இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரில் 2009 இதழ் 112  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்: சிங்கப்பூர் /மலேசிய எழுத்தாளர்கள் வரிசை - 5
அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் சுப்ரமணியம் ரமேஷ்

- ஜெயந்தி சங்கர் -


சுப்ரமணியம் ரமேஷ்ஜெயந்தி சங்கர்எஸ்.ரமேஷ், மணிமலர் ரமேஷ், ரமேஷ் சுப்பிரமணியன், ஆத்மரச்மி, மானஸாஜென் ஆகிய பல புனைப்பெயர்களில் சுப்பிரமணியன் ரமேஷின் படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. சிறுகதை, குறுநாவல், கவிதை போன்ற பல தளங்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் இயங்குபவர் இவர். இவரது படைப்புகள் தினமணிக்கதிர், ஆனந்த விகடன், கணையாழி, காலம், காலச்சுவடு, உயிர்மை, மகிளா ஜாக்ரதி (கன்னடம்), புதிய பார்வை, வல்லினம், தமிழ் முரசு, தமிழ் அரசி ஆகிய பத்திரிக்கைகளிலும், திண்ணை, வார்ப்பு, திசைகள், பதிவுகள், மரத்தடி போன்ற இணைய இதழ்களிலும், பிரசுரம் கண்டுள்ளன. 1980ல் குமுதத்தில் முதல் ஜோக், 1982ல் ஜூ.வி விஷ¤வல் டேஸ்ட் மிர்ரரில் முதல் புகைப்படம், 1989ல் ஆனந்த விகடனின் முதல் சிறுகதை, புதியபார்வையில் முதல் கவிதை, கணையாழியில் முதல் குறுநாவல், புதிய பார்வையில் முதல் ஓவியம் என்றே இவரது பயணத்தின் துவக்கங்கள் அமைந்துள்ளன.

சமீபத்தில் வல்லினம் (காலாண்டிதழில்) செப்-டிச 2008, 'கண்டடைதல்' என்ற சிறுகதையில், ரமேஷ் தத்துவார்த்தமானதொரு மொழிச்சோதனை செய்திருந்தார். அதே வேளையில் மொழி கடினப்படவுமில்லை. பணியிடத்தில் எதிர்கொள்ளும் சவால்களை ஒரு ஆணின் இடத்திலிருந்து சொல்லிக் கொண்டு வரும் கதை. கதாநாயகன் தன் மகளுடன் விலங்கியல் பூங்காவில் துருவக்கரடியின் மெய்ப்பாடுகளை அவதானித்தபடி தன்னை அந்த விலங்குடன் ஒப்பிட்டுக் கொள்கிறான். கரடியின் ஒவ்வொரு வலியையும் அசைவையும் சொற்ப உணவுக்காக தன் வலுவையும் மறந்து அது போடும் கூழைக்கும்பிடாகப் பார்க்கிறான். இந்த நொடியில், சட்டென்று அங்கே பார்க்க ஒன்றுமில்லை என்றெண்ணி இடத்தை விட்டு நகர்ந்துவிடுவான். தன்னையே பார்த்த உணர்வை அவன் அனுபவித்துவிடுகிறான். வாழ்க்கையில் இது தான் பாதை என்று நிர்ணயித்துக் கொண்டு செல்லவிழைவதை விடவும் செல்லும் வழியெல்லாமே பாதை தான் என்பதைச் சொல்லித் தன் சிறுகதையை முடித்திருப்பார்.

1966ல் இவர் ஓவியக்கலையில் விடைவிடாது தொடர்ந்து இயங்கி வருபவர். இவரது ஓவியங்கள் தமிழகத்திலும், சிங்கப்பூரிலும், தனி நபர் கட்சிகளாகவும், குழுக் காட்சிகளாகவும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சில ஓவியங்கள் புதிய பார்வையில் அட்டைப் படமாகவும், கிரீஷ் கர்னாட்டின் 'நாகமண்டலா' (தமிழாக்கம்) உட்பட அட்டைப்படங்களாகவும், புதிய பார்வை, காலச்சுவடு, தமிழரசி போன்ற இதழ்களில் இவரது கோட்டோவியங்களாகவும் இடம் பெற்றிருக்கின்றன.

எழுதும் முறைமையில் மீது தனக்கு இருக்கும் கேள்விகள் தன்னை எழுதவிடாமல் செய்து கொண்டிருக்கிறது. பத்திற்கு மேற்பட்ட சிறு கதைகளும் குறுநாவலும் ஒரு வருடத்திற்குள்ளாகவே பிரசுரம் ஆன பின்னர் எழுதுவதையே நிறுத்தி விட்டு, மறுபடி சிங்கப்பூர் வந்த பின்னர் எழுதிக் கொண்டிருக்கிறார். எழுதாத போது படிப்பது, நாடகம் போடுவது ('அய்க்யா' என்றொரு நாடகக்குழுவில் இணைந்து 'குட்டி இளவரசன்', கா·காவின் 'விசாரணை', ப்ரியா டெண்டுல்கர், பாதல் சர்க்கார், பாலகுமாரனின் சேவல் பண்ணை) இவரது ஈடுபாடுகள்.

ஓவியம் வரைவது, புகைப்படம் எடுப்பது ஆகியவைகளோடு, கடம் திரு.வினாயக்ராமின் தம்பி திரு. குருமூர்த்தியிடம் இரண்டு வருடகாலம் வயலின் கற்றுக் கொண்ட அனுபவமும், சிங்கப்பூரில் திரு. ராதா விஜயனிடம் கீ-போர்டு கற்றுக் கொண்ட அனுபவமும் இவருக்கு உண்டு.

தி.ஜா நினைவுக் குறுநாவல் திட்டத்தில் இவருடைய 'வலியுணரும் தந்திகள்' பரிசு பெற்றது. தேசிய கலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரெஸ் ஹோல்டிங்க்ஸ் இணைந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் 'தங்கமுனைப் பேனா விருது' போட்டியில் சிறுகதைக்கு முதல் பரிசு பெற்றிருக்கிறார். அதே போட்டியில் 2003ல் ஆறுதல் பரிசையும் 2005ல் மூன்றாவது பரிசையும் கவிதைக்காகப் பெற்றார்.

பத்தாண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இவர் வேலுரைப்பிறப்பிடமாகக் கொண்டவர். முன்பு சென்னையில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்காலங்களில் சிறுபத்திரிக்கையுலகில் இயங்கிய அனுபவமும் இவருக்குண்டு. இவரது மனைவி ஷீலாவும் ஒரு ஆர்க்கிடெக்ட்; சிறந்த ஓவியரும் கூட. ஒன்பது வயது சிநேகா மற்றும் நான்கு வயது சஞ்சனா ஆகிய இரு மகள்கள் இவருக்கு.

இறைமையை எழுத்தாக்க விழையும் இவர், எழுத்தின் சாத்தியப் பாடுகள் மீது தனக்கு இருக்கும் ஐயங்கள் தன்னை எழுத விடாமல் செய்து கொண்டிருப்பதாகக் கருதுகிறார். எழுத்து தன் தேடல், தன் அடையாளம், தின வாழ்வில் நசுங்கிப் போயிருக்கும் தன் மனசாட்சியின் குரல், மரணத்தை வெல்லும் வழி, இறைவனாக ஒரு செயல், இப்போதைய உலகினை சற்றே நேர்படுத்த தன்னையும், சமூகத்தையும் சற்றே விசாலப்படுத்தும் ஒரு கருவி இப்படியாக எழுத்திற்கும் தனக்கும் உள்ள உறவை பாவித்துக் கொள்வதினிலும்... கட்டற்ற துள்ளலில் பல்பம், கரி, பென்சில் இப்படி அகப்பட்டவற்றைக் கொண்டு, சுவர், தாள் என அகப்பட்டவற்றில் கிறுக்கி வரைந்து அந்த லயிப்பிலேயே தூங்கிப் போய் விடுவதுமான சிறுவனின் மலர்வினை ஒத்த படைப்புக் கணங்கள் வாய்க்கையில் கிடைக்கும் அபூர்வ மகிழ்ச்சித் தருணங்கள் தனக்கு உவப்பானதெனக் கூறுகிறார். மேலும் இவர் விழிப்புணர்வோடு வாழ்வினை அணுகும் போது அனுபூதியாய் வாய்ப்பதை எழுத்தாக்குவதையே உன்னத எழுத்தென்றும், அதற்கான விழைவே தன் படைப்பின் இலக்கெ என்றும் கூறுகிறார்.

எழுதுவது மேலும் குறித்துக் கேட்டால் ரமேஷ், "இறைவனது படைப்பில் ஒற்றைத்தன்மையோடு எதுவும் இல்லை, எழுதுவது எதுவாக வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் மனதிற்கு உகந்ததாக இருக்க வேண்டும், உங்களுக்கும், உங்களின் அன்புக்குரியவர்களுக்கும் வேண்டாம் என்ற எதையும் எதற்காகவும் நீங்கள் மற்றவர்க்குத் தரலாகாது. நீங்கள் தரும் எது குறித்தும், அவை மற்றவர்களின் வாழ்வினில் விளைவிக்கும் வினை குறித்த பொறுப்புணர்வு வேண்டும், இந்த பெரிய அலகிலா விளையாட்டில் உங்களின் பங்கை பொறுப்புடன் விளையாட வேண்டும்", என்பார். அறிவு, சிந்தனை, வார்த்தைகள், எல்லாமே வெறும் எண்ணங்கள், மனதின் கூச்சல், இவை அனைத்தும் ஈகோவைத் தன் மூலமாகக் கொள்பவை; மௌனத்தின் முன் கரைந்து போகக் கூடியவை; இலட்சியங்களும், கொள்கைப் பிரகடனங்களும் தன் இலக்கல்ல என்றும், மௌனத்தை கைகொள்வதே தன் இலக்கெனவும் நம்புகிறார். மௌனமாய் இருப்பதென்பது மௌனத்தைக் குறித்து எழுதுவதோ, பேசுவதோ, எண்ணுவதோ அல்ல. விழிப்புணர்வோடு மௌனத்தில் ஆழ்வது. அப்படியான ஒரு நிலையில் படைப்பது சாத்தியமா? (வியாசன், அரவிந்தர், அருணகிரி, வள்ளலார், சித்தர்கள், லா-வோ-ட்சூ, சூ·பிகள்,...) அப்படி சாத்தியமென்பதோ, சாத்தியமில்லை என்றோ இப்போது முடிவாக அடைய முடியுமானால், முடிவுவை சிந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று ஆகிறது. மேலும் எண்ணங்களற்று முடிந்தால் அது யார் எழுதிய எழுத்து? என்பதே தன்னை அலைகழிக்கும் தற்போதைய கேள்வி? என்பார்.

'படைப்பு' பற்றிய இவரது ஒரு கவிதை -

தோண்டிய பள்ளத்தில் ஈரம் காட்டி
அள்ளும் பொழுதே உறிஞ்சிக் குடித்திடும்
நதிமணல் படுகை

நான் கூசி ஒதுங்கும் யாவற்றையும்
பேதமற்றே தழுவிடும் என் நிழல்

சூன்யத்தில் ஒளிரும் ஒலியினைப் பெயர்த்திட
வண்ணமாய் வழிந்து பரவும் கீதம்

தழுவிச் செல்லும் காற்றின் விரல்களை
நிரந்தரமாய் பற்றிக் கொள்ள விழையும் கொடி.

ரமேஷ¤டன் நாம் ஓவியம் இலக்கியம் என்று எது குறித்துப் பேசினாலும் இவரது மூளை சரசரவென்று ஓடிச்சென்று ஜென்/தாவோ தத்துவத்திலோ வேறு ஆன்மீகக் கோட்பாட்டுத் தளத்திலோ சென்று நிலைக்கும். அது மென்மையாகப் பேசும் அவரது பேச்சிலும் வெளிப்பட்டுவிடும். 2006ல் பிரசுரமான 'சித்திரம் கரையும் வெளி' எனும் கவிதைத் தொகுப்பு இவரது முதல் நூல்.

-----------

சிறுகதை: ஜெந்தே பாட்டி

ஜெந்தே பாட்டி


சுப்ரமணியம் ரமேஷ்எப்படி நிகழ்ந்ததென்று தெரியவில்லை...தன் கைகளை சினேகமாய் பற்ற விழைந்த கையினை உணர்ந்தார். இருளில் இரயில் கூவிக் கரைந்தது.. பிரக்ஞை வெட்டவெளியையும் செம்மண் கரையும் மழையையும் குறியீடுகளெனக் கொண்டு ஆழத்திலிருந்து பரவிய பயத்தின் சூட்சும வாடையை உணர்ந்த தருணத்தில், ஒரு கணமே வெட்டிய மின்னல் வீசி எறிந்தது பெரும் நிழல்களை...வெளிச்சம் பயத்தை குறைக்கும் எண்ணம் பொய்யாய் போக மின்னிடும் சலனத்தில் தன் கைகளைப் பற்றியிருந்த மற்றொரு கையினைக் கண்டவர் அதிர்ச்சியும், பீதியுமுற்றார். சுருக்கங்கள் நிரம்பிய அக் கரம் ஒரு மூதாட்டிக்குச் சொந்தமாய் இருந்திருக்கவேண்டும், மணிக்கட்டு வரையேயான அக்கரம் அவரை நட்புடன் பற்றிக் கொண்டிருந்தது! அதன் இளஞ்சூடு இன்னமும் உயிர்ப்புடன் இருந்தது...ஒரு கணம் கண்டதை இருளில் மனம் உணர்ந்து பெரும் பதற்றத்தில் ஓலமிட்டு கைகளை உதற ஆரம்பிக்க முழங்கிய இடி அமானுஸ்யமாய் உறும, தன் இருப்பை நிலை நிறுத்திக்கொள்ளும் ஆதி பயத்துடன் விழுந்தும் எழுந்தும் ஓட ஆரம்பித்தார் கசியும் தீனமான குரல் ஒன்று "பாப்பு... பாபுஜீ...." என தொடர்வதாய் உணர்ந்தார். வலிமையற்று ரகசியமான குரலில் இரைஞ்சும் அக் குரலுக்கு உயிர் உருக்கும் சக்தியிருந்தது. அக் குரலின் வினோதமான காலச்சுழலுக்குள் மாட்டிக் கொண்டால் என்ற நினைப்பே ஒரு வேட்டை நாயின் துரத்தலை அளிக்க...தொலைவில் ஆலைப் புகைகளை ஓயாமல் வெளித்தள்ளும் சிம்னிகள் தெரிய பழகிய உணர்வும் தைரியமும் சற்று மீண்டன.. ஆலைக்கழிவுகள் கால்வாய்களாய் கடலில் கலக்க அதன் மீதான பாலம் முடியும் இடத்தில் ஆரம்பித்தது நகரம். பிரம்மாண்டமான காங்க்ரீட் கட்டிடங்களும், பிளாஸ்டிக் வண்ண போர்டுகளும், இயந்திர ஓசையும், நியான் ஒளிர இளிக்கும் முகங்களும் மேலே விழுந்து அப்பிக் கொள்ள, ஆசுவாசம் மீண்டாலும், உள்வெளியில் ஒரு முடிவற்ற இரைஞ்சலாய் "பாபூ பாபூ" என ஒரு முதிய குரல் கெஞ்சிக் கொண்டிருந்தது. அவருக்கு ஹெவி மெட்டல் சங்கீதமும், கோக்கும் தேவையாயி
ருந்தது...ஒரு கரவோக்கி பாரின் வாசலில் கண்ணாடியில் நெளிவுற்றிருந்த பிம்பத்தை பார்த்தபடி வெண்டிங் மெஷினில் விடாமல் காசை போட்டுக் கொண்டிருக்க விழிப்பு வந்தது...அடிவயிறு வலி த்தது... நினைவு முழுதும் விடுபாடாமல் வெளுத்துப் போய் வியர்த்திருந்தார். சிறுநீர் கழித்ததும் உடலும் மனமும் விடுபட ஆசுவாசம் மீண்டது.

காலையில் வெற்றிகரமாய் அந்தக் கனவைத் தொலைத்திருந்தார். 'ராத்திரி ஏதோ ஒரு மோசமான கனவு' என சாந்தியிடம் ஆரம்பிக்கையில் கூட அவரால் நினைவு படுத்த முடியவில்லை. "பாபூ .. பாபூ” ன்னு யாரோ கூப்பிடரது போல ஒரு கனவு...

“உங்களை யாரு பாபுன்னு கூப்பிடுவாங்க? நீங்க என்ன மகாத்மா காந்தியா? உங்கம்மா உங்களுக்கு நரேந்திரபாபுன்னு பேர் வைச்சாலும் வெச்சாங்க வடக்கத்திக்காரன்னாட்டம், அவங்களே கோவத்தில 'அடே துரியோதனா'ன்னு கூப்பிட்டுத்தான் பாத்திருக்கேன் என்று
கிண்டலடித்தாள்.

விளையாடாத சாந்தி என்றதும், நீங்க உச்சரிக்கிற தோனியப் பார்த்தா ஜெந்தே பாட்டி மாதிரி தெரியுது! அவங்களுக்கு எந்த காலத்தில உங்கப் பேர் தெரியப் போது...அப்படியே தெரிஞ்சாலும் ஒழுங்கா உச்சரிக்க ஆயுசு போதாது...என்று சிரித்தாள் மறுபடியும்.

உண்மைதான் ஜெந்தே பாட்டி எங்களின் வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக காணாமல் போய் விட்டாள். சொல்லப் போனால் அவள் எங்களுடன் ஒரு முறைக்கு மூன்று நான்கு நிமிடங்களுக்கு மேல் ஒரு போதும் பேசியதில்லை. கையில் துடைக்கும் துணியுடன் எங்களின் டேபிளின் அருகே நின்றபடியே நிகழும் அந்தப் பேச்சும் உணவு கடையின் வாடிக்கையாளர்கள் யாருமில்லா தருணத்திலேயே நிகழும்...அதுவும் கூட அவள் சீன மொழியிலும் நாங்கள் தமிழிலும் என பேசுவதை 'உரையாடல்' என்பதும்கூட ஒரு வசதிக்காகத்தான். பெரும்பாலும் என் ஐந்து வயது பெண்தான் அவளின் பேச்சினை நிறைய புரிந்து கொள்வாள். சைகையும் பேச்சுமாய் தோடரும் மொழியின் சாரம் பிடிபடுகையில் கனிவும் மகிழ்வும் பொங்க தலை வேகமாய் அசைந்து ஆமோதிக்கும்.

1
கொடுக்கும் போதே பெற்றுக் கொள்வதுமான அந்த உலகின் வாசலென அமைந்தவள் அவள்தான். தயக்கமற்று தழுவிக்கொண்ட அவள் மனதை, எல்லோரும் பேதமற்று தெளிவாக உணர்ந்து கொண்டது மற்றும் ஒரு ஆச்சரியம். அந்தப் பாட்டி ரொம்ப பாசமா இருக்கு பாருங்க என்று சாந்திகூட கொஞ்ச காலத்திற்குப் பின் குறிப்பிட்டாள். இது எப்படி சாத்தியம் என்ற ஆச்சரியமே ஜெந்தே பாட்டியிடம் அவரை நெருங்க வைத்தது. இப்போது முற்றாக காணாமல் போயே விட்டாள்! எப்போதேனும் பார்க்க வாய்க்குமோ என்ற தவிப்பை படர விட்டபடி...

எல்லா டெபிள்களையும் நிதானமாய் ஒவ்வொன்றாய் துடைத்துவிட்டு, தான் உணவு உண்ணும் மேஜையின் அருகே வந்து அமர்ந்து கொண்ட மூதாட்டியை நிதானமாய் பார்க்க வாய்த்தது. அந்த பத்தரை மணி இரவிலும் பணியாற்ற வேண்டிய சூழல் அம் மூதாட்டிக்கு. உணவுக்கடையின் உரிமையாளர் வந்து அந்தப் பாட்டியிடம் பேசியதும் அதற்கு அவர் புன்னகையுடன் மறுத்ததையும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த நரேந்திரனிடம், முறையிடும் தோணியில் ஆங்கிலத்தில் விளக்கினார்... “பாருலா பழைய தலைமுறை ‘நேரமாச்சி வீட்டுக்குப் போ’ ன்னாலும் ஒரு டேபிள்தானே தொடைச்சிட்டுப் போறேன்னுது! ஜப்பானிய ஆக்கிரமிப்பெல்லாம் பார்த்து வாழ்ந்தவங்க. பணம், காசைத்தாண்டி வாழ்க்கையில் ஒரு பிடிவாதம் கொண்டவங்க. கிழவி எந்த உபகாரமும் எதிர்பார்க்காம இந்த வயசிலும் தனியாதான் இருக்காங்க...மகனிடம் போறதில்லை. என்னிடம் வேலைக்கு சேரும் முன்னர் வேலையில்லாம இருந்தப்போ கூட மகனைத் தொந்தரவு படுத்தாம காலி கோக் கேன்களை சேகரிச்சி நசுக்கி விற்கும். இவங்களோட வாழ்க்கையை இப்போ வர்ற தலைமுறை புரிஞ்சிக்கவே முடியாதுலா! அது வேறு வகையான காலச்சுழல்...” என்று தலையை அசைத்தபடி ஸ்டாலுக்குள் போனார். ஒரு வகையான குற்ற உணர்வு உந்த வேகமாகச் சாப்பிட ஆரம்பித்த நரேந்திரனை “மைய் மய்!” என்று கூறியபடி நிதானமாய் உண்ணுமாறு கரிசனமாய் ஆசுவாசப்படுத்த...அவருக்கு ஏனோ தன் தாயின் நினைப்பு வந்தது. புன்னகைக்கும் கண்களுக்கு நன்றி கூறும் விதமாய் பதிலுக்கு புன்னகைக்க, இப்படியாக ஜெந்தே பாட்டி அவர்களின் உலகத்தில் நுழைந்தாள் முதன் முதலாக.

வாரம் ஒருமுறையேனும் தனியாகவும், குடும்பத்துடனும் அந்த சாப்பாட்டுக் கடைக்கு வந்துவி டுவார். சிரித்த முகத்துடன், சற்று தள்ளாடி நடக்கும் பாட்டியிடம் அவர்களைக் கண்டதும் ஒரு துள்ளல் வந்து விட்டதைப் போலிருக்கும் அவர்களுக்கு, நேரடியாக டேபிளுக்கு வராமல் இன்னமும் இரண்டு மூன்று டேபிளுக்கு சுற்றி விட்டு வரும் பாட்டியை பார்த்தால் அவர்களுக்கு சிரிப்பாக வரும். பாட்டியின் சந்தோஷம் தெள்ளனத் தெரியும், இயல்பாக காட்டிக் கொள்ளவிரும்பும் பாட்டியை குழந்தை சினேகாவே கிண்டல் செய்வாள், 'அப்பா பாருங்க பாட்டி ஹாப்பியா குதிச்சிக்கிட்டிருக்காங்க என்று' வெட்டிப் பேச்சு பேசிப் பொழுதைக்கழிப்பதாக தோன்றக்கூடாதென பாட்டி கொள்ளும் அக்கரையை அவரும், சாந்தியும் மதிக்கவே செய்தார்கள்...அதன் காரணமாய் அவர்கள் நிறைவில்லாமலேயே பேச்சை முறித்துக் கொள்ள நேரிடும். எப்படி இருக்காங்க? என்ன சாப்பிட்டாங்க? போன்ற கேள்விகளில் இயல்பு நிலையடையும் முன்னரே, பாட்டி வேறு காலியாகும் டேபிள்களைத் துடைக்க போகவேண்டி இருக்கும். ஆனால் அதற்கு முன்னராகவே ‘ஜெந்தே ஜெந்தே’ என சினேகாவின் முகவாய் கட்டைப் பிடித்துக் கொஞ்சியாகி விட்டிருக்கும்! கொஞ்ச நாட்களில் சினேகாதான் பாட்டியை குறிப்பிட வேண்டும் போதினில் 'அதாம்பா ஜெந்தே பாட்டி...!' என்று அழைக்க ஆரம்பித்தாள். சாந்தியும், அவரும்கூட பயன்படுத்த அந்தப் பெயரே பாட்டிக்கு நிலைத்துப் போயிற்று.

‘ஜெந்தே’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் குறுகுறுப்பில் மான்ட்ரீன், ஹொக்கேன், காண்டனீஸ் என சீன நண்பர்களிடம் முட்டிப் பார்த்துவிட்டார்! யாருக்கும் புரியா புதிராய் பொலிந்தது அந்த வார்த்தை. எப்படியோ பாட்டி ஜெந்தே பாட்டியாகவே இருந்திட்டுப் போகட்டும் என அவர்கள் முடிவெடுத்தார்கள். பின்னொரு நாளில் அந்த வார்த்தை ஜெந்தே இல்லை ‘செந்தே’ என்று ஒரு மலாய் நண்பர் மூலம் தெரியவந்தது! செந்தே என்றால் அழகு எனப்

2

பொருளாம்! பாட்டிக்குப் பொருத்தமான பெயர்தான். தங்களுக்கு உரையாடல் புரியவேண்டி பாட்டி தனக்குத் தெரிந்த மலாய் வார்த்தைகளையும் உபயோகித்துக் கொண்டிருப்பதைஅன்றுதான் அறிந்து கொண்டார்கள்!

பாட்டியுடனான உறவை பணியாளர்களில் சிலர் விரும்புகிறார்கள் என்றும் சிலருக்கு இது பிடிக்கவில்லை என்பதும் நாளடைவில் அவர்களுக்குத் தெரிய வந்தது. பாட்டி இல்லாத நாட்களில் “பாட்டியைத் தேடறீங்களா? இன்னைக்கு விடுப்பு” என அவர்கள் சொல்லிச் சென்றார்கள். பிடிக்காதவர்கள் கூட “இது போல துப்புறவாளர்களிடம் அதிகமாக வைத்துக் கொள்ளாதீர்கள்” என்பது போல அறிவுரை சொல்லுவார்கள். சுகாதாரம் முதல் பொருளாதாரம் வரையான காரணங்களைக் காட்டுவார்கள்!

யாருக்குமே எதையும் அவ்வளவாகத் தரவிரும்பாத அவர்களின் செல்லமகளும் அவளாகவே முன் வந்து தன்னுடைய ‘ஹலோ கிட்டி’ பேட்ஜை மனமுவந்து பாட்டிக்குத் தந்தாள். பாட்டி அந்த வாரம் முழுக்க அந்த பேட்ஜை தன் உடுப்பிலேயே அணிந்து திரிந்து கொண்டிருந்தது என்றும் என்ன அது என்று கேட்டவர்களுக்கு தன் பேத்தி கொடுத்தது என்றும் சொல்லிக் கொண்டிருந்தது என்று அவருடன் வேலை செய்யும் கேரலின் பின்னொரு நாள் சொன்னாள்.

பாட்டியும் அவ்வப்போது வினோத மூடிகள், போன்கார்டுகள் போன்ற குழந்தைகளுக்கான அபூர்வப் பொருட்களை சேகரித்து வைத்து சினேகாவிற்குத் தருவாள். ஒரு முறை எங்களின் குடும்ப நண்பர் எங்களுடன் உண்பதற்கு வந்திருந்தார். பாட்டியின் இந்த செயலைக் கண்டு அதிர்ந்தார். சார்ஸ் நோய்கூறுகள் பற்றிய பயம் பரவியிருந்த காலம் அது. இது போன்ற குப்பைகளை வாங்கிக் கொள்ளக் கூடாதென நீங்கள் சினேகாவை எச்சரித்து வைக்க வேண்டுமென்றும், போது இடங்களில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பாட்டி இருக்கும் போதே சொல்ல ஆரம்பிக்க... பாட்டிக்கு ஏதும் புரியாவிட்டாலும் ஏதோ ஆட்சேபனை என்று உணர்ந்து கொண்டிருக்கக் கூடும் அதற்குப் பின்னர் பாட்டி இது போன்ற பரிசுகள் தருவதை நிறுத்திக் கொண்டார். இது நாள் வரையிலும் அந்தப் பொருட்கள் சினேகாவின் முக்கிய விளையாட்டுப் பொருட்களில் ஒன்றாக திகழ்ந்து வீடெங்கும் இரைந்து கிடக்கிறது அவ்வப்போது...பாட்டியை நினைவுறுத்தியபடி.

சாந்தி கொஞ்ச நாட்களுக்கு முன்னர் "நம்ம ஜெந்தே பாட்டியைப் போலவே இன்னொரு பாட்டிங்க!" என்றவாறு செய்தித்தாளிலிருந்து ஒரு கட்டுரையைப் படித்துக் காட்டினாள். தொன்னூரு வயதிலும் முதியோர் இல்லங்களை பராமரிக்கும் ஒரு மூதாட்டியினைப் பற்றிய கட்டுரை. நம்

ஜனத்தொகையில் 7.3 சதவீதம் 65 வயதிற்கும் மேற்பட்ட முதியோர்களாம் உணவுக் கடைகளிலும், பெட்ரோல் நிரப்புமிடங்களிலும் பணிக்குப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர்த்து இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள ஏதுமில்லையா என பின்னொரு நாளில் சாந்தி கேட்டது அவரை மிகவும் உறுத்திக் கொண்டிருந்தது....ஜென்தே பாட்டியால் வாழ்க்கை என்ன வகையில் மாறியிருக்கிறது என அவர் யோசிக்க ஆரம்பித்தார்...அளவிட்டுச் சொல்லயியலவில்லை என்றாலும் ஜெந்தே பாட்டியை சந்திக்காவிட்டால் தங்கள் மூவரும் எதையோ இழந்திருப்பார்கள் என்பது மட்டும் சந்தேகமறத் தெரிந்தது. அறிவியல் தொழில் நுட்பங்களும், வசதிகளும் நிரப்பமுடியாத ஏதோ ஒரு வெறுமையை அர்த்தப்படுத்தும் வாழ்க்கை அவர்களுடையது. சினேகாவின் பிறந்த நாள் அடுத்த வாரம் வருவதை சாந்தி அவரிடம் நினைவூட்டினாள்..."ஏங்க இந்த பிறந்த நாளுக்கு அவளுக்கு 'ஸ்வான் பார்பி' வேணுன்னு என்னிடம் தினமும் நச்சரித்துக் கொண்டிருக்கா....அவளுடைய பள்ளி தோழ, தோழியரெல்லாரையும் கூப்பிடனுமாம்!" சாந்தியின் பேச்சு கண நேரம் தயங்கியது...கண்களின் தவிப்பும் இயல்பு நிலைக்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் எத்தனங்களும், பழைய விஷயம் ஏதோ நினைவுக்கு வந்து மறக்க நினைப்பதைக் காட்டியது. அவளாக சொல்வாளென தாமதித்தார்... "உன்னோட நண்பர்களையும் அழைக்கப் போறீயா...இல்லை எளிமையாக கொண்டாடிவி டலாமா?" என்றார் நரேந்திரன்.

"நான் மறுபடியும் வேறு வேலை தேடிகொள்ளும் வரை வீண் செலவுங்க எதுக்கு...சிம்பிளாவே

3

இருக்கட்டுமே" என்றாள் சாந்தி.

"அப்புறம் வேறென்ன..."

"இல்லைங்க! உங்களுக்கு ஞாபகம்இருக்கா சினேகாவின் போன பிறந்த நாளின் போது தான் ஜெந்தே பாட்டியை கடைசியா பார்த்தது, சினேகாகூட ஞாபகம் வெச்சிண்டு சொன்னா போன வாரம். ஒரு வருஷம் ஓடியே போச்சிங்க...பாவம் எங்க அல்லல் படுதோ அந்த கிழவி" உணர்வு மெல்ல எழும்பி அலைகழிக்க பேச்சு இயல்பாய் தேய்ந்து மெளனம் கவிந்து கொண்டது.

பிறந்த நாளைப் பற்றிய பேச்சு வந்தவுடனே, அவருக்கும் கூட நினைவுக்கு வந்த முதல் விஷயம் அதுதான். போன பிறந்த நாளின் போது முஸ்தபாவிற்குப் போய் சினேகாவிற்கென சமிக்கை வேலைப்பாடுகளுடனான அழகிய காக்ரா சோளியை வாங்குகையில்...சினேகா சற்றும் எதிர்பாராவி தமாய் "டாடி! நான் ஒண்ணு கேட்பேன் நீங்க வாங்கித்தரனும்" என்றாள். சினேகாவின் வம்பு வி வகாரங்களை நன்றாக அறிந்திருந்த நரேந்திரன், "என்னென்னு சொல்லு, நான் யோசித்துப் பார்க்கி றேன்..." என்றார் ஜாக்கிரதையாக. அவள்தான் ஜெந்தே பாட்டிக்கு, கி·ப்டாக ஒரு சட்டை கொடுப்போம்பா, என்று ஆச்சரியப்படுத்தினாள். இல்லம்மா பாட்டி வாங்கிக்க மாட்டாங்க, பாட்டியின் சட்டை அளவெல்லாம் தெரியாது, என்றெல்லாம் சொல்லிப்பார்த்தார். எதற்கும் மசியவில்லை இதுவரைக்கும் பாட்டிக்கு எதுவுமே நான் தந்ததில்லைப்பா என்ற போது தட்ட முடியவில்லை. அந்தப் பாட்டி அணிந்து கொள்ளும் வகையிலிருந்த ஒரு டீ-சர்ட்டை வாங்கினார்கள். அதிர்ஷ்டம் என சீனர்கள் நம்பும் ஆழ்ந்த இளம் சிவப்பு வண்ண நிறத்தையே தெரிவு செய்திருந்தனர்.

அடுத்த முறை சாப்பாட்டுக் கடையில் நிறைய கூட்டமிருந்தது. பாட்டி வந்து சேரவே நிறைய நேரம் பிடித்தது. அதிக நேரம் தங்கமாட்டாங்க என்பதினால் எடுத்தவுடனேயே சட்டையை நீட்டினார். பாட்டி பெருத்த அதிர்ச்சியுற்றது அவர்கள் எதிர்பார்க்காதது. சுருக்கங்களுடனான கண்கள் மேலும் சுருங்கி, முகம் பெரும் அவமானமுற்று சுணங்கிப்போனது. தலையும், கைகளும் வேண்டாமென வேகமாக மறுக்க, அங்கே இருக்கக் கூசியவளாய், பாட்டி வேறு இடம் நாடிப் போனாள். பக்கத்து டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்ததும் குற்றவுணர்வுற்றார் நரேந்திரன். மனக் கலக்கத்திலிருந்து சாந்திதான் முதலில் வெளிவந்தாள்..." என்னங்க இப்படி முகத்திலடிப்பது போலவா கொடுப்பீங்க...வயசானவங்களிடம் ஜாக்கிரதையாகப் பழகத் தெரிய வேணாமா? அவங்களுக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியங்க...."என்றாள்.

இதற்கு இடையில் சினேகாவை அவர்கள் கவனிக்க மறந்துவிட்டார்கள். சினேகாவை தேட திரும்பிய வேளையில், அவள் கிட்டத்தட்ட ஜெந்தே பாட்டியின் கைகளைப் பிடித்து வலுக்கட்டாயமாய், "இங்க வாங்க பாட்டி! வாங்க எங்க ஓடறீங்க...நான் என்ன கி·ப்ட் வாங்கி வந்திருகேன் பாருங்க என்றபடி எங்களின் டேபிளுக்கு இழுத்து வந்து விட்டாள்." நல்ல வேளையாய் இந்த அடாவடிதனத்தை பாட்டி தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஒரு வழியாக நாங்கள் சைகைகளுடன் சினேகாவின் பிறந்த நாளையும், அவளின் ஆசையையும் பாட்டிக்குப் புரிய வைத்து சினேகாவின் மூலமாக அந்த சட்டைக் கவரை பாட்டியின் கைகளில் திணித்து விட்டோம்...இதற்குள்ளாகவே, மெல்ல மெல்ல அவமானத்தை ஜீரணித்து பாட்டியின் கண்கள் மட்டும் கலங்கியிருக்க முகம் இயல்பான அமைதிக்குத் திரும்பியிருந்தது. சினேகாவின் புறம் திரும்பிய கணம், கண்கள் மலர்ந்து, நெகிழ்ந்த கைகள் அவளின் கன்னத்தை கொஞ்சி "அன்னா! செந்தே!" என தோளை அணைத்து மீண்டு போனார்.

ஆனால் சாப்பிட்டு முடிக்கையில், எப்போதும் சூப்பர்வைசர் போல இருக்கும் லீ-பான்-ஸ¤ வந்தாள், கூடவே பாட்டியும். பாட்டி அமைதியாயும், பரிதாபமாகவும் நின்றிருந்தார். அந்தப் பெண் அவரை திட்டியிருக்கக் கூடும் என யூகித்தனர் சாந்தியும், நரேந்திரனும். "ஸாரி! வீ டொண்ட் என்கரேஜ் தீஸ் திங்க்ஸ்..." என்றபடி அந்தக் கவரை திரும்பக் கொடுத்தாள். நரேந்திரன் அவளிடம் விவரமாக விளக்கிப் பார்த்தார். இம்முறை பதிலளிக்கையில் லீ-பான்-ஸ¤ கறார்தனமில்லாமல்

4

குழைவாக பதில் சொன்னாள், பாட்டிக்கு தருவது மற்ற பணியாளர்களிடம் எதிர்பார்ப்பை விளைவிக்கும், பாட்டி அப்படிப்பட்டவளில்லை என்றாலும் ஒருவேளை அவள் மற்றவர்களிடமும் இதைப்போல எதிர் பார்க்க ஆரம்பித்தால் என்ன செய்வது? இது போன்ற தர்மசங்கடங்களிலிருந்து விடுபடவே இந்த சாப்பாடுக்கடை இது போன்ற கொள்கையைக் கொண்டிருக்கிறது எனவே மன்னிக்கவும்...என்பதாக இருந்தது அந்தப் பேச்சின் சாரம். அவளே, வேறொரு வேலையில்லாத நாளில் பாட்டியை வீட்டுக்கு அழைத்துப் போய் பரிசைத் தருவதில் இந்த உணவு விடுதிக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இருக்க முடியாது என்பதையும் விளக்கினாள். அதை அவளே பாட்டிக்கும், சீன மொழியில் விளக்கவும் செய்தாள்...'ஏன்லா எனக்கொன்னும் கி·ட் கிடையாதா?' என சிரித்துச் சென்றாள். எங்களுக்கும் அவள் சொன்னது கௌரவமான வழியாகப் பட்டது.

ஜப்பானிய சுமிடோமோ நிறுவனத்தின் பயிற்சிக்கென ஒரு மாதகாலம் கோபே நகரத்திற்குப் போய் சாப்பாடுக்குச் செத்து நொந்து போய் திரும்ப வந்த நரேந்திரனுக்கு, சாந்தி சொன்ன பல செய்திகளில் ஒன்று, இரண்டுவார காலமாக ஜெந்தே பாட்டி வேலைக்கு வர்றதில்லை என்பது. 'ஏன்?' என்று கேட்டார். 'தெரியலை' என்றும் அவர்கள் போனதற்குப் பின்னர் ஒருமுறை பூ வாங்கப் போன போது அந்த ஹாக்கர் சென்ட்டரில் வைத்து ஜெந்தே பாட்டியை பார்த்ததாகவும்... நேற்று ஷாமினி யோடு போய் 'ரோஜாக்' சாப்பிடுகையில் பாட்டியைக் காணாமல் விசாரித்த போது பாட்டி வேலைக்கு வந்து பத்து-பதினைந்து நாட்களாகிறது என கேரலின் சொன்னதாகவும் சாந்தி சொன்னாள். அன்று இரவு சாப்பிடச் சென்ற போதும் பாட்டியைக் காண இயலவில்லை. புதிதாக வேறு ஒரு முதியவர் டேபிள்களைத் துடைத்துக் கொண்டிருந்தார். வேதனையினால் பொசுங்கிய முகம். இடுங்கிய கண்கள் அன்னியமாயும், வெறுப்போடும் பார்த்துச் செல்ல..வெறுமை கவிழ்ந்த இயக்கம் அந்த தாத்தாவுடையது. யாரோடும் உரையாட பிரியப் படாதது போலத் தோன்றினார்.

தேடிப்போய் கேரலினைப் பார்த்தார் நரேந்திரன். எங்க கொஞ்ச நாளாய் காணலை என்றவாறு வரவேற்றாள். குசல விசாரிப்புகளுக்குப் பின் பாட்டியைப் பற்றி விசாரித்தார். கிட்டத்தட்ட அவள் பாட்டியை மறந்தே போனது போலத் தெரிந்தது...பாட்டியா? எந்தப் பாட்டி? ஓ! அவங்களா? தெரியலையே இங்க வேலைக்கு வர்றதில்லை....உடம்புக்கா?!-தெரியலைலா...உடம்பு சொகமில்லாம அப்பப்போ போயிடும்தான்...சீக்காகாம சீக்கரமே செத்துப் போயிடனும்லா... மெடிகல் இன்ஷீரன்ஸ் எல்லாம் இல்லேனா ரொம்பக் கஷ்டம்லா.... வயசானாவே அவ்வளவுதான்...சலிப்பாய் பதிலளித்து வேறு வேலைக்குப் போக முயன்றாள்...பொறுக்கமுடியாமல் நரேந்திரன் கேட்டார்...ஏன் கேரலின் நான் கடைக்கு வந்து நாளாகுதுன்ற அளவிற்கு என்னை நினைவு வைச்சிருக்கே...பாட்டியை மறந்திட்டயே என. அதற்கு அவள் சிரித்தபடி.."யூ பிரிங் மணி" என்றவள், குறும்பாக கண்களை சிமிட்டி, "மோரொவர் யூ ஆர் ஹாண்ட்சம்!" என தாண்டிப் போனாள்!

அன்று மட்டுமல்ல....அதன் பின்னர் எப்போது போனாலும் ஜெந்தே பாட்டியைப் பார்க்க இயலவில்லை....தொலைப்பேசியோ, முகவரியோ இல்லாத ஜெந்தே பாட்டி, எல்லோரின் கண்களின் முன்னாகவும் முற்றாகக் கரைந்துப் போனாள். இந்த ராட்சச நகரம் கழிவுகளைச் செரித்துத் தள்ளும் உணர்வற்ற ஒரு எந்திரம் போல காணாமல் போன முதியவர்களை முற்றாக அப்புறப் படுத்தி இளைஞர்களை கொண்டாடிக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல முதியவர்கள் கூனி குறுகி, மெல்ல ஊர்ந்து இருளின் ஊடாக எலிகளும், கரப்புகளுமாய் கரைந்து கொண்டிருப்பதான ஒரு படம் விரிந்தது. கணினியில் சேமிக்க மறந்த ஒரு கோப்புதான் ஒரு வாழ்க்கையா....மறுபடி தட்டச்சில் வேறு கதை எழுதிச் செல்லுமா விதியின் கருணையற்ற கைகள்?

கட்டிடங்களுக்கு வெளியே தனியாய் விசாலமான இரவுநேர வானத்தைக் காணும் போதெல்லாம், நரேந்திரனுக்கு ஜெந்தே பாட்டி நினைவுக்கு வருவாள்...இப்போதெல்லாம் சிரிக்காத அந்த தாத்தாவையும் நினைத்துக் கொள்கிறார்.

5

சிறு பதட்டமும் இல்லாமல் அந்த சாப்பாட்டுக் கடை தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருந்தது... கோழிகளுக்கும்,  ஆடுகளுக்கும், இறால்களுக்கும் விதிக்கப் பட்டதென்னவோ அதே தான் ஜெந்தே பாட்டிக்கும் விதிக்கப்பட்டதாக எல்லோரும் எடுத்துக் கொண்டதாகத் தோன்றியது. ஜெந்தே பாட்டியும் கூட அவ்வாறே எடுத்துக் கொண்டிருக்கக் கூடும். அரசின் மான்யத்தில் நடக்கும் ஏதேனும் ஒரு முதியோருக்கான மருத்துவமனையில், இளைப்பினூடே ஜன்னலைப் பார்த்தவாறு நிகழ வேண்டிய தன் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடும். தன் காலிலேயே நிற்க இயலாத நிலைமை அவளின் மரணத்தை விரைவாக்கக் கூடும். அவளுடைய விவாகரத்துப் பெற்ற குடிகார
மகன் எப்போதேனும் பார்த்து வருவானா?

"தினம் தினம், நோயையும், மரணத்தையும் பார்க்க வேணுங்க இந்த ஆஸ்பத்திரி வேலையெல்லாம் நமக்கு ஒத்துக்காதுங்க" என்ற சாந்தியும் கூட இப்போதெல்லாம் முதியோர் விடுதி மற்றும் மருத்துவ மனைகளிலும் வேலை தேடுகிறாள்.

சினேகாவின் பிறந்த நாளுக்கென பரிசுப் பொருட்கள் வாங்கப் போக முடிவுசெய்த நாளில் காலையிலிருந்தே மழை சன்னமாய் தூறிக்கொண்டிருந்தது. கொடி மின்னல்கள் வலை பின்னிக் கொண்டிருக்க சாந்தியும், நரேந்திரனும் ஆளுக்கொரு குடையுடன் கிளம்பினார்கள். சினேகா, நரெந்திரனின் கைகளைப் பற்றி ஒண்டிக் கொண்டு நடந்தவள், சட்டென நின்று ஆவலாய்க் கத்தி னாள்... "அப்பா! அப்பா ஜெந்தே பாட்டி! ஜெந்தே பாட்டி!" கை, குடைக்கு வெளியே நீண்டு மழையை ஸ்பரிசித்தபடி அவள் விரல் சுட்டிக் கொண்டிந்த திசையில் பார்த்தார் நரேந்திரன். வெட்ட வெளியில், செம்மண் கரையும் தொட்டியில் மலர்ந்திருந்த ஒரு ரோஜா செடியின் அருகே நின்றிருந்தார் ஒரு முதியமாது. கண்களைக் குறுக்கி தெளிவாகப் பார்த்தார்...முதலில் குடை மறப்பிலி ருந்து தென்பட்ட உருவம் டுடோங் அணிந்திருந்தது தெரிந்தது....மலேய் மாது...ஜெந்தே பாட்டியாக இருக்க முடியாது...என்ற நினைப்பு முழுதுமாக மேலெழும் முன்னர், அரவம் கேட்டு திரும்பிய அம் மூதாட்டியின் கண்களைக் காணும் பாக்கியம் கிடைத்தது அவருக்கு....முழுதும் கனிவு பொங்கி சிரிக்கும் கண்கள்...அந்தக் கண்கள் எந்த உடலில் இருந்தாலும் அது ஜெந்தே பாட்டியுடையது என்பதில் சந்தேகம் இல்லை அவருக்கு...சினேகாவை ஆமோதித்தார் நரேந்திரன் மலர்ச்சியுடன்.

jeyanthisankar@gmail.com


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner