இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2010  இதழ் 124   -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
கவிதைகள் ஏபரல் 2010!

பதிவுகள் கவிதைகள்!

கவிதை வாசிப்போம் வாரீர்!கவிதை வாசிப்போம் வாரீர்!கவிதை வாசிப்போம் வாரீர்!கவிதை வாசிப்போம் வாரீர்!

யுத்தத்தில் தொலைந்து போன எனது மாணவன்

-துவாரகன்-


யுத்தத்தில் தொலைந்து போன எனது மாணவன்

ஒருநாள் நீ வந்தாய்
புதியதொரு பிறப்புச் சான்றிதழ் படிவத்தோடு
‘இதை நிரப்ப வேணும் சேர்’ என்றாய்
அப்போது நான் அறிந்தது உன்னை
தர்மேகன் என்று.

பிறப்புச் சான்றிதழில்
உன் பெயர் தர்மவேகன் என்றாய்
இருவரும் சிரித்துக் கொண்டோம்
பின்னர் சங்கடத்துடன் கூறினாய்
‘என்ன சேர் செய்யிறது?
மாறிப் பதிஞ்சிட்டாங்களாம்!
நீங்கள் இப்படியே எழுதுங்கோ’
அன்றிலிருந்து
எம் குரு சிஷ்ய உறவு தொடர்ந்தது

வசீகரிக்கும் கறுப்பு நிறத்தில் நீ
எந்நேரமும் துருதுருத்துக் கொண்டிருக்கும்
உன் விழிகள்.
பல்வரிசை காட்டி நீ சிரிக்கும் அழகு
கண்ணில் நின்று ஆடுதடா

கற்றலில் விளையாட்டில்
வழிகாட்டலில், வழிநடத்தலில்
கைகொடுப்பதில்
எங்கும் உன் செம்மை கண்டேன்

சேமமடு ஆசிரியர் விடுதியில்
எம்மோடிருந்து படித்து
உறங்கிய ஒரு நாள்
உனது இடது உள்ளங்கால் தோலை
எலி அரித்து விட்டுச் போனது
காலை எழுந்தவுடன்
பாயில் இருந்தபடி
உன் காலைக் காட்டியபோது
தேங்காய் அரித்த அடையாளம்…
‘நீ வெள்ளையாய் வருவாய்’ என்றோம்
மறுநாள் ‘அக்காவின் மோதிரம் சூடுகாட்டிச் சுட்டேன்’ என்றாய்

உனக்குக் கிடைக்கும் சுவையான சாப்பாடு
எங்களின் பங்குபோடலுக்குக் கொண்டு வருவாய்
மாலை முழுவதும்
நுங்குக்குலை, பழங்கள் எமக்காகும்
வயல் வெளியும் மஞ்சள் வெயிலும்
குளக்கரையும் உலாவ வைப்பாய்
பல தடவைகளில் நீதான் வழிகாட்டி
வர்ணனையாளன்… எல்லாமே

குளத்தில் குளிக்கும்போது
சின்னமீன்கள்
உடம்பில் கடிக்கும் இதம்காண வைத்துவிட்டு
நீ குத்துக் கரணம் அடிப்பாய்
உன்னோடு சேர்ந்து நாமும் சின்னவர்களாவோம்.

எந்த வேலையும் உனக்கு இலகுவாகும்
ஒரு விளையாட்டுப் போட்டி
‘சேர் வித்தியாசமாக ஏதும் செய்வோம்’
இல்லத்துக்கு ‘ஈபிள் ரவர்’ வடிவம் சொன்னேன்
கண்டவர் வாய் பிளக்க காரியம் செய்தாய்

சரஸ்வதி பூஜை, பரிசளிப்பு விழா
மாணவர் மன்றம், நாடக விழா
எல்லாம் முன்வரிசை நாயகன் நீ
வீட்டாரை உறவென்று ஆக்கினாய்
பேச்சாலும் சிரிப்பாலும் நட்பினைப் பெருக்கினாய்

பள்ளிப் பருவத்தை முழுதாய் அனுபவித்த
முதல் மாணவன் நீயடா

மூன்றரை வருடத்தின் பின்
உன் அம்மாவின் கையால்
மீண்டும் ஒரு தடவை
சாப்பிடும் அன்பு கிடைத்தபோது
என்னருகில் நீ இருந்து
‘சேர் வடிவாச் சாப்பிடுங்கோ’
அந்தச் செல்ல அதட்டல் காதில் கேட்டதடா!

இன்று
எல்லாம் இழந்து வந்த
உன் உறவுகளின் முன்னிருந்து
கதை பயிலத் தொடங்கினேன்.
உன் அத்தானும் அம்மைய்யாவும்
நீயும் இல்லாத
வெறிச்சோடிய வீட்டில்
உன் சிரிப்பினைச் சுமந்து கொண்டு
அக்காவின் பிள்ளைகள்
புன்னகைக்கக் கண்டேன்.

இப்போ உன் சிரித்த முகம் மட்டும்...
உன் அம்மாவின் காய்ந்த விழிநீரின் பின்னால்
மறைந்திருக்கக் கண்டேனடா.
கொடுப்பில் வெற்றிலை வைத்துக் கொண்டு
நடுங்கும் குரலில் கதைக்க
உன் அப்பாவிடம் கண்டேனடா.
ஆவலாய்க் கதைகேட்கும்
உன் அக்காவின் கருவிழிகளுக்குப் பின்னால்
மறைந்திருக்கக் கண்டேனடா.
டிரக்டர் சீற்றில் இருந்து
அதட்டிக் கதைசொல்லும்
உன் அண்ணன்மாரிடம் கண்டேனடா
தயங்கித் தயங்கி வேலை செய்யும்
உன் தம்பியின் உருவத்தில் கண்டேனடா

ஆனால்
உன் செல்லக்குட்டி மருமகளிடத்தில் மட்டும்
ஆசை அங்கிள் வருவார் என்று
உன் அன்புக்கு ஏங்கி நிற்கும்
சிரித்த முகத்தை இன்றும் கண்டு கொண்டேன்.

என் அன்பு மாணவனே
நீ தர்ம வேகன் என்பதாலோ
வேகமாகச் சென்றுவிட்டாய்?

11.03.2010

(வவுனியா சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்ற எனது மாணவன் ஐ. தர்மேகன் நினைவாக)

kuneswaran@gmail.com

*********************************

ப.மதியழகன் ( மன்னார்குடி, திருவாரூர் ) கவிதைகள்!

1. உனது பார்வைகளால்...

ப.மதியழகன்

நீ முகம் பார்த்த கண்ணாடியை
மறைத்து வைத்திருக்கிறேன்
நீ சூடின பூக்களை எனது புத்தகத்தில்
பாடம் பண்ணியிருக்கிறேன்
நீ எழுதிக் கொடுத்த கடிதம் என்பதால்
பாட்டியின் கடிதத்தை
அஞ்சல் செய்யாமல் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
நீ பாடின பாடல் என்பதால்
சுதி சேராமல் இருந்தாலும் கேட்டிருக்கிறேன்
நீ மூச்சுக் காற்றால் நிரப்பிய
தலையணையை வைத்துத் தான்
தூங்கிக் கொண்டிருக்கிறேன்
நீ பயணம் செய்த பயணச் சீட்டை
வைத்துக் கொண்டுதான்
வாழ்க்கையில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்
உனது பார்வையால் எனது பாவங்கள்
கழுவப்படுகின்றன என
நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறேன்
உன் பிரிவை நினைத்து வருந்தவில்லை
ஏனெனில் இந்த வையகத்தில் தோற்கின்ற
காதல்கள் எல்லாம்
அந்த விண்ணகத்தில்
வெற்றி பெறுகின்றன!

2. நீ

நான் காணாத இருளடைந்த உலகின்
அகல் விளக்காய் நீ
நான் கேட்காத சங்கீதத்தின்
ஸ்வரங்களாய் நீ
நான் பேசாத வார்த்தைகளின்
மொழிகளாய் நீ
நான் செல்லாத ஊர்களின்
பாதைகளாய் நீ
நான் தொடாத மலர்களின்
இதழ்களாய் நீ
நான் எழுதாத கவிதைகளின்
வார்த்தைகளாய் நீ
நான் உணராத ஸ்பரிசத்தின்
உயிராய் நீ
நான் வரையாத ஓவியத்தின்
கோடுகளாய் நீ
நான் வாழாத வாழ்க்கையின்
கருப்பொருளாய் நீ
நான் எண்ணாத எண்ணங்களின்
மேகமாய் நீ
நான் காணாத உலகின்
காற்றாய் நீ
நான் செய்யாத தவத்தின்
பலன்களாய் நீ
நான் படிக்காத கீதையின்
பக்கங்களாய் நீ
நான் கேட்காத பாடலின்
சங்கீதமாய் நீ
நான் போகாத கடற்கரையின்
பாதச்சுவடுகளாய் நீ
நான் எண்ணாத எண்ணங்களின்
கருத்தாய் நீ

3. விண்ணைப் போல...

கழுகைப் போல வானில் வட்டமடிக்க ஆசை
சக்கரவாகப் பறவையைப் போல
மழைத்துளியை பருகிட ஆசை
மேகம் போல வானில் ஊர்வலம் செல்ல ஆசை
அலைகளைப் போல மீண்டும் மீண்டும்
முயற்சி செய்திட ஆசை
பூமியைப் போல வானில் ஒளிவீசிட ஆசை
தென்றலைப் போல அவளின் தேகத்தைத்
தழுவிச் சென்றிட ஆசை
மீன்களைப் போல தண்ணீருக்குள்
மூழ்கி வாழ்ந்திட ஆசை
விண்ணைப் போல என்றும் மண்ணில்
நிலையாயிருக்க ஆசை
அடுத்த பிறவியில் அவளை என்
மகளாய் பெற்றிட ஆசை

4. குழந்தைகள் உலகம்

குழந்தைகள் உலகம்
தனது நுழைவாயில் கதவுகளைத் திறந்து
குதூகலத்துடன் என்னை வரவேற்றது
அங்கே
ஆனந்தமும், ஆச்சர்யங்களும்
ஒவ்வொரு மணற்துகள்களிலும்
பரவிக்கிடந்தன
காற்றலைகளில்
மழலைச் சிரிப்பொலி
தேவகானமாய் தவழ்ந்து
கொண்டிருந்தது
மோட்ச சாம்ராஜ்யம்,
தனக்குத் தேவதைகளாக
குட்டி குட்டி அரும்புகளை
தேர்ந்தெடுத்திருக்கின்றது
அங்கு ஆலயம் காணப்படவில்லை
அன்பு நிறைந்திருக்கின்றது
காலம் கூட கால்பதிக்கவில்லை
அவ்விடத்தில்
சுயம் இழந்து
நானும் ஒரு குழந்தையாகி
மண்டியிட்டு அவர்கள் முன் நிற்கின்றேன்
அந்தக் கணத்தில்
மரக்கிளையொன்று முறிந்து விழுகையில்
அதைக் கொண்டு இன்னொரு
விளையாட்டு ஆரம்பமாகிவிடுகிறது
எங்கு நோக்கினும்
முடமாக்கப்பட்ட பொம்மைகள்
உடைந்த பந்துகள்
கிழிந்த காகிதக் குப்பைகள்
சேற்றுக் கறை படிந்த சுவர்கள்
களங்கமில்லா அரும்புகள் எனக்கு
கற்றுத் தந்தது இவைகள்
வீட்டிற்குத் திரும்பியதும்
ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்த
அலமாரி பொருட்களையெல்லாம்
ஒன்றுவிடாமல் கலைத்துப்போட்டேன்,
தரையில் விசிறி எறிந்தேன்
ஏக்கத்தோடு
ஊஞ்சலின் மீது அமர்ந்தேன்
எனது வீட்டை அங்கீகரிக்குமா
குழந்தைகள் உலகம் - என்று
யோசனை செய்தபடி...

5. வானுக்கு கீழே அதன் வாழ்க்கை

கீழே குனிந்தவுடன்
பின்வாங்கி ஓடும்
நாம் கல்லைத்தான் தேடுகிறோம்
என்று நினைத்து
நேருக்குநேர் அதன் கண்களை
சந்தியுங்கள்
புனிதப் போருக்கே தயாராகும்
அந்த நாய்கள்
எதையுமே அதன் கண்களால்
காணமுடியுமென்பதால்
அது எதையுமே கண்டு
ஆச்சர்யம் கொள்வதில்லை
வெட்கம் கொண்டு,
மனிதர்களைப் போல்
அது காமத்தைக் கூட
மூடி மறைப்பதில்லை
வானுக்கு கீழே அதன் வாழ்க்கை
திறந்த புத்தகமாய்...
சுவர்களுக்கு மத்தியில் தங்களை
மறைத்துக் கொள்ளும்
மனிதர்களைக் கண்டு
எள்ளி நகையாடுகின்றன
வீதியில் படுத்துறங்கும் நாய்கள்.


6. நான்

பறவைகள்
பாடுகின்றன
குதிரைகள்
கனைக்கின்றன
யானைகள்
பிளீறிடுகின்றன
நாய்கள்
குரைக்கின்றன
குழந்தைகள்
மழலை பேசுகின்றன
எவற்றையும் செய்ய
தடையெதுவுமில்லை அதனுலகில்
எல்லாவற்றுக்கும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது
இவ்வுலகில்
சுவர்கள் சிறையாகிப்போனதால்
நான் கைதியானேன்
ஏற்கனவே எழுதப்பட்ட
தீர்ப்புகளுக்கு
என்னையும் இரையாக்குவார்கள்
இவ்வுலகத்தினர்
பலிபீடமான இவ்வையகத்தில்,
சுற்றித்திரியும்
மந்தையாடுகளாய் நாம்.

7. தேவனின் திருக்கரம்

அடர்ந்த கருமை சூழ்ந்த வனாந்திரம்
விறகுவெட்ட வந்தவனின் கால்கள்
புதைகுழியில் சிக்கியது
கொஞ்சம் கொஞ்சமாக
மண்குழம்பு அவன் உடலை
விழுங்கிக் கொண்டிருந்தது
எத்தனையோ கோடி மனிதர்களை
உண்டு செரித்த வயிறல்லவோ
அதற்கு!
அவனது வாய் இறைவனின்
நாமங்களை உச்சரித்து அழைத்தது
அவனது கண்களும் மண்ணுக்குள்
புதைந்தன
மேலே நீட்டிக் கொண்டிருந்த
அவனது கைகளை
ஒரு உருவம் பற்றியது
சேற்றிலிருந்து மேலே வந்த அவன்
கண்களால் அவ்வுருவத்தைப் பார்த்தான்
வேதத்தையும், சடங்குகளையும்
மறுத்துப் பேசியதால்
தன்னுடைய கிராமத்தினரால்
கல்வீசித் துரத்தப்பட்ட
புத்தரல்லவோ இவர்
எனது கையினால் வீசப்பட்ட கற்களால்
காயமடைந்த கரங்களா
என் உயிரைக் காப்பாற்றியது
என்றெண்ணி வெட்கித் தலைகுனிந்தான்
உயிரற்ற ஓலைச் சுவடிகளில்
இறைவனைத் தேடினோம்
உயிர்களின் மேல் காட்டும் கருணையே
கடவுளெனப் போதித்த
கண்ணெதிரே நிற்கும்
ஜீவனுள்ள மனிதனை மறந்து!

8. பிறழ்வு

எனது சுய ஒழுக்கம்
பிறழ்வை சந்திக்கும் வேளைகளில்
எனது செயலுக்காக
நான்கு சுவர்களுக்குள்
நானே வெட்கப்படும் தருணங்களில்
வார்த்தைகளால் மனிதர்களை
கொள்ளி வைக்கும் கணங்களில்
ஒருவரது மனதில்
ஆழ்ந்த நம்பிக்கையால்
எழும்பிய அடித்தளத்தை
வாதத்தால் உடைத்தெறியும்
நாழிகையில்
எனது சவப்பெட்டியில் அறைய
பைநிறைய ஆணிகளை
நானே சேகரிக்கின்றேன்!

9. கேள்விக்குறி

எல்லா மனிதர்கள் முன்பும்
ஒரு கேள்விக்குறி
விடை தெரியாத புதிராகத்தான்
விடிகிறது பொழுதுகள்
ஆங்காங்கே ஆச்சர்யக்குறி
தோன்றத்தான் செய்கிறது
ஆனால் கேள்விக்குறியின்
விஸ்வரூபம் முன்பு
ஆச்சர்யக்குறி சுவடற்றுப் போகிறது
வினாக்களுக்கு விடைகாண நேரமின்றி
விரைந்தோடுகிறது நாட்கள்
சற்றே அயர்வுற்று
இளைப்பாறும் தருணங்களில்
இதற்கென்ன தீர்வென்று
எல்லார் சிக்கல்களும்
கேள்வி்க்குறியோடு மனத்திரையில்
தோன்றி மறைகின்றன
கேடயம் கூட கையில் ஏந்தாத என்னை
கூர் வாளால் குத்திக் கிழிக்கின்றன
உதிரம் வழிந்த பின்னர் கூட
உணராதா நான் சாதாரண மானிடனென்று!

mathi2134@gmail.com
**********************************

இலங்காதிலகம் ( ஓகுஸ், டென்மார்க்) கவிதைகள்!

வேதா. இலங்காதிலகம்.

1. தோழர் சுரேந்திரன்.

தோழர் சுரேந்திரன்.

திறமை உள்ளவர்கள் ஏன்
அதிக காலம் வாழ்வதில்லை?
சகோதரர் சுரேந்திரனே! நீங்களெமக்கு
அறிமுகமானீர்கள் ரி.ஆ.ரி வானலையில்.
அருவியாகக் கொட்டுவீர்களே!
நல்ல பட்டுக் கவி வரிகள்! நான்
மட்டில்லா வியப்படைவதுண்டு!
கொட்டிய வரிகளை அள்ளி
சட்டென்று எழுதிக் கொண்டு
பட்டம் வாங்கப் படிப்பதாக
அக்கு வேறு ஆணிவேறாக அதை
அலசிப் பார்த்ததுண்டு. இங்கு
நீங்களெனக்கு ஆசிரியராக.
நாடகங்கள்இ மேடைப் பேச்சில்
கம்பீரமாக முழங்குவீர்கள்.
கனிவாகப் பேசி மக்களைக்
கவரும் திறமைசாலி! உங்கள்
இழப்பு வெறுமை தருகிறது மனதிற்கு.
உயர்ந்த மனிதரே! தோழர் என்று அழைக்கும்
நெருக்கம் இழக்கிறோம் நாம்.
இழப்பு இழப்புத் தான்!
ஏற்று வாழும் விதி எமது.
உறவுகள்இ குடும்பத்தினருக்கு
மன அமைதி கிட்டட்டும்!
உங்களாத்துமா சாந்தியடையட்டும்!.
6-3-2010.

2. தமிழ் சாகரத்திலொரு முத்து, அமுது.

அமுதுப் புலவர்

படைப்புலகிற்கு ஏழு தசாப்தங்களினும் மேலாக
கிடைத்திட்ட ஒரு தமிழ் இலக்கிய முத்து,
அடைக்கலமுத்து அமுதசாகரன் - இயற்பெயர்.
நெடும்தீவில் 15-9-1918ல் உதித்தார்.
இளவாலை தம்பிமுத்து - சேதுப்பிள்ளை தம்பதிகளின்
இளவல். நாம் அழைப்பது அமுது புலவர்.
காதலுடை மனைவி ஆசிரியை சுவாம்பிள்ளை திரேசம்மா.
சாதலற்ற இலக்கிய கலாநிதிக்கு 92 அகவை.

இலண்டன் மிடில்செக்ஸ்இ ஹரோ, நோத்கொல்டில்
23-2-2010ல் பூதவுடம்பை நீத்தார்.
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும், தமிழ்த்துறைப்
பண்டிதர் வகுப்பிலும் திறமையாகப் பயின்றார்.
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான்,
இலங்கைக் கல்வித் திணைக்களத்தில் பண்டிதராகவும்,
பத்திரிகையாசிரியர், எழுத்தாளர், முதற்தர ஆசிரியர்,
சஞ்சிகையாசிரியர், செய்தியாளர், கவிஞரென உருவானார்.

பதின்மவயதில் எழுதுகோலில் தமிழ் இலக்கியமாட
மாதா அஞ்சலி – முதலாக்கப் பிரசுரம்இ 1938ல்.
ஊற்றான தமிழ் வளத்தால் அமுது புலவர்
சாற்றினார் தமிழுக்கு ஆபரணங்களாய்ப் பல நூல்கள்.
பெற்;ற பட்டங்கள். திறமையின் ஆபரணங்களானது.
பாவேந்தர், கவியரசர், கௌரவ கலாநிதி, தமிழ்கங்கை,
மதுரகவி. சீவியகாலச் சாதனை, கவிதைச் சுடர்,
செந்தமிழ்த் தென்றல், சொல்லின் செல்வர்,

புலவர் மணிஇ முப்பணி வேந்தரென இவ்
அரும் தமிழர் ஆற்றலின் சாதனையால் ரோமாபுரியில்
பரிசுத்த பாப்பரசர் இரண்டாயிரத்து நான்கில்
செவாலியர் விருதினை வழங்கியதாலும் கௌரவப்பட்டார்.
ஈழத்தமிழ் இலக்கிய உலகில் இவரென்றும்
ஒரு துருவ நட்சத்திரமாய்ப் பிரகாசிக்கிறார்.
இவரது காலத்தில் வாழ்ந்தது நமக்குப் பெருமை.
என்றுமிவர் வாழ்வார். நாமிவரை அஞ்சலிக்கிறோம்

6-3-2010.
kovaikkavi@gmail.com

**********************************

ராம்ப்ரசாத் (சென்னை ) கவிதைகள்!
ராம்ப்ரசாத்

1. கொட்ட‌ப்ப‌டும் வார்த்தைக‌ள்...

கானல் நீர் காரணிகளால்
உருவாகும் மேடு பள்ளங்களை
சமன்படுத்தவே கொட்டப்படுகின்றன
வார்த்தைகள்...

உடைத்தெறியப்படும் மனச்சுவர்கள்
மட்டுமே அறியும் வார்த்தைகளின்
கூர்மை...

மேடுப‌ள்ள‌ங்க‌ள் ச‌ம‌ன்ப‌ட்டாலும்
உடைந்த‌ சுவ‌ர்க‌ளை
பூச என்றுமே முடிவ‌தில்லை...

உடைந்த‌வைக‌ள்
உடைந்த‌வைக‌ளே...

உடைந்த‌ சுவ‌ர்க‌ள்
சித்திர‌ங்க‌ள் தாங்குவ‌து
சிக்க‌லான‌ ஒன்று...

கோடுக‌ளையும் வண்ண‌ங்க‌ளையும்
துணைக்க‌ழைத்தே
விரிச‌ல்க‌ளை ம‌றைக்க‌
முடிகிற‌து...

சுவ‌ர்க‌ள் ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டால்
விரிச‌ல்களும் தாங்கும்
சித்திர‌ங்க‌ளும் தாங்கும்...

2. நீரோடை குறிப்புக‌ள்...

நினைவுகளின் ஆழ்ந்த கடலுக்குள்
ஒரு நீரோடையாய்
நினைத்துப்பார்க்கவும்
விரும்பாத சில நிகழ்வுகள்...
தொட‌ர்ந்து ஓடிக்கொண்டே
இருக்கின்ற‌ன‌...

நீரோடையின் க‌ரைக‌ளை
நிக‌ழ்கால‌த்தின் ஏதோவொரு முனை
எப்போதும் தொட்டுக்கொண்டே
இருக்கிற‌து...

தூக்க‌ம் தொலைந்த‌
அட‌ர்ந்த‌ இர‌வுக‌ளில்
த‌லைய‌ணைக்குள் புதையும்
விசும்ப‌ல்க‌ள்
நீரோடை ப‌ற்றிய‌ குறிப்புக‌ளை
வாசித்த‌ப‌டி இருக்கின்ற‌ன‌...

காலப்புத்தகத்தில்
அந்த‌ இர‌வுக்குரிய‌
ப‌க்க‌த்தின் வ‌ரிக‌ளை
க‌ட்டாய‌மாய் ப‌டிக்க‌ வேண்டிய‌
நிர்ப‌ந்த‌ம் அந்த‌ கண்விழிப்பிற்கு....

3. போட்டியின்றி வெல்லுதல்

சுயநலத்தின் பொருட்டு
நகர்த்தப்படும் காய்களால்
சதுரங்கம் நிறைந்து
கிடக்கிறது...

கட்டங்கள் தாண்டும் பொருட்டு
நிறக்குருடாகிவிடுகின்றன‌
காய்கள்...

எம்பிக் குதிப்ப‌தும்,
பாய‌ப்ப‌துங்குவ‌தும்,
முதுகில் குத்துவ‌துமாய்
போட்டிக‌ள் நிறைகின்ற‌ன‌...

முன்ன‌றிவிப்பின்றி எல்லைக‌ள்
குறுக‌வும் மீற‌வும்
செய்கின்ற‌ன‌...

ஆடுகளத்தின் பாதைகளனைத்தும்
போகப் போக‌
கடுமையாகிக்கொண்டே இருக்கின்றன...

சுயநலம் மட்டுமே
போட்டியின்றி வெல்கிறது
இறுதிகளில்...

4. பேராசை

சேமிப்பு என்பதாய்
ஒரு முகமூடியிட்டு
மெல்ல நுழைகிறது
பேராசை ஒரு சமயம்...

போட்டி என்பதாய்
திரைமறைவில் வளர்கிறது
பிரிதொருசமயம்...

ஓர் ஒழுங்கற்று
தாறுமாறாய்க்
கலைந்து கிடக்கும்
விருப்பங்களின் மேல்
நடை பழகுகிறது
அனேகந்தரம்...

பாராமுகமாகவே
கடந்து போகின்றன‌
பேராசையும் தன்னிரைவும்
எப்போது சந்தித்தாலும்...

போதுமென்கிற‌ கேட‌ய‌ங்க‌ளை
பேராசை ஈட்டிக‌ளால்
என்றுமே துளைக்க‌
முடிந்த‌தில்லை....

5. நிற்காமல் கேட்கும் முனகல்

சொல்ல‌ எதுவும் இல்லை
என்ப‌தாய் க‌ழிகிற‌து
பொழுதுக‌ள்
ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில்...

என‌க்கான‌ பாத‌ச்சுவ‌டுக‌ள்
ஏனோ வேறு எவ‌ர்
க‌ண்க‌ளுக்கும் புல‌ப்ப‌டுவ‌தில்லை...

க‌ட‌ந்த‌ கால‌த்தின்மேல்
உர‌சி உர‌சி
கூர் தீட்ட‌ப்ப‌டும் ஈட்டியான‌து
மிக‌ க‌வ‌ன‌மாய்
பாய்கிற‌து நாளைய‌
இல‌க்கை நோக்கி...

இது எதைப்ப‌ற்றிய‌
பிர‌ங்ஙையும் இல்லாம‌ல்
ஆழ்ம‌ன‌தின் அதிர்வுக‌ளை
அவ‌தானிக்கிறான் என‌க்குள் ஒருவ‌ன்...

அவ‌னின் ச‌ன்ன‌மான‌
முன‌க‌ல் ம‌ட்டும்
கேட்டுக்கொண்டே இருக்கிற‌து
நிற்காம‌ல்...


6. கையேடு

உன்னைப் பற்றிய‌
நினைவுகளால்
நிறைந்து கிடப்பது
என் இதயம் மட்டுமல்ல‌
என் கையேடும் தான்...

உன்னிடம் நான் முதன்முதலில்
பேசிய தருணங்களை
காலம் குறித்து வைத்ததோ
தெரியாது...
ஆனால், என் கையேடு
குறித்துவைத்திருந்தது
கவிதையாக...

உன் பெய‌ரை எப்போது
என் கையேட்டில்
எழுத‌ நேர்ந்தாலும்
தேவ‌தை என்றே
முடிக்க‌ நேர்கிற‌து...

பத்திலக்கங்களில்
என் அலைபேசி
வெகு சுலபமாய்
எழுதிவிடும் ஒரு
அழ‌கான‌ க‌விதையை...

உன் நினைவுக‌ளால்
நிர‌ம்பி விட‌
என் இத‌ய‌த்தோடு
துடித்தாலும்
முந்திக்கொள்வ‌து எப்போதும்
என் கையேடுதான்...

ஏனெனில்,
உன்னைக் கொண்டு
நிறைய,
எப்போதும் இடமிருக்கும்
என் இதயத்தில்...

7. இருத்த‌லும் இல்லாதிருத்த‌லும்...

இல்லாமையைப் பற்றி
யாருக்கும் அக்கறை இல்லை...

தன் இல்லாமை
இருக்குமிடத்து
தன் இருப்பு
இல்லாததாகிறது...

இல்லாதிருத்த‌லின் க‌ன‌ம்
இருத்த‌லில் தெரிவ‌தில்லை...

எங்கில்லை என்ப‌தைவிட‌
எங்கிருக்கிறோம் என்ப‌திலேயே
இருத்த‌ல் தொலைகிற‌து...

தேடிச் செல்லலாமென்றால்
பின்னோக்கிச் செல்ல‌வேண்டும்...
பின்னோக்கினால் முன்னோக்க‌ இய‌லாது...
பின்த‌ங்குவ‌தால் அலைக‌ழிகிற‌
இட‌த்து, செல்லும் திசையில்
க‌வ‌ன‌ம் தொலைகிற‌து...

செல்லும் வேக‌ம்
அடையும் இட‌த்தைத்
தீர்மானிக்கிற‌து...
ஆனால்,
அடையும் இட‌ம்
மீண்டும் ஒரு தொட‌க்க‌த்தை
தீர்மானிக்கிற‌து...

8. அலைவியல்...

உன் கவிதைமொழிகளைப்
பிரசவிக்காத‌
மலடாய் இருக்கிறது
என் அலைபேசி
இப்போதெல்லாம்...

சினுங்கிச்சினுங்கி,
உன் சினுங்கலை
எனக்குள் கடத்த,
மறந்து கிடக்கிறது
அது மெளனமாய்...

என்னை என் விர‌ல்க‌ள்
நினைவுகூறுவ‌த‌ற்காய்
இன்றும் காத்திருக்கிறேன்
நானும் அதை
வெறுமையாய் பார்த்த‌ப‌டியே...

க‌ட‌ல் அலைக‌ளில்
ந‌னையும் உன் பாத‌ங்க‌ளில்
தொலைத்த‌ என்னை இந்த‌
மின்ன‌லைக‌ளில்
தேடிக்கொண்டிருக்கிறேன்...

என்னுயிரின் விசும்பலை
உன்னழகால் பிடுங்கி
அதனிடம் தந்துபோனவளே...
அள்ளித் த‌ருகிறேன்
என்னுயிரை...
வைத்துக்கொள்வாயா ப‌த்திர‌மாக‌
உன் இத‌ய‌த்தில்...

9. குறுங்கவிதைகள்: அழகிய பத்து

1. கவிதை

களுக்கென்று சிரித்து
வார்த்தைகளே இன்றி
ஒரு கவிதை சொல்கிறாய்...
இனி என் கவிதைகளை
என்னவென்று சொல்ல...

2. என் க‌விதைக‌ள்

என் க‌விதைக‌ள் அனைத்தும்
அழ‌காய் இருப்ப‌தாய்
சொல்கிறார்க‌ள்...
பேர‌ழ‌கி உன‌க்குப் பிற‌ந்த‌வைக‌ள்
வேறெப்ப‌டி இருக்கும்...

3. நீ க‌ட‌ந்து செல்கையில்

நீ க‌ட‌ந்து செல்கையில்
இத‌ய‌ம் அதிர்வ‌து
புதிதில்லையே என்று
அன்றொருநாள் தரை
அதிர்ந்ததில் சும்மா
இருந்துவிட்டேன்...
இனிமேல் அப்படி நடந்தால்
நீயாவது சொல்லிவிட்டு போ
நில நடுக்கம் என்று...

4. என் காதல்

உனக்காகக் காத்திருக்கையில்
பிற‌ந்தேவிடுகின்ற‌ன‌
சில‌ க‌விதைக‌ள்...
ஆயினும்,
க‌ருவாக‌வே இருக்கிறது
என் காதல்
சொல்ல‌ப்ப‌டாம‌ல்...

5. தாமதங்களில்

ஒரு குழந்தையிடம்
விளையாட பொம்மை
கொடுப்பதுபோல்
எனக்கு உன் நினைவுகளை
கொடுத்துவிடுகிறாய்
நம் சந்திப்புகளின்
போது ஏற்படும் தாமதங்களில்...

6. காதல்

தேவதையே,
உனக்கே தெரியாத காதலை
எப்படி உன்னால் மட்டும்
எனக்கு கற்றுத்தர
முடிந்தது...

7. உன்னைப் பற்றியே

வீட்டிற்கு வந்தும்
கோயில் திருவிழாக்களில்
பார்த்த பொம்மைகளைப்
பற்றியே பேசும்
குழந்தைகள் போல‌
என் கவிதைகள் அனைத்தும்
உன்னைப் பற்றியே
பேசுகின்றன எப்போதும்...

8. கொட்டும் மழை

நீ மழையில் நனைந்து
மழையில் நனைதலைக்கூட‌
அழகாக்கிவிட்டாய்...
உன்னுடன் நனைய விரும்பி
மழை நேற்று முழுவதும்
கொட்டிக்கொண்டிருந்தது...

9. குடை

மழைக்குக் குடை
பிடித்தாய்...
குடைக்கு உன்னைப்
பிடித்துவிட்டது போலும்...
விரிந்த குடை
மடங்க மறுக்கிறது...

10. ஷ்ரிதேவி

மழை நாட்களில்
நீ எதிரில் வந்தால்
கன்னத்தில் போட்டுக்கொள்வேன்...
கர்ப்பக்கிரகத்தில்
தேவி சிலை போல‌
அந்த கருப்புக் குடைக்குள்
ஷ்ரிதேவியாய் நீ...

ramprasath.ram@googlemail.com

**********************************

என் ஜன்னலோரத்தில்.. ஈழம்

- வித்யாசாகர் -

என் ஜன்னலோரத்தில்.. ஈழம்

என் ஜன்னலோரத்தில் நுழைந்த சப்தம்
காதை எரிக்கையில் -
ஜன்னல் திறந்து - சற்று வெளியே பார்க்கிறேன்

அதோ -
ஈழமொரு சொட்டு நம்பிக்கையில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது,
உலகம் எங்கோ தன் தலையை திருப்பி
வலியவன் தோள் தேடி அலைகிறது,
ஓடி -
ஒரு வார்த்தை ஏனென்றுக் கேட்டிடவோ -
என் உயிர் தந்து தேசம்
மீட்டுமுணர்வை கூட்டவோ
தினவற்றுப் போனேனே;

நாட்கள் நகர்ந்து -
ஈழம் விட்டெங்கோ போகும் வேகத்தால்
சுயம் வெட்கும் ஆளானேனே..

ஈழம் பற்றி செய்தியின்று
அமைதி கொண்டு போனதுவோ???

அமைதி விழுங்கிய மயான கனத்தில்
எம்பாட்டன் முப்பாட்டன் பிள்ளை வரை
தமினினம் புதைந்துப் பழசாகிப் போனதோ???

வரலாறு தன் பொன்னேட்டில்
வியந்து பதித்துக் கொண்ட இனமிங்கே
புல்பூண்டு முளைத்து வெடிசப்தங்களை மட்டும்
நினைவுகளாய் காதுகளில் பதிந்துகொண்டனவோ???

உலகின் பார்வையில் -
உதவியற்றுப் போனாலென்ன ,
உயிர் அறுக்கும் கொடுமை கண்டு
தடுக்கும் மனிதமற்றுப் போனதே, கொடுமை.. கொடுமையில்லையா???

காடுகளில் என் இனம்
திரிந்த வலி போகட்டும்,

வருடங்களில் வாழ்வை தொலைத்து
அற்ப வெடிக்கு உயிர் துறந்த
போராளிகளின் தியாகம் போகட்டும்,

பால் சுரந்து காட்டில் பீய்ச்சிட
வெறும் வீடு வளர்த்த பிள்ளைகளையும்
சுட்டுக் கொன்றது போகட்டும்,

விடுதலையென்னும் ஒற்றை வார்த்தை சுமந்து
பள்ளிக்குச் சென்ற குழந்தைகளையெல்லாம்
பதுங்குக் குழியில் தள்ளி எரித்தார்களே ஈனர்கள், போகட்டும்

கைகட்டி மரமாக்கி
கண்முன்னே கற்பழித்த தாய் தங்கை
யாரானாலென்ன போகட்டும் போகட்டும்,

இன்னும் என்னென்ன போகவோ எம்-பிறப்பு.. மானிடமே???

சுட்டுக் கொன்று மேலேறி
முலையறுத்து -
வெற்றி சங்கூதிய போர்நெறி காத்தவரா
நீதி கொண்டார்??????????

எந்த நீதி எந்த கடவுள்
எவர் வந்து எமை காப்பவரோ...

எல்லாம் அற்று போய்
தனியே நின்று மயானம் வெறித்து
எங்கேனும் என் தாயின் உறவுகளின்
ஏதேனும் ஒரு அடையாளம்
என்ன ஆனார்களென்றாவது பதிந்திருக்காதா என
தேடும் அவகாசமின்றி
நரிக்கூண்டில் அடைப்பட்ட எமை
எவர் வந்து காக்க இனி?????

எவரும் வேண்டாமென
உயிர்களை துறந்த ஒரு பிடி மண்ணெடுத்து
ஓங்கி வெளியே வீசிவிட்டு -
ஜன்னலை மட்டும் இழுத்து சாற்றிக் கொண்டேன்!

vidhyasagar1976@gmail.com
**********************************

உன் வ‌ருகைக்காக

- பிரதீபா - பாண்டிச்சேரி -

பிரதீபா

கதிரவன் முகம் பார்த்து
நாண‌முற்று
ரோஜாக்கள் சிவக்க‌
அவ்வ‌ழ‌கில் ம‌ய‌ங்கிய‌
தேனீக்க‌ள் அத‌னுள்
தேன் உண்டு க‌ளிக்க‌
ம‌ல‌ரினும் மெல்லிய‌
இற‌குக‌ள் கொண்ட‌
வ‌ண்ண‌ வ‌ண்ண‌
வ‌ண்ண‌த்துப்பூச்சிக‌ள்
சிற‌க‌டித்துப்பூங்காவெங்கும்
ப‌ற‌க்க‌ அவைக‌ளுள் ஒன்றாக‌
என் ம‌ன‌மும்
ப‌ற‌ந்து திரிந்து
ஆர்ப்ப‌ரித்த‌து
உன் வ‌ருகைக்காக‌ காத்திருந்த‌
ஒவ்வொரு விநாடியும்...

(bradipagen@yahoo.co.in)

**********************************

ஹைக்கூ: மின்தடை

- கவிஞர் இரா.இரவி

ஹைக்கூ: மின்தடை

பாதித்தவர்கள்
சபிக்கிறார்கள்
மின்தடை

வெட்ட வெளிச்சமானது
கையாலாகாத தனம்
மின்தடை

அறிவித்து பாதி
அறிவிக்காமல் மீதி
மின்தடை

தாமஸ் ஆல்வாய் எடிசனை
தினமும் நினைவூட்டுகின்றனர்
மின்தடை

தடையின்றி
கொசுக்கள் ரிங்காரம்
மின்தடை

வந்தது வெறுப்பு
வாக்குப் பெற்றவர் மீது
மின்தடை

ஆளுங்கட்சியை தோற்கடிக்க
ஏதிர்க்கட்சி வேண்டாம்
மின்தடை போதும்

விவசாயம் பாதிப்பு
தொழில்கள் பாதிப்பு
மின்தடை

வல்லரசாவது இருக்கட்டும்
நல்லரசாகுங்கள்
மின்தடை

வெளிநாடுகளில் இல்லை
இந்தத் தொல்லை
மின்தடை

eraeravik@gmail.com
**********************************

என் சுரேஷின் இரண்டு கவிதைகள்

என் சுரேஷின் இரண்டு கவிதைகள்
வழியும் ஜீவனும் சத்தியமும்


நிர்பந்தங்களுக்கு மட்டுமே பேசு
பேச்சில் மலரட்டும்
அன்பும் அமைதியும் தெளிவும்!

கனிவான உந்தன் பதில்
அடுத்தவனின் அடுத்த கேள்விகளுக்கு
வைக்கட்டும் முற்றுப்புள்ளி!

தேவையற்றவைகளை பேசாமல் இருப்பின்
தேவையானவைகளை உன்மூலமாக
பேசுவார் இறைவன்!

எல்லாம் தெரிந்தவன்
மௌனத்தை நேசிக்கிறான்
பேசாமல் மகிழ்ச்சியடையும் பாக்கியம் பெறுகிறான்
மௌனிகளை மதிக்கிறான்
மௌனத்தில் சுகிக்கிறான்!

அவன்
நடந்ததை யோசிக்கமாடான்
யோசிப்பதை நடத்திக்காட்டுவான்
யோசித்துப் பேசுவான்
பேசின பின் யோசிக்கமாட்டான்
அமைதியே அவனை சூழ்ந்திருந்து மகிழும்!

மனிதகுலத்தில் இனி பேசி என்ன ஆக?
இதனால் மௌனத்தில்
எத்தனையோ சித்தர்கள் இன்றும்!

தாமரை இலைமேல்
நீர்த்துளிகள் பேரழகு!
அறிந்துகொள் நண்பனே - நீ
வாழ்ந்துகொண்டே
வாழ்க்கையை விலகி நேசித்தல் நன்றென்று!

மனிதன் இறைவனை சோதிப்பதே இல்லை
மனிதனே இறைவனை சோதிக்கிறான் - அவனிலெழும்
சந்தேகநொடிகள் ஒவ்வொன்றிலும்!

எல்லோரிலும் இறைவனுண்டு
ஆசை பயம் இவை துறப்பின்
உணர்ந்துகொள்ளலாம் – அந்த
வழியை; ஜீவனை; சத்தியத்தை! - ஆம்
எல்லாம் வல்ல இறைவனை!

போராட்டம்
என் சுரேஷின் இரண்டு கவிதைகள்

அடுத்த உணவெங்கே என்ற
வினாவிற்கு விடையின்றி
மயங்கி விழுகிறது ஏழைகளின் பசி!

தங்களின் பசுமைப் புரட்சி வெற்றி காண
தொடர்கிறது
அரசர்களின் மகிழ்ச்சியான
இரகசிய முயற்சிகள்!

ஏழ்மைக்கு விடுதலை
ஏனென்று கேட்கும் மன்னர்களே
சரித்திரம் ஏழ்மைக்கு விடுதலை அளிக்கும் - அது
உங்களுக்கு தரித்திரத்தை உமிழும்!

ஏழைகள் எங்களின்
தீவிர போராட்ங்கள் தொடங்கிற்று –இனி
கனவுகளிலும் போராட்டங்கள்
அவைகளிலும் வெற்றிகள்!

கருவறையிலிருந்து சுதந்திரம் தேடி
கல்லறைக்குள் புகவும் உரிமை தேடி
வாழ்க்கையில் எப்போதும்
போராடி வெல்லத் துடிக்கிறது போராட்டங்கள்!

மரணத்தின் விளிம்பில்
இலட்சியம் நோக்கியே பயணிக்கையில்
மிக இனிமையானதே போராட்டங்கள்!

nsureshchennai@gmail.com
**********************************

வாழ்விக்கும் மரணம்

  சு.திரிவேணி,கொடுமுடி -

வாழ்விக்கும் மரணம்

காலச்சக்கரம் பதிப்பிக்கும்
அழுத்தமான காலடிச்சுவடு
மரணம்!

விதியை மீறாமல்
விதிவிலக்கில்லாமல்
வேறுபாடு எதுவும் காட்டாமல்
மனித இனத்தைத் தழுவும்!

உடலும் மனமும்
அவதியுற்ற பொழுதும்
இந்த விருந்தாளியை-
வரம் தரும் விருந்தை
வரவேற்க யாருக்கும்
மனம் இருப்பதில்லை!

மோப்பக் குழையும்
அனிச்சம் இல்லை அவன்.
முகஸ்துதி முக்கிய அலுவல்
எதுவும் கேளாச் செவிடன்.
பாரபட்சப் பார்வை இல்லாதவன்.

இந்த மரணம் தான்
புண்ணியம் தேடத் தூண்டுகோல்.
சீரிய தலைமுறையைச்
செதுக்கும் சிற்பி.
மனித மனத்தின் ஆசை
வெள்ளதிற்கான தடுப்பனை!

மரணம்-
மட்டுமில்லாது போனால்
மனிதம் என்னும்
சொல்லின் பொருள்
மரணித்திருக்கும்!

தன் மழலைகளைத்
தானே தின்று தீர்க்கும்
மீனின் இயல்பிலேயே
மானுடமும்
மரணித்து வாழாமல்
வாழ்விப்பது மரணம் தான்!!

kmdveni@gmail.com

**********************************

மகளிர் தினக் கவிதை: பெண்ணே நீ வாழ்க!

பகலவன்.

பெண்ணே நீ வாழ்க!

ஈன்றெடுத்த அன்னையாய்,
மழலை கை பிரியா தங்கையாய்,
அன்பை சுமந்த தோழியாய்,
மரணத்தின் வாசல் வரை மனைவியாய்,
இன்னும் எத்தனை எத்தனை முகங்கள்,

அனைவரின் இல்லத்திலும்
அன்பின் உறவாய் அம்மா,

எல்லோருக்கும் கிடைக்காத
பிஞ்சு விரல் உறவாய் தங்கை,

அனைவரின் வாழ்விலும்
நட்பின் உறவாய் தோழி,

வாழ்வின் விளும்பு வரை
மகிழ்ச்சியின் உறவாய் மனைவி,

மாதராய் பிறப்பதற்கே நல்ல மகத்துவம்
புரிதல் வேண்டும் என்ற
ஒரு மொழியை கூறிய கவிஞ்சனின்
வரிகளுக்கு உறவாய் பெண்ணியம்..

நீ பிறந்த பின் குடி கொள்வதோ
குப்பை தொட்டி எனலாம்,
உன் பெண்ணியம் தொட்டது
என்னவோ விண்ணை எனலாம்!

வேலைக்கு போகும் அவசரத்திலும்
ஒற்றை ரோசாவை பறித்து
படக்கென்று தலையில் சூடி செல்வாளே அம்மா!

புளிய மரக்கிளையில் கிளிஞ்சல்கள் ஆட
சுள்ளிகள் பொறுக்குவாளே தங்கை,

மார்கழி மாத குளிரில் பளிச்சென்ற முகம்கொண்டு
கோலத்தை செதுக்குவாளே எதிர்வீட்டு பெண்!

தான் கருவுற்றதை முதலில்
உற்றவனிடம் சொல்வதா!இல்லை
மாமியாரிடம் சொல்வதா என
சிக்கித் தவிப்பாளே மருமகள்!

தெரு முனையில் சின்னஞ்சிறு
மழலைகளுடன் பாவாடை சொருகி
பாண்டி ஆடுவளே முறைப்பெண்!

விடியற்காலை எழுந்து தலை குளித்து
ஈர கூந்தலை துண்டுடன் சுற்றி
கணவனிடம் நேரமாயிற்று
எழுந்துருங்கள் என்பாளே மனைவி,

இத்தனை உணர்வுகளுக்கும்
உறவாய் பெண்ணியம்,

புன்னைகையோடு அழுதாலும்
போலியாய் அழுதாலும்
வலியோடு அழுதாலும்
குழாய் திறந்த மாதிரி
கண்ணீர் வடிப்பாளே
அப்பொழுதும் பெண்ணியம்,

கருவை உயிராக ஈன்றெடுக்க
மரணத்தின் வாசல் வரை சென்று
வெளியேறும் உதிரம் படிந்த சிசுவை
பார்த்து பெருமூச்சி விடுவாளே
அப்பொழுதும் பெண்ணியம் !

இன்னும் எத்தனை எத்தனை
இடங்களில் பெண்ணியம் தெரிந்தாலும்
அதன் உலக அழகு என்னவோ ஒரு தருணம்தான்!

தலை முடி நரைக்க
ஊன்று கோலுடன்
அன்பாய் சிரிக்கையில் கிழவி ஆனாலும்
உலகி அழகியாக தெரிவளே பாட்டி!

பெண்ணியத்தை வாழ்த்த
வார்த்தை வரவில்லை!
மகளிர்தின மார்ச் 8 க்கு
இன்னும் விடியலும் வரவில்லை!
பெண்ணியத்தை போதையாய்
சித்தரிக்கும் சினிமா காயவர்களின்
எண்ணங்களுக்கும் புத்தி வரவில்லை!
பெண்ணியத்தை நினைக்கையில்
வார்த்தை வரவில்லை!
வந்தது என்னவோ வலி மட்டுமே!

பெண்ணியத்தை காப்போம்!
பெண்ணியத்தை மதிப்போம்!
பெண்ணியத்தை உயர்த்துவோம்!

madhanraj.pandiyan@gmail.com


© காப்புரிமை 2000-2010 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner