸ்தை விடவோ உயர்ந்தது என்பது போன்ற சுயமரியாதை உடையவராகவே சுஜாதா கடைசிவரை வாழ்ந்தார் என்று குமுதம் பத்திரிகை இவருடைய அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டிருந்ததை இங்கே எடுத்துக் காட்டலாம்.

மறைந்தால் இப்படிப்பட்ட புகழுடன் மறையவேண்டும் என்று ஒவ்வொரு எழுத்தாளனையும் ஏங்கவைக்கக் கூடியதாக இவரது மறைவு (27-02-2008) இருந்ததை இங்கே குறிப்பிட்டு, இறுதியாக தமிழ் மொழி வாழும்வரை, தமிழன் வாழும்வரை, சுஜாதாவும் எங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பார் என்று கூறி, கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் அவரது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

kuruaravinthan@hotmail.com

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner