இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூலை 2006 இதழ் 79 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட்டில் மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!
நளாயினியின் “நங்கூரம்” கவிதைத் தொகுப்பு -ஓர் அறிமுகம்!

 -ரவி(சுவிஸ்) -

நளாயினியின் “நங்கூரம்” கவிதைத் தொகுப்பு

புதிதாய்ப் பிறந்துவிட்டுப் போகிறேன்”

அந்த வீதியில்
நீயும் நானும்
நட்பாய்த் தெரிந்த
முகம் ஒன்று

நானோ நட்பாய்
சிரித்து வைத்தேன்

ஆனால் நீயோ
அவனைப் பார்த்து
என்ன சிரிப்பு
எனக் கூறியபோது
ஏனோ அதிகம்
இடிந்துபோனது
நம் காதல்தான்.

உனக்கான காத்திருப்பில்
நீ வரப் பிந்தியதால்
என் நண்பனோடு
சிரித்துக் கதைத்தேன்.

ஆனால் நீயோ
என்ன கதைத்தாய் என
என்னைக் குடைந்தெடுத்து
குற்றக் கூண்டில்
நிறுத்தினாய் பார்
அப்போ என் மனம்
நீ என்மீது வைத்துள்ள
காதலையும் நம்பிக்கையையும்
ஆய்வுசெய்து
அறிக்கை எழுதத் தவறவில்லை.

என் கூந்தலை வெட்டியதற்காய்
எப்படியெல்லாம் திட்டித்
தீர்த்தாய்
நான் உன்னிலிருந்து விலகிப்
போகவல்லவா செய்துவிட்டாய்.

காதல் என்றால் என்னவென்று
தெரியுமா உனக்கு?
எனக்கே எனக்கான வாழ்வையும்
உனக்கே உனக்கான வாழ்வையும்
நீயும் நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பதுதான்

அதற்காய்
என் வாழ்வை
என் விருப்புவெறுப்பை
எல்லாம் துறந்து
உனக்காய் மட்டும் என் விருப்பு வெறுப்போடு
உனக்காய் வாழ
எனக்கு இஸ்டமில்லை.

நீ நினைக்கும்
குருட்டு
செவிட்டு
ஊமைக் காதலியாக நான்
இருப்பேன் என நினையாதே.

என்னை சிதை ஏற்றாமல்
என்னை எனக்கே
திருப்பித் தந்துவிடு.

போதும்
நீ என்மீது வைத்த காதலும்
அதன் மீதான நம்பிக்கையும்.

போனால் போகிறது
நான் உன்மீது
கொண்ட காதலைப் புதைத்து
மீண்டும் புதிதாய்
பிறந்துவிடப் போகிறேன்.

-நளாயினி

நளாயினியின் “நங்கூரம்” கவிதைத் தொகுப்பு காதல் பற்றி சினிமா சலிக்கச் சலிக்கப் பேசிவருகிறது. இன்று காசுக்குக் கவிதை பண்ணும் சினிமா பாடலாசிரியர்களிலிருந்து திருப்திக்காக எழுதும் கவிஞர்கள் வரையும் பேசிக்கொண்டுதானிருக்கிறார்கள். கவிதை எழுதுவது காதலுக்குத் தகுதியாய் இழையோடும் புள்ளிவரையிலும்கூட பெரிதுபடுத்தப்பட்டுக் கொண்டிருப்பது காதல். பண்டித சிகாமணிகளிலிருந்து அரட்டைஅரங்கிப்போர் வரையிலும் படாதபாடுபட்டு இழுத்துவைத்து வரையறைசெய்கிறார்கள். நட்பு, அன்பு, காதல் இதுவெல்லாம் கற்பிதம் என்கின்றனர் பின் நவீனத்துவ மொழிபெயர்ப்பில் அதுவறிந்தோர். ஒன்றை மட்டும் சொல்ல முடிகிறது. நிலவும் இந்த ஆண் பெண் உறவு முறைகளில் உளவியல் முறைமைக்குள் அதனடிப்படையான வாழ்முறைக்குள் காதல் என்பது உணர்வுசார்ந்து உணர்ச்சி சார்ந்து செயற்படுகிறது என்பதை சொல்லமுடியும். நட்பு அன்பு என்பதும் அப்படியே. அதுவும் கூட்டு வாழ்முறைக்குள் இது அதிகம் செயற்பட வாய்ப்பு உண்டு. அதேயளவு இவற்றின் மீதான இடக்குமுடக்குகளும் உண்டு. ஆக வாழ்நிலை சார்ந்து பேசப்படும் பொருளாக இவைகளெல்லாம் இருக்கிறது எனலாம். அறிவியல் பூர்வமாக காதலை நட்பை அன்பை கற்பிதமாக நிறுவக்கூடிய அல்லது நிறுவ முயல்பவர்கள்கூட தனது தாயின் இறப்பில் கண்ணீர் வடிக்கின்றனர்தான்.

“காதல் என்பது பொறாமையின் இன்னொரு வடிவம் என்பார்கள். காதல் என்பது வெறும் "சென்டிமென்ட் பிளாக் மெயில்" என்றே நான் கருதுகிறேன். இரு உடல்கள் சேருவதற்;கு நமக்கு ஒரு கலாச்சார காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நாம் காதல் என்று பெயரிட்டுள்ளோம்...” என்கிறார் சோபாசக்தி, மலையாள இதழொன்றுக்கான தனது பேட்டியில்.

நூற்றாண்டுகளாக கொடுமைகளை அனுபவித்துவந்த பில்லீ கறுப்பின மக்களின் ஆத்மாவோடு பேசிய பாடகி.. காதலைப் பற்றி இவ்வாறு பாடினாள்...

“உறக்கமற்ற விழிகளோடு ஒவ்வொரு விடியலையும் நீ எதிர்கொள்ளும் வரையிலும்...
காதலில் தோல்வியைச் சந்திக்கும் வரையிலும்...
அந்தத் தோல்வியின் மீது நீ வெறுப்புக் கொள்ளும் வரையிலும்...
உனக்குத் தெரியாது காதல் என்றால் என்னவென்று.”

என்று அரங்குகள் அதிர பாடித் திரிந்தாள்.

காதல் உயிரினும் மேலானது என்றவாறாக அதிமுக்கியத்துவம் கொடுத்துப் பேசுவதுபோலவே இதெல்லாம் கற்பிதம் என்ற உலர்த்தலுக்குப்; பயப்பட்டு மௌனமாய் அடக்கிவாசிக்கும் அறிவுசீவிகளுக்கும் இடையில் பலவாறான வடிவில் பேசுபொருளாக அது இருந்துகொண்டுதானிருக்கிறது.

காதலை நட்பு அன்பு தோழமை என்பவற்றிற்கு கொடுத்த முக்கியத்துவத்தைவிட பூதாகாரப்படுத்த -கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆண்-பெண் உறவுமுறைக்குள் உளவியல் முறைமைக்குள்- உடல் மீதான வேட்கை முக்கியமானதுதான். அதனால் காதல் எதிர்ப்பால் தளத்துக்குள் உலாவுகிறது. கவிதையுள்ளும் இப்படியே.

நளாயினி காதல் என்றால் என்னவென்று இப்படிச் சொல்கிறார்...

“எனக்கே எனக்கான வாழ்வையும்
உனக்கே உனக்கான வாழ்வையும்
நியும் நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பதுதான்

அதற்காய்
என் வாழ்வை
என் விருப்புவெறுப்பை
எல்லாம் துறந்து
உனக்காய் மட்டும் என் விருப்பு வெறுப்போடு
உனக்காய் வாழ
எனக்கு இஸ்டமில்லை”

இதே கவிதை நட்பையும் காதலையும் எதிர்கொள்வதை -இவ் அறிமுகக் குறிப்பு தொடக்கத்தில் உள்வாங்கியுள்ள- “புதிதாய்ப் பிறந்துவிட்டுப் போகிறேன்” என்ற கவிதையில் பார்த்திருப்பீர்கள்.

நங்கூரம் நளாயினியின் முதல் கவிதைத் தொகுதி. தான் படைத்த காதல் கவிதைகளை தொகுப்பாக்கியிருக்கிறார். பெண் தனது மனநிலையில் நின்று பேசும் பொருளாக பொதுமையாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது படைப்பை அளப்பதற்கான அளவுகோலுமி;ல்லை. பெரும்பாலும் ஆண் எழுத்தாளர்களிடம் வைக்கப்படாத இந்த அளவுகோல் பெண் எழுத்தாளர்களிடம் நீட்டப்படுவதுண்டு. இங்கு நளாயினி தனது நிலையில் நின்று பேசுகிறார். அவரது கவிதைகள் பேசுகின்றன. பொருந்திப் போவதான அனுபவங்கள் உணர்வுகள் கொண்டவர்களிடம் அவரது கவிதைகள் பேசுகின்றன.

உடற் தொடுகை மட்டுமின்றி எதிர்பார்ப்பு ஏமாற்றம் தோல்வி வெற்றி கோபம் பணிவு விரக்தி நம்பிக்கை...என முரண்களுக்கிடையே எட்டப்படும் உணர்வுநிலை உணர்ச்சிநிலை மனிதஜீவியை இரத்தமும் சதையும் கொண்ட இயங்குபொருளாக்குகிறது. காதலிலும் இது செயற்படுகிறது. இவற்றை தனது கவிதைகளில் பதிவுசெய்திருக்கிறார் நளாயினி.

உன் கடிதம்
நாளை வரும்
என்ற நம்பிக்கையில்
என் கண்களை
கடிதப் பெட்டிக்குள்
அடகுவைக்கிறேன்.
(பக்.14)

யாருக்கும் தெரியாமல்
உன் நினைவுகளைச் சுமந்தபடி
நானும்
என் நினைவுகளைச் சுமந்தபடி
நீயும்
காத்திருக்கும் காத்திருப்புகள்
எவ்வளவு அற்புதமானவை
(பக்.16)


இப்படியாய் காத்திருப்பின் சுகங்களைச் சொல்லும் கவிஞர் சுவாரசியமாக சிறுவயது நினைவுகளில் இவருடன் அறிமுகமாகிறார்.

ஓ இவன் என் முதல் கணவன்
அந்தப் புழுதி மண்ணில்
மூக்கு வடிய
கொன்றைப் பூப் பறித்து
இரு மாலை சூட்டி
தென்னோலை பிடுங்கி
தாலி செய்து
நானும் இவனும்
மாலை மாற்ற
அயல்வீட்டுச் சிறுவர் சிறுமியர்
பீப்பீப்பீ டும்டும்
என மங்கல வாழ்த்தொலிக்க
என் கழுத்தில் தாலி கட்டியவன்.
இவனுக்கு மண்ணில் சோறுகறி சமைத்து
சிரட்டையில்
உணவு கொடுத்தேன்
எனது ஐந்து வயதில்(பக்.48,49)


“இவர்கள் யார் தடுக்க” என்ற கவிதை காதலன் காதலி இடையில் முரண்நிலைகளை உரையாடலாக்கி நம்பிக்கைகளை வலியுறுத்துகிறது. அதுமட்டுமன்றி பொதுவில் ஆண்கள் கருத்தாளுமை செலுத்துபவர்களாகவும் பெண்கள் துவண்டுவிடுபவர்களாகவும் காட்டப்படும் ஆண்நோக்கு நிலையை தலைகீழாக்கியிருக்கிறார் இக் கவிதையில்.
கவிதை இவ்வாறு முடிவுறுகிறது.

காதலன் - “ஓ! நாம் இணைந்தால் பெற்றொர் சாவதாய்...”
காதலி- “எல்லாம் பொய்.
எந்தப் பெற்றொரும்
பிள்ளைகள் காதலுக்காய்
செத்ததாய்ச் சரித்திரமில்லை.
இந்த இயற்கை எல்லாம்
நம்மை வாழச் சொல்லும்போது
இவர்கள் யார் தடுக்கு?”
என்று கவிதையை முடிக்கிறார்.

“நாளும் காதல் கொள்வோம்” என்ற கவிதையில் காதல் இன்பம் பற்றிப் பேசுகிறார்.

அன்பை வெளிப்படுத்தத்
தெரியாதவர் எம் இனம்
துன்பம் இன்பம் என்பர்
உயிரைக் கொடுப்பேன் என்பர்
இன்பத்தை நாக்கு சுவர்களுக்குள் -என
நினைத்து அமுக்கிவிட்டனர்
வார்த்தையிலும் ஒவவோர் தொடுகையிலும் -ஏன்
நடத்தையிலும்கூட
இன்பம் உண்டு என
அறியாததும் ஏனோ?
காதலது நாளும் காதலென்றால்
எம் இனம்
காமமாய்ப் பார்ப்பதும் ஏனோ?
காதல் என்றால்
வார்த்தையிலும்
ஒவ்வோர் தொடுகையிலும் -ஏன்
நடத்தையிலும்கூட
நாளும் இன்பமாய்
காதல் கொள்வோம்.  (பக்.41)


பெண்கள் தமது உணர்ச்சிகளை வேட்கைகளை வெளிப்படையாகப் பேசினாலே காமமுறும் ஆண்மன வக்கிரங்கள் பெண்களை நுகர்பொருளாகப் பார்ப்பதன் வெளிப்பாடு. இந்த வெளிப்பாட்டை பூசிமெழுக இன்று பெண்கள் பாவிக்கும் உடல்சார்ந்த மொழிகளின்மீது கலாச்சாரக் கூச்சல் இடுகின்றனர். ஆண்உலகு வகுத்த ஒழுக்கங்களை சமூக ஒழுக்கமாக கேள்வியின்றி வரித்துக்கொண்ட அல்லது மனசின் ஒரு மூலையில்தன்னும் உறங்கவைத்துக் கொண்டிருக்கிற பெண்களும்கூட இந்தச் கூச்சலை நிகழ்த்துகின்றனர். இதை எதிர்கொள்ளும் உக்கிரமான தளத்தில் நளாயினியின் கவிதைகள் பேசவில்லை. ஆனாலும் உணர்ச்சிகளை வெளிப்படையாகப் பேசமுனையும் அவரின் உந்தல் இங்கு “மனத்திரையில்” தெரிகிறது...

நாம் இடைக்கிடை
சந்திக்கும் அந்த மாலைப் பொழுதுகளில்
உன்னை
ஆரத் தழுவத் துடிக்கும் அந்தக் கைகளை
வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடிக்கிறேன்.
உன்னை
முத்தமிடத் துடிக்கும் என் உதடுகளை
பற்களால் அடிக்கடி கடித்து
தண்டனை கொடுக்கிறேன்.
உன் கைவிரல்களுடன் கைகோர்க்கத் துடிக்கும்
என் விரல்களை
கைரேகைகளுடன் பின்னிக் கொள்கிறேன்...  (பக்.32)

என்கிறார்.

சமூக வெறியுள் அகப்பட்ட காதலிடை பேசுகிறார்...
“நமக்கு வயதானதுபோல்
சமூகவெறிக்கும் வயதாகாதா என்ன?
புதிதாயல்லவா பிறப்பெடுக்கிறது...”


காதலி நொந்துகொள்ளவில்லை. காதலனிடம் கேட்கிறாள்...
சமூகம் திருந்தாது.
நாம்தான் மாற வேண்டும்
காலம் போகிறது
வயதும் போகிறது
வாயேன் ஓடிப்போய் மாலை மாற்றுவோம்.”


உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு சமூக மாற்றம்வரை காத்திருக்கக் கோரும் கோமாளித்தனத்துக்கு இங்கு விடைசொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் கவிஞர் றோகண உடனான காதலில் இதற்கு முரண்நிலை எடுப்பது தமிழ்த் தேசியத்தின் ஊட்டலோ என எண்ணவைத்துவிடுகிறார். இது ஒரு அவலம்தான்.

இனவெறி
மொழிவெறி
மதவெறி
எமக்கல்ல -உன்
இனத்துடன் மோத.
உரிமைவெறி ஒன்றுதான்.
அரசு உன் இனமாதலால் -எம்
உரிமை கிடைக்கும் வரை
கைகோர்ப்புகள் கனவில் மட்டுமே.
விடியலுக்காய்க் காத்திருப்போம்.  (பக்.47)

இத் தொகுப்பில் பாடல் வடிவிலமைந்த இரு கவிதைகளும் “தேதி ஒன்று குறிங்கையா”, “அழகு” இரண்டும் உள்ளடங்கியிருக்கிறது. இது கவிஞரின் இன்னொரு பரிமாணத்தைத் தொடுகிறது எனலாம்.

தொகுப்பின் பொதுவான உள்ளடக்கங்களுக்கு முரணானதாய் சராசரியாய் எழுதப்பட்டிருக்கும் வரிகள் இத் தொகுப்பில் சில வெளிப்பட்டிருக்கின்றன என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்..  கவிதையின் காலக்குறிப்பு இல்லாததால் இவ் வரிகள் ஆரம்ப காலங்களில் எழுதப்பட்ட கவிதைகளில் வெளிப்பட்டவையா என்றும் எண்ணத் தோன்றுகிறது.
உதாரணமாய்...

காதல் தோல்விகளும் வெற்றிகளே
வாழ்வின் படிக்கற்களே
சாகாவரமாய் இதயமதில் வாழ்வதும்
காதல் தோல்விகளே.
காதல் என்றும் தோற்பதில்லை.  (பக்.15)


உன் பாதத்தின் வேகம்
எனை உன்னோடு அழைக்கும்
உன் கரங்கள் சொல்லும் கதைகள்
எனை உனக்கே அர்ப்பணம் செய்யும்.... (பக்.36)


நீ என்னை விழிகளால்
பருகியபோதே
உன் விழித் தொலைநகல்மூலம்
உன் இதயத்தில் பிறின்ரானேன்... (பக்.38)


இந்த “வைர” வரிகளை தொகுப்பிலிருந்து வீசிவிடச் சொல்கிறது இக் கவிதைத் தொகுப்பின்மீதான என் வாசிப்பு.

கவிஞர் சொல்கிறார்...
மனச்சாட்சி கயிற்றின் விளிம்பில் நடப்பதால்
விமர்சன கல் எறிவுகளைக்கூட
மலர்களின் தாவலாய்
மாலை ஏற்புகளாய்
செங்கம்பள வரவேற்பாய்

இது எனக்கான பயணம்
எனக்கான இருப்பைக்கூட
உறுதிசெய்யும் படிநிலை. ... (பக்.57)


தேவையற்ற ரணவலிகளுக்கு
மனம் அசையா
வைராக்கியத்தை தீபமாய் ஏற்றி.
எனக்கானவை இனி
எனக்கானவைதான்
பகிர்தல்கள் இனி என்
பரந்த பசுமை வெளியுள் மட்டுமே.
இது எனக்கான பயணம்
எனக்கான இருப்பைக்கூட
உறுதிசெய்யும் படிநிலை... (பக்.59)

தொடருங்கள் நளாயினி.

குறிப்பு:
அட்டைப்பட ஓவியத்தின் மிளிர்வுக்கு நூலின் உள் வடிவமைப்பு (லேஅவுட்) ஈடுகொடுக்கவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஜீவனின் படைப்பாற்றல் இங்கு கணனி ஓவியமாக அற்புதமாக வெளிப்பட்டுள்ளது.

மேலும் “பூஜிக்கத் தொடங்கிவிட்டேன்” (பக்.29) என்ற கவிதை “உதடுகளுக்குக் காதல் கடிதம்” (பக்.63) என்ற தலைப்புடன் மீண்டும் தொகுக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் “காத்திருப்புகள்” (பக்.16) என்ற கவிதை “இன்ப வலி” (பக்.30) என்ற தலைப்புடன் மீண்டும் தொகுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய தவறுகள்.

 
நங்கூரம்
வெளியீடு: இமேஜ் அன்ட் இம்ப்ரெசன்
அபிராமபுரம்
சென்னை
(மின்னஞ்சல்:
uyirmmai@yahoo.co.in)
 
ஆசிரியர்: நளாயினி
மின்னஞ்சல்:
nalayini@hotmail.com)
தொலைபேசி:
0041273466981
 
(நளாயினியின் இன்னொரு கவிதைத் தொகுப்பு “உயிர்த்தீ”யும் வெளிவந்திருக்கிறது.)

ranr@bluewin.ch

 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner