இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செப்டம்பர் 2007 இதழ் 92 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சிலம்பு மடல்!
சிலம்பு மடல் - 28 கற்பின் தெய்வமும்! குறமகளிரும்!

- நாக. இளங்கோவன் -


வஞ்சிக்காண்டம்: குன்றக்குரவை:

நாக. இளங்கோவன்

இன்பம் துன்பம் காதல் நோதல்
பிரிவு முறிவு பரிவு அறிவு
நேர்மை பொய்மை கல்லாமை கயமை
மென்மை வண்மை பாசம் நேசம்
பண்பு அன்பு நாடு வீடு
வளமை வாழ்க்கை பெண்மை ஆண்மை
கற்பு நட்பு கலைகள் பிழைகள்,
இவையாவையும் இன்ன பிறவற்றையும் நெஞ்சிற்கும் சிந்தைக்குமாய் அள்ளித் தந்த புகாரையும் மதுரையையும் தாண்டி, புகாரின் நாயக
நாயகியையும், மதுரையின் அரசன் அரசியையும் இழந்து விட்டு மதுரையையும் தீய்த்துவிட்டு வஞ்சிக்குள் வந்த போதும் கொஞ்சி நிற்க
வைக்கிறது இந்தக் கவிப்பாட்டன் பாடிவைத்த காற்சிலம்பு!

வஞ்சி மலைக் குன்றில் வந்து மாண்ட மாபத்தினி கண்ணகியம்மாளைக் கண்ணுற்ற குறவர் குடிப் பெண்டிர் வணங்கி தெய்வமாகக்
கொள்கின்றனர்!

"சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே!

நிறம்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நல்நிழல் கீழ்ஓர்
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியீரே!

கற்புக்கரசியாம் அந்த நல்லாளுக்குக் கோயில் கட்டி, சுற்றி மதில் எழுப்பி, வாயிலும் செய்து குறிஞ்சி நிலத்திற்கொப்பக் குறிஞ்சிப் பறை
முழக்கி, கடமாக் கொம்பூதி, மணிகளை ஒலிக்கச் செய்து, குறிஞ்சிப் பண் பாடி, மணம் மிக்க அகிற்புகை ஏந்தி, மலர் கொண்டு அருச்சனை
செய்து (பூப்பலி), நாடு என்றும் வற்றாது வளஞ்சுரக்க அருள் புரிய வேண்டி நிற்க முனைந்தனர் குறக்குடி மகளிர்! மாபத்தினியை
வணங்கி நின்றனர்!

"தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்
ஒருமுலை இழந்த நங்கைக்குப்,
பெருமலை துஞ்சாது வளம்சுரக்க எனவே!..."

மகிழ்ந்தனர்! ஆடினர் குன்றத்திலே குரவை பாடி!

அருவி ஆடப் போன தலைவியின் ஆற்றாமையை என்ன சொல்ல?

தன் ஆடவனின் ஆளுகையில் அகப்பட்ட சிறுமலையின் கல்தீண்டி பொன்கலந்து மலர் சுமந்து ஓடிவந்த ஓர் அருவியின் வெள்ளி ஒத்த
தண் நீரிலே ஆடிவிட்ட பிறமகளிரைக் கண்டு நெஞ்சு பதைக்கிறதே அவளுக்கு!

இது மகளிரின் காதலா? பொறாமையா? பொறாமையே காதலா?

"எற்றுஒன்றும் காணேம் புலத்தல், அவர்மலைக்
கல்தீண்டி வந்த புதுப்புனல்;
கல்தீண்டி வந்த புதுப்புனல், மற்றையார்
உற்று ஆடின் நோம்தோழி! நெஞ்சன்றே.

என்ஒன்றும் காணேம் புலத்தல், அவர்மலைப்
பொன்ஆடி வந்த புதுப்புனல்;
பொன்ஆடி வந்த புதுப்புனல், மற்றையார்
முன்ஆடின் நோம்தோழி! நெஞ்சன்றே.

யாதுஒன்றும் காணேம் புலத்தல், அவர்மலைப்
போதுஆடி வந்த புதுப்புனல்;
போதுஆடி வந்த புதுப்புனல், மற்றையார்
மீதுஆடின் நோம்தோழி! நெஞ்சன்றே....."

அருவி அகற்றிவிட்டு சிறப்புற்ற செந்தூர், செங்கோடு, வெண்குன்றம் (சாமிமலை), ஏரகம் என்னும் இடங்களை எப்போதும் நீங்காத
ஆறுமுக அழகனையும் அவன் கைவேலையும் குரவையிலே போற்றிப் பாடினர் மங்கையர்!

"சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்கை வேல்அன்றே
பார்இரும் பெளவத்தின் உள்புக்குப் பண்டுஒருநாள்
சூர்மா தடிந்த சுடர்இலைய வெள்வேலே.

அணிமுகங்கள் ஓர்ஆறும் ஈராறு கையும்
இணைஇன்றித் தான்உடையான் ஏந்தியவேல்அன்றே
பிணிமுகம்மேற் கொண்டுஅவுணர் பீடுஅழியும் வண்ணம்
மணிவிசும்பின் கோன்ஏத்த மாறுஅட்ட வெள்வேலே!..."

காமநோய் எனை வாட்ட அன்னைக்கு அது விளங்காது வேறு நோய் கொண்டேனோ என்றஞ்சி வேலனைக் கூட்டி வெறியாட்டு செய்து
நோய் தீர்க்க முனைகிறாரே! இதை என்னென்று சொல்வேன்? என்று நகைக்கிறாள் தலைவி.

அன்னையின் அறியாமை எண்ணி! (முருகன் வந்த ஆடவன் மீதேறி ஆடுவதற்கு வெறியாட்டு என்று பெயர்; ஆடுபவனுக்கு வேலன்
என்று பெயர்)

அன்னைக்குத்தான் என் நோய் விளங்கா அறியாமை!

ஆண்டவனுக்குமா ?

வேலன் மேல் தெய்வம் வருங்கால் வேலன் அறிந்திருக்க வேண்டுமே என் நோய் என்ன வென்று ?

அவனுக்கு அறிதல் இல்லாவிடினும் அவன் மேல் ஏறி வரும் ஆண்டவன் முருகனுக்காவது அறிதல் வேண்டுமே! அவனுக்கு மில்லையா
?

அப்படி முருகன் வருவானாகில் அந்த வேலனைவிடவும் அறியாமை உடையவன் ஆண்டவன் முருகன்!

எள்ளி நகையாடுகிறாள் தலைவி! அழகனைப் பாடிய வாயால் அவனை அறிவிலான் என்று எள்ளி நகையாடவும் செய்கிறாள் தலைவி!

மனதிலே காமநோய் என்றும் சொல்லவியலவில்லை! வேறுநோய் என்றும் சொல்ல மனமில்லை!

காமத்தால் தவிக்கும் உடலுக்கு காய்ச்சல் என்று சொல்லி மந்திரித்ததால் கடவுளும் நகையாகின்றார்! மடவனாகின்றார்!
காசு மட்டும் வேலனுக்கு!

"இறைவளை நல்லாய்! இதுநகை ஆகின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க
அறியாள்மற்று அன்னை அலர்கடம்பன் என்றே
வெறியாடல் தான்விரும்பி வேலன்வருக என்றாள்.

ஆய்வளை நல்லாய்! இதுநகை ஆகின்றே
மாமலை வெற்பன்நோய் தீர்க்கவரும் வேலன்!
வருமாயின் வேலன் மடவன்! அவனின்
குருகு பெயர்க்குன்றம் கொன்றான் மடவன்!......"

ஆண்டவனைப் போற்றி அவனை நகையுமாடி. 'வள்ளிக்குறமகளின் அடிகளோடு ஆறுமுகக் கடவுளே உன் திருவடிகளையும் தொழுது
நிற்கிறேன்!, என் காதலர் களவொழுக்கம் ஏதும் செய்யாது என்னைச் சேர்ந்திட அருள்செய்' என்று அவனையே வேண்டியும்நிற்கிறாள்
தலைவி!

இறைவனைப் போற்றிய வாய் தூற்றுதற்கும் அஞ்சவில்லை! வேண்டுதற்கும் நாணவில்லை! அத்துனை நெருக்கம் ஆண்டவனிடம்.

ஆனால் அன்னையிடம் அஞ்சுகிறாள்! ஆடவந்த வேலனை அருவெறுக்கிறாள்!

ஆண்டவனிடம் அச்சமில்லை, ஆனால் மனிதனிடம் அச்சம் மனிதனுக்கு!

ஆண்டவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஆள்வரும்போது ஆண்டவனும் அந்நியனாகிறான்! அறியாதோனாகிறான்! வந்த ஆள் உண்டு
கொழுப்பதுதான் உண்மை!

ஆண்டவனுக்கும் நன்மையில்லை; மடவனாகிப் போகிறான்! வேண்டிநின்றாருக்கும் நன்மையில்லை!

"குறமகள் அவள்எம் குலமகள் அவளொடும்
அறுமுக ஒருவ!நின் அடிஇணை தொழுதேம்
துறைமிசை நினதுஇரு திருவடி தொடுநர்
பெறுகநன் மணம்; விடு பிழைமணம் எனவே!.."

அழகனைப் பாடி, கற்புக்கரசியையும் பாடி, அழகனிடம் வேண்டியதை அவளிடமும் வேண்டும் முறையினதாய் அமைத்து, இன்பமாய் நீடுழி
வாழ சேரனை வாழ்த்தி குரவையை நிறைவு செய்தனர் மகளிர்!

"பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால்
மாமலை வெற்பன் மணஅணி வேண்டுதுமே!

" ......ஆனாது
உண்டு மகிழ்ந்துஆனா வைகலும் வாழியர்
வில்எ ழுதிய இமயத்தொடு
கொல்லி ஆண்ட குடவர் கோவே."

சிலம்பு மடல் - 29 குட்டுவனும் சாத்தனும்!
வஞ்சி: காட்சிக்காதை:


இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன், வஞ்சியைத் தலைநகராய்க் கொண்ட சேரநாட்டு அரசன் சேரன் செங்குட்டுவன்!

அரசமாளிகையில் அரசி வேண்மாளுடனும் தம்பி இளங்கோ வுடனும் அமர்ந்திருக்கையிலே மலைவளம் காண ஆவல் கொள்கிறான்
குட்டுவன்.

"...விளங்குஇல வந்தி வெள்ளி மாடத்து
இளங்கோ வேண்மாள் உடன்இருந்து அருளித்
துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும்
மஞ்சுசூழ் சோலை மலைகாண் குவம்எனப்...."

நீலநிறப் பெருமலையின் குறுக்கிட்டோடிய பேரியாறு திருமாலின்(நெடியோன்) கழுத்தின் ஆரமாய்க் கிடக்க, மலையிலே குரவையாடுவோர்
கூட்டிய ஒலி ஒரு புறம், கொடிச்சியர் பாடிய பாடல் ஒலி ஒரு புறம்,
வேலன் ஆடிய வெறியாட்டத்தின் ஒலி ஒரு புறம்,
கூலம் உண்ண வந்த பறவைகளை மகளிர் ஓட்டும் ஒலி ஒரு புறம், தேன் கூட்டைப் பிரித்துத் தேனெடுத்த குறவர் ஒலி ஒரு புறம்,
அருவியில் இருந்து கொட்டும் தண் நீரின் பறையொலி ஒரு புறம், புலியுடன் யானைப் பொருதிப் பிளிரும் ஒலி ஒரு புறம்;

மேலும் இது போன்ற பல்வேறு ஒலிகளால் மலைப்புறம் மனத்தை ஆட்கொள்ள பேரிஆறு ஒதுக்கிக் குவித்த நுண்மணல் பரப்பிலே தன்
துணைகளோடு குட்டுவன் ஒருங்கிருக்கிறான்.

"நெடியோன் மார்பில் ஆரம்போன்று
பெருமலை விலங்கிய பேரியாற்று அடைகரை
இடுமணல் எக்கர் இயைந்துஒருங்கு இருப்பக்
குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும்
தினைக்குறு வள்ளையும், புனத்துஎழு விளியும்
நறவுக்கண் உடைத்த குறவர் ஓதையும்
பறைஇசை அருவிப் பயம்கெழும் ஓதையும்
...............
இயங்குபடை அரவமோடு யாங்கணும் ஒலிக்க......"

மலைக்கு வந்த மன்னனைக் கண்டு போற்ற மலைக்குறவர்கள் மலைவளம் யாவையும் கொண்டுவந்தனரோ என்று எண்ணும்படியாக,
யானையின் தந்தம், மான்மயிர்ச் சாமரம், தேன்,
சந்தனக்கட்டை, சிந்துரக்கட்டை, நீலக்கற்கள், கத்தூரி, மா, பலா, வாழை, கரும்பு, பூங்கொடிகள் செடிகள், பாக்கு, சிங்க புலி கரடி குரங்கு
மான் பூனை ஆட்டுக் குட்டிகள், மாடு யானைக் கன்றுகள் கீரிப்பிள்ளை, கிளி மற்றும் இன்ன பிறவற்றை சுமந்து வந்து காணிக்கையாக
குட்டுவன் முன் இட்டு வணங்கினர்!

வளமுடன் வாழ்கிறோம் நாங்கள், உன் அரச நீதி வாழ, வாழ்க நீ பன்னூறாயிரம் ஆண்டுகள் என்று போற்றி உரைத்தனர் அவனிடம்
வியப்புடன்,
"வண்ணம் குழைந்து
வாடி வதங்கி
இடமுலை இழந்தவளாய்
ஆறாத்துயருடன்
அழுகை வற்றிப்போய்
வந்தபெண்ணொருத்தி
வேங்கை மர நிழலில் நின்றாள்!
நீத்தனள் தம்முயிரை!
எந்நாட்டினளோ யார்மகளோஅறியோம்!
நிந்நாட்டில் யாம் கண்டதில்லை; வியப்பு! என்று.."

"கான வேங்கைக் கீழ்ஓர் காரிகை
தான்முலை இழந்து தனித்துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி
வானவர் போற்ற வானகம் பெற்றனள்.
எந்நாட் டாள்கொல் ? யார்மகள் கொல்லோ ?
நின்னாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்;..."

தண்டமிழ் ஆசான் சாத்தனார் சேரன் அருகிருந்தார்; அவர் நோக்கினார் மன்னன்பால்!

'தன் காற்சிலம்பை விற்க வந்த கணவனைப் பாண்டியன் தீர ஆராயத்தவறினன்; கள்வனென்று காவலர் தலைகொய்தனர்!

கோவலன் மனைவி கண்ணகி தன் காதலும் வாழ்வும் தீய்ந்து போக, கோவலன் கள்வனல்ல என்ற நீதியை சிலம்புடைத்து நிறுவினாள்
பாண்டியன் முன்.

மானம்காக்க மன்னன் நெடுஞ்செழியன் மாண்டான்; மாண்ட மன்னனின் உயிரைத் தேடிக் கொண்டு சென்றது போல் கோப்பெருந்தேவியின்
உயிரும் சென்றது!

கண்ணகி சூளுரைத்தாள் மதுரையை எரிப்பேன் என்றும்! மதுரையையும் எரித்தெறிந்தாள் மங்காச் சினத்துடன்.

பாண்டிய நாட்டின் கொடுங்கோலை எடுத்துரைக்க தன் சோழ நாடு திரும்பாமல், உன் சேரநாட்டுச் செங்கோலிடம் முறையிட வந்தாள்
போல வந்து, வானகம் சென்று விட்டாள் மாதரசி!' என்று
சாத்தனார் சேரனிடம் கண்ணகி பற்றிக் கூற,

"மண்களி நெடுவேல் மன்னவன் கண்டு
கண்களி மயக்கத்துக் காதலோடு இருந்த
தண்தமிழ் ஆசான் சாத்தன்இ•து உரைக்கும்...

கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்று எனக் காட்டி இறைக்குஉரைப் பனள்போல்
தன்நாட்டு ஆங்கண் தனிமையிற் செல்லாள்
நின்நாட்டு அகவயின் அடைந்தனள் நங்கை என்று....."

சேரன் வியப்புற்றான்! வருந்தினான் பாண்டியன் மறைவு கேட்டு!

செங்கோல் தவறிய சேதி எம்போல் அரசர்க்கு எட்டும் முன் தம்முயிர்ப்பிரிந்த சேதியை சென்றடையச் செய்து உயர்ந்து விட்டான்
பாண்டியன்!

கோவலத்தீர்ப்பால் வளைந்த செங்கோலை தன்னுயிர் நீக்கி நிமிர்த்தி விட்டான் பாண்டியன்! என்று கூறி, சேரன் பாண்டியனைப் போற்றிய
மனிதநேயம் (அரசநேயம்?) நெஞ்சில் குறிக்கத் தக்கதாகும்! மாற்றான் தோட்ட மல்லிகையாயினும், மணம் பெற்றதல்லவா?

நல்லவனை மதிப்பது நல்லோர் பண்பு! திறமையை மதிப்பது திறமையானோர் பண்பு.

"எம்மோர் அன்ன வேந்தர்க்கு உற்ற
செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்குஎன
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது...."

மாற்றரசனைப் போற்றியது மட்டுமல்ல, நாட்டிலே மழை பொய்ப்பின் அரசனுக்கு அச்சம், ஏதாகின் ஒன்றினால் மக்கள் துயருறின்
அரசனுக்கு அச்சம்! குடிகளைக் காக்கும் தொழில் ஆன அரச தொழில் துன்பத்தைத் தருவதேயல்லாமல் போற்றத்தக்கதன்று என்ற ஒரு
தத்துவ உண்மையை உணர்த்துகிறான் சேரன்.

"மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்
பிழைஉயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்
குடிபுர உண்டும் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதகவு இல்என...."

அரசன் என்ற ஆணவம் இல்லாமல், அரசன் என்பது ஒரு தொழில் என்ற அடிப்படை உண்மையைப் பேசும் இந்த சேரனின் நேர்மையான
இந்த சொல் தமிழனின் நாகரிகம் சொல்கிறது! பண்பாடு பகர்கிறது.

ஒரே காலகட்டத்தில் வேற்று நாடுகளை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனும், சேரன் செங்குட்டுவனும் நேர்மையின் திறன் சொல்வது
தமிழர்களின் சங்ககால நற்பண்பாட்டிற்குச் சான்றுபகர்வதாகும்!

இன்று சந்திரபாபு நாயுடு, "நான் இந்த மாநிலத்தின் தலைமை அலுவலன்" என்று சொன்னால் புளகாங்கிதம் அடையும் நாம், நம்மைத்
தேட மறுக்கிறோம்!

பதினெட்டு நூறு ஆண்டுகட்கும் முன்னாலேயே "நான் அரசன் என்ற தொழிலாளி" என்று சொன்ன சேரனை மறந்து விடல் ஆகாது!

சங்ககால அரசப் பண்பாட்டைம் கடமையுணர்வையும் அறிந்து கொள்ளல் அவசியம்!

பனையளவு பண்பாடு தினையளவாய் ஆகிப்போய், பயனற்ற சமுதாயமாய் ஆகிவிடுமோ என்ற அய்யத்தில் இன்றையத் தமிழ்ச்
சமுதாயம்!

சிறப்புற்ற வாழ்வில் இருந்து சிதைவுற்றுப் போகுமோ இந்த தமிழ்க் குடி? சிரிப்பாகிப் போவரோ தமிழர்? என்ற அய்யம்
தோன்றாமலில்லை!

மதுரையம்பதியில் நடந்தவை கேட்டு வியப்புற்ற சேரனுக்கு சிறு குழப்பம்!;

பாண்டியன் உயிரை தேடத் தன்னுயிரை அனுப்பிய கோப்பெருந்தேவி சிறந்தவளா ?

காதலனின் மானம் காக்க கடமையேற்று, பிழையாய்ப்போன நீதியை மீட்டு, மடமையில் திளைத்த பாண்டிய நாட்டை தீய்த்து
பின்னர் மாய்ந்த கண்ணகி சிறந்தவளா ?

சேரன் தன் பட்டத்தரசி வேண்மாதேவியை நோக்கினன்! சேரமாதேவியிடம் தெளிவு பெறல் கருதி, இருவரில் வியக்கத்தக்க
சிறப்புடையவர் யார் என்று வினவினன்!

பெண்ணரசிகளில் பேரரசி யாரென்று சேரப் பாரரசியிடம் கேட்டான்!

தன்கணவன் உயிர்துறந்ததும் பொறுக்க முடியாது செல் எனச் சொன்னதும் சென்ற கோப்பெருந்தேவியின் உயிர் உயர்ந்தது! அவள்
உயர்ந்தவள்! பெருஞ்சிறப்பு பெறட்டும் பாண்டிமாதேவி!

ஆயினும், தன் கணவனின் மானத்தைக் காத்து, மன்னவனிடம் நியாயத்தைப் போராடிவென்று, நாட்டில் மடமை அழியப் போர்தொடுத்து,
காதல், வீரம், மானம் போற்றி, நம் நாடு தேடிவந்து அழியாப் புகழ் கொண்ட அந்தப் பெண்ணரசி கண்ணகி வழிபடத்தக்கவளாவாள்;
என்றனள் வேண்மாள்!

சேரப்பெண் சோழப்பெண்ணைப் பாண்டிப்பெண்ணினும் வழிபடத் தக்கவளாய்த் தன் கணவனுக்குத் தெளிவுபடுத்துகிறாள்!

"காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெருந்திரு உறுக வானகத்து
அத்திறம் நிற்கநம் அகல்நாடு அடைந்தஇப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்என,..."

தன்னரசி சொன்ன கருத்தை விரும்பி ஏற்ற சேரன், அமைச்சர் பெருமக்களைப் பார்த்தனன். அவர்கள் கருத்தும் அதாகவிருக்க,
கற்புக்கரசிக்குக் கற்சிலை வடிக்கவேணும்! பொதியைக்கல் அல்லது இமயக்கல் பொருத்தமாய் இருக்கும்! பொதியைக்கல்லாயின்
பொன்னியிலும், இமயக்கல்லாயின் கங்கையிலும் நீராட்டிப் படிமம் (சிலை) செய்ய வேண்டும், என்று அமைச்சர்கள் அறிவுறுத்தினர்!

பக்கம் இருக்கும் பொதியை எடுத்தல் நீள்வாள் ஏந்திய மறக்குடிக்குப் பெருமை அன்று ஆதலின் இமயம் சென்று கல் கொணர்தலே
கண்ணகிக்கும் சிறப்பு; எமக்கும் சிறப்பு! என்று முடிவெடுத்தனன் மன்னன்!

"மாலைவெண்குடை மன்னவன் விரும்பி
நூல்அறி புலவரை நோக்க ஆங்குஅவர்
ஒற்கா மரபின் பொதியில் அன்றியும்
வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்துக்
கல்கால் கொள்ளினும் கடவுள் ஆகும்
கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும்
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்துஎன,
பொதியில் குன்றத்துக் கல்லால் கொண்டு
முதுநீர்க் காவிரி முன்துறைப் படுத்தல்
மறத்தகை நெடுவாள் எம்குடிப் பிறந்தோர்க்குச்
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று:..."

மாபத்தினிக் கடவுள் கண்ணகிக்குப் படிமம் செய்ய யான் வேண்டுவதெல்லாம் இமமலைக்கல்லொன்று. அதைப் பெறுவேன்! எதிர்ப்பவர்
மறுப்பவர் யாராயினும் வெல்வேன்! இமயக்கல்லைக் கொணர்வேன்! என்று உரைத்தான் வஞ்சிக்கோன்!

அமைச்சன் வில்லவன் கோதை எழுந்தான், 'வாழ்க நீ! வெல்க நீ!' என்றான்; போற்றினான்!.

மேலும், சோழனையும், பாண்டியனையும் முன்னாள் வென்றவன் நீ!
கொங்கனர், கங்கர், கலிங்கர், கொடிய கருநாடர், வங்காளர் மற்றும் பல்வேல் கட்டியர் ஆகியோர், வட ஆரிய மன்னர்களோடு கைகூடி
வந்து உன்தமிழ்ப் படையோடு போரிற்றுத் தோற்றோடியது என் கண்களை விட்டு இன்னும் அகலவில்லை!

பன்னூறாயிரம் ஆண்டுக்கும் முன்னரே கருநாடர்களை "கொடுங்கருநாடர்" என்று இளங்கோவடிகள் குறிப்பது கவனிக்கத்தக்கது.

கங்கை ஆற்றங்கரையில் உன்னை எதிர்த்த ஆயிரம் ஆரிய மன்னர்களை நீ ஒருவனே கொன்று குவித்ததைப் பார்த்த கூற்றுவனும்
வியப்புற்றான்!

கடவுள் எழுத கல் வேண்டுமெனில் அதை மறுப்பார் இல்லை! எதிர்ப்பார் இல்லை! முடங்கல் அனுப்பி, கொண்டு வரலாம் என்றான்
வில்லவன் கோதை!

வில்லவன் கோதையை அடுத்து, அமைச்சன் அழும்பில் வேள் எழுந்து, வடதிசை மன்னர்களின் ஒற்றர்கள் எப்பொழுதும் நம்நாட்டைச்
சுற்றிக் கொண்டே உள்ளனர். "கல் கொணர வடதிசைப் பயணம்" என்று பறையொலித்திடு அது போதும்; அவ்வொற்றர்களே சென்று
சொல்லிவிடுவர்! என்றான்.

மன்னன் சேரனும் வடதிசைப் பயணம் சென்று கல் கொணர முடிவெடுத்து வஞ்சி மாநகரம் முழுதும் அது குறித்துப் பறையொலித்து
அறிவித்தான்!; படைகளையும் திரட்டினான்!

சிலம்பு மடல் - 30 சேரனின் சூளுரையும் போரும்!

வஞ்சி: கால்கோள்காதை, நீர்ப்படுகாதை:


மலைவளம் கண்டு, மாபத்தினிக்குப் படிகம் பண்ண கல்லெடுக்க, கங்கைதாண்ட முடிவு செய்த மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி
மீண்டு அரசவையில் வீற்றிருக்க அமைச்சர்களும் படைத்தலைவர்களும் கூடியிருக்கின்றனர்!

வடக்காண்ட மன்னர்கள் 'தமிழரசர்கள், இமயத்தில் கொடிநாட்டியது, எம்போல் திறம் வாய்ந்த அரசர்கள் இல்லாத காலத்தில்' என்று
நகையாடியதை, வடதிசையிலிருந்து வந்து அரசனைப் பார்த்துப் போன முனிவர்(தாபதர்) சேரனின் காதில் போட்டுவிட, கொதித்துப்
போயிருந்தான் குட்டுவன்!

படிகத்துக்குக் கல் எடுக்கப் பயணம் போகும் எண்ணத்தோடு, பாடம் புகட்டும் எண்ணமும் சேர்ந்து கொள்ள, "நமக்குப் பொருந்தா
வாழ்க்கை உடைய ஆரிய அரசர்களின் பழிச்சொற்கள் எம்மை மட்டுமல்ல, எம்போன்ற சோழ, பாண்டிய அரசர்களையும் பழிப்பதாகும்;
ஆதலால், வட நாட்டு மன்னர்களை வென்று அவர்கள் (கனகன் விசயன்) தலையில் வைத்து கல் கொணர்வேன்; அப்படி
இல்லையென்றால் நான் குடிகாக்கும் மன்னனல்லன்; என் குடிகளுக்குப் பழிச்சொல் வாங்கித்தந்த கொடுங்கோலன் ஆவேன்!" என்று
சூளுரைத்தான்!"

"உயர்ந்துஓங்கு வெண்குடை உரவோன் கூறும்:
இமயத் தாபதர் எமக்குஈங்கு உணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்குஅ•து
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்;

வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக்
கடவுள் எழுதஓர் கல்கொண்டு அல்லது
வறிது மீளும்என் வாய்வாள் ஆகில்,
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயம்கெழு வைப்பில்
குடிநடுக் குறூஉம் கோலேன் ஆக!...."

சேரன் சினம் கண்ட ஆசான் எழுந்து "உன்னைப் பழித்திருக்க மாட்டார்கள், சோழனையும் பாண்டியனையும் பழித்திருப்பார்கள்;
நீ சினம் கொள்ளாதே" என்று சொல்லிப் பார்த்தான்;

இதற்கிடை, அரசவை நிமித்திகன் (சோதிடன்) எழுந்து "மன்னவா! இதுதான் உனக்கு மிகநல்ல நேரம், உடனே புறப்படு! வெற்றி உனக்கே!"
என்று சாத்திரம் ஓத எழுந்த மன்னன் அமரவில்லை! ஆனையிட்டான் படைகளுக்கு!

கண்ணகியை உயர்த்திப்போற்ற, கங்கைதாண்டி இமமலைக் கல்லெடுக்கப் புறப்பட்ட மன்னனின் பயணத்தின் நோக்கம் படையெடுப்பாய்
மாறிப்போனது!

"ஆறுஇரு மதியினும் காருக வடிப்பயின்று
ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து
வெந்திறல் வேந்தே வாழ்கநின் கொற்றம்
இருநில மருங்கின் மன்னர்எல் லாம்நின்
திருமலர்த் தாமரைச் சேவடி பணியும்
முழுத்தம் ஈங்குஇது முன்னிய திசைமேல்
எழுச்சிப் பாலை ஆகஎன்று ஏத்த,....."

போருக்குப் புறப்படுமுன் படைத்தலைவர்கள் உள்ளிட்ட முக்கியமானவர்களுக்கு விருந்தளித்தான்! பனம்பூ மாலையை கழுத்தில் அணிந்து,
பூவா வஞ்சியில் (அதாவது ,மலரல்ல ஊர்ஆதலால் பூவா வஞ்சி என்றார்) பூத்த வஞ்சியை (வஞ்சிமலர்) முடியில் சூடிக்கொண்டு
நாட்டோர் வாழ்த்த இறையை வணங்கி யானைமேலமர்ந்தான்! புறப்பட்டான்!

புறப்பட்ட மன்னனுக்குத் திருவனந்தபுரத் திருமால் கோவில் சேடத்தைக் (பிரசாதம்) கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர் குடிகள்!

படைகளோடு வஞ்சி நீங்கிய மன்னன் நீலகிரிமலை சேர்ந்தனன்.
படைகளுடன் பாடிவீட்டில் தங்கியிருந்தான்!

"பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப்
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி
வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக்கு அணிந்து....

கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினன்;
குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்கஎன
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கொண்டு சிலர்நின்று ஏத்தக்

(ஆடக மாடம் = திருவனந்தபுரம்)

"ஆலும் புரவி அணித்தேர்த் தானையொடு
நீல கிரியின் நெடும்புறத்து இறுத்துஆங்கு....."

நீலகிரியில் படைகளொடு இருந்த மன்னனைப் பலர் வாழ்த்த, வாழ்த்த வந்தவர்களில் சஞ்சயன் என்பான், அரசே, 'கங்கைக்கரையாளும்
நமது நட்புக்குரிய நூற்றுவர் கன்னர், கடவுள் எழுதக் கல்லை அவர்களே கொண்டு தருவதாகக் கூறியனுப்பியுள்ளனர்' என்று கூற,
குட்டுவனோ, 'சஞ்சயா, ஒரு விருந்திலே ஆரிய அரசர்கள் கனகனும் விசயனும், என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல்,
தமிழரசர்களைப் பற்றி அறியாத புதிய அரசர்களுடன் அருந்தமிழரின் ஆற்றலைப் பழித்துப் பேசியிருக்கிறார்கள்!'. அவர்களுக்குப் பாடம்
புகட்டவே இப்படை செல்கிறது'; இதை நூற்றுவர் கன்னரிடம் கூறி கங்கையைக் கடக்க படகுகளைத் தயார் செய்யச் சொல் என்று
ஆனையிட்டான் குட்டுவன், தமிழரைப் பழித்தோரைப் பொறுக்காமல்!

"பால குமரன் மக்கள் மற்றவர்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்குஎனக்
கூற்றம் கொண்டுஇச் சேனை செல்வது;
நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி ஆங்குக்
கங்கைப் பேர்யாறு கடத்தற்கு ஆவன
வங்கப் பெருநிரை செய்க தாம்எனச்....."

நீலகிரியை விட்டு தன் படைகளொடு நீங்கிய சேரன் செங்குட்டுவன் எந்தவிதத் தடையும் இல்லாமல் கங்கையின் தென்கரைசேர்ந்து,
அங்கு நூற்றுவர் கன்னர் அளித்த ஓடங்களில் கங்கையைக் கடந்து போர்க்களம் செல்கிறான்.

அருந்தமிழர் ஆற்றலைப் பார்த்துவிடுவோமே என்று உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்திரன், சிவேதன்
என்ற வடதிசை வேந்தர்கள் கனக விசயருக்குத் துணையாக சேரனை எதிர்த்தனர்.

"உத்தரன், விசித்திரன், உருத்திரன்,பைரவன்,
சித்திரன்,சிங்கன்,தனுத்திரன்,சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னர் எல்லாம்
தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாம்எனக்
கலந்த கேண்மையில் கனக விசயர்
நிலம்திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர...."

வேட்டைக்குப் போன சிங்கம் பெரும் யானைக் கூட்டத்தைக் கண்டு ஊக்கத்துடன் பாய்வதைப் போன்று போரிட்ட சேரன் வெட்டி சாய்த்த
பகைவரின் உடல்கள் கொழுப்பு நிறைந்த இரத்த ஆற்றில் மிதந்தோட, எருமை ஏறி வரும் எமன் ஓர் பகலில் உயிர்க் கூட்டம்
அனைத்தையும் உண்ணுவதைப் போலக் குட்டுவன் கொன்று சாய்ப்பதை ஆரிய அரசர்கள் நன்கு உணர்ந்தனர்!

யானைகளை எருதாகப் பூட்டி, வாளைத் தார்கோலாகக் கொண்டு நெற் போரில் கடா விட்டதைப் போன்று, பகை வீரர்களை உழவாடினான்
சேரன்! வடவாரிய அரசர்கள் தோற்றனர்!

வாய்ப்பேச்சாலே வீரம் காட்டி வளமிகு தமிழரை இகழ்ந்துரைத்த கனகனும் விசயனும் அய்ம்பத்திரு தேர் வீரர்களுடன் சிறைப்பட்டனர்!

"எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை
ஒருபகல் எல்லையின் உண்ணும் என்பது
ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய...."

"கச்சையானை க் காவலர் நடுங்கக்
கோட்டுமாப் பூட்டி, வாள்கோல் ஆக
ஆள்அழி வாங்கி அதரி திரித்த
வாள்ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தித்........."

அமைச்சனும் படைத்தலைவனுமான வில்லவன் கோதையோடு, வெற்றிவாகை சூடிய சேரன், போர் முடித்த மறவர்கள் பலரை ஏவி
இமயமலையிலே கண்ணகிக்கு சிலைவடிக்கக் கல்லைப் பெயர்த்து எடுத்துக் கொண்டான்.

"வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த
பல்வேல் தாளைப் படைபல ஏவிப்
பொன்கோட்டு இமயத்துப் பொருஅறு பத்தினிக்
கல்கால் கொண்டனன் காவலன் ஆங்குஎன்."

உலகில் பெரும்போர்கள் 18 ஆண்டிலோ, 18 திங்களிலோ, 18 நாளிலோ முடிந்திருக்க, 18 நாழிகையிலேயே தென்தமிழ் ஆற்றல் அறியா
கனகன் விசயன் என்ற இரு ஆரிய மன்னர்களுடன் நிகழ்ந்த போரை வென்றான் சேரன்! (18 ஆண்டுகள் தேவர்-அரசர் போர், 18 திங்கள்
இராம-இராவணப் போர் 18 நாளில் பாண்டவ-துரியோதணர் போர் என்று விளக்கம் கிடக்கிறது)

வென்று முடித்ததும் கல் பெயர்த்து அக்கல்லை கனக விசயரின் தலைகள் சுமக்கும் படி செய்து, கங்கையிலே நீராட்டி, படைகளுடன்
கங்கையின் தென்கரை சேர்கிறான் சேரன் நூற்றுவர் கன்னர் அமைத்துக் கொடுத்த பாடிவீட்டில்!

"வடபேர் இமயத்து வான்தரு சிறப்பின்
கடவுள் பத்தினிக் கல்கால் கொண்டபின்
சினவேல் முன்பின் செருவெங் கோலத்துக்
கனக விசயர்தம் கதிர்முடி ஏற்றிச்

செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டிஎன்று
யாண்டும் மதியும் நாளும் கடிகையும்
ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள,

வருபெறந் தானை மறக்கள மருங்கின்
ஒருபகல் எல்லை உயிர்த்தொகை உண்ட
செங்குட் டுவன்தன் சினவேல் தானையொடு
கங்கைப் பேர்யாற்றுக் கரைஅகம் புகுந்து
பால்படு மரபிற் பத்தினிக் கடவுளை
நூல்திறன் மாக்களின் நீர்ப்படை செய்து......."

ஆங்கு தமிழரின் வெற்றிக்குப் போரிட்டு மாண்ட மாவீரர்களுக்கு வணக்கம் செய்தான்; காயம்பட்டோருக்கும் மற்றும் அனைவருக்கும்
சிறப்பு செய்தான் சேரன்!

மாவீரர்களை வணங்குதல் தமிழர் மாண்பு! தமிழர் நிலத்திலும் மனத்திலும் மாவீரர்கள் என்றும் வாழ்வர்!

சிலம்பு மடல் - 31 கோவல கண்ணகி சுற்றங்களின் துயர்!

வஞ்சி: நீர்ப்படைக்காதை:

பெரும் போரிலே எதிர்த்தவர்களை அழித்து, வெற்றிக்கு உடன் நின்ற தன் படைகளுக்கு சிறப்பு செய்து, செம்மாந்த சிங்கமாய்
வீற்றிருந்தான் சேரன்!

கோவலனை மதுரைப் புறஞ்சேரியில் பார்த்து உரையாடி, பின்னர் புகார் சென்று கோவல கண்ணகியர் பற்றி அவர் உற்றார் உறவினரிடம்
கூறிவிட்டு, கங்கை சென்று நீராடி வரச் சென்ற மாடலன் என்ற மறையோன், கங்கைக் கரையினில் சேரனை அவன் பாசறையிலே
பார்த்து வணங்கினான்; வணங்கிய தலையை நிமிர்த்திக் கொண்டே, 'மாதவியின் கானல் வரிப்பாட்டு' வடமன்னர்களின் முடியையும்
வென்றது' என மாடலன் சொல்ல, மன்னன் வியந்து நகைக்க, மாடலன் தான் மதுரையிலும் புகாரிலும் கண்டன கேட்டவற்றையெல்லாம்
சேரனிடம் எடுத்துச் சொன்னான்.

"மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்து
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்தாய் வாழி காவேரி!
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!..."

(கானல் வரி)

கோவலன் காவிரியைப் போற்றிப் பாடியதில் அய்யம் கொண்ட மாதவி, சினமுற்றுக் கோவலனை அய்யம் கொள்ளச் செய்யப் பாடிய
அந்த கானல்வரிப் பாட்டு, அவர்கள் உறவை முறித்து, கண்ணகியை மீண்டும் கூட வைத்து, பின்னர் கோவலனைக் கள்வனாக பழியேற்றி,
அவனையே பலி கொண்டு, மதுரை அரசனைப் பலி கொண்டு, அவன் மாதரசியைப் பலி கொண்டு, அந்நாட்டையே பலி கொண்டு, நாடுகள்
தாண்டி சேரத்தில் கண்ணகியையும் காவு கொண்டு, சேர அரசனைக் கொண்டு வடவாரியரையும் அழித்து, அவர்களை கூனிக் குறுகிப்
போகச் செய்த வரலாற்றை நினைவூட்டுமாறு சேரனிடம் மாடலன் கூறினான்;

"வாழ்க எங்கோ! மாதவி மடந்தை
கானல் பாணி, கனக விசயர்தம்
முடித்தலை நெரித்தது;......"

மேலும், கண்ணகி கோவலர் துயரம் கேட்டு அவர்களின் உற்றார் உறவினரின் நிலை கூறினான்!

நெஞ்சம் பதை பதைக்கிறது!

காவுந்தி அடிகள் அடைக்கலமாய்த் தந்த கண்ணகி கோவலரைக் காக்கத் தவறினேனே!, என்று கடமை தவறியதாய் வெறுப்புற்று இடைச்சி
மாதரி நடு யாமத்தில் தீக்குளித்து உயிர் நீத்தாள்!

பாண்டியன் தவறை அறிந்து சினமுற்ற காவுந்தி அய்யை அவன் உயிர் நீத்ததால் சினம் தணிந்தாலும், கோவல கண்ணகியரை
என்னோடு தருவித்து தீப்பயன் விளைத்ததுவோ? என்று எண்ணி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார்!

"அடைக்கலம் இழந்தேன் இடைக்குல மாக்காள்,
குடையும் கோலும் பிழைத்த வோஎன
இடை இருள் யாமத்து எரிஅகம் புக்கதும்...."

"தவம்தரு சிறப்பின் கவுந்தி சீற்றம்
....
என்னோடு இவர்வினை உருத்த தோஎன
உண்ணா நோன்போடு உயிர்பதிப் பெயர்த்ததும்...."

கோவலன் மாய்ந்ததை சோழநாடு சென்று மாடலன் உரைக்க, அவன் தந்தை பெருஞ்செல்வச் சீமான் மாசாத்துவான் தன்
செல்வத்தையெல்லாம் தானமாக அளித்துவிட்டு துறவறம் பூண்டான்!

கோவலனின் தாயார், மாசாத்துவானின் மனைவி, மைந்தன் மருமகள் துயர் அறிந்து, பிரிவால் ஏங்கி ஏங்கி இன்னுயிரை விட்டார்!

மகள் கண்ணகி மருமான் கோவலன் மரணம் கண்ணகியின் தந்தை மாநாய்கனையும் முனியாய் ஆக்கியது! கோவலன் தாயார் ஏங்கி
ஏங்கிச் சாக, கண்ணகியின் தாயார் சேதிகேட்ட மாத்திரம் மாண்டு போனார்!

"கோவலன் தாதை கொடுந்துயர் எய்தி
மாபெருந் தானமா வான்பொருள் ஈத்துஆங்கு
.....
துறந்தோர் தம்முன் துறவி எய்தவும்,
துறந்தோன் மனைவி மகன்துயர் பொறாஅள்
இறந்துயிர் எய்தி இரங்கிமெய் விடவும்..."

"கண்ணகி தாதை கடவுளர் கோலத்து,
அண்ணல்அம் பெருந்தவத்து ஆசீ வகர்முன்
புண்ணிய தானம் புரிந்துஅறம் கொள்ளவும்
தானம் புரிந்தோன் தன்மனைக் கிழத்தி
நாள்விடூஉம் நல்உயிர் நீத்துமெய் விடவும்."

மாதவிக்கு சேதி கிடைத்ததும், தன் அன்னையிடம் தனக்கும் கோவலனுக்கும் பிறந்த குலக்கொழுந்து மணிமேகலையை குலத்தொழில்
புரி கணிகையாய் ஆக்காதே என்று கூறிவிட்டு, தான் தன் கூந்தலைக் களைந்துவிட்டு புத்த முனிமுன் துறவறம் பூண்டாள்!

"மற்றது கேட்டு மாதவி மடந்தை
நற்றாய் தனக்கு நல்திறம் படர்கேன்;
மணிமே கலையை வான்துயர் உறுக்கும்
கணிகையர்க் கோலம் காணாது ஒழிகஎன
கோதைத் தாமம் குழலொடு களைந்து
போதித்தானம் புரிந்து அறம் கொள்ளவும்..."

அதோடு அச்சேதி கேட்டு வேறு பலரும் புகாரில் துன்புற்றச் சேதியினையும் சொன்ன மாடலனை, சேரன் பாண்டியநாட்டின் நிலை பற்றி
கேட்க, பாண்டியநாட்டின் நிலையுரைத்தான் மாடலன்! சோழ நாட்டையும் பற்றியும் அறிந்து கொள்கிறான் சேரன்!

மதுரை மூதூர் தீயினால் வெந்து வீண்போன நிலையில், கொற்கையை ஆண்ட வெற்றிவேற்செழியன் என்ற அரசன், தெய்வமாய்ப் போன
திருமாபத்தினியின் சீற்றம் குறைப்பதாய்க் கருதி, பொற்கொல்லன் ஒருவனால் ஏற்பட்ட பெருந்துயர் என்பதால், ஒரு பகற்பொழுதிலேயே
ஓராயிரம் பொற்கொல்லரை உயிர்ப் பலி கொடுத்திருக்கிறான்! ஓராயிரவரைப் பலிகொடுத்த அவன், மதுரையை, பாண்டியன்
நெடுஞ்செழியனுக்குப் பின்னர் ஆட்சி செய்திருக்கிறான்!

"கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன்
பொன்தொழில் கொல்லர் ஈரைஞ் ஞூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி,
உரைசெல வெறுத்த மதுரை மூதூர்
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல் காலைத்
தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின்
மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின்,...."

எண்ணிப் பார்க்கவே குலை நடுங்கும் காட்டுமிராண்டிச் செயலை வெற்றிவேல் செழியன் செய்திருக்கிறான்! கொல்லக் கயவன்
கோவலனை 'மாயக்கள்ளன்', 'மந்திரக்கள்ளன்' என்று பொய் கூற, மந்திரம் மயங்கிய காவலரில் கல்லாக் களிமகன் ஒருவன் கொடுவாள்
வீசிக் கோவலனைக் கொன்றதே, மடமை பூத்துக் குலுங்கிய மதுரையின் மூடநம்பிக்கையின் மொத்த விளக்கம்!

அதனால் ஏற்பட்ட தீங்கு மறைய இன்னும் ஒரு மூடச் செயலை செய்தான் வெற்றிவேல் செழியன் ஆயிரவரைக் கொன்று!

இது ஏதோ 1800 ஆண்டுகளுக்கு முன்னாள் பழமையில் நிகழ்ந்த பண்பாடற்ற செயல் மட்டுமல்ல!

மூடநம்பிக்கை மற்றும் முட்டாள் தொல்லைகள்!

சாதி, சமயம், கடவுள் என்ற பெயரால் இந்நாட்டை ஆட்சி செய்யும் அயோக்கிய செல்வங்கள்!

ஆண்டுகள் ஓடினாலும் அறிவேறாத, ஆத்திரமும் அகங்காரமும் நிறைந்த ஆணவ மலங்களின் அழிவுக் கொள்கைகளால் நிகழும்
தீவினைகள்!

இந்த நாட்டில் அறிவு ஆட்சி செய்கிறது அல்லது செய்யும் என்று நம்பும் நன்மானிடர், '1800 ஆண்டுகட்கு முன்னாள்' பொற்கொல்லன்
ஒருவனால் ஏற்பட்ட தீங்கொழிய 1000 பொற் கொல்லரைக் கொன்று போட்ட வெற்றிவேல் செழியனுக்கும், கி.பி 1984ல் இந்திரா காந்தி
அம்மையார் சீக்கியன் ஒருவனால் கொல்லப் பட்டதற்குப் பழிதீர்க்க 3000 சீக்கியர்களைக் கொன்று போட்ட, இந்நாள் அரசியல் மற்றும்
சமய வாதிகளுக்கும் என்ன வேறுபாடு கூறமுடியும் ?

காலங்களே ஓடி யிருக்கின்றன! காட்சிகள் மாறவில்லை!
படிப்பு வந்திருக்கிறது! பண்பாடு மட்டும் இல்லை!

ஆண்டுக்கேற்ற அறிவு வளர்ச்சி இன்றி, அழிவுக்குகந்த அறிவொடு வாழ நினைக்கும் அடிமாட்டுக் கூட்டமாய் இந்த மண்ணின் மாந்தர்
பலர்!

பன்னூறாண்டுகளாக எந்தவித மாற்றமும் இல்லாத முடச் சமூகமாய்க் கண்ணுக்குத் தெரிகிறது!

வஞ்சியை விட்டு நீங்கி முப்பத்திரண்டு திங்களில் வடநாட்டுப் படையெடுப்பை வெற்றியாய் ஆக்கிவிட்டு வஞ்சி திரும்பப் புறப்பட்ட
சேரன், தனக்கு எல்லா சேதிகளையும் கூறிய மாடலன் என்ற மறையோனுக்கு தனது நிறையான அய்ம்பது துலாம் பொன் தானமாக
வழங்கினான்!

மறைசெய்வோருக்கு நிறை நிறையாய் பொருள் கிடைப்பதுவும் சமுதாயத்தில் நாம் காணும் நிகழ்வு. ஆயிரமாயிரமாய் செய்தாலும் அந்த
மறையால் மண்ணுக்கு வளம் சேர்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை என்பதே நாம் கண்டுகொண்டிருக்கிற சமுதாய நிகழ்வுகள்.

தன் நாடு திரும்புகிறான் சேரன்! கணவனைப் பிரிந்து 32 மாதங்கள் துயரத்துடன் காத்திருந்த வேண்மாளையும், நாட்டுக் குடிகளையும்
சேர!

சிலம்பு மடல் - 32 கண்ணகி கோயில்!

வஞ்சி: நடுகல் காதை, வாழ்த்துக் காதை;

முப்பத்திரண்டு திங்கள்கள் வீட்டையும் நாட்டையும் பிரிந்து பெரும்போர் செய்து வெற்றியோடும், சிலை வடிக்க கல்லொடும் வந்த
சேரப்படையினரில், போர்க்களத்திலிருந்து வாராதவர் எத்தனை பேரோ ?

மீண்டு வந்தவர் வீட்டில் எல்லாம் மகிழ்ச்சி!

மாண்டு போனவர் வீட்டில் எல்லாம் துயரம்தான் ஆஇருந்திருக்கும்; இதோ வந்துவிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பிலேயே பலருக்கு சில
நாட்கள் கழிந்திருக்கக் கூடும்! பின்னர் புரிந்திருக்கக் கூடும்.

மீண்டு வந்த ஆடவனை அணைத்துக் கொண்ட அவன் காதலியின் கொங்கைகள், அவன் விழுப்புண்களுக்கு ஒத்தடம் கொடுக்க
அவ்வாடவனுக்கு அதை விட வேறு மருந்து என்ன வேண்டும்? இணைந்த காதலர்கள் இஆன்பத்தைக் கொண்டனர்! கொடுத்தனர்!

"வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்தர்
யானை வெண்கோடு அழுத்திய மார்பும்
நீள்வேல் கிழித்த நெடும்புண் ஆகமும்
எய்கணை கிழித்த பகட்டுஎழில் அகலமும்
வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பகமும்
மைம்மலர் உண்கண் மடந்தையர் அடங்காக்
கொம்மை வரிமுலை வெம்மை வேதுஉறீஆ...."

வஞ்சி திரும்பும் வழியில், தான் அடக்கிப் பிடித்து வந்த கனகனையும் விசயனையும் சோழனுக்கும் பாண்டியனுக்கும் கொண்டு காட்டச்
சொல்லியிருந்தான் நீலன் என்பானிடம் சேரன்!

அரண்மனையும், நாடும் மகிழ்ச்சியில் களித்திருக்க, அரசவையிலே மன்னன் சேரன் செங்குட்டுவன்! அவன் முன் நீலன் என்பான்!
அவனுடன் வந்தவன் மறையோன் மாடலன்.

சேரனின் வெற்றியை, கனக விசயர்களை இழுத்துக் கொண்டு சோழனிடமும் பாண்டியனிடமும், நீலன் சென்று கூற, அப்போது 'எதிர்த்து
நின்று போராட வலுவில்லாமல், வாளையும் வெண்கொற்றக் குடையையும் போட்டுவிட்டு சாதலுக்கு அஞ்சி தவக்கோலம் கொண்டு
உயிர்தப்பி ஓடிய இஆந்த ஆரியர்களைச் சிறைபிடித்து வந்தது சேரனின் பெரிய வீரமா?' இஆல்லை என்றான் சோழன்! நான் கேட்டது
இல்லை; புதிது எனக்கு என்றான் பாண்டியன்! எள்ளி நகையாடினர் இருவரும்!

சேரனுக்கு சினம் ஏற்பட்டிருக்கலாம்! ஆனால் தமிழர்கள் என்று பார்க்கும்போது, சேரனுக்கும், சோழனுக்கும், பாண்டியனுக்கும், வடநாடும்
அதன் ஆரிய அரசர்களும் ஒரு துரும்பாகவே இருந்து வந்திருக்கின்றனர் என்ற சேதியைத்தான் தமிழர்க்கு சிலம்பு சொல்கிறது.

தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டவர்க்கும் தீங்கு ஏற்பட்டபோது சேர சோழ பாண்டியர்கள் பொறுத்துக் கொண்டிருக்கவில்லை! இந்நாளில்
தமிழர் என்று சொல்லிக்கொள்ளவே அய்யம் கொண்ட தமிழர் போல் அந்நாள் தமிழர் இஆல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

"அமரகத்து உடைந்த ஆரிய மன்னரொடு
தமரிற் சென்று தகையடி வணங்க,
நீள்அமர் அழுவத்து நெடும்பேர் ஆண்மையொடு
வாளும் குடையும் மறக்களத்து ஒழித்துக்
கொல்லாக் கோலத்து உயிர்உய்ந் தோரை
வெல்போர்க் கோடல் வெற்றம் அன்றுஎனத்
தலைத்தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன்....

அமர்க்களம் அரசனது ஆகத் துறந்து
தவப்பெருங் கோலம் கொண்டோர் தம்மேல்
கொதிஅழல் சீற்றம் கொண்டோட் கொற்றம்
புதுவது என்றனன் போர்வேல் செழியன்;என்று
ஏனை மன்னர் ஆருவரும் கூறிய..."

இதை நீலன் சேரனிடம் சொல்ல, சேரன் சினம் கொண்டான்! சோழ பாண்டியர்கள்பால் வெறுப்புற்றான்! வெறுப்பு போராக ஆகிடுமோ என்று
அய்யுற்று, சினம் கொண்ட சேரன் சினம் தவிர்க்க, ஆட்சிக்கு வந்து அய்ம்பது ஆண்டுகள் ஆன சேரனே, மறக்கள வேள்வியிலேயே
ஆண்டுகளைக் கழித்த சேரனே, அறக்களவேள்வியினைச் செய்வாயாக! சோழ பாண்டியர்கள் மேல் சினங்கொள்ளாதே! சினந்து மீண்டும்
படையெடுக்காதே! வேண்டாம் விட்டுவிடு, என்று பலவாறு எடுத்துரைத்தான் மாடலன்.

"வையம் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந்து ஆரட்டி சென்றதன் பின்னும்
அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை!..."

அறிவுரைகள் பல கேட்ட மன்னன் சினம் தவிர்த்து அறவேள்விகள் செய்தான்! சிறையில் இருந்த ஆரிய அரசர்களை விடுவித்தான்!
அவர்களுக்குப் பரிவுடன் ஆவன செய்தான் வில்லவன் கோதை கொண்டு! சிறையில் இருந்த வேறுபல கைதிகளையும் விடுவித்தான்,
கண்ணகிக்கு கோயில் கண்ட விழாவினிலே!

இந்நாளிலும், சில முக்கிய விழாக்களின்போது சிறைக்கைதிகள் விடுவிக்கப் படுவதைப்போலே!

சிற்றரசர்கள் கப்பம் கட்ட வேண்டாம் என்று அறிவித்தான், அமைச்சர் அழும்பில் வேள் கொண்டு!

இக்காப்பியத்தில் சோழநாட்டில் இந்திரவிழா வின்போது சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவதும், சேரநாட்டில் கண்ணகி கோயில் மங்கலம்
செய்தபோது சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவதும், தமிழர்களின் மறப்போம் மன்னிப்போம் என்ற எண்ண ஓட்டத்தை அறியத்தருகிறது.

புறம்போகும் ஆடவரை முறை செய்யாவிடின் நாட்டில் கற்பு சிறவாது என்று சோழனுக்கும், செங்கோல் தவறின் உயிர் வாழாமை நன்று
என்று பாண்டியன் மூலம் உலகிற்கும், தமிழர் பால் பழிகூறின் வஞ்சினம் தீர்க்காமல், குடிகாக்கும் மன்னவன் சினம் தீராது என்பதை
குட்டுவன் மூலம் வடவருக்கும் உரைக்கக் கண்ணகி காரணமானதால் தெய்வமாகிறாள்!

அத்தெய்வத்திற்குப் பத்தினிக் கோட்டம் செய்தான் சேரன்! இமமலைக் கல் கொண்டு சிலை செய்து, கோயிலெடுத்து மங்கல விழாச்
செய்தான், குமரி முதல் இமயம் வரை தமிழ் மொழியை மட்டுமே ஆட்சி மொழியாக வைத்து ஆண்ட இமய வரம்பன்
நெடுஞ்சேரலாதனுக்கும் அவன் பட்டத்தரசி சோழமகள் நற்சோனைக்கும் மைந்தனாகப் பிறந்த செங்குட்டுவன்.

"வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்துக்
கடவுள் மங்கலம் செய்கஎன ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவர் ஏறுஎன்...."

"குமரியொடு வடஆமயத்து ஒருமொழி வைத்து உலகுஆண்ட
சேரலாதற்குத் திகழ்ஒளி ஞாயிற்றுச் சோழன்மகள் ஈன்ற
மைந்தன், கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப்
பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன்......."

கண்ணகிக்கு கோயில் கட்டி விழாச் செய்த மறுநாள், கோயில் விழாவுக்கு வந்திருந்த மன்னர்கள் செலுத்திய காணிக்கைகளைப் பற்றி
கேட்டுக் கொண்டிருந்த குட்டுவனை, தேவந்தி சிலரொடு வந்து வணங்கி, கண்ணகியின் சிறப்பு பற்றி கூறி புலம்புகிறாள்!

அப்போது சேரன் செங்குட்டுவன் வியப்புற்று, உணர்ச்சி வயமாகிறான்!

பொன்னால் சிலம்புகட்டி, கொடியாய் மேகலை புனைந்து, வளைபூட்டி, வயிரத் தோடு அணிந்து, பொன்னாலும் பிறவாலும் அணிமணி
கூட்டி, மின்னெலெனக் கண்ணகியார் வானில் உயர்ந்து, சேரனுக்குத் தெரிந்தாராம்!

சிரித்த முகத்தோடு சொன்னார் சேரனிடம், 'பாண்டியன் குற்றமற்றவன்! எனக்குப் புகழ் சேர்த்ததனால் நான் அவனுக்கு மகளானேன்!'
என்று.

காலகாலத்துக்கும் புகழ்சேர்த்துவிட்ட பூரிப்பு அம்மைக்கு!; சேரப் பெண்களை,'திருமுருகன் குன்றினிலே, எப்போதும் விளையாட நான்
வருவேன் தோழியரே! என்னோடு வந்தாடுக' என்று அழைத்தபோது!

"என்னேஆஇ•து என்னேஆஇ•து என்னேஆஇ•து என்னேகொல்
பொன்னஞ் சிலம்பின் புனைமேகலை வளைக்கை
நல்வயிரப் பொந்தோட்டு நாவல்அம் பொன்ஆழைசேர்
மின்னுக் கொடிஒன்று மீவிசும்பில் தோன்றுமால்....."
(வானில் கண்ணகி கண்ட சேரனின் வியப்பு)

"தென்னவன் தீதுஆலன்; தேவர்கோன் தன்கோயில்
நல்விருந்து ஆயினான்; நான் அவன் தன்மகள்;
வென்வேலான் குன்றில் விளையாட்டு யான்அகலேன்;
என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்."
(கண்ணகியம்மன் கடவுளாய் சேரனுக்கும்
பெண்களுக்கும் கூறியது)

சேரனுக்குக் காட்சிதந்து சேரமகளிரை விளையாட அழைத்தும் விட்டு, சேரன் செங்குட்டுவனை நீடுழி வாழ வாழ்த்துரைக்கிறார்
கண்ணகியார்!

"ஆங்கி, நீள்நிலமன்னர் நெடுவில் பொறையன்நல்
தாள்தொழார் வாழ்த்தல் தமக்கு அரிது; சூழ்ஒளிய
எங்கோ மடந்தையும் ஏத்தினாள், நீடூழி
செங்குட் டுவன்வாழ்க என்று."

சிலம்பு மடல் - 33 கண்ணகியின் வரமும்! இளங்கோவடிகளின் அறிவுரையும்!

வஞ்சி: வரம்தருகாதை:


வாழ்த்திய கடவுளின் கோயிலை மும்முறை வலம்வந்து முன் நின்றான் சேரன்! அச்சமயம் கோயில்விழாவில் கலந்து கொண்ட,
சிறையில் இஆருந்த விடுவிக்கப்பட்ட ஆரியர்களும், அதன் முன்னரே சிறையிருந்து விழாமுன்னிட்டு விடுவிக்கப்பட்ட பிற அரசரும்,
குடகுநாட்டுக் கொங்கரும், மாளவ நாட்டு மன்னரும், கடல் சூழ்ந்த ஆஇலங்கை அரசனான கயவாகு மன்னனும், 'ஒவ்வொரு வருடமும்
சேரன் செய்யும் இந்த அரிய விழாவின் போது எம் நாட்டிலும் யாம் செய்வோம்; எமக்கும் வந்து அருள் செய்வாய்!' என்று வேண்ட,
கண்ணகியும் 'அங்கனமே வரம் தந்தேன்' என்று கூற அனைவரும் வீட்டின்பம் பெற்றோர் போலானாராம்! ஈழ நாட்டிலே கண்ணகிக்கு
கோயில் எடுத்தான் கயவாகு. இன்றும் இஆருக்கிறது.

"வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி
உலக மன்னவன் நின்றோன் முன்னர்,
அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூழ் ஆலங்கைக் கயவாகு வேந்தனும்
எம்நாட்டு ஆங்கண் ஆஇமைய வரம்பனின்
நல்நாள் செய்த நாள்அணி வேள்வியில்
வந்துஈக என்றே வணங்கினர் வேண்ட,
'தந்தேன் வரம்' என்று எழுந்தது ஒருகுரல்...."

சேரமன்னனுக்குக் காட்சி, சேரமகளிருக்கு அன்பழைப்பு, ஏனைய பல மன்னர்களுக்கு வரம் அளித்துப் பூரித்துப் போன கண்ணகியார்,
அவ்வேளை அங்கிருந்த நூலாசிரியர் இளங்கோவடிகளிடமும் பேசினாராம் தேவந்தி என்ற பெண்மணி மேல் தெய்வமாய் ஏறி நின்று!
அதை அடிகளார் கூறுகிறார்,

'யானும் (ஆஇளங்கோவடிகளாகிய நானும்) கண்ணகி கோயிலுள் சென்றேன்; என் எதிரே பத்தினித் தெய்வம் தேவந்தி மேல் விளங்கித்
தோன்றி, "வஞ்சியிலே, அரண்மனை அத்தாணி மண்டபத்திலே, உன் தந்தையின் அருகிலே அமர்ந்திருந்த உன்னை ஒரு நிமித்திகன்
பார்த்து, அரசனாக வீற்றிருக்கும் அழகிய இலக்கணம் உனக்கு உண்டு என்று கூற, உன் அண்ணனான குட்டுவன் மனம் வருத்தமடைய,
அம்மனவருத்தம் அவனுக்கு ஒழிய துறவியாய் ஆனாய்; துறவியாய் ஆகி, வீட்டுலக அரசினை ஆளும் மன்னவன் ஆனாய்" என்று என்
வரலாற்றினை உரைத்தாள்' என்று.

"யானும் சென்றேன் என்எதிர் எழுந்து
தேவந்தி கைமேல் திகழ்ந்து தோன்றி
வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை
நுந்தை தாள்நிழல் இருந்தோய்! நின்னை
அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டுஎன்று
உரைசெய் தவன்மேல் உருத்து நோக்கிக்
கொங்குஅவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட் டுவன்தன்செல்லல் நீங்கப்
பகல்செல் வாயில் படியோர் தம்முன்
அகல்ஆஇடப் பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லாச் சேண்நெடுந் தூரத்து
அந்தம்ஆஇல் ஆஇன்பத்து அரசுஆள் வேந்துஎன்று
என்திறம் உரைத்த ஆஇமையோர் இளங்கொடி...."

கண்ணகியம்மை இஆளங்கோவடிகளாருக்கு தேவந்தி வாயிலாக உரைக்க, நமக்கும் நம்முன்னோருக்கும் பின்னோருக்கும் அழியாச்
செல்வத்தை விட்டுப் போன சிலம்பரசர் இளங்கோவடிகளார், நமக்கும் சில அறிவுரைகளையும் விட்டுப் போகிறார்! ஒப்பற்ற அவை நம்
பழம் பண்பாடு கூறுகிறது!

'கண்ணகித் தெய்வத்தின் சிறப்பினை விளக்கிய நல்லுரையைத் தெளிவுறக் கேட்ட மேன்மை மிக்க நல்லவர்களே! வளங் கொழிக்கும்
ஆபெரிய உலகில் வாழும் மக்களே!'

"தன்திறம் உரைத்த தகைசால் நல்மொழி
தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!"

பிறர்க்குக் கவலையும் துன்பமும் செய்யாது நீங்குங்கள்;
தெய்வம் உண்டென உணருங்கள்;
பொய்பேசாதீர்கள்! புறங்கூறாதீர்கள்!
ஊன் உண்ணாதீர்கள்; கொலைசெய்யாதீர்கள்;
தானமிடுங்கள் தவம் செய்யுங்கள்;
செய்நன்றி என்றும் மறவாதீர்கள்;
தீயோர் நட்பை விலக்குங்கள்;
பொய்ச்சாட்சி சொல்லாதீர்கள்!
நல்லோர் அவை நாடுங்கள்;
தீயோர் அவை தப்பிப் பிழையுங்கள்!
பிறர் மனை விரும்பாதீர்கள்.
துன்பப்படும் உயிர்களுக்கு உதவி செய்யுங்கள்!
இல்லறம் விரும்புங்கள்; பாவம் புரியாதீர்!
கள், களவு, காமம், பொய், பயனில சொல்தல் ஒழியுங்கள்.

இளமையும், செல்வமும், உடலும் நிலையற்றவை! உள்ளநாள் குறையாது; உங்களை வந்து சேரக்கடவன சேராது நீங்கா! அறம்
செய்யுங்கள்!!

"பரிவும் ஆடுக்கணும் பாங்குற நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊன்ஊண் துறமின்; உயிர்க் கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு ஆகழ்மின்;
பொய்க்கரி போகன்மின்; பொருள்மொழி நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர்மனை அஞ்சுமின்; பிழைஉயிர் ஓம்புமின்;
அறமனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்;
ஆளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா;
உளநாள் வரையாது; ஒல்லுவது ஒழியாது;
செல்லும் தேயத்து உறுதுணை தேடுமின்
மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்குஎன்."

திருத்தகு நல்லீர் என்று நம்மை விளித்து நமக்கு நல்லுரைகள் கூறி, காப்பியத்தை நிறைவு செய்கிறார் இளங்கோவடிகள். என்னே ஒரு
கடமை யுணர்வு!!

புறத்துறை வழி நின்று போர்த்துறைகளை செய்து முடித்து கங்கை கடந்து சென்று வென்று வந்த வேந்தன் செங்குட்டுவன் சிறப்பு கூறும்
வஞ்சிக்காண்டம் நிறைவுற்றது.

"புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய
மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு
பொங்குஆரும் பரப்பின் கடல்பிறக்கு ஓட்டிக்
கங்கை பேர்யாற் றுக்கரை போகிய
செங்குட் டுவனொடு ஒருபரிசு நோக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்டம்முற் றிற்று."

வஞ்சிக் காண்டம் மட்டும் நிறைவுறவில்லை! நம் நெஞ்சில் என்றும் நீங்காது வாழும் கண்ணகி, கோவலன், மாதவி, பாண்டியன்,
பாண்டிமாதேவி, சேரன் செங்குட்டுவன், புகார், மதுரை, வஞ்சி என்று பல சிறப்பினைப் படிக்கத் தந்த இந்த சிலம்புக் காப்பியமும்
நிறைவு பெறுகிறது.

'தமிழ் மரபாலே கண்ணாடியில் உயர்ந்த பெரிய மலையைக் காட்டுவார் போலக் கருத்துகளைத் தோற்றுவித்து, மணிமேகலை என்னும்
காப்பியத்தில் உரைக்கப்படும் பொருளுடன் தொடர்புடையதாகிய சிலப்பதிகாரக் காப்பியம் முற்றுப் பெற்றது'
என்று சிலம்பின் நூல் கட்டுரை உரைக்கும்போது நம் நெஞ்சம் நெகிழ்கிறது. நம் நெஞ்சை அள்ளிக் கொண்ட இந்த சிலப்பதிகாரம்
நிறைவடைகிறது.

"......தெரிவுறு வகையால் செந்தமிழ் ஆயற்கையில்
ஆடிநல் நிழலின் நீடுஆருங் குன்றம்
காட்டு வார்போல் கருத்து வெளிப் படுத்து
மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்."

நிறைவு பெறும்போது இந்த காப்பியத்தை இன்னும் எத்தனை தடவை படித்தாலும் நான் அள்ளிக் கொள்ள ஆயிரமாயிரம் கருத்துக்கள்
புதையலாய் கொட்டிக் கிடக்கின்றன! எத்தனை முறை படித்தாலும் என்னை அள்ளிச் செல்லும் இந்த காப்பிய மடல்களை நிறைவு
செய்யும்போது என் உணர்வுகள் சற்றே அசைகின்றன.

சிலம்பு மடல்கள் முற்றும்.

சிலம்பு மடல் - 25: மதுரை: கொலைக்களக் காதை!  பூவின் புலம்பல்! புயலாய் எழுதல்! மதுரை: ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி:- நாக. இளங்கோவன் -....உள்ளே
சிலம்புமடல் கடந்தவை...உள்ளே

nelango5@gmail.com


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner