இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2008 இதழ் 98  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

எழுத்தாளர் செ.யோகநாதன் மறைவு!

எழுத்தாளர் செ.யோகநாதன்; புகைப்படத்திற்கு 'ஆயுதம்' வலைப்பதிவுக்கு நன்றிஎழுத்தாளர் செ.யோகநாதன் யாழ்ப்பாணத்தில் மறைந்த செய்தியினைக் கட்டற்ற கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவின் (ஜனவரி 28, 2008) மூலம் அறிந்தோம். எழுத்தாளர் செ.யோகநாதன் இலங்கையிலும், இந்தியாவிலும் (தமிழகம்) நன்கு அறியப்பட்டவர். யாழ்ப்பாணம், கொழும்புத் துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியுமாவார். மேலும் மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றியவர். இரு தடவைகள் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றிருக்கிறார். 1983 கலவரத்தைத் தொடர்நது இவர் தமிழகத்தில் தன் குடும்பத்தினருடனான உறவுகள் துண்டிக்கப்பட்ட நிலையில் நீண்ட காலம் வாழ்ந்தவர். 'சுபமங்களா', 'கணையாழி' உட்படத் தமிழகச் சஞ்சிகைகள் பலவற்றில் இவரது படைப்புகள் பல அவ்வப்போது வெளிவந்துள்ளன. போட்டிகளில் பரிசில்கள் பெற்றுள்ளன. 'சுபமங்களா' இவருடனான நேர்காணலொன்றினைப் பிரசுரித்திருந்தது இப்பொழுதும் ஞாபகத்திலுள்ளது. நாவல் .சிறுகதை, குறுநாவல், சிறுவர் இலக்கியம், சினிமா, சின்னத்திரையென இவரது தமிழ்க் கலை
இலக்கியத்துக்கான பங்களிப்பு பன்முகப்பட்டது. இலங்கைத் தமிழ் இலக்கியச் சூழலில் முற்போக்கு எழுத்தாளராக இனங்காணப்பட்டவர்.
இவரது மறைவு ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்கொரு பேரிழப்பே. இவரது நினைவாக பல வருடங்களுக்கு முன்னர் 'அம்பலம்' இணைய
இதழில் வெளியான இவரது நேர்காணலினையும் மீள்பதிவு செய்கின்றோம். - பதிவுகள்-

எழுத்தாளர் யோகநாதனின் இறுதி அஞ்சலி மற்றும் அவரைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் (சுரதா யாழ்வாணனின் 'ஆயுதம்' வலைப்பதிவிலிருந்து).....இங்கே.....இங்கே

'
அமபலம்' இணைய இதழிலிருந்து...
'இஸங்கள்' எழுதியவர்களுக்கே புரிவதில்லை!

-செ.யோகநாதன் -

எழுத்தாளர் செ.யோகநாதன்'என் எழுத்து எந்த பத்திரிகைக்கு என்று தீர்மானித்து, அதன்பின் நான் எழுதுவதில்லை. என் கொள்கையிலிருந்து விலகாமல்தான்
கதைகளை எழுதுகிறேன். அதை சிறுபத்திரிகைகள் என்று சொல்லப்படுபவைகளைவிட வணிகப் பத்திரிகைகள்தான் அதிகம் வெளியிடுகின்றன. எனது ஆக்கங்களில் எதையும் நான் திருத்துவதற்கு அனுமதிப்பதில்லை.' செ.யோகநாதன் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து கொண்டுள்ள இவரது படைப்புகளில் 'கட்டு மரங்கள்', 'சொர்க்க பூமியில்' போன்றவை ரஷிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. 'ஒளி நமக்கு வேண்டும்' என்ற இவரது நாவல் 1973-ல் இலங்கை அரசின் சாகித்ய மண்டலப்பரிசு பெற்றது. இது மட்டுமின்றி பல சிறுகதைத் தொகுதிகளையும், குறுநாவல்களையும் தந்திருக்கும் இவர், கவிதைகளும் எழுதியதுண்டு. இந்தியா, மலேஷியா போன்ற நாடுகளின் பல தமிழ் இதழ்கள் இவரது படைப்புகளை வெளியிட்டுள்ளன.

'தனியாக ஒருத்தி' என்ற பெயரில் ஏற்றுமதித் தொழிலகப் பெண்களின் நிலை பற்றி இவர் எழுதிய நாவல் தமிழக அரசின் பரிசு பெற்றது.

'இலங்கைத் தமிழ்' எழுத்துலக அரசியல், தமிழக எழுத்துலக அனுபவம், தமிழ்நாட்டின் வாழ்வனுபவம் போன்ற பலவும் பற்றி தனது
கருத்துகளை இவர் அம்பலம் வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டார்.

அதிலிருந்து...

உங்கள் சிறுகதைத் தொகுப்புகளில் 'யோகநாதன் கதைகள்' வெளியாகியபோது பல்கலைக்கழகத்தில் பிரச்னை ஏற்பட்டதே?

இலங்கையில் முற்போக்கு இலக்கியத்தை பலர் இழிவானதாகக் கருதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இன்னொரு வகையில் அதற்குப்
பயந்துதான் தடை ஏற்படுத்தினார்கள். அந்தக் கதைகள் பத்திரிகையில் வந்தபோது பரபரப்பை ஏற்படுத்தியது. முற்போக்கு எழுத்தாளர்களை
பலர் முதிர்ச்சி அடையாதவர்கள் என்று கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரம், இந்தக் கதைகள் வெளியாவது விரும்பாமல் தடுக்கப்பட்டோம். ஆனால் ஆழிக்குமரன் ஆனந்தன் தலையிட்டு விழாவை நடத்திக் கொடுத்தார். அதன்பிறகு எதிர்த்தவர்கள் வாய் மூடி மௌனியானார்கள்.

இலங்கையின் முற்போக்கு இலக்கியமே, கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை பரப்புவதற்காக என்று சொல்கிறார்களே?

நாங்கள் ஒரு குறுகிய வட்டமாக ஆரம்பத்தில் இருந்தோம். அரசியலில் இலக்கியம் சார்ந்து வெளிப்படாமல் தனித்து நின்றால்
பிரச்னைகளை அணுகுவது சிரமம் என்ற நிலை இருந்தது. கைலாசபதி, சிவத்தம்பி போன்ற விமர்சகர்கள் கூட அரசியல்
சித்தாந்தத்துடன்தான் இலக்கியத்தைப் பார்க்கிறார்கள். நான் நடத்திய பல போராட்டங்களால், அரசியல் மூலம் தெரிய வந்தவன்தான் இந்த
செ.யோ! அரசியல் என்றால் கட்சி இலக்கியம் என்று குறுக்காமல் மண் பிரச்னை, மக்கள் பிரச்னை என பலதை கையில் எடுத்துக்
கொண்டவர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள். அதில் என் பங்கும் இருப்பதையொட்டி பெருமைப்படுகிறேன்.

இன்று முற்போக்கு இலக்கியம் வலுவிழந்து விட்டது. போக வேண்டிய பாதையில் போகவில்லையென்ற குற்றச்சாட்டு உள்ளதே?

நவீனவாதிகள் மொழி நடையில் சில அலங்காரங்களை புகுத்தியவுடன் இலக்கியம் தரமானது என்று கூச்சலிடுகிறார்கள். இது புதிய குரல் அல்ல. எப்போதோ தோன்றியதுதான். இன்றும் மக்கள் பிரச்னையையும், இப்போது நடந்து வரும் போர்ப் பிரச்னையையும் முற்போக்கு எழுத்தாளர்கள் கையாள்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நவீனவாதிகள் தமிழ் மக்களின் மண்ணின் பிரச்னையைத் தொடாமல் வேறு பாதை மாறிவிட்டு முற்போக்கு இலக்கியம் நலிந்து விட்டது என்று சொல்லவியலாகாது. பலர் புலம் பெயர்ந்து படைப்புகளை படைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளும், படைப்பாளர்களும் தமிழகத்துக்கு அதிகம் தெரிந்தவர்களாக இல்லையே?

இப்போது ஈழத்து எழுத்தாளர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். மொழிபெயர்ப்புகள் இல்லாமல் அந்தந்த மொழியிலே இலக்கியம்
படிக்கிறார்கள். படைப்புகளும் படைக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஈழத்துப் படைப்பாளிகள் முன்னொரு காலத்தில் தெரியாமல்
இருந்திருக்கலாம். இப்போது தெரிகிறது. படைப்புகளை நாம் சரியான முறையில் கொண்டு சென்று விற்பனை அமைத்துக்
கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன். என் நாவல்கள் இன்னும் இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
தமிழ்நாட்டின் கரிசல்காட்டு எழுத்தையெல்லாம் நாங்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு எங்கள் எழுத்தை தமிழ்நாட்டில்
புரிந்துகொள்ளவில்லை. அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் எண்ணுகிறோம்.

உங்கள் புத்தகங்கள் விற்பனையாவது நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தவர் என்பதாலும் இன்னும் சொல்லப்போனா£ல் தமிழ்நாட்டுக்கு நெருக்கமானவர் என்பதால்தான் என்று சொல்லலாமா?

அப்படி இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் நான் அங்கு இருந்ததனால் என்னைத் தெரிந்து வைத்திருப்பது என்பது
ஆரோக்கியமானது அல்ல. உலகத் தமிழர்களின் இலக்கியங்களை தமிழர்கள் முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். முன்னாடி
நமது படைப்புகளுக்கு அடிக்குறிப்பு போட வேண்டும் என்று சொன்னவர்களெல்லாம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். இப்போது ஒரளவு மாறி இருக்கிறது. மேலும் மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். படைப்பாளிகள், படைப்புகள் எல்லாம் தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட வேண்டும். இதுவும் ஒருவகையான சகோதரத்துவ பரிந்துணர்வுதான்.

தமிழகத்தில் முழு நேர எழுத்தாளராக இருந்திருக்கிறீர்கள் அந்த அனுபவத்தை சொல்ல முடியுமா?

பதினான்கு ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்தேன். 60 நூல்கள், நாவல், குறுநாவல், சிறுகதை, குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்பு நூல்கள்
முதலியன படைத்தேன். சிறந்த படைப்பாளிகளான பொன்னீலன், பிரபஞ்சன், பா.செயப்பிரகாசம், விட்டல்ராவ் இன்னும் பலரின் நட்பு
என்னை தமிழ் தனிமை கொடுக்காமல் பாதுகாத்தது. நர்மதா ராமலிங்கம் பெரிய உதவிகள் செய்துள்ளார். 'இரவல் தாய்நாடு', 'தேடுதல்', 'சுந்தரியின் முகங்கள்' என்னும் எனது நூல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார்.

'தனியாக ஒருத்தி' நாவல் ஏற்றுமதி, இறக்குமதி குறித்த வியாபார நுணுக்கங்களை தௌ¤வாக சொல்கிறது. இதை எப்படி எழுதத் தோன்றியது?

இந்தியாவில் பல பெண்கள் தையல் ஆடையகங்களில் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். அவர்களின் பிரச்னைகளை நான் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தப் பிரச்னைகளுடன் தொழிற்சங்கத்தையும் இணைத்து அணுகினால் என்ன என்று தோன்றியதுதான், அந்த நாவல். பல கோடி ரூபாய் வருமானமுள்ள தொழிலில் தொழிலாளப் பெண்கள் அதுவும் நேரம் வரையறை இல்லாமல் பயன்படுத்துவது என்பது ஏற்க முடியாதது. பலர் இந்த விஷயத்தை வைத்து கதை எழுதிய முதல் எழுத்தாளர் என்று என்னைப் பாராட்டினார்கள்.

சினிமாவில் உங்கள் பங்கு?

சின்னத்திரையில் ஒளிபரப்பான ''முப்பது கோடி முகங்கள்'', அதை இயக்கிய எடிட்டர் பி.லெனின் என் எழுத்தில் ஆர்வமுள்ளவர். அவரின்
வேண்டுதலுக்காக எழுதினேன். ஒரு படி மேலே என் இனிய நண்பர் பாலுமகேந்திரா. அவரின் படைப்புகளிலெல்லாம் நான் பங்கு
பெற்றிருக்கிறேன். Film society எனக்கு நன்றாகப் படங்களை அறிமுகம் செய்தது. இன்னும் சில இயக்குனர்களின் கதை விவாதங்களில்
ஈடுபட்டுள்ளேன். முழுப் படத்திற்கான திரைக்கதை எழுத இருந்தேன். முடியாமல் போய்விட்டது. ஆனால் புலம் பெயர்ந்தோர் சினிமாவில்
பெரும் பங்காற்றுகிறார்கள். அதில் என் பங்கு விரைவில் நிறைவேறும்.

'இரவினில் வரும் பகல்' என்ற நாவல் எழுதுவதாக முன்பு சொன்னீர்கள் அந்த நாவல் என்னவாயிற்று?

நான் நண்பர் பாலுமகேந்திராவுடன் இருந்தது, சினிமாவில் வேலை செய்ய மாத்திரமல்ல. சினிமாவின் அகம், புறம் இரண்டையும் தெரிந்து
கொள்ளத்தான். ஏனெனில் சினிமாவின் உள்ளே இருக்கும் உழைப்பையும், உழைப்பாளர்களைப் பற்றியும் யாரும் இதுவரை
எழுதியதாகத் தெரியவில்லை. அதை எழுதுவதற்கான தகவல்கள் முழுமையாக உள்ளன. நாவல் எழுதியாகி விட்டது. அதை
வெளியிடுவதுதான் அடுத்த கட்டம். விரைவில் அது நிறைவேறும்.

முற்போக்கு எழுத்தாளரான உங்கள் எழுத்துக்களை வணிகப் பத்திரிகையிலும் ஏற்றுக் கொள்கிறார்களே!

என் எழுத்து எந்த பத்திரிகைக்கு என்று தீர்மானித்து, அதன்பின் நான் எழுதுவதில்லை. என் கொள்கையிலிருந்து விலகாமல்தான்
கதைகளை எழுதுகிறேன். அதை சிறுபத்திரிகைகள் என்று சொல்லப்படுபவைகளைவிட வணிகப் பத்திரிகைகள்தான் அதிகம்
வெளியிடுகின்றன. எனது ஆக்கங்களில் எதையும் நான் திருத்துவதற்கு அனுமதிப்பதில்லை. இந்தியாவில் இருக்கும்போது பலர் என்னை மாத நாவல் எழுதச் சொன்னார்கள். நான் எழுதவில்லை. எனக்குத் தோன்றும்போதுதான் என் படைப்புகளை என் கொள்கையுடன் வெளியிட முடியும். எழுத்தாளன் என்பவன் சிந்தனையாளன்; இயந்திரமல்ல. முற்போக்கு இயக்கங்கள் முன்னிறுத்துவது மனிதத்தை மக்களின் வாழ்வை முன்னிறுத்தும் செயல்பாடுகளைதான்.

உங்கள் கதைகளுக்கான கருக்கள் எவ்வாறு உங்களுக்குள் தோன்றுகின்றன?

நமது வாழ்வின் அனுபவங்கள் நமக்கு கற்றுத்தருவது ஏராளம். அத்துடன் படிப்பும் சேர்ந்துவிட்டால் படைப்பை எளிதாக உருவாக்கலாம். ஆனால் அதுமட்டும் போதாது. அந்தப் படைப்பை பொருத்திப் பார்க்கத் தெரிய வேண்டும். நான் பிறந்தது பின் தங்கிய இடமான கொழும்புத்துறை என்ற இடத்தில். என் 12 வயதுக்குப் பின்னரே என் கிராமத்திற்கு பஸ் வந்தது. பல்கலைக்கழகத்திற்கு போன பின்னாடிதான், அழகு படுத்துவது என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன். பேராதனை பல்கலைக்கழகம் வாழ்வில் பெரும்பகுதியை கற்றுக் கொடுத்தது. தொடர்ந்து ஆசிரியர் வேலை. இவையெல்லாம் என் எழுத்துக்களுக்கு கருக்களை உருவாக்கியது. இதுவரை என் அனுபவத்தில் பாதியைக் கூடப் படைப்பாக்கவில்லை.

நீங்கள் கூறுவது எல்லாப் படைப்பாளிகளுக்கும் ஏற்றதா?

நான் என்னுடைய முறையைத்தான் கூற முடியும். எல்லாவற்றிற்கும் வெவ்வேறான பிரதான முறைகள் உள்ளன. அதிலும் நான்
பார்த்தவர்களில் கலைஞர், பிரபஞ்சன் இருவரும் அடித்தல், திருத்தல் இல்லாமல் அழகாகவும், தௌ¤வாகவும் எழுதுவார்கள். சா.கந்தசாமி
பலமுறை எழுதி அடித்து திருத்தி எழுதுவார். டானியனும், பொன்னீலனும் தொடர்ச்சியாக இரவு பகல் பாராமல் எழுதி முடிப்பார்கள். படைப்பாளிக்கு, படைப்பாளி படைப்பு முறை வேறுபட எழுத்துமுறை, சிந்தனை மொழி வேறுபாடும் காரணமாகும்.

தமிழில் படைப்பிலக்கிய வளர்ச்சியில் சிறு பத்திரிகைகளின் பங்கு என்ன?

தரமான இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் ஆதரவு தருவது சிறுபத்திரிகைகள்தான். மல்லிகை, கணையாழி, ஞானம் என்று பல பத்திரிகைகள் இப்போதும் வந்து கொண்டிருக்கின்றன. வணிக பத்திரிகைகளுக்கு எதிர்ப்புக்குரல் கொடுக்க சிறுபத்திரிகைகளால் முடியவேண்டும். அந்தப் பலம் இருக்கிறது. ஆனால் படைப்புகளை தெரிவு செய்பவர்கள் இன்னும் கருத்துள்ள படைப்புகளாகத் தெரிவு செய்ய வேண்டும். இன்னும் சொல்லப்போனால் புலம்பெயர்ந்த படைப்புகளில் பெரும்பங்கு வகிப்பது சிறு பத்திரிகைகள்தான். உயிர் நிழல், எக்ஸில், கனடாவிலிருந்து வெளிவரும் காலம் இவையெல்லாம் இலக்கியத்தை தீர்மானிப்பவையாக இருக்கின்றன.

யதார்த்தவாதம் என்பது மறைக்கப்பட்டு பல இஸங்கள் வந்துவிட்டதே!

யதார்த்தவாதத்தை முற்றாக அறியாதவர்கள்தான் இஸங்களை பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். இன்னொன்று இவையெல்லாம்
விரக்தி அடைந்தவர்களின் புலம்பல்கள். இவைகள் தோன்றிய இடங்களிலேயே வலுவிழந்துவிட்டன. வாழ்க்கையின் கட்டுக்குள் அடங்காத தன்னினச் சேர்க்கை, விபச்சாரிகள் வாழ்க்கையை குழுக்கள் சார்ந்து அமைக்கும்போது ஏற்படும் புலம்பல் இவற்றால் இஸங்கள்
உருவாகின. அதைக் கைக் கொண்டவர்கள் எழுதிய பின்னரும் அவர்களுக்கே அது புரியாமல் இருக்கிறது. மனிதகுல வாழ்வை
மேம்படுத்துவதே படைப்பாளியின் கடமை. எனவே யதார்த்தவாதம் என்றைக்கும் உரியது. பல எல்லைகளைத் தொட்டு முன்னேறுவது.

உங்கள் துன்பக்கேணி நாவலின் முன்னுரையில் விமர்சகர்களை 'செவிட்டுத் தனமும் காழ்ப்புணர்வும் கொண்ட விமர்சகர்கள் என்றும் தம்மைத்தாமே முடிசூட்டிக் கொண்ட சிறுமதிகள்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். இலங்கையில் விமர்சகர்கள் அதிகமாக இருக்கிறார்களே!

நான் எழுதியது விமர்சகர்கள் என்று பெயர் சூட்டிக் கொண்டவர்களை மட்டுமே. மற்றபடி நீங்கள் குறிப்பிடும் விமர்சர்கள் மேல்
அபிமானம் உண்டு. விமர்சனம் செய்ய எடுத்துக் கொண்ட துறையைப் பற்றி புதிய கருத்துகள், இலக்கியப் பின்புலம், சூழல்
இவையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி, நா.வானமாமலை, தி.க.சி. இவர்கள்
படைப்பாளியை முழுமையான வாசிப்பிற்குப் பின்னரே திறனாய்வை எடுத்துக் கொள்வார்கள். பேராசிரியர் நுஃமான் வரலாறே தெரியாமல்
என் நாவலை எதிர்க்கிறார். பல விமர்சகர் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் குழந்தைத்தனமாக எதிர்க்கிறார்கள்.

''இரவல் தாய்நாடு'' அகதி நிலையை பதிவு செய்துள்ள நாவலாகும். நீங்கள் மார்க்சீய சித்தாந்தம் சார்ந்தவர். போராட்டம் குறித்தும், தேசிய இனப்பிரச்னை பற்றியும் எழுதுகிறீர்கள் முரண்பட்ட நிலையில் உள்ளதே?

நீங்கள் கூறிய நாவலான ''இரவல் தாய்நாடு'', 1958-ம் ஆண்டு அரசியல் நிலை பற்றி எழுதிய ''ஞாயிறும் எழுகின்றது'' அதுவும் தமிழ் மக்களின் பிரச்னையை பற்றிச் சொன்னது. தமிழ்மக்களின் பிரச்னையை சொல்வதற்கு எந்த சித்தாந்தச் சார்பும் தேவையில்லை. சகல ஒடுக்கு முறையையும் எதிர்ப்பதுதான் மார்க்சியம். அத்துடன் தேசிய இனப்பிரச்னைக்கும் சரியான தீர்வை முன் வைக்கிறது. பல பிரச்னைகள் நடந்துள்ளன. மார்க்சியத்தை கையாண்டவர்கள் மார்க்சியமென்ற அறிவியல் சித்தாந்தத்தின் நடைமுறைகளை தவறாக கையாண்டதனால் நடந்தது. இல்லாவிடில் இது அறிவியல் சித்தாந்தத்தின் தவறல்ல இதை நாம் தௌ¤வாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்காலத் திட்டம்?

குழந்தைகள் கலைக்களஞ்சியம், கிட்டியின் மூன்றாம் பாகம், இளைஞர் அறிவியல் நூல்வரிசை, ஈசாப் கதைகள், அசுரவித்து நாவல்
தொடர் என்று பல செயல்பாடுகள் கையிலிருக்கிறது. இதையெல்லாம் முடித்துக் கொடுக்க காலம் தேவைப்படுகிறது. புலம் பெயர்ந்தவர்கள்
தொடர்பான படைப்புகளை தொகுப்பதிலும் ஈடுபட்டுள்ளேன். எல்லாம் சீக்கிரம் நிறைவேறிவிடும்.

- ஆர்.டி.பாஸ்கர்
நன்றி: அம்பலம் (இணைய இதழ்): http://www.ambalam.com/idhal/special/2001/april/special15_02.html


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner