இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செப்டம்பர் 2006 இதழ் 81 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அரசியல்!
அண்மையில் முல்லைத்தீவுச் செஞ்சோலைக் குழந்தைகள் காப்பகத்தின் மீது ஸ்ரீலங்கா விமானப்படை விமானங்கள் நடாத்திய குண்டு வீச்சுத் தாக்குதல்களில் பெண் குழந்தைகள் பலர் பலியானது தெரிந்ததே. அது பற்றிப் பத்திரிகைகள், இணையத் தளங்களில் வெளியான செய்திகள், ஆசிரியத் தலையங்கங்கள் சில.

தினக்குரல் (இலங்கை)!
போரும் உண்மையும்!

இலங்கைஇலங்கையின் உள்நாட்டுப் போர் வரலாற்றிலே அரசாங்கப் பாதுகாப்பு பேச்சாளர் `பாத்திரத்தை' ஏற்று நடித்த பலரை நாம் பார்த்திருக்கின்றோம். ஜே.ஆர். ஜெயவர்தன ஆட்சிக்காலத்தில் லலித் அத்துலத் முதலி தொடங்கி இந்தப் பாத்திரத்தை வகித்தவர்களுக் கென்று ஒரு நீண்ட பட்டியலையே வரையலாம். இவர்கள் எல்லோருமே மனச்சாட்சிப்படி பேசினார்கள் என்று மனச்சாட்சிக்குத் துரோகமிழைக்க விரும்பாத எவரும் கூறமாட்டார்கள். இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பாதுகாப்பு பேச்சாளர் பாத்திரத்தை ஏற்றிருப்பவர் சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத் தரப்புக்குத் தாவி அமைச்சராகிக் கொண்ட கெஹலிய ரம்புக்வெல. அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் இவ்வேளையில் ரம்புக்வெல தனது பாத்திரத்துக்கு ஏற்றவாறு செய்திகளை ஆக்கிரமித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு காலமாக போரின் அவல நிகழ்வுகளைப் பற்றிய அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர்களின் `வர்ணனைகளை'க் கேட்டு வந்த நாம் இப்போது ரம்புக்வெல வர்ணிப்பதைக் கேட்க வேண்டியிருக்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் அமைந்திருக்கும் `செஞ்சோலை' அநாதைச் சிறுமிகள் பராமரிப்பு நிலையத்தின் மீது கடந்த திங்கட்கிழமை இலங்கை விமானப்படைப் போர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதல்களில் மாணவிகள் பலியான கோரச் சம்பவம் குறித்து ரம்புக்வெல நேற்றுமுன்தினம் கொழும்பில் செய்தியாளர் மகாநாட்டில் தெரிவித்த கருத்துகள் குறித்து கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது.

செஞ்சோலை மீதான குண்டு வீச்சுத் தாக்குதல்களில் 61 சிறுமிகள் உடல்சிதறி பலியானதுடன் 150 க்கும் அதிகமான சிறுமிகள் காயமடைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே செஞ்சோலையில் இருநாள் முதலுதவிப் பயிற்சிக்கென வந்திருந்த முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் மாணவிகள். ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு நிதியமும் (யுனிசெவ்) விமானக் குண்டு வீச்சுத்தாக்குதல்களில் மரணமடைந்த அனைவருமே `வன்முறைக்குப் பலியான அப்பாவிகள்' என்றுதான் அறிக்கையில் கூறியிருக்கிறது. ஆனால், தற்போது முகமாலையில் அரசாங்கப்படைகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளுக்கு உதவியாக அனுப்பப்படுவதற்காக பயிற்சியளிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர்களே குண்டு வீச்சுகளில் பலியானதாக ரம்புக்வெல கூறியிக்கிறார். `ஆயுதப்பயிற்சியைப் பெற்ற பிறகு அவர்களை வழமையான சிறுவர்களாக நோக்கமுடியாது. ஒரு சிறுவன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு படைவீரரைச் சுடுவதற்கு வரும் போது படையினர் அவர்களைக் கட்டியணைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கமுடியாது. இந்தகைய தருணங்களில் சிறுவர்களின் வயதையோ, பாலையோ கருத்திலெடுக்கமுடியாது. அவர்கள் என்ன நோக்கத்துக்காக வருகிறார்கள் என்பது தான் முக்கியம்' என்று ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இவர் கூறுவதைப் போன்று செஞ்சோலையில் பலியானவர்களோ காயமடைந்தவர்களோ ஆயுதப் பயிற்சி பெற்றதற்கான சான்று எதுவும் இல்லை என்று யுனிசெவ் கூறுகிறது. இலங்கையில் உள்ள யுனிசெவ் பிரதிநிதி ஜோன்னா வான் கேர்ரென் இந்த மாணவிகள் இருநாள் முதலுதவிப்பயிற்சிக்காக அருகாமையில் உள்ள பாடசாலைகளில் இருந்து அழைக்கப்பட்டவர்களே என்று வெளிப்படையாகக் கூறுகிறார். சம்பவ இடத்துக்கு விஜயம் செய்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும் பலியான சிறுமிகள் ஆயுதப் பயிற்சி எடுத்தமைக்கான எந்தச் சான்றையும் காண முடியவில்லை என்று தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இது விடயத்தில் யுனிசெவ் கூறுவதையோ அல்லது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு கூறுவதையோ ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராயில்லை. குண்டு வீச்சுத் தாக்குதல்களை நியாயப்படுத்திய வண்ணமே அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு நாம் ஒரு முக்கிய விடயத்தை அவதானிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் தங்கள் படையணிக்கு சிறுவர்களைச் சேர்த்திருக்கிறார்கள் என்று குற்றஞ் சுமத்திய அதே யுனிசெவ் நிறுவனம் தான் செஞ்சோலையில் பலியானவர்கள் அப்பாவி மாணவிகள் என்றும் கூறியிருக்கிறது. முன்னையதை ஏற்றுக் கொண்ட அரசாங்கம் பின்னையதை ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. உலக நாடுகளினதும் சர்வதேச அமைப்புக்களினதும் அபிப்பிராயங்கள் எப்போதுமே தனது நிலைப்பாட்டுக்கு இசைவானதாக இருப்பதையே அரசாங்கம் விரும்புகிறது. இதில் உண்மை பற்றி அக்கறை கிடையாது. எந்தவொரு போரிலுமே உண்மையைப் புதைப்பதற்கென்றே ஒரு பிரசார இயந்திரம் முடுக்கி விடப்பட்டிருக்கும். இலங்கையில் அந்த உண்மை புதைப்பு ஒரு சிறுபான்மையினத்தை அடியோடு அழிக்கும் நோக்குடனான இனப்படுகொலைச் செயற்பாடுக ளுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய பேராபத்தை கொண்டிருக்கிறது.

உதயன்.காம் (யாழ்ப்பாணம்)!
பொய்களால் உண்மைகளுக்கு சமாதி கட்டும் எத்தனமே இது!

செஞ்சோலைக் குழந்தைகள் காப்பகத்தில் கொல்லப்பட்ட குழந்தைகள்....முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை விமானப் படையினர் மேற்கொண்ட குண்டு வீச்சுத் தாக்குதலில் பலியானவர்கள் ஒன்றுமறியா அப்பாவி மாணவியர்கள். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும், "யுனிசெவ்' அதிகாரிகளும் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
சம்பவம் இடம்பெற்றவுடன் தாங்கள் அவ்விடத்துக்குச் சென்று பார்வையிட்டனர் என்றும், அங்கு அந்த மாணவியர்கள் ஆயுதப் பயிற்சி ஏதும் பெற்றமைக்கான எந்த வகையான ஆதாரமும் கிடையாது என்றும் அவர்கள் அடித்துக் கூறியிருக்கின்றனர்.

இப்படி சுயாதீன வட்டாரங்கள் சம்பவ இடத்திலிருந்து செய்திகளையும், தகவல்களையும் உறுதிப்படுத்தி வெளியிட்டாலும் இலங்கை அரசுத் தரப்பு உண்மையை ஒப்புக் கொள்வதாகவோ, தவறை ஏற்றுக்கொள்வதாகவோ இல்லை.

குண்டுத் தாக்குதலில் காயமடைந்தோரை ஏற்றிச் செல்லும் வாகனங்களை, வானத்திலிருந்து உளவு விமானங்கள் மூலம் வீடியோப் படம் எடுத்து வைத்துக் கொண்டு, அதைக் காட்டி, புலிகளின் ஆயுதப் பயிற்சி முகாம் மீதே அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றது இலங்கை அரசுத் தலைமை.

இலங்கை அரசின் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் கிளிநொச்சி கல்வி வலயம்தான் தாக்குதலுக்கு இலக்கான செஞ்சோலைச் சிறார் இல்லத்தில் பாடசாலை மாணவியருக்கான முதலுதவி தொடர்பான வதிவிடப்பயிற்சி நெறியை அச்சமயம் ஒழுங்குபடுத்தி, நடத்தி வந்தது. அப்போதுதான் அந்த நிலையம் மீது விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

தனது கல்வி வலய அதிகாரிகள் மூலமே இலங்கை அரசு இது பற்றிய உண்மையைத் தெரிந்து கொண்டிருக்க முடியும். இல்லையேல் கண்காணிப்புக் குழு, "யுனிசெவ்' போன்ற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரடியாகச் சென்று பார்த்த பின்னர் தெரிவித்த தகவல்களைக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம்.

அதுவும் இல்லாவிட்டால், பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. கோரியிருப்பது போல இந்தப் படுகொலைகள் குறித்து பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றை நடத்தி, அதன டிப்படையில் முடிவைக் கண்டறிய அரசுத் தலைமை இணங்கியிருக்கலாம்.

இதையெல்லாம் செய்வதை விடுத்து, மீண்டும் மீண்டும் இந்த அநியாயச் சாவுகளை நியாயப்படுத்த அரசு முயல்வதன் மூலம் சிறுபான்மையினரான தமிழர்களின் நெஞ்சத்தை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல நோகடிக்கின்றது!

ஈவிரக்கமற்ற இந்தப் படுகொலைகளால் ஏற்பட்டுள்ள விசனத்தை விட, அதனை நியாயப்படுத்தும் அரசின் செயலால் ஏற்படும் சீற்றமும், வெஞ்சினமும்தான் தமிழர்கள் மத்தியில் அடக்கிக் கொள்ள முடியாத உணர்வலைகளைக் கிளப்புகின்றன.

இந்த அவலச் சாவுகளை அநியாயப் படுகொலைகளை ஒப்பேற்றி விட்ட அரசுத் தலைமை, இது விடயத்தில் உண்மைகளை மூடி மறைத்து, தனது செயலை நியாயப்படுத்த ஒற்றைக் காலில் நிற்கின்றது. சாம, பேத, தான, தண்டம் ஆகிய நான்கு உபாயங்களையுமே இதற் காக நாடுகின்றது அரசு.

இவ்விவகாரம் தொடர்பாகத் தெற்கு ஊடகங்களை அடக்கி வாசிக்கச் செய்வதற்காக நான்கு மார்க்க வழிகளும் பின்பற்றப்படுகின்றன. உண்மையை அம்பலப்படுத்தத் துடிக்கும் ஊடகங்கள் அழுத்தங்கள் காரணமாக அச்சுறுத்தல்களுக்குப் பயந்து அடங்கிப் போவதையும், இந்த விவகாரத்தில் அவை தமிழர் தரப்புச் செய்திகளைக் கருத்தில் எடுக்காமல் நழுவி, வழுவிச் செல்வதையும் கூட அவதானிக்க முடிகின்றது.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத பெரும் துன்பியல் நிகழ்வு இத் தாக்குதல். அப்பாவிச் சிறார்கள் அநியாயமாகக், கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட இச்சம்பவம் தமிழரின் சரித்திரத்தில் மறக்கப்படவே முடியாதபெரும்வடு; சோகத் தழும்பு.

அந்த அநியாயத்துக்கு நீதி கிடைக்காவிட்டாலும், உண்மையாவது வெளிப்பட்டாக வேண்டும் என்பதே தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பாகும்.
இத்தகைய தாக்குதல் ஒன்றைத் தமிழினம் மீது மேற் கொண்டு விட்டு, தான் மேற்கொண்ட கொடூரப் படுகொலை கள் பற்றிய உண்மையை மூடிமறைப்பதற்காக, ஒன்றுமறியா அப்பாவி மாணவியரைப் புலிகளின் ஆயுதப் பயிற்சி பெறும் உறுப்பினர் எனச் சித்திரித்துக் காட்ட முயலும் அரசின் வஞ்சகப் போக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

அரசின் இத்தகைய வஞ்சகத்தனம் தமிழினத்தை மேலும் மேலும் விரக்தி நிலைக்குத்தான் தள்ளும். பிரிந்து சென்று, சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தமிழர் தாயகத் தில் தன்னாட்சி அதிகாரத்தை நிறுவுவதே தங்களுக்கு உள்ள ஒரே மார்க்கம் என்ற தமிழர்களின் நிலைப்பாட்டை அரசின் இத்தகைய வஞ்சகத்தனம் மேலும் உறுதிப்படுத்தி ஊக்குவிக்கும். அதுவே உண்மை; அதுவே மெய்மை நிலை.

வேம்பாய்க் கசக்கும் இந்த உண்மையை உரைப்பதற் காக ஊடகத்தை நோவதை விட, அந்த உண்மையில் பொதிந்துள்ள அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முயல்வது நல்லாட்சிக்கு வழிகாட்டும். ஆனால், அந்த ஆட்சிதான் இங்கு இல்லையே!


தினமணி (தமிழகம்)!
இலங்கை குண்டுவீச்சில் 61 சிறுமிகள் பலி - தமிழக சட்டப் பேரவையில் கண்டனம்!

சென்னை, ஆக. 17: இலங்கையில் 61 சிறுமிகள் ராணுவ தாக்குதலால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தமிழக சட்டப் பேரவை கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்த தீர்மானத்தை சட்டப் பேரவையில் அதன் தலைவர் இரா. ஆவுடையப்பன் வியாழக்கிழமை கொண்டு வந்தார்.

14.8.2006-ல் இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் அனாதைக் குழந்தைகள் காப்பகத்தின் மீது இலங்கை ராணுவத்தினர் சரமாரியாகக் குண்டுகளை வீசி தாக்கியதால் 61 மாணவிகள் உயிரிழந்தது குறித்தும், 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்தது குறித்தும் இப் பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.

இந்த நாகரிகமற்ற, காட்டுமிராண்டித்தனமான, மனிதாபிமானம் சிறிதும் இல்லாத, கொடுமை நிறைந்த இலங்கை ராணுவத்தின் இச் செயலை இப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

நிலையான வாழ்க்கை முறைகளுக்கும், நிலைத்த பாதுகாப்புக்கும் போராடி வரும் இலங்கை வாழ் அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்துவரும் இந்தப் போர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி, சமாதானப் பேச்சு மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இலங்கை அரசை இந்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வற்புறுத்தியுள்ளார்.

இலங்கை ராணுவத்தின் இக் கொடிய கொலை வெறியாட்டத்தில் உயிரிழந்த பள்ளிக் குழந்தைகளுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் இப் பேரவை தெரிவித்துக் கொள்கிறது. மறைந்த பள்ளிக் குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பேரவை உறுப்பினர்கள் 2 நிமிஷங்கள் எழுந்து நின்று அமைதி காத்தனர்.


'உதயன்' (யாழ்பாணம்)!
யுனிசெவ்' அறிக்கை : "முல்லைத் தீவில் பலியான அனைவரும் வன்முறைக்குப் பலியான அப்பாவிகள்"!

UNICEFமுல்லைத்தீவில் சிறிலங்கா விமானப் படையின் விமானக் குண்டு வீச்சில் பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை அதிர்ச்சி யளிக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. யுனிசெவ்வின் நிர்வாக இயக்குநர் ஆன் எம். வெனெமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- 'இலங்கை வன்முறைகளில் அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் முல்லைத் தீவு மாவட்டத்தில் வல்லிபுனம் வளாகத்தில் சிறுமிகள் கொல்லப்பட்டும் படுகாயமடைந்துள்ளனர்.அக்குழந்தைகள் அனைவரும் வன்முறைக்கு பலியான அப்பாவிகள். சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் சிறார்கள் வாழ் வதற்கும் கற்பதற்கும் விளையாடுவதற்குமான சூழ் நிலையை உறுதிப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையின் வடபகுதியில் உள்ள அந்த வளாகத்தில் குண்டு வீசப்பட்டமையால் கொல்லப்பட்டோரில் 40 பேர் இளம் சிறுமிகள். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சிறுமிகளான இவர்கள் அந்த வளாகத்தில் முதலுதவி தொடர்பான பயிலரங்குக்காக இரவில் தங்கியிருந்தனர். 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அருகில் உள்ள ஷயுனிசெவ்| பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை அவதானித்தனர். மருத்துவ மனைகளுக்குத் தேவையான எரிபொருள் உள்ளிட்டவைகளுக்கு உதவிய தோடு படுகாயமடைந்த பாடசாலை சிறுமிகளுக்கும் குடும்பத்தினருக்கும் உளவள ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இலங்கையின் அண்மைய வார வன்முறைகளால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது வீடுகளிலி ருந்து இடம்பெயர்ந்துள்ளனர். நூற்றுக் கணக்கான குழந்தைகள் காயமடைந்துள்ளனர்- குடும்பத்தினரை இழந்துள்ளனர். தங்களது உறவுகள் மீதான தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல் நிகழுமோ என்ற அச்சத்தில் சிறார்கள் வாழ்ந்து வருகின்றனர்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி!
இலங்கைத் தமிழர் பிரச்சினை- பிரதமரின் தூதருடன் முதல்வர் பேசிய விவரங்களை வெளியிட முடியாது: ஆர்க்காடு வீராசாமி

சென்னை, ஆக. 18: இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பிரதமரின் ஆலோசகர் எம்.கே. நாராயணனும், முதல்வர் கருணாநிதியும் பேசிய விவரங்களை வெளியிட முடியாது என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கூறினார்.

இலங்கையில் ராணுவ குண்டுவீச்சில் 61 மாணவிகள் பலியான சம்பவம் குறித்து வியாழக்கிழமை பேரவையில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக உறுப்பினர்கள் பேசியதாவது:

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக): இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் செஞ்சோலையில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் 61 மாணவிகள் பலியாகியுள்ளனர். மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு லட்சம் தமிழர் குடும்பங்கள் வெளியேறுகின்றன என்ற செய்தி இங்குள்ள தமிழக மக்களிடம் ஆறாத துயரமாக உள்ளது. இதுபற்றி விவாதிக்க ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்திருக்கிறோம். அதை விவாதிக்க அனுமதிக்க வேண்டும்.

பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன்: அது என் பரிசீலனையில் இருக்கிறது. பின்னர் முடிவு செய்யப்படும்.

பாமக தலைவர் ஜி.கே. மணி: இச் சம்பவம் குறித்து சிங்கள ராணுவத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி.

செல்வப்பெருந்தகை (விடுதலை சிறுத்தைகள்) இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதற்கு அரசுக்கு நன்றி. இவ் விஷயத்தில் மத்திய அரசு மெüனம் காப்பதைக் கண்டித்தும், இலங்கைக்கு செய்து வரும் உதவிகளைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்கிறேன். அவருடன் கட்சியின் மற்றொரு உறுப்பினர் ரவிக்குமாரும் வெளியேறினார்.

மு. கண்ணப்பன் (மதிமுக): தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி அங்குள்ள நிலையை அறிய வேண்டும். இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பி.க்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசி உண்மை நிலை அறிய வேண்டும்.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): இவ் விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு சமாதான முயற்சி மேற்கொள்ள வேண்டும் என இப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

பக்கத்து நாடு என்ற முறையில் இலங்கையில் நடக்கும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு தலையிட தமிழக அரசு வற்புறுத்த வேண்டும்.

சி. கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்): பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண ஏற்பாடு செய்யுமாறு இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

சுதர்சனம் (காங்.): இந்திரா காந்தி காலத்தில் கூட இலங்கை பிரச்சினை பற்றிப் பேச அப்போதிருந்த அதிகாரி பார்த்தசாரதி அனுப்பப்பட்டார். தமிழ் தெரிந்த அதிகாரிகளைக் கொண்டு கையாளும் எண்ணத்தில் தற்போது முதல்வருடன் பேச, பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் அனுப்பப்பட்டார். இதில் குறை ஏதும் இல்லை.

அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி: இலங்கையில் நடக்கும் கொடுமைகளை தமிழர்களால் தாங்க முடியவில்லை. திமுகவைப் பொருத்தவரை இதைக் கண்டிக்கத் தயங்கவில்லை.

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் ஒரு பிரதிநிதி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்குள்ள உண்மை நிலையைக் கண்டறிந்து அறிக்கை அனுப்புமாறு அவர் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்.

மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைத் தான் மாநில அரசு இதுவரை பின்பற்றி வருகிறது. அதிமுக, திமுக ஆட்சிகளில் இந் நிலையில் மாற்றம் ஏதும் இல்லை.

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து மத்திய அரசுடன் தமிழக முதல்வர் கருணாநிதி தொடர்ந்து பேசி வருகிறார்.

கண்ணப்பன் (மதிமுக): அதிகாரி வந்து முதல்வருடன் பேசியதில் தவறு இல்லை என்ற கருத்தை ஏற்கிறோம். அவர்கள் இருவரும் என்ன பேசினர் என்பதை வெளியில் தெரிவித்தால் நலமாக இருக்கும்.

ஆர்க்காடு வீராசாமி: அப்படி வெளியில் சொல்ல முடியாது. வெளியுறவு பிரச்சினை குறித்து அரசு தூதரும், முதல்வரும் பேசியது ரகசியமானதாகும். அதை வெளியில் சொல்வது நாட்டுக்கு நல்லதல்ல. அங்குள்ள தமிழர்களுக்கும் நல்லதல்ல. எனவே, அதுபற்றி இங்கு விவாதிக்க வேண்டாம்.

உதயன்.காம்!
முல்லைச் சிறுமிகளின் படுகொலைக்கு
ஜெயலலிதா கண்டனம் தெரிவிப்பு!

அ.இ.அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா..விமானக்குண்டுத் தாக்குதலுக்கு முல்லைத்தீவில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், அண்ணா தி.மு.கவின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள செஞ்சோலை சிறுமியர் பராமரிப்பு இல்லத்தின் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாக குண்டு களை வீசியதால் அநியாயமாக 61 சிறுமியர் உயிரிழந்த செய்தியையும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த செய்தியையும் அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

இந்தத் துயர நிகழ்ச்சியை வன்மையாகக் கண்டிப்பதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக்கொள்வதுடன், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இதுகுறித்து தமிழக சட்டமன்றப் பேரவையில் அ.தி.மு.க. சார்பில் சபையை ஒத்தி வைத்து, இலங்கையில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையைப்பற்றி விவாதிக்க வேண்டும் என கொடுக்கப்பட்ட ஒத்திவைப்புத் தீர் மானத்தின் மீது பேச சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி மறுத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மாலைமலர்!
இலங்கை பிரச்சினை: ராஜீவ்காந்திக்கு முன்-பின் என பிரித்து பார்க்க வேண்டும்: சட்டசபையில் கருணாநிதி விளக்கம்

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி...சென்னை, ஆக. 19- சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் ம.தி.மு.க. உறுப்பினர் கண்ணப்பன் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கை முல்லைத்தீவில் 61 மாணவிகள் சிங்கள ராணுவத்தால் குண்டு வீசி கொலை செய்யப் பட்டது குறித்து இந்த அவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்த இலங்கை அரசின் தென்னிந்திய துணைத் தூதரகம் திரிக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டது என்று கூறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் தனது தூதரை அனுப்பி இலங்கை அதிபரிடம் 2 மணி நேரம் பேச்சு நடத்தி இருக்கிறார். பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆயுதங் கள் கொடுத்து வருகிறது. இந்திய அரசு இதை கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்திரா காந்தி பாரத பிரதமராக இருந்த போது திரிகோணமலையில் தளம் அமைக்க எடுத்த முயற்சியை கண்டித்தார்.

இப்போது மீண்டும் அமெரிக்கா திரிகோணமலை வட்டாரத்தில் கால் ஊன்ற முயற்சி செய்து வருகிறது. மாணவிகள் கொலை செய்யப் பட்டதை ஐக்கிய நாட்டு செயலாளர் கோபி அனன் கண்டித்துள்ளார். ஆனால் நமது நாடு எச்சரிக்கை செய்யாதது வருத்தம் அளிக்கிறது. இந்திய கடற்படை உதவி செய்தது இலங்கைக்கு ரேடார் வழங்கியது. ஆகியவை இலங்கை ராணுவத்தினர் தமிழர்களை அழிப்பதற்கு மேலும் உதவுவதாக அமைந்து விட்டது. திரிகோணமலை வட்டாரத்தில் தமிழர்கள் அனாதையாக்கப் பட்டிருக்கிறார்கள். அரிசி, உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்துகள் இல்லை. எனவே தொண்டு நிறுவனங் கள் மூலம் இவற்றை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் மாநில அரசும் இதற்கு உதவ வேண்டும்.

முதல்-அமைச்சர் கருணாநிதி:- இந்த பிரச்சினை மிகவும் முக்கியமான பிரச்சினை என்றாலும் எந்த அளவுகோல் கொண்டு தீர்மானிப்பது, விமர்சிப்பது என்ற நிலை. ஈழ தமிழர் பிரச்சினையை 2 விதமாக பிரிக்கலாம். அது ராஜீவ்காந்திக்கு முன் ராஜீவ்காந்திக்கு பின். ராஜீவ்காந்திக்கு பின் என்ற நிலை வராமலிருந்திருந்தால் ஈழத்தமிழர்களின் நிலையே இன்று வேறாகி இருக்கும்.

1989-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று நான் முதல்வராக பொறுப்பேற்றேன். மரியாதை நிமித்தமாக அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியை சந்திக்க நான் டெல்லி சென்றேன். முரசொலி மாறனும் வந்திருந்தார். அப்போது ராஜீவ்காந்தி என்னிடம் இலங்கை பிரச்சினையை நீங்கள் முன்னின்று தீர்க்க வேண்டும். இலங்கை வவுனியாவுக்கு நீங்களும், முரசொலி மாறனும், கோபால்சாமியும் சென்று வவுனியாவில் பிரபாகரனை சந்தித்து பேசி ஒரு முடிவு எடுத்துவாருங்கள் என்று கூறினார். இதற்கான விமான வசதி, போக்குவரத்து ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறினார். மீண்டும் ராஜீவ்காந்தியை சந்தித்து விட்டு சென்னை சென்று தெரிவிப்பதாக கூறினேன். அப்போது ராஜீவ்காந்தி பிரபாகரனை பெரிதும் புகழ்ந்தார். எனக்கே ஆச்சரியம்.  சென்னை திரும்பினேன். அதற்குள் கோபால்சாமி எனக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு வவுனியாவுக்கு சென்று விட்டார்.

அதன்பிறகு என்னென்னவோ நடந்து விட்டது. இலங்கை அரசிலும் பல்வேறு பிரச்சினை எனவே எடுத்த முயற்சியில் தடங்கள் ஏற்பட்டுவிடாது என்றாலும் அந்த முயற்சியை தொடரும்படி ராஜீவ்காந்தி என்னிடம் கூறினார். ராஜீவ்காந்தி தமிழ் மண்ணில் ரத்தம் சிந்தவேண்டியநிலை ஏற்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து எழுந்த உணர்ச்சி மாய்ந்து போயின. ஜெயலலிதா இந்த சபையில் கோபத்தோடும் வெறுப்போடும் இந்த பிரச்சினையை அணுகினார். இதே மனநிலை எல்லோருக்கும் இருந்தது.

இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் நமது, இதயம், தொப்புள் கொடி உணர்வு உள்ளவர்கள். அவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தீர்மானம் நிறைவேற்றியது சரியானதுதான். அந்த தீர்மானத்தை இந்த அவையில் ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறோம். தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தது தவறு என்றால் அந்த தவறை செய்து கொண்டுதான் இருப்போம். இலங்கை அரசின் கவனத்தை கவர தீர்மானம் கொண்டு வந்திருப்பதாக இலங்கை துணை தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்மானம் கொண்டு வருவதால் இறந்தவர்கள் பிழைத்துவிட மாட்டார்கள். என்றாலும் இலங்கை அரசின் கவனத்தை மட்டுமல்ல இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேல் நடவடிக்கை என்ன எடுப்பது, எப்படி அணுகுவது என்பதை அவர்கள் கவனிப்பார்கள்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

மாலைமலர்!
சட்டசபையில் இன்று: 'இலங்கையில் இருந்து வரும் அகதிகளை கடற்படை தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும்' - சட்டசபையில் அ.தி.மு.க. கோரிக்கை!

சென்னை, ஆக. 19- சட்டசபையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் (அ.தி. மு.க.) ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:- இலங்கையில் உள்நாட்டு பிரச்சினை காரணமாக இலங்கை ராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக தமிழர்களை தாக்கி வருகிறார்கள். இதனால் இலங்கை தமிழர்கள் உயிருக்கு பயந்து அகதிகளாக தமிழ்நாட்டக்கு வருகிறார்கள். அவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குதல் நடத்தி விரட்டுகிறது. அப்போது படகு கவிழ்ந்து பலர் உயிர் இழக்கிறார்கள். சமீபத்தில் 6 மாத குழந்தையும் இன்னொரு விபத்தில் 5 பேரும் கடலில் தவறி விழுந்து இறந்தனர். இதில் ஒருவருக்கு திருமணமாகி 3 நாட்களே ஆகியிருக்கிறது.
பாதுகாப்பு தேடி இந்தியா வரும் அகதிகளுக்கு இது போன்ற பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாப

முதல்-அமைச்சர் கருணாநிதி :- நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இங்குள்ள அகதிகளுக்கு ரூ. 200 உதவிப் பணம் வழங்கப்பட் டது. தற்போது தமிழக அரசு மேலும் ரூ. 200 வழங்கி ரூ. 400 கொடுக்க ஏற்பாடு செய்து இருக்கிறது. மேலும் எல்லாவித உதவிகளையும் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கிருந்து வரும் அகதிகளை எப்படி அழைத்து வருவது என்பது குறித்து கடற்படை அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

தினத்தந்தி!
இலங்கைக்கு இந்தியா, ராணுவ உதவி வழங்கக்கூடாது!
புதிய நீதிக்கட்சி வற்புறுத்தல்!


சென்னை, ஆக.21- இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி வழங்கக்கூடாது என்று புதிய நீதிக்கட்சி வற்புறுத்தி உள்ளது.

கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை மாவட்ட புதிய நீதிக்கட்சி சார்பில் இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள ராணுவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார்.

இதில் கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளர் ஆர். சுப்பையா, துணைப் பொதுச்செயலாளர் பழனி, தலைமை நிலைய செயலாளர் ஏ.ரவிக்குமார், மாநில அமைப்பு செயலாளர் ஆர்.டி.சேதுராமன், மாநில பொருளாளர் வெள்ளைசாமி, இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, கொல்லாதே, கொல்லாதே இலங்கைத்தமிழரை கொல்லாதே, சிங்கள அரசே, சிங்கள அரசே போரை நிறுத்து சிங்கள அரசே, கொல்லாதே பள்ளிக்குழந்தைகளை கொல்லாதே என்பது போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். இலங்கை ராணுவத்தை கண்டித்து பல்வேறு வாசகங்கள் கொண்ட அட்டைகளை பிடித்தபடி நின்றனர்.

பேச்சுவார்த்தை மூலம்

ஆர்ப்பாட்டத்தில் ஏ.சி.சண்முகம் பேசும்போது, "இலங்கை தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை அரசுக்கு உலகமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நம்மால் அனுமதிக்க முடியாது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் கண்டனக்குரல் எழுப்பும். வீரனாக இருந்தால் அங்கு இருக்கும் வீரனோடு போராடு, எனவே உடனே போரை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை மூலம் அமைதி திரும்ப வேண்டும்'' என்றார்.

பொதுக்குழு கூட்டம்

அதனை தொடர்ந்து புதிய நீதிக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள சர்.பி.டி.தியாகராயர் அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விவரம் வருமாறு:-

*2006-2007 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், சிட்டாநூல் வரிரத்து, பின்னலாடை தொழிலுக்கு சலுகை உள்பட பல்வேறு நல திட்டங்களை அறிவித்த தி.மு.க.அரசிற்கு பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்வது.

மிகவும் பிற்படுத்தப்பட்டவராக

*அனைத்து முதலியார்கள், வேளாளர், செங்குந்தர், பிள்ளைமார், சைவ முதலியார் மற்றும் சேனைத்தலைவர் ஆகிய பிரிவினரில் வறுமைக் கோட்டிற்கு கீழேஉள்ள அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பெறுகின்ற வகையில் அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இணைத்திடவேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்வது.

*புதிய நீதிகட்சியின் 7-வது ஆண்டு தொடக்கவிழா, அண்ணாவின் 98-வது பிறந்த நாள்விழா, வ.உ.சி.யின் 134-வது பிறந்தநாள் விழா ஆகியவற்றை சேர்த்து முப்பெரும்விழாவை தமிழகம் முழுவதும் அடுத்தமாதம் 15-ந்தேதி தொடங்கி ஒரு மாதத்திற்கு கொண்டாடுவது.

இந்தியா உதவக்கூடாது

*இலங்கை தமிழர்களை அடியோடு அழிக்க முற்படும் சிங்கள ராணுவத்திற்கு இந்தியாவில் ராணுவப்பயிற்சி அளிப்பது உடனே நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அரசிற்கு படை உதவி, பொருளாதார உதவி ஆகியவற்றை இந்தியா நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்யக்கூடாது.

*குடியிருப்பு மீது விமானங்கள் மூலம் குண்டுவீசி பொதுமக்களை அழிப்பது மற்றும் தமிழ் பெண்களின் கற்பை சூறையாடுவது போன்ற படுபாதக செயலில் ஈடுபடும் இலங்கை ராணுவத்தை வன்மையாக கண்டிப்பது. உடனடியாக சிங்கள அரசு போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்று பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினத்தந்தி!
இலங்கை பிரச்சினையில் அரசியல் தீர்வு காண்பதில் இந்தியாவின் முயற்சி வரவேற்கத்தக்கது!
டாக்டர் ராமதாஸ் பேட்டி!


வேலூர், ஆக.21-
இலங்கை பிரச்சினையில் அரசியல் தீர்வு காண இந்தியா முயற்சி எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

வேலூரை அடுத்த ரங்காபுரத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ண மகாலில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

பொறியில் அகப்பட்ட எலியாக

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடுமையான போர் நடைபெறுகிறது. யாழ்ப்பாண தீபகற்பத்தில் சிக்கியுள்ள சிங்கள ராணுவம் பொறியில் அகப்பட்ட எலியாக சிக்கி தவிப்பதாக செய்திகள் வருகிறது.

இது ஒருபுறம் இருக்க யாழ்ப்பாணத்தில் சிக்கியிருக்கும் அப்பாவி தமிழர்கள் 5 லட்சம் பேர் உணவு இல்லாமல் பட்டினியில் செத்துக்கொண்டு உள்ளனர். இதை இங்குள்ள தமிழர்கள் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது.

ஒத்துழைப்பு தர வேண்டும்

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பிஜி தீவில் பிரதமராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மகேந்திர சவுக் மக்கள் கிளர்ச்சியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பதவி விலகினார். அந்த நிகழ்ச்சி டெல்லியில் எதிரொலித்தது. அந்த பிரச்சினையில் இந்தியா தலையிட பலத்த குரல் எழுப்பப்பட்டது.

அதுபோல தொப்புள் கொடி உறவுள்ள ஈழத்தமிழர்கள் பாதிக்கப்படும்போது அதற்கு எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டும். ஈழப்பிரச்சினையில் உலகத் தமிழர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முதல்-அமைச்சர் கருணாநிதி செயல்படுகிறார். கருணாநிதியின் முயற்சிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்கள் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உணவுப் பொருள் அனுப்ப இருப்பதாக கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு உணவுப் பொருள் அனுப்பும்போது இலங்கை அரசிடம் வழங்காமல் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப வேண்டும்.

அரசியல் தீர்வு

இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை பிரச்சினையில் தீர்வு காண்பதிலும், சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும் இந்தியா எடுத்துள்ள முயற்சி வரவேற்கத்தக்கது. இலங்கைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் தீர்வு ஏற்பட வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

போராட்டம் அவசியம் இல்லை

ஈழத்தமிழர் பிரச்சினைக்காக பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படுமா என்று கேட்டதற்கு, "முதல்-அமைச்சர் கருணாநிதி ஈழத்தமிழர் மீது அக்கரை கொண்டவர். எந்த போராட்டமும் அவசியம் இல்லை'' என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

தினத்தந்தி!
இலங்கை மாணவிகள் கொலையை கண்டித்து
கறுப்பு சவப்பெட்டியுடன் அமைதி ஊர்வலம்!


சென்னை, ஆக.21-
இலங்கையில் காப்பக மாணவிகள் மீது சிங்களராணுவம் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கறுப்பு சவப்பெட்டியுடன் அமைதி ஊர்வலம் சென்னையில் நடந்தது.

கறுப்புக்கொடி ஊர்வலம்

தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இலங்கை முல்லைத்தீவு செஞ்சோலைக்காப்பக மாணவியர் வளாகத்தில் விமானத்தாக்குதல் நடத்தி 61 சிறுமிகளை படுகொலை செய்த சிங்கள ராணுவத்தை கண்டித்து சென்னை மன்றோசிலை அருகில் இருந்து கறுப்புக்கொடி அமைதி ஊர்வலம் நேற்று மாலை 5 மணிக்கு நடந்தது. ஊர்வலத்திற்கு தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.

ஊர்வலத்தில் தமிழ்தேச பொதுவுடமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிட கழகச்செயலாளர் ராஜேந்திரன், திரைப்பட இயக்குனர்கள் வி.சி.குகநாதன், தங்கர்பச்சான், சீமான், பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி, உலக தமிழர் பேரவை தலைவர் ர.ஜனார்த்தனன், இலங்கை எம்.பி., சிவாஜிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சவப்பெட்டியுடன்

ஊர்வலத்தின் முன்பாக சிறுமிகள் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 4 பேர் கறுப்பு நிறத்தில் உருவாக்கப்பட்ட சவப்பெட்டியை தோளில் தூக்கியபடி வந்தனர். அதை தொடர்ந்து வந்த பெண்களும், சிறுவர், சிறுமிகளும் கையில் கறுப்பு கொடியை பிடித்தபடி நடந்தனர். ஊர்வலம் நேராக சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு முடிவடைந்தது.

அப்போது பலியான மாணவிகளுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதியில் பழ.நெடுமாறன் பேசினார்.

தினக்குரல்!
இலங்கை துணைத் தூதரகம் முற்றுகை சென்னையில் 150 மாணவர்கள் கைது!

[20 - August - 2006]  சென்னையிலுள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்ட அகில இந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் நேற்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அகில இந்திய மாணவர் பெருமன்றத் தலைவர் லெனின் தலைமையில் நேற்று காலை இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஆழ்வார்பேட்டையிலுள்ள இலங்கையின் துணைத்தூதரகம் முன்பாக குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வளாகத்துக்குள் நுழைய முற்பட்டபோது, அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் கூறியதாவது;

"முல்லைத்தீவு படுகொலையானது, ஒரு அரச பயங்கரவாதச்செயல். மிகக் கொடூரமான அந்தப் படுகொலையைச் செய்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலிருந்துகொண்டு அதை நியாயப்படுத்தும் வகையில் பொய்ச் செய்திகளை இலங்கைத் துணைத் தூதுவர் வெளியிட்டு வருவதை எப்படி சகிக்க முடியும்?

ஆகவே, எமது மாணவர் பெருமன்றம் சார்பாக இந்தப் போராட்டத்தை நடத்துகின்றோம்" என்றனர்.

இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுவதைக் கண்டித்தும் இனப்படுகொலையைத் தடுக்க இந்திய அரசு உடனே தலையிட வேண்டும் என்று பயங்கரவாதச் செயலை நியாயப்படுத்தும் இலங்கைத் தூதரகங்களை மூட வேண்டும் என்றும் கோரியும் இந்தப் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினகரன் (தமிழ்நாடு)!
தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண இலங்கைக்கு இந்தியா யோசனை! மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் தரவேண்டும்!

புதுடெல்லி, ஆக.21: தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண, இந்தியாவில் இருப்பதுபோல மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று இலங்கைக்கு இந்தியா யோசனை தெரிவித்துள்ளது. இதற்காக சட்ட நிபுணர்களை அனுப்ப தயார் என்றும் இந்தியா கூறியுள்ளது.

இலங்கை அதிபராக ராஜபக்சே பதவியேற்ற பிறகு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் மோதல்கள் ஏற்பட்டன. இது தொடர்பாக நார்வே தூதுக்குழு செய்த சமரசமும் தோல்வியடைந்தது.

திரிகோணமலை மாவட்டத்தில் மாவிலாறு அணையை புலிகள் மூடியதையடுத்து அங்கு போர் மூண்டது. முல்லைத்தீவில் புலிகள் நடத்தி வந்த அநாதை இல்ல காப்பகத்தின் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் 61 மாணவிகள் பலியானது போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறி வரும் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் தொடர்ந்து கடும் சண்டை நடந்து வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்.

அகதிகளாக தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இலங்கையில் அமைதி ஏற்படுத்தி தமிழர்களின் உயிரை பாதுகாக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இலங்கை பிரச்னைக்கு அரசியல் ரீதியாக சுமூக தீர்வு காண்பது பற்றி இந்தியா யோசனை தெரிவித்துள்ளது. இலங்கையில் 9 மாகாண கவுன்சில்கள் உள்ளன. எனினும், இவற்றுக்குஅதிக அதிகாரம் இல்லை. இந்த மாகாண கவுன்சில்களுக்கு இந்தியாவில் மாநிலங்களுக்கு இருப்பது போல அதிக அதிகாரம் வழங்க வேண்டும். இதன் மூலம் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று இந்தியா யோசனை கூறியுள்ளது.

இது பற்றி டெல்லியில் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

இந்தியாவில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல அதிகாரங்களை வழங்கியுள்ளது. அதேபோல், இலங்கையிலும் மாகாண கவுன்சில்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது பற்றி இலங்கை பரிசீலிக்க வேண்டும். போர் மூலம் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது. அரசியல் ரீதியாக தீர்வு காண்பது பற்றி இலங்கை அரசு யோசிக்க வேண்டும்.

இலங்கை பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா எப்போதும் விரும்பியதில்லை. அதேநேரத்தில் அண்டை நாடான இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் இந்தியா ஆர்வத்துடன் இருக்கிறது.

இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும் சம உரிமையும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இலங்கையிலும் அரசியல் ரீதியாக செயல்படுத்த இலங்கை அரசு சிந்திக்க வேண்டும். சமுதாயத்தின் வெவ்வேறு பிரிவு மக்களும் தங்கள் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள பரந்த அளவிலான அரசியல் பார்வை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா கூறியுள்ளது.

மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகள் அளித்தது. இந்த பரிந்துரைகளின் பிரதி இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் அரசியல் சாசன திருத்தம் செய்வதில் இலங்கைக்கு உதவ அரசியல் சட்ட வல்லுனர்களை அனுப்பவும் இந்தியா தயாராக உள்ளது. எந்தவிதமான அரசியல் ரீதியான உதவியையும் இந்தியா செய்யும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner