இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
 மே 2007 இதழ் 89 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
தொடர்நாவல்!
காதலன் - 2!
- மார்கெரித் த்யூரா -
தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -

மார்கெரித் த்யூரா (1914-1996)
எழுத்தாளர் மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவருடைய, 'காதலன்'(L'Amant - The Lover)) என்ற நூலின் வெற்றி அளவிடற்கு அரியது. 1984ல் பிரசுரமான இந்நாவலுக்கு, பிரான்சின் மிகப்பெரிய இலக்கிய பரிசான கொன்க்கூர் (Le Prix Goncourt) பரிசு கிடைத்தது. நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்தது. அவரது எழுத்துக்கள் அனைத்துமே அவரது சுயவரலாறுகள் எனச் சொல்லப்பட்டாலும், அச் சுயவரலாற்றை சொல்லுவதற்கு அவர் தேர்வு செய்திருக்கும் மொழியின் நேர்த்தியும் அதன் வசீகரமும், அவற்றில் இடம்பெறும் பாத்திரப் படைப்புகளும், வாசகர்களை முற்றிலும் வேறான உலகத்திற்கு அழைத்துச் செல்ல வல்லவை, மாயா உலகத்தில் சஞ்சரிக்க வைப்பவை. வாழ்க்கையின் இறுதி நாட்கள்வரை கனவுக்கும் நனவுக்குமான இடைப்பட்டப் புள்ளியில் தன்னை நிறுத்தி குழம்பியவரென விமர்சனத்திற்கு உள்ளாகியவர். அவரது எழுத்து ஒருவகைப் பாவமன்னிப்புகோரலாகவும், கழிவிரக்கம்போலவும் வாசிப்பவர்களால் உணரப்படும். தனது உறவுகளை ஆவேசத்துடன் எழுத்தில் குதறி இருக்கிறார். முன்னாள் பிரெஞ்சு நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா மித்தரானுக்கு நெருக்கமான தோழி. நாற்பதுக்கு மேற்பட்ட இவரது படைப்புகளில் நாவல்கள், நாடகங்கள் இரண்டும் உள்ளன. இவரது பல படைப்புகள், இவரது இயக்கத்திலேயே திரைக்கும் வந்துள்ளன.

http://www.diplomatie.gouv.fr/label_france/ENGLISH/LETTRES/DURAS/duras.html

அத்தியாயம் இரண்டு!

அத் தொப்பி எப்படி என்னிடத்தில் வந்தது? நினைவில்லை. யார் எனக்குக் கொடுத்திருக்கக்கூடுமென எண்ணிப்பார்க்கவும் அரிதாக இருந்தது. அநேகமாக, நான் கேட்டு, அம்மா வாங்கிக்கொடுத்திருக்கக் கூடும். விலைகுறைத்து போட்டிருந்த நேரத்தில், அதையும் பேரம்பேசி வாங்கி இருப்போம் என்பது மட்டும் உறுதி. வாங்கியதற்கான காரணமென்று எதைச் சொல்ல? ஆண்களுக்கான தொப்பியொன்றை அணிந்த, வேறொரு சிறுமியையோ, பெண்மணியையோ அக் காலனி நாட்டில் அந்த நேரத்தில் நான் கண்டதில்லை. அவ்வளவு ஏன், உள்ளூர்ப் பெண்களில்கூட ஒருத்தியும் என்னப்போல ஆண்களுக்கான தொப்பியை அணிந்து பார்த்ததில்லை. என்ன நட,ந்திருக்கும்? தொப்பியைக் கடையிற் கண்டதும், எடுத்து வேடிக்கையாக தலையிலணிந்து, கடையிலிருந்த கண்ணாடியிற் பார்த்திருப்பேன். அத்தொப்பி சிறு வயதில் மெலிந்திருந்த எனது உடற் குறையை மறைக்க உதவியிருக்கக்கூடும், நான் வேறொருத்தியாக தெரிந்திருப்பேன். பிறந்ததிலிருந்து கொண்டிருந்த அருவருப்புத் தோற்றமும், சகிக்கவியலாத கோலமும் முடிவுக்குக் வந்திருக்கும். இப்போதைய நிலைமைக்கு நேரெதிரான காரணம். அது மனதின் தேர்வு. இதைத்தான் மற்றவர்கள் என்னிடத்தில் எதிர்பார்க்கின்றனர். திடீரென்று வேறொருத்தியாக, பிறர் பார்வைக்கு வேறொருத்தியாக, பொது இடத்தில், பிறரருக்கென்று என்னை அர்ப்பணித்தவளாக, பிறர் காட்சிப்பொருளாக - எங்கெல்லாம் முடியுமோ அங்கு, அதாவது நகரத்தில் வலம் வருகிறபோதும், சாலைகளில் பயணிக்கிறபோதும், அவரவர் இச்சைக்கு ஈடுகொடுத்து நடந்துகொள்கிறேன். ஆக அணிந்த தொப்பியை எடுப்பதில்லை. அல்லும் பகலும் என்னுடன்தான் இருக்கிறது, பிரிவதில்லை. என் வாழ்வே தொப்பி என்பதுபோல, அதைவிட்டு விலகாமல் இருக்கிறேன். நான் அணிந்திருக்கும் இக் காலணிகளையும் அப்படித்தான், பிரிவதில்லை, ஆனாலும் தொப்பியோடு ஒப்பிடுகிறபோது, அவை இரண்டாம் பட்சம்- தவிர்க்கக்கூடியவை. காலணிகள் தொப்பிக்கு உதவுகின்றன, அதாவது தொப்பி எனது நோஞ்சான் உடலின் குறையை மறைக்க உதவியதைப்போல, எனவே இரண்டுமே எனக்குத் தேவலாம் போலிருந்தன. தொப்பி இல்லாமற் வெளியிற் செல்வதில்லை, அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் இந்தக் காலணிகளையும், தொப்பியையும் அணிந்து செல்கிறேன், நகரத்தின் இதயப்பகுதிக்குச் செல்லும்போதுகூட.

என் மகனுடைய இருபது வயது நிழற்படத்தைத் திரும்பவும் பார்ப்பதுபோல உணருகிறேன். அவன் கலி•போர்னியாவில் தனது பெண் நண்பர்கள் 'எரிக்கா' மற்றும் 'எலிசபெத் லென்னார்' உடன் இருக்கிறான். அவனுக்கும் மெலிந்தத் தோற்றம், அவனது ஒல்லியான உடல்வாகைப்பார்த்து, உகாண்டா நாட்டிலிருந்து வந்த வெள்ளைக்காரனோ என்று பிறர் வியக்கக் கூடும். அடுத்தவரை கேலிசெய்வதுபோன்ற விவஸ்தையற்ற ஒரு சிரிப்பை அவனிடத்தில் காணலாம். ஊற்சுற்றும் இளைஞனொருவனைப் போல பார்க்க தப்பாகத் தெரிவான். ஈர்க்குச்சிமாதிரியான தனது மோசமானத் தோற்றத்தினைக் காண அவனுக்கு மகிழ்ச்சி. உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பெண்ணும் கிட்டத்தட்ட அவனைபோலவே இருந்தாளென்று சொல்ல வேண்டும்.

கறுப்புநிறத்திலானா நாடா சுற்றப்பட்டு தட்டையான விளிம்புடனிருந்த அத் தொப்பியை வாங்கியவள் வேறொரு நிழற்படத்திற் இருக்கிறவள் - எனது அம்மா. சமீபத்தில் அவள் எடுத்துக்கொண்ட நிழற்படங்களைக் காட்டிலும் நான் கண்ட நிழற்படத்தில் மிகச்சுலபமாக என்னால் அவளை அடையாளப்படுத்த முடிகிறது. ஹனாய் நகரில் சிற்றேரிப் பகுதியிலிருந்த வீடொன்றின் கூடம் - எல்லோரும் ஒன்றாக வசித்த காலம், எல்லோருமென்று சொன்னால் அவளும் அவளுடைய பிள்ளைகளும், அதவது நாங்கள்- ஒன்றாக வாழ்ந்து வந்த வீட்டின் கூடம்- எனக்கு நான்கு வயது, நடுவில் அம்மா. முகத்தை 'உம்'மென்று வைத்துக்கொண்டு, சீக்கிரம் படத்தை எடுத்துத் தொலையுங்களேன் என்பதுபோல எங்கள் மத்தியில் அவள் இருந்தவிதம், இன்றைக்கும் அவளை படத்தில் அடையாளப்படுத்த உதவுகிறது. முகத்திற் பார்க்கிற சுருக்கங்கள், ஏனோதானோவென்று அவள் உடுத்தியிருந்த விதம், கண்களிற் தெரிந்த சோர்வு ஆகியவற்றிற்கு காய்ந்த வெயிலும், அதனால் அவளுக்கேற்பட்ட அசதியும், உற்ற எரிச்சலும் காரணங்கள். பிறகு நாங்கள் அதாவது சாபக்கேடான வாழ்க்கையை உற்ற அவளுடைய பிள்ளைகள், நிழற்படத்தில் அணிந்திருக்கும் விதத்தினைவைத்து, எங்கள் தோற்றத்தினை வைத்து, அந்த வயதில் எங்களைச் சீராட்டவும், நன்கு உடுத்தவும் அவளுக்கு இயலாமற்போனதையும், சிலவேளைகளில் நாங்கள் பட்டினிகிடக்க நேரிட்டதையும் உணரமுடிகிறது. இனி படுவதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைமையில், ஒவ்வொரு நாளையும் அம்மா சிரமத்துடன் கடந்த காலம். சிலசமயங்களில் தொடர்ந்து எங்களை நாட்கணக்கில் வாட்டி இருக்கிறது. சில வேளைகளில் முதல் நாள் இரவோடு முடிந்திருக்கிறது. எப்போதாவது அடிக்கின்ற சந்தோஷக் காற்றினால்கூட முற்றிலும் விலக்க முடியாத துயரசுமைகளோடு, முழுக்க முழுக்க விரக்தியின் விளிம்பிலிருந்த தாயொருத்தியை அந்த நேரம் பெற்றிருந்தேன். ஏதேனும் ஒன்றுமாற்றி ஒன்று எங்கள்வீட்டில் சிக்கல்கள் தொடர்ந்திருந்ததால், எந்த ஒன்றையும் குறிப்பிட்டுச் சொல்ல எனக்கு இயலாது. நிழற்படத்தில் தெரிகிற வீடு, எனது மூத்த சகோதரன் பாரீஸில் இருந்த காலத்தில் அம்மா நிலமொன்று வாங்கியதாகக் குறிப்பிட்டு இருந்தேனில்லையா, அதில் கட்டியிருந்த வீடு, வழக்கமாக அம்மா செய்த தவறுகளில் ஒன்று அந்த நிலத்தையும் வீட்டையும் வாங்கியது. ஒரு சில மாதங்களில் அப்பா மரணிக்க இருக்கிறார் என்ற நிலையில் அவ்வீட்டினை வாங்க வேண்டிய எந்த அவசியமும் அவளுக்கு இல்லை. ஒருவேளை அதற்காகத்தான் வாங்கினாளோ என்னவோ? அல்லது அவ் வீட்டை வாங்கியற்குக் காரணம், எந்த நோய் காரணமாக அப்பா பலியாக இருந்தாரோ அந்நோய் தன்னிடத்திலும் பரவியிருக்கிறது என்ற உண்மையை அறியவந்ததாலா? எது எப்படியோ ஆனால் சம்பவங்கள் ஒத்து போகின்றன. அவ்வாறான உண்மைகள் வெளிப்படையாக தம்மை அவளிடத்தில் அடையாளப்படுத்திக்கொண்டிருப்பது நிழற்படத்தில் தெரிகிறது, எனினும் அவற்றை அறிந்தவளாக அம்மா காட்டிக்கொள்வதில்லை. நானும் அவளைப்போலவே அவைகளுக்குப் பழகி இருந்தேன். நிழற்படம் எடுத்த தினத்துக்கான அவளது கவலை எதுவோ? முன்னதாகவே தனது வரவை அடையாளப்படுத்திக்கொண்ட, அல்லது எந்த நேரமும் நிகழலாம் என்றிருந்த அப்பாவின் மரணமா? கேள்விக்கு உட்படுத்தி இருந்த அவர்களது திருமண பந்தமா? அவளது கணவனா? பிள்ளைகளாகிய நாங்களா? அல்லது இவை அனைத்துமேகூட காரணமாக இருக்கலாமா?

ஒவ்வொரு நாளும் அப்படித்தான் இருந்தது. பிரச்சினைகளில்லாத நாட்களே இல்லையென்று உறுதியாகச் சொல்ல முடியும். நித்தமும் வீட்டில் ரகளைதான். ஒவ்வொரு கணமும் விரக்தியின் விளிம்பினை நோக்கித் தள்ளப்பட்டோம். இருந்தும் தொடர்ச்சியாய் அனைத்தும் நடந்தது, அதாவது இனி செய்ய ஒன்றும் இல்லை என்பது மாதிரியான நெருக்கடி, உறக்கம், சில நாட்கள் எதிலும் நாட்டமின்றி முடங்கிக் கிடப்பது, மாறாக சில நாட்களில் சொந்தமாக வீடுகள் வாங்குதல், அவற்றில் குடியேறுதல், நிழற்படம் எடுத்துக்கொண்ட சந்தோஷ நொடிகளும் அவற்றில் சேர்த்தி, அச் சந்தோஷநொடிகள் நிழற்படம் எடுத்துக்கொண்டதற்கு மட்டுமே சொந்தமானது, மனச்சோர்வு, சில நேரங்களில் காணிக்கை பெறவும், யாசிப்பவர்க்குப் பரிசில்கள் அளிக்கவும் முடிந்த மகாராணிபோல அம்மா நடந்துகொண்டவிதம்- சிற்றேரிக் கரையில் வாங்கப்பட்ட வீடும் அப்படியானதுதான். அதை வாங்க நேர்ந்ததற்குக் குறிப்பிடுபடியான காரணங்களில்லை, தவிர அப்பா இறக்கும்தறுவாயில் இருந்தார், பிறகு தட்டையான விளிம்பினைக் கொண்ட தொப்பியை வாங்க நேர்ந்ததும் அந்த வகையில்தான், சிறுமி ஒருத்தி அதை விரும்பினாள் என்பதைத் தவிர, சொல்வதற்கு வேறு காரணங்களில்லை. 'லாமே ஓர்' காலணியும் அப்படி வாங்கப்பட்டதே. பிறகு... சில நேரங்களில் இல்லை.. எதுவும் இல்லை, அப்படியான நேரங்களில் இருக்கவே இருக்கிறது உறக்கமும், மரணமும்.

பின்னிய சடைகள் முன்புறம் விழுந்திருக்க, தட்டையான ஓரங்களைக் கொண்ட தொப்பிகளை தலையில் அணிந்து செவ்விந்திய பெண்கள் நடித்த திரைப்படங்களை என் வாழ்நாளில் இதுவரை பார்த்ததில்லை. பொதுவாகப் பின்னலிட்டச் சடைகளை மடித்துக் கட்டுவது என் வழக்கம், ஆனால் அன்றைய தினம் நான் பார்த்திராத திரைப்படங்களில் வருகிற பெண்களைப்போல அவற்றை முன்புறம் போட்டிருந்தேன், இரண்டு பெரிய சடைகளும், பெரியவர்களுடையதைப்போல அல்லாமல் இளம்பெண்ணொருத்திக்கு உரியதாக இரண்டுமிருந்தன. தொப்பியை என்றைக்கு வாங்கினேனோ அன்றிலிருந்து சடைகளை மடித்துக் கட்டுவதில்லை. சில நாட்களாக, எனது மயிரைப் பின்னுக்குத் தள்ளி படிய சீவுவது வழக்கம். தலைமுடி தூக்கல் இல்லாமல் பாந்தமாக தலையில் படிந்து அடுத்தவர் கண்களுக்கு உறுத்தாமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டேன். ஒவ்வொரு இரவும் அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்தபடி, தலையை வாரி, பின்னலை மடித்துக் கட்டிக்கொண்டே பிறகே உறங்கச் செல்வது வழக்கம். நெளிநெளியாய், அடர்த்தியாகவும், பாரத்துடனும் இருந்த எனது தலைமயிர் இடுப்புவரை நீண்டிருந்தது. பார்த்தவர்கள் அத்தனைபேரும் எனது கூந்தல் எவ்வளவு அழகு! எனப் புகழ்ந்தார்கள். தலைமுடியைத் தவிர அழகென்று சொல்ல என்னிடத்தில் வேறு எதுவும் இல்லை என்பதாக அதனைப் புரிந்துகொண்டேன். அத்தனை பாராட்டுதலுக்கும் உரிய அந்தக் கூந்தலை எனது இருபத்து மூன்றாம் வாயதில் அதாவது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அம்மாவைப் பிரிந்திருந்தபோது, பாரீஸ் நகரில், முடி திருத்தும் நிலையமொன்றில் வெட்டச் சொல்லிவிட்டேன். நான் 'வெட்டுங்கள்' என்றேன். அவன் வெட்டினான். கண்சிமிட்டும் நேரம், தலைபாரத்தினை குறைக்க முனைந்ததுபோல கத்தரிக்கோல் செயல்பட்டு கழுத்தை உரச, தரையில் விழுந்தது. வீட்டிற்கு எடுத்துசெல்ல விரும்பினால், பொட்டலம் கட்டித்தருவதாகச் சொன்னார்கள். வேண்டாமென்று சொன்னேன். அச்சம்பவத்திற்குப் பிறகு ஒருவரும் எனது தலைமயிரைப்பற்றி பேசுவதில்லை, அதாவது நீண்ட தலைமயிர் இருக்கையில்-வெட்டப்படுவதற்கு முன்னால் என்னபொருளில் அதைக்குறிப்பிட்டுப் பேசினார்களோ அது இல்லை என்றாகிவிட்டது. அதன்பிறகு எனது பார்வையையும், சிரிப்பினையும் புகழ்ந்தார்கள். எனக்கும் அது பரவாயில்லை போலிருந்தது.

படகில் அன்றையதினம் எனக்கு பதினைந்தரை வயது. ஆக எனது பின்னிய நீளமான சடைகளிரண்டும் வெட்டப்படாமல் இருந்தகாலம். அப்போதே ஒப்பனை செய்யப் பழகி இருக்கிறேன். கன்னத்தின் மேற்பகுதியிலும், கண்களுக்கு கீழேயும் தெரிந்த சிவப்புப்புள்ளிகளை மறைக்க தொக்கலோன் (Tokalon) முகப் பூச்சு இட்டிருக்கிறேன். அதற்குமேலாக எனது தோலின் நிறத்திற்குத் தோதாக ஊபிகான் (Houbigan) மாவுப் போட்டிருக்கிறேன். இந்த மாவு எனது அம்மாவுடையது. அவளது அலுவலக நிர்வாகம் ஏற்பாடு செய்யும் விழாக்களுக்குச் செல்கிறபோதெல்லாம் இந்த மாவினைத்தான் முகத்திற்குப் போட்டுக்கொண்டு அவள் செல்வாள். அன்றைய தினம், இருண்ட சிவப்பில், செரீஸ் பழத்தின் நிறத்தினையொத்து உதட்டுச் சாயம் பூசிக்கொண்டிருக்கிறேன். எவரிடத்திலிருந்து அதைக் கேட்டுவாங்கினேன் என்று ஞாபகமில்லை, ஒருவேளை ஹெலென் லாகொனெல், தனது தாயாரிடமிருந்து திருடிக் கொடுத்திருப்பாளா? நினைவில்லை. வாசனை திரவியமென்று என்னிடத்தில் எதுவுமில்லை. கொலோன் தண்ணியும், பாமாலிவ் சோப்புகட்டியும் அன்றி அம்மாவிடத்தில் வேறு பொருட்கள் இல்லை.

படகில், எங்கள் பேருந்துக்கு அருகில், முக்கியஸ்தர்களுக்கே உரிய ஒரு சொகுசு மோட்டார் வாகனம், அதன் வாகனஓட்டி வெள்ளை சீருடையில் இருந்தான். எனது புத்தகங்களில் இடம்பெறுகிற அதே பெரிய வாகனம்-துயரச் சின்னம்- புகழ்பெற்ற மோரீஸ்-லெயோன்-போல்லே மாடல். கல்கத்தாவில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்குச் சொந்தமான கறுப்பு நிற லான்சியா ரகக் கார்கள், இலக்கிய எழுத்துக்களில் அறிமுகமாகாமல் இருந்த நேரம்.

வாகன ஓட்டிகளுக்கும், அவர்கள் எஜமானர்களையும் பிரிப்பதுபோன்று தள்ளக்கூடிய கண்ணாடிக்கதவுகள். பயணிகள் தலையை இருத்திக்கொள்ளவும், அவற்றின் உயரத்தைக் கூட்டவும் குறைக்கவும் வசதி செய்யப்பட்டிருந்த இருக்கைகள். வீட்டிலுள்ள அறைமாதிரி வாகனம் அத்தனைப் பெரிதாக இருக்கிறது. வாகனத்திற்குள் மிடுக்கான தோற்றத்துடன் அமர்த்திருக்கும் மனிதனின் கவனம் என்மீது இருக்கிறது. ஐரோப்பியர்களைப்போல உடுத்தி இருந்தபோதிலும், அவன் ஐரோப்பியன் அல்லன், சைகோன் நாட்டு வங்கியாளர்கள் உடுத்தும் வெளிர் நிற இந்தியப் பட்டில் 'சூட்' அணிந்திருக்கிறான். என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். இப்படியான பார்வைகள் எனக்குப் பழகி இருந்தன. காலணி நாடுகளில் ஐரோப்பியப் பெண்களைப் பேதமின்றி அனைவரும் பார்க்கிறார்கள், அவ்வாறு அவதானிக்கப்படுபவர்களில் பன்னிரண்டுவயது நிறைந்திருக்கும் இளம் ஐரோப்பிய சிறுமிகளும் அடக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக, வீதிகளில் நான் போகிறபோதெல்லாம் வெள்ளையர் கண்களும் என் மீது மொய்ப்பதைக் கவனித்து இருக்கிறேன், அம்மாவுடைய ஆண் நண்பர்கள் தங்கள் மனைவிமார்கள், 'மனமகிழ் மன்றத்தில்' டென்னிஸ் விளையாட சென்றிருக்கும் நேரமாகப் பார்த்து, தங்கள் வீட்டில், ஏதேனும் உண்டுவிட்டு போகலாமே என்று அன்பாக அழைக்கிறார்கள்.

எனது அழகும் பிறபெண்களின் அழகிற்கு அதாவது பிறரை வசீகரிக்க முடிந்த பெண்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல என்றுதான் நினைக்கிறேன், ஏனெனில் நிறையபேர் என்னைத் திரும்பிப்பார்க்கிறார்கள். எனது கணிப்பு தவறாகக் கூட இருக்கலாம். ஏனெனில், அழகு மாத்திரம் அதற்குப் பொறுப்பல்ல, வேறு எதோவொன்றும் இருக்கவேண்டும், உதாரணத்திற்கு நாம் நடந்துகொள்ளும்விதம். பிறர் பார்வைக்கு உகந்தவளாக என்னை மாற்றிக்கொள்கிறேன். பிறர் அழகியென்று என்னை நினைத்தால் நான் அழகிதான், மறுக்கவா முடியும், அதுபோலவே எனது குடும்பத்திற்கு(குடும்பத்தினருக்கு மட்டும்) நான் மிகவும் விருப்பமானவள்-வசீகரி. யார் எப்படி என்னை வேண்டுகிறார்களோ அப்படி என்னை வைத்துக்கொள்கிறேன், அதை நம்பவும் செய்கிறேன். அத்துடன் நானொரு வசீகரி என்ற நினைப்பும் சேர்ந்துகொள்கிறது. இவை அனைத்தையும் நம்புகிறபோதெல்லாம், அது உண்மை யாகவும் இருக்கிறது. எனவே என்னை ஒருவர் விருப்பத்தோடு பார்க்கிறபோது அவ்விருப்பத்திற்கு உகந்தவளாக நடந்துகொள்கிறேன் என்பதையும் உணருகிறேன். எனது சகோதரனை கொல்லவேண்டும் என்ற வெறித்தனத்தில் இருந்தபோதும், மனமறிந்து பிறரை மயக்கும் கலையில் தேர்ந்தவளாக இருக்கிறேன். இங்கே மரணம் என்ற சொல்லை உச்சரிக்கிறபோது ஒருவகையில் அம்மா ஒருத்திக்கு மாத்திரம் அதனோடு தொடர்பு இருக்கிறது, ஆனால் 'விருப்பத்திற்கு உகந்த' - 'வசீகரமான' என்ற சொல்லுக்கு எங்கள் வீட்டில் நான் உட்பட, பிள்ளைகள் அனைவருக்கும் அதில் பங்குண்டு.

இதுகுறித்த எச்சரிக்கையை எனது மனம் உணர்த்தி இருக்கிறது. பெண்ணொருத்திக்கு அழகென்பது, அவள் உடுத்துகிற ஆடைகள்மூலமோ, உபயோகிக்கிற அழகு சாதனங்களோ, களிம்புகளுக்குக் கொடுக்கப்படும் விலையோ, பிறரிடம் இல்லாதவற்றை பெற்றிருப்பதாலோ, அலங்காரப் பொருட்களாலோ கிடைப்பதில்லை. இவைகள் அனைத்துக்கும் மேலானதாக ஏதோவொன்று இருக்கிறது. எது? எங்கே? என்பதை நான் அறியேன். ஆனால் பெரும்பாலான பெண்கள் நம்பிக்கொண்டிருக்கிற இடத்தில்மட்டும் அது இல்லையென்று திட்டவட்டமாகச் சொல்லமுடியும். சைகோனில் உள்ள சுகாதார நிலையங்களிலும், வீதியிலும் பெண்களைப் பார்க்கிறேன். அவர்களில் பலர் மிக அழகாக இருக்கிறார்கள், மிகச் சிவப்பாக இருக்கிறார்கள், இங்கே தங்கள் அழகை அதீதக் கவனமெடுத்து பராமரிக்கிறார்கள், அவர்களில் சுகாதார நிலையங்களில் பணிபுரிகிற பெண்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அவர்களுக்கு அழகைப் பராமரிப்பதைத் தவிர வேறுவேலைகள் இருப்பதாகத் தோன்றவில்லை. அழகை அவர்கள் கட்டிக்காப்பதன் நோக்கம் அவர்களது காதலர்களுக்காக, இத்தாலியில் கழிக்க இருக்கும் விடுமுறைக்காக, ஐரோப்பிய பயணத்திற்காக, மூன்று ஆண்டுகளுக்கொருமுறை கிடைக்கும் ஆறுமாத நீண்ட விடுமுறையின்போது, விநோதமான இக் காலனி நாட்டுத் தகவல்களை, அதாவது இங்கே இவர்கள் ஆற்றும் பணிகள் குறித்து, அவரவர் வீட்டுப் வேலைக்காரர்கள் குறித்து, பணியில் அவர்களிடமுள்ள ஒழுங்கு குறித்து, உள்ளூர் தாவரங்கள் குறித்து, கலந்துகொண்ட ஆட்டபாட்டங்கள் குறித்து, வெள்ளை மனிதர்களின் மாளிகைபோன்ற வீடுகள் குறித்து, அங்கே தங்கி வெகு தூரங்களில் பணியாற்றுகிற அரசு அலுவலகர்கள் குறித்து, பேசுவதற்காக அன்றி வேறுகாரணங்கள் இல்லையென நினைக்கிறேன். காரணங்களின்றி இப்பெண்கள் உடுத்துவதும், மாளிகை போன்ற அவர்களது வீடுகளில், இருட்டில் தங்களை ஒளித்தபடி, பார்ப்பதும், காத்திருப்பதும் உண்டு. இலக்கிய புதினங்களில் வாழ்கிறோம் என்ற நினைப்பு இவர்களுக்கு, நாட் கனக்கில் காத்திருக்கவென்றே விசாலமான ஒரு பெரிய அறை, அலமாரிகளில் உபயோகித்திராத ஏராளமான கவுன்கள். சில பெண்களுக்குப் புத்திகூடபேதலித்திருக்கிறது. ரகசியம் காப்பாற்றக்கூடிய இளம் வேலைக்காரிகள் கிடைக்கிறபோது இவர்கள் மறக்கப்படுவதும், அதனால் எழும் கூச்சலும், கன்னத்தில் விழும் அறைகளும், தொடரும் மரணமும் பலரும் அறிந்தது.

இப்படி, பெண்களே தங்களுக்கு எதிரானச் செயல்களில் இறங்குவதென்பதை தவறாகவே நான் பார்க்கிறேன். மோகங்கொள்ளவைக்கிற சங்கதியென்று அப்போது எதுவுமில்லை. பிறரைக் கவர அல்லது அவர்களது இச்சையைத் தூண்டுவதுபோல நடந்துகொண்டிருக்கலாம், அதற்கென்று புறம்பாக வசியபொருளேதும் அவள் வசமில்லை. அப்படியொன்று இருக்குமென்றால், முதற்பார்வையைச் சொல்லலாம், இல்லையென்றால் இல்லை. அது உடலுறவிற்கு கையாளுகிற உடனடியான உத்தி, தவறினால் பின்னர் எதுவுமில்லை. இவற்றையெல்லாம் அனுபவப்படுவதற்கு முன்பே நான் தெரிந்துவைத்திருந்தேன்.

ஹெலென் லகொனெல் மட்டுமே இதுபோன்ற தவறுகளுக்கு உட்பட்டவள் அல்லவென்று நினைக்கிறேன். அவள் மனத்தளவில் இன்னமும் சிறுமியாக இருப்பது காரணமென்று நினைக்கிறேன். வெகுகாலம் எனக்கென்று கவுன்கள் இல்லாமலிருந்தேன். அவை பெரும்பாலும் லொடலொடவென்று பெரிதாக இருந்தன. அம்மா உபயோகித்து அலுத்துப்போன பழைய கவுன்களிலிருந்து வெட்டித் தைத்தது. அம்மாவின் கவுன்களும் அப்படித்தான் அளவின்றி தைத்ததுபோல இருந்தன. எனது தாயாரின் கட்டளைப்படி அம்மாவின் எடுபிடியான 'தோ' என்பவள் எனக்காக தைத்துத் தனியாக வைத்திருப்பாள். அம்மா பிரான்சுக்குப் போகும் போதும் சரி, சடெக் நகரிலிருந்த அம்மாவின் அலுவலகவீட்டில் அவளை எனது மூத்த சகோதரன் வன்புணர்ச்சிக்கு முயன்றபோதும் சரி, அவளுக்கான ஊதியத்தை எங்களால் கொடுக்கமுடியாத நிலையிலும் சரி, எனது தாயாரைவிட்டு பிரியாமல் எப்போதும் ஒட்டிக்கொண்டிருப்பவள். 'தோ' அவளது சகோதரி வீட்டில் வசித்துவந்தாள். அவளுக்குத் துணிகளில் நெளிநெளியாய் மடிப்புவேலைகள் செய்யவும், பூவேலைகள் செய்யவும் தெரியும். தைத்து வெகுகாலம் ஆனதுபோல, மயிரிழைமாதிரியான ஊசிகளை வைத்துக் கொண்டு கைத்தையல் போட்டுக் கொண்டிருப்பாள். அவள் துணிகளில் பூவேலைசெய்கிறபோது அம்மா அவளிடம், கட்டில் விரிப்புகளைக் கொடுத்து பூப்போடச்சொல்வாள். மடிப்புவேலைகளில் அவள் ஆர்வமாயிருக்கிறபொழுது வீட்டிலுள்ள கவுன்கள் முழுக்க 'தோ'விடம் சேர்க்கப்படும், அவ்வாறே காற்றில் பறக்கக்கூடிய குட்டைக் கவுன்களும், அவற்றை அணிய ஏதோ பெரிய உறைகளை மாட்டிக்கொண்டதுபோல தெரிவேன், முன்பாக இரண்டுமடிப்புகளும், குளோதின் கழுத்தும் கவுனுக்கு, ஸ்கர்ட் என்றால், தைப்பதற்கு வசதியாக அடியில் துணி கொடுக்கப்பட்டு, சுற்றளவு ஆகப் பெரிதாக வைத்து, காலத்துக்குக் பொருந்தா உடை, சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். ஆக அதுபோன்ற பெரிய கவுனும், அதற்கு ஏறுமாறாக ஒரு பெல்ட்டும் என்று எனக்கு விதிக்கப்பட்டிருந்த காலம்.

பதினைந்தரை வயது, மெலிந்தவள், விட்டால் ஒடிந்துவிடுவதுமாதிரியான உடல், சிறுகுழந்தைக்குரிய மார்புகள். பிறகு நான் மேலே குறிப்பிட்டிருந்ததைப்போல பலரின் கேலிக்கும் உள்ளாகக் கூடிய கவுன், ஆனால் அப்படி ஒருவரும் கேலிசெய்யவில்லை. எல்லாக் காரணிகளும் பொருந்தி இருந்தன. ஆனால் அதுவரை எதுவும் நடக்கவில்லை. எனது கவனம் கண்களில் இருக்கிறது. கண்களிற்தான் அனைத்தும் செயல்படவென்று காத்திருக்கின்றன. எழுத விரும்புகிறேன். எனது விருப்பம் அதை எழுத்தில் வடிப்பது. அம்மாவிடம் அதுபற்றி தெரிவித்திருந்தேன். முதன்முறை தெரிவிததபோது அவளிடமிருந்து மௌனம், பின்னர் சட்டென்று: 'என்ன எழுதப்போகிறாய்?', என்று கேட்டாள். நான் 'புத்தகங்கள், அதாவது நாவல்கள்' என்றேன். முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு, தடித்தகுரலில், ' முதலில் கணக்கில் பட்டயத்தினை பெற்றாகணும், பிறகு உனது விருப்பம்போல எதையாவது எழுதித் தொலை, என்னைக் கேட்காதே!', என்றாள். அவளுக்கு அதில் விருப்பமில்லை, எழுத்தை யார் மதிக்கிறார்கள், அதை ஒரு வேலையென்று மெனக்கெட்டுக்கொண்டு.....- நேரம் கிடைக்கும்போது," உன்னுடய எண்ணம் சிறுபிள்ளைத்தனமானது" என்று சொல்லக்கூடும்.

(தொடரும்)

nakrish2003@yahoo.fr


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner